கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் பிள்ளை நினைவு தினம் நவம்பர் 18, 1936.
வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவரும் கூட. தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் வலுவான தொழிற்சங்கங்கள் இயங்க தலைமை வகித்தாலும், ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடினார். தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மனிதர் என எல்லோராலும் நினைவு கூறப்படுகிறார். அவருக்கு, புரட்சி மனப்பான்மையும், ஆங்கிலேயருக்கு எதிராக தைரியமாக செயல்படும் திறனும் இருந்ததால், அவரது ‘பாரிஸ்டர் பட்டம்’ பறிக்கப்பட்டது. அவரது துணிச்சலான தன்மையே அவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழ்நாட்டில் பெயரெடுக்க வைத்தது. இதனையே ஆங்கிலத்தில், ‘தமிழ் ஹெல்ம்ஸ்மேன்’ என்று கூறுகின்றனர். ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சுதந்திரத்திற்காக அவஇது பங்களிப்பைப் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: செப்டம்பர் 5, 1872
பிறந்த இடம்: ஒட்டப்பிடாரம்,
தமிழ்நாடு, இந்தியா
இறப்பு: நவம்பர் 18, 1936
தொழில்: வக்கீல், அரசியல்வாதி
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
வ. உ. சி அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒட்டப்பிடாரத்தில் செப்டம்பர் 5, 1872ல் பிறந்தார்.
குழந்தை பருவமும் சட்டத்துறையும்
அவரது தந்தை உலகநாதன் பிள்ளை நாட்டின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவர். இதுவே, தனது கல்வி முடிந்த பிறகு, அவரைத் தனது தந்தையின் வழியில் தொடர்ந்து செல்ல ஊக்குவித்தது. அவர், தனது சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்திலும், அருகிலுள்ள திருநெல்வேலி பள்ளிகளிளும் சேர்ந்து கல்விப் பயின்றார். தனது பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, ஒட்டப்பிடாரத்திலுள்ள மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், அவர் சட்டப்பள்ளியில் சேர்ந்து, சட்ட ஆய்வுகளை நிறைவு செய்து அவரது தந்தை உலகநாதன் பிள்ளை போலவே ஒரு வழக்கறிஞரானார்.
சட்டத்தொழிலில், அவரின் மிகப் பெரிய உத்வேகமாக அவரது தந்தை இருந்தாலும், அவருக்கும், அவரது தந்தை உலகநாதன் பிள்ளை அவர்களுக்கும் செயல்படும் பாணிகளில் ஒரு அடிப்படை வேறுபாடு இருந்தது. அவரது தந்தை சமுதாயத்தில் பணக்காரர்களின் பிரச்சினைகளில் மட்டும் வாதாடுபவர். ஆனால், வ.உ.சி அவர்கள், ஏழை மக்களின் மீது கொண்ட அனுதாபத்தின் காரணமாக, பல தருணங்களில் தனது செல்வாக்குமிக்க தந்தையின் விருப்பத்திற்கு எதிராகவும் வாதாடியிருக்கிறார். தமிழ்நாட்டில் ‘மூன்று துணை நீதிபதிகளின் ஊழல் குற்றச்சாட்டுகள் என்ற வழக்கில்’ சிறப்பாக வாதாடிக் குற்றவாளிகளை நிரூபித்ததால், அவர் பலராலும் ஈர்க்கப்பட்டு, மிகச் சிறந்த வழக்கறிஞர் என்ற புகழ் பெற்றார்.
அரசியல் வாழ்க்கை
செயல்மிகு அரசியலில் நுழையும் பொருட்டாக, 1905ல் வ. உ. சி அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். இந்தியாவில் சுதேசி இயக்கம் தலைத்தூக்கிய அந்த நேரத்தில், தலைவர்களான லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகர் போன்ற பலரும் ஆங்கிலேய வர்த்தக பேரரசின் வற்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்தனர். அதே காரணத்திற்காகவும், இந்தியப் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் அவற்றை சார்ந்த சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரபிந்தோ கோஷ், சுப்ரமணிய சிவா மற்றும் சுப்ரமணிய பாரதி அவர்கள் சென்னை மாகாணத்திலிருந்து போராடினார்கள். இதுவே, வ.உ.சியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேரவும், சென்னை மாகாணத்தின் உறுப்பினர்களுடன் இணைந்துப் போராடவும் தூண்டியது. பின்னர், அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சேலம் மாவட்ட அமர்வில் தலைமைத் தாங்கினார்.
கப்பல் நிறுவனம்
இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தவுடன், இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக அவர் முழு மனதுடன் சுதேசிப் பணியில் மூழ்கினார். அவரது சுதேசி வேலையின் ஒரு பகுதியாக, இலங்கை கடலோரங்களிலுள்ள ஆங்கிலேய கப்பல் போக்குவரத்தின் ஏகபோகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார். சுதந்திர போராட்ட வீரர் ராமக்ருஷ்ணானந்தாவால் ஈர்க்கப்பட்ட அவர், நவம்பர் 12, 1906ல், ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை’ நிறுவினார். தனது கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்க, இரண்டு நீராவி கப்பல்களான “எஸ்.எஸ்.காலியோவையும், எஸ்.எஸ். லாவோவையும்”, மற்ற சுதேசி உறுப்பினர்களான அரபிந்தோ கோஷ் மற்றும் பால கங்காதர திலகர் உதவியுடன் வாங்கினார். ஆங்கிலேய அரசாங்கம் மற்றும் ஆங்கிலேய வியாபாரிகளின் கோபத்தைத் தாண்டியும், வ.உ.சியின் கப்பல்கள் தூத்துக்குடி-கொழும்பு இடையே வழக்கமான சேவைகளைத் தொடங்கியது. அவரது கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒரு வர்த்தக மையமாக மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு இந்தியர் அமைக்கப்பட்ட முதல் விரிவான கப்பல் போக்குவரத்து சேவையாகவும் இருந்தது. ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’, பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு கடும் போட்டியாக இருந்தது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, வ.உ.சியும் தனது கப்பல் கட்டணத்தை மேலும் குறைத்தார்.
கடைசியில், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி பயணிகளை இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது. மேலும், பயணிகளுக்கு இலவச சவாரி மற்றும் குடைகள் வழங்கும் உத்திகளைக் கையாண்டனர், ஆங்கிலேயர்கள். ஆனால், வ.உ.சியால் அவ்வாறு முடியவில்லை. இதனால், சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி திவாலாகும் விளிம்பிற்கே சென்றது.
தேசிய மனப்பான்மை
அவர், நாட்டில் சுதேசி இயக்கத்தை விரிவாக்கவும், தவறான ஆங்கிலேய அரசாங்கத்தைப் பற்றி இந்திய மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்துடன் இருந்தார். இதன் நோக்கமாக அவர், திருநெல்வேலியிலுள்ள ‘கோரல் மில்ஸ்’ தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றார். ஆங்கிலேய அதிகாரிகள் ஏற்கனவே அவர் மீது கொண்ட வெறுப்பினால், இச்செயலை அரசாங்கத்திற்கு எதிரான துரோகம் என்று குற்றம் சாட்டி, மார்ச் 12, 1908 அன்று அவரைக் கைது செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர். அவரைக் கைது செய்தப் பின்னர், நாட்டில் வன்முறை வெடித்தது. இதனால், காவல் அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டு, நான்கு பேர் மரணம் அடைந்தனர். ஆங்கிலேய அதிகாரிகள், அவரது செயல்களுக்குத் தீவிரமாக கண்டனம் தெரிவித்தாலும், நாட்டின் ஊடக ஆதரவு கிடைத்ததால், அவரின் தேசிய உணர்வை அவர்கள் நாளிதழ்கள் மூலமாக விரிவாகப் பாராட்டினார்கள். ஆங்கிலேயர்கள், அவருக்கு எதிராக வழக்குத் தொடர முயற்சித்தாலும், நாட்டிலுள்ள இந்தியர்கள், சிறையிலிருந்து அவரை விடுவிக்க நிதி சேகரித்தனர். அச்சமயம், தென் ஆஃப்ரிக்காவிலிருந்த மகாத்மா காந்தியும், வ.உ.சியின் பாதுகாப்பிற்காக, மேலும் நிதி சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பினார். தனது கைதுக்குப் பின்னர், அவர் கோயம்புத்தூரிலுள்ள மத்திய சிறையில் ஜூலை 9, 1908 முதல் டிசம்பர் 1, 1910 அடைக்கப்பட்டார். அவரின் புரட்சிகரமான மனப்பான்மையைப் பார்த்து அஞ்சிய ஆங்கிலேயர்கள், தெளிவாக அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தனர்.
சிறையில் இருந்த அந்நாட்களில், மற்ற அரசியல் கைதிகளுக்குக் கிடைத்த சலுகைகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், அவர் மற்ற குற்றவாளிகள் போல சிறையில் கடின உழைப்பில் ஈடுபட்டார். அவரது இந்த கடின உழைப்பு, அவரின் உடல்நிலையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, அவரது உடல்நலம் படிப்படியாக சரிந்தது. இதனால் ஆங்கிலேய அதிகாரிகள் அவரை விடுதலை செய்யும் கட்டாயத்தில் தள்ளப்பட்டதால், டிசம்பர் 12, 1912 அன்று அவரை விடுதலை செய்தனர். சிறையில் இருக்கும் போது, அவர் தனது சட்ட மனுக்கள் மூலம் அவரது சுதேசி நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். சிறையில் கொடுமையான சூழ்நிலை நிலவியதால், அவர் விடுதலை செய்யப்பட்டார். அவரின் விடுதலைக்குப் பின், சிறை வாயிலின் முன்பு பெருமளவு தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை எதிர்பார்த்த அவருக்கு அச்சம் விளைவிக்கிற அளவுக்கு அமைதி காத்திருந்தது. இது, அவருக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. ‘பாரிஸ்டர் பட்டம்’ அவரிடமிருந்து பறிக்கப்பட்டதால், அவரால் சட்டப் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனமும் 1911ல் ஒழிக்கப்பட்டதால், அவர் ஏழ்மை நிலையை அடைந்தார். அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் குடியேறினார். பின்னர், சென்னையிலுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகளின் தலைவரானார். 1920ல், அவர், இந்திய தேசிiய காங்கிரஸின் கல்கத்தா அமர்வில் ஆயத்தமானார்.
இலக்கிய படைப்புகள்
அரசியல்வாதியாகவும், வழக்கறிஞராகவும் அவர் ஆற்றிய பணிகளைத் தவிர, அவர் ஒரு சிறந்த அறிஞரும் ஆவார். சிறையில் இருந்தபோது, தனது சுயசரிதையைத் தொடங்கிய அவர், 1912ல் சிறையிலிருந்து விடுதலைப் பெற்ற பின், அதனை நிறைவு செய்தார். அவர், ஒரு சில நாவல்களையும் எழுதியுள்ளார். அவர், தத்துவ எழுத்தாளாரான ஜேம்ஸ் ஆலன் அவர்களின் பல படைப்புகளை தமிழில் மொழிப் பெயர்த்துள்ளார். தமிழில் மிக முக்கியமான படைப்புகளான திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தின் தொகுப்புகளையும் வெளியுட்டுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
அவர், 1895ல் வள்ளியம்மையை மணமுடித்தார். ஆனால், அவரது மனைவி 1901ல் இறந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மீனாட்சி அம்மையாரைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு நான்கு மகன்களும், நான்கு மகள்களும் இருந்தனர். அவருடைய மூத்த மகன், தனது இளமைப் பருவத்திலேயே இறந்து விட்டார். அவரது இரண்டாவது மகன், ஒரு அரசியல்வாதி. மூன்றாவது மகன், சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றுகிறார். நான்காவது மகன், இன்னும் மதுரையில் வசித்து வருகிறார். அவரது மகள்கள் அனைவரும் சென்னையில் மணமுடித்து வசிக்கின்றனர். அவரது வம்சாவளிகள் இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.
இறப்பு
ஆங்கிலேயர்களைக் கடுமையாக எதிர்த்ததால், அவரது வழக்கறிஞர் பட்டம் பறிக்கப்பட்டு, அவரை சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளிவந்த பின், அவர் ஏழ்மையான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். ஆனால், தனது கடன்களைத் திருப்பி செலுத்தாததால், அவர் தனது வாழ்வின் இறுதி வரை வறுமையில் வாழ்ந்து வந்தார். அவரது இறுதி மூச்சை, தூத்துக்குடியிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில், நவம்பர் 18, 1936அன்று விட்டார்.
நினைவஞ்சலி
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான ஒருவராக நினைவு கூறப்பட்டவர், வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை அவர்கள். அவர், தமிழ்நாட்டில் இன்று வரையிலும், பலரால் மிகவும் நேசிக்கவும், கொண்டாடப்படுபவரும் கூட.
‘கப்பலோட்டிய தமிழன்’ என்றும் ‘தமிழ் ஹெல்ம்ஸ்மேன்’ என்றும் ‘கப்பல் செலுத்துகிற திசையைக் காட்டுபவர்’ என்ற பட்டங்களைப் பெற்றார்.
சுதந்திரத்திற்கு பின்னர், அவரை நினைவுகூரும் வகையில், தூத்துக்குடி துறைமுகம் ‘வ.உ.சி போர்ட்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அவரது பெயரில் தூத்துக்குடியில் ஒரு கல்லூரியும் உள்ளது.
செப்டம்பர் 5, 1972, அவரது நூற்றாண்டு விழாவை நினைவுக்ப்ப்ரும் வகையில், இந்திய தபால் மற்றும் தந்தித்தொடர்புத் துறை ஒரு சிறப்பு தபால்தலையை அவரின் பெயரில் வெளியிட்டது.
கோயம்புத்தூரிலுள்ள ‘வ.உ.சி பூங்கா’ மற்றும் ‘வ.உ.சி மைதானம்’ மிக முக்கியமான பொது பூங்காவாகவும், சந்திப்புக் கூடமாகவும் இருக்கின்றது.
விடுதலைப் போராட்டத்தில், அவரது புரட்சிகரமான செயலுக்காக கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறை வளாகத்தில் உள்ளே ஒரு ‘நினைவுச்சின்னம்’ அவருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் பாலத்திற்கு ‘வ.உ.சி பாலம்’ என பெயரிடப்பட்டது.
‘கப்பலோட்டிய தமிழன் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை’ வாழ்க்கைக் கதையை அடிப்படையாக கொண்டு, 1961ல் தமிழ் படம் வெளியானது. அதன் முன்னணி பாத்திரமாக சிவாஜி கணேசன் அவர்கள் நடித்துள்ளார்.
காலவரிசை
1872: செப்டம்பர் 5 ம் தேதி பிறந்தார்.
1895: வள்ளியம்மையை மணமுடித்தார்.
1901: அவரது மனைவி நோயால் இறந்தார்.
1905: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக அரசியலில் நுழைந்தார்.
1906: நவம்பர் 12ஆம் தேதி அன்று தனது சொந்த கப்பல் நிறுவனமான ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைத்’ துவக்கினார்.
1908: மார்ச் 12ஆம் தேதி அன்று ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
1908: ஜூலை 9ம் தேதி கோயம்புத்தூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.
1911: அவரது கப்பல் கம்பெனியான ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ கலைந்தது.
1912: டிசம்பர் 12 ஆம் தேதி அன்று சிறையில் இருந்து வெளியிடப்பட்டார்.
1920: கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அமர்வில் ஆயத்தமானார்.
1936: நவம்பர் 18ஆம் தேதி அன்று இறந்தார்.
இறப்புக்குப் பிறகும் வ.உ.சி. புறக்கணிக்கப்பட்டது பெரும் துயரத்தின் வரலாறு.
தமிழகத்தில் அரசியல் மேடை சொற்பொழிவைத் தொடங்கிவைத்தவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். அதை ஒரு கலையாக வளர்த்து, பாமர மக்களை அரசியல் விழிப்புணர்வு கொள்ளச் செய்து விடுதலை இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை. பல்வேறு வகுப்புகளைச் சார்ந்த தமிழர்களை ‘விடுதலை’ என்ற ஒரே புள்ளியில் இணைத்து, சிந்திக்கத் தூண்டியவர் வ.உ.சி. ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற கோஷத்தின் பிதாவாகத் திகழ்ந்தவரும் அவர்தான். ‘‘நாம் எல்லோரும் பலமாக மூச்சுவிட்டால் போதுமே! அம்மூச்சுக் காற்றில் பறந்துபோகாதா வெள்ளையர் ஆதிக்கம்?” என்று கர்ஜனை செய்தார்.
அவரது மேடைப் பேச்சுகளால் அனைத்துத் தரப்பு மக்களும் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடும் மனத் துணிவைப் பெற்றனர். வண்ணார் சமூகத்தினர் ஆங்கிலேய அதிகாரிகளின் துணிகளை வெளுக்க மறுத்தனர். நாவிதர்களோ சவரம் செய்ய மறுத்தனர். தூத்துக்குடியில் வசித்துவந்த வெள்ளையர்கள், இரவு நேரங்களில் ஊருக்குள் தங்குவதற்கு அஞ்சி, படகுகளில் சென்று ஏழு மைல் தூரத்தில் நடுக் கடலில் உள்ள முயல் தீவில் போய் உறங்கிவிட்டு அதி காலையில்தான் திரும்பிவருவார்கள். அந்த அளவுக்குப் பொதுமக்களுக்கு எழுச்சியூட்டினார் வ.உ.சி.
வெள்ளையர்களை ‘மூழ்கடித்த’ கப்பல்!
வெள்ளையர்களை விரட்டுவதென்றால் நம்மவர் களுக்குக் கடல் ஆதிக்கம் வேண்டும் என்று நினைத்தார் வ.உ.சி. இத்திட்டத்தின் விளைவுதான் ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’.
இத்திட்டத்துக்காக நிதி தந்து உதவுமாறு ‘இந்தியா’ பத்திரிகையில் தலையங்கம் எழுதினார் பாரதி. இந்தக் கப்பல் கம்பெனிக்கு ரூ. 2 லட்சம் தேவை என்று பாரதி குறிப்பிட்டிருந்தாலும், வந்துசேர்ந்த நிதி
ரூ. 200-தான்! சேலத்தில் விஜயராகவாச்சாரியார் நிதி திரட்டினார். தான் சேமித்து வைத்திருந்த ரூ. 1,000-ஐக் கொடுத்து உதவினார் ராஜாஜி. பல முயற்சிகளுக்குப் பின்னர், ‘எஸ். எஸ். காலியா’, ‘எஸ்.எஸ். லாவோ’ எனும் இரண்டு சுதேசிக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் மிதக்கத் தொடங்கின.
அச்சமயத்தில், “நான் ஆரம்பித்த இக்கம்பெனி, வியாபாரக் கம்பெனி மட்டுமல்ல. மூட்டை முடிச்சுகளுடன் வெள்ளையர்களை இந்நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கே இக்கப்பல்” என்று வ.உ.சி. பேசினார். சுப்ரமணிய சிவா இடைமறித்து, “மூட்டை முடிச்சுகளுடன் போவானேன்; மூட்டை முடிச்சுகளை இங்கேயே போட்டுவிட்டுப் போகட்டும். இந்த நாட்டில் சுரண்டிச் சேர்த்த மூட்டைகள்தானே!” என்று கர்ஜித்தார். சுதேசிக் கப்பலின் வருகையால் அதிர்ந்துபோன ஆங்கிலேய அரசு, சுதேசிக் கப்பலுக்கு எதிராகப் பல சதிகளில் ஈடுபட்டது. ‘பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன்’ கம்பெனி பயணக் கட்டணத்தைக்கூடக் குறைத்தது. ஆனாலும், தேசப்பற்று மிக்க மக்கள் இந்தச் சதியைப் புறக்கணித்துவிட்டு, வ.உ.சி-யின் சுதேசிக் கப்பல்களை ஆதரித்தனர். வெள்ளையர் கப்பல் நிறுவனத்துக்கு மாதம் ரூ. 40,000 வரை நஷ்டம் ஏற்படச் செய்தார் வ.உ.சி. சுதேசிக் கப்பல் மக்களை அரசியல்படுத்தியதுடன் ஆங்கில அரசுக்கு எதிரான போராட்ட உணர்வையும் அதிகரிக்கச் செய்தது.
பற்றியெரிந்த திருநெல்வேலி
தமிழகத்தில் புரட்சி மனப்பான்மையை ஊட்டிய வங்கச் சிங்கம் விபின் சந்திரபாலரின் விடுதலையை 1908 மார்ச் மாதம் 9-ல் வ.உ.சி-யும் சுப்ரமணிய சிவாவும் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்திக் கொண்டாடினார்கள். இதனால் வ.உ.சி., சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோரைச் சிறையில் அடைத்தது வெள்ளையர் அரசு. இதை எதிர்த்து திருநெல்வேலி, தூத்துக்குடியில் பெரும் கலகம் ஏற்பட்டது. வெள்ளையர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டது. கலவரத்தை ஒடுக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கைதுசெய்யப்பட்ட வ.உ.சி., பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். 1908-ல் பாளையங்கோட்டை சிறையில் பாரதியார் வந்து வ.உ.சி-யைச் சந்தித்தார். கலெக்டர் விஞ்ச் துரைக்கும் வ.உ.சி-க்கும் இடையே நடந்த காரசாரமான வாக்குவாதத்தைக் கவிதை வடிவில் ‘இந்தியா’ வார இதழில் பாரதி வெளியிட்டார்.
முடக்கிப்போட்ட சிறை
ஏ.எஃப். பின்ஹே என்ற நீதிபதி வ.உ.சி-க்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிதம்பரனார் மனைவி மீனாட்சி அம்மாள், நெல்லையப்பர் மற்றும் நண்பர்கள் மேல் முறையீடுசெய்து தண்டனையைக் குறைக்க முற்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தண்டனை 6 ஆண்டாகக் குறைக்கப்பட்டது. இதற்கு மேல் தண்டனையைக் குறைக்க மேல்முறையீடு செய்ய வழி இல்லாதபோது சிதம்பரனார், ‘‘வக்கீலாய் நின்று வழிப்பறியே செய்கின்ற திக்கிலார்’’ என்ற வெண்பா பாடலை நெல்லையப்பருக்கு எழுதி அனுப்பினார். சிறைத் தண்டனையைப் பயன்படுத்தி, சுதேசிக் கப்பல் கம்பெனியைப் பிரிட்டிஷ் அரசாங்கம் திட்டமிட்டுச் சீரழிக்கத் தொடங்கியது. வ.உ.சி. சிறை வாழ்வில் பட்ட துன்பங்கள் பற்றிய தகவல்களை ‘துன்பம் சகியான்’ என்ற புனைபெயரில் பாரதியின் ‘இந்தியா’ பத்திரிகைக்கு முதன்முதலாக அனுப்பிவைத்தார் நெல்லையப்பர்.
விடுதலைக்குப் பின்னரும் துயரம்
1912-ல் வ.உ.சி. விடுதலை அடைந்து வந்தபோது, அவரை வரவேற்கத் தேசபக்தர்கள் திரண்டு வரவில்லை. சுப்ரமணிய சிவாவும் சுரேந்திரநாத் ஆர்யாவும்தான் வந்திருந்தனர். காலச் சுழற்சி வ.உ.சி-யின் வாழ்வில் மோசமான வறுமையையும் சோகத்தையும் மட்டுமே தந்தது. திலகர் சகாப்தத்துக்குப் பிறகு, தோன்றிய காந்திய சகாப்த மாறுதல்கள் வ.உ.சி-க்கு உவப்பளிக்க வில்லை. சிறுவயல் என்ற கிராமத்தில் ப. ஜீவா நடத்திய ஆசிரமத்தைப் பார்வையிடச் சென்றார் வ.உ.சி. அங்குள்ள ராட்டைகளைப் பார்த்துவிட்டு, ‘‘இங்குள்ள இளைஞர்கள் நூல் நூற்கிறார்களா?’’ என்று ஜீவாவைக் கேட்டார். அவர் “ஆம்!” என்று சொன்னவுடன், ‘‘முட்டாள்
தனமான நிறுவனம்! வாளேந்த வேண்டிய கைகளால் ராட்டை சுற்றச் சொல்கிறாயே’’ என்று கோபப்பட்டார்.
சிறைத் தண்டனை அனுபவித்ததால் வழக்கறிஞர் பணியைத் தொடர இயலாமல் போய்விட்டது. குடும் பத்தைக் காப்பாற்ற மளிகைக்கடை நடத்தினார். மண்ணெண்ணெய் விற்றார். வெள்ளையர்களை எதிர்த்துக் கப்பல் கம்பெனியை நடத்திய வ.உ.சி-க்கு வியாபாரம் செய்யத் தெரியவில்லை.
இப்படியான இக்கட்டான சூழலில் வ.உ.சி-க்கு வழக்கறிஞர் உரிமையை மீட்டுத் தந்தவர் வெள்ளையர் நீதிபதி வாலஸ். நன்றிக் கடனாகத் தனது மகனுக்கு ‘வாலேசுவரன்’ என்று பெயரிட்டார் வ.உ.சி.
தமிழ்ப் பணி
பல துயரங்களுக்கிடையே வ.உ.சி-யை மனதளவில் ஆசுவாசப்படுத்தியது தமிழ்ப் பணிதான். மதுரை பிரமானந்த சுவாமிகள் மடத்தில், சோமசுந்தர சுவாமி களிடத்தில் வ.உ.சி. ‘கைவல்ய நவநீதம்’ பயின்றார். ‘சிவஞான போத’த்துக்கு வேதாந்த அடிப்படையில் உரை எழுதினார். சைவதீட்சை பெறாத வ.உ.சி. மெய்கண்டார் அருளிய ‘சிவஞான போத’த்தின் உரையை சைவ சமயத்தினர் மறுத்தனர். வ.உ.சி-யின் அன்புக்குப் பாத்திரமான சகஜானந்தர் வ.உ.சி-யின் நூல்களுக்குச் சிறப்புப் பாயிரம் எழுதியுள்ளார். ஜேம்ஸ் ஆலனின் ‘மனம் போல் வாழ்வு’, ‘அகமே புறம்’, ‘வலிமைக்கு மார்க்கம்’ போன்ற நூல்களை வ.உ.சி. மொழிபெயர்த்துள்ளார். திருக்குறள் - மணக்குடவர் உரையை அவர் பதிப்பித்தார். திருக்குறள் நீதிக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்ட மெய்யறம், சுயசரிதைப் படைப்பிலக்கியமும் படைத்துள்ளார்.
வ.உ.சி-யின் நீண்ட வாழ்வில், அரசியல்ரீதியாகப் புறக்கணிப்புக்கு உட்பட்டவராகத்தான் காணப்படுகிறார். வ.உ.சி-க்குச் சிலை அமைக்க ம.பொ.சி. முற்பட்டபோது, காங்கிரஸ் தன் கட்சி நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுத்தது. பல்வேறு போராட்டங்களுக்கு இடையேதான் வ.உ.சி-யின் சிலைவைப்பு விழா நடந்தேறியது. இறப்புக்குப் பின்னரும் துயர வரலாறு நீண்டாலும் மக்கள் மனதில் கப்பலோட்டிய தமிழராக மட்டுமல்லாமல் கப்பலோட்டிய இந்தியராகவும் கம்பீரமாக நிலைத்திருக்கிறார் வ.உ.சி.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக