ஆன்மீக சொற்பொழிவாளர் திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த தினம் ஆகஸ்ட் 25,
திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகஸ்ட் 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகவாக அவதரித்தவர். செங்குந்த வீர சைவ மரபினர். ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார். வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியை தனது 19ஆவது வயதில் கல்யாணம் புரிந்தார்.
இயல், இசைக் கல்வி
இவரது தந்தையார் இசையிலும் இயலிலும் வல்லவர், மாபெரும் புராண வல்லுநர். தந்தையாரே வாரியாருக்கு கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.
வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார்.
சொற்பொழிவு ஆற்றல்
தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார்.
தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். 19-ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது "ஆன்மிக மொழி" பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர்.
அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும்.
திருப்புகழ் அமிர்தம்
சுவாமிகள் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து "திருப்புகழ் அமிர்தம்' என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி "கைத்தல நிறைகனி' என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது.
சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின.
எழுதிய நூல்கள்
வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.
குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.
விருதுகளும் சிறப்புகளும்.
இசைப்பேரறிஞர் விருது, 1967 ; வழங்கியது: தமிழ் இசைச் சங்கம்
மறைவு
1993 அக்டோபர் 19-ஆம் தேதி வாரியார் லண்டன் பயணமானார். 1993-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி விமானப் பயணத்திலேயே காலமானார். வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு அருகே கிருபானந்த வாரியாரை சிறப்பிக்கும் வகையில் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக