பக்கங்கள்

புதன், 22 மார்ச், 2017

இந்திய ஆட்சிப்பணி அதிகாரி உ. சகாயம் பிறந்த நாள் மார்ச் 22 ,1964.



இந்திய ஆட்சிப்பணி அதிகாரி உ. சகாயம் பிறந்த நாள்  மார்ச் 22  ,1964.
உ. சகாயம் (பிறப்பு : 22 மார்ச் 1964)
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆவார். தாம் பணியாற்றிய மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளாலும் நேர்மையான அணுகுமுறைகளாலும் மாநிலம் முழுவதும் பரவலாக பேசப்பட்டவர். தனது சொத்துக் கணக்குகளை வெளியிட்ட முதல் தமிழக இ.ஆ.ப அதிகாரியாவார். அவை முறையே, மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் இந்திய ஆயுள் காப்பீடுக் கழக வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனத்தின் கடனுதவித் திட்டம் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு.
தமிழ் மக்களின் விருப்பத்துடன் முதல்வர் வேட்பாளராக 2016 தேர்தலில் போட்டியிடுவார் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன.
பிறப்பு, படிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகில் உள்ள பெருஞ்சுணை சிற்றூரைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த உபகாரம் பிள்ளை - சவேரி அம்மாள் தம்பதியினரின் ஐந்து மகன்களில் கடைசியாகப் பிறந்தவர். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு,
புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு,
சென்னையில் புகழ்பெற்ற லயோலா கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்பு (சமூகத் தொண்டு), சென்னை அப்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு என அடுத்தடுத்து தன் கல்வித் தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார்.
பணிக் கொள்கை
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்பது இவரது கொள்கையாகும். இந்த வாசகத்தை அவரது இருக்கையின் பின்புறம் காணலாம். அவரது 23 ஆண்டு பணிக்காலத்தில் 24 முறை பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பதவிகள்
தர்மபுரியில் பயிற்சி ஆட்சியர், நீலகிரி மாவட்டம், கூடலூரில்
கோட்ட வளர்ச்சி அதிகாரி
திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)
கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி
காஞ்சிபுரம் கோட்ட வளர்ச்சி அதிகாரி
திருச்சி உணவு பொருள் வழங்கல் துறையின் முதுநிலை மண்டல மேலாளர்
கோவை ஆயப்பிரிவு துணை ஆணையாளர்
சென்னை, மாவட்ட வருவாய் அதிகாரி
தொழில் வணிகத்துறை இணை இயக்குநர்
மாநிலத் தேர்தல் ஆணையச் செயலர்
நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர்
மதுரை மாவட்ட ஆட்சியர்
கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர்
இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி இயக்குநர்.
சயின்ஸ் சிட்டி எனப்படும் அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர்
குறிப்பிடத்தக்கச் செயல்கள்
கூடலூர், கோட்ட வளர்ச்சி அதிகாரியாக இருந்த போது அவரது அறையில் “If you have power, use it for the poor” - உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து என்கிற வாசகங்களை எழுதி வைத்திருந்தார்.
காஞ்சிபுரத்தில் டி.ஆர்.ஓ.வாக இருந்த போது பெப்சி குளிர்பானத்தில் அழுக்குப்படலம் இருந்ததாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து ஆதாரங்களைத் திரட்டி அந்த ஆலைக்கு பூட்டு பூட்டினார்.
நாமக்கல், மாவட்ட ஆட்சியராக இருந்த போது, இவரது சொத்துக்கள் விவரத்தை அரசின் இணையதளம் மூலம் வெளியிட்டார்.
நாமக்கல்லில் ஆட்சியராக இருந்த போதும், பிறகு மதுரையிலும்
தொடுவானம் என்ற இணைய வலைப்பூ வாயிலாக பொது மக்கள் தங்களுக்கான புகாரை நேரடியாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பும் வழிவகை செய்திருக்கிறார். கிராமங்களில் தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளித்து இந்தத் திட்டத்தை திறம்பட செயல்படுத்தி வந்திருக்கிறார்.
கோ-ஆப்டெக்ஸில் பொது விநியோகத்திற்கு வழங்கப்பட்ட இலவச வேட்டி சேலைகளின் முத்திரைகளை அழித்து அவற்றை மீண்டும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு விற்க முயன்ற ஜவுளி உற்பத்தி ஆலையின் ஊழலைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியராக.
மதுரை மாவட்டத்தில் 2011 சட்டமன்ற தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வழி செய்தார். இவரது அறையில் “லஞ்சம் தவிர்த்து. நெஞ்சம் நிமிர்த்து” என்கிற வாசகம் காணப்பட்டது.
கிரானைட் மற்றும் கனிம மணற் கொள்ளை பற்றி தமிழக அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்கச் செய்தார்.
ஏதிலியர் முகாமில் வசித்து வந்த இலங்கைத் தமிழர்களுக்காக தையல் பயிற்சி அளித்து தையல் வேலை வாய்ப்பு, மற்றும் கணினி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அதே போல ஊனமுற்றவர்களுக்கு ‘ஊன்று கோல் திட்டம்’, உழவர்களுக்காக ‘உழவன் உணவகம்’ திட்டம் ஆகியவற்றையும் சிறப்புற செயல்படுத்தினார்.
மாவட்டத்திற்குட்பட்ட திருமங்கலம் மற்றும்
மேலூர் பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் அதன் உரிமத்தை இரத்து செய்தார்.
பரிசுகள் / விருதுகள்.
2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான மூன்றாவது பரிசினைப் பெற்றார் ,சிறந்த ஆட்சியர் பரிசு
எதிர்ப்புகள்
சகாயம் நாமக்கல்லில் ஆட்சியராக இருந்த போது அப்போதைய தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் தி.மு.க.வின் வி.பி.துரைசாமி ஒரு இதழுக்கு சகாயத்தைப் பற்றி எதிர்மறையாகப் பேட்டி அளித்தார். இதனை எதிர்த்து சகாயம் துரைசாமி மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
மே 24, 2012 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து விடுவித்து கோஆப்டக்ஸ் நிர்வாக இயக்குனராக பணி மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சகாயம் கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக இருந்த போது கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் கோகுல இந்திராவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக மாற்றப்பட்டார். கோ - ஆப் டெக்ஸ் தலைமை அலுவலகத்தில், தனக்கு அறை ஒதுக்கி தரும்படி, அமைச்சர் கேட்டார். ஆனால் சகாயம், அறை ஒதுக்கினால், அங்கு கட்சிக்காரர்கள் திரள்வர். ஊழியர்கள் பணி பாதிக்கப்படும். எனவே, அமைச்சர் வரும்போது, என் அறையில் அமரலாம்' என, பதில் அனுப்பினார். இதனால் மாற்றப்பட்டார்
விசாரணைக் குழுத் தலைவர்
கருங்கல் (கிரானைட்) மற்றும் கனிம மணற் கொள்ளை பற்றி விசாரிக்க இவர் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் 11 செப்டம்பர் 2014 அன்று உத்தரவிட்டது.
இவ்வுத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதைத் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியாகி 4 நாட்களுக்குள் குழு அமைக்க வேண்டும் என்று உத்தவிட்டது .
திருச்சி சிறையில் நடத்திய உரையாடலில் இவரை கூலிப்படை வைத்து கொலை செய்யப்போவதாக கிடைத்த தகவலால் 2013 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 22 ஆம் திகதி தமிழ் நாடு தலைமைச் செயளரை சந்தித்து இதுபற்றி முறையிட்டதாக தகவல்கள் வெளியாகின.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக