பக்கங்கள்

செவ்வாய், 28 நவம்பர், 2017

175 ஆம் ஆண்டில் கம்பீரமாக கால் எடுத்து வைக்கும் நெல்லை சுலோச்சனா முதலியார் பாலம் நவம்பர் 28, 1843.



175 ஆம் ஆண்டில் கம்பீரமாக கால் எடுத்து வைக்கும் நெல்லை சுலோச்சனா முதலியார் பாலம்  நவம்பர் 28,
1843.

175 ஆம் ஆண்டில் கம்பீரமாக கால் எடுத்து வைக்கும் நெல்லை சுலோச்சனா முதலியார் பாலம் -   முத்தாலங்குறிச்சி காமராசு

    உதவிய நூல்கள்  குகன் அவர்களின் பெரும்புள்ளிகள்- எழிழமுதனின் புதுமை பித்தன் நூல்,  திருநெல்வேலி மாவட்ட  அரசு வெளியீடு

1840 மார்ச் மாதம் 10ஆம் தேதி இரவு, திருநெல்வேலி கலெக்டராக ணி.றி.தாம்சன் பொறுப்பேற்று இருந்தார்.
 திருநெல்வேலி&பாளையங்கோட்டை ஆகிய இரட்டை நகரங்களை பிரிக்கும் தாமிரபரணி ஆற்றில் அப்போது பாலம் இல்லை. ஆனால்  வெள்ளம் வந்தால் ஆற்றை கடப்பது கடினம்.
  கொக்கிரக்குளத்தில் இருந்து நெல்லை செல்ல தாமிரபரணி 800 அடி அகலமாக இருந்தது.  வியாபார பொருட்களை கொண்டு வருவது படகு மூலமாகவே நடைபெற்று வந்தன. ஆற்றங்கரையில் அமைந்த படகுத்துறையில் எப்போதுமே ஆண்களும், பெண்களும், வியாபாரிகளும் மொய்த்துக் கொண்டிருப்பது வழக்கம். கரையில் பல மணி நேரம் காத்திருந்தால்தான் படகு கிடைக்கும். அதிலும் பத்து பேர் கொண்ட ஒரு குடும்பம்தான் போக வேண்டும் என்றால், அவர்கள் ஒரே படகில் ஏறி விட முடியாது.  எல்லோருக்கும் ஒரே படகில் இடம் கிடைக்காது. முன்னால் இடம் கிடைத்தவர்கள் அக்கரைக்கு போய் மற்றவர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும். அதிலும் குழந்தைக் குட்டிகளோடு படகில் ஏறிச் செல்வது ஒரு சோதனை மிகுந்த காட்சி.
 இந்த லட்சணத்தில் படகுத்துறையில் முந்தி இடம் பெற லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சர்வசாதரணமாகவே நடந்தது. தட்டுமுட்டு சாமான்களோடு வருபவர்களின் பொருட்கள் களவாடப்படுவதும் சமூகவிரோதிகள் ஆங்காங்கே குழப்பத்தை உண்டாக்குவதும், திடீர் என்று சாதிச்சண்டை தோன்றுவதும் அப்போதே நடைபெற்று வந்தன.
 இப்படியாக திருநெல்வேலி ஜில்லா போர்டின் கட்டுப்பாட்டில் செயல் பட்டு வந்த இப்படகு துறைகளில் ஒவ்வொரு நாளும், பொழுதும் விடிந்து, பொழுது போவது என்பது ஒரு யுகமாகவே கருதப்பட்டது. 19&ம் நூற்றாண்டில் இடைப்பகுதி வரை படகுத்துறையில் நடந்த குழப்பங்களை பற்றி அப்போது ஆட்சி செய்த வெள்ளையக்காரர்களே வேதனையோடு எழுதியிருக்கிறார்கள்.
 படகுத்துறை என்றால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்கும் என்பது கலெக்டருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அன்று மார்ச் 10 ம் நாள் படகுத்துறையில் சாதிக்கலவரம் உச்சகட்டத்தை அடைந்து நாலைந்து கொலைகள் விழுந்து விட்டன.
   தாமிரபரணி பாலத்தை பற்றி தனக்கு முந்திய கலெக்டராக இருந்த ஆர்.ஈடன் என்பவர் 1836ல் எழுதி வைத்த குறிப்பை படித்துப் பார்க்கிறார்.  அவசியத்தினை உணருகிறார். உடனே அவசர கூட்டம் ஒன்று நடத்தப்படுகிறது.
  பாலங்களுக்கு வரைபடம் தயாரிக்கும் புகழ்பெற்ற கேப்டன் பேபெர் தொழில் நுட்ப வல்லுநர் இஞ்சினியர் கேப்டன் டபிள்யூ.எச்.ஹார்ஸ்லி ,கலெக்டர் அலுவலகத்தில் சிரஸ்தராக வேலை பார்த்துக் கொண்டிருந்த  சுலோச்சன முதலியாரும்   உள்பட பலர் அதில்  கலந்துகொண்டார்.
 லண்டன் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வாட்டர்லூ பாலத்தை  மாதிரியாக கொண்டு பாலம் தயாரிக்கப்பட்டது. பாலத்தின் அடிமட்ட நீளம் 760 அடியாகவும், அகலம் 21 1/2 அடியாகவும், 11 ஆர்ச்சிகளோடு, ஒவ்வொரு ஆர்ச்சின் விட்டமும் 60 அடியாகவும் அமைந்திருந்தன. ஒவ்வொரு ஆர்ச்சையும் தாங்குகின்ற இரட்டைத் தூண்கள் ரோமானிய அரண்மனை தூண்களை நினைவுபடுத்தின. அதை கட்டி முடிக்க அரைலட்சத்திற்கு சற்று அதிகமாகவே பணம் தேவைப்பட்டது.  இன்றைய மதிப்பீட்டில்  இருபத்து ஐந்து  கோடி ரூபாய்.
 பணத்துக்கு எங்கே போவது? அன்றைய அரசிடம் பணம் இல்லை. மக்களிடம் வசூல் செய்து தான்  இந்த பாலப்பணியை முடிக்க வேண்டும்.
 இந்த சமயத்தில் தான் சுலோச்சன முதலியார் உதவிசெய்ய முன்வருகிறார்.
 இவர் தென்மாவட்டங்களிலேயே மிகப்பெரிய செல்வந்தர். கௌரவமாக உத்தியோகம் பார்ப்பவர். அந்த காலத்தில் குதிரை பூட்டிய கோச் வண்டியில் கலெக்டருக்கு சமமாக அலுவலகத்துக்கு வருபவர். நீளமான கறுப்பு கோட்டு, தலையில் ஜரிகை தலைப்பாவும், கழுத்தை சுற்றி அங்கவஸ்திரமும், காதில் வைரக்கடுக்கனும் அணிந்து அவர் அலுவலகத்துக்கு வரும் அழகே தனி அழகாம்.
     மனைவி வடிவோடு சேர்ந்து பேசுகிறார். அவரிடம் இருந்து நகைகளையெல்லாம் பெற்று, அதன் பின் அ¬தை விற்று பாலம் கட்டககூடிய  முழுதொகையை அவரே கொடுத்துவிடுகிறார்.
 பாளையங்கோட்டையிலிருந்து இடிந்து போன கோட்டைகளிலிருந்து கருங்கற்கள்  கொண்டு வரப்படுகிறது.
 இக்கற்களை கொண்டே பாலத்தின் அஸ்திவாரமும், தூண்களும் உருவாகின்றன. சிமெண்ட் இல்லாத அந்த காலத்தில் சுண்ணாம்புடன், பதனி, கருப்புக்கட்டி இவைகளை சாந்தாக்கி செங்கல்லை கொண்டு பாலம் உருவாகின்றது. இந்த வேலைக்காக சிறையில் இருந்த ஆயுட்கைதி 100 பேரை அரசாங்கம் தந்து உதவுகின்றது. இஞ்சினியர் டபிள்யூ.எச்.ஹார்ஸ்லி மேற்பார்வையில் பால வேலை வேகமாக நடைபெறுகின்றது. பணத்தட்டுப்பாடு இல்லாமல் சுலோசன முதலியார் பார்த்துக்கொள்ள ஏனைய மேற்பார்வை பணியாளர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும்அரசாங்கம் தந்து உதவுகின்றது. 60 அடி விட்டத்தில் ஆர்ச் வடிவில் 11 தூண்களும், பிரமாண்டமான தூண்களும், 21 1/2 அடி அகலமும், 760 அடி கீழ் நீளமும்கொண்ட பாலம் 1843ல் கட்டி முடிக்கப்படுகின்றன. இதற்கு சுலோசன முதலியாரின் பெயரும் சூட்டப்படுகின்றன.

 பால வேலை நடந்து கொண்டிருக்கும் போதே கலெக்டர் தாம்சனுக்கு மாற்றம் ஏற்பட  கலெக்டர் தாமஸ் என்பவர் கலெக்டர் பொறுப்பை ஏற்கிறார். பாலத்தின் திறப்புவிழா 1843 நவம்பரில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. திறப்புவிழா அன்று அலங்கரிக்கப்பட்ட யானை ஒன்று முதல் பயணி அல்லது முதல் குடிமகன் என்ற பெருமிதத்தோடு பாலத்தில் முன்செல்கிறது. இதை தொடர்ந்து ஆங்கில வீரர்கள் அடங்கிய காலட்படை சென்றது. அதைதொடர்ந்து சீறிய பீரங்கிபடைப் போகிறது. இவர்களை தொடர்ந்து சுலோசன முதலியாரும், இவருக்கு பின்னால் நீதிபதி டக்லஸ், கலெக்டர் தாமஸ் அவருக்கு பின்னால் மேற்பார்வையிட்டு பாலத்தை கட்டிமுடித்த இஞ்சினியர் ஹார்ஸ்லி ஆகியோர் சென்றனர். இவர்களையெல்லாம் தொடர்ந்து திருநெல்வேலி நகரின் மக்கள் வெள்ளம் இப்படியாக ஒரு கோலாகல திறப்பு விழா ஊர்வலம் யானையின் தலைமையில் அன்று நடந்தது.
 150வருடங்களுக்கு முன்னால் அரசால் சாதிக்க முடியாத ஒரு சாதனையை தனி ஒரு மனிதர் தம் வள்ளல் தன்மையால் சாதித்து விட்டார்.  எனவே அவர் பெயரால் சுலோசன முதலியார் பாலம் என இது அழைக்கப்படுகிறது.
 1869ல் தாமிரபரணியில் ஏற்ப்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக இப்பாலத்தின் நான்கு தூண்கள் சேதமடைந்தன.  அந்த சமயத்தில் கலெகடராக இருந்து பககிள் துரை இந்த பாலத்தினை செப்பனிட்டார். மீண்டும் 1871ல்  இப்பாலம் திறககப்பட்டது. விடுதலைக்கு பின் இப்பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாயிற்று,. தென்வடலாக இருக்கும் இப்பாலத்தின் பழைமை கெட்டுவிடாமல் பாலத்தின் மேற்குப்பகுதியை மட்டிலும் விரிவுபடுத்தினர் அப்பகுதியில் அமைந்திருந்த வளைவுகள் அதனுள் அடங்கிவிட்டன. காங்கிரீட் முறையில் இது அமைக்கப்பட்டது. 21 1/2 அடியாக இருந்த பாலம் 50 அடி அகலம் கொண்ட பாலமாக விரிவுபடுத்தப்பட்டு 1967ல் அப்போதைய முதல்வர் பகதவத்சலம் திறந்து  வைத்தார்.
    லண்டன் லாட்டரி பணத்தினால்தான் இந்த பாலம் கட்டப்பட்டது என்ற ஒரு வரலாறும் பேசப்பட்டு வருகிறது. அந்த வரலாறும் சுவையானது தான். அதாவது  லண்டனுக்கு வெள்ளைத்துரைகளோடு சுலோசனா முதலியார் சென்ற போது அங்கு ஒரு லாட்டரியை வாங்குகிறார். அதில் 1 லட்ச ரூபாய் பரிசு விழுகிறது. அந்த சமயம் வெள்ளையனை எதிர்த்து இந்தியாவில்  போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. எனவே வீட்டில் கூட  ஆங்கிலேயரிடம் வேலை பார்த்த சுலோசனா முதலியாருக்கு எதிர்ப்பு  காத்திருந்தது. தாயாரிடம் வந்து , “அம்மா எனக்கு லண்டன் லாட்டரியில் ஒரு லட்சம் விழுந்து இருக்கிறது என்ன செய்ய” என்று கேட்டாராம். அதற்கு அவர் “இங்கிலிஸ்காரன் பணம் அதை கொண்டு போய் ஆத்தில போடு”. என்று கூறி விட்டாராம். அதிர்ந்து போன சுலோசன முதலியார் வெளியே வந்து விட்டார். கலெக்டர் ஆபிஸ்  வேலைக்கு வர ஆற்றில் படகில் -ஏற நிற்கிறார். அப்போது படகில் ஏறுவோர் சண்டை போடுகிறார்கள்  அங்கு வந்த போலீஸ் அவர்களை குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு செல்கிறது.  இதனால்  வேதனை பட்ட அவர்,  “தாயார்  லண்டன் பணத்தினை ஆற்றில் போடு என்று சொன்னாரே, பேசாமல்  ஆற்றில் பாலமாக போட்டுவிட்டால் என்ன” என்று  பாலம் கட்ட ஏற்பாடு செய்தாராம் என்றும் சுவையாக ஒரு வரலாறு சொல்வார்கள்.
  எது எப்படி என்றாலும் அந்த பணம் சுலோசன முதலியார் பண ம் தான். 174 வருடங்களை கடந்துவிட்டது. அந்த பாலத்தில் நாம் செல்லும் போதெல்லாம் அவரின் நினைப்பு நம்மை மென்மையாக வருடிக்கொண்டே தான் இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக