பக்கங்கள்

திங்கள், 20 பிப்ரவரி, 2017

உலக தாய் மொழி தினம் பிப்ரவரி 21 .


 

உலக தாய் மொழி தினம் பிப்ரவரி 21 .

பன்னாட்டுத் தாய்மொழி நாள் (International Mother Language Day) பெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை அரசகரும மொழியாக ஆக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ) அமைப்பின் 1999, பெப்ரவரி 21 பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெசுக்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்த நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 2013 ஆம் ஆண்டின் அனைத்துலகத் தாய்மொழி நாளை ஒட்டி யுனெசுக்கோ பாரிசில் "தாய்மொழிகளும் நூல்களும் - எண்ணிம நூல்களும் பாடநூல்களும்" (“Mother tongues and books - including digital books and textbooks”) என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.


1999-ஆம் ஆண்டு யுனெஸ்கோ மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி தாய்மொழி தினம் வருடாவருடம் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது.

நம் தாய் மொழி தமிழ். அதில் எழுதவும், படிக்கவும் நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினரில் எத்தனை பேருக்கு தமிழ் எழுதவும், படிக்கவும் தெரிகிறது? காரணம் பள்ளியில் இரண்டாம் மொழியாக தமிழை தேர்ந்தெடுக்காமல் பிறமொழிகளைத் தேர்ந்தெடுப்பது தான். தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புகின்ற பெற்றோர்களை இன்று அதிகம் காண முடிகிறது.

தாய்மொழியில் சரளமாக எழுதவும், படிக்கவும் தெரிந்திருப்பவர்களுக்கு வேறு எந்த மொழியை வேண்டுமானாலும் எளிதாகக் கற்க முடியும். சுலபமாக இருக்கும். கற்பனைத் திறன் அதிகரிக்கும். படைப்பாற்றல் பெருகும். செய்கின்ற எல்லா பணிளிலும் தன்னிறைவு கிடைக்கும். மனது எப்போதுமே ஒருவித நிறைவு இருக்கும். எதையும் எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும்.

தாய்மொழியை மதிக்க வேண்டும் என்று சொல்வதால், பிறமொழிகளைக் கற்கக் கூடாது என்று பொருளல்ல. நீங்கள் நன்றாக கவனித்துப் பார்த்தால் தெரியும், தாய் மொழியில் எழுதவோ, படிக்கவோ தெரியாதவர்கள் பிற மொழிகள் பல கற்றிருந்தாலும் அது கல்வி என்ற அளவிலேயே இருக்கும். பல மொழிகளைக் கற்றதிற்கான சான்றிதழ்களை மட்டுமே வைத்திருப்பார்கள்.

அவர்களால் எந்த மொழியிலும் சரளமாக பேசவோ, எழுதவோ முடியாது. ஆக சொந்த மொழியிலும் ஆற்றல் இல்லாமல், பிற மொழிகளிலும் புலமை பெறாமல் அரைகுறை ஞானத்துடனே தான் அவர்களால் வாழ முடிகிறது. இது தான் நடைமுறையில் நாம் காணும் உண்மை.

ஆனால் தாய்மொழியை நேசிப்பவர்கள், அவர்கள் கற்றறிந்த எல்லா மொழிகளையும் நடைமுறையில் சரளமாக பயன்படுத்துவதையும் நம்மால் காண முடிகிறது.

காரணம் இது தான்: தாய்மொழியில் புலமை பெறும் போது, மற்ற மொழிகளைக் கற்கத் தேவையான புரிதல் கிடைக்கிறது. அந்தப் புரிதலே ஒப்பீடு செய்தும், கற்பனை செய்தும் கற்றுக் கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கிறது. அந்தந்த மொழிகளுக்கான இலக்கணங்களில் ஆழ்ந்த புலமை பெற முடிகிறது.

என் கொள்ளு பாட்டி சஞ்சீவியம்மாள் பற்றி சொல்லியாக வேண்டும் அதாவது என் அம்மாவின் பாட்டி. புகைப்படம் கூட இல்லாத அவரைப் பற்றி என் அம்மா சொல்லி தான் தெரியும்.
புதுச்சேரியில் வாழ்ந்த அவர் நான்கு மொழிகள் படிக்கவும், எழுதவும் தெரிந்த திறமைசாலி. ஆனாலும் தமிழ் புத்தகங்கள் நிறைய படிப்பார், படித்ததை சுவராசியமாக சொல்வார். படிப்பு மட்டுமே நம்மை பண்படுத்தும், உயர்த்தும், உன்னதம் தரும் என்று திரும்ப, திரும்ப சொல்வார்.

தாய்மொழி பற்றிருந்ததால் தான் என் கொள்ளுபாட்டிக்கு 4 மொழிகளை எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தது.

உதாரணத்துக்கு சிறுவயதில் இருந்தே எலுமிச்சைப் பழத்தின் புளிப்புச் சுவையை சுவைக்கவே செய்யாத நபரிடம், எலுமிச்சைப் பழ ரசம் நன்றாக இருக்கும், எலுமிச்சைப் பழ ஊறுகாய் சூப்பராக இருக்கும், எலுமிச்சைப் பழ சாதம் அருமையாக இருக்கும் என்று சொல்வதற்கு ஒப்பாகும், தாய் மொழியின் அருமை தெரியாத ஒருவர் பிற மொழிகளைக் கற்பது என்பது.

நமக்கு பாரதியை பாடல்கள் இயற்றும் கவிஞராக மட்டுமே தெரியும். ஆனால் அவருக்கு ஆங்கிலப் புலமையும் உண்டு தெரியுமா?

காந்தி ஒருமுறை திருவல்லிக்கேணி கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசினாராம். உடனே நம் பாரதி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திக்கு ஒரு கடிதம் எழுதினாராம். ‘உங்கள் தாய் மொழி குஜராத்தியிலோ அல்லது பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியான ஹிந்தியிலோ உரையாற்றி இருக்கலாமே? ஏன் ஆங்கிலத்தில் பேசினீர்கள்’

அதற்கு காந்தி, ‘இனிமேல் அவ்வாறே செய்கிறேன். சரி நீங்கள் ஏன் உங்கள் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதினீர்கள்?’ என்று பதில் கடிதம் அனுப்பினாராம்.

பாரதியின் பதில் என்ன தெரியுமா? ‘பிறர் மனம் நோக எழுதும் பொழுது தாய் மொழியை உபயோகப்படுத்த கூடாது என்பதே எங்களின் தமிழர் பண்பாடு’ என்று பதில் தந்தாராம் பாரதி.

தாய்மொழி குறித்த மற்றொரு செய்தியோடு இப்பதிவை முடிக்கிறேன்.

கம்ப்யூட்டர் மற்றும் இண்டர்நெட் தொழில்நுட்பம் நம் நாட்டில் எட்டிப் பார்க்காத 1992 களிலேயே தமிழையும், கம்ப்யூட்டரையும் இணைத்து சாஃப்ட்வேர்கள், புத்தகங்கள் போன்ற படைப்புகளை எங்கள் COMPCARE நிறுவனம் வாயிலாக வெளியிட ஆரம்பித்தோம். அன்று அது முதன் முயற்சியாக இருந்தது. இன்று அப்பணியில் வெற்றி பெற்றுள்ளோம் என்பதை இந்நன்னாளில் பதிவு செய்வதன் மூலம் என் தாய்மொழி தமிழ்மொழிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழோடு வாழ்வோம். பிற மொழிகளோடு பயணிப்போம். வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி பெறுவோம்.

வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக