உலகப் பெண்குழந்தைகள் தினம்! - சிறப்பு பதிவு
தகவல் தொழிநுட்ப உலகின் இணைப்பில் மானிட உலகம் முன் எப்போதும் இல்லாத முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. பழைமைகள் பின்னுக்குத் தள்ளப் பட்டு புதுமைகளை உடனே சுவீகரிக்கும் வேகம் எல்லாத் தரப்பு மக்களின் வேட்கையாக உள்ளது...
இந்தச் சூழலில், நவீன உலகில் கொண்டாட்டங்களுக்கும் குதூகலத்திற்கும் குறைவில்லாத நிலை உள்ளபோதும் சமுதாய நலன் கருதி ஐ.நா.சபை பல்வேறு தினங்களைக் கொண்டாட வலியுறுத்தி வருகிறது.அந்த அளவில், இன்று `உலகப் பெண்குழந்தைகள் தினம்` எல்லா நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பெண்களுக்கே இரண்டு தினங்கள் கொண்டாட்டப்படுகிறது. ஒன்று, ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதியில் கொண்டாடப்படும் உலகப் பெண்கள் தினம். இன்னொன்று இன்றைய தினக்கொண்டாட்டமான `உலகப்பெண்குழந்தைகள் தினம்`. இந்த இரண்டு கொண்டாட்டமும் பெண்களுக்கு அளிக்கப்படவேண்டிய முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துக் காட்டும் ஒன்றாக உள்ளது என்றால் அது மிகையில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு சமூக விழிப்பு அவசியமாக உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இன்றைய நவீன உலகிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுவது அநீதி. எனவேதான் பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், 2011 டிச., 19ம் தேதி ஐ.நா, சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, அக்., 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாகக் கொண்டாட முடிவு செய்து அறிவித்தது.
இந்த ஆண்டின் மையக் கருத்து, "பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்" என்பதே.
பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் மூலம், அவர்கள் மட்டுமல்லாமல் சமூகமும் முன்னேறும். இந்த கருத்தைத்தான் மகாகவி பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் உள்ளிட்ட எல்லோரும் தங்களது படைப்புகளில் எழுதி உள்ளனர் என்பது நாம் அறிந்த செய்தி. இருப்பினும் நமது நாட்டில்,இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை , பெண் குழந்தைகளுக்குக் கல்வி என்பது மறுக்கப்பட்ட ஒன்றாக, மறைக்கப் பட்ட ஒன்றாக இருந்தது. இப்போது மெல்ல மெல்ல இந்த நிலை தகர்ந்து, இன்று மாணவிகளும் கல்வி பெறுகின்றார்கள்.
இருப்பினும் இன்றும் சில நாடுகளில் பெண் குழந்தைகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. அவர்கள் பள்ளி செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு வருமானம், பாதுகாப்பு, கலாசாரம், கல்வி நிறுவனம் ஆகியவையே காரணமாகத் தெரிய வந்துள்ளது.
இதற்கு தீர்வாக ஐக்கிய நாடுகள் சபைத் தரும் முடிவுகள்:
பெண் குழந்தைகள் அதிகளவில் கல்வி பெறுவதற்கு, அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தேவையான, போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துதல். படிக்கும் குழந்தைகளுக்கு வங்கிகள் மூலம் உதவித்தொகை வழங்குதல்.
பெண் குழந்தைகளுக்கும் தொழில்நுட்ப கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். படிப்பை முடிக்கும் மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளித்தல்.
பாலின சமத்துவத்தை வலியுறுத்துவது, குழந்தை திருமணத்தை அறவே ஒழிப்பது, குடும்பங்களில் மாணவர்களுக்கு சமமாக மாணவிகளுக்கும் அனைத்து சலுகைகள் வழங்குதல்.
தொழில்நுட்ப கல்வி , கிராமப்புற மாணவிகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்தல். ஆகிய தீர்வுகளை ஆளும் அரசுகள் தொய்வின்றி நடைமுறைப் படுத்தினால் நாளைய உலகம் பெண்களின் கையில்... நாளைய உலகம் பெண்களையும் நம்பி இயங்கும் என்பதில் சந்தேகம் இல்லை..
உலகப் பெண்குழந்தைகளுக்கு இனிய வாழ்த்துக்கள்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக