கே.பாலசந்தர் பிறந்த நாள் ஜுலை 09
• கே.பாலசந்தர் தமிழ் சினிமாவின் பீஷ்மர், உறவுகளுக்கு, உணர்வுகளுக்கு புது வண்ணம் பூசிய பிதாமகன், செஞ்சுரி போட்ட சிகரம் கே.பாலசந்தரின் பெர்சனல் பக்கங்கள்.
* தஞ்சைத் தரணியின் நன்னிலம்- நல்லமாங்குடி அக்ரஹாரத்தில் நமக்காகப் பிறந்தது 9, ஜீலை 1930-ல். ஆம், 80 வயது கே.பி-யின் கலையுலகப் பொது வாழ்வு அங்கே சிறு வயதில் திண்ணை நாடகங்களில் தான் ஆரம்பம்!
• சென்னை ஏ.ஜி.ஆபிஸில் 12 ஆண்டுகள் பணிபுரிந்து கொண்டே, நாடகங்கள் நடத்தி வந்தார். `மேஜர் சந்திரகாந்த்’ மிகப் பிரபலமான நாடகம். `எதிர்நீச்சல்’, `நாணல்’, `விநோத ஒப்பந்தம்’ போன்றவை மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாடகங்கள்!.
• கமல், ரஜினி, சிரஞ்சிவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், சரத்பாபு, சார்லி, விவேக், எஸ்.பி.பி. என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் ஏராளம். இன்னமும் இவரைக் கண்டாலே எழுந்து நின்றுவிடுவார் ரஜினி!.
• இதுவரை 101 படங்கள் இயக்கி இருக்கிறார். முதல் படம், `நீர்க்குமிழி’, `பொய்’ வரை பட்டியல் நீள்கிறது!.
• ஆரம்ப காலத்தில் ஒண்டுக் குடித்தனம் நடத்தியது கோபாலபுரத்தில் கலைஞர் இல்லத்துக்கு அருகே, மூன்றாவது தெருவில் கலைஞரைச் சந்திக்க நினைத்து, நாடகங்களில் பிரபலமான பிறகுதான் அந்தக் கனவு நனவானது!.
• தேசிய விருது, மாநில விருது, பத்மஸ்ரீ, அண்ணா விருது, கலைஞர் விருது, கலைமாமணி, ஃபிலிம்பேர், பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் என ஏராளமான அங்கீகரிப்புகள் பாலசந்தருக்கு உண்டு!.
• மனைவியின் பெயர் ராஜம், கவிதாலயா தயாரிப்புப் பணியில் இருக்கிற புஷ்பா கந்தசாமி, கைலாசம், பிரசன்னா என மூன்று குழந்தைகள். மிகுந்த இடைவெளிவிட்டுப் பிறந்ததால் பிரசன்னா மட்டும் ரொம்பச் செல்லம்!.
• பி.எஸ்சி, முடித்துவிட்டு முத்துபேட்டையில் ஓர் ஆண்டு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறார். `தென்றல் தாலாட்டிய காலம்’ என அதை ஆசையாகக் குறிப்பிடுவார்!.
• தோட்டக் கலையில் ஆர்வம், யார் உதவியையும் எதிர்பார்க்காமல், வீட்டையும் தோட்டத்தையும் தானே பெருக்கிச் சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புவார்!.
• ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, சரிதா, சுஜாதா, ஸ்ரீப்ரியா, ஜெயசுதா, ஜெயசித்ரா, கீதா, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா, ரம்யாகிருஷ்ணன் என பாலசந்தர் அறிமுகப்படுத்திய கதாநாயகிகளின் பட்டியல் இன்னும் நீளம்!.
• எம்.ஜி.ஆரின் `தெய்வத்தாய்’ படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார். சிவாஜியை வைத்து `எதிரொலி’ என ஒரே ஒரு படம் இயக்கியிருக்கிறார். அடுத்து, இவரே ஹிட் ஹீரோக்களை உருவாக்கியது வரலாறு!.
• மலையருவியும் கடற்கரையும் பாலசந்தரின் படங்களில் நிச்சயம் இடம்பெறும். `அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் நடிகர்களின் பெயர்ப் பட்டியலில் பெயரையும் சேர்த்தவர்!.
• விநாயகர்தான் இஷ்ட தெய்வம், பள்ளி நாட்களில் தெரு முனையில் இருந்த விநாயகர் கோயிலுக்கு அர்ச்சகராக இருந்த அனுபவமும் உண்டு. வீட்டுக்குப் பெயர் கூட `விநாயகா’!
• பாலசந்தரின் தந்தை 18 ரூபாய் சம்பளத்தில் கிராம அதிகாரியாக இருந்து இவரை கல்லூரி வரை படிக்கவைத்து கலெக்டர் ஆக்க வேண்டும் என்பதற்காக. திரைத் துறையில் தான் பெரிய உயரக்கு வந்ததை அப்பா பார்க்கவில்லையே என்ற வருத்தம் இன்னுமும் இருக்கு டைரக்டருக்கு!.
• 1972 மார்ச் 10-ம் தேதி வரை செயின் ஸ்மோக்கர், மார்ச் 11-ம்தேதி சிறு மாரடைப்பு வர, புகைப் பழக்கத்துக்கு விடை கொடுத்தார்!
• கவிதாலயா என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி 56 படங்கள் தயாரித்து இருக்கிறார். ரஜினியில் ஆரம்பித்து, ஜீவன் வரைக்கும் அவர் தயாரிப்பில் நடிக்காதவர்களை எண்ணி விடலாம்!.
• தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் படங்கள் இயக்கி இருக்கிறார் பாலசந்தர். `ஏக் துஜே கேலியே’ மூலம் கமல் ஹிந்திக்குப் போனார். எஸ்.பி.பி. பாடிய `தேரே மேரே பீச் மே’ இன்றைக்கு வரைக்கும் ஆல் டைம் ஹிட்!.
• பாலசந்தரை மானசீகமாக மிகவும் பாதித்த நடிகர் எம்.ஆர்.ராதா. நாடகங்களில் அவரது அநாயாசமான நடிப்பை எப்பவும் சிலாகிப்பார்!.
• அண்ணா அவர்களை பாலசந்தருக்குப் பிடிக்கும். `இரு கோடுகள்’ படத்தில் அவரைக் காட்டுவதற்குப் பதிலாக, அவரது குரலைவைத்து படமாக்கிய காட்சி வெகுவாக ரசிக்கப்பட்டது!.
• சீரியல்களில் சின்னதாக முகம் காட்டிய பாலசந்தர், டைரக்டர் தாமிராவின் `ரெட்டச் சுழியில்’ நண்பர் பாரதிராஜாவுடன் இணைந்து பெரும் பாத்திரத்தில் நடிக்கிறார்!.
• இன்னமும் சினிமாவின் உலகம் சினிமா பார்ப்பதும், படிப்பதும், திரையுலகம் சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்கவும் தான் விரும்புவார். உறவினர்களுக்கு ஒரு புன்னகை, கையசைப்பு அவ்வளவுதான்!.
• படங்களில் பார்த்து, அவை மனதைப் பாதித்துவிட்டால். உடனே அந்த இயக்குநருக்கு நீண்ட பாராட்டுக் கடிதம் எழுதுவார். நேரிலும் சந்தித்துப் பேசி தட்டிக்கொடுப்பார். `16 வயதினிலே’ பார்த்துவிட்டு பாரதிராஜாவின் காலில் விழுவேன் என பாலசந்தர் பேசிவிட, பதறி விட்டார் பாரதிராஜா!.
• ஷீட்டிங் இருந்தால் காலை நாலரை மணிக்கே எழுந்து விடுவார், இல்லாவிட்டால் ஆறு மணி. இவரின் சுறுசுறுப்பை இன்றைய இளைஞர்களிடம் கூட காண முடியாது!.
• ஒரே ஒரு தடவை பெப்ஸி தலைவராக இருந்திருக்கிறார். நீண்ட நாள் பிரச்னைகளைக்கூட சுமுகமாகத் தீர்த்துவைத்த பெருமை உண்டு!.
• தூர்தர்ஷனில் 1990 –ல் வெளிவந்த இவரது `ரயில் சிநேகம்’ இன்றளவும் பேசப்படும் தொடர். கை அளவு மனசு, ரகுவம்சம், அண்ணி போன்றவையும் இவரது பரபரப்பான தொடர்களாகும். பின்னாளில் வெளிவந்த மெகா சீரியல்களுக்கு இவர்தான் ஆரம்ப விதை போட்டார்!.
நன்றி -லஸ்மன்ஸ்ருதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக