பக்கங்கள்

வியாழன், 10 பிப்ரவரி, 2011

பிப்ரவரி 12-டார்வின் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

மனிதன் கடவுளின் படைப்பெனும் பழங்கதையை அறிவியலால் மறுத்த சார்லஸ் டார்வின்!


இன்று பிப்ரவரி 12 2009, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12-டார்வின் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இயற்கைத் தெரிவின் வழியான உயிர்களின் தோன்றுதலைப் பற்றி அறிவியல் சார்ந்த ஆய்வுகளால் பரிமாணத் தத்துவத்தை உலகுக்கு அளித்த சார்லஸ் டார்வினின் 200-வது பிறந்த நாள். 1809இல் பிரிட்டனில் பிறந்த டார்வினின் முக்கிய ஆராய்ச்சி நூலான 'உயிரினங்களின் தோற்றம் - Origin of Species by Means of Natural Selection' வெளியிடப்பட்டதன் 150ஆவது ஆண்டு நிறைவும் இந்த ஆண்டு வருகிறது.
எல்லாம் வல்ல கடவுளாலோ, மேலே இருக்கும் வேறு எவராலோ உலகம் படைக்கப்பட்டது, உயிர்கள் ஆக்கப்பட்டது, மனிதன் உருவாக்கப்பட்டானென்ற காலம் காலமாய் கதையாய் கட்டி வந்திருந்த பழம் நம்பிக்கைகளை, வரலாற்றின் ஒவ்வொரு கால கட்டத்திலும் மனிதர்களில் அறிஞர்கள் கேள்வி கேட்டு வந்திருந்தனர். கடவுளின் படைப்புதான் மனிதனென்ற கருத்தை தர்க்க ரீதியாக முற்றிலும் மறுத்தும் பழித்தும் வந்திருந்தனர்.
ஆனால், உலகின் உயிர்கள் ஒன்றிலிருந்து இன்னொன்றாக பரிணாம வளர்ச்சியின் காரணமாகவும் உருவாகின, அவை இயற்கைத் தெரிவு என்னும் வாழ்வியல் தேவைகளால் வளர்ந்து வந்தன; அவ்வாறே, குரங்குகளிலிருந்து பல்லாயிரக் கணக்கான ஆண்டுப் பரிணாம மாற்றங்களினாலே மனிதன் உருவானான் என்ற கருத்தை தனது பல ஆண்டு கால (கிட்டத்தட்ட இருபது ஆண்டு கால) ஆழ்ந்த தொடர் ஆராய்ச்சிகளின் முடிவாக 1859-இல் உலகுக்குத் தெரிவித்தவரே டார்வின். இன்றைய அறிவியலின் முன்னோடியெனவும் சொல்லலாம்.
கடவுள் ஏழே நாட்களில் உலகத்தைப் படைத்தார், உலகம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் உருவானது, கடவுளே உலகின் ஒவ்வொரு உயிரின் வடிவத்தையும் படைத்தார், மற்றும் அந்த வடிவங்கள் மாறாதவையென்றே அறிவித்துவந்த பைபிள்களினை ஆதாரமாகக் கொண்ட கிறித்துவத் திருச்சபைகளின் கருத்துக்களுக்கு மாறாக, உலகம் பல்லாயிர ஆண்டுக் காலத்துக்கு முன்னரே உருவானது, மனிதனின் உருவாக்கம் பல உயிர்களின் வாழ்க்கை வழியாய் வந்த பரிணாமத்தின் மாற்றம் வளர்ச்சியென்று டார்வின் அறிவித்தது, இன்றிருக்கும் பல அறிவியல் முன்னேற்றங்களுக்கும் முன்னோடியாக இருக்கிறதென்பதை எவரும் மறுக்க மாட்டார்கள்.
சொல்லப்போனால், 'பரிணாம வளர்ச்சியெனும் அறிவியல் கருத்து இல்லாமல், இன்றைய அறிவியல் என்பதே இல்லையெனலாம்!'. உதாரணமாக, எய்ட்ஸ் (AIDS) எனும் எச்ஐவி (HIV) கிருமியை தடுக்க ஒழிக்க உருவாக்கப்படும் மருந்துகளை, அந்த கிருமிகள் தனது ஒரு வடிவத்திலிருந்து மறு வடிவத்துக்கு மிக வேகமாக பரிணாம வளர்ச்சியடைகிறதென்ற அடிப்படை அறிவு இல்லாமல் உருவாக்கவே முடிந்திருக்காது, உயிர்களைக் காக்கவும் முடிந்திருக்காது.
இன்றைய மேற்கத்திய நாடுகளில் கிறித்துவ மதப் பழமைவாதிகளின் முக்கிய எதிரியாக இருப்பவர் டார்வின்தான், அவரின் கருத்துக்கள், திருச்சபைகளின் பழமைவாதக் கருத்துக்களுக்கு பெரும் மாற்றுக் கருத்தாக இருக்கிறது. 'கிரியேஷனிஸம் - Creationism', 'சயன்டாலஜி - Scientology' போன்ற பழமைவாதக் குழுக்கள், டார்வினின் பரிணாமக் கொள்கையை எவ்வாறாகிலும், போலிக் கருத்தென்ற நிலைப்பாட்டை அதன் மீது உருவாக்கி அழித்திட வேண்டுமென்ற வெறுப்புடன் முயன்று கொண்டிருக்கின்றன.
முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ், பரிணாமக் கொள்கையை மறுப்பதுடன், தான் மறுபடியும் கிறித்துவராகப் பிறந்தவரெனும் நம்பிக்கையும், தன்னுடன் இயேசு பேசுவதாகவும் தெரிவித்தவர். இவரது எட்டாண்டு ஆட்சிக் காலம், அமெரிக்காவின் அறிவியல் துறை சார்ந்த திட்டங்களுக்கு எந்த விதமான உதவியும் ஆதரவும் அளிக்காதது மட்டுமல்லாமல், அறிவியலாளருக்கும் பெரும் சோதனையான காலகட்டம்தான். மேலும் குடியரசுக் கட்சியின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோற்ற சாரா பேலின் (Sarah Palin), கிட்டத்தட்ட அதே கருத்துக்களைக் கொண்டவர்தாம். டார்வினை மறுப்பது மட்டுமல்லாமல், கிறித்துவப் பழமைவாதத்தில் மறுபடியும் மூழ்குவதற்கான மதப் பழமைவாதிகள் இன்றைய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகார மட்டத்தில் பெருமளவில் இருக்கிறார்களென்பது முற்றிலும் உண்மை.
இந்தியாவில் சங் பரிவார் எவ்வாறு நேரடியாகவும் மறைமுகமாகவும், சமுதாயக் கருத்துக்களில் பழமைவாதத்தைப் புகுத்த நினைக்கிறார்களோ, அதே விதமாகத் தான் இங்கே அமெரிக்காவில் கிறித்துவக் குழுக்கள் கிறித்துவப் பழமைவாதத்தைப் புகுத்த முழுதுமாய் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்காவின் பல மாநிலங்களில், பள்ளிகளில் பரிணாமக் கொள்கையை பிள்ளைகளுக்குக் கற்றுத் தருவதே இல்லை. கிரியேஷனிஸம் எனும் பரிணாமத்தை மறுக்கும், பைபிள் வழி மனிதன் கடவுளினால் படைக்கப்பட்டது பற்றியே கற்றுத் தரப்படுகிறது. அமெரிக்க குடியரசுக் கட்சியைச் சார்ந்த லூஸியானா ஆளுநரான பாபி ஜிண்டால் ( இவர் இந்திய வழித் தோன்றல், பஞ்சாபிய குடும்பத்தவர், பள்ளிப்பருவத்தில் இந்து மதத்திலிருந்து கிறித்துவராக மதம் மாறியவர்), கடந்த ஜூலை 2008இல் இயற்றிய சட்டத்தின்படி, லூஸியானா மாநிலப் பள்ளி வகுப்புகளில், பரிணாமக் கொள்கையை தவறெனக் கூறும் பாடங்களை பள்ளிப் புத்தகங்களிலும் பாடங்களிலும் வைக்கலாமென உத்தரவிட்டுள்ளார்.
மேலும் டெக்ஸாஸ் மாநிலத்தில், எல்லா பள்ளி ஆசிரியர்களும் பாடத்திட்டத்தின் பகுதியாக, பரிணாமக் கொள்கையை மறுத்துத் தாவரவியல் பாடங்களை நடத்த வேண்டுமென்பது குறித்து, டெக்ஸாஸ் கல்வி நிறுமத்திற்கும், அறிவியல் குழுவினருக்குமிடையே பெரும் வாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
பரிணாமக் கொள்கையை மறுப்பதே, கடவுள் மறுப்புக் கொள்கைகளினை எதிர்த்து அழிப்பதற்கான வழியென்று, பழமைவாதக் கிறித்துவச்சபைகளும், அது சார்ந்த குழுவினரும் நம்புவதே இவற்றிற்கெல்லாம் காரணம். இவர்களிடையே, டார்வினும் அவரது கருத்துக்களும் முழு எதிர்ப்பையும் வெறுப்பையும் பெறுவதற்கு அவர்களின் பழமைவாத நம்பிக்கைகளே காரணம். இன்றைக்கு, இணையத்தில் டார்வின் பற்றிய தகவல்களைத் தேடினால், அவரின் பரிணாமக் கொள்கையை அறவே வெறுக்கும், அதே நேரத்தில், கிறித்துவத்தை தூக்கிப் பிடிக்கும் கருத்துக்களையும் ஒருங்கே காணலாம்.
கலிலியோ காலத்தில் அவரைச் சிறையிலடைத்துக் கொடுமைப்படுத்தியது போல் டார்வினைக் கொடுமைப்படுத்தவில்லை என்றாலும், டார்வின் அவரின்
வாழ்காலத்திலேயே திருச்சபையினரால் பெரும் துயருக்குள்ளானவர்தாம். பிரிட்டனின் கிறித்துவத் திருச்சபை, அவரை நடத்திய விதம் குறித்தும், அவரின் பரிணாமக் கொள்கைகளை எதிர்த்ததையும், தவறெனத் தெரிவித்து அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்று ஒரு கிறித்துவப் பாதிரிமார் கருத்துத் தெரிவித்திருந்தார். அந்தப் பாதிரியாரின் கருத்தை அவரின் சொந்தக் கருத்தென்றும், டார்வினுக்காகவோ அவரை நடத்திய விதத்திற்காகவோ திருச்சபை மன்னிப்புக் கேட்கத் தேவையில்லையென்றும், திருச்சபையின் பேச்சாளர் உடன் கருத்துத் தெரிவித்திருந்தார். அன்று டார்வினின் அறிவியல் அணுகுமறையை எதிர்த்த கிறித்துவ பழமைவாதம், இன்றும் எதிர்த்துக் கொண்டுதானிருக்கிறது. அவரின் கொள்கைகளையும், அறிவியல் ஆராய்ச்சிக் கருத்துக்களையும் முழுதாய் மூடி மறைக்க முயன்று கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாகவே, அறிவியலாளர்களும், சார்ந்தவர்களும், டார்வினின் 200ஆவது பிறந்த தினத்தை மிகவும் பெரிதளவில் கொண்டாடுகின்றனர்.
அறிவியலுக்கும், உயிர்களின் இயற்கை வாழ்வியலுக்குமான காரணங்களை தெளிவான ஆராய்ச்சிகளின் வழியாக உணர்த்திய டார்வின், உலகையும் மூட நம்பிக்கைகளையும், பழமைவாதக் கருத்துக்களையும் மீறி நடக்க வழியமைத்திருக்கிறாரென்றால் அது முற்றிலும் உண்மையே!! அறிவியலால் இன்று முன்னேறும் உலகமே அதற்குச் சாட்சி!
நன்றி  - வைகறை வானம் .