பக்கங்கள்

சனி, 7 அக்டோபர், 2017

பேச்சிப்பாறை அணையைக் கட்டிய பொறியாளர் ஹம்ரே அலெக்சாண்டர் மிஞ்சினின் பிறந்த தினம் அக்டோபர் 8 .


பேச்சிப்பாறை அணையைக் கட்டிய பொறியாளர் ஹம்ரே அலெக்சாண்டர் மிஞ்சினின் பிறந்த தினம் அக்டோபர் 8 .

குமரி மாவட்ட நீராதாரத்தின் உயிர் நாடியாகத் திகழும் பேச்சிப்பாறை அணையைக் கட்டிய பொறியாளர் ஹம்ரே அலெக்சாண்டர் மிஞ்சினின் 150 ஆவது பிறந்த தினம் அக்டோபர் 8 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீமூலம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சிக் காலத்தில், கோதையாற்றின் குறுக்கே பேச்சிப்பாறையில் அணை கட்டுமானப் பணி 1897 ஆம் ஆண்டு தொடங்கி 1906இல் முடிக்கப்பட்டது.
இந்த அணை கட்டும் பணிகளில் பிரதம பொறியாளர்கள் உள்பட பல்வேறு பொறியாளர்கள் ஈடுபட்ட போதிலும் செயற்பொறியாளர் ஹம்ரே அலெக்சாண்டர் மிஞ்சின் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றார். இவரை பேச்சிப்பாறை உள்பட நாஞ்சில் நாட்டு மக்கள் மூக்கன் துரை என்றும் மிஞ்சின் துரை என்றும் அழைத்துவந்துள்ளனர்.
இங்கிலாந்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அலெக்சாண்டர் மிஞ்சின், முதலில் மதுரை மாநகராட்சி பொறியாளராக பணி செய்துள்ளார். பின்னர், பேச்சிப்பாறை அணை கட்டும் பணியில் செயற்பொறியாளராக சேர்க்கப்பட்டார். இவருக்கு நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் அருகில் பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. இங்கு தனது மனைவியுடன் வசித்துவந்தார்.
பேச்சிப்பாறை அணைக்கான களப்பணி அலுவலகம், குலசேகரத்தில், தற்போது அரசு மருத்துவமனை அமைந்துள்ள இடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இங்கிருந்து அவர் தனது குதிரை வண்டியில் பேச்சிப்பாறைக்கு சென்று வந்தார். 1906 ஆம் ஆண்டு அணை கட்டும் பணிகள் நிறைவடைந்தன. இந்நிலையில் மலேரியா காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து உடல் நலம் குன்றிய அவர் 1913 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி தனது 45 ஆவது வயதில் மறைந்தார்.
அணையின் அருகில் உடல் அடக்கம்: அலெக்சாண்டர் மிஞ்சினின் உடல் திருவிதாங்கூர்மன்னரின் ஆணைப்படி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நாகர்கோவிலில் இருந்து பேச்சிப்பாறை அணைக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அணையின் அருகில் ராஜ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பேச்சிப்பாறை அணையின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் திறக்கப்பட்ட ஸ்தூபியில் மிஞ்சினின் உருவப் படம் பொறித்து வைக்கப்பட்டுள்ளது.
அலெக்சாண்டர் மிஞ்சினின் 150 ஆவது பிறந்த தினம் அக்டோபர் 8ஆம் தேதி வரவுள்ளது. இந்த நாளை அரசு சார்பில் கொண்டாட வேண்டுமென்றும், அவரக்கு பேச்சிப்பாறையில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து குலசேகரம் அருகே கொட்டூர் பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பி. ஹென்றி கூறியதாவது: பேச்சிப்பாறை அணையைக் கட்டிய அலெக்சாண்டர் மிஞ்சினை குமரி மக்களால் ஒரு போதும் மறக்கமுடியாது. மக்களின் மனங்களில் அவர் நிரந்தரமாக வாழ்கிறார். இவரது பிறந்த நாளை விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்புடன் அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். மேலும் பேச்சிப்பாறையில் மிஞ்சினுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை வட்டாரத்தில் கேட்டபோது, மிஞ்சினுக்கு மணிமண்டபம் கட்டுவது, அரசு விழா எடுப்பது தொடர்பான கோரிக்கைகள் விவசாயிகளிடமிருந்து வந்துள்ளதுள்ளன என்று மட்டும் பதிலளித்தனர்.
நினைவு நாள்: அலெக்சாண்டர் மிஞ்சினின் நினைவு தினம் செப்டம்பர் 25ஆம் தேதி ஆகும். அன்றைய தினம் பேச்சிப்பாறையிலுள்ள அவரது நினைவிடத்தில் விவசாயிகளால் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக