பக்கங்கள்

சனி, 16 செப்டம்பர், 2017

கருநாடக இசைப் பாடகி எம். எஸ். சுப்புலட்சுமி பிறந்த நாள் செப்டம்பர் 16 , 1916 -



கருநாடக இசைப் பாடகி எம். எஸ். சுப்புலட்சுமி பிறந்த நாள்  செப்டம்பர் 16 , 1916 - 

எம். எஸ். சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி ( செப்டம்பர் 16 , 1916 - டிசம்பர் 11 , 2004 ) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு
இந்தியாவின் மிக உயர்ந்த விருதான
பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழ் , கன்னடம் ,
மலையாளம் , தெலுங்கு , வங்காள மொழி ,
இந்தி , சமஸ்கிருதம் , குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் அவையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.
பிறப்பும், குடும்பப் பின்னணியும்
எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் 1916 புரட்டாதி மாதம் 16 ஆம் திகதி அன்று தேவதாசி குலத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர் மதுரை சண்முகவடிவு அம்மாளுக்குப் பிறந்தார்.  அவரது தந்தையார் சுப்பிரமணிய அய்யர் என்று பின்னாட்களில் பேட்டிகளில் சுப்புலட்சுமி தெரிவித்து இருக்கிறார். இவர் தம் சகோதரர் சக்திவேல், சகோதரி வடிவாம்பாள் ஆகியோருடன் இசை தொடர்பான சூழலில் வளர்ந்தார். இவரது தாயார் சண்முகவடிவு போன்றே வடிவாம்பாள் வீணை மீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். சக்திவேலுக்கு மிருதங்கத்தில் ஈடுபாடு அதிகம். ஆயினும் அவர்கள் இருவரும் இளவயதிலேயே காலமாகி விட்டனர். சுப்புலட்சுமியின் பாட்டியார் அக்கம்மாள் ஒரு வயலின் கலைஞர்.
இசையுலகில் காலடி
சுப்புலட்சுமிக்கு அவரது தாயாரே முதலில் குருவானார். இன்னிசை வீணையுடன் சேர்ந்து பாடி வந்த இவர் இசையில் வெகுவிரைவில் புகழ் பெற்றார். சுப்புலட்சுமிக்கு எட்டு வயதாக இருக்கும் போது சென்னை ஆளுநர், சண்முகவடிவின் வீணை இசையை ஒளிப்பதிவு செய்யச் சென்றார். அப்போது மகளையும் பாடச் சொன்னார். சிறுமி சிறிதும் தயங்காமல் "மரகத வடிவம்" என்ற செஞ்சுருட்டி இராகப் பாடலை உச்சஸ்தாயியில் பாடினார். இதைக் கேட்ட ஆளுநர் ஆச்சரியமடைந்து அப்பாடலையும் ஒளிப்பதிவு செய்து கொண்டார்.
ஒரு சிறுமி தன் தாயார் மேடையில் வீணை இசைக்கச்சேரி செய்து கொண்டிருந்த போது வெளியில் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென மகளின் ஞாபகம் வரவே அவளைத் தேடி அழைத்து வருமாறு தாய் பணித்தாள். வியர்வை முத்துமுத்தாக அரும்ப சிறுமி மேடைக்கு ஓடி வந்தாள். தாய் வியர்வையைத் துடைத்து விட்டு "பாடு" என கண்டிப்பான குரலில் கூற, சிறுமி அற்புதமாகப் பாடினாள். மக்கள் கரகோஷம் செய்து "இவள் தாயை மிஞ்சி விடுவாள்" என்றார்கள். சிறுமிக்கு கரகோஷத்தைப் புரிந்து கொள்ளும் வயதல்ல ஆகையால் திரும்பவும் சென்று விளையாட வேண்டும் என்ற என்ணம் தான் இருந்தது. அந்தச் சிறுமியே பின்னாளில் எம். எஸ். சுப்புலட்சுமி ஆவார்.


இசை ஆர்வம்
இசைப்பின்னணியைக் கொண்ட குடும்பமாதலால் சிறுவயதிலிருந்தே சுப்புலட்சுமிக்கு இசையில் நாட்டம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. இவரது தாயாருடன் பல கச்சேரிகளிலும் இவர் பங்கேற்றதுண்டு. செம்மங்குடி சிறீனிவாச ஐயர் , முசிரி சுப்பிரமணிய ஐயர் , செம்பை வைத்தியநாத பாகவதர் , ராஜ மாணிக்கம் பிள்ளை , டி. என். ராஜரத்தினம் பிள்ளை , பாலக்காடு டி. எஸ். மணி ஐயர் ,
ஜி. என். பாலசுப்பிரமணியம் போன்ற இசையுலக முன்னோடிகள் இடம் பெறும் இசை நிகழ்ச்சிகளை சிறுவயதிலேயே நேரில் சென்று ரசித்ததும் உண்டு. எம். எஸ். சுப்புலட்சுமி சிறு வயதில் தன் தாயாருடன் கச்சேரிகளுக்குச் சென்ற போது பெரிய கலைஞர்களே சுப்புலட்சுமியின் குரல் வளத்தை வாழ்த்தியதும் உண்டு. இவரது முறையான கல்வி ஐந்தாம் வகுப்பு வரையே அமைந்தது. இந்துஸ்தானி இசையை இவர் பண்டித நாராயணராவ் வியாசி யிடமிருந்து கற்றார். அப்துல் கரீம்கான் மற்றும் பாதே குலாம்கானின் இசையையும் இவர் இரவு நேரங்களில் ரசிப்பதுண்டு.
1926ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு எல்.பி இசைத்தட்டில் "மரகத வடிவும் செங்கதிர் வேலும்" எனும் பாடலை சண்முகவடிவின் வீணையும், எம். எஸ். சுப்புலட்சுமியின் பாடலும் இணைந்து வெளிவந்தது. எம். எஸ். சுப்புலட்சுமியின் முதலாவது இசைத்தட்டு இதுவாகும். மிருதங்க ஜாம்பவான் எனப் புகழப்பட்ட
புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை தொடக்க காலத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் வளர்ச்சிக்கு மிக்க உதவியாக இருந்தார். அவரது மணிவிழாவில் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி நடைபெற்றது. 1935 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தக் கச்சேரி, எம். எஸ். சுப்புலட்சுமியின் இசைத் திறனை வெளியுலகம் அறியச் செய்தது. அதே ஆண்டு மைசூர் சமஸ்தானத்தில் அப்போதைய மைசூர் மகாராஜாவின் அரசவையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் மிருதங்கத்துடன் எம். எஸ். சுப்புலட்சுமி கச்சேரி செய்தார். அது முதற்கொண்டு தென்னிந்தியாவின் எல்லா ஊர்களிலும் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரிகள் நடைபெற்றன.
திரைத்துறை பங்களிப்புகள்
எம். எஸ். சுப்புலட்சுமியின் குரலைக் கேட்ட திரைப்படத் தயாரிப்பாளர் மதுரை. நாட்டாமை மல்லி. என். எம். ஆர். வெங்கடகிருஷ்ணன் மற்றும் இயக்குனர் கே. சுப்பிரமணியம், அவரை "சேவாசதனம்" படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிண்டியில் உள்ள ஒரு படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்றது. அப்போது சுப்புலட்சுமிக்கு துணையாக வந்தவர் சதாசிவம். 1936- 1937 களில் வெளிவந்த படத்தில் "ஆதரவற்றவர்க்கெல்லாம்" என்ற
ஜோன்புரி இராகப்பாடலும்,
"இஹபரமெனுமிரு" என்ற
சிம்மேந்திரமத்திமம் இராகப் பாடலும் பெரிதும் வரவேற்பைப் பெற்றன.
சகுந்தலை
காளிதாசனாரின் சகுந்தலை படத்தில் சுப்புலட்சுமி கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார். "மிகக் குதூகலிப்பதும் ஏனோ" , "எங்கும் நிறை நாதப்பிரம்மம்" ,
"பிரேமையில் யாவும் மறந்தேனே" ஆகிய பாடல்கள் மிகவும் புகழ் பெற்றன. இப்படத்தில் துஷ்யந்தனாக ஜி. என். பாலசுப்பிரமணியம் நடித்தார். எம். எஸ். சுப்புலட்சுமி இப்படத்தில் கோகிலகான இசைவாணி என விளம்பரம் செய்யப்பட்டார். சகுந்தலை திரைப்படத்தைத் தயாரித்தவர்
கல்கி சதாசிவம் ஆவார். இவர் எம். எஸ். சுப்புலட்சுமியின் இசையில் ஈடுபாடு கொண்டதனால் 1940ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
சாவித்திரி
1941ம் ஆண்டு சாவித்திரி என்ற படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியை நாரதர் வேடத்தில் நடிக்க வேண்டினார்கள். ஆனால் ஆண்வேடத்தில் நடிக்க சுப்புலட்சுமி மறுத்து விட்டார். அப்போது எழுத்தாளர்
கல்கியும் ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து வெளியேறி இருந்தார். கல்கியும் சதாசிவமும் சேர்ந்து சொந்தப்பத்திரிகை ஆரம்பிக்க விருப்பம் கொண்டனர். ஆனால் கைவசம் பணம் இருக்கவில்லை. ஆதலால் சுப்புலட்சுமி நாரதர் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு அதற்கான சம்பளத்தை வாங்கிக் கொடுத்தால் அந்தப் பணத்தைக் கொண்டு புதுப்பத்திரிகை ஆரம்பிக்கலாம் என சதாசிவம் எம். எஸ். சுப்புலட்சுமியிடம் சொன்னார். அதற்காகவே சுப்புலட்சுமி சாவித்திரி படத்தில் நாரதர் வேடத்தில் நடித்தார். அதில் கொடுக்கப்பட்ட ஊதியத்தொகையில் கல்கி வார இதழ் தொடங்கப்பட்டது. சாவித்திரி படத்தில் "மனமே கணமும் மறவாதே ஜெகதீசன் மலர்ப் பதமே" ,
"மங்களமும்பெறுவாய்" போன்ற சில பாடல்கள் புகழ் பெற்றவை.
மீரா
பக்த மீரா எனும் திரைப்படம் 1945 இல் வெளியிடப்பட்டது. "காற்றினிலே வரும் கீதம்" , "பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த" ,
"கிரிதர கோபாலா" , "எனது உள்ளமே" போன்ற பாடல்கள் பிரபலமானவை. பக்த மீரா இந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு, வட நாட்டவருக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அரசியல் பிரமுகர்கள் இந்தியாவின் ஆளுநர் மவுண்ட்பேட்டன் பிரபு தம்பதியினர், பிரதமர் ஜவஹர்லால் நேரு , கவியரசு சரோஜினி நாயுடு ஆகியோரின் நட்பும் அறிமுகமும் சதாசிவம் தம்பதியினருக்கு ஏற்பட்டது. இந்தி மீராவைப் பார்த்த பிரதமர் நேரு
"இசையின் இராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர் தானே" எனப் பாராட்டினார்.
மீரா திரைப்படத்தில் சுப்புலட்சுமி
ஆண்டு படம் மொழி பாத்திரம்
1938 சேவாசதனம் தமிழ் சுமதி
1940 சகுந்தலை தமிழ் சகுந்தலை
1941 சாவித்திரி தமிழ் நாரதர்
1945 மீரா தமிழ் மீராபாய்
1947 மீராபாய் இந்தி மீராபாய்
பெற்ற சிறப்புகள்
இந்தியில் வெளியான மீரா பஜன்கள் இந்தி ரசிகர்களிடையே சுப்புலட்சுமிக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்தது. அதே போல கேதாரி நாத்திலிருந்து
கன்னியாகுமரி வரையான பக்தர்களையும் இவரது ஆன்மீகக் குரல் பரவசப்படுத்தியது. 1944 இல் நான்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தி இரண்டு கோடி ரூபா வரை நிதி திரட்டினார். மனைவியின் குரலை பொதுநலத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற சதாசிவத்தின் எண்ணமே இதற்குப் பின்புலமாக அமைந்தது. இந்நிதி மருத்துவம், அறிவியல், ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமயத்தொண்டு ஆகியவற்றுக்காக செலவிடப்பட்டது.
"இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்" என எம். எஸ். சுப்புலட்சுமியைப் பற்றி சரோஜினி நாயுடு ஒருமுறை கூறினார்.
பெற்ற விருதுகள்
பத்ம பூசண் , 1954
சங்கீத நாடக அகாதமி விருது , 1956
சங்கீத கலாநிதி , 1968
இசைப்பேரறிஞர் விருது , 1970
மக்சேசே பரிசு, 1974
பத்ம விபூசண் , 1975
சங்கீத கலாசிகாமணி விருது , 1975.
காளிதாஸ் சம்மன் விருது , (1988 -1989)
நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது, 1990
பாரத ரத்னா - 1998.


எம்.எஸ். வாழ்க்கை வரலாறு
1916ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மதுரையில் பிறந்தவர் எம்.எஸ். அவரது முழுப் பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. இவரதுபெற்றோர் சுப்ரமணிய அய்யர், சண்முக வடிவு அம்மாள். சுப்ரமணிய அய்யர் வழக்கறிஞர், சண்முகவடிவு அம்மாள் சிறந்த வீணை இசைக்கலைஞர்.
தாயாரிடம் இருந்த இசை ஞானம் எம்.எஸ்ஸுக்கும், அவரது சகோதரர் சக்திவேல், சகோதரி வடிவாம்பாள் ஆகியோருக்கும் கிடைத்தது.எம்.எஸ். வாய்ப்பாட்டில் கவனம் செலுத்தினார், சக்திவேல் மிருதங்கக் கலைஞர் ஆனார், வடிவாம்பாள் தாயார் வழியில் வீணைக் கலைஞர்ஆனார்.
தாயிடமிருந்து இசையை கற்றுக் கொண்ட அவர் 10 வயதில் எச்.எம்.வி. நிறுவனத்திற்காக பாடி சாதனை படைத்தார். தாயைத் தவிர மதுரைசீனிவாச அய்யர், மாயவரம் வி.வி.கிருஷ்ணஅய்யர் மற்றும் புகழ் பெற்ற கர்நாடக இசைப் பாடகர் செம்மங்குடி சீனிவாசய்யர்ஆகியோரும் எம்.எஸ்ஸுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்த குருக்கள்.
13 வயதாக இருக்கும்போது தாயார் செல்லும் கச்சேரிகளுக்கெல்லாம் எம்.எஸ்ஸும் உடன் செல்ல ஆரம்பித்தார். 4 வருடங்கள் கழித்துஅதாவது 17வது வயதில் சென்னை மியூசிக் அகாடமியில் அவர் தனது வாய்ப்பாட்டு அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். அன்றே பல நூறுரசிகர்களையும் பெற்றார்.
அதன் பின்னர் எம்.எஸ்.உயரே போகத் தொடங்கினார். அவரது குரல் வசீகரத்தால் ஈர்க்கப்பட்ட திரையுலக பிரம்மா என்று அழைக்கப்படும்இயக்குநர் கே.சுப்ரமணியம் (நடன கலைஞர் பத்மா சுப்ரமணியத்தின் தந்தை) எம்.எஸ்ஸை திரையுலகுக்கு அழைத்து வந்து படங்களில்நடிக்க வைத்தார். அவர் நடித்த முதல் படம் சேவாசதன். அதன் பின்னர் 4 படங்களில் எம்.எஸ். நடித்தார். அதில் அதிகம் பிரபலமடைந்தபடம் மீரா.
மீராவில் எம்.எஸ். பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை இன்றும் கூட கேட்டவுடன் மனதைக் கரைக்கும் வகையில் அமைந்தவை.எம்.எஸ்.ஸுக்கும் அவரது கணவர் சதாசிவத்திற்கும் 1940ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின், கணவர் சதாசிவத்தின்வழிகாட்டுதலில் எம்.எஸ். மிகப் பெரிய உயரத்தை எட்டினார்.
சதாசிவம் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். அவர் தனது மனைவி எம்.எஸ். உடன் காந்திஜியை சந்தித்தார். அதன்பின்பு கஸ்தூரிபாய் நினைவுஅறக்கட்டளைக்காக எம்.எஸ். 5 இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார்.
எம்.எஸ்ஸின் திறமைகளை செம்மையாக செதுக்கி அவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றார் சதாசிவம். நான் பெற்றவெற்றிகளுக்கெல்லாம், புகழுக்கெல்லாம், பரிசுகளுக்கெல்லாம் எனது கணவர்தான் முழுக் காரணம் என்று எம்.எஸ்ஸே பல முறைபெருமையுடன் கூறியுள்ளார்.
1997ல் சதாசிவம் மரணமடைந்தார். அன்று முதல் எம்.எஸ். கச்சேரிகள் செய்வதை விட்டு விட்டார். வீட்டிலேயே முடங்கி விட்டார்.கணவரின் நினைவுகளுடன் அவர் வாழ்ந்து வந்தார்.
கர்நாடக இசையின் ராணியாக கோலோச்சி வந்த எம்.எஸ். பெறாத பட்டங்களோ, பரிசுகளோ கிடையாது எனக் கூறும் வகையில்அத்தனை உயர் பரிசுகளையும், பட்டங்களையும் பெற்று விட்டார் எம்.எஸ்.1974ல் மக்சேசே விருதைப் பெற்றார் எம்.எஸ்.
1954ல் பத்மபூஷன் விருதைப் பெற்றார். மியூசிக் அகாடமி வழங்கும் சங்கீத கலாநிதி பட்டத்தை 1968ல் பெற்றார். இந்த விருதைப் பெற்றமுதல் பெண்மணி எம்.எஸ்.தான்.
1966ல் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்து, தனது வசீகர குரலால் சபையில் கூடியிருந்தவர்களைக் கட்டிப்போட்டார்.
அதோடு மறைந்த காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி எழுதிய பாடல்களையும், மறைந்த முதல்வர் ராஜாஜி உலக அமைதிக்காகஎழுதிய பாடல்களையும் எம்.எஸ்.தான் பாடினார்.
இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பாடி கர்நாடக இசையின் பெருமையை உலகம் உணரச் செய்தார்.
இவற்றுக்கெல்லாம் உச்சமாக 1998ல் இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருதைப் பெற்றார் எம்.எஸ்.
இத்தனை பெருமைகளை உடையவராக இருந்தும் எம்.எஸ். சுப்புலட்சுமி மிகுந்த அடக்கமுடையவராக இருந்தார். இசை என்பது ஒரு கடல்.நான் ஒரு மாணவி என்று கூறினார்.
எம்.எஸ்ஸின் பாட்டுத் திறமையை காலங்கள் கடந்தும் நினைவூட்டும் வகையில் மீரா பஜன்கள், வெங்கடேச சுப்ரபாதம், குறையொன்றும்இல்லை, காற்றினிலே வரும் கீதம் ஆகிய பாடல்கள் வெளிப்படுத்தும். மகாத்மா காந்தியின் விருப்பப் பாடலான வைஷ்வணவ ஜனதோபாடலையும் எம்.எஸ். குரல் இன்னும் தூக்கிக் கொடுத்து இன்றும் பிரபலமான பாடலாக விளங்கி வருகிறது.
88 வயதில் இசைக் குயில் எம்.எஸ். மறைந்தாலும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அவரது இசைக் குரல் மறையாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.


காற்றினிலே வரும் கீதம்... - எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு!
இசையைச் சுவாசித்தவர். இசையில் தியானித்தவர். இசையொடு இரண்டற இணைந்தவர். தன் இசையைக் கேட்கும் ஒவ்வொருவரையும் புனிதப் பயணம் அழைத்துச்சென்று ஆலயங்களைத் தரிசிக்கவைத்தவர். காஞ்சி காமாட்சியையும், மதுரை மீனாட்சியையும் கண்முன் கொண்டுவரும் திறன், எம்.எஸ். அவர்களின் பாடல்களுக்கு உள்ளது. இத்தகைய பெருமைமிக்க இசை அரசி எம்.எஸ்.அம்மாவிற்கு, இன்றோடு(செப்.16) 100 வயது ஆகிறது. இந்த ஆண்டு, எம்.எஸ்.ஸின் நூற்றாண்டு ஆகும். இந்த இசை அரசியை பற்றி சில செய்திகள் இங்கே……..
17 வயதில் இருந்தே:
மதுரையில் சங்கீத உலகின் அதிசயங்களில் ஒருவராகப் பிறந்தார். செம்மங்குடி சீனிவாச ஐயரிடம் கர்நாடக இசையையும், பண்டிதர் நாராயண ராவ் வியாஸிடம் இந்துஸ்தானியையும் கற்றுக்கொண்ட இவர், தனது 17வது வயதிலேயே இசைத் துறையில் இனிய குரலைப் பதிய வைத்தார்.

தரணி ஆண்ட எம்.எஸ்.:
கல்யாணக் கச்சேரி என்றால் ஒரு மாதிரி, கோயில் கச்சேரி என்றால் ஒரு மாதிரி, சபா கச்சேரி என்றால் வேறு மாதிரி என்ற பாகுபடுகளை தன் வாழ்நாளில் என்றுமே வைத்துக் கொண்டதில்லை எம்.எஸ்.அவர்கள். ‘பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்’ என்று சொல்வார்கள். அவ்வகையில், பரணியில் பிறந்த இந்த இசையரசி தரணியை ஆளத்தான் செய்தார். சங்கீத உலகின் முடிசூடா மகாராணியாக திகழ்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கும், திரைப்படத்துக்குமான உறவு இன்றைய இளைய சமுதாயம் அதிகம் அறிந்திராத ஒன்று. திரைப்படங்களில் ஆயிரம் பேர் பாடியிருக்கலாம். ஆனால் திரையில் ஒலித்த தெய்வீகக் குரல் எம்.எஸ்.சுப்புலட்சுமியினுடையது. சங்கீத சாம்ராஜ்யத்துக்கு திரையுலகம் விட்டுக் கொடுத்த பொக்கிஷம் எம்.எஸ்.சுப்புலட்சுமி. திரையுலகில் அவரது பங்கு மிக குறைவானதாக இருக்கலாம். ஆனால் நிறைவானது. இன்று வரை எம்.எஸ்.சின் உயரம் யாராலும் தொட முடியாத உயரமாகவே உள்ளது.
உறுதுணையாக இருந்த கணவர்:
ஒருமுறை மும்பைக்கு கச்சேரி செய்ய சென்றபோது ரெயிலில் அறிமுகமானார் இளைஞர் சதாசிவம். எம்.எஸ்.ஸின் தீவிர ரசிகர். அவரின் திறமைகளை மேலும் வெளிக்கொண்டுவர வேண்டும், அவ்வாறு செய்து அவரது புகழை உச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும் என விரும்பினார். பின்னாளில் இசை அரசியை திருமணம் செய்துகொண்டார். சங்கீதத்திலும், சமூகத்திலும் தன் மனைவி சிறப்பு எய்த வேண்டும் என்ற ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர். தனது இசை பயணத்தை மேலும் செப்பனிட தன் கணவரும் வரப்போகிறார் என்பதை எண்ணிப் பூரித்துவிட்டார் எம்.எஸ். அதன் பின் அவர் பாடாத பாட்டும் இல்லை, செல்லாத நாடும் இல்லை, வாங்காத விருதும் இல்லை எனுமளவு புகழ்க்கொடி நாட்டினார். தான் பாடிச் சம்பாதித்த பணத்தின் பெரும் பகுதியை சமூக காரியங்களுக்கு அள்ளிக் கொடுத்தார். தெய்வீக பணிகளுக்கு வாரிக் கொடுத்தார்.

மீரா ஏற்படுத்திய அழகிய தாக்கம்:
திரு.கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள், கிருஷ்ணனை நினைத்து நினைத்து உருகும் பக்த மீராவின் கதையை எல்லிஸ்.ஆர்.டங்கன் இயக்கத்தில் உருவாக்கினார். இசை அரசியை திரையுலகம் வியந்து போற்றியது. எஸ்.வி.வெங்கட்ராமனின் இசையில் எம்.எஸ். பாடிய பாடல்களோடு மீராவாக எம்.எஸ்.அம்மாவை பார்க்கும் போது இது படமா அல்லது மீராவே உயிர்த்தெழுந்து வந்தாரா என நினைக்கும் அளவுக்கு இருக்கும். எம்.எஸ். அவர்களின் வாழ்வில், இந்த பக்த மீரா ஒரு மைல்கல்லாக இருந்துள்ளாள். சரோஜினி நாயுடு அவர்கள் படத்தை பார்த்து விட்டு, ‘இந்தியாவின் இசைக்குயில்’ என்ற பட்டத்தை வழங்கினார். அன்றைய பிரதமர் நேரு அவர்கள் கூறும் போது, “இந்த இசை அரசிக்கு முன்னால் நான் சாதாரண பிரதம மந்திரியே” என்றார்.
இசை சமூகத்துக்கு ரொம்பவே அவசியம்:
இன்றைய இளைஞர் சமுதாயம் நல்ல சங்கீதத்தால் மேன்மை அடைய வேண்டும் என்று எண்ணிய அம்மா அவர்கள், “தாய்மார்கள் அடுத்த தலைமுறையினருக்கு நல்ல ரசனை உணர்வை ஊட்டினால், நாட்டில் சங்கீதம் பெருகும், அதாவது பக்தி பெருகும், நாட்டு மக்களுக்கும் நல்வாழ்வு கிடைக்கும்” என்றார். இசை பெருகுவதன் மூலம் மக்களின் நலமும் நாட்டின் நலமும் பெருகும் என்பதை உளமார நம்பியவர். சுமார் 40வருடங்களுக்கு முன்னர் எம்.எஸ். அவர்கள் கூறிய கருத்துக்கள் யாவும் இன்றளவும் ஏற்புடையதாகவே இருக்கின்றது.
‘இது நூற்றாண்டல்ல, இசை ஆண்டு’ :
இசையும், இறை பணியும், வள்ளல் குணமுமாய், இந்திய பெண்களின் அடையாளமாய் வாழ்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி 2004ம் ஆண்டு டிசம்பர் 12ந் தேதி மறைந்தார். உலகையே தன் இசையால் வென்ற இவரின் இன்று தொடங்கும் அவரது நூற்றாண்டை இசை ஆண்டாக தமிழகம் கொண்டாடட்டும்.



இசைக்காகவே பிறந்த இசையரசி!

இ சைக்காகவே பிறந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி, செப்டம்பர் 16 ,1916-ல் பிறந்தவர். கர்நாடக இசையுலகில் அரசியாக விளங்கியவர். எத்தனையோ புது புது இசைக் கலைஞர்கள் உருவாகிக் கொண்டு இருந்தாலும் பல தனி தன்மைகளைக் கொண்டவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. அதனால்தான் இன்றுவரை அவர் மறைந்தாலும் அவரது புகழ் பேசப்படுகிறது. இவரது தாயார் சண்முகவடிவு ஒரு சிறந்த வீணைக் கலைஞர். எம்.எஸ் சுப்புலட்சுமிக்கு அவரது தாயார் சண்முகவடிவே முதல் குரு. அதன்பின் சேத்தூர் சுந்தரேச பட்டர் என்பவரிடம் பல வருடங்கள் பயின்றார்.
மதுரை சேதுபதி உயர் நிலைப்பள்ளி அரங்கில், அவரது தாயார் வீணைக் கச்சேரி செய்து கொண்டிருந்தார். திடீர் என வாசிப்பதை நிறுத்திவிட்டு, தனது மகள் 10 வயது சிறுமி சுப்புலட்சுமியை அழைத்து, " நீ பாடு ..!"என்றார். எந்தவொரு கூச்சமோ, தயக்கமோ இன்றி 'ஹிந்துஸ்தானி மெட்டில்' அமைந்த பாடலை பாடி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றார்.
1926-ல் எல்.பி இசைத்தட்டில், 'மரகத வடிவம் செங்கதிர்வேலும்..." என்னும் பாடலை தனது தாயார் சண்முகவடிவுடன் பாடினார். இப்பாடலே அவருக்கு முதலில் ரிக்கார்டிங் செய்த பாடலாகும். அதை 'தி டிவின் ரிகார்டிங்' வெளியிட்டது.

இவரது திருமணத்திற்குப் பிறகு செம்மங்குடி சீனிவாச அய்யர் குருவாக திகழ்ந்தார். பசுபதி, நேத நூரி கிருஷ்ண்மூர்த்தி ஆகியோரிடமும் இசைக் கற்றுக் கொண்டார்.
1938-ல் வெளியான 'சேவா சதனம்' என்னும் திரைப்படத்தில் பாடிக்கொண்டே நடித்தார். அதன்பின் 'சகுந்தலை' என்னும் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். அவருக்கு கதாநாயகனாக அன்றைய பிரபல பாடகர் ஜி.என்.பாலசுப்ரமணியம் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1941-ல் வெளிவந்த சாவித்திரி படத்தில் சுப்புலட்சுமி நாரதராக நடித்தது பேசப்பட்ட கதாப்பாத்திரம்.1945-ல் மீரா வெளியானது.அதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய அனைத்துப் பாடல்களுமே பெரிய வெற்றிப் பெற்றன. 'மீரா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தை மொழியாக்கம் செய்து இந்தியில் வெளியிட்டனர். இதில் மிக முக்கிய அம்சம் எம்.ஜி.ஆருடன் அவர் நடித்து வெளிவந்த படம் இதுவாகும். மீராதான் எம்.எஸ்ஸின் கடைசி படம்.
சேவா சதனம் படப்பிடிப்பு நேரத்தில் சதாசிவம்,எம்.எஸ் சுப்புலட்சுமி சந்திப்பு அதிகமானது. நாளடைவில் அவர்களது நட்பு திருமணத்தில் முடிந்தது.1940ல் சென்னையிலுள்ள கோயில் திரு நீர்மலையில் நடைப்பெற்றது.
1966-ம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி ஐ.நா சபையில் இவரது இசை நிகழ்ச்சி அரங்கேறியது.
ஐ. நா. சபை வரை இவரது இசை அரங்கேற்றம் அடைந்தற்கு அவரது கடின உழைப்பே காரணம் ஆகும்.
மகாத்மா காந்தியின் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டு பலமுறை பஜனைப் பாடல்களை பாடியுள்ளார். மகாத்மா காந்திக்குப் பிடித்த பாடலான, 'வைஷ்ணவ ஜனதே' 'ரகுபதி ராஜாராம்' பாடல்கள் எம்.எஸ் பாடியவையே. இன்றும் காந்தி அஞ்சலிக்கு முன்னால் அகில இந்திய வானொலியில் இப்பாடல்கள் ஒலிக்கும்.
எம்.எஸ். பாடிய சுப்ரபாதத்தை திருப்பதி தேவஸ்தானம் அங்கீகரிக்காமல் இருந்தது. அதன்பின் எம்.எஸ்.பாடிய சுப்ரபாதத்தை ஒலிபரப்ப சம்மதித்தது.

1940-ல் இசை வாணி,1954-ல் பதம் பூஷண்,1956-ல் மத்தியப்பிரதேச அரசின் 'காளிதாஸ் சம்மன்' விருது,1967-ல் ரவீந்திர பாரதி கலைரக் கழகத்தின் டாக்டர் பட்டம்,1968-ல்சங்கீத கலா சாகா மற்றும் சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி,1970-ல் தமிழ் இசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞர் விருது,1974-ல் மகாசாசே விருது,1975-ல் திருமலை திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான், 1980-ல் தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தனிப்பெரும் கலைஞர்,1981-ல் சர்வதேச இசை கவுன்சில் ஆராய்ச்சிப் பேராசிரியர் மற்றும் உறுப்பினர்,1988-ல் ஹபிஸ் அலிகான் நினைவு விருது,1990-ல் இந்திரகாந்தி தேசிய ஒருமைப்பாடு விருது,1996-ல் கலாரத்னா,1998-ல் பாரத ரத்னா. இவ்வனைத்தும் இசையின் இமையத்தால் வாங்க பெற்றவை.
மேலும் பல்வேறு அமைப்புகளால் பல விருது, பல பட்டங்கள் பெற்றுள்ளார். 1997-ல் சென்னை மியூசிக் அகாடமியில் எம்.எஸ் பாடினார். அவரது கடைசி கச்சேரி அதுவே..
இவர் பாடிய தமிழ் பாடல்களில் 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா...' குறையொன்றுமில்லை...'ஆகியவை மிகவும் ரசிக்கப்பட்ட பாடல்கள்.
இனிமையான வசீகர குரலுக்கு சொந்தமானவர். இசை உலகத்தை 77 வருடத்திற்கு மேல் ஆட்சி செய்தவர். 10 வயதில் தொடங்கிய இசைப் பயணம் அவரது 88 வயதில் முடிந்தது.
எத்தனை யுகங்கள் கடந்தாலும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடல்கள் அனைத்தும் மனதில் நீங்காமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்...!



எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு: திரையில் ஒலித்த தெய்வீக குரல்....

இசைக்குயில், பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு இன்று (செப்டம்பர் 16) தொடங்குகிறது. சாஸ்திரிய சங்கீத உலகின் முடிசூடா மகாராணியாக திகழ்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கும், திரைப்படத்துக்குமான உறவு இன்றைய இளைய சமூதாயம் அதிகம் அறிந்திராத ஒன்று. திரைப்படங்களில் ஆயிரம் பேர் பாடியிருக்கலாம். ஆனால் திரையில் ஒலித்த முதலும், கடைசியுமான தெய்வீக குரல் எம்.எஸ்.சுப்புலட்சுமியினுடையது. சாஸ்திரிய சங்கீத உலகிற்கு திரையுலகம் விட்டுக் கொடுத்த பொக்கிஷம் அவர். திரையுலகில் அவரது பங்கு மிக குறைவானதாக இருக்கலாம். ஆனால் நிறைவானது. அவர் இடத்தை இன்று வரை இன்னொருவரால் நிரப்ப முடியாத ஒன்றாகவே இருக்கிறது. அவரது வாழ்க்கையின் வழியே அவரது திரைச் சேவையையும் பார்க்கலாம்...
8 வயதில் பாடத் தொடங்கினார், இசையும், தமிழும் இணைந்து வளர்ந்த மதுரையில் வாழ்ந்தவர் சங்கீத மேதை சுவாமிநாதன், இவரது மனைவி அக்கம்மாள் பிடில் வாத்திய கலைஞர். இந்த இசை தம்பதிகளின் மகள்தான் வீணை இசை கலைஞர் சண்முகவடிவு. இவருக்கும் வழக்கறிஞர் சுப்பிரமணிய அய்யருக்கும் மகளாக 1916ம் ஆண்டு செப்படம்பர் 16ந் தேதி பிறந்தவர்தான் சுப்புலட்சுமி. தாயை போலவே வீணை வாசிப்பதில் ஆர்வம் கொண்ட சுப்புலட்சுமி கே.எஸ்.நாராயணசாமி என்பவரிடம் முறைப்படி வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டார். ஆறரை வயதில் 8 கட்டை சுருதியில் பாட ஆரம்பித்தார்.
10 வயதில் முதல் இசைத் தட்டு9 வயதில் இசை மேடை ஏறினார். தாய் வீணை வீசிக்க மகள் அதற்கேற்ப வாய்பாட்டு பாட ஆரம்பிதார். வீணை வடிவு எம்.எச்.வி இசை நிறுவனத்துக்கு வீணை இசைத்து வந்தார். தன் வீணை இசையோடு தன் மகளின் வாய்ப்பாட்டையும் வெளியிடச் சொன்னார். எம்.எஸ்.வியின் 10வது வயதில் அவரது முதல் இசைத் தட்டு வெளிவந்தது. 10 வயது சிறுமியின் பாடல் என்றே விளம்பரம் செய்தார்கள்.
தனது 15வது வயதில் மதுரையில் தனி கச்சேரி செய்தார். அன்று தொடங்கி தமிழ்நாடு முழுவதையும் தன் இனிய இசையால் மதிமயங்க வைத்தார். மக்கள் அவரை கோகிலகான என்று பட்டம் சூட்டி கொண்டாடினார்கள். புகழ்பெற்ற பாடகியாக புகழ்பெற்றபோதும் அப்போதிருந்த முன்னணி குருக்களிடம் பயிற்சி பெற்று தன்னை இன்னும் மெருகேற்றிக் கொண்டார்.
சினிமாவில் அறிமுகம்எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசையைப் போல அவரது அழகும் புகழ்பெற்றது. பல சினிமா கம்பெனிகள் அவரை நடிக்க வைக்க முயற்சித்தன. ஆனால் அவர் மறுத்து விட்டார். மகள் சினிமாவில் நடிக்க கூடாது என்பதற்காக மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட விரும்பினார் சண்முகவடிவு. ஆனால் அது நிறைவேறவில்லை. ஒருமுறை மும்பைக்கு கச்சேரி செய்ய சென்றபோது ரெயிலில் அறிமுகமானார் இளைஞர் சதாசிவம். எம்.எஸ்.வியின் தீவிர ரசிகர். அவரின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து புகழின் உச்சிக்கு கொண்டு செல்ல விரும்பினார். பின்னாளில் அவரே எம்.எஸ்.விக்கு கணவன் ஆனார் கல்கி சதாசிவம்.
சேவாதனம் அம்புஜம்மாள் என்ற எழுத்தளார் சேவாதனம் என்ற நாவலை எழுதி வந்தார். மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த நாவலை திரைப்படமாக எடுக்க விரும்பினார் அப்போதைய முன்னணி இயக்குனர் கே.சுப்பிரமணியம். சதாசிவத்தின் மூலம் பேசி எம்.எஸ்.சுப்புலட்சுமியை சேவாதனம் படத்தில் நடிக்க வைத்தார். ஒரு முதியருக்கு மனைவியான இளம் பெண்ணின் கதை இது. 1938ம் ஆண்டு படமும், பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. எப்.சி நடேச அய்யர் ஜோடியாக நடித்திருந்தார்.,
சகுந்தலை அதற்கு அடுத்த ஆண்டு சகுந்தலை படத்தில் நடித்தார். இதனை எல்லீஸ் டங்கன் இயக்கினார். குளோஸ்அப் காட்சிகள் இந்தப் படத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது, அதில் நடித்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. 1940ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படமும் வெற்றி பெற்றது. ஜி.என்.பி ஜோடியாகவும் நடித்தார்.
மீராஎம்.எஸ்.சுப்புலட்சுமி நடிப்பில எல்லீஸ் டங்கன் இயக்கிய மீரா படம்தான் அவரை இந்திய அளவில் புகழ்பெற வைத்தது. தமிழ், மற்றும் இந்தி மொழியில் இந்தப் படம் தயாரானது எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. புகழ்பெற்ற காற்றினிலே வரும் கீதம்... பாடல் இடம் பெற்ற படம் இது.
சாவித்திரிஇந்த 3 படங்களில் நடித்த பிறகு சதாவசிவத்தை திருமணம் செய்து கொண்டார் எம்.எஸ்.சுப்புலட்சுமி. நடிப்பா? இசையா என்று கேள்வி அவர் முன் எழுந்தது. கணவன், மனைவி இருவரும் இணைந்து இனி நடிப்பு வேண்டாம். தமிழக மக்களுக்கு இசையை வழங்குவோம் என்று முடிவுக்கு வந்தார்கள்.
இப்படி முடிவு செய்த பிறகு ஒரு படத்தில் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அது சாவித்ரி என்ற படம். சதாசிவம் கல்கி பத்திரிக்கையை தொடங்க நிதி தேவைப்பட்டது. அதற்காக அவர் சாவித்ரியில் நடித்தார். பிரபல மராட்டிய நடிகை சாந்தா ஆப்தேதான் சாவித்ரியாக நடித்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமி அதில் நாரதராக நடித்தார். அதில் நாரதர், பாடல்களை பாடும் கேரக்டர் என்பதால்தான் நடிக்கவே ஒப்புக் கொண்டார். இந்த படத்தின் சம்பளத்தை கொண்டு தொடங்கப்பட்டதுதான் கல்கி பத்திரிக்கை.
இசைப் பயணம்அதன் பிறகு திரையிலிருந்து விலகி இசையில் பயணம் செய்தார். அவர் பாடாத . செல்லாத நாடில்லை. வாங்காத விருதில்லை. தான் பாடிச் சம்பாதித்த பணத்தின் பெரும் பகுதியை சமூக காரியங்களுக்கு அள்ளிக் கொடுத்தார். தெய்வீக பணிகளுக்கு வாரிக் கொடுத்தார். இசையும், இறை பணியும், வள்ளல் குணமுமாய், இந்திய பெண்களின் அடையாளமாய் வாழ்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி 2004ம் ஆண்டு டிசம்பர் 12ந் தேதி மறைந்தார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி ஒருவேளை திரைப்பட நடிகையாக தன் வாழ்க்கையை தொடர்ந்திருந்தால் அதில் உச்சத்தை தொட்டிருக்கலாம். அவர் இசைத் துறையில் பயணித்ததால் இந்த உலகையே தன் இசையால் வென்றார். இன்று தொடங்கும் அவரது நூற்றாண்டை இசை ஆண்டாக தமிழகம் கொண்டாடட்டும்.



தரணி ஆண்ட இசை தாரகை!
கர்நாடக இசையுலகில் பேரரசியாக விளங்கிய எம்.எஸ். என்று எல்லோராலும் அன்புடன் போற்றப்பட்ட இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமியின் 'காற்றினிலே வரும் கீதம்' இன்றும் கேட்பவர்களை ஒருகணம் தன்னை மறக்க வைக்கும் .. .எத்துனை காலங்கள் உருண்டோடினாலும் கேட்பவர்களின் மனதோடும், உணர்வோடும் கலந்து விட்ட கீதம் அது.
எம்.எஸ் என்று எல்லோராலும் போற்றப்படும் எம்.எஸ். சுப்புலட்சுமி கர்நாடக சங்கீதத்தில் தூணாக விளங்கியவர். செம்பை, செம்மங்குடி வரிசையில் எம்.எஸ். சுப்புலட்சுமி என்கிற இசைத் தூண் ஒன்று இன்று சரிந்தது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எம்.எஸ். சுப்புலட்சுமி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திடீரென்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணி ஆளவார்கள் என்று சொல்வார்கள். பரணியில் பிறந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை உலகம் என்கிற தரணியை ஆண்டுவிட்டார்.
நான்மாட கூடலிலே தோன்றி எட்டுத்திக்கும் தமிழோசை பரவச் செய்த இசை இமயம் டிசம்பர் மாதம் 12ம் தேதி அதிகாலையில் இவ்வுலகை விட்டு நீங்கிவிட்டது.
தேனினும் இனிய காந்தக் குரலால் கோடானுக்கோடி ரசிகப்பெருமக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்ற நாதஜோதி அணைந்துவிட்டது. இசைவானிலும், திரைவானிலும் சுடர்விட்டு பிரகாசித்த அந்த ஒளியை இனி ஒலிவடிவத்தில்தான் கேட்கமுடியும்.
எத்தனையோ இசைக்கலைஞர்கள் இம்மண்ணில் வாழ்ந்துள்ளனர். இப்போதும் பல மாமேதைகள் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
ஆனால் எம்.எஸ். சுப்புலட்சுமியிடம் சில தனி தன்மைகள் உண்டு. தான் இசை வாயிலாக ஈட்டிய பெருஞ்செல்வத்தை முழுமையாக நற்பணிகளுக்காக சமூகசேவைக்காக தானமாக கொடுத்த ஒரே இசைக்கலைஞர் எம்எஸ்.சுப்புலட்சுமி என்றால் அது மிகையல்ல. ராகம், தானம், பல்லவி எல்லோரும் பாடுவார்கள். அனால் ராகம் பாடி ஈட்டிய பெருஞ்செல்வத்தை தானமாக கொடுத்தவர் இவர் ஒருவர்தான் இருக்க முடியும்.
எம்.எஸ். மறைவு செய்தி கேட்டவுடன் கர்நாடக இசைஉலகமே அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தியது. முன்னதாக குடியரசு தலைவர் அப்துல்கலாம், தமிழக ஆளுநர் சுர்ஜித் பர்னாலா, முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வாசன் என்று பல அரசியல் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைத்து சபாக்களும் தங்களது கச்சேரிகளை நேற்று ரத்து செய்தன. ஜெயா தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாகிக் கொண்டிருக்கும் மார்கழி மகாஉற்சவ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, இளைஞர்கள் சிலர் எம்.எஸ் அவர்கள் பாடிய பஜனை பாடல்களை பாடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
1916ஆம் ஆண்டு செப்டம்பர் 16ம் நாள் சண்முக வடிவு அம்மாள்- ராமசாமிப்பிள்ளை தம்பதியினருக்கு மகளாக தோன்றியவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. தாயார் சண்முகவடிவு ஒரு சிறந்த வீணைக் கலைஞர். எம்.எஸ். சுப்புலட்சுமியின் முதல் குரு அவருடைய தாயார் சண்முகவடிவுதான். ஆரம்ப காலத்தில் அம்மாவின் வீணை கச்சேரிகளில் பாடி வந்தார் எம்எஸ். 1926ல் வெளியிடப்பட்ட ஒரு எல்.பி. இசைத்தட்டில் மரகத வடிவம் செங்கதிர் வேலும் என்னும் பாடலை சண்முக வடிவின் வீணையும், எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாட்டும் இணைந்து வெளிவந்தது. தி ட்வின் ரிகார்டிங் கம்பெனி இதை வெளியிட்டது. இதுதான் இவரின் முதல் இசைத்தட்டு.
எம்எஸ்ஸிற்கு ஓர் மூத்த சகோதரரும், ஒரு தங்கையும் இருந்தனர். இவரின் சகோதரர் பெயர் மதுரை சக்திவேல்பிள்ளை. இவர் ஒரு சிறந்த மிருதங்க கலைஞர். தங்கை பெயர் வடிவாம்பாள். அண்ணா சக்திவேல்பிள்ளை தங்கை எம்எஸ்ஸின் கச்சேரிகளுக்கு பலமுறை மிருதங்கம் வாசித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி அரங்கில் சண்முகவடிவு அம்மாள் வீணை கச்சேரி செய்து கொண்டிருந்தார். வாசிப்பை திடீர் என நிறுத்தி விட்டு அருகில் இருந்த தனது மகள் 10 வயது சிறுமி எம்.எஸ். சுப்புலட்சுமியை அழைத்தார் அம்மா சண்முகவடிவு. (அம்மாவால் 'குஞ்சம்மாள்' என்று தான் எம்எஸ் அழைக்கப்படுவார்.) அருகில் மகளை அழைத்த அம்மா ''குஞ்சம்மாள் நீ பாடு'' என்று சொல்ல, உடனே சிறுமி குஞ்சம்மாள் மேடைக்கு விரைந்து வந்து ஹிந்துஸ்தானி மெட்டில் அமைந்திருந்த ''ஆனந்த ஜா'' என்னும் மராட்டி ராகப் பாடலை சிறிதும் கூச்சமோ பயமோ இல்லாமல் பாடி பார்வையாளர்கள் அத்துனை பேரின் பாராட்டையும் பெற்றார். இதுதான் இவரின் முதல் இசைக்கச்சேரி அரங்கேற்றம். அன்று எம்.எஸ்ஸின் அரங்கேற்ற இசைக்கச்சேரி நடைப்பெற்ற போது அப்பள்ளியில் அப்போது ஆசிரியராக பணிப்புரிந்தவர்களுள் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் இளைய சகோதரர் ஸ்ரீனிவாசனும் ஒருவர் என்பது சிறப்பம்சம்.
அம்மா சண்முகவடிவுதான் எம்.எஸ். சுப்புலட்சுமியின் முதல் இசை ஆசிரியை. அம்மாவைத் தொடர்ந்து சேத்தூர் சுந்தரேச பட்டர் என்பவரிடம் பல வருடங்கள் இசை பயின்றார். திருமணத்திற்குப் பிறகு செம்மங்குடி சீனிவாச அய்யர், எம்.எஸ்.ஸின் பிரதான குருவாக திகழ்ந்தார். கடையநல்லூர் வெங்கட்ராமன் அவரது கடைசி குரு. அன்னமாச்சரியா கீர்த்தனங்களை டி. பசுபதி, நேதநூரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் கற்றுக் கொண்டார். தோடி ராக ஆலாபனை மட்டும் டி.என். ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசையைக் கேட்டுக் கற்றுக் கொண்டார். அதுபோல் முத்துசாமி தீட்சதரின் கீர்த்தனைகளை உச்சநீதி மன்ற நீதிபதி டி.எல். வெங்கட்ராம ஐயரிடம் கற்றுக் கொண்டார். பாசநாசம் சிவனும், மைசூர் வாசுதேவாச்சாரும் தாங்கள் இயற்றிய பாடல்களைத் தாங்களே எம்எஸ் .ஸுக்கு கற்றுக் கொடுத்தனர்.
இயக்குநர் கே. சுப்பிரமணியம் (புகழ் பெற்ற நாட்டிய தாரகை பத்மா சுப்ரமணியத்தின் தந்தை) அவர்களால் 'சேவா சதனம்' என்னும் திரைப்படத்தில் முதன்முதலாக பாடிக்கொண்டே நடித்தார் எம்எஸ். 1938ல் இப்படம் வெளியானது. பிறகு இரண்டு வருடங்களுக்குப் பிறகு 'சகுந்தலை' என்னும் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். அன்றைய காலத்தில் சகுந்தலை மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது. இப்படத்தை எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கினார்.இப்படத்தை ராயல் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனமும், சந்திரப்பிரபா சினிடோன் நிறுவனமும் இணைந்து தயாரித்தனர்.
படத்தில் எம்எஸ்க்கு இணையாக - கதாநாயகனாக அன்றைய பிரபல பாடகர் ஜி.என். பாலசுப்ரமணியம் நடித்தார். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், சிறுகளத்தூர் சாமா, டி.எஸ். துரைராஜ், சாரங்கபாணி என்று பலர் நடிப்பில் வெளியானது சகுந்தலை.
1941ல் வெளியான 'சாவித்திரி' என்கிற படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி நாரதராக நடித்தது அன்றைய காலக்கட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. பின்பு 1945ஆம் ஆண்டில் தீபாவளியன்று வெளியானது 'மீரா'. மீரா படத்தையும் சகுந்தலை படத்தை தயாரித்த நிறுவனமே தயாரித்தது. இப்படத்தில் எம்எஸ் பாடிய அத்துனை பாடல்களும் மிகப் பெரிய வெற்றியை தேடித் தந்தது. அன்று காற்றினிலே வந்த கீதம்... கேட்பவர்கள் நெஞ்சங்களை உருக வைத்தது நிஜம். இப்படத்திற்கான வசனத்தை எழுதியவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி. படத்திற்கான பாடல்களை எழுதியவர் பாபநாசம் சிவன்.
மீரா படத்தின் அத்துனை பாடல்களும் பிரபமாகியது. அதுமட்டுமல்லாமல் மீரா இந்தியில் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரும், எம்.எஸ். சுப்புலட்சுமியும் சேர்ந்து நடித்த ஒரே படம்இது என்கிற பெருமையை பெற்றது மீரா. அதுமட்டுமல்லாமல் மீராதான் எம்எஸ்ஸின் கடைசிப்படமும்கூட.
எம்.எஸ் நடித்த 'சேவா சதனம்' படத்திற்கான படப்பிடிப்பு கிண்டியில் உள்ள ஸ்டுடியோவில் நடைபெற்றுக்கொண்டிருந்தப் போது படப்பிடிப்பு நேரத்தில் அங்கு அடிக்கடி வருவார் டி.எஸ். சதாசிவம். எம்.எஸ். சதாசிவம் சந்திப்பு அங்கு பல சமயங்களில் நடைப்பெற்றது. இந்த சந்திப்பு இவர்களின் திருமணத்தில் முடிந்தது. 1940ல் எம்எஸ்- சதாசிவம் திருமணம் சென்னையிலுள்ள திருநீர்மலை கோயிலில் மிக எளிய முறையில் நடைப்பெற்றது.
சென்னை தமிழ் இசைச் சங்கம், எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு 'இசைப் பேரறிஞர்' பட்டம் சூட்டி கெளரவித்தது. இவர் பாடி பிரபலமடைந்த தமிழ் பாடல்களுள் 'வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்', 'குறையொன்றுமில்லை. நீ இறங்காய் எனில் பகலேது' 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா', 'வாழிய செந்தமிழ்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
1966ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி ஐ.நா. சபையில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உலக அமைதியை வலியுறுத்தி மூதறிஞர் ராஜாஜி எழுதிய 'மே தி வார்ட் பர்கிவ் அவர் சின்ஸ்' என்னும் ஆங்கிலப் பாடலை எம்.எஸ்.சுப்புலட்சுமி ஐ.நா. சபையில் பாடினார். இப்பாடலுக்கு ஹாண்டல் மேனுபல் இசையமைத்துள்ளார்.
காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், எம்.எஸ்.ஸின் ஐ.நா. நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக இயற்றிய சமஸ்கிருத ஸ்லோகமான 'மைத்ரீம் பஜத'' என்ற உலக நன்மைக்கான பிரார்த்தனை ஸ்லோகத்தையும் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடினார். அந்நிகழ்ச்சிக்கு வி.வி.சுப்ரமணியம் வயலின், டி.கே. மூர்த்தி மிருதங்கம், டி.எம். வினாயகராம் கடம் வாசித்தனர்.
மகாத்மா காந்தி முதல் அப்துல் கலாம் வரை அத்துனை தேசத் தலைவர்களும் எம்.எஸ். அவர்களின் ரசிகர்கள்.!
மகாத்மா காந்தியின் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டு பலமுறை பஜனைப் பாடல்களை எம்.எஸ். சுப்புலட்சுமி பாடியுள்ளார். இன்றைக்கும் அகில இந்திய வானொலியில் காந்தி அஞ்சலிக்கு முன்னால் ஒலிக்கும் 'வைஷ்ணவ ஜனதே' மற்றும் 'ரகுபதி ராகவ ராஜாராம்' போன்ற மகாத்மா காந்திக்குப் பிடித்த பாடல்கள் எம்.எஸ் அவர்களால் பாடப்பட்டவையே.
வேங்கடேச சுப்ரபாதம் திருப்பதி திருமலையில் தினமும் கோவில் நடை திறக்கும் போது பாடப்படுகிறது. இறைவனை துயில் எழுப்பும் இந்த தெய்வீகப் பாடலை ப்ரதிவாதி பயங்கரம் அனங்கராச்சாரியார் என்னும் வைணவப் பெரியவரின் குரலில் தான் திருப்பதி கோயிலில் ஒலிபரப்பி வந்தனர்.
எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய வேங்கடேச சுப்ரபாதம், பஜகோவிந்தம் என்னும் ஆதிசங்கரரின் ஸ்லோகம், ரங்கபுர விஹாரா என்னும் முத்துசாமி தீட்சதரின் கீர்த்தனை ஆகியவற்றை எச்.எம்.வி. நிறுவனம் இசைத்தட்டாக வெளியிட்டப் போது அது உலக அளவில் பெரும் வெற்றியைத் தேடித் தந்தது.
திருப்பதி தேவஸ்தானம் முதலில் எம்.எஸ்ஸின் சுப்ரபாதத்தை அங்கீகரிக்காமல் இருந்தது. பிறகு 1975ல் திருப்பதி தேவஸ்தானம் எம்.எஸ். பாடிய சுப்ரபாதத்தை ஒலிபரப்ப சம்மதித்தது என்பது முக்கியமான தகவல்.
விருதுகளும் பட்டங்களும்
1940 இசை வாணி
1954 பத்ம பூஷன்
1956
காளிதாஸ் சம்மன்
(மத்தியப்பிரதேச அரசு சார்பாக ஜனாதிபதி வழங்கும் விருது)
1967 ரவீந்திர பாரதி கலைரக் கழகத்தின் டாக்டர் பட்டம்.
1968 சங்கீத கலா சாகா (விசாகப்பட்டினத்தில் வழங்கப்பட்டது.)
1968 சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி
1970 தமிழ் இசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞர் விருது
1974 மகாசாசே விருது
1975 திருமலை திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான்
1975 பத்ம விபூஷண்
1980 தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தனிப்பெரும் கலஞர்
1981 சர்வதேச இசை கவுன்சில் ஆராய்ச்சிப் பேராசிரியர் மற்றும் உறுப்பினர்
1988 ஹபிஸ் அலிகான் நினைவு விருது
1990 இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது
1996 கலாரத்னா
1998
பாரத ரத்னா
(இந்தியாவின் பாரத ரத்னா விருது பெற்ற முதல் பாடகி இவரே)
இதுதவிர இவருக்கு 200க்கும் மேற்பட்ட விருதுகளும், பட்டங்களும் பல்வேறு அமைப்புகளால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1997ம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை மியூசிக் அகாதெமியில் எம்எஸ் பாடினார். அதுதான் அவர் கடைசியாக பாடிய கச்சேரி!
எம்.எஸ் சுப்புலட்சுமியை நேரில் பார்க்க முடியாது என்ற வருத்தம் இனி இருந்தாலும் அவரது குரலும் அந்த இனிய இசையும் இந்த பார் உள்ளளவும், கடல்நீர் உள்ளளவும் என்றும் நிலைத்து நிற்கும் அமரத்துவம் பெற்றவை என்பதில் சிறிதும் ஐயமில்லை! உருவ வடிவில் உள்ள எம்.எஸ். இப்போது நாத வடிவில் மாறிவிட்டார்.
செப்பு மொழி பதினெட்டுடையில்
எனில் சிந்தனை ஒன்றுடையாள்
என்று அந்த மகாகவி பாரதி பாரத மாதாவிற்கு பாடினானே அந்த வரிகள் எம். எஸ்க்கும் பொருந்தும் அல்லவா!
எம்.எஸ். சுப்புலட்சுமியின் மறைவு குறித்து கலைஞர்கள் சிலரின் கருத்துக்கள்..
இசைமேதை டி.கே. பட்டம்மாள்
''ஒரே துறையில் இருந்தாலும் எங்களுக்கிடையே எப்போதும் போட்டியோ பொறாமையோ கிடையாது. சகுந்தலா, மீரா, ஆகிய இரண்டு படங்களில் அவர் நடித்திருக்கிறார். அவரது இழப்பு சங்கீத உலகுக்கு பேரிழப்பு என்றால், தனிப்பட்ட முறையில் நான் எனது பிரியமான தோழியை இழந்துவிட்டேன்.. பட்டு என்று அழைக்கும் தோழியை இழந்துவிட்டேன்..''
வி.வி. சுப்பிரமணியம் (வயலின் கலைஞர்)
பதினோரு ஆண்டுகள் அவரது குழுவில் இடம்பெறும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவரிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டும் அல்லது பின்பற்ற வேண்டும் என்று நினைத்தால் அது அவரது தயான குணத்தைத்தான்.
ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்
''நோபல் பரிசு வழங்கவேண்டும.. எம்எஸ்க்கு கிடைக்காத விருது நோபல் பரிசு விருதாகும். இவ்விருதை இப்போது எம்எஸ்க்கு வழங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். எம்எஸ்க்கு நோபல் பரிசு விருது கிடைத்தால் அந்த விருதுக்கே பெருமை. சமூகபணியாற்றிய தன்னலமற்ற எம்எஸ்க்கு போஸ்ட் மர்சாக நோபல் பரிசு வழங்க வேண்டும். அதுவே அவருக்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலியாகும்.



எம்.எஸ்.சுப்புலட்சுமி படம் போட்ட புதிய நூறு ரூபாய் நோட்டு...

பழம்பெரும் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி படம் போட்ட100 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நோட்டை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
1916ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மதுரையில் பிறந்தவர் எம்.எஸ் சுப்புலட்சுமி. இவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அவரை கவுரவுக்கும் விதத்தில் அவரது படம் பொறித்த ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுள்ளது.
கர்நாடக இசைத்துறையில்
எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய பக்தி பாடல்கள் காலத்தால் சாகா வரம் பெற்றவை. ‘குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’ என்ற பாடல் ஒலிக்காத இல்லங்களே இல்லை. அந்தளவுக்கு பக்தி இசையோடு கலந்தவர் சுப்புலட்சுமி.
இதே போல ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடல் பெரும் புகழை அவருக்கு சம்பாதித்து கொடுத்தது.
எம்.எஸ். சுப்புலக்ஷ்மி சினிமாவில் நடித்தும் உள்ளார். அவர் நடித்த ‘மீரா’ படத்தை எல்லீஸ் டங்கன் இயக்கி இருந்தார். கல்கி சதாசிவத்தை மணந்து கொண்ட இவர் தேசிய விடுதலைக்காகவும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். ஐ.நா. சபையில் இசைக் கச்சேரி நிகழ்த்திய ஒரே இந்தியர் இவர்.
இவரது நூற்றாண்டை ஒட்டிதான் மத்திய அரசு அவரது உருவம் பதித்த நோட்டுக்களை வெளியிட்டதன் மூலம் கர்நாடக இசைக்கும் தமிழ்நாட்டின் பெருமைக்கும் உரிய அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது என இசைத்துறையினர் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக