பக்கங்கள்

திங்கள், 10 ஏப்ரல், 2017

சித்திரை சிறப்புகள்



சித்திரை சிறப்புகள்

தமிழ் மாதங்களில் முதலாமவள் என்ற சிறப்பை பெற்றவள் சித்திரைத் தாய். சித்திரை திங்கள் பிறப்பை ஒட்டியே நாட்டின் மற்ற மாநிலங்களின் புத்தாண்டு கொண்டாட்டங்களும் அமைகின்றன.
வட இந்தியாவில் பைசாகி என்றும், கேரளாவில் விஷு என்றும், ஆந்திராவில் யுகாதி என்றும் புத்தாண்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு உள்ள ஆரவார வரவேற்பு சித்திரை பிறப்புக்கு இல்லை என்று ஒரு சாரார் கூறினாலும், அவறை பொய்ப்பிக்கும் வகையில் தமிழர்கள் இப்பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
சித்திரையில் செய்வது என்ன?
சித்திரை திங்கள் புலருவதற்கு முதல் இரவு வீட்டில் நிலைக் கண்ணாடி முன்பாக தட்டில் பலவகையான பழங்கள், பணம்- காசுகள், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்து விடுவர்.
காலையில் துயில் நீங்கி எழும்போது அந்தத் தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் கண் விழிப்பர். இது காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டு முழுவதும் செல்வம் சேரும் என்று நம்பப்படுகிறது.
சித்திரை முதல் நாளன்று வீடுகளை சாணத்தால் மெழுகி, செம்மண் மற்றும் மாக்கோலமிட்டு வாயிற்படிகளுக்கு மஞ்சள்- குங்குமம் பூசி மாவிலைத் தோரணம் கட்டி சித்திரைத் தாயை வரவேற்க்க மக்கல் தயாராகின்றனர்.
பூஜை அறைகளை அலங்கரித்து விளக்கேற்றி, முக்கனிகளை இறைவனுக்கு படைத்து வழிபடுவதும், புது வருடப் பஞ்சாங்கம் வாங்கி பெரியோர் வாயால் பஞ்சாங்கப் பலனை கேட்பதும், தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்காக உள்ளது.
இனிப்பும் கசப்பும் கலந்த விருந்து!
சித்திரை பிறப்பன்று வீடுகளில் மதிய விருந்து தடபுடலாக இருக்கும். அன்றைய தின சமையலில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி, வடை பருப்பு, பாயசம் போன்றவை கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.
இன்பமும் துன்பமும் கலந்து வருவதே வாழ்க்கை என்ற தத்துவத்தை உணர்த்தவே சமையலில் வேப்பம் பூவும், பாயசமும் சரி விகிதமாக பரிமாறப்படுவதாக ஐதீகம். இவ்வழக்கம் கர்நாடக்கத்திலும் உள்ளது.

சித்திரை சிறப்புகள

வரலாற்றில் சித்திரை மாதத்திற்கு என பல்வேறு சிறப்புகள் உள்ளன. அவற்றில் சில:
* சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் என்று கூறப்படுகிறது. சித்திரை மாதத்தை வசந்த ராகம் என்றும் கூறுவர்.
* சித்திரை முதல் நாளை பிரம்மதேவன் படைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
* சித்திரை மாத திருதியை திதியில் மகா விஷ்ணு மீன (மச்சம்) அவதாரம் எடுத்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன.
* சித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது.
* சித்திரையில்தான் அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை செய்வது போன்ற இறை வழிபாடுகள் நடக்கின்றன. ராம நவமியும், ஹனுமன் ஜெயந்தியும் சித்திரை திங்களில் தான் கொண்டாடப்படுகிறது.
* திருமாலின் அவதாரம் பரசுராமன் இந்நாளில் தான் அவதரித்தாகக் கூறப்படுகிறது.
* சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அக்சய திதியை என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் தங்கம் வாங்கினால் இல்லத்தில் செல்வம் குவியும் என்ற ஐதீகமும் உண்டு.
இத்தகையை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள சித்திரை தாயை நாமும் உவகையோடு வரவேற்று, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக