பக்கங்கள்

திங்கள், 15 ஜனவரி, 2018

காணும் பொங்கல்


காணும் பொங்கல்

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது
கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம் , உறி அடித்தல் ,
வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும்.
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.
கணுப்பிடி
கணுப்பிடி இந்நாளின் சிறப்பு. இது ஒருவகை நோன்பு . உடன்பிறந்த சகோதரர்களுக்காக பெண்கள் செய்யும் நோன்பு. உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்திப்பது.


காணும் பொங்கல் கொண்டாடுவது ஏன்?

பொங்கலுக்கு முதல் நாள் மார்கழி மாதத்தின் கடைசி நாளாகும். மனதில் உள்ள தீய எண்ணங்களும், தவறான உணர்வுகளும் நீக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். போக்கி என்ற சொல் மருவி போகி என்றானதாகவும் சொல்வார்கள். சூரியனுக்கு நன்றி கூறும் தினம் பொங்கல் தினமாகும். வயலில் விளைந்த அரிசியை புதுப்பானையில் இட்டு கருப்பஞ்சாறு, பசுவின் மடி சுமந்த பால், நெய், மழையில் நிறைந்த நீர், இப்படி இயற்கையின் கூறுகளை இணைத்து சுவையான பொங்கலைப் படைப்பர். தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப் பொங்கல் தமிழர்களால் கொண்டாடப்படும் வழக்கமாகும். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்பட்டு ஆவினம் வணங்கப்படும். உழவுக்கும், பால் தரும் ஆவினங்களுக்கும் நன்றி சொல்வதாகும். மாடுகளை நீராட்டி மாடுகளின் கொம்புகளை சீவி, பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் அலங்கரிப்பர். காணும் பொங்கல் எனப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப் பண்டிகை கணுப் பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது. உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்திப்பது. ஆமாம் அது ஒருவகை நோன்பு. உடன்பிறந்த சகோதரர்களுக்காய் பெண்கள் செய்யும் நோன்பு. கார்த்திகை எண்ணெயும் கணுப்பிடியும் உடன்பிறந்தானுக்கு என்பது பழமொழி. அதாவது கார்த்திகை மாதம் எண்ணெய் தேய்த்துக் குளித்து விளக்கு வைப்பதும், பொங்கலில் பொங்கிய பால் சாதத்தை உடன்பிறந்தவர்களின் நலத்திற்காக காணும் பொங்கல்தினம் காக்கா குருவிகளுக்கு அன்னமிடுவதும் இந்தப்பழமொழியின் விளக்கம்.
இரண்டு மஞ்சள் இலைகளை அல்லது வாழை இலைகளை கிழக்கு முகமாய் ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ கோலமிட்டு அதன்மீது வைக்கவேண்டும். முதல் நாள் பொங்கிய சாதத்தில் மஞ்சள் பொடி தூவி மஞ்சள் சாதம் கொஞ்சம், குங்குமம் கலந்த சிவப்பு சாதம் கொஞ்சம், வெள்ளையாய் பால் சாதம் கொஞ்சம், வெல்லம் சேர்த்த சக்கரைப் பொங்கல் கொஞ்சம் லேசாய் தயிர் சேர்த்த தயிர்சாதம் என ஐந்து வகை அன்னங்களை தயாரிக்க வேண்டும். ஒவ்வொன்றிலும் 5 அல்லது 7 பிடி எடுத்து இலைமீது வரிசையாய் வைக்கும் போது, ‘காக்காப்பிடி வச்சேன் கணுப்பிடி வச்சேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணம். கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம். கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும்‘ என்று சொல்லிக்கொண்டே வைக்க வேண்டும். தீபம் ஏற்றிவிட்டு ஆரத்தி கரைத்து ஆற்றில் விடவேண்டும்.



பெண்கள் மகிழ்ச்சியைக் காணும் பொங்கல்!

பெரும்பகுதி நேரத்தைக் குடும்பத்துக்காகவும் அலுவலக/வீட்டு வேலைகளுக்கும் செலவிடும் பெண்கள், தங்களுக்காக நேரம் செலவிடும் வாய்ப்புகள் அரிதாகவே அமைகின்றன. மகளிர் தினம், அன்னையர் தினம் போன்ற நாட்களில் பெருநகரங்களில் மட்டும் பெண்கள் ஓரளவுக்குத் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதற்கான சூழல் உருவாகியுள்ளது. கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் பெண்களுக்கான கொண்டாட்ட வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே உள்ளன. ஆனால், ரோட்டில் உள்ள ஒரு பூங்காவில் ஆண்டுதோறும் பெண்கள் மட்டும் பங்கேற்கும் காணும் பொங்கல் கோலாகலத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டுவருகிறது!
மகளிர் மட்டும்
ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று காலை 10 மணியிலிருந்து களைகட்டுகிறது ஈரோடு வ.உ.சி.பூங்கா. அன்றைய நாளில் பெண்களுக்கு மட்டுமே பூங்காவுக்குள் அனுமதி. ஆண்களில் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு.
இந்தப் பெண்கள் திருவிழாவையொட்டி வ.உ.சி. பூங்கா மைதானம் வழியாகச் செல்லும் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்படுகிறது. வழக்கமாகத் தள்ளுவண்டி வியாபாரம் செய்யும் ஆண்களுக்குக்கூட அன்று பூங்காவுக்குள் அனுமதியில்லை.
வயதானவர்கள் தங்களுக்குள் கதை பேச, நடுத்தர வயதினரும் சிறுமியரும் ஆசைதீர ஊஞ்சல் ஆடுவது உள்ளிட்ட விளையாட்டுகளில் திளைக்க, இளம் பெண்களோ அதிரவைக்கும் பாடல்களை ஒலிக்கவிட்டு நடனமாடத் திருவிழா களைகட்டும். வீட்டிலிருந்து கொண்டுவந்த கரும்பு, தின்பண்டங்களை அனைவரும் பங்கிட்டுச் சுவைத்து, காணும் பொங்கலுக்குக் கூடுதல் இனிப்பைச் சேர்ப்பார்கள்.
மறக்கப்படாத மரபுகள்
மரபான வழக்கங்களையொட்டி வீட்டில் இருந்து எடுத்து வரும் பிள்ளையாருக்குப் பூஜை செய்து கரைப்பதோடு கும்மிப்பாட்டு, கோலாட்டம் ஆடுபவர்களும் உண்டு. சொந்தங்கள், நட்புகளை அடையாளம் கண்டு பசுமை நிறைந்த நினைவுகளைப் பேசும் களமாகவும் இந்தத் திருவிழா இருக்கிறது.
கபடி, கண்ணாமூச்சி, நொண்டி, பாட்டுப் போட்டி, நடனப் போட்டி எனப் பெண்கள் தங்களுக்குள் போட்டிகளை நடத்தி, வெற்றிபெற்றவர்களைக் கொண்டாடுவார்கள். இசைக் கருவிகளை இசைக்கத் தெரிந்த பெண்கள், அவற்றுடன் ஆஜராகி தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். மற்றவர்கள் ஆட்டமும் பாட்டுமாகச் சேர்ந்துகொள்ள அந்தப் பகுதியே கொண்டாட்டத்தில் திளைக்கும்.
உற்சாகத் திருநாள்
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் திருவிழாவில் பங்கேற்றுவரும் ஈரோட்டைச் சேர்ந்த இல்லத்தரசி செண்பகவள்ளி, “பொங்கலன்று சர்க்கரைப் பொங்கல் வைக்கும்போது பிள்ளையார் பிடித்து, அதற்குப் பூஜை செய்வது வழக்கம். அதேபோல், முளைப்பாரியும் விடுவோம். வழிபாடு செய்த பிள்ளையாரையும் முளைப்பாரியையும் எடுத்துக்கொண்டு வ.உ.சி. பூங்காவுக்குச் செல்வோம். அங்கு வழிபட்ட பின் பிள்ளையாரைத் தண்ணீரில் கரைத்துவிடுவோம். கிராமங்களில் ‘பூப்பறிக்க வர்றீங்களா’ என்ற பெயரில் கிராமப் பெண்கள் ஒன்றுகூடி கும்மிப்பட்டு, கோலாட்டம் ஆடி, கொண்டுவந்த தின்பண்டங்களைப் பகிர்ந்து உண்பது வழக்கம். நகரப் பகுதியில் அதற்கென எங்களுக்குப் பூங்காவை ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். இங்கு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, பெண்கள் மட்டும் பங்கேற்கும் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டுவருகிறது. அந்தக் காலத்திலும் பாட்டு, நடனம் என உற்சாகம் இருந்தது. காலத்துக்கு ஏற்ப இப்போது கொஞ்சம் வேகம் அதிகரித்திருக்கிறது” என்றார்.
ஆண்டுதோறும் இந்த விழாவில் பங்கேற்கும் மோகனப்பிரியா, தோழிகளுடன் ஒன்றுசேர்ந்து விட்டால் உற்சாகமாகப் பொழுது கழியும் என்கிறார். “என் அம்மா அவருடைய தோழிகளைக் கூட்டத்தில் கண்டுபிடித்து மணிக் கணிக்கில் பேசுவாங்க. அனைத்து வயதுப் பெண்களும் ஒன்றுகூடி, குதூகலமாய் இருப்பதைப் பார்க்கும்போது மனதுக்கு நிறைவா இருக்கும். இந்த ஆண்டு காணும் பொங்கலுக்காகக் காத்திருக்கிறேன்” என்கிறார் உற்சாகத்துடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக