வியாழன், 7 அக்டோபர், 2010

உலக அஞ்சல் தினம் அக்டோபர் 09 .

உலக அஞ்சல் தினம் அக்டோபர் 09 .
உலக அஞ்சல் தினம் அக்டோபர் 09ஆம் திகதி சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. 1874ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் தாபிக்கப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாக கொள்ளப்படுகிறது .
சர்வதேச ரீதியில் தரமான அஞ்சற்சேவையினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு "சர்வதேச அஞ்சல் ஒன்றியம்" அமைக்கப்பட்டது. இதன் எண்ணக்கரு யாதெனில் 1863 இல் ஐக்கிய அமெரிக்காவில் அஞ்சல் அதிபர் நாயகமாகவும் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மந்திரி சபையின் உறுப்பினராகவும் விளங்கிய மொன்கெமேரி பிளேயரின் எண்ணத்தில் உதித்ததன் பலனாக பாரிஸ் நகரில் கூட்டப்பட்ட மாநாட்டில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பதினைந்து பிரதிநிதிகள் சந்தித்து பரஸ்பர நம்பிக்கையுடன் கூடிய பொதுவான அமைப்பினை ஏற்படுத்துவதற்கு இணக்கம் கண்டனர். இதன் பின் ஜேர்மன் நாட்டின் அஞ்சல் பணிப்பாளர் நாயகத்தின் பெரு முயற்சியினால் 1874 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதி சுவிற்சலாந்து நாட்டின் பேர்ன் நகரில் கூட்டப்பட்ட மாநாட்டில் இருபத்திரண்டு நாடுகளின் பிரதிநிதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு "அஞ்சல் பொது ஒன்றியம்' உருவாக்கப்பட்டது. இப்பெயரானது 1878 இல் நடைபெற்ற இரண்டாவது மாநாட்டில் "சர்வதேச அஞ்சல் ஒன்றியம்" (Universal Postal Union) எனப் பெயர் மாற்றம் பெற்றது.
இதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி உலக அஞ்சல் தினமாக பிரகடனம் செய்யப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
உலக அஞ்சல் தின பிரகடனம்
"உலகின் பல்வேறு நாடுகளுக்கே உரிய புவியியல், அரசியல், மதம் போன்ற பல்வேறு எல்லை மற்றும் தடைகளைத் தாண்டி எமது மக்களை முழு உலகுக்கும் இணைக்கின்றோம். மக்கள் அவர்களுக்குரிய பிரத்தியேகமானதும் மிகப் பெறுமதி வாய்ந்ததுமான தகவல்களையும் பொருட்களையும் எம்மிடம் ஒப்படைப்பது. அவற்றைப் பாதுகாத்து மிக வேகமாகவும் மிகக் கவனத்துடனும் அதன் உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பார்கள் என்ற எம்மீதுள்ள பெரு நம்பிக்கை என்பதை நாம் அறிந்துள்ளதோடு அவர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உயர் செயற்றிறமையுடனும் நேர்மையுடனும் பாதுகாப்புடனும் இரகசியத் தன்மையைப் பேணி அவர்களுடைய தகவல்களையும் பொருட்களையும் உரிமைகளையும் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் நேற்றைய தினத்தை விட நன்றாக இன்றைய தினத்திலும் இன்றைய தினத்தை விட நன்றாக நாளைய தினத்திலும் திறமையான சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு அர்ப்பணத்துடன் செயற்படுவதாக" என்பதாகும்.
சில அஞ்சல் செய்திகள்
- அஞ்சல் அட்டையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு ஆஸ்திரியா.
- ஆசியாவில் முதன்முதலில் தபால் தலை வெளியிட்ட நாடு இந்தியா.
- இந்திய தபால் தினம் அக்டோபர் 10ம் தேதி.
- உலக தபால் தினம் அக்டோபர் 9ம் தேதி கொண்டாடப்படுகிறது.
- கடிதங்களில் பின்கோடு இடும் முறை இந்தியாவில் 1972ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டது.
- இலங்கையில் தபால் முத்திரை ஆறிமுகம் - 1857 ஆம் ஆண்டு
- இலங்கையில் தந்திச் சேவை ஆரம்பம் - 1858 ஆம் ஆண்டு
- இலங்கையில் தபால்களின் நிறைக்கு கட்டணம் அறவிடும் முறை ஆரம்பம் - 1858 ஆம் ஆண்டு

- இலங்கையில் அஞ்சல் சேவை தனியார்துறையுடன் இணைக்கப்பட்டது - 1982 ஆம் ஆண்டு .