பக்கங்கள்

திங்கள், 25 ஜூலை, 2016

கார்கில் போர் வெற்றி நாள் ஜூலை 26.


கார்கில் போர் வெற்றி நாள் ஜூலை  26.
கார்கில் போர் ( Kargil War) அல்லது கார்கில் பிரச்சனை, 1999இல் மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில், நடந்த போராகும். இந்த போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் நடந்தது. கார்கிலை மீட்க இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையான விஜய் நடவடிக்கை என்ற பெயரிலும் இது வழங்கப்படுகிறது.

மே 1999இல் பாகிஸ்தான் இராணுவமும் காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து கட்டுப்பாடுக் கோடைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்ததே போருக்கு முக்கிய காரணமாகும்.போரின் ஆரம்பத்தில் பாகிஸ்தான், பழியை முற்றிலுமாக காஷ்மீரி போராளிகள் மீது சுமத்தியது. ஆனால், உயிரிழந்த வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலமாகவும், போருக்குப்பின் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆகியோர் விடுத்த அறிக்கைகள் மூலமாகவும், பாகிஸ்தான் துணை இராணுவப் படையினர், தளபதி அஷ்ரஃப் ரஷீத் தலைமையில் போரில் ஈடுபட்டிருந்தது உறுதியானது. இந்திய வான்படையின் துணையோடு, இந்தியத் தரைப்படை, பாகிஸ்தான் இராணுவம் மற்றும் போரளிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதிகளை மீட்டது. சர்வதேச நாடுகள் பாகிஸ்தானின் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பாகிஸ்தான் படைகள் இந்தியாவுடனான போரைக் கைவிட்டன.

இப்போரானது, மிக உயர்ந்த மலைத்தொடரில் மிகுந்த சவால்களை எதிர்கொண்டு நடந்த போருக்கு சிறந்த உதாரணமாகும். இதுவரை இந்த போர் மட்டுமே, அணு ஆயுத சக்தியுடைய நாடுகள் இரண்டுக்கிடையில் நடந்த நேரடிப் போராகும். இந்தியா முதன்முறையாக 1974 இல் வெற்றிகரமாக அணு ஆயுதச் சோதனை நிகழ்த்தியது. பாகிஸ்தானும் இரகசியமாக அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும், 1998 ஆம் ஆண்டு இந்தியா நிகழ்த்திய இரண்டாவது அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு இரண்டு வாரங்கள் கழித்தே பாகிஸ்தான் தனது முதல் அணு ஆயுதச் சோதனையை நிகழ்த்தியது.

அமைவிடம்
1947 ஆம் ஆண்டு நடந்த இந்திய பிரிவினைக்கு முன், கார்கில் பகுதி லடாக்கின் பல்திஸ்தான் மாவட்டத்தோடு இணைந்திருந்தது. உலகின் பல உயர்ந்த மலைகளைக் கொண்ட கார்கில் பகுதி, பல இன, மொழி மற்றும் சமய வேறுபாடுடைய மக்களைக் கொண்டது. முதல் காஷ்மீர் போருக்குப் பின் (1947 - 1948) வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கோட்டின் படி, கார்கில் நகரம் இந்திய மாநிலமான ஜம்மூ காஷ்மீரின் லடாக் பகுதியுடன் இணைக்கப்பட்டது. இந்திய-பாகிஸ்தான் போரில் (1971) பாகிஸ்தானின் தோல்விக்குப் பின் இந்தியாவும் பாகிஸ்தனும் செய்துகொண்ட சிம்லா உடன்படிக்கையில், இரு நாடுகளும் கட்டுப்பாட்டு எல்லையைத் தாண்டி இராணுவ மோதல்களில் ஈடுபடக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

போர் நடைபெற்ற கார்கிலின் அமைவிடம்
கார்கில் நகரம், ஸ்ரீநகரில் இருந்து 205 கி.மீ. (127 மைல்) தொலைவில், இந்தியாவிற்குட்பட்ட பகுதிகளின் வடக்கு எல்லையில் உள்ளது. இமய மலைகளுக்கு அருகில் அமைந்துள்ளதால் மிதமான வானிலை கொண்டதாக கார்கில் விளங்குகிறது. கோடை காலங்கள் குளுமையாகவும்; குளிர்காலங்கள் நீண்டதாகவும், மிகவும் குறைந்த வெப்பநிலை (-48 °C வரை) கொண்டதாகவும் இருக்கும். ஸ்ரீநகரையும் லேவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையான NH-1D, கார்கில் வழியாக செல்கிறது.ஊடுருவல் நடந்தது இந்த சாலைக்கு சிறிது தொலைவில் இருக்கும் முகடுகளில்தான். இப்பகுதியல் உள்ள இராணுவ கண்காணிப்புத் தளங்கள் தரைமட்டத்தில் இருந்து சுமார் 5000 மீட்டர் (16,000 அடி) உயரத்தில் அமைந்துள்ளன. மாவட்டத் தலைநகரைத் தவிர முஷ்கோ பள்ளத்தாக்கு, திரஸ் எனும் நகரம், படாலிக் பகுதி, கார்கிலின் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் மக்கள் வசிக்கின்றனர்.

கார்கில் நகரம் ஊடுருவப்பட்டதற்கு முக்கிய காரணம், அதன் அருகில் இருந்த காலியான இராணுவ கண்காணிப்புத் தளங்களாகும். இதுபோன்ற இடங்களில், மலை முகடுகளின் உச்சியில் தற்காப்பு நிலைகள் ஏற்படுத்தப்பட்டால், அது கோட்டையை போன்ற பாதுகாப்பைத் தரும். உயரத்தில் இருக்கும் இராணுவத்தை எதிர்த்துப் போரிடும் படையினருக்கு பன்மடங்கு அதிக பலம் தேவைப்படும். என்பதைத் தவிர நடுங்க வைக்கும் குளிரையும் அப்படையினர் தாக்குப்பிடித்தாக வேண்டும்.

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்கார்டூ எனும் நகரம் கார்கிலில் இருந்து 173 கி.மீ (107 மைல்) தொலைவில்தான் உள்ளது. அந்நகரம் பாகிஸ்தான் படையினருக்கு, தாக்குதலின் போது தேவையான ஆயுதங்கள் மற்றும் பிற தளவாடங்களை விநியோகிக்கக்கூடியதாக அமைந்தது.

பின்புலம்

இமய மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள கார்கில் நகரம்
1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பின் இரு நாடுகளுக்கிடையே பெரும்பாலும் அமைதியே நிலவியது. ஆனால் சியாசென் பனிமலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இரு நாடுகளும் செய்த முயற்சிகளும் அதன் காரணமாக அமைக்கப்பட்ட இராணுவ கண்காணிப்பு நிலைகளும், சிறிய அளவில் மோதல்கள் ஏற்பட காரணமாக அமைந்தது.காஷ்மீரில் 1990 களில் பாகிஸ்தான் ஆதரவுடன் நடந்த பிறிவினைவாத மோதல்களும், இரு நாடுகளும் 1998 இல் மேற்கொண்ட அணு ஆயுத சோதனைகளும், பதற்றம் அதிகரிக்கக் காரணமாயின. பதற்றத்தைத் தணிக்கவும், காஷ்மீர் மோதல்களை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளவும் இரு நாடுகளும் பிப்ரவரி 1999 இல், லாகூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த பாகிஸ்தான் இராணுவத்தின் சில பிரிவுகளும் பாகிஸ்தான் துணை இராணுவப் படையினரும் முஜாஹிதீன் போராளிகளைப்போல இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிக்குள் 1998-1999 களில் ஊடுருவத் தொடங்கினர். இந்த ஊடுருவல் பத்ர் நடவடிக்கை என்ற குறியீட்டுப் பெயரால் அறியப்பட்டது. காஷ்மீருக்கும் லடாக்குக்கும் உள்ள இணைப்பைத் துண்டிப்பதும்; சியாசென் பனிமலையில் இருக்கும் இந்தியப் படையினரைப் பின் வாங்க வைத்து காஷ்மீர் எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்தியாவை நிர்பந்திப்பதும் இதன் முக்கிய நோக்கங்களாகக் கருதப்படுகின்றன. காஷ்மீர் பகுதியில் பதற்றம் அதிகரித்தால் சர்வதேச நாடுகள் தலையிடும் என்றும் அதன் மூலம் காஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் முடிவு காண முடியும் என்றும் பாகிஸ்தான் நம்பியது. இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் நடந்து வரும் கிளர்ச்சியையும் இதன்மூலம் பெரிதாக்க முடியும் என்பதும் இதன் ஒரு முக்கிய இலக்காக இருந்திருக்கலாம்.

பாகிஸ்தான் இராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் சாகித் அஸிஸ் மற்றும் ஐ.எஸ்.ஐ யின் கூற்றுகளால் ஊடுருவலில் முஜாகிதீன் ஈடுபடவில்லை என்பதும், ஊடுருவியதும் கார்கில் போரில் ஈடுபட்டதும் பாகிஸ்தான் படையினர்தான் என்பதும் புலனாகிறது. இந்த நடவடிக்கை, இந்தியாவின் மேக்தூத் நடவடிக்கைக்குப் பாகிஸ்தானின் பதிலடி என்றும் நம்பப்படுகிறது.

இந்தியாவின் அப்போதைய தரைப்படைத் தளபதியான வேத் பிரகாஷ் மாலிக் மற்றும் பலர், இந்த ஊடுருவல் பாகிஸ்தான் இராணுவத்தால் பல காலமாகத் திட்டமிடப்பட்டது என்று கருதுகின்றனர். பல முறை பாகிஸ்தான் இராணுவம் இத்திடத்தை செயல்படுத்தப் பாகிஸ்தான் தலைவர்களிடம் (சியா உல் ஹக் மற்றும் பெனசீர் பூட்டோ) அனுமதி கேட்டும், இது பெரும் போருக்கு வித்திடக்கூடும் என்ற அச்சத்தால் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

பர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தான் இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டதும் தாக்குதலுக்கானத் திட்டங்கள் மீண்டும் வகுக்கப்பட்டன. போருக்குப் பின் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், தனக்குத் தாக்குதல் திட்டங்கள் குறித்து எவ்விதத் தகவல்களும் தெரியாது என்றும் இந்தியப் பிரதமராக விளங்கிய அடல் பிகாரி வாஜ்பாய் தொலைப்பேசியில் அழைத்து எல்லை நிலவரம் குறித்துப் பேசிய பின்னர்தான் தனக்குத் தாக்குதல் பற்றித் தெரியும் என்றும் கூறியுள்ளார். ஷெரீஃப், இத்தாக்குதலுக்கு முழு காரணம், பாகிஸ்தான் இராணுவத் தளபதியாக விளங்கிய பர்வேஸ் முஷாரஃபும் அவரது கூட்டாளிகளான சில தளபதிகளும்தான் என்று கூறியுள்ளார். ஆனால் தாக்குதல் திட்டம் குறித்து நவாஸ் ஷெரீஃபுக்கு, வாஜ்பாய் பிப்ரவரி 20 அன்று லாகூர் வருவதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டது என்று பர்வேஸ் முஷாரஃப் கூறியுள்ளார்.

போரின் போக்கு
மோதல் சம்பவங்கள்
தேதி (1999) சம்பவம்
மே 3 கார்கிலில் பாகிஸ்தான் ஊடுருவியிருப்பது அங்குள்ள மேய்ப்பர்கள் மூலம் அறியப்பட்டது
மே 5 இந்திய இராணுவம் கார்கில் பகுதிக்கு ரோந்துக் குழுவை அனுப்பியது; பாகிஸ்தான் வீரர்கள், ஐந்து இந்திய வீரர்களைச் சிறைபிடித்து சித்திரவதை செய்து கொன்றனர்.
மே 9 பாகிஸ்தான் குண்டு வீச்சில் கார்கிலில் இருந்த ஆயுதக் கிடங்கு சேதம் அடைந்தது
மே 10 திரஸ், கக்சர் மற்றும் முஷ்கோ பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் ஊடுருவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
மே மாத மத்தி இந்திய இராணுவம் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து படைகளை கார்கில் பகுதிக்கு அனுப்பியது
மே 26 ஊடுருவியவர்களுக்கெதிரான வான்வழித் தாக்குதலை இந்திய வான்படைத் தொடங்கியது
மே 27 இந்திய வான்படை மிக்-21 மற்றும் மிக்-27 ஆகிய இரண்டு போர் விமானங்களை இழந்தது; வான்படைலெப்டினன்ட் நசிகேதாவை பாகிஸ்தான் வீரர்கள் போர் கைதியாகப் பிடித்துச் சென்றனர்
மே 28 இந்திய வான்படையின் எம்.ஐ-17 என்ற போர் விமானம் பாகிஸ்தான் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது; அதனுள் இருந்த நான்கு வீரர்களும் உயிரிழந்தனர்
சூன் 1 பாகிஸ்தான் தனது தாக்குதலை பலப்படுத்தியது; இந்தியாவின் NH 1A தேசிய நெடுஞ்சாலை குண்டுவீசித் தாக்கப்பட்டது
சூன் 5 ஊடுருவலில் பாகிஸ்தான் சம்பந்தப்பட்டிருப்பது, இறந்துபோன பாகிஸ்தான் விரர்களிடமிருந்து இந்திய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் உறுதியானது
சூன் 6 இந்திய இராணுவம் கார்கிலில் பெரும் தாக்குதலைத் தொடங்கியது
சூன் 9 படாலிக் பகுதியில் இரு முக்கிய நிலைகளை இந்திய இராணுவம் கைப்பற்றியது
சூன் 11 சீனா சென்றிருந்த பாகிஸ்தான் இராணுவ தளபதி பர்வேஸ் முஷாரஃபுக்கும் ராவல்பிண்டியில் இருந்த பாகிஸ்தானின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அஸிஸ் கானுக்கும் நடந்த உரையாடலை இந்தியா இடைமறித்து, ஊடுருவலில் பாகிஸ்தான் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்தது
சூன் 13 இந்திய இராணுவம், திரஸிலுள்ள தோலோலிங் பகுதியைக் கைப்பற்றியது
சூன் 15 அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கார்கிலில் இருந்து படைகளைத் திரும்பப்பெறுமாறு வலியுருத்தினார்
சூன் 29 இந்திய இராணுவம், இரண்டு முக்கிய நிலைகளான புள்ளி 5060 மற்றும் புள்ளி 5100 ஆகியவற்றைக் கைப்பற்றியது
சூன் 2 இந்திய இராணுவம் கார்கிலில் மும்முனைத் தாக்குதலைத் தொடங்கியது
சூன் 4 இந்திய இராணுவம் பதினோரு மணிநேரப் போராட்டத்திற்குப்பின் டைகர் ஹில் பகுதியை மீட்டது
சூன் 5 இந்திய இராணுவம் திரஸ் பகுதியை முழுமையாக மீட்டது. கிளின்டனுடனான சந்திப்பைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் படைகளைத் திரும்பப்பெற ஒப்புக்கொண்டார்
சூன் 7 இந்திய இராணுவம் படாலிக் பகுதியிலுள்ள ஜுபார் என்ற இடத்தைக் கைப்பற்றியது
சூன் 11 பாகிஸ்தான் இராணுவம் கார்கிலில் இருந்துத் திரும்பத் தொடங்கியது; இந்திய இராணுவம் படாலிக் பகுதியில் முக்கிய முகடுகளைக் கைப்பற்றியது
சூன் 14 இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், விஜய் நடவடிக்கை வெற்றி அடைந்ததாக அறிவித்தார்; பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர இந்திய அரசு பல நிபந்தனைகளை முன்வைத்தது
சூன் 26 கார்கில் பிரச்சனை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியவர்கள் கார்கிலில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டதாக இந்திய இராணுவம் அறிவித்தது


கார்கில் போரை மூன்று முக்கிய கட்டங்களாகப் பகுக்கலாம். முதல் கட்டம், பாகிஸ்தான் தனது படை வீரர்களை இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் எல்லைக்குள் அனுப்பி முக்கிய நிலைகளை ஆக்கிரமித்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலை NH1, பாகிஸ்தான் இராணுவத்தால் தாக்கக்கூடிய எல்லைக்குள் வந்தது. இரண்டாம் கட்டம், பாகிஸ்தான் இராணுவம் கார்கிலில் ஊடுருவியிருப்பதை இந்திய இராணுவம் கண்டுபிடித்து அவர்களுக்கெதிராக எல்லையில் படைகளைக் குவித்தது. இறுதிக் கட்டம், இந்திய இராணுவத்தினர் பாகிஸ்தான் படைகளுடன் போரிட்டு அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல முக்கிய நிலைகளைத் தங்கள் வசமாக்கினர். சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் தனது படைகளைக் கார்கிலில் இருந்துத் திரும்பப்பெற்றது.

பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு

போரின் நிகழ்வுகள்
குளிர் காலங்களில் பனி படர்ந்த மலைகளில் உரைய வைக்கும் குளிர் நிலவும் என்பதால் இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லைக் கோட்டுக்கருகில் இருக்கும் தத்தம் இராணுவ நிலைகளைத் தற்காலிகமாக காலி செய்து பின் வாங்கிச் செல்வது வழக்கம். குளிர்காலம் முடிந்த பின் காலியாக விடப்பட்ட தத்தம் இராணுவ நிலைகளை மீண்டும் உபயோகப்படுத்துவர். ரோந்துப் பணிகள் வழக்கம் போல் தொடரும்.

பிப்ரவரி 1999 இல் பாகிஸ்தான் இராணுவம் தனது இராணுவ நிலைகளோடு சேர்த்து, கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் இருந்த இந்தியாவின் இராணுவ நிலைகளையும் சேர்த்து ஆக்கிரமித்துக் கொண்டது.பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த வடக்குக் காலாட்படைப் பிரிவு மற்றும் சிறப்பு சேவைகள் குழுவைச் சேர்ந்த வீரர்கள் இந்திய நிலைகளை ஆக்கிரமித்து அவற்றுக்கருகில் இராணுவ தளங்களை ஏற்படுத்தினர். பாகிஸ்தான் படையினருக்கு காஷ்மீரி கொரில்லாக்களும் ஆப்கான் கூலிப்படையினரும் உதவியதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் படையினர், முஷ்கோ பள்ளத்தாக்கு, திரஸிலுள்ள மார்ப்போ லா முகடுகள், கார்கிலுக்கு அருகில் உள்ள கக்சர், சிந்து நதிக்குக் கிழக்கில் உள்ள படாலிக் பகுதி, எல்லையோரத்தில் உள்ள சோர்பாட்லா பகுதி மற்றும் சியாச்சென் பனி மலைக்குத் தெற்கேயுள்ள துர்தோக் ஆகிய பகுதிகளில் ஊடுருவினர்.

எல்லையில் இந்தியப் படைகள் குவிப்பு
இந்திய ரோந்துப் படையினர் பாகிஸ்தான் ஆக்கிரமித்தப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கவில்லை. பாகிஸ்தானின் குண்டு வீச்சுகள் இந்தியப் படையினரின் கவனத்தை ஈர்த்து, ஊடுருவும் பாகிஸ்தான் படையினருக்குத் திரைமறைவாக செயல்பட்டது. இந்த இரண்டு காரணங்களால் பாகிஸ்தானின் ஊடுருவலை இந்தியப் படையினர் கவனிக்கத் தவறினர். ஆனால் மே மாதத்தின் இரண்டாம் வாரத்தில், ஆடு மேய்ப்பவர்களிடமிருந்து கிடைத்த ஊடுருவல் குறித்தத் தகவலால் படாலிக் எல்லைப்பகுதியில், கேப்டன் சௌரப் காலியா[50] தலைமையில் இந்தியப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இவர்களை ஊடுருவியிருந்த பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்கினர். இதன்மூலம் எல்லையில் ஊடுருவல் நடந்திருப்பது உறுதிபடுத்தப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் ஊடுருவியவர்கள் ஜிகாதிகளாகத்தான் இருக்கக்கூடுமெனவும் ஓரிரு நாட்களில் அவர்களை அப்புறப்படுத்திவிட முடியும் எனவும் இந்திய இராணுவத்தினர் நினைத்தனர். பின்னர், எல்லைக்கோடு நெடுகவும் ஊடுருவல் நிகழ்ந்திருப்பது கண்டறியப்பட்டதும், தாக்குதல் எதிர்பார்க்கப்பட்டதைவிட பல மடங்கு பெரிதாகத் திட்டமிடப்பட்டிருப்பது இந்தியப் படையினருக்குப் புலனானது. ஆக்கிரமிப்பாளர்கள், 130 சதுர கி.மீ முதல் 200 சதுர கி.மீ வரை இந்திய நிலப்பரப்பில் ஊடுருவியதாக அறியப்படுகிறது.

இந்திய அரசு, ஆக்கிரமிப்புக்காரர்களுக்குப் பதிலடி கொடுக்க விஜய் நடவடிக்கையைத் தொடங்கியது. எல்லையில் 2,00,000 இந்திய போர் வீரர்களைக் குவிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் கார்கில் நகரம் கரடு முரடான மலைப் பகுதியில் அமைந்திருந்ததால் பெரிய படைகளை அங்கு கொன்டு செல்ல முடியாமல் போனது. எனவே இந்திய படையினர் சிறு குழுக்களாக முன்னேறினர். இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 20,000 வீரர்களோடு இணைந்து சில ஆயிரம் இந்திய துணை இராணுவ வீரர்களும் இந்திய வான்படையும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். இந்த இராணுவ நடவடிக்கையில் கார்கில்-திரஸ் பகுதிகளில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 30,000 ஆகும். போரின் உச்ச நிலையில் பாகிஸ்தான் படையைச் சேர்ந்த 5,000 வீரர்கள் தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தியத் தரைப்படையினருக்கு உதவும் வகையில் இந்திய வான்படை, சஃபேத் சாகர் நடவடிக்கையை ஆரம்பித்தது. ஆனால் அப்போது நிலவிய வானிலை மற்றும் போர் நடைபெற்ற மலைகளின் உயரம் ஆகியவை காரணமாக இந்நடவடிக்கையின் பயன் இந்தியத் தரைப்படையினருக்கு முழுமையாகக் கிட்டவில்லை.

கடற்படைத் தாக்குதல்
தல்வார் நடவடிக்கையின் கீழ் இந்தியக் கடற்படை, பாகிஸ்தான் துறைமுகங்களை (முக்கியமாக, கராச்சி துறைமுகத்தை) முற்றுகையிட தயாரானது. இந்தியக் கடற்படையின் கிழக்கு மற்றும் மேற்கு படைப்பிரிவுகள் இனைந்து, வடக்கு அரபிக்கடலில் தீவிரமான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டன. பாகிஸ்தானின் கடல் வர்த்தகம் நசியும் அபாயம் ஏற்பட்டது. போரின் போது பாகிஸ்தான் பிரதமாரக இருந்த நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தானிடம் அப்போது ஆறு நாட்களுக்குத் தேவையான எரிபொருட்கள் மட்டுமே இருந்தன என்று பின்னாளில் கூறினார்.

பாகிஸ்தான் நிலைகளின் மீது இந்தியத் தாக்குதல்[தொகு]
காஷ்மீர் நகரம், இமய மலைத்தொடருக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் அந்நகர் வழியாகச் செல்லும் ஸ்ரீநகரையும் லேவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையான NH 1D கூட இரு வழிச்சாலையாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அச்சாலை பாகிஸ்தான் படையினரால் குண்டு வீசித் தாக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் படைகளை எல்லைப் பகுதிகளுக்குக் கொண்டு செல்வது இந்திய இராணுவத்திற்கு சவாலான காரியமாக அமைந்தது. அவ்வழியாகச் சென்ற இந்திய படையினர் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு உள்ளாயினர். NH 1D தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து பாகிஸ்தான் படைகளால் தாக்கப்பட்டு வந்ததால் லே பகுதி மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்காரர்கள் கையெறி குண்டுகள், குண்டு எறியும் துப்பாக்கிகள், விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டிருந்தனர். மேலும், பல நிலைகளில் மிதிவெடிகள் பொருத்தப்பட்டிருந்தன. சுமார் 8,000 மிதிவெடிகளை அகற்றியதாக இந்தியா போருக்குப் பின் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், இந்தியப் படைகளின் நடமாட்டத்தை ஆளில்லா உளவு விமானங்கள் மூலமாகவும் அமெரிக்காவிடமிருந்து வாங்கிய கதிரலைக் கும்பாக்கள் மூலமாகவும் கண்காணித்தது. இந்தியப் படைகளின் முதன்மையான பணி, NH 1D தேசிய நெடுஞ்சாலையைப் பாதுகாப்பதாக இருந்தது. ஏனெனில் இந்தியப் படைகள் முன்னேறவும், உதவிப் படைகள் வந்து சேரவும் அந்த சாலை முக்கியமானதாக இருந்தது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்த பல இராணுவ நிலைகள் அந்த சாலைக்கருகிலேயே அமைந்திருந்தன. எனவே அந்த சாலையைப் பாதுகாக்க அதனருகில் இருந்த நிலைகளை மீட்பது இந்தியப் படைகளுக்கு முக்கியமான பணியாக இருந்தது.

நெடுஞ்சாலைக்கு அருகில் இருந்த மலை முகடுகளைக் கைப்பற்றுவது இந்திய இரானுவத்தின் முக்கிய நோக்கமாக அமைந்தது. எனவே இந்தியப் படைகள், டைகர் ஹில், திரஸிலிருந்த தோலோலிங் பகுதி ஆகியவற்றை முதலில் தாக்கின.[65] அடுத்ததாக சியாசென் பனிமலைக்கு அருகில் இருந்த படாலிக்-துர்தோக் பகுதிகளை இந்தியப் படைகள் தாக்கின. NH 1D தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் அமைந்திருந்த புள்ளி 4590 மற்றும் திரஸ் பகுதியின் மிக உயரமான புள்ளி 5353 ஆகியவை பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்திருந்த முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகளாகும். இப்பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் படையினரால் NH 1D தேசிய நெடுஞ்சாலையை எளிதாகத் தாக்க முடிந்தது.இந்தியப் படையினர், சூன் 14 அன்று புள்ளி 4590 பகுதியைப் பாகிஸ்தான் படையினரிடமிருந்துக் கைப்பற்றினர். இம்முயற்சியில்தான் இந்தியப் படையினர் கார்கில் போரிலேயே மிக அதிகமான உயிரிழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. சூன் மாத மத்தியில் அநேகமாக அனைத்து நிலைகளையும் இந்தியப் படையினர் கைப்பற்றிவிட்டபோதிலும் போரின் இறுதி வரை திரஸ் பகுதிக்கு அருகில் இருந்த நெடுஞ்சாலையின் சில பகுதிகள் தொடர்ந்து பாகிஸ்தான் படையினரின் தாக்குதலுக்கு உள்ளானது.


கார்கில் போரில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட இந்திய வான்படையின் மிக்-21 ரக போர் விமானம்
NH 1D தேசிய நெடுஞ்சாலை இந்தியப் படையினர் வசம் வந்த பிறகு, பாகிஸ்தான் படையினரை எல்லைக் கோட்டுக்கு அப்பால் பின்வாங்க வைப்பதில் இந்திய இராணுவத்தின் கவனம் திரும்பியது. தோலோலிங் யுத்தத்தின் முடிவில் இந்தியாவின் கை ஓங்கத்தொடங்கியது. தோலோலிங் யுத்தத்தில் பாகிஸ்தான் படையினருக்குக் காஷ்மீர் போராளிகள் உதவினர். பாகிஸ்தானியரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சில இராணுவ நிலைகள் பலமாக எதிர்த்து நின்றன. டைகர் ஹில் பகுதி (புள்ளி 5140), போரின் இறுதிக் கட்டத்தில்தான் வீழ்ந்தது. டைகர் ஹில்லில் பாகிஸ்தான் வீரர்கள் பதுங்கியிருந்துத் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் பலத்த இழப்புகள் ஏற்பட்டன. இந்தியத் தரப்பில் ஐந்து வீரர்களும், பாகிஸ்தான் தரப்பில் பத்து வீரர்களும் டைகர் ஹில்லில் நடந்த யுத்தத்தில் உயிரிழந்தனர். பல யுத்தங்கள் முன்னர் அறியப்படாத மலைகளின் உச்சியில் நடந்தன. பெயரற்ற அந்த மலைகளை அடையாளப் படுத்த புள்ளி எண்களே பயன்படுத்தப்பட்டன.

போரின் உச்சத்தில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற பீரங்கிகளை இந்திய இராணுவம் போர்களத்தினுள் கொண்டு வந்தது. அவ்வகையில் போஃபர்ஸ் பீரங்கிகள் கார்கில் போரில் முக்கியப் பங்காற்றின. இந்தியப் படையினர் போஃபர்ஸ் பீரங்கியைப் பயன்படுத்தித் தங்கள் தாக்குதலை விரிவாக்கினர். ஆனால் பல இடங்களில் இடப்பற்றாக்குறை காரணமாக அவற்றை உபயோகப்படுத்த முடியாமல் போனது.

இடப்பற்றாக்குரை நிலவிய இடங்களில் இந்திய வான்படை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்திய வான்படையைச் சேர்ந்த மிராஜ் 2000எச் ரக போர் விமானங்கள், பாகிஸ்தான் படையினரின் பதுங்குக்குழிகள் மீது குண்டு வீச பயன்படுத்தப்பட்டன. இந்திய வான்படை, மிக்-27 ரக போர் விமானமொன்றை இயந்திரக் கோளாரால் இழந்தது. இந்திய வான்படையைச் சேர்ந்த மிக்-21 ரக போர் விமானமொன்று பாகிஸ்தான் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்திய வான்படையைச் சேர்ந்த எம்.ஐ-8 ரக உலங்கு வானூர்தி ஒன்று, பாகிஸ்தான் படையினரின் நில வான் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பலியானது.


கார்கில் போரில் இந்திய வானபடையால் மிராஜ் 2000எச் ரக விமானங்கள் பாகிஸ்தான் படையினருக்கு எதிராகத் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டன
மே 27, 1999 அன்று வான்படை லெப்டினன்ட் நசிகேதா ஓட்டிச் சென்ற விமானம், படாலிக் பகுதியில் இயந்திரக் கோளாரால் வெடித்ததால் அவ்விமானத்திலிருந்து அவர் வான்குடை மூலம் வெளியேறினார். அவரைத் தேடிச் சென்ற சுகுவாட்ரன் லீடர் அஜய் அஹுஜாவின் விமானம் பாகிஸ்தான் படையினரின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பலியானது. விமானத்திலிருந்து அவர் வான்குடை மூலமாகத் தப்பினாலும், அவரை பாகிஸ்தான் வீரர்கள் சிறைபிடித்து, சித்தரவதை செய்து கொன்றனர்.

பல முக்கிய இரானுவ நிலைகளில் இந்தியா, பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல் ஆகியவற்றைக் கையாண்டாலும், பாகிஸ்தான் படையினர் தாக்குதல் எல்லைக்கு அப்பால் இருந்ததால் அவர்களை பின்வாங்கச் செய்வது கடினமான காரியமாக அமைந்தது. எனவே, இந்திய இராணுவம் பாகிஸ்தான் படையினருக்கு எதிராக நேரடித் தாக்குதல்களை நடத்தியது. போர்களம் உயரமான மலைகளின் (18,000 அடி) உச்சியில் அமைந்திருந்தமையால் அவ்வகைத் தாக்குதல்களில் இந்தியப் படைகளால் மிக மெதுவாகவே முன்னேற முடிந்தது. பகல் நேர வெளிச்சத்தில் தாக்குவது அபாயகரமானதால், இந்தியப் படையினர் இரவின் இருளில் ஆனால் கடும் குளிரில் தாக்குதல் நடத்தினர். நேரடியாகத் தாக்குவதற்கு பதிலாக, பாகிஸ்தான் படையினரின் போக்குவரத்து வழிகளை அடைத்துக் கொண்டு முற்றுகை இடும் போர் உத்தியும் ஆராயப்பட்டது. ஆனால் இதைச் செய்வதானால் இந்தியப் படையினர் எல்லை தாண்டி, பாகிஸ்தான் பகுதிக்குள் செல்ல வேண்டி இருந்தது. போர் மேலும் பெரிதாகும் என்பதாலும் சர்வதேச நாடுகளின் ஆதரவை இழக்க நேரிடும் என்பதாலும் இந்தியா அந்த முறையைக் கையாளவில்லை.

போர் ஆரம்பித்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தியப் படையினர் பெரும்பான்மையான பகுதிகளை ஆக்கிரமிப்புக்காரர்களிடமிருந்து மீட்டனர். அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின் படி, 75% முதல் 80% வரையிலான ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் இந்தியாவின் வசம் வந்திருந்தன.

இறுதிக் கட்டம்
கார்கிலில் மோதல்கள் ஆரம்பமானவுடன், பாகிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவின் உதவியை நாடியது. மிகப்பெரிய அளவில் போர் வெடிக்கும் என்ற அச்சத்தில், பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறது என்பதை அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்து, அப்போதைய அமெரிக்க அதிபரான பில் கிளின்டனுக்கு அவரது உதவியாளர் புரூஸ் ரீடல் மூலமாகத் தெரிவித்தது. அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், பாகிஸ்தான் தனது படைகளை இந்தியப் பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்ளும் வரை இப்பிரச்சனையில் தலையிட மறுத்துவிட்டார். வாஷிங்டன் ஒப்பந்தப்படி, சூலை 4 ஆம் தேதி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தனது படைகளைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்ட பின் போர் அநேகமாக முடிவுற்ற போதிலும், சில இடங்களில் பாகிஸ்தான் படைகள் இந்தியப் பகுதிகளில் ஆக்கிரமிக்கப்ப்ட்ட நிலைகளிலிருந்து வெளியேறாமல் இருந்தனர். மேலும் பாகிஸ்தான் படையினருக்கு ஆதரவாக போரிட்ட ஜிகாத் அமைப்புகள் பாகிஸ்தானின் பின்வாங்கும் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தன; அவை போரட்டத்தைத் தொடர்ந்தன.

இந்திய இராணுவம், தனது இறுதித் தாக்குதலை சூலை மாதத்தின் இறுதி வாரத்தில் தொடங்கியது. திரஸ் பகுதியில் இருந்து பாகிஸ்தான் படையினர் முழுமையாக வெளியேற்றபட்ட பின், சூலை 26 ஆம் தேதி போர் முற்றிலும் முடிவுக்கு வந்தது. அந்த நாள் இந்தியாவில் கார்கில் வெற்றி நாள் என்று இந்தியாவில் ஆண்டுதோரும் கொண்டாடப்படுகிறது. போரின் முடிவில், 1972 ஆம் ஆண்டு சிம்லா உடன்படிக்கையில் இந்தியாவின் பகுதிகள் என வரையறுக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் இந்தியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

உலகத்தின் பார்வையில்
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை பாகிஸ்தானியப் படைகள் தாண்டி இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்ததால் சர்வதேச நாடுகள் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தன.பாகிஸ்தான் அரசு, பழியை காஷ்மீர் போராளிகள் மீது சுமத்த முயன்றாலும் அது பலனளிக்கவில்லை. போர் ஆய்வாளர்கள், மிகவும் உயரமான மலைப்பகுதிகளை ஆக்கிரமிப்பது என்பது தேர்ந்த பயிற்சியுடைய இராணுவத்தினரால் மட்டுமே முடியக்கூடிய ஒன்று; அதை, மிகக் குறைவான பயிற்சியுடைய போராளிகளால் செய்ய இயலாதது என்று கூறினர். மேலும் பாகிஸ்தான் அரசு கார்கில் பிரச்சனையில் தனது ஈடுபாட்டை மறுத்து வந்தாலும், இரு பாகிஸ்தான் போர் வீரர்களுக்கு, கார்கில் போரில் தீரத்துடன் போரிட்டதற்காக, பாகிஸ்தானின் மிக உயரிய வீர விருதான நிஷான்-இ-ஹைதர் விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி 90 பாகிஸ்தான் படை வீரர்களுக்கு (பெரும்பான்மையானவர்கள், இறந்தவர்கள்) பல்வேறு வீர விருதுகள், கார்கில் போரில் அவர்களது சிறந்த செயல்பாட்டிற்காக வழங்கப்பட்டது பாகிஸ்தான் கார்கில் போரில் ஈடுபட்டதை உறுதி செய்வதாக அமைந்தது. பாகிஸ்தான் இராணுவ தலைமை தளபதிக்கும் பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கும் நடந்த தொலைபேசி உரையாடலை இந்தியா இடைமறித்து பதிவு செய்தது. அதில் அவர்கள் பேசியதிலிருந்து கார்கிலை ஆக்கிரமித்திருப்பது பாகிஸ்தான் படையினரே என்பது உறுதியானது. ஆனால் அதையும் பாகிஸ்தான் மறுத்தது. கார்கில் பிரச்சனை குறித்து விமர்சிக்கப்பட்ட போது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடே சர்ச்சைக்குரியது என்று கூறியபோதும், கார்கில் பிரச்சனையை காஷ்மீர் பிரச்சனையோடு இணைத்து சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோரியபோதும் பாகிஸ்தான் படைகள்தான் கார்கிலில் ஊடுருவியது என்பது வெட்டவெளிச்சமானது.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் தாக்குதல்கள் தீவிரமடைந்தபோது, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அமெரிக்காவின் ஆதரவைக் கோருவதற்காக அமெரிக்க அதிபர் பில் கிளின்டனை சந்தித்தார். ஆனால் கிளின்டன், நவாஸ் ஷெரீஃபை கண்டித்ததோடு, பாகிஸ்தான் படைகளைத் திரும்பப்பெருமாறு வலியுறுத்தினார். பில் கிளின்டன் தனது சுய சரிதையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

பாகிஸ்தான் பிரதமரின் செயல்பாடுகள் அதிருப்தியளிப்பதாக இருந்தன. இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக லாகூர் வந்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பிய சில மாதங்களில் பாகிஸ்தான் இந்தியா மீது படையெடுத்தது அந்த அமைதிப் பேச்சுவார்தைகளை அர்த்தமற்றதாக ஆக்கிவிட்டது. இருந்தும் கார்கில் பிரச்சனையைக் காரணமாகக் கொண்டு பெரும் போர் தொடங்காமல் விட்டது இந்தியாவின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.

கொலோன் மாநாட்டில் ஜி8 நாடுகள், பாகிஸ்தானின் செயலை வன்மையாகக் கண்டித்ததோடு மட்டுமின்றி இந்தியாவுக்கு தங்கள் ஆதரவையும் தெரிவித்தன. ஐரோப்பிய ஒன்றியமும் பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி வந்து இந்திய பகுதிகளை ஆக்கிரமித்ததைக் கண்டித்தது. பாகிஸ்தானின் நீண்டகால நட்பு நாடான சீனாவும், படைகளைத் திரும்பப் பெறுமாரு பாகிஸ்தானை வலியுறுத்தியது. ஆசியான் போன்ற பல கூட்டமைப்புகள் கார்கில் பிரச்சனையில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன.

சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் படைகளைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டார். பில் கிளின்டனும் நவாஸ் ஷெரீஃபும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் அமைதியான முறையில் காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமென்று நவாஸ் ஷெரீஃப் கூறினார்.

வீர விருதுகள்
இந்தியா
கார்கில் போரில் போரிட்ட பல இந்திய வீரர்கள் வீர விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

கிரனேடியர் யோகேந்திர சிங் யாதவ், 18 கிரனேடியர் பிரிவு, பரம் வீர் சக்ரா
லெப்டினன்ட் மனோஜ் குமார் பாண்டே, 1/11 கூர்கா ரைஃபில்ஸ், பரம் வீர் சக்ரா (மறைவுக்குப் பின்னர்)
கேப்டன் விக்ரம் பத்ரா, 13 ஜெ.ஏ.கே ரைஃபில்ஸ், பரம் வீர் சக்ரா (மறைவுக்குப் பின்னர்)
ரைஃபில்மேன் சஞ்சய் குமார், 13 ஜெ.ஏ.கே ரைஃபில்ஸ், பரம் வீர் சக்ரா
கேப்டன் அனுஜ் நாயர்,17 ஜெ.எ.டி ரெஜிமென்ட், மகா வீர் சக்ரா (மறைவுக்குப் பின்னர்)
மேஜர் ராஜேஷ் சிங் அதிகாரி, 18 கிரனேடியர் பிரிவு, மகா வீர் சக்ரா (மறைவுக்குப் பின்னர்)
மேஜர் சரவணன், 1 பிகார் படைப்பிரிவு, வீர் சக்ரா (மறைவுக்குப் பின்னர்)
சுகுவாட்ரன் லீடர் அஜய் அஹுஜா, இந்திய வான்படை, வீர் சக்ரா (மறைவுக்குப் பின்னர்)
பாகிஸ்தான்
இரண்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு நிஷான்-இ-ஹைதர் விருது வழங்கப்பட்டது.

கேப்டன் கர்னல் ஷேர் கான், நிஷான்-இ-ஹைதர் (மறைவுக்குப் பின்னர்)
ஹவல்தார் லாலக் ஜன், வடக்கு காலாட்படை, நிஷான்-இ-ஹைதர் (மறைவுக்குப் பின்னர்)
ஊடகங்களின் தாக்கம்
இரு நாட்டு மக்களின் கருத்துகளிலும் ஊடகங்கள் மிகப்பெரும் தாக்கங்களை ஏற்படுத்தின. கார்கில் போர் நடைபெற்ற சமயத்தில் இந்தியாவில் மின்னணு ஊடகவியல் பெருமளவில் வளர்ந்து கொண்டிருந்தது. அதன் காரணமாக போர் நடந்த இடங்களிலிருந்து பல காட்சிகள் இந்தியாவில் நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன.[85] பல இணையதளங்கள் போர் குறித்த விரிவான பகுப்பாய்வுகளை வழங்கின. தெற்காசியாவில் நேரடியாகத் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட முதல் போர் கார்கில் போரேயாகும்.[86] ஊடகங்களின் ஆழமான தாக்கத்தால் போரின்போது மக்களிடையே நாட்டுப்பற்று பெருமளவு வளர்ந்தது.

ஊடகங்களின் அதீத ஈடுபாட்டால் முரண்பாடான செய்திகள் வெளிவரத் தொடங்கின. இதை கட்டுப்படுத்த இந்திய அரசு, பாகிஸ்தான் ஊடகங்களைத் தற்காலிகமாக தடை செய்தது. பாகிஸ்தான் அரசால் இயக்கப்படும் ஊடகமான பிடிவி என்ற தொலைகாட்சி நிலையமும், டான் என்ற பாகிஸ்தான் நாளிதழின் இணையவழிப் பதிப்பும்[88] இந்தியாவில் தடை செய்யப்பட்டன. இந்தியாவின் இச்செயலை, ஊடகங்களின் சுதந்திரத்தை இந்தியா கட்டுப்படுத்துகிறது என்று சாடின. ஆனால் இந்திய ஊடகங்கள், அவை தேசத்தின் பாதிகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவிகள் என்றன. இந்திய அரசாங்கம், தி டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட் போன்ற அயல்நாட்டு ஊடகங்களில், பாகிஸ்தான் அரசு காஷ்மீர் போராளிகளுக்கு உதவி வருவது குறித்து விளம்பரம் வெளியிட்டு இந்தியாவிற்கு ஆதரவு திரட்டியது.

போர் தீவிரமடைந்த சமயத்தில் ஊடகங்களும் தீவிரமாக போர் குறித்த செய்திகளை வெளியிட்டன. பல இந்திய தொலைகாட்சி நிலையங்கள், வளைகுடா போரில் சி.என்.என் தொலைகாட்சியில் வெளியானது போன்ற படங்களை ஒளிபரப்பின. பாகிஸ்தான் படைகளால் வீசப்பட்ட குண்டு ஒன்று, போர்களத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தூர்தர்ஷன் தொலைகாட்சியின் ஒளிபரப்பு நிலையத்தையும் தாக்கியது. இந்தியாவின் ஊடகங்கள் பாகிஸ்தான் ஊடகங்களைவிட வெளிப்படையான தன்மையுடையதாக இருந்ததற்கு இந்தியாவில் தனியார் ஊடகங்கள் பெருமளவில் இருந்ததே காரணமாகக் கருதப்படுகிறது. கராச்சியில் பாகிஸ்தான் ஊடகவியலாளர்களிடையே நடந்த கூட்டத்தில், இந்திய அரசு தனது நாட்டு மக்களையும் ஊடகங்களையும் நம்பியது, ஆனால் பாகிஸ்தான் அரசு அதை செய்யவில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

சர்வதேச மற்றும் இந்திய ஊடகங்கள் இந்தியாவின் நிலைக்கு ஆதரவாக இருந்தன. பல மேற்கு நாட்டு ஊடகங்கள், போருக்கு பாகிஸ்தானே காரணம் என்ற கருத்தைக் கொண்டிருந்தன. பாகிஸ்தான் ஊடகங்களைவிட அளவில் மிகப் பெரியதாக இருந்த இந்திய ஊடகங்கள், இந்திய மக்களிடையே தேசப்பற்று உணர்ச்சியைப் பன்மடங்கு அதிகமாக்கியது எனவும் அது இந்திய இராணுவ நடவடிக்கைகளின் உறுதியை அதிகரித்தன எனவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.போர் தீவிரமடைந்தபோது பாகிஸ்தானின் வாதங்கள் சர்வதேச நாடுகளிடையே வலுவிழந்தன. இது இந்தியாவிற்கு உலக நாடுகளின் ஆதரவு கிடைக்க உதவியது.

பேரழிவு ஆயுதக் காரணிகள்
போரில் ஈடுபட்ட இரண்டு நாடுகளுமே பேரழிவு ஆயுதங்கள் (அணு ஆயுதங்கள்) கொண்ட நாடுகளாகையால், போர் முற்றி அணு ஆயுதப் போர் மூளக்கூடும் என பல நாடுகள் கவலையடைந்தன. இந்தியாவும் பாகிஸ்தானும் 1999 ஆம் ஆண்டு அணு ஆயுதச் சோதனை நடத்தியிருந்தன (இந்தியா 1974 ஆம் ஆண்டே தனது முதல் அணு ஆயுதச் சோதனையை நடத்தி இருந்தாலும் பாகிஸ்தானுக்கு 1999 ஆம் ஆன்டு நடத்தப்பட்ட சோதனையே முதலாவதாகும்). தெற்காசியப் பகுதியில் வளர்ந்து வரும் அமைதியின்மைக்கு கார்கில் போர் ஒரு அறிகுறி பல அரசியல் வல்லுநர்கள் கருதினார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதச் சோதனை செய்த சில மாதங்களிலேயே கார்கில் போர் துவங்கியதால், அதை கூடிய விரைவில் முடிவுக்குக் கொண்டுவர பல நாடுகள் விரும்பின.

பாகிஸ்தானின் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஷம்ஷாத் அஹ்மெத், மே 31 அன்று, "போர் பெரிதானால் அதை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் தன்னிடம் உள்ள எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தத் தயங்காது" என்று கூறியது சர்வதேச அரங்கில் சர்ச்சையைக் கிளப்பியது. இதை உலக நாடுகள் பாகிஸ்தான் விடுத்த அணு ஆயுத மிரட்டல் என்றே எண்ணின. பாகிஸ்தான் நாடுளுமன்றத் தலைவர், "ஆயுதங்களைத் தேவைப்படும்போது பயன்படுத்தாவிடில் அவற்றை உருவாக்கியதே அர்த்தமற்றதாகி விடும்" என்று கூறியது உலக நாடுகளின் எண்ணத்தை உறுதிபடுத்தியது. இவ்வாறு இரு நாடுகளிலிருந்தும் பலரால் விடுக்கப்பட்ட மறைமுக அறிக்கைகளை ஆணு ஆயுதப் போருக்கான எச்சரிக்கை என்றே பல நாடுகள் எண்ணின. சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிகழ்ந்த அணு ஆயுதப் போட்டி போல இதுவும் வளரக்கூடும் என உலக நாடுகள் அஞ்சின. பாகிஸ்தான் 1999 ஆம் ஆண்டு நிகழ்த்திய அணு ஆயுதச் சோதனைக்குப் பின்னர் அது பெற்ற அணு ஆயுதத் தற்காப்பின் காரணமாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் துணிவுடன் ஈடுபடத் துவங்கியதாக சில வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

பாகிஸ்தான் தனது அணு ஆயுத ஏவுகணைகளை எல்லைப் பகுதிகளுக்கு அருகில் கொண்டு சென்றுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்தபின் பதற்றம் மேலும் அதிகரித்தது. அப்போதைய அமெரிக்க அதிபராக விளங்கிய பில் கிளின்டன் பாகிஸ்தான் பிரதமரிடம் பாகிஸ்தான் படைகளைப் பின்வாங்கச் செய்யும்படி கூறினார்; மறுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப், தனக்கு அணு ஆயுத ஏவுகணைகள் எல்லைக்கருகில் நகர்த்தப்பட்டது குறித்து எதுவும் தெரியாது என்றும் இந்தியாவும் அதுபோன்ற ஏற்பாடுகளைச் செய்திருக்கக்கூடும் என்றும் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். டாக்டர். சஞ்சய் பத்ரி மகாராஜ், இந்தியா போரின்போது குறைந்தபட்சம் ஐந்து அணு ஆயுத ஏவுகணைகளத் தயார் நிலையில் வைத்திருந்ததாக 2000 ஆம் ஆண்டு மே மாதம் கூறினார். ஆனால் தகுந்த ஆதாரங்களுடன் அவரது கூற்றை உறுதிபடுத்த அவரால் இயலவில்லை.

போரில் ஏற்பட்ட இழப்புகள், சர்வதேச அரங்கில் குறைந்து வரும் ஆதரவு மற்றும் போர் முற்றி அணு ஆயுதப் போராக மாறும் அபாயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் பிரதமராக விளங்கிய நவாஸ் ஷெரீஃப் பாகிஸ்தான் படைகளைத் திரும்பப்பெற்றார். பாகிஸ்தானின் இராணுவத் தளபதியாக விளங்கிய பர்வேஸ் முஷாரஃப் தனது அனுமதி பெறாமலே அணு ஆயுத ஏவுகணைகளை எல்லையில் நிலை நிறுத்தியதாக தனது சுய சரிதையில் நவாஸ் ஷெரீஃப் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பாகிஸ்தானின் அணு ஆயுத ஏவுகணைகள் அப்போது செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படவே இல்லை என்று பர்வேஸ் முஷாரஃப் பின்னர் தெரிவித்தார். கார்கில் போர் அணு ஆயுதப் போராக மாறியிருந்தால் பாகிஸ்தானுக்கு அது பெரிய பின்னடைவாக அமைந்திருக்கும்.

பேரழிவு ஆயுதங்களின் அபாயம் இரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களையும் உள்ளடக்கியதே ஆகும். இந்தியா தடை செய்யப்பட்ட இரசாயனங்களை காஷ்மீர் போராளிகளுக்கு எதிராகப் பயன்படுத்திய ஆயுதங்களில் உபயோகித்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. மற்றொரு பக்கம் பாகிஸ்தான் வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாயுத் தடுப்பு முகமூடிகளை ஆதாரமாகக் கொண்டு, பாகிஸ்தான் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தத் திட்டமிட்டதாக இந்தியா பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியது. அமெரிக்க அதிகாரிகளும் மற்றும் வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பும், இந்தியா மீது பாகிஸ்தான் சுமத்திய இரசாயன ஆயுதம் குறித்த குற்றங்கள் ஆதாரமற்றவை என்று தீர்மானித்தனர்.

பின்விளைவுகள்
இந்தியா

கார்கில் போரின்போது இந்தியப் பிரதமராக விளங்கிய அடல் பிகாரி வாஜ்பாய். போரில் இந்தியா மிகப்பெரிய வெற்றி பெற்றதால், 1999 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.கூ மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது
கார்கில் போர் முடிவடைந்ததிலிருந்து பிப்ரவரி 2000 வரை, இந்திய பங்குச் சந்தையில் பங்குகளின் மதிப்புகள் 30% வரை அதிகரித்தன. போருக்கு அடுத்த இந்தியாவின் தேசிய நிதியறிக்கையில் இராணுவத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.

போரின்போது நாட்டு மக்களிடையே நாட்டுப்பற்று பெருமளவு அதிகரித்தது; பல பிரபலங்கள் கார்கில் போரில் இந்திய இராணுவத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்திய வான்படையைச் சேர்ந்த விமானி அஜய் அஹுஜா, பாகிஸ்தான் இராணுவத்தினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட செய்தி வெளியானபோது பாகிஸ்தான் படையினரின் செயலுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்திய தரப்பில் இழப்புகள் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக இருந்தது; உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் புதிதாக இராணுவத்தில் இணைந்திருந்த இளம் வீரர்களாவர். போர் முடிந்து ஒரு மாதத்திற்குப் பின் அட்லான்டிக் சம்பவத்தில் பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த விமானம் ஒன்றை இந்தியா சுட்டு வீழ்த்தியது மீண்டும் பதற்றத்தை உருவாக்கியது.

போருக்குப்பின் இந்தியா, பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டது; இராணுவத்தின் தயார் நிலையை அதிகப்படுத்தியது. இந்தியா நவீன ஆயுதங்களையும் போர் கருவிகளையும் வாங்குவதற்காக தனது இராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை அதிகப்படுத்தியது. ஊடுருவலை முன்கூட்டியே கண்டறியத் தவறிய உளவுத்துறையை ஊடகங்கள் கடுமையாக சாடின. இந்திய நாளிதழ் ஒன்றில் வெளியான இந்திய இராணுவத்தின் சிய மதிப்பீட்டு அறிக்கையில், "கவனக்குறைவு", "போருக்கு ஆயத்தமற்ற தன்மை", "அணு ஆயுதம் பெற்றிருப்பதால் போர் எளிதில் ஏற்படாது என்ற எண்ணம்" போன்றவை இந்திய படைத்துறைகளிடமிருந்த பின்னடைவுகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. இராணுவத்தின் அதிகாரத்தில் இருந்த இடைவெளிகள், படைவீரர்கள் பற்றாகுறை மற்றும் கனரக ஆயுதங்களின் பற்றாகுறை போன்றவற்றையும் அந்த அறிக்கை சுட்டியது. இந்திய இராணுவம், அரசாங்கத்திடம் ஊடுருவல் பற்றிய முழுமையான தகவல்களை தெரிவிக்கவில்லை என்றும் தரைப்படையின் தலைமை தளபதி வேத் பிரகாஷ் மாலிக், விமானப்படையின் உதவியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாமல் உலங்கு வானூர்திகளின் உதவியை மட்டுமே கோரினார் என்றும் ஓய்வுபெற்ற விமானப்படை தளபதி ஏ. ஒய். திப்னிஸ் குற்றம் சாட்டியுள்ளார். போர் முடிவடைந்தவுடன், பாகிஸ்தானால் முடக்கப்பட்ட, எல்லைக்கோடு நெடுகிலும் வேலி அமைக்கும் திட்டத்தை விரைந்து முடிக்க இந்தியா முடிவு செய்தது.

போருக்கு அடுத்து நடந்த பதிமூன்றாவது இந்திய மக்களவை பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மக்களவையில் மொத்தம் உள்ள 545 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 303 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்தது. போருக்குப்பின் இந்திய-அமெரிக்க உறவுகள் வலுவடைந்தன; போரைப் பெரிதாக வளரவிடாத இந்தியாவின் நிலையை அமெரிக்கா பாராட்டியது. போரின்போது, பீரங்கிகள், செயற்கைக்கோள் புகைப்படங்கள், ஆளில்லா விமானங்கள், குண்டுகள் போன்றவற்றை அளித்து உதவிய இஸ்ரேலுடனான உறவையும் இந்தியா பலப்படுத்திக் கொண்டது.

கார்கில் ஆய்வுக் குழு
போரின் முடிவில் அடல் பிகாரி வாஜ்பாயின் அரசாங்கம், போருக்கான காரணங்களையும் இந்திய உளவுத்துறையின் தோல்விக்கான காரணங்களையும் விசாரிக்க உத்தரவிட்டது. உயர் அதிகாரம் கொண்ட குழு ஒன்று, கே. சுப்பிரமண்யம் தலைமையில் உருவாக்கப்பட்டு, முன்னாள் பிரதமர்கள் மற்றும் பாதுகாப்புத்துறையுடன் சம்பந்தப்பட்ட எவரையும் விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. சுப்பிரமண்யம் அறிக்கை என்று அறியப்படும் அக்குழுவின் அறிக்கையில் செய்யப்பட்டிருந்த பரிந்துரைகள் காரணமாக இந்திய உளவுத்துறையில் பெரிய அளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கார்கில் பிரச்சனையை முன்கூட்டியே கண்டறியத் தவறியதற்குக் காரணமானவர்கள் யார் என்பதை அந்த அறிக்கை தெளிவாக சுட்டிக்காட்டவில்லை என்று விமர்சிக்கப்பட்டது.மேலும் அந்த அறிக்கை, பிரிகேடியர் சுரிந்தர் சிங் மீது, கார்கில் ஊடுருவல் குறித்து சரியான நேரத்தில் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டியது. ஆனால் ஊடகங்கள், சுரிந்தர் சிங் தனது உயர் அதிகாரிகளிடம் கார்கில் ஊடுருவல் குறித்த தகவல்களை முன்கூட்டியே தெரிவித்திருந்தார் எனவும், ஆனால் அவர் அளித்த தகவல்கள் இராணுவ மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளால் அலட்சியம் செய்யப்பட்டது என்றும் கூறின.

அரசாங்க வழக்கத்திற்கு மாறாக, சுப்பிரமண்யம் அறிக்கை பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையின் சில பாகங்கள் மட்டும் அரசாங்க இரகசியங்களைப் பற்றியது என்ற காரணத்திற்காக இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது. குழுவின் தலைவர் சுப்பிரமண்யம், "அந்த பாகங்கள் இந்தியாவின் அணு ஆயுதத் திட்டம் மற்றும் அத்திட்டத்தில் முன்னாள் இந்தியப் பிரதமர்களின் பங்குகள் பற்றிய தகவல்கள் அடங்கியவை" என்று பின்னாளில் கூறினார்.

பாகிஸ்தான்

கார்கில் போரின் போது பாகிஸ்தான் பிரதமராக விளங்கிய நவாஸ் ஷெரீஃப். போர் முடிந்த சில மாதங்களில் இராணுவப் புரட்சி செய்து இவரது அரசைக் கவிழ்த்து, அதிகாரத்தை பர்வேஸ் முஷாரஃப் கைப்பற்றிக்கொண்டார்.
சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படும் அபாயம் காரணமாக பலவீனமான பாகிஸ்தானின் பொருளாதாரம் மேலும் நலிவடைந்தது. பாகிஸ்தான் படையைச் சேர்ந்த வடக்கு காலாட்படைப்பிரிவு அதீத இழப்புகளைச் சந்தித்ததால் பாகிஸ்தான் படைகளின் மனஉறுதி குலைந்தது. உயிரிழந்த பாகிஸ்தான் போர் வீரர்களின் சடலங்களை வாங்கிக்கொள்ள பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது. இதன் காரணமாக பாகிஸ்தானின் வடபகுதிகளில், மக்கள் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆரம்பத்தில் பாகிஸ்தான் படைகளுக்கு ஏற்பட்ட பெரும்பான்மையான இழப்புகளை பாகிஸ்தான் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், குறைந்தபட்சம் 4000 பாகிஸ்தான் வீரர்கள் அப்போரில் உயிரிழந்ததாகக் கூறினார்.[9] இதற்கு பதிலளிக்கும் விதமாக பர்வேஸ் முஷாரஃப், "ஒரு முன்னாள் பிரதமரே தனது படைகளை குறைத்து மதிப்பிடுவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது" என்று கூறினார். இந்தியத் தரப்பு இழப்புகள் பாகிஸ்தானுடையதைவிட பன்மடங்கு அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தான் ஊடகங்கள் முஷாரஃபால் நியாயப்படுத்தப்பட்ட கார்கில் போர் குறித்து இன்றளவும் விவாதம் செய்கின்றன.

பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் வாயிலாக, பாகிஸ்தான் படைகள் கார்கிலில் வெற்றி பெரும் என்று பாகிஸ்தான் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பாகிஸ்தான் பிரதமர், படைகளைப் பின்வாங்க உத்தரவிட்டபோது பெரிதும் ஏமாற்றமடைந்தனர். பாகிஸ்தான் படைத் தலைவர்களும் பிரதமரின் முடிவால் ஏமாற்றமடைந்தனர். ஆனால் செண்ட்காமின் முன்னாள் படைத் தளபதியும் முஷாரஃபின் நண்பருமான அந்தோனி சின்னியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும், பாகிஸ்தான் படைகளைப் பின்வாங்க உத்தரவிடுமாறு முஷாரஃப்தான் கோரியதாகக் கூறியுள்ளனர். முஷாரஃபின் மூத்த அதிகாரியும் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியுமான அப்துல் மஜீத் மாலிக், கார்கில் போர் குறித்து, "பிசககான காரியம்" என்று கூறியதோடு, முஷாரஃபையும் கடுமையாக சாடினார். இந்தியாவுடன் அப்பகுதியில் போரிடும் நிலைமையில் பாகிஸ்தான் படைகள் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், நவாஸ் ஷெரீஃபின் அரசுதான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாகிஸ்தானை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றியது என்றும் கூறியுள்ளார். மேலும், கார்கிலில் ஊடுருவியவர்கள் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் படையைச் சேர்ந்தவர்களே என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


கார்கில் போரில் பாகிஸ்தான் வான்படையைச் சேர்ந்த எஃப்-16 ரக போர் விமானங்கள் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. எனினும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் விமானங்களைப் பயன்படுத்தவில்லை.
பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தலைமையில் கூட்டுத் தலைமையகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புக் கூட்டத்தில், பர்வேஸ் முஷாரஃப், அவர் மீது இராணுவ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய பாகிஸ்தான் வான்படைத் தலைமை தளபதி அட்மிரல் ஃபஸி பொகாரியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் வான்படையின் தலைமை தளபதி பி. க்யூ. மேதி, "கடற்படையும் வான்படையும் கார்கில் விவகாரத்தில் தலையிட்டிருந்தால் அது போரை பெரிதாக்கியிருக்கும்" என்று கூறியுள்ளார். இதை முஷாரஃப் கடுமையாக விமர்சித்ததை அடுத்து, அவர் விமானப்படை விமானங்களை ஸ்கார்டு பள்ளத்தாக்கில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தினார். கார்கில் போரின்போது பாகிஸ்தான் கடற்படை பெரும்பாலும் விலகியே இருந்தது; நீர்மூழ்கிக் கப்பல்கள் மட்டும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. போருக்கான முழு பழியையும் பாகிஸ்தான் பிரதமர், பர்வேஸ் முஷாரஃப் மீது சுமத்தியதால் அவர்கள் இருவருக்குமிடையே இணக்கமற்ற சூழ்நிலையே நிலவியது. அக்டோபர் 12, 1999 அன்று பர்வேஸ் முஷாரஃப், இராணுவப் புரட்சி செய்து நவாஸ் ஷெரீஃபிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினார்.

பாகிஸ்தானின் நாடுளுமன்றத் தலைவரும் முன்னாள் பிரதமருமான பெனசீர் பூட்டோ, கார்கில் போர் பாகிஸ்தானின் மிகப்பெரிய பிசகு என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் இராணும் மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்பைச் சேர்ந்த பல்வேறு அதிகாரிகள், "நேர விரயம்", "கார்கில் போரால் எவ்வித நன்மையும் விளைந்திருக்க முடியாது", "கிழக்கு பாகிஸ்தான் சோகத்தைவிட கார்கில் போர் மிகப்பெரிய துக்கம்", "சரிவரத் திட்டமிடப்படாத கார்கில் தாக்குதல் பல பாகிஸ்தான் படை வீரர்களின் உயிரை பலி வாங்கியது" என்று பலவாறாக கார்கில் போர் குறித்து விமர்சித்துள்ளனர். கார்கில் ஆக்கிரப்பு பாகிஸ்தானுக்கு இழப்புகளை மட்டுமே ஏற்படுத்தியதால், பாகிஸ்தான் ஊடகம் அதை கடுமையாக விமர்சித்தது.

கார்கில் போருக்குக் காரணமானவர்களை விசாரிக்க குழு அமைக்கப்பட வேண்டும் என்று பலர் கோரினாலும் அது நிறைவேற்றப்படவில்லை. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் கூற்றுப்படி, நவாஸ் ஷெரீஃப் கார்கில் போர் குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்தார்; ஆனால், முஷாரஃபின் மீது இராணுவ விசாரணைக்குப் பரிந்துரைத்திருந்த அக்குழுவின் அறிக்கை முஷாரஃபால் மறைக்கப்பட்டுவிட்டது.கார்கில் ஆக்கிரமிக்கப்படப்போகும் செய்தி ஆக்கிரமிப்புத் தொடங்குவதற்கு 11 மாதங்கள் முன்னரே இந்தியாவிற்குத் தெரியும் என்றும் அதனால் இந்தியா எளிதாக பாகிஸ்தான் படைகளைக் கார்கிலில் தோற்கடித்து விட்டது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.பாகிஸ்தான் படையின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஜம்ஷெத் குல்சர் கியானி, "பாகிஸ்தான் பிரதமருக்கு கார்கில் மீது தாக்குதல் நடத்தப்படப் போகும் செய்தி தெரிவிக்கப்படவில்லை" என்று கூறியதால் போரின் மீது விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்தன.

காஷ்மீர் விவகாரத்தை உலக நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற பாகிஸ்தானின் விருப்பம் கார்கில் போர் மூலம் நிறைவேறினாலும், இரு நாடுகளுக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் போர் நடைபெற்றதால், அது பாகிஸ்தானை எதிர்மறையாக பாதித்ததோடு பாகிஸ்தானின் நம்பகத்தன்மையையும் உலக நாடுகளிடையே குறைத்து விட்டது. சர்வதேச நாடுகள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை அங்கீகரித்தன. அமெரிக்க அதிபர், பாகிஸ்தான் படைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியது, பாகிஸ்தானுடனான உறவுகளில் அமெரிக்காவின் மிகப்பெரிய மாற்றமாகக் கருதப்பட்டது.

போருக்குப் பின் பாகிஸ்தான் படைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. போரில் வெகு சிறப்பாக போரிட்ட வடக்குக் காலாட்படைப்பிரிவு இராணுவத்துடன் முழுமையாக இணைத்துக்கொள்ளப்பட்டது. போர் மிக நன்றாகத் திட்டமிடப்பட்டிருந்தாலும், இரு நாடுகளுக்கிடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்களை அது அலட்சியம் செய்தது. பாகிஸ்தானால் மேற்கொள்ளப்பட்டு தோல்வியடைந்த பல நடவடிக்கைகளில் காணப்பட்டது போலவே இப்போரிலும் பாகிஸ்தான் படைப்பிரிவுகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் என்பது மிகவும் மோசமாக இருந்தது. முன்னர் நடந்த போர்களில் செய்த அதே தவறுகளை கார்கிலிலும் பாகிஸ்தான் செய்ததாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.. கார்கில் போர் இந்திய உளவுத்துறையின் கவனக்குறைவாலும் பாகிஸ்தானின் தவறானத் திட்டமிடலாலும் விளைந்தது என்றும் கார்கில் ஆக்கிரமிப்பு குறித்து முஷாரஃபுக்கும் அவரது நான்கு நெருக்கிய கூட்டாளிகளுக்கு மட்டுமே தெரியும் என்றும் முஷாரஃபின் நம்பிக்கைக்குரிய ஓய்வுபெற்ற பாகிஸ்தான் தளபதியான ஷாகித் அசீஸ் கூறியுள்ளார்.

இழப்புகள்

விஜய் நடவடிக்கையின் நினைவுச் சின்னம்
பாகிஸ்தான் இராணுவத்தின் மொத்த இழப்புகள் சரிவர மதிப்பீடு செய்யப்படவில்லை. பாகிஸ்தான் தரப்பில் 453 வீரைகள் பலியானதாக பாகிஸ்தான் அரசு கூறியது. அமெரிக்க உளவுத்துறை, குறைந்தபட்சம் 700 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாக மதிப்பிட்டுள்ளது. நவாஸ் ஷெரீஃப், 4000 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறியுள்ளார். அவரது கட்சி வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் 3000 முஜாஹிதீன் போரளிகள், அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் மற்றொரு முக்கிய அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி, ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் வீரர்கள் பலியானதாகக் கூறியுள்ளது.இந்தியா, 1,042 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக கணித்துள்ளது. முஷாரஃப் தனது குறிப்புகளில், 357 வீரர்கள் மரணமடைந்ததாகவும் 665 வீரர்கள் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் இராணுவ இணையதளத்தில், 400 பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானி ஒருவர் பாகிஸ்தான் படைகளால் சிறை பிடிக்கப்பட்டார். பாகிஸ்தான் வீரர்கள் எட்டு பேரை இந்திய வீரர்கள் சிறை பிடித்தனர். அந்த எட்டு வீரர்களையும் இந்தியா, 13 ஆகஸ்டு, 1999 அன்று பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது.

இந்தியா, தனது தரப்பில் 527 வீரர்கள் உயிரிழந்ததாகவும் 1,363 வீரர்கள் காயமடைந்ததாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கார்கில் நினைவுச் சின்னம்[தொகு]

இந்திய இராணுவத்தால் திரஸில் நிறுவப்பட்டுள்ள கார்கில் நினைவுச் சின்னத்தின் பிரதான நுழைவாயில்
திரஸ் பகுதியிலுள்ள தோலோலிங் மலையடிவாரத்தில் இந்திய இராணுவம், போர் நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்துள்ளது. டைகர் ஹில் பகுதியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த நினைவிடம், போரில் உயிர்த் தியாகம் செய்த இந்திய வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டதாகும். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் தந்தை ஹரிவன்ஷ் பச்சன் எழுதிய கவிதை இந்நினைவுச் சின்னத்தின் நுழைவாயிலில் பொறிக்கப்பட்டுள்ளது. நினைவிடத்திற்க்கு அருகில், விஜய் நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாட ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, போர் வீரர்களின் படங்கள், போர் குறித்த ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள், பாகிஸ்தான் படையினர் பயன்படுத்திய ஆயுதங்கள் ஆகியவை மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

கார்கில் போர் வெற்றியின் பதிமூன்றாவது ஆண்டுவிழாவின் நினைவாக, 15 கிலோ எடையுடைய இந்திய தேசியக் கொடி கார்கில் நினைவுச் சின்னத்தில் நிறுவப்பட்டது.

கலைகளில் கார்கில் போர்

கார்கில் போர் நினைவிடத்தில் நிறுவப்பட்டுள்ள இந்திய தேசியக் கொடி

கார்கில் போர் நினைவுச் சின்னம்

கார்கில் போரில் இந்தியப் படையினரால் கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் பயன்படுத்திய பதுங்கு குழி
கார்கில் போர் மூலம், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் சிறந்த கரு கிடைத்தது. கார்கில் போர் குறித்து எடுக்கப்பட்ட சில ஆவணப்படங்கள், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரத்தின் போது பயன்படுத்தப்பட்டன. கார்கில் போர் குறித்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் நாடகங்களின் பட்டியல் பின்வருமாறு:

லார்டு ஜான் மார்பரி (த வெஸ்டு விங்) (1999), முதல் பாகத்தில் 11 வது அத்தியாயம் கற்பனை கலந்த கார்கில் போரை சித்தரிக்கிறது.
1999 ஆம் ஆண்டு வெளியான பென்டகிராமின் பிரைஸ் ஆஃப் புல்லட்ஸ் என்ற பாடல் கார்கில் போர் பற்றியதாகும்.
கார்கில் போரிலிருந்து பல சம்பவங்களை சித்தரித்த, 2003 ஆம் ஆண்டு வெளியான எல்.ஓ.சி. கார்கில் என்ற இந்தி திரைப்படம், இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே மிக நீளமான திரைப்படமாகும்.
லட்சியா (2004) என்ற மற்றொரு இந்தி திரைப்படம், கார்கில் போரை ககற்பனை கலந்து விவரிக்கிறது.இத்திரைப்படம், இரு தரப்பையும் நியாயமாகச் சித்தரித்ததால், பாகிஸ்தானிலும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சைனிகா (2002), என்ற கன்னட திரைப்படம், கார்கில் போரில் போரிடும் வீரன் ஒருவனின் வாழ்வை ஒரு சம்பவமாகக் கொண்டிருந்தது.
தேசிய விருது பெற்ற அஷ்வினி சவுத்ரியால் 2003 ஆம் ஆண்டு இயக்கப்பட்ட, தூப் என்ற இந்தி திரைப்படம், இந்திய இராணுவ கேப்டன் அனுஜ் நாயரின் மறைவுக்குப்பின் அவரது பெற்றோரின் வாழ்வைப்பற்றி கூறுகிறது. அனுஜ் நாயர், கார்கில் போரில் உயிர்துறந்த இந்திய இராணுவ வீரர் ஆவார். அவரது மறைவுக்குப்பின் அவருக்கு மகா வீர் சக்ரா வ்ருது வழங்கப்பட்டது.
மிஷன் ஃபதே என்பது சகாரா தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட, இந்திய இராணுவம் கார்கிலில் நடத்திய போர் குறித்த நிகழ்ச்சியாகும்.
பிப்டீ டே வார் என்பது கார்கில் போர் நிகழ்வுகளைக் கொண்டு அமீர் ராஸா ஹுசைனால் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும். விமானங்கள் மற்றும் குண்டுகள் என்று அனைத்தும் உண்மையாகவே அமைக்கப்பட்டு இப்படம் தயாரிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற இந்திய இராணுவ மேஜர் ரவி, போரில் அவரது அனுபவங்களை மையமாகக் கொண்டு குருக்‌ஷேத்ரா என்ற மலையாள திரைப்படம் ஒன்றை 2008 ஆம் ஆண்டு தயாரித்தார்.
லாக் என்ற பாகிஸ்தானிய திரைப்படம், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு மற்றும் போர் முனையில் பாகிஸ்தான் வீரர்களின் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட திரைப்படமாகும்.
டேங்கோ சார்லி போன்ற பல திரைப்படங்கள் கார்கில் சம்பவம் குறித்த நிகழ்வுகளைக் கொண்டுள்ளன. இன்றும் கார்கில் தொடர்பான கதைகளுடைய கீர்த்தி சக்ரா போன்ற திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.

கார்கில் போர் நடந்த முடிந்த சமயத்தில் துடுப்பாட்ட உலகக் கோப்பைப் போட்டிகள் துவங்கின. அதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போது போரின் தாக்கத்தை வெகுவாக உணர முடிந்தது. அப்போட்டிகள் அந்த உலகக் கோப்பைத் தொடரிலேயே மிகவும் அதிகமாகப் பார்க்கப்பட்ட போட்டிகளாக அமைந்தன.
நன்றி  -விக்கிபீடியா   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக