பக்கங்கள்

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

நிறங்களும் அவற்றின் குணங்களும் ...



நிறங்களும் அவற்றின் குணங்களும் ...


உலகம் வண்ணமயமானது. நாம் அன்றாடம் உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாவற்றிலும் ஏராளமான வண்ணங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு குணமுண்டு. வெண்மை தூய்மையையும், சிவப்பு தடையையும் உணர்த்துவது இயல்பு. இவ்வாறே ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு தன்மையை உடையது. பொதுவாக அடிப்படை நிறம் என்பது நீலம், மஞ்சள், சிவப்பு ஆகிய மூன்றே. வெண்மை மற்றும் கருமை நிறத்தைத் தனியாகவே குறிப்பிடுகின்றனர். மற்ற வண்ணங்கள் அனைத்தும் இவற்றின் கலப்பினாலேயே உண்டாகின்றன. ஒவ்வொரு வண்ணத்திற்கும் நம் வாழ்வில் ஒரு பங்கு உள்ளது.


உளவியலில்(Psycology) நிறங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.இந்த வண்ணங்கள் நமது எண்ணங்களிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடியவை என்பதும் ஒருவர் விரும்பும் நிறத்தைக்கொண்டே அவர்கள் குணத்தையும் கணிக்க இயலும் என்பதும் உளவியலாளர்களின் கருத்து. உளவியலில், சிவப்பு, பச்சை, நீலம் மற்றும் மஞ்சளை அடிப்படை நிறங்கள் (Basic Colours) என்று சொல்லப்படுகிறது. நம் மீது தாக்கத்தை உண்டாக்கக்கூடிய நிறங்களாக அடிப்படை நிறங்களான மேற்கூறிய சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் இவற்றுடன் வெண்மை, கருமை, சாம்பல் நிறம்(Grey), ஆரஞ்சு, ஊதா(Violet), இளஞ்சிவப்பு (Pink) மற்றும் பழுப்பு(Brown) நிறங்கள் குறிப்பிடப்படுகின்றன.
பச்சை நிறமே பச்சை நிறமே: பசுமை நிறம் பொதுவாக சமநிலையையும் சூழலில் அமைதி நிலவுவதையும் குறிக்கிறது. பச்சை நிறத்தினைப் பார்க்கும்பொழுது நமது மனம் புத்துணர்ச்சி அடைகிறது. கண்களில் உள்ள லென்ஸ் நாம் பார்க்கும் ஒவ்வொரு நிறத்தின் அலைவரிசைக்கும் ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக்(Adjustment) கொள்ளுகிறது. ஆனால், பச்சை நிறத்திற்கு அப்படிப்பட்ட தகவமைப்பு ஏதும் தேவையில்லை. வான வில்லின் நடுவில் அமைந்துள்ள இந்நிறமானது சமநிலையைச் சுட்டுகிறது. ஓய்வு நிலையையும் செழிப்பையும் குறிக்கவும் பச்சை பயன்படுகிறது.
நீல நிறம், வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் : குளிர்ந்த நிறமாகக் கருதப்படும் நீலம், அறிவுத்திறனையும், நம்பிக்கையையும்,திறமையான தர்க்க ரீதியான செயல் பாட்டையும் குறிப்பிடுகிறது. நீல நிறம் மனதிற்கு இதமளிக்கக் கூடியதாகக் கருதப் படுகிறது. ஆழ்ந்த நீல நிறம், எண்ண ஓட்டங்களைச் சீராக்கி சிந்திக்கும் திறனை உயர்த்துகிறது. இள நீலமானது, மனதை அமைதிப்படுத்தி ஒருமுகப்படுத்துகிறது. அதிக அலை நீளமுள்ள நிறமாதலால், தொலைவில் உள்ள நீல நிறப்பொருட்கள் நம் கண்ணில் படுவதில்லை. இதனால்தான் போக்குவரத்து விளக்குகள் நீல நிறத்தைப் பயன்படுத்துவதில்லை. அதே அதிக அலை நீளம்தான், வானத்தை நீல நிறமாகத் தோன்றச் செய்யவும் காரணம். உலக முழுவதும் அதிக அளவிலான மக்கள் நீல நிறத்தை விரும்புவதாக ஆய்வுகள் கணிக்கின்றன.


வலிமையின் நிறம் சிவப்பு: வறுமையின் நிறம் சிவப்பா என்று நமக்குத் தெரியாது. ஆனால் வலிமையின் நிறம் சிவப்புதான். ஆம், சிவப்பு வலிமையையும் துணிச்சலையும் ஆண்மை, ஆற்றல் ஆகியவற்றையும் குறிக்கும் நிறமாகக் கருதப்படுகிறது. தூண்டுதலை உண்டாக்குகிறது. ஒரு அறையில் உள்ள பொருட்களில் சிவப்பு வண்ணப் பொருள்தான் நமது கவனத்தினை முதலில் ஈர்க்கிறது. எனவேதான் போக்குவரத்து சைகைகள், அபாய எச்சரிக்கைகள் முதலியவை சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துகின்றன. 'செய் அல்லது செத்து மடி' என்ற உணர்வை உண்டாக்குவதும், நேரம் வேகமாக ஓடுவது போன்ற உணர்வைத் தோற்றுவிப்பதும் சிவப்பின் பிற தன்மைகள்.
மஞ்சள் மகிமை: மஞ்சள் உணர்வு பூர்வமான நிறம். தன்னம்பிக்கை, ஆக்க பூர்வ சிந்தனைகள், நட்புணர்வு, நேர்மறைச் சிந்தனை ஆகியவற்றின் குறியீடாகக் கருதப்படுகிறது. சிவப்பு நிறம் போலவே வலிமையையும் உணர்வுகளின் தூண்டுதலையும் கூட்டுவது மஞ்சளின் தன்மை. உத்வேகத்தை அதிகரிப்பதோடு நேர்மறை உணர்வுகளை ஏற்படுத்த வல்லது. ஆனால் அளவுக்கதிகமான மஞ்சள் நிறம் அல்லது தவறான வண்ணங்களுடன் மஞ்சளின் இணைப்பு எதிரான பலனைத் தரக்கூடியது. அது நமது சுய மதிப்பைக் (Self Esteem) குறைக்கின்ற அல்லது பதட்டத்தையும் பயத்தையும் உண்டாக்கும் காரணியாகிவிடுகிறது.

ஆழமான ஊதாவே: ஆன்மீக உணர்வுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இந்நிறம் நிறைவு, சொகுசு , தரம் ஆகியவற்றைக் குறிப்பதாகவும் விளங்குகிறது. ஊதா நிறம் ஆழ்நிலை தியானத்திற்கு உதவுகிறது. ஆன்மீக உணர்வைத் தூண்டக்கூடிய இந்நிறம் சீரான சிந்தனையையும், ஆழ்ந்த எண்ணங்களையும் ஊக்குவிக்கிறது.வானவில்லின் புறத்தில் கடைசியாக இருக்கும் நிறமாதலால், காலம்(Time), வெளி(Space)மற்றும் பிரபஞ்சம் (Cosmos) இவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. அதே சமயம் அதிகப்படியான ஊதாநிறப் பயன்பாடு தாழ்வு மனப்பான்மை, அழுத்தம், வெளிப்படையாகப் பேசாமை (Introvert) போன்றவற்றை ஏற்படுத்தக் கூடியது. அதே போல் சரியான வண்ணக்கலவையாக இல்லாவிடில் அது அருவருக்கத் தக்கதாகத் தோற்றமளிக்கிறது.


ஆர்வம் தரும் ஆரஞ்சு: செயல்பாட்டைத் தூண்டக் கூடிய வண்ணம் ஆரஞ்சு. வளமை, பாதுகாப்பு, ஆர்வம், கதகதப்பு, வேடிக்கை ஆகியவற்றின் குறியீடு எனவும் ஆரஞ்சு வண்ணம் கருதப்படுகிறது. சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தின் கலவையால் ஆரஞ்சு உருவாவதால், செயல் திறன், உணர்வுகள் இரண்டையும் தூண்டும் தன்மையுடையதாக உள்ளது இந்த வண்ணம். மனம் மிகுந்த சோர்வாக இருக்கும்பொழுது ஆரஞ்சு வண்ண உடை அணிவதால், மனச்சோர்வில் இருந்து விடுபட இயலும். அதே நேரம், இவ்வண்ணத்தை கறுப்புடன் சேர்த்துப் பயன் படுத்துகையில் இது எதையோ இழந்தது போன்ற உணர்வைத் தோற்றுவிப்பதாக மாறிவிடுகிறது. மேலும் அதிகப் படியான ஆரஞ்சு வண்ணம், அறிவீனத்தைக் (நீலத்திற்கு எதிரான தன்மை) காட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக