பக்கங்கள்

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

சர்வதேச ஓசோன் தினம் செப்டம்பர் 16.


சர்வதேச ஓசோன் தினம் செப்டம்பர் 16.

உயிரினங்கள் உயிர்வாழ வான்பரப்பில் ஓசோன் படலம் ஆற்றிவரும் பணி மகத்தானது. நமது கண்ணுக்குப் புலப்படாத அந்த ஓசோன் படலத்திற்கு மானசீகமான நன்றிகளைத் தெரிவிக்கவும், இன்று நம்மை அறியாமல் எமது நடவடிக்கைகள் காரணமாக ஓசோன் படலத்திற்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளை ஏனையவர்களுக்கும் உணரச் செய்யவும், அதே நேரத்தில் அதன் பாதுகாப்பின் அவசியத்தை உறுதி செய்யவும் ஆண்டுதோறும் உலக நாடுகள் செப்டம்பர் 16ம் தேதியை ஓசோன் தினமாக நினைவு கூறுகின்றன. 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி கனடா நாட்டின் தலைநகரில் ஓசோன் படையை அழிக்கும் ரசாயனங்களுக்கு எதிரான 'மொன்றியல்" உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதையடுத்து அந்தத் தினமே 1995ம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1994ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி ஐக்கிய நாடுகள் பொது சபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பூமியை அழித்து வரும் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஒருமுகப்படுத்தும் தினமாக இதனை அனுசரிக்க உலக நாடுகள் தீர்மானித்தன. ஓசோன் (Ozone) என்பது மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்திருக்கும் ஒரு மூலக்கூறாகும். இது வளிமண்டலத்தின் மேல் வாயு நிலையில் காணப்படுகின்றது. இது ஒட்சிசனின் பிறிதொரு மாற்றுரு (allotrope) வாகும். இது ஈரணு ஒட்சிசன் மூலக்கூறு போல் நிலைத்தன்மை இல்லாதது. இலகுவாக சிதைந்து விடும் தன்மை கொண்டது. 1840ல் சி. எப். ஸ்கோன்பின் (Christian Friedrich Schönbein) என்பவர் ஓசோனைக் கண்டுபிடித்தார். அது ஒருவகையான மணம் தருவது என்ற அடிப்படையில் கிரேக்க மொழியில் மணத்தைக் குறிக்கும் (ozein, "மணத்தல்") ஓசோன் என்று பெயர் சூட்டினார். ஆனால் மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்த விஞ்ஞானப் பெயரின் பொருள் ஓசோன் என்பது, இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, 1865ல் ஜாக்ஸ் லூயிஸ் சோரெட் (Jacques-Louis Soret) என்பார் செய்த ஆய்வுக்கு முன்னர் அறியப்படவில்லை. இது பின்னர் சி. எப். ஸ்கோன்பின் அவர்களால் 1867 இல் உறுதி செய்யப்பட்டது. ஒரு இரசாயனப் பொருளின் மாற்றுருவாக (allootrope) அறியப்பட்டவற்றுள் ஓசோனே முதலாவதாகும். புவிக்கு அருகே காணப்படும் ஓசோன் சூழலில் மாசுத்தன்மை ஊட்டுவதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் மனிதர்கள் உட்பட, விலங்குகள் பலவற்றின் சுவாச செயற்பாட்டிற்கு கேடு விளைவிப்பதாக நிரூபிக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும். ஆனால் புவியின் வளிமண்டலத்தின் மேல் மட்டங்களில் உள்ள ஓசோன் வளி, உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை தடுத்து, உலகில் பாயும் அளவைக் குறைக்கின்றது. சூரிய ஒளிக் கதிர்களில் நம் கண்ணுக்குத் தெரியாத ஒளிக்கதிர்கள் உள்ளன. இத்தகைய ஒளிக் கதிர்களை செங்கீழ்க் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் என பிரிக்கலாம். செங்கீழ்க் கதிர்கள் சூரியனிடமிருந்து வெப்பத்தை சுமந்து வந்து பூமியை வெப்பம் அடையச் செய்கிறது. புற ஊதாக்கதிர்கள் பூமியில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களும் தாவரங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துக்கின்றன. இத்தகைய தீமை விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களிடமிருந்து (UV) பாதுகாப்பு கவசமாக ஓசோன் படலம் செயற்படுகிறது. ஓசோன் படைமண்டலத்தில் உற்பத்தியானாலும் இதன் 90 வீதம் படைமண்டலத்தின் தாழ் பகுதியில் உள்ளது. படை மண்டலத்தின் தாழ்பகுதியில் ஒட்சிசன், உயர் ஆற்றல் வாய்ந்த சூரியனில் இருந்து வெளியேற்றப்படும் கதிர்வீசலின் மூலமும் ஓசோன் உற்பத்தியாகின்றது. இப்பகுதி புவியின் வளிமண்டலத்தின் அதிகளவான பகுதியை (90%) உள்ளடக்கி உள்ளது. இப்பகுதி புவியின் மேற்பரப்பில் இருந்து 10-25 மைல் (15-40 கிமீ) உயரத்தில் அமைந்துள்ளது. வளிமண்டலத்தில் ஓசோன் அடர்த்தி 'டாப்சன்" அலகினால் அளவிடப்படுகிறது. ஓசோன் அடர்த்தி கணக்கிட பத்தொன்பது வகையான கருவிகள் உள்ளன. அவற்றில் சில டாப்சன் ஸ்பேக்ட்ரோ போட்டோ மீட்டர், ப்ருவர் ஸ்பேக்ட்ரோ போட்டோ மீட்டர், ஜோடு மீட்டர், பில்டர் ஓசோன் மீட்டர் எம். 83, பில்டர் ஓசோன் மீட்டர் எம். 124, மாஸ்ட், ஒக்ஸ்போர்டு, சர்பேஸ் ஓசோன் பப்ளர், எலக்ட்ரோ கெமிக்கல் செல் சோன்ட் போன்றனவாகும்.


அளவு பருவநிலைக்கேற்ப சிறிய அளவிலான மாறுதலுடன் சராசரியாக நிலவுகிறது. ஆனால் வசந்த காலத்தில் (ஆகஸ்ட், நவம்பர்) ஓசோன் அளவு சராசரி அளவில் 50 முதல் 60 வீதம் வரை குறைந்து காணப்படுகின்றது. இந்த ஓசோன் குறைவே 'ஓசோன் துவாரம்" (Ozone hole) என்று அழைக்கப்படுகிறது. பிரித்தானிய விஞ்ஞானி ஜே. போர்மன் தலைமையிலான ஆய்வுக் குழு அண்டார்டிகாவின் 'ஹாலேபே" என்ற நிலையத்தில் 1970ம் வருட மத்தியில் ஓசோன் அளவு குறைந்து காணப்பட்டதை முதன் முதலாகக் கண்டறிந்தது.
துருவப் பிரதேசத்தில் ஓசோன் அடர்த்தி குறைவதற்கு காரணமாக விளங்குவது துருவப் படை மேகங்களாகும். இந்த மேகங்கள் மீது நிகழும் பல்வேறு வகையான இரசாயனச் செயல்பாடுகளின் போது குளோரின் வெளிப்படுகின்றது. இந்த குளோரின் அணு ஓசோனுடன் தாக்கம் புரிந்து குளோரின் ஒட்சைட்டை வெளிப்படுத்துவதால் ஓசோன் செறிவு குறைகிறது.
அண்டார்டிக் பகுதி ஒசோன் படுகையில் உள்ள ஓட்டை கடந்த 2007 இல் இருந்ததை விட இந்த ஆண்டு பெரிதாகியுள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் 2006 இல் இருந்ததை விட ஓசோன் துவாரத்தின் அளவு குறைவாக உள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து உலக வானிலை ஆய்வு மையம் 2008ம் ஆண்டில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்டார்டிக் பகுதியில் உள்ள ஓசோன் படுகையில் 27 மில்லியன் சதுர கி.மீ. அளவு துவாரம் உள்ளது. இது கடந்த 2007ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 25 மில்லியன் சதுர கி.மீ. ஆகவும் 2000ம் ஆண்டில் 28.3 மில்லியன் சதுர கி. மீ. ஆகவும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓசோன் படையினை கண்டுபிடித்த காலத்தில் இருந்து விஞ்ஞானிகள் அதன் இயற்கை அமைப்பு மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 1974ல் ரசாயனவியலாளர்கள் சேர்வூட் ரொலன்ட் மற்றும் மரியா மொலினா என்போர் மனித செயற்பாடுகளின் மூலம் வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் பொருட்களினால் ஓசோன் படைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்தனர். இதனால் பல்வேறுபட்ட எதிர்விளைவுகள் ஏற்படுவதுடன் அதனை தடுப்பதற்கான சட்டதிட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை ஓசோன் படை தேய்விற்கு காரணமான பொருட்களை வெளியிடாமல் இருப்பதற்கான பொறுப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய கடமை மக்களையே சார்ந்துள்ளது. 1995ம் ஆண்டு ஓசோன் ஆய்விற்காக குரூட்சன் மற்றும் நிகோலஸ் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த அறிஞர்களின் விருப்பமெல்லாம் 'இந்த பூவுலகை காக்கும் ஓசோன் படலத்தை காக்க உலகத்திலுள்ள அனைவரும் ஒன்றாக கைகோர்க்கவேண்டும்" என்பதுதான்.
ஓசோன் துவாரத்திற்குக் காரணம் ஓசோனை தேய்வடைய செய்யக்கூடிய பொருட்களை வெளியிடுதலே (Ozone Depleting Substances) எனக் கூறப்படுகிறது. இப்பொருட்கள் பிரதானமாக மனித உருவாக்கங்களாகவே உள்ளதுடன் இதற்கு காரணமாக குறிப்பிட்டு காட்டக்கூடிய இயற்கை மூலகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவ் ஊறுவிளைவிக்கும் பொருட்கள் கைத்தொழில் விவசாய நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்றது. குறிப்பாக குளோரோ புளோரோ காபன் (CFC, Chloro Floro Carban), கார்பன் நாற்குளோரைட் (Carban Thetrachlorite), ஐதரோ குளோரோ புளோரோ கார்பன் (HCFC) மற்றும் மெதைல் புரோமைட் (Methil Bromite) போன்றவை பிரதானமாக ஓசோன் தேய்விற்கு காரணமாக அமைகின்றன.
இவ்வூறு விளைவிக்கும் பதார்த்தங்கள் மேல் வளிமண்டலத்தினை அண்மித்தவுடன் அவற்றின் அணுக்களினை பகுதி பகுதியாக பிரித்துவிடுகின்றது. அப்பதார்த்தங்களை உருவாக்கியுள்ள அணுக்கள் அனைத்தும் விடுவிக்கப்படுகின்றன. உதாரணமாக குளோரீன் மற்றும் புரோமின் அணுக்களை குறிப்பிடலாம். இவ்வாறு விடுவிக்கப்பட்ட அணுக்கள் தமக்கு சேதம் விளைவிக்காது பிற பொருட்களை சேதமடைய செய்யும் செயற்பாட்டினூடாக ஓசோன் படை தேய்வினை துரிதப்படுத்துகிறது. ஒவ்வொரு அணுவும் வளிமண்டலத்தில் இருந்து அகற்றப்படுவதற்கு முன்பதாக ஆயிரக்கணக்கான ஓசோன் மூலகங்களை அழிக்கக்கூடிய திறன்வாய்ந்தனவாக காணப்படும்.
ஓசோன் படைத் தேய்வினால் மனித சுகாதாரம் மற்றும் சூழல் மீது பாரிய தாக்கங்கள் ஏற்படுகின்றன. புற ஊதாக்கதிர்வீசலின் UV அளவு அதிகரிப்பதினால் மனித சுகாதாரம் மற்றும் சூழலுக்கு தீங்கு தரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றது. பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழலின் சம நிலையிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. பூமியின் சராசரி வெப்பநிலை உயரும் போது பனிப்பிரதேசங்களில் மிகவும் அதிகமான பனி உருகி கடல் மட்டம் உயர்கிறது. கடல்மட்ட உயர்வின் விளைவால் கடலருகே உள்ள பூமியின் பெரும்பான்மையான நிலப்பகுதி நீரால் சூழப்பெற்று உயிரினங்கள் வாழும் நிலப்பகுதி வெகுவாக குறைந்து விடும் அபாயம் பூதாகாரமானதாக தெரிகிறது.
ஆய்வுகளின்படி UV கதிர்வீசலுக்கும் தோல் புற்றுநோய்க்கும் இடையில் திடமானதொரு உறவு நிகழ்வதாக கூறப்படுகின்றது. உலக சுகாதாரக் கழகத்தின் கண்டுபிடிப்புகளின் படி ஒவ்வொரு ஆண்டும் 20 முதல் 30 லட்சம் பேர் தோல் புற்று நோய்க்கு ஆளாவதாகவும், இதில் 20 சதவீதத்தினர் புற ஊதாக் கதிர்களின் பாதிப்புகளால் விளைந்தவையே என்றும் தெரிவித்துள்ளது. UV கதிர்வீசலினால் கண் நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறானது உயர்ந்த அளவில் காணப்படுகின்றது.
UV தரை மேற்பரப்பை அடைவதுடன் அதனை உட்சுவாசிக்கும் போது நச்சுவாக மாறி சுவாசத்தொகுதி பிரச்சினைகளையும் உருவாக்குகின்றது. உயர் புறஊதாக்கதிர் மட்டமானது சில உயிர் வாழ் நுண்ணுயிர்களின் வாழ்வை பாதிக்கின்றது. உதாரணமாக Cyanobacteria நுண்ணுயிர்களானது பல தாவரங்களின் நைதரசன் நிலைநாட்டுகை செயற்பாட்டில் பிரதான பங்கினை வகிக்கின்றன. தாவரங்கள் UV கதிர்வீசலுக்கு இலகுவில் பாதிப்படைகின்றன.


இதன் காரணமாக பிளான்தன்களும் பாதிப்படைகின்றன. அதேவேளை பிளான்தன்கள் உணவு வலையின் முதல்நிலை உற்பத்தியாக்கிகளின் ஜீவாதாரமானவையாகும். சமுத்திரத்தின் பிளான்தன்களின் அளவு குறைவடைதலானது (சமுத்திர உயிர் சூழலியல் செயற்பாட்டின் உணவு சங்கிலி முறைமையினுடாக) மீன்களின் அளவு குறைவடைவதற்கு வழிவகுக்கிறது.
ஓசோன் படை தேய்வினை தடுப்பதும் ஓசோன் படையை பாதுகாப்பதும் பூமியின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை நிலைநாட்டுவதற்கு எடுக்கவேண்டிய முக்கிய விடயமாகும். எனவே ஓசோன் படை தேய்வினை தடுப்பதற்காக பூகோளரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
குளிர்சாதன பெட்டிகள், குளிரூட்டிகள் போன்றவற்றின் பாவனையானது குளோரோ புளோரோ காபன், ஐதரோ குளோரோ புளோரோ காபன் போன்றவற்றினை வெளியிடுவதுடன் புவியின் நிலையான வாழ்க்கைக்கு பொறுப்பான சூழலுக்கு அபாயத்தினையும் விளைவிக்கின்றது. எனவே இச்சாதனங்களை தடை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக மாற்றுச் சாதனங்களை கண்டுபிடிக்கவேண்டும். குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள் ஆகியவற்றில் குளோரோ புளோரோ கார்பனுக்கு ஈடான சுற்றுச்சூழலை மாசு அடைய செய்யாத வேறு பொருள்களை பயன்படுத்தவேண்டும்.
ஓசோன் படை தேய்வினை நோக்கிய சர்வதேச பிரயத்தனமாக
விஞ்ஞானிகளின் அறிவுறுத்தலின் பின்பு உலகின் அனைத்து சமூகங்களும் இணைந்து 1985ல் ஓசோன் படையினை பாதுகாப்பதற்காக 'வியன்னா மகாநாட்டி'னை உருவாக்கின. இச்சான்றுகள் உறுதிப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் அதாவது 1987 இல் 'மொன்றியல் சாசனம்" ஓசோன் தேய்வுப்பொருட்களை வெளியிடுவதனை தடுப்பது தொடர்பாக ஏற்படுத்தப்பட்டது. CFC, HCFC மற்றும் ஏனைய தேய்விற்கு பொறுப்பான பொருட்களை வெளியிடாது சூழல்-நட்பான ஓசோனுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாத மாற்றுப்பொருட்களை பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது.
'மொன்றியல் சாசனப்" பிரகாரம் ODS பொருட்களை உற்பத்தி செய்தல் நுகர்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்துதல், ODS இன் சர்வதேச வர்த்தகத்தினை கட்டுப்படுத்தல், ODS இன் வருடாந்த உற்பத்தி தரவுகளைப் பேணுதல் போன்ற நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டன. அபிவிருத்தியடைந்த நாடுகள் பல்பக்க நிதியுதவியினை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கி மாற்று தொழினுட்பங்களை ODS வெளியேற்றத்திற்கு பயன்படுத்தக் கோரியதில் சிறந்த பலன்கள் ஏற்பட்டுள்ளன. 192 நாடுகள் இதில் கையெழுத்திட்டு கொள்கை உருவாக்கியுள்ளதுடன் அதற்கான நிதிசம்பந்தமான விஷயங்களுக்கு வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 7 அங்கத்தவர்கள் (அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இருந்து) பொறுப்பு வகிக்கக்கூடிய வகையில் இச்சட்டம் உருவாக்கப்பட்டது.
1992ல் லண்டன் சட்டம் அதிகப்படியாக ஓசோனை சேதப்படுத்தும் பொருட்களை வெளியிடும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் தொடர்பானதாக இருந்தது. 1996 இல் இச்சட்டம் விரைவுபடுத்தப்பட்டது.
ஓசோன் படை தேய்வினை குறைப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அவதானிக்குமிடத்து மானிடகாரணிகள் (Anthropogenic) மூலம் வெளிவிடப்படும் பொருட்கள் ஓசோனின் உற்பத்தியை விட அழிவை துரிதப்படுத்துவதனால் இயற்கை சமநிலை குலைகின்றது.
இந்த குளோபல் வார்மிங். [global warming], ஓசோன் ஓட்டை..[ozone depletion], பசுமை இல்ல விளைவு [green house effect], ஆகிய மூன்றுக்கும் அதிகப்படியான வாகன, தொழிற்சாலை, அணுமின் நிலையம், மின் உற்பத்தி இவைகளால் ஏற்படும் புகையே காரணமெனப்படுகிறது. மொன்றியல் சாசனத்தின் மூலம் ஓசோனின் மீள் உற்பத்தி நடவடிக்கையினை ஊக்குவிக்கும் தொழிற்பாடுகள் செயற்படுத்தப்படுகின்றன.
ODS ரசாயனங்களை கட்டுப்படுத்தும் 296 திட்டங்களுக்கு நிதி உதவிகளும் அளிக்கப்படுகின்றன. கைத்தொழில் குழுக்கள் (CFC மற்றும் ODS பாவனையாளர்கள்) சூழல்-நட்பு முறையிலான பாதுகாக்கப்பட்ட மாற்று முறைமைகளை கையாள முனைந்து வருகின்றன. தொழில்நுட்பத்தினூடாக மாற்று திட்டங்களை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் அமுல்படுத்துவதனை ஊக்குவித்து வருகின்றன .மொன்றியல் சாசனமானது வழக்கத்தை மாற்றி புதுமையை புகுத்தும் விடயங்களையும் தொழில்நுட்பத்தினூடாக அவற்றின் வியாபித்தலினையும் சட்ட ரீதியான மற்றும் நிறுவனரீதியான தடைகளை அகற்றுதலையும் செய்து வருகிறது.
உலகரீதியாக நகரும் குளிரூட்டிகள் (Mobile Airconditioner) சூழல்-நட்பு தொடர்பான நுட்பங்களுக்கு மாற்றப்பட்டு ஓசோன் படையினை பாதுகாப்பதுடன் அதேவேளை ODS, பொருட்களினால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களும் குறைக்கப்படுகின்றது. (ODS, Ozone Depliting Substances) 1970 காலகட்டங்களில் காணப்பட்ட பாதுகாக்கப்பட்ட ஓசோன் முறைமையினை மொன்றியல் சாசனம் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக இன்னும் 5-6 தசாப்தங்களில் எதிர்பார்க்கலாம் என வளிமண்டல கணினி மாதிரிகள் காட்டிநிற்கின்றன.
அதாவது ஓசோன் படுகையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தினால், வரும் 2075ம் ஆண்டில் முற்றிலும் சீரடைந்த ஓசோன் படுகையை (அதாவது 1980ம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப் போன்ற சூழலை) ஏற்படுத்த முடியும் என உலக வானிலை ஆய்வு மைய மூத்த விஞ்ஞானி கெய்ர் பிராத்தென் கூறியுள்ளார்.

நன்றி- ஓன் இந்தியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக