இந்தியவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் அக்டோபர் 2 , 1904
லால் பகதூர் சாஸ்திரி ( அக்டோபர் 2 , 1904 சனவரி 11 , 1966) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் முறையாகத் தெரிவு செய்யப்படும் வரை
குல்சாரிலால் நந்தா 14 நாட்கள் இடைக்காலப் பிரதமராக இருந்தார். இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, சோவியத் ஒன்றியத்திலுள்ள
தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது காலமானார்.
வரலாறு
லால் பகதூர் 1904ம் ஆண்டு தற்போதய உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சராய் என்ற ஊரில் பிறந்தார். பிறந்த போது அவருக்கு வைத்த பெயர் லால் பகதூர் சிறிவஸ்தவா. இவரின் தந்தை சரதா பிரசாத் பள்ளி ஆசிரியர். பின்பு அலகாபாத்திலுள்ள வருவாய்த் துறையில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார் [1] . மூன்று மாத குழந்தையாக இருந்த போது கங்கை கரையில் தாயாரின் கையில் இருந்து நழுவி ஓர் இடையரின் கூடையில் விழுந்து விட்டார். இடையருக்குக் குழந்தை கிடையாது, எனவே இது தனக்குக் கடவுளின் பரிசு எனக் கருதி லால்பகதூரைத் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டார். குழந்தையைக் காணாத லால்பகதூரின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். காவலர்கள் லால்பகதூரைக் கண்டு பிடித்து அவர் தம் பெற்றோரிடம் சேர்ப்பித்தனர் [2] ..
லால்பகதூர் ஒன்றரை வயது குழந்தையாக இருந்த பொழுது இவரின் தந்தை இறந்து விட்டார். எனவே தாயார் ராம்துல்லாரி தேவி இவரையும் இவரின் இரண்டு சகோதரிகளையும் அழைத்துக்கொண்டு தன் தந்தை வீட்டிற்குச் சென்று தங்கிவிட்டார் [3] . 10 வயது வரை தன் பாட்டனார் கசாரி லால் வீட்டிலேயே லால் பகதூர் வளர்ந்தார். அங்கு உயர் நிலைப்பள்ளி இல்லாததால் மேற்கொண்டு படிக்க வாரணாசிக்கு அனுப்பப்பட்டார். அங்கு தாய்வழி மாமா வீட்டில் தங்கி இருந்து அரிஸ்சந்தரா உயர் நிலைப்பள்ளியில் சேர்ந்து படிக்கலானார். வாரணாசியில் உள்ள போது ஒரு முறை நண்பர்களுடன் கங்கை ஆற்றின் மறு கரையில் நடந்த சந்தையைப் பார்க்க போனார். திரும்பும் போது படகுக்குக் கொடுக்க போதிய பணம் இல்லை, நண்பர்களிடம் கடன் பெறுவதற்குப் பதிலாக ஆற்றை நீந்திக் கடந்தார் [4] . நதிக்கரையை கடந்து படிக்கப்போக பணமில்லாமல் நீந்திப்போய் படித்த அவருக்கு அங்கே மிஷ்ராஜி என்கிற அற்புதமான ஆசிரியர் கிடைத்தார். [5]
மாணவனாக இருக்கும்போது இவருக்கு புத்தகங்கள் படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும். குரு நானக்கின் வரிகள் மீது பிரியமாக இருந்தார். இந்திய சுதந்திர போராட்ட வீ ரர் பால கங்காதர திலகர் அவர்களை போற்றினார், 1915 ம் ஆண்டு வாரணாசியில் மகாத்மா காந்தி அடிகளின் உரையை கேட்ட பிறகு தன் வாழ்க்கையை நாட்டிற்கு அர்பணித்தார் [6]
. சாதி முறையை எதிர்த்த இவர் தன் பெயரில் இருந்த சிறிவஸ்தவா என்ற சாதியை குறிக்கும் குடும்ப பெயரை நீக்கினார் [1] . 1921 ல் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி அடிகள் தொடங்கிய போது அதில் கலந்து கொண்டு சிறை சென்றார். காவலில் வைக்க உரிய வயது இவருக்கு இல்லாததால் அரசு இவரைக் கைது செய்து காவலில் வைக்காமல் வெளியில் அனுப்பியது [7] . பின் வாரணாசியிலுள்ள தேசியவாதி சிவ் பிரசாத் குப்தா அவர்களால் தொடங்கப்பட்ட காசி வித்தியாபீடத்தில் இணைந்து 4 ஆண்டுகள் படித்தார். அங்கு முனைவர் பகவன்தாஸ் அவர்களின் மெய்யியல் தொடர்பான விரிவுரையில் பெரிதும் கவரப்பட்டார். 1926 இல் காசி வித்தியாபீடத்தில் படிப்பை முடித்ததும் சாஸ்திரி என்னும் பட்டம் கொடுக்கப்பட்டது. இது பின் இவர் பெயருடன் இணைந்து விட்டது [3] . மக்கள் சமுதாயத்தின் பணியாள் என்ற அமைப்பில் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்து முசாப்பர்பூர் என்னும் இடத்தில் அரிசனங்களின் மேம்பாட்டுக்காக உழைத்தார் [8] . பின் அவ்வமைப்பின் தலைவரானார்.
1921ல் லலிதா தேவியை மணந்தார். பெரும் வரதட்சணை வாங்கும் பழக்கம் வெகுவாக இருந்த போதிலும் இவர் காதியையும் இராட்டையும் மட்டும் வரதட்சணையாக வாங்கி கொண்டார். 1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார் [9] . அச்சமயம் இவரின் பெண்ணின் உடல் நலம் மிக மோசமானதால், எந்த போராட்டத்திலும் ஈடுபட கூடாது என்ற நிபந்தனையின் பேரில் 15 நாட்களுக்கு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் வீட்டிற்கு வருவதற்குள் அவர் பெண் மரணமெய்திவிட்டார். ஈமச்சடங்குகளை முடித்து விட்டு 15 நாட்கள் முடிவதற்கு நாள் உள்ள போதும் தாமாகவே சிறைச்சாலைக்குத் திரும்பிவிட்டார் [10] . அடுத்த ஆண்டு இவர் மகனுக்கு சுரம் என்றதால் ஒரு வாரம் வெளியில் செல்ல அனுமதி வாங்கினார். ஆனால் மகனுக்கு ஒரு வாரத்தில் சுரம் சரி ஆகாததால் குடும்ப உறுப்பினர்கள் வேண்டுகோளையும் மீறி சிறைச்சாலைக்குத் திரும்பினார் [10] .
1937 ல் உத்திரப் பிரதேச நாடாளுமன்ற குழுவின் ஒருங்கிணைப்புச் செயலாளராகப் பணிக்கமர்ந்தார் [11] . 1940 ல் சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவாகத் தனி நபர் சத்தியாகிரகம் இருந்ததால் ஓர் ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார் [12] . 1942 ம் ஆண்டு காந்தி அடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்தார். சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருந்த லால் பகதூர் சாஸ்திரி
அலகாபாத்துக்கு பயணம் செய்து
ஜவகர்லால் நேருவின் ஆனந்த பவன் இல்லத்திலிருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பாக குறிப்புகளையும் ஆணைகளையும் ஒரு வார காலத்திற்குச் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட லால்பகதூர் சாஸ்திரி 1946 ம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டார் [12] . இவர் மொத்தமாக ஏறக்குறைய 9 ஆண்டுகள் சிறையில் கழித்தார் [13] . சிறையில் இருந்த காலத்தில் பல புத்தகங்களைப் படித்தார். மேற்கத்திய தத்துவஞானிகள், புரட்சியாளர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள் ஆகியோரைப்பற்றி நன்கு அறிந்து கொண்டார். மேரி கியூரியின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் மொழி பெயர்த்தார் [9] .
அமைச்சராக அரசில்
இந்திய விடுதலைக்கு பிறகு சாஸ்திரி உத்தர பிரதேசத்தின் நாடாளுமன்ற செயலராக நியமிக்கப்பட்டார். உத்தர பிரதேச முதலமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த் அவர்களின் அமைச்சரவையில் காவல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். போக்குவரத்துத் துறை அமைச்சராக இவரே முதலில் பெண்களை நடத்துனராக நியமித்தார். காவல் துறை அமைச்சராக, கட்டுப்பாடற்ற கூட்டத்தைக் கலைப்பதற்குக் கம்பால் அடிப்பதற்குப் பதிலாக நீரை பீய்ச்சி அடிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டார் [14] .
1951 ல் காங்கிரஸ் செயற்குழுவுக்குப் பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். தலைவராக ஜவகர்லால் நேரு இருந்தார். வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தல், தேர்தல் நடவடிக்கைகள், தேர்தல் விளம்பரங்களின் போக்கு போன்றவற்றிற்கு இவர் பொறுப்பாளராக இருந்தார். காங்கிரஸ் கட்சி 1952, 1957, 1962 ம் ஆண்டுகளில் நடைபெற்ற பொது தேர்தல்களில் பெற்ற பெரு வெற்றிகளுக்கு இவரது பங்களிப்பும் காரணமாகும்.
1951 ல் நேருவால் இந்திய மேலவைக்கு நியமிக்கப்பட்டார். 1951-1956 வரை ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். 1956 ல் மெகபூப்நகர் ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததற்குத் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக முன்வந்தார். எனினும் நேரு இவரின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை [15] . 3 மாதங்கள் கழித்து அரியலூரில் நடைபெற்ற இரயில் விபத்தில் 144 பேர் இறந்தனர். அதைத் தொடர்ந்து சாஸ்திரி பதவி விலகல் கடிதத்தை நேருவிடம் ஒப்படைத்தார். பதவி விலகலை ஏற்றுக்கொண்ட நேரு இச்சம்பவம் பற்றி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது விபத்துக்கு சாஸ்திரி காரணமில்லை என்ற போதிலும் அரசியல் சாசன முறைமைக்கு இது முன்மாதிரியாக விளங்கும் என்று கூறினார் [3] . அப்போது அத்துறை இணை அமைச்சராக இருந்தவர் ஓ.வி.அளகேசன். அடுத்து வந்த பொதுத்தேர்தலில் இவ்விபத்து பற்றிய பிரச்சாரம் செய்தே ஓ.வி.அளகேசன் தோற்கடிக்கப்பட்டார். [16]
1957 ஆண்டு நடந்த பொது தேர்தலைத் தொடர்ந்து சாஸ்திரி நடுவண் அமைச்சரவையில் இணைந்தார். முதலில் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தார். பின்பு வணிக மற்றும் தொழில் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். 1961 ல் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் [3] . இவர் உள்துறை அமைச்சராக இருந்தபொழுது சந்தானம் தலைமையில் ஊழல் தடுப்பு குழு அமைவதற்குக் காரணமாகவிருந்தார் [17] .
இலக்கிய ஆர்வம்
லால் பகதூர் சாஸ்திரி மேரி கியூரியின் வரலாற்றை இந்தியில் மொழிபெயர்த்துள்ளார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றி இவர் எழுதிய நூலை முடிக்கும் முன்பே இறந்துவிட்டார். [18]
பிரதமராக
ஜவகர்லால் நேரு 1964 மே 27 ல் மறைந்ததை தொடர்ந்து அரசில் வெற்றிடம் ஏற்பட்டது. அப்போதய காங்கிரஸ் தலைவர் காமராஜர் சாஸ்திரி பிரதமராக வருவதற்கு காரணமாக இருந்தார். நேருவின் கொள்கையுடையரும் சமதர்மவாதியான இவரது தன்மையான பாங்கும் பேச்சும், பழமையை விரும்பும் வலதுசாரியான
மொரார்ஜி தேசாய் பிரதமராவதை விரும்பாதோரிடம் செல்வாக்கு செலுத்தியது.
மாற்று கருத்துகளையும் மதித்து சமரசம் காணும் இவரது இயல்பான குணத்தினால் இவரது பணி சிறப்பாக நடந்தது. குறுகிய காலம் ஆட்சியிலிருந்த இவரால் நாட்டின் பொருளாதார நெருக்கடியையும், உணவு பற்றாக்குறையையும் சமாளிக்க முடியவில்லை. எனினும் இந்திய மக்களிடம் இவரின் மதிப்பு குறையவில்லை, இவர் இந்தியாவில்
பசுமை புரட்சி கொண்டுவர முயன்றார். பசுமை புரட்சி மூலம் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதுடன் தேவைக்கதிகமாகவும் உணவு உற்பத்தி செய்தது, அதை பார்க்க இவர் உயிரோடு இல்லை. பாகிஸ்தானுடனான 22 நாள் போரின் போது ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற முழக்கத்தை உருவாக்கினார். பசுமை புரட்சியை இவர் வழியுறுத்திய போதும் வெள்ளை புரட்சியையும் ஊக்கப்படுத்தினார். 1964 அக்டோபர் கைரா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் போது பால் வளம் பற்றி இவருக்கு சிறப்பான கருத்து உருவாயிற்று. ஆனந்தில் வெற்றிகரமாக செயல்பட்ட பால் துறையை போல் நாடு முழுதும் பால்வளத்துறை செயல்பட வேண்டும் என விரும்பினார் [17] . இதன் காரணமாக 1965ல் தேசிய பால்பண்ணை வளர்ச்சி துறை அமைக்கப்பட்டது.
பாகிஸ்தான் போர்
இவரது அரசுக்கு பாகிஸ்தான் மூலம் பெரும் சிக்கல் வந்தது. கட்ச் தீபகற்பத்தில் பாதியை பாகிஸ்தான் உரிமை கோரியது. 1965 ஆகஸ்ட் பாகிஸ்தான் அப்பகுதிக்கு ஊடுருவல் படைகளை அனுப்பியது. அது அப்பகுதியிலிருந்த இந்திய பீரங்கி படை அணிகளுடன் பூசலை ஏற்படுத்தியது. கட்ச் பகுதியில் நடைபெற்ற மோதல்கள் குறித்து மக்களவையில் சாஸ்திரி இவ்வாறு கூறினார் [19] .
“ நமது வரம்புக்குட்பட்ட வளங்களை பயன்படுத்துவதில் நாம் என்றைக்கும் பொருளாதார வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை தருகிறோம். எனவே இதை உற்று நோக்கும் எவருக்கும் இந்தியாவுக்கு எல்லைப்பகுதி சச்சரவுகளில் விருப்பம் இல்லை என்பதுவும் நல்லுறவற்ற சூழலை இந்தியா விரும்பவில்லை என்பதும் விளங்கும்...... இச்சூழலில் அரசின் கடமை தெளிவானது. அதை அரசு முழுமையாக திறம்பட செயல்படுத்தும்....... நாங்கள் ஏழ்மையில் தேவைப்படும் காலத்தில் வாழ தயங்கமாட்டோம் ஆனால் எக்காரணம் கொண்டும் எங்கள் விடுதலையை அழிக்க விடமாட்டோம்... ”
ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் முன்மொழிந்த திட்டப்படி பாகிஸ்தானுக்கு கோரிய 50% க்கு பதிலாக 10% கட்ச் பகுதி வழங்கப்பட்டது. எனினும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு எண்ணம் காஷ்மீர் பகுதியிலும் குவிந்திருந்தது. பாகிஸ்தானிலிருந்து ஆயுதம் தாங்கியோர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவினர். அதைத்தொடர்ந்து சாஸ்திரி படை பலமானது படை பலம் கொண்டு சந்திக்கப்படும் என பாகிஸ்தானை எச்சரித்தார். [20] . 1965 செப்டம்பர் மாதம் பெரிய அளவில் பாகிஸ்தான் போர் வீரர்களும் ஆயுததாரிகளும் இந்தியப்பகுதியில் ஊடுருவினர். அரசு கவிழும் என்பதுடன் அவர்களுக்கு ஆதரவாக கிளர்ச்சி நடைபெறும் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இந்தியா தனது படைகளை எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்பியது, மேலும் லாகூர் அருகே எல்லையை தாண்டி பாகிஸ்தானை மிரட்டியது. போர் மூண்டதும் பஞ்சாப் பகுதியில் பெருமளவில் பீரங்கி சண்டை நடைபெற்றது. இரு நாட்டு படைகளும் பல வெற்றிகளைப் பெற்றன. இந்திய படைகள் லாகூரை தங்கள் குண்டு வீச்சு எல்லைக்குள் கொணர்ந்தனர்.
இந்திய பாகிஸ்தான் போர் நடந்து கொண்டுள்ள போது செப்டம்பர் 17, 1965 அன்று சீனாவிடமிருந்து இந்தியாவிற்கு கடிதம் கிடைத்தது. அதில் இந்திய இராணுவம் சீன பகுதியில் கருவிகளை நிறுவியுள்ளதாகவும், அதை விலக்கிக்கொள்ளாவிட்டால் சீனாவின் சீற்றத்திற்கு இந்தியா ஆளாகும் என்றும் கூறியது. சீனாவின் இப்பயமுறுத்தல் கண்டும் சாஸ்திரி சீனாவின் இக்குற்றச்சாட்டு தவறானது என கூறியதுடன் சீனா இந்தியாவை தாக்குமானால் இந்திய விடுதலையை காக்க உறுதியுடன் நாம் சண்டையிடுவோம் என்றார் [21] . சீனா எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய பாகிஸ்தான் போர் இரு நாடுகளுக்கும் பலத்த ஆள் மற்றும் பொருளாதார சேதங்களை உண்டாக்கியது. இந்திய பாகிஸ்தான் போர் செப்டம்பர் 23 1965 அன்று ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஆணை மூலம் முடிவுக்கு வந்தது.
மரணம்
போர் நிறுத்த சாற்றுதலுக்குப் பின் அதனை அமல்படுத்துவதில் இருந்த, இடைவிடாத பிரச்னைக்குத் தீர்வு காண சாஸ்திரியும் பாகிஸ்தான் அதிபர்
முகமது அயூப் கானும் சோவியத் ஒன்றிய தலைவர் அலெக்சி கோசிசின் அவர்களால் தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்கள். 1966 ஜனவரி 2 ஆம் நாள் இந்திய அமைச்சரவையின் முழு சம்மதத்தோடு லால் பகதூர் சாஸ்திரி தாஷ்கண்ட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே ஏழு நாட்கள் இரு நாட்டுத் தலைவர்களும் அவர்தம் குழுவினரும் பேசிப் பார்த்தும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அன்று இரவு கோசிசின் தலையிட்டு இரு தலைவர்களுடனும் தனித் தனியே பேசிப் பார்த்து உடன்படிக்கைக்கு வழிகண்டார். மறுநாள் ஜனவரி 10, 1966 ல் சாஸ்திரியும் கானும் தாஷ்கண்ட் சாற்றுதலில் கையொப்பமிட்டார்கள்.மிக எளிதான ஷரத்துக்களே நிறைந்துள்ள (ஒன்பது அம்சங்கள்) இந்த சாற்றுதல் கையெழுத்தாக ஏன் அத்தனை நாட்கள் பிடித்தன என்று சிந்தித்தாலே, இரு நாட்டிற்கும் இடையே இருந்த மனதளவிலான பெரிய இடைவெளி புரியும்.
அன்று இரவு, ரஷ்யப் பிரதமர் தந்த விருந்தில் கலந்து கொண்டுவிட்டு தன் அறைக்குத் திரும்பிய சாஸ்திரிக்கு இரவு ஒரு மணிக்கு மேல் இருமல், மார்வலி, மூச்சுத் திணறல் என்று ஆரம்பித்து உயிர் பிரிந்து விட்டது.
மாரடைப்பு வந்து காலை 1.32 மணிக்கு இறந்தார் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இரண்டு முறை இவருக்கு மாரடைப்பு வந்துள்ளது. பதவியில் உள்ளபோது வெளிநாட்டில் இறந்த ஒரே இந்திய பிரதமராவார். இவர் இறப்பில் சதி வேலை இருக்கலாம் என்றும் பலர் கருதுகின்றனர். [22]
ரஷ்யாவில் இறந்திருந்த இந்தியப் பிரதமர் குறித்து, “சாஸ்திரி இல்லாமல் உலகமே கொஞ்சம் சிறுத்து விட்டது” என்று அமெரிக்க அதிபர் ஜான்ஸன் தெரிவித்தார்.
சாஸ்திரியின் உடலை சவப்பெட்டியில் ஏற்றி இந்தியா கொண்டுவர நடந்த ஏற்பாடுகளின் போது, கோஸிஜினும் அயூப்கானும் அந்தப் பெட்டியை விமானத்தில் ஏற்ற சுமந்து வந்தார்கள்.
எத்தனையோ பதவிகள் வகித்த சாஸ்திரிக்கு சொந்தமாக வீடு ஒன்று கிடையாது. கடைசி காலத்தில் தவணை முறையில் கார் ஒன்று வாங்கி அந்தக் கடனை வாரிசுகளுக்கு விட்டுச் சென்றார்.
கல்லறை
காந்தியடிகளை அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே லால் பகதூர் சாஸ்திரியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. கல்லறையில் "வாழ்க போர்வீரன்! வாழ்க விவசாயி" என்ற பொருள்படும் "ஜெய் ஜவான் ஜய் கிஷாண்" என்ற வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக