ஆடி அமாவாசை சிறப்புகள் .
மாதந்தோறும் வரும் அமாவாசை தினமானது, இறந்த நமது முன்னோர்களை நினைத்து விரதம் கடைப்பிடிக்க ஏற்ற நாளாகும். இவற்றில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை போன்றவை முக்கியத்துவம் கொண்டவை. மிகவும் விசேஷமானது ஆடி அமாவாசையாகும். ஆடி மாதத்தில் சந்திரன் உச்சம் பெற்ற கடக ராசியில், சூரியன் சஞ்சரிப்பதே இதற்கு காரணம். சூரியன் சிவ அம்சம். சந்திரன் சக்தியின் அம்சம். இவ்விரண்டு அம்சங்களும் ஆடி அமாவாசை தினத்தில் ஒன்றிணைவதால் ஆடி அமாவாசை முக்கியத்துவம் பெறுகிறது.
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தை திசையை குறிப்பிடும் சொல்லாகும். சூரியனும், சந்திரனும் ஒரே பாகையில் பூமிக்கு நேராக வரும் பொழுது அமாவாசை திதி உண்டாகிறது. சந்திரன் சூரியனில் இருந்து பிரிந்து பூமியைச் சுற்றிவரும் மார்க்கத்தில், பூமிக்கும் சூரியனுக்கும் 180–வது பாகையில் வரும்பொழுது பவுர்ணமி திதி நிகழும்.
திதிகள் பூர்வபக்கத் திதிகள், அபரபக்கத் திதிகள் என இருவகைப்படும். அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் பவுர்ணமி இறுதியாகஉள்ள 15 திதிகளும் பூர்வபக்கம் எனப்படும். பவுர்ணமிக்கு அடுத்த பிரதமை முதல் அமாவாசை இறுதியாகவுள்ள 15 திதிகளும் அபரபக்கம் எனப்படும். பூர்வபக்கம், அபரபக்கம் என்பன முறையே சுக்ல பட்சம், கிருஷ்ணபட்சம் என்றும்; வளர்பிறை, தேய்பிறை என்றும் அழைக்கப்படுகிறது.
‘அமா’ என்றால், ஓரிடத்தில் பொருந்தியது (சேர்ந்தது– குவிந்தது) என்று பொருள்படும். ஓர் ராசியில் சூரியன், சந்திரன் இருவரும் சேர்ந்து உறவாகும், வாசியான நாள் ‘அமாவாசி’ எனப்படும்.
சூரியன் ஞானகாரகன், ஆத்மகாரகன் என்று அழைக்கப்படுகிறார். உயிர்களின் ஆத்ம அமைப்பு சூரியனால்தான் நிகழ்கின்றன. ஆண்மை, ஆற்றல், பராக்கிரமம், வீரம், தீரம், தவம் யாவும் சூரியனாலேயே தோன்றுகின்றன.
சந்திரன் மனதிற்கு அதிபதி. மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, உற்சாகம், இன்பம் முதலியன சந்திரனால் அடையத்தக்கவை. இத்தகைய சூரியர், சந்திரர் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் நாள் புனிதமான நாள் ஆகும். சகல தேவர்களும் அமாவாசையின் அதிபர்களாவர். சிறப்புமிக்க அமாவாசை தினத்தில் விரதம் மேற்கொள்வது, இறைவனுக்கு மகிழ்ச்சி அளிப்பதும், பெருமை தருவதுமான நன்னாளாகும்.
ஆடி அமாவாசை விரதம் நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் என்றாலும், இறந்த தந்தைக்காக பிள்ளைகள் அனுஷ்டிக்கும் விரதம் என்று கூறுவார்கள். அன்றைய தினம் வீட்டில், மூதாதையர்கள் படத்துக்கு மாலை போட்டு அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை தலை வாழை இலையில் படைத்து அவர்களை வணங்க வேண்டும். முதலில் காகத்திற்கு உணவிட்டு பின்பு விரதம் முடிக்க கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
விரதம் இருக்கும் முறை
ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்துவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதன்பிறகு முதியவர்களுக்கு அன்ன தானம் வழங்க வேண்டும். அமாவாசையன்று பெண்கள் காலை உணவு உண்ணாமல் இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் செய்ய வேண்டும்.
அன்றைய சமையலில் எல்லாவிதமான காய் கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவு, பதார்த்தங்கள், துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு படைத்த உணவுகளை வீட்டிற்கு வெளியில் உயரமான இடத்தில் வைத்து காகத்துக்கு படைக்க வேண்டும். காகங்கள் உண்ட பிறகு வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும். இறந்தவர்களுக்கு படைத்த துணிகளை அவர்களுக்கு பிடித்த மாணவர்கள் அணிந்து கொள்ளலாம். அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக்கூடாது, பிற்பகலில் சாப்பிடலாம். முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவவினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திபேறு கிட்டும்.
ராமேசுவரம், வேதாரண்யம், கோடியக்கரை, திருவையாறு ஆகிய இடங்களில் புனித நீராடுவது விசேஷம். ஆடி அமாவாசையன்று விரதம் மேற்கொண்டால் ஆயுள் பலம் கூடும் என்று பக்தர்களின் நம்பிக்கை.
திருவையாறில் கயிலைக் காட்சி
தேவார பாடல் ஆசிரியர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் சிவபெருமானை தரிசிக்க ஆவல் கொண்டு கயிலைக்கு சென்றார். கயிலைக்கு சென்ற அவர் வயோதிகம் காரணமாக நடக்க முடியாமல் தவழ்ந்து சென்றார். அப்போது சிவபெருமான் ஒரு அந்தணர் வடிவில் வந்து அப்பரே இங்குள்ள குளத்தில் மூழ்கிட திருவையாறில் எழுந்தருள்வாய். அங்கே உமக்கு யாம் கயிலைகாட்சி தந்தருள்வோம் என கூறி அருளினார். உடனே திருநாவுக்கரசர் அங்குள்ள குளத்தில் மூழ்கி, திருவையாறு அப்பர் குட்டையில் எழுந்தார். அங்கே சிவபெருமான் உமாதேவியாருடன் காளை வாகனத்தில் வீற்றிருக்கும் கயிலை காட்சியை திருநாவுக்கரசர் காண தரிசனம் தந்தார்.
இந்த அருளாடல் நிகழ்ச்சி ஆடி அமாவாசையன்று நிகழ்ந்தது. இதை நினைவு கூரும் விதத்தில் ஆடி அமாவாசையன்று திருவையாறு ஐயாறப்பர் சன்னிதியில் இந்த நிகழ்ச்சி கயிலைக்காட்சி விழாவாக அதிவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.
தோஷம் நீக்கும் தீர்த்தம்
நாகப்பட்டினத்தில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் வேதாரண்யத்தில், வேதாரண்யேசுவரர் கோவில் உள்ளது. சிவபெருமான் அகத்திய முனிவருக்கு திருமணக்காட்சி காட்டிய திருத்தலம்.
தேவார பாடல் பெற்ற இந்தக் கோவிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால், கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம். இதில் நீராடியவர்கள் தங்கள் பாவங்களை கழுவி கொள்வதுடன், மூதாதையர்கள் செய்த பாவங்களுக்கும் நிவர்த்தி பெற்றுவரலாம். பிரம்மஹத்தி தோஷம், ஒரு உயிரைக்கொன்றால் ஏற்படும். இங்கு நீராடினால் பிரம்மஹத்தி போன்ற கொடிய பாவங்களும் கூட நீங்கும் என்பது ஐதீகம். இக்கோவிலுக்கு எதிரே உள்ள கடல், ‘ஆதி சேது’ என அழைக்கப்படுகிறது. இங்கு நீராடுவது ராமேஸ்வரத்தில் நீராடுவதை விட சிறந்ததாகும். ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசைகளில் இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் நீராடுவர்.
அம்மன் வளையல் மகிமை
ஆடி மாதம் அம்மனுக்கு நடத்தப்படும் வளைக்காப்பு பூஜைகள் முடிந்த பிறகு, அந்த வளையல்களை வாங்கி அணிந்து கொண்டால், குழந்தைபாக்கியம் உண்டாகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆடி பவுர்ணமி அன்றுதான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசி வரை, மாத உபவாசம் இருப்பது குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்தும். ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சை பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். எலுமிச்சம் பழங்களை வைத்து ஒருபோதும் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக