திங்கள், 20 ஆகஸ்ட், 2012

சென்னை மாநகரத்தை...கொண்டாடுவோம் ..! (சென்னை தினம் ஆக., 22 ம் தேதி)சென்னை மாநகரத்தை...கொண்டாடுவோம் ..! (சென்னை தினம் ஆக., 22 ம் தேதி)
    மெட்ராஸ், சென்னை இந்த இரு பெயர்களைக் கேட்டதும் இனம்புரியாத ஒருவித ஈர்ப்பு மனதில் ஒட்டிக் கொள்கிறது. பெரும் நகருக்கே உரிய பரபரப்பு, மக்கள் அடர்த்தி, வாகனங்களின் இரைச்சல், பலதரப்பட்ட கலாசாரம் என்ற வழக்கமான அடையாளங்களையும் தாண்டி, சென்னை ஏதோ ஒரு விதத்தில் நம்மைப் பாதிக்காமல் இல்லை.
ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய பல்லவ சாம்ராஜ்யத்தில் துவங்கி, இன்றைய உலகின் மிகச்சிறந்த மருத்துவச் சுற்றுலா நகரமாக இருப்பது வரை சென்னையின் பல்வேறு பரிணாமமும், பரிமாணமும் ரசிக்கத்தக்கவை; வியப்புக்குரியவை.
பொதுவாக ஒரு விஷயத்தை அல்லது வரலாற்றை விவரிப்பது எனில், குறிப்பிட்ட செயலுக்கு முன், குறிப்பிட்ட செயலுக்குப் பின் எனப் பிரிப்பது வழக்கம். இவ்வகையில் சென்னையின் வரலாறு ஆங்கிலேயரின் வருகைக்கு முன், வருகைக்குப் பின் என இருவகையாகப் பார்க்கப்படுகிறது.

ஆங்கிலேயரின் வருகைக்கு முன், ஆங்காங்கு இருந்த குடியிருப்புகளும், மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்ததுமான சம்பவங்களுமே வரலாற்றில் இடம்பெறுகின்றன. அதுவும் அதிக அளவில் இல்லை. காரணம் 1639ம் ஆண்டுக்கு முந்தைய வரலாற்றுக்கு போதிய ஆதாரங்களும், விவரங்களும் இல்லை. கிடைக்கும் ஒரு சில கல்வெட்டுகள், சங்க இலக்கியப் பாடல்கள், கர்ணபரம்பரைக் கதைகளை வைத்து ஒருவாறு யூகிக்க முடிகிறது.
சென்னை ஒரு பெருநகராக வளர்ச்சி பெற்றது, ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர்தான். ஆகவே, சென்னையின் வரலாற்றில் ஆங்கிலேயேர்கள் தவிர்க்க இயலாத இடம்பெறுகின்றனர். இன்னும் சொல்வதானால், சென்னையில் ஆங்கிலேயர்கள் என்பதே சென்னையின் வரலாறாகவும் ஆகி விட்டது.
சில உணர்வுப்பூர்மான நிகழ்வுகள், இந்தியாவின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது மாநகராட்சி, அகிம்சையின் வலிமையை உலகுக்கு உணர்த்திய காந்தி சத்தியாக்கிரக ஒலியை எழுப்பிய இடம், முதன்முதலில் மதுவிலக்கு அமலாக்கப்பட்ட இடம் என சரித்திரப் புகழ் வாய்ந்த சம்பவங்களும், நிகழ்வுகளும் சென்னையில் நடந்தேறி இருக்கின்றன.
மும்பையும், கல்கத்தாவும் ராஜதானி நகரமாக மாறுவதற்கு முன்னரே, சென்னை இந்தியத்துணைக்கண்டத்தின் ராஜதானி நகரமாக உருவெடுத்திருக்கிறது. இன்னும் இன்னும் ஏராளமான சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள சென்னை கொண்டாடப்பட வேண்டிய நகரம்.
எனவேதான், ஆங்கிலேயர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தை தாமரல வெங்கடப்ப நாயக்கரிடம் இருந்து வாங்கிய ஆக.,22ம் தேதியை சென்னை தினமாக அறிவித்து, அதைப் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
1639 ஜூலை 22 என்று ஒருசாரர் வாதிட்டாலும், ஆக., 22ம்தேதிதான் பதிவு செய்யப்பட்டது என சில ஆவணங்கள் மூலம் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, இன்னும் வேறு ஆதாரங்களும், சான்றுகளும் கிடைக்கும் வரை ஆக., 22 ம் தேதிதான் சென்னை தினமாகக் கொண்டாடப்படும்.
பல்வேறு தரப்பினரும் தத்தமது விருப்பப்படி குழுவாகவோ, தனியாகவோ சென்னை தின (மெட்ராஸ் டே) கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றனர். பிறரின் கொண்டாட்டங்களுக்கு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றனர்; நாமும் பங்கேற்போம்.
சென்னை தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க நாம் சென்னைவாசியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு பெருநகரத்தின் பெருமிதம் மிக்க வரலாற்றைப் பகிர்ந்து கொள்வோம். வாருங்கள் கொண்டாடுவோம் சென்னையை; நம் பெருமையை.

சென்னையின் வரலாற்று நிகழ்வுகளின் கால வரிசை
1522 - சாந்தோமில் போர்த்துகீசியர்கள் குடியேற்றம்
1639 - சாந்தோமுக்கு வடக்கே உள்ள 3 சதுர மைல் நிலப்பரப்பை பிரான்சிஸ்டே பெறுதல்
1640 - சென்னையில் உள்ள தொழிற்சாலைக்கு, புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்படுகிறது. * என்ன தொழிற்சாலை?
1641 - ஆண்ட்ரூ கோகனுக்குக்கீழ் கிழக்குக் கடற்கரையில், இங்கிலாந்தின் முக்கிய தொழிற்சாலையாக சென்னை ஆனது.
1662 - சாந்தோமை கோல்கொண்டா ஆக்கிரமித்தது.
1672 - சென்னை ஆவணங்களை, முதல் முறையாக பதிவு செய்ய ஆளுநர் லாங்ஹார்னின் கட்டளை
1675 - சாந்தோமின் அரியணையை தகர்த்து, கோல்கொண்டாவின் அதிகாரத்தின் கீழ் போர்த்துக்கீசியர்கள் குடியேற்றம்
1678 - ஐகோர்ட்டை ஸ்ட்ரெயின் ஷாம் மாஸ்டர் நிறுவினார்
1686 - சென்னையில் அட்மிரால்டி கோர்ட் ஆரம்பமானது
1688 - சென்னை மாநகராட்சி உதயமானது.
1693 - எழும்பூர், புரசைவாக்கம், தண்டையார் பேட்டை ஆகியவற்றைப் பெறுதல்
1708 - திருவொற்றியூர், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, கத்திவாக்கம், சாத்தங்காடு ஆகியவற்றைப் பெறுதல்
1734 - சிந்தாதிரிப்பேட்டை உருவாக்கப்படுதல்
1742 - வேப்பேரி,பெரம்பூர், புதுப்பாக்கம், எர்ணாவூர், சண்டையான்குப்பம் ஆங்கிலேயருக்கு கொடுக்கப்படுதல்.
1786 - சென்னை அஞ்சல் துறை அமைக்கப்பட்டு, சேவை துவக்கம்
1792 - சென்னை வானொலி ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டது
1835 - மருத்துவப்பள்ளி துவக்கம்
1842 - மாநில உயர்நிலைப்பள்ளி திறப்பு
1844 - மகளிர், குழந்தைகள் மருத்துவமனை திறப்பு
1856 - சென்னையிலிருந்து ஆற்காடு வரை முதல் இருப்புப்பாதை துவக்கம்
1857 - மாநில கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் துவக்கம்
1873 - சென்ட்ரல் ஸ்டேஷன் கட்டப்பட்டது
1895 - தராஸ் டிராம்வே துவக்கம்
1900 - மூர் மார்க்கெட் திறப்பு
1913 - ரிப்பன் கட்டடம் திறப்பு
1914 - எம்டன் கப்பல் குண்டுவீச்சு
1936 - விக்டோரியா நினைவிடம் திறப்பு
1939 - சென்னையின் முன்னூறாவது ஆண்டு விழா கொண்டாட்டம்
1947 - ஆங்கிலேயர் நிறுவிய நகரம், இந்தியர்களுக்குச் சொந்தமானது.

புதன், 29 பிப்ரவரி, 2012

லீப் வருடம் – பல சுவையான தகவல்கள்:


லீப் வருடம் – பல சுவையான தகவல்கள்:
நீங்கள் உங்கள் ‘பொன்னான பிறந்த’ (Golden Birthday)  நாளைக் கொண்டாடி இருக்கிறீர்களா?
‘ பொன்னான பிறந்த நாளா?’  என்று வியப்பவர்களுக்கு: உங்கள் பிறந்த தேதியும், உங்கள் வயதும் ஒன்றாக இருந்தால்   (அதாவது 27 ஆம் தேதி உங்கள் 27 வது பிறந்தநாள் வந்தால் அதுதான் உங்களது ‘பொன்னான பிறந்த நாள்’. 1953 ஆம் ஆண்டில் பிறந்தவர்கள் தங்களது 53 வது பிறந்த நாளை ‘ பொன்னான பிறந்த நாளா’ கக் கொண்டாடலாம்.
சரி லீப் வருடத்தில் பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்கள் எப்போது தங்களது ‘ பொன்னான பிறந்த நாளை’ கொண்டாடுவார்கள்? யோசியுங்கள்…..       விடை கடைசியில்…….

ஒரு வருடத்தின் எண்களை மிகுதி இல்லாமல் 4 ஆல் வகுக்க முடிந்தால் அது தான் லீப் வருடம் என்று தெரியும். தெரியாத விஷயம்: நூற்றாண்டுகள் வரும்போது அவை  400 ஆல் மிகுதி இல்லாமல் வகுக்கப் பட வேண்டும் என்பது!
லீப் வருடமும் பலவிதமான காலண்டர்களும்:
பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்கள் ஆகிறது. துல்லியமாக சொல்ல வேண்டுமானால் 365.242 நாட்கள் அதாவது 365 1/4 நாட்கள்.  எகிப்தியர்கள் மாறி வரும் பருவ நிலைகளும் தங்கள் நாட்காட்டியும் பல சமயங்களில் ஒத்துப் போகாததை கண்டறிந்தனர்.
 முதன் முதலில் இந்தக் கால் நாளை ஒரு நாளாக்கி நான்கு வருடங்களுக்கு ஒரு முறை காலண்டரில் சேர்த்த பெருமை கி.மு. 45 இல் வாழ்ந்த ரோமானிய அரசர் ஜூலியஸ் சீசரைச் சேரும்.
நாம் இப்போது பயன் படுத்தும் க்ரிகோரியன் (Gregorian) காலண்டர், ஜூலியஸ் சீசர் வடிவமைத்த காலண்டரின் லீப் வருடத்தை உள்ளடக்கிய காலண்டர் தான்.
ஸ்வீடனில் 1712 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு 30 நாட்கள்! காரணம் அங்கு அப்போது ஜூலியன் காலண்டரோ அல்லது க்ரிகோரியன் காலண்டரோ நடைமுறையில் இல்லாததுதான். அதன் பிறகு 1753  க்ரிகோரியன் காலண்டரை பின்பற்றி அமைக்கப் பட்ட காலண்டரில் லீப் வருடம் பிப்ரவரி 17 ஆம் தேதிக்குப் பிறகு மார்ச் 1 ஆம் தேதிக்குத் தாவியது. ஆனால் பொது மக்களுக்கு இந்த முறை பிடிக்கவில்லை; தங்கள் வாழ்நாளிலிருந்து 10 நாட்களை இழந்து விட்டதாக நினைத்தனர்!
1930  களில் சோவியத் யூனியனிலும் பிப்ரவரி 30 தேதியுடன் இருந்த காலண்டர் புழக்கத்தில் இருந்தது. தொழிலாளிகளின் உற்பத்தித் திறனைப் அதிகரிக்க ஒவ்வொரு மாதமும் 7 நாட்களாக(  ஞாயிறு விடுமுறை)  இருந்த வாரக் கணக்கை மாற்றி 5 அல்லது 6 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை இல்லாத வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு மாதத்திற்கும் 30 நாட்கள்! மிச்சமிருந்த 5 அல்லது 6 நாட்கள் மாதக் கணக்கில் வராத தேசீய விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டன. ஆனால் ஞாயிறு விடுமுறை என்ற வழக்கம் நெடு நாட்களாக இருந்ததால், இந்த முறை,  அதிக நாட்கள் நீடிக்க முடியவில்லை; 1940 ஆம் ஆண்டு பழையபடி க்ரிகோரியன் காலண்டர் பழக்கத்திற்கு வந்தது.
பழங்காலத்தில் லீப் வருடம்:
முற்காலத்தில் ஒரு பெண் தன் மனதுக்குப் பிடித்தவனை தேர்ந்தெடுக்க லீப் வருடமே சிறந்தது என்று கருதப் பட்டது. லீப் வருடத்தில் ஒரு பெண் தன் காதலைச் சொல்லலாம் என்று 5 ஆம் நூற்றாண்டில் அயர்லாந்து நாட்டில் ஒரு வழக்கம் இருந்ததாம். 13 ஆம் நூற்றாண்டில் இதை அரசு பூர்வ சட்டமாக மாற்றியவர் ஸ்காட்லாந்து ராணி மார்கரெட்.
ஒரு பெண் லீப் வருடத்தில் தன் காதலை சொல்லி அதை ஏற்க மறுக்கும் ஆண் மகன் அவளுக்கு புதிதாக பட்டு உடையும் ஒரு ஜோடி கையுறையும் கொடுக்க வேண்டும் என்ற வழக்கமும் இருந்ததாம்.
சில நாடுகளில் லீப் வருடம் அமங்கலமான வருடமாக கருதப்பட்டது. ஸ்காட்லாந்து நாட்டில் லீப் வருடத்தில் பிறக்கும் குழந்தை அதிர்ஷ்டம் இல்லாத குழந்தையாகக் கருதப் பட்டது. கிரேக்க நாட்டில் இன்னும் ஒரு படி மேலே போய் லீப் வருடத்தில் கல்யாணம் செய்து கொள்ளுவதையே தவிர்த்தனர்.
லீப் வருடமும் சினிமாவும்:
அயர்லாந்து நாட்டில் பழைய காலத்தில் இருந்த வழக்கத்தை அடிப்படையாக வைத்து 2010 ஆம் ஆண்டு ‘லீப் இயர்’ (Leap Year) என்ற நகைச்சுவைப் படம் வெளியானது.  தன் மனதுக்குப் பிடித்தவனை ‘ப்ரொபோஸ் ‘ செய்ய அயர்லாந்துக்கு பிரயாணம் செய்யும் ஒரு பெண்ணின் கதையை நகைச்சுவையுடன் விவரிக்கிறது இப்படம்.
19 ஆம் நூற்றாண்டு வெளி வந்த ‘The Pirates of Pinzance” என்கிற நகைச் சுவை  இசை நாடகம், கப்பற் கொள்ளைக்காரனான ஒரு இளைஞன் பற்றியது. வேலைக்குச் சேர்ந்தவுடன் அவனது பயிற்சி பருவம் (apprenticeship) அவனது 21 வயது வரை என்று நிர்ணயிக்கப் படுகிறது. முதலில் மகிழ்ச்சி அடையும் அவன் தன் பிறந்த நாள் பிப்ரவரி 29 என்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைகிறான்! 84 வயதில் தான் அவனது 21 வது பிறந்த நாள் வரும்!
சராசரியாக 1461 குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டுமே இந்த லீப் வருடம் பிப்ரவரி 29 ஆம் தேதி பிறக்கும் பாக்கியத்தைப் பெறுகிறது.
இக்குழந்தைகள் ‘Leaplings’ என்று அழைக்கப் படுகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வருடமும் தங்கள் பிறந்தநாளின் கால் பகுதியைத்தான் கொண்டாடுகிறார்கள். பிறந்த தேதி வராத வருடங்களில் பிப்ரவரி 28 அல்லது மார்ச் 1 ஆம் தேதி தங்கள் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.
பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்த நம்மூர் பிரபலங்கள்: மறைந்த பிரதமர் மொரார்ஜி தேசாய் மற்றும் நடனக் கலைஞா் ருக்மிணி தேவி.
உலகப் புகழ் பெற்ற சூப்பர் மேன் பிறந்தது இதே பிப்ரவரி 29. இவரது 50 வது பிறந்த நாளை ‘டைம்ஸ்’ பத்திரிக்கை 1988 ஆம் ஆண்டு தனது அட்டைப் படத்தில் சூப்பர் மேனைப் பற்றிய விவரங்களை வெளியிட்டு கொண்டாடியது.
ஆஸ்திரேலியாவில் உள்ள தாஸ்மேனியா பிரதமர் சர் ஜேம்ஸ் வில்சன் பிறந்தது, இறந்தது இரண்டுமே பிப்ரவரி 29 ஆம் தேதிதான்!
2012 லீப் வருடம் என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த ஆண்டின் தெரியாத விசேஷங்கள்:
இந்த ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதி இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் Rare Disease Day யாக கடை பிடிக்க உள்ளனர். குணப்படுத்த முடியாத, அரிதான,  நோய்களை ‘rare disease’ என்கிறார்கள். இந்நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு நாளாக பிப்ரவரி 29 ஆம் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்காவின் டிஸ்னி லாண்ட் இந்த வருடத்தில் வரும் ஒரு அதிகப் படியான நாளைக் கொண்டாட 29 ஆம் தேதி 24 மணி நேரமும் திறந்திருக்கும்.
சரி, இப்போது முதலில் கேட்ட கேள்விக்கு பதில் பார்ப்போமா? பிப்ரவரி 29 இல் பிறந்தவர்கள் தங்கள் பொன்னான பிறந்தநாளை தங்களது 116 வது வயதில் கொண்டாடுவார்கள்!!!!

செவ்வாய், 31 ஜனவரி, 2012

பம்மல் சம்பந்த முதலியார் பிறந்த நாள் பிப்ரவரி 01
"நாடகக்கலைப் பிதாமகர்' பம்மல் சம்பந்த முதலியார் பிறந்த நாள் பிப்ரவரி 01 
தமிழுக்குப் பெருமை தருவது நாடகக்கலை. முத்தமிழில் நாடகம் இயலையும், இசையையும் தன்னகத்தே கொண்டது. நாடகத்தின் வெற்றிக்குக் காரணம், நல்ல கதை, கதைப் பாத்திரங்களுக்கேற்ற நடிப்பு, உணர்ச்சியைத் தக்க சமயத்தில் வெளிப்படுத்தும் ஆற்றல்.
நாடகக்கலையின் அறிவுபூர்வமான வளர்ச்சியே திரைப்படம். மேடையில் வெற்றிபெற்ற நாடகங்களின் உரிமையை விலைக்கு வாங்கித் திரைப்படமாகத் தயாரித்தனர். ஆனால், மேடையில் நடிக்கப்பட்ட நாடகங்கள் சிற்சில தவிர, மற்றவை சிறப்பாகப் பாடக்கூடியவர்களால் வெற்றியடைந்தன. பெண் பாத்திரங்களை ஆண்களே ஏற்கும் நிலை இருந்தது. பெரும்பாலும் புராணப் படங்களே மேடையில் நடிக்கப்பட்டன.
சங்கரதாஸ் சுவாமிகளும், பம்மல் சம்பந்த முதலியாரும் நாடகத் துறையில் காலடி எடுத்து வைத்தபிறகே நாடகத்துக்கு மதிப்பு ஏற்பட்டது.
சென்னையில் பம்மல் என்ற கிராமத்தில் 1873-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் பெயர் விஜயரங்க முதலியார். தாயார் பெயர் மாணிக்கவேலு அம்மாள்.
"நாடக உலகப் பிதாமகர்' என்று அழைக்கப்பட்டு நடிகர்களால், நாடகத் தயாரிப்பாளர்களால் போற்றப்பட்ட சம்பந்த முதலியார், பிறந்த சிற்றூரான பம்மலுக்குப் பெருமையும் புகழும் சேர்த்தவர்.  சென்னை, மாநிலக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். சட்டம் படித்து வழக்குரைஞரானார்.
தந்தை, சிறுவயதில் பயிற்றுவித்த ஒழுக்கம், கட்டுப்பாடு, சத்தியம் தவறாமை இவற்றை என்றும் விடாது கடைப்பிடித்தார். அதனால், அவர் 1924-ஆம் ஆண்டு சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியானார்.
வழக்குரைஞராக, நீதிபதியாக புகழ் பெறுவதற்கு முன்பாகவே அவர் நாடகத்துறையில் பேரும் புகழும் பெறவேண்டியிருக்கும் என்று அவரோ, வீட்டில் உள்ளவர்களோ நினைத்துப் பார்த்தது கிடையாது. 1891-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அவர் வாழ்க்கையில் முக்கியமான நாள். அவர் தமிழ் நாடகங்கள் எழுதுவதற்கும் நடிப்பதற்கும் உந்து சக்தியாக இருந்த "சுகுண விலாஸ சபை' அன்றுதான் நிறுவப்பட்டது.
பல்லாரி கிருஷ்ணமாச்சாரி என்பவர் ஆந்திர மாநிலம் பல்லாரி என்ற ஊரிலிருந்து சென்னைக்கு வந்து, விக்டோரியா நினைவு மண்டபத்தில் (மெமோரியல் ஹால்) தெலுங்கு மொழியில் நான்கைந்து நாடகங்கள் நடத்தினார். அவை இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தன. இதனால், நாடக சபை ஒன்றைச் சென்னையில் நிறுவ வேண்டும் என்று சில இளைஞர்கள் விரும்பினார்கள். அதுபோன்ற எண்ணம் கொண்டவருள் சம்பந்த முதலியாரும் ஒருவர்.
அவர் எண்ணத்தை ஊக்குவிக்க, அவரின் இளம் வயது நண்பர் வெங்கட கிருஷ்ணநாயுடு என்பவர், (சிறுவயதிலிருந்தே நாடகம் பார்ப்பதில் ஈடுபாடு கொள்ளாத சம்பந்தனாருக்கு, பல்லாரி நாடகமே காரணம் என்பதை அறிந்தார்) சம்பந்தனாரின் ஆவலுக்குத் தூண்டுகோலாக இருந்தார். அவர்கள் எண்ணம் நிறைவேறத் தொடங்கப்பட்டதுதான் "சுகுண விலாஸ சபை'.
அச்சமயம் சம்பந்தனார், "சகுந்தலா' என்ற நாடகத்தைத் தமிழாக்கம் செய்துகொண்டிருந்தார். அந்த நாடகத்தைத் தயாரித்து, சுகுண விலாஸ சபையில் அரங்கேற்ற அன்பர்கள் ஆதரவு தந்தார்கள். அப்போது, அவருக்கு வயது பதினெட்டு. பி.ஏ. தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தார்.
அங்கத்தினர்கள் ஒத்துழைப்போடு சுகுண விலாஸ சபை சிறப்பாக வளர்ந்தது. சம்பந்தனாரின் நாடகக் கனவு நிறைவேறி வந்தது. நாடகத்தில் நடிப்பவர்களின் தரம் குறைந்திருந்த காலத்தில் சம்பந்தனாரின் நாடகங்கள் கண்ணியமானவை என்ற பெயர் பெற்றது. பாடல்கள் நிறைந்தனவாகவும், உரையாடல்கள் பெரும்பாலும் செய்யுள் நடையிலும் இருந்தன. சமூகத்துக்கு நீதி புகட்டும் கதையைத் தேர்ந்தெடுத்தே நாடக வடிவமாக்கினார் சம்பந்தனார். அதை, சமூகத்தில் உயர் தட்டில் உள்ளவர்கள், அறிஞர்கள், புலவர்கள் பாராட்டி வாழ்த்துக் கடிதங்கள் எழுதினார்கள்.
மனோன்மணீயம் நாடகம் எழுதிய சுந்தரம்பிள்ளை, சி.வை.தாமோதரம் பிள்ளை, அஷ்டாவதானம் பூவை.கலியாணசுந்தரம் பிள்ளை முதலிய அறிஞர்கள் சம்பந்தனாரின் நாடகத்தைப் பார்த்துப் பெரிதும் பாராட்டினார்கள். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் "சாற்றுக் கவிதை' எழுதி அனுப்பினார்.  சம்பந்தனாரைவிட பரிதிமாற் கலைஞர் வயதில் இளையவர் என்றாலும், அவர் நாடகம் நடத்தும் முறை, உரையாடல்கள் போன்றவற்றைப் பாராட்டினார்.
நாடகம் வெற்றியடைய ஒவ்வோர் நிலையிலும், சம்பந்தனார் மிகவும் கவனம் செலுத்தினார். நாடகத்தில் தந்திரக் காட்சிகள் அமைத்து, நாடகம் பார்க்க வருவோரின் கரவொலியையும் பாராட்டுதலையும் பெற்றதனால் சம்பந்தனாரின் புகழ் பரவியது. கதைக்கேற்ற பாத்திரங்களைத் தேடி அவர்களுக்குச் சிறப்பாக ஒத்திகை செய்வித்த பிறகே மேடை ஏற்றுவார்.
அவரது முதல் நாடகம் "புஷ்பவல்லி'. அவர் எழுதிய நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவையாக இருந்தாலும், மிகவும் புகழ்பெற்ற நாடகம் "மனோகரா'.
மனோகரா நாடகத்தை எழுதத் தொடங்கியபோது அவரது தந்தை நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு ஏதாவது நேர்வதற்குள் நாடகத்தை எழுதி அரங்கேற்றிவிட வேண்டும் என்று தீவிர முயற்சியில் இருந்தார். ஆனால், முதல் காட்சி எழுதியவுடனேயே தந்தை உயிர் நீத்தார். மறுநாளே சம்பந்தனார் நாடகத்தின் இரண்டாவது காட்சியை எழுதுவதில் முனைந்தார். இதுபோலத்தான் தன் தாயும், மனைவியும் இறந்தபோதும் செய்தார்.
""என் துக்கத்தை மறக்க, நாடகம்தான் சிறந்த மருந்து'' எனக் கூறி, தான் எழுதிய காட்சிகளை வழக்கம்போல் நண்பர்களுக்குப் படித்துக் காட்டத் தொடங்கிவிடுவாராம். நாடகம் அவருடைய லட்சியமாக - உயிராக விளங்கியது.
மனோகராவின் நாடகக் காட்சி ஒவ்வொன்றையும் அவர் மிகக் கவனத்துடன் அமைத்தார். கதை அவருடைய சொந்தக் கற்பனை. நாடக ஆசிரியர் சம்பந்த முதலியார், தன் "நாடக நினைவுகள்' வரலாற்றில் குறிப்பிட்டதை அவர் எழுத்திலேயே தருவதில் தான் சிறப்பு இருக்கிறது.
""என் நண்பர் ஜெயராம நாயகருடைய வீட்டில் முழு ஒத்திகை நடைபெற்றது. அதில் முக்கியமாக எனக்கு ஞாபகம் இருக்கும் விஷயம் என்னவென்றால், இந்த நாடகத்தில் தற்காலத்தில் "இரும்புச் சங்கிலிக் காட்சி' என்று வழங்கிவரும் முக்கியக் காட்சியில் என் முழு தேக வலியுடன் மிகுந்த உரத்த சப்தத்துடன் "ஆக்ட்டு' செய்ததனால், அக்காட்சியின் முடிவில் சற்றேறக்குறைய வாஸ்தவத்திலேயே மூர்ச்சையானேன். அவ்வளவு நாள் தேக சிரமப்பட்டது அனாவசியம் என்றே இப்பொழுது யோசிக்கும்போது தோன்றுகிறது'' (நாடக மேடை நினைவுகள் - நூலை வெளியிட்ட ஆண்டு 1932).
மனோகரா நாடகம் சுகுண விலாஸ சபையாரால் 1895-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் நாள் விக்டோரியா நினைவு அரங்கில் நடைபெற்றது. நாடகத்தைக் கண்டு களித்த பெருமக்கள் மிகவும் பாராட்டினர். அந்தப் பாராட்டுதலும் வரவேற்பும் திரைப்படமாக ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்தபோதும் ஏற்பட்டன. இந்த நாடகம் பல நாடகச் சங்கங்களால் நடிக்கப்பட்டது.
சம்பந்தனார் எழுதிய  நாடகங்கள் மொத்தம் 94. அவைகளில் வெற்றிகரமாகத் திரையேறிய நாடகம் சபாபதி.
பம்மல் சம்பந்த முதலியார் வாழ்ந்த காலத்தில் நாடகத் தொழிலுக்கு மரியாதை குறைவு.நடிப்பவர்களை கூத்தாடிகள் என்றே அழைப்பார்கள். நாடகங்களில் பாடல்கள் அதிகம். நாடகத்துக்குச் சென்றுவந்தால் இசைக் கச்சேரிக்குச் சென்றுவந்த உணர்வுதான் ஏற்படும். அந்தச் சூழலை - நிலையை மாற்றியவர் சம்பந்தனார்தான்.
"நாடகத் தந்தை' என்று அவரைக் கூறுவதைவிட "நாடகக்கலைப் பிதாமகர்' என்று அழைப்பதே பொருத்தமாகும். அந்த அளவுக்கு மிக கவனத்தோடு நாடகக்கலையை வளர்த்தார். 1959-ஆம் ஆண்டு இவருக்கு "பத்மபூஷண்' விருதை பாரத அரசு வழங்கிச் சிறப்பித்தது. (முன்பே ஆங்கில அரசு ராவ் பகதூர் பட்டத்தை வழங்கியிருந்தது).
தெய்வ பக்தியும், பெற்றோரிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த ஒழுக்க சீலரான பம்மல் சம்பந்த முதலியார், 91-வது வயதில், 1964-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்.
நாடகக் கலைக்கே தனிச் சிறப்பும் மரியாதையும் ஏற்படுத்திய பம்மல் சம்பந்த முதலியார் நினைவு, நாடகக்கலை உள்ளளவும் அழியாது.