பக்கங்கள்

செவ்வாய், 11 அக்டோபர், 2016

கன்சிராம்

கன்சிராம்

இந்திய அரசியலின் ஒரு சகாப்தம்

*கன்சிராம் சுதந்திர இந்தியாவில் அம்பேத்கருக்குப் பின் அடித்தட்டு மக்களுக்காக வாழ்ந்த மாபெரும் அரசியல் தலைவர்.* இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு, படுக்கையிலும், சக்கர நாற்காலியிலும் இருந்த அந்த மாபெரும் தலைவர் தம்முடைய 72 ஆம் வயதில் மாயாவதியின் இல்லத்தில் காலமானார். அவருடன் அரசியல் களத்தில் மாறுபடும் இராம் விலாஸ் பாஸ்வான் கூட அவரை “தலித்துகளின் மெசைய்யா” என்றே வர்ணிக்கிறார்.

கன்சிராம் மிகப்பெரிய சொல்லாடல் புரியும் பேச்சாளராக இல்லாவிட்டாலும் சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் பேசும் எளிமையான பேச்சாளர். கன்சிராம் நடைமுறை அரசியலின் இராஜதந்திரியாக விளங்கினார். இந்தியாவின் சமத்துவமற்ற சமூகச் சூழலே அவர் பின் பலகோடி மக்களை அணி திரள வைத்து, பகுஜன் இயக்கத்தை வளர வைத்தது. பஞ்சாப் மாநிலத்தில் தீண்டாமையை மிக அதிகம் உணராத படித்த தலித் குடும்பத்தில் பிறந்தவர் இவர். கன்சிராம் பாதுகாப்பு தளவாட உற்பத்தித் துறையில் அறிவியல் உதவியாளராக பணிபுரிந்தார். *அம்பேத்கரின் சாதி ஒழிப்பு நூலை ஒரே இரவிலிருந்து மூன்று முறை திரும்பத் திரும்ப படித்து, அதன்பால் ஈர்க்கப்பட்ட கன்சிராம் தலித் மக்கள், தலித் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை இன ஊழியர்களின் அமைப்பான BAMCEF என்பதை ஏற்படுத்தினார். அதன் முடிவாக சமூகச் சமநிலை என்பது அரசியலதிகாரத்தை வெல்ல முடியாவிட்டால் ஏற்படாது என்பதை உணர்ந்தார். இக்கருத்தை அம்பேத்கரின் சிந்தனையிலிருந்து பெற்றார்.* இந்தியாவில் 15 சதவீதம் உள்ள உயர் வகுப்பினர் 85 சதவீத பகுஜன் மக்களை (தலித், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்) ஆட்சி செய்கின்றனர் என்று எல்லோருக்கும் எடுத்துரைத்தார். அவருடைய இயக்கத்தின் தூணாக மாயாவதி விளங்கினார்.

*டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசமைப்புச் சட்டம் எவ்வாறு வரையறுக்கப்பட வேண்டும் என்பதில் உளப்பூர்வமாக உறுதியுடன் இருந்தாரோ, அதே போன்று கன்சிராமும் தன்னுடைய இயக்கத்தின் மூலம் இந்திய அரசியலின் ஜனநாயகத் தன்மை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தார்.*

1993ஆம் ஆண்டு உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றிபெறும் வரை அக்கட்சி யாராலும், பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அத்தேர்தல் அதற்கு முன் பகுஜன் சமாஜ் கட்சி எதிர்கொண்ட தேர்தலை விட மிகவும் மாறுபட்ட முடிவுகளைத் தந்தது. 1984 மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஒன்றிலும் வெற்றி பெற முடியவில்லை. 1989 மக்களவைத் தேர்தலில் அக்கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் அச்சமயத்தில் பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ், ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் எவ்வித உடன்பாடு செய்து கொள்ளவும் மறுத்தது.

1991இல் மீண்டும் மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி ஒரேயொரு இடத்தை மட்டுமே பெற முடிந்தது. ஆனால் 30 மாத இடைவெளிக்குள் பகுஜன் சமாஜ் கட்சி முக்கியமானதொரு இடத்தைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி முலாயமின் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி சேர்ந்து 162 இடங்களில் போட்டியிட்டு 66 இடங்களைப் பிடித்தது. அகில இந்திய கட்சியான காங்கிரஸ் நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.

தேசிய அரசியல் வரலாற்றில் 1990க்கும் 1993க்குமிடையே உள்ள 30 மாதங்களில் கன்சிராம் எழுச்சி பெற்றதற்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளன. இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிராக பி.ஜே.பி. நடத்திய தாக்குதலே கன்சிராமின் எழுச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தது. 1990இல் அத்வானி சோம்நாத்திலிருந்து துவங்கிய ரதயாத் திரை 1992 டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்புடன் நிறைவுற்றது. மாநில ஆட்சியிலிருந்த பா.ஜ.க.வின் கல்யாண் சிங் அரசும், மத்தியில் ஆட்சியில் இருந்த நரசிம்மராவின் காங்கிரஸ் அரசும் தத்தமது படைகளை அனுப்பியிருந்தும் இந்த நிகழ்வு நடந்தேறியது. இந்நிகழ்வு சிறுபான்மை முஸ்லிம் மக்களை பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மீது கோபப்பட வைத்தது. 1947லிருந்து காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியாக இருந்த முஸ்லிம் மக்கள் இப்போது பகுஜன் சமாஜ் சமாஜ்வாதி கூட்டணிக்கு மாநிலம் முழுவதும் வாக்களித்தனர்.

அடுத்ததாக நரசிம்மராவ் தலைமையின் கீழ் செயல்பட்ட மன்மோகன்சிங்கின் புதிய பொருளாதாரக் கொள்கையான “தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல், உலகமயமாக்கல் இந்திய சமூகத்தினிடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த பொதுத்துறைகளை உள்ளடக்கிய கலப்பு பொருளாதாரத்தை ஒட்டு மொத்தமாக சிதைத்தது. ஆட்சியாளர்கள் பொதுத்துறைகளை நம்பிய காலம் போய் அந்நிய முதலாளிகள், கடன் தருவோர் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பினர் பக்கம் கவனத்தைத் திருப்பினர். அதன் மூலம் 1990களில் கொண்டு வரப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டிற்கும் புதிய பொருளாதாரக் கொள்கையால் எவ்விதப் பயனும் இல்லாத சூழ்நிலை உருவானது. ஜனநாயகத்தின் சட்ட பூர்வத்திற்கும், மக்களின் நம்பகத் தன்மைக்கும் எதிராக இந்தியாவின் பெரும்பான்மை மக்களுக்கு எவ்வித பலனும் இல்லாத கொள்கையாக அனைவராலும் உணரப்பட்டது. எனவே இன்று, இட ஒதுக்கீடு தனியார் துறையிலும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே மேற்கூறிய காரணங்களால் மக்கள் பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு ஆதரவாகத் திரள வேண்டிய தேவை ஏற்பட்டது. எழுந்தது.

கன்சிராமின் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி வெற்றி பெற்றதன் மூலம் உத்திரப் பிரதேசத்தில் மீண்டும் பி.ஜே.பி. ஏற்படாமல் தடுக்கப்பட்டது. ஒருவேளை இந் நிகழ்வுக்குப் பின் பி.ஜே.பி மீண்டும் உ.பி.யில் ஆட்சிக்கு வந்திருந்தால் இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் அமைப்பிற்கு மிகப்பெரிய ஊறு ஏற்பட்டிருக்கலாம். அதே சமயம் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி.யுடன் கூட்டு வைத்துக் கொண்ட போதும் அவற்றை “மனுவாதி” கட்சிகள் என்றே குறிப்பிட்டார். கன்சிராமால் உருவாக்கப்பட்ட மாயாவதியின் அரசியல் நடவடிக்கைகள் வாயிலாக தலித் மக்களும் ஜனநாயக இந்தியாவில் அரசியல் காய்களை நகர்த்த முடியும் என்பதை உணர்த்தியது. அதே போன்று இந்திய பாராளுமன்ற அரசியலிலும் தலித் மக்களின் தலைமையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று கன்சிராம் விரும்பினார்.

மாயாவதி இருமுறை பி.ஜே.பியுடன் கூட்டு சேர்ந்த பொழுது கூட தனது தனித் தன்மையை இழக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியின் ஓட்டு வங்கி அதனுடைய செல்வாக்கை இழக்கவில்லை என்று 1993க்கு பின் நடைபெற்ற ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலிலும் நிரூபித்தது. 35 வயதில் அரியணை ஏறிய இந்தியாவின் முதல் தலித் பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெற்றார் மாயாவதி. அதன் பின் 1996 தேர்தலில் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்ட பொழுதும் பகுஜன் சமாஜ் கட்சி 67 இடங்களைப் பெற்று சுழற்சி முறையில் முதல்வர் என்ற திட்டத்திற்கிணங்க பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கின்றது. அதன் பிறகு பி.ஜே.பி. கட்சி உடைப்பு மூலம் ஆறு மாதம் முடிந்தவுடன் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. உண்மையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்திரப் பிரதேச மாநிலத்தில் அதிகாரத்தில் தொடர்ந்து இடம் பெற வேண்டும் எனக் கருதி மாயாவதியின் கீழ் அமைச்சரவையில் சேருகிறது பி.ஜே.பி. ஒவ்வொரு முறையும் மாயாவதி அமைச்சரவை அமைக்கும் பொழுதும் கணிசமான அளவில் தலித் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றனர். பின்னர் மாயாவதி அமைச்சரவையின் ராஜினாமாக் கடிதத்தை கொடுக்கும் பொழுது அவரின் முடிவை ஏற்காத பி.ஜே.பியினர் இடைத் தேர்தலுக்கு தயாராகாமல் முலாயம் கட்சிக்கு மறைமுக ஆதவளிக்கின்றனர். பின்னர் நடைபெற்ற “குதிரை பேரம்” மூலம் முலாயம் முதல்வராகப் பெரும்பான்மை பலம் பெற்றார்.

பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதி தலைமையின் கீழ் ஆட்சிபுரிந்த பொழுது தலித் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த இதர உயர்சாதிக்காரர்களிடமிருந்து நிலங்கள் பிடுங்கப்பட்டு அம்மக்களிடமே மீண்டும் நிலங்கள் ஒப்படைக்கப்பட்டது. அனைத்து ஏழைசாதி மாணவர்களுக்கும் கல்விச் சலுகைகள் வழங்கப்பட்டது, பெரியார் சிலையை பாட்னாவில் நிறுவ முயற்சி மேற் கொண்டது, ஆக்ரா பல்கலைக் கழகத்துக்கு அம்பேத்கர் பல்கலைக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்தது; ஜோதிபாய் பூலே மற்றும் புத்தரின் தாயார் மாயாவதி பெயரில் மாவட்டங்கள் தோற்றுவித்தது ஆகியன மாயாவதி ஆட்சியின் சில குறிப்பிடத்தகுந்த செயல்கள் ஆகும். பாபர் மசூதி பிரச்சினை மீண்டும் தலையெடுக்க விடாமல் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாத்தார். 1999ஆம் ஆண்டு நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது பி.ஜே.பிக்கு எதிராக வாக்களித்தது, தலித் மக்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களுக்கு எதிராகச் சட்ட நட வடிக்கை மேற்கொண்டமை முதலியன குறிப்பிடத்தகுந்த அம்சமாகும்.

இன்று தேசியக் கட்சியாக விளங்கும் பகுஜன் சமாஜ் கட்சி உத்திரப் பிரதேசம் மட்டுமின்றி உத்ராஞ்சலில் 7 சட்டமன்ற உறுப்பினர்களையும், பீகாரில் 4 சட்டமன்ற உறுப்பினர்களையும், மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கரில் தலா 2 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றுள்ளது. இது தவிர ராஜஸ்தானில் 2 சட்டமன்ற உறுப்பினர்களையும், ஹரியானாவில் 1 உறுப்பினரையும் பெற்றுள்ளது. இத்தகைய வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் கன்சிராம் ஊன்றிய தலித், முஸ்லிம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு ஆகும். இன்றைக்கு பகுஜன் சமாஜ் கட்சி என்னும் தலித் கட்சியின் கீழ் பார்ப்பன சம்மேளனம், யாதவ் சம்மேளனம் போன்றவற்றை ஒருங்கமைத்து வருகிறது. அவ்வாறு வருபவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் தலித்களின் தலைமையை ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தி வரும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.

கன்சிராம், மாயாவதி போன்றோர் அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிரத்தில் காலூன்ற வேண்டும் எனச் செயல்பட்ட பொழுது காங்கிரஸ் கட்சி சுதாரித்து தலித் சமூகத்தைச் சார்ந்த ஷிண்டேயை முதல்வராக்கியது. உண்மையில் இது கன்சிராமின் இயக்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும். மேலும் இந்தியக் குடியரசுக் கட்சியின் கவாய் பிரிவு, அந்தூலே பிரிவுகளுக்கும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சார்பில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதும் கன்சிராமின் வருகைக்குப் பின்னரே. 1990களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த கன்சிராம் திராவிடக் கட்சிகள் பெரியாரின் உள்ளார்ந்த அரசியல் தத்துவத்தை நிறைவேற்ற மறந்து விட்டன என்று கூறினார்.அதன்பின் சில ஆண்டுகளுக்கு முன் சேலத்தில் பேசிய மாயாவதி தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் தலித்துகளுக்கு மிகப் பெரிய அளவில் எந்தவொரு நன்மையும் செய்யவில்லை என்று குறிப்பிட்டார். இந்தியாவில் 18 சதவீதம் பார்ப்பனர்களையும், 18 சதவீதம் முஸ்லிம்களையும், 22 சதவீதம் தலித்துகளையும், 18 யாதவர்களையும் உள்ளடக்கிய சாதிய வேறுபாடுகளுடன் காணப்படும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்திரப் பிரதேசத்தில் தலித் ஒருவரை கன்சிராம் முதலமைச்சராக்கி காட்டியுள்ளது மிகப்பெரிய சாதனையாகும். ஆனால் பெரியார் பிறந்த மண்ணில், மூன்று சதவீதம் பார்ப்பனர்கள் உள்ள தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் தலித் ஒருவரை முதல்வராக்காதது அக்கட்சிகளின் முன் உள்ள சவாலாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. கன்சிராமின் செயல்பாடுகளை முன்வைத்த திராவிட அரசியலை நோக்கும் போது தமிழ்நாடு எவ்வளவு பெரிய சமூக அநீதி மாநிலமாக விளங்குகிறது என்பதை அறிய முடிகிறது. இதை மாற்றுவது தான் தமிழக தலித் அரசியலிற்கு முன்நிற்கும் சவால் என்று கூட சொல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக