வெள்ளையனே வெளியேறு தினம் ஆகஸ்ட் 8.
இன்று 08.08.2017
இந்திய வரலாற்றில் ஒரு மறக்கக்கூடாத, மறக்கப்பட்ட தினம்.
அப்படி என்ன நாள் இன்று?
"வெள்ளையனே வெளியேறு தினம்"
இதே நாள் 1942 ஆம் ஆண்டு - என்ன நடந்தது?
வெள்ளையனே வெளியேறு போராடட்டத்தை அறிவிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, 1942 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் நாள் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில்தான் முழு விடுதலை வேண்டும் என்கின்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் அடிப்படையில் ஒத்துழையாமை இயக்கத்தை மகாத்மா காந்தி அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் நாள் பம்பாயில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெள்ளையனே வெளியேறு (Quit India)
தீர்மானத்தை நிறைவேற்றியது. அன்று மாலை பம்பாயில் உள்ள (இன்றைய மும்பை) கோவாலிய டேங்க் என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மகாத்மா காந்தி, வன்முறை தவிர்த்து ஒத்துழையாமை செய்ததைப் போல, வெள்ளையனே வெளியேறு போராட்டமும் சாத்வீக வழியில் நடைபெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஆயினும், காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
காந்தி புனாவில் உள்ள ஆகா கான் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டார்.
ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் அகமது நகர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.
ஆகஸ்ட் 8-ஆம் தேதி காலை பம்பாய் மாநாட்டிற்கு 3 லட்சம் பேர் திரண்டனர்.
ஆனால், அவர்களை தலைமையேற்று வழி நடத்தக்கூடிய ஒரு தலைவரும் இல்லை.
அந்த நிலையில்தான் இளம் வீராங்கனை அருணா ஆசப் அலி அன்று நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமையேற்று தேசக் கொடியை ஏற்றிவைத்தார்.
பம்பாயில் அமைதியாக நடந்த போராட்டத்தின் மீது தடியடி நடத்தப்பட்டது. பிறகு கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் அன்று தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரிட்டிஷ் காவல்துறை தடியடி நடத்தியது.
சில இடங்களில் துப்பாக்கிச் சூடுகளும் நடத்தப்பட்டு பலர் உயிரிழந்தனர். இதனால் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமானது.
துவக்கத்தில் நகர மையங்களில் மட்டுமே நடந்து வந்த வெள்ளையனே வெளியேறு போராட்டம் பிறகு கிராமங்களுக்கும் பரவியது.
ஆங்காங்கு உள்ளூர் தலைமையின் கீழ் ஒன்று சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை நடத்தினர்.
போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்துவது, துப்பாக்கியால் சுடுவது எங்கும் தொடர்ந்தது. இதனால் கோபமுற்ற போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
அரசு அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மின்சாரம், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இளைஞர்களும், மாணவர்களும் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
பல இடங்களில் வெள்ளைய அதிகாரிகளும், அவர்கள் கீழ் பணிபுரிந்த இந்தியப் பணியாளர்களும் தாக்கப்பட்டனர்.
போராட்டத்தை ஒடுக்க முழுமையான காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்துவிட்டது பிரிட்டிஷ் காலனி ஆட்சி. போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு, அவர்கள் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் என்று நிராயுதபானியாக போராடிய மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது.
ஒரு லட்சம் பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டனர். பலருக்கு கசையடி தண்டனை விதிக்கப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையிலேயே நிறைவேற்றப்பட்டது. ரொக்க தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆயினும், போராட்டம் பலமிழக்கவில்லை.
ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருவதைக் கண்டு அரண்டு போன பிரிட்டிஷ் அரசு, காந்தி, நேரு உள்ளிட்டத் தலைவர்கள் நாடு கடத்தி தென் ஆப்ரிக்கா அல்லது ஏமனில் சிறை வைக்கவும் திட்டமிட்டனராம். ஆனால், அதனால் போராட்டம் மேலும் வலுப்பெற்றுவிடுமோ என்ற அச்சத்தினால் அத்திட்டத்தை கைவிட்டதாக வரலாறு கூறுகிறது.
மகாத்மா காந்தி சிறையில் இருந்தபோது அவரது மனைவி கஸ்தூரிபாய் காந்தி மரணமடைந்தார். அவரது செயலரும் காலமானார். காந்தியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையிலும் 21 நாட்கள் உண்ணாவிரதத்தை காந்தி துவக்கினார். காந்தியின் உடல் நிலை மோசமாகி வருவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி அவரை விடுதலை செய்தது. ஆயினும், உண்ணாவிரதத்தை காந்தி கைவிடவில்லை. சிறை வைக்கப்பட்ட தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். வெற்றியும் பெற்றார்.
அந்த வெற்றியை பிரிட்டிஷ் ஆட்சிக்கு இறுதித் தோல்வியாக முடிந்தது.
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் மூலம் வெள்ளையர் ஆட்சிக்கு இறுதி முடிவு கட்டப்பட்டது.
அடுத்த 5 ஆண்டுகளில் அதே ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா விடுதலை பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக