பக்கங்கள்

புதன், 21 மார்ச், 2018

உலக தண்ணீர் தினம் மார்ச் 22.



உலக தண்ணீர் தினம் மார்ச் 22.

உலக நீர் நாள் ( World Day for Water அல்லது World Water Day), ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டு தோறும்
மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்படி 1993 , ஜனவரி 18 ஆம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் நாளும் உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது.
நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது என்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும். அதேவேளையில் மக்களிடையே விரிவாக பிரச்சாரம் செய்து மக்களிடையே அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வளர்த்தி ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
2003 இல் 58வது ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற தீர்மானம் ஒன்றின் படி 2005 முதல் 2015 வரையான காலப்பகுதி "பத்தாண்டுகளுக்கு உயிர் வாழ்வதற்கு நீர்" எனும் அனைத்துலக செயல் திட்ட காலமாக அறிவிக்கப்பட்டது. 2005ம் ஆண்டு மார்ச் 22ம் நாளன்று இந்த நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
நீர்த் திட்டம் குறித்து ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் ஏதாவது ஒன்று ஒவ்வோர் ஆண்டும் அனைத்துலக மட்டத்தில் நீர் வளப் பாதுகாப்புக் குறித்த செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து அதனை உலக நீர் நாளில் முன்னெடுப்பதும் ஐநா நிறுவனத்தின் திட்டம் ஆகும். இத்திட்டத்தின்படி 2006 ஆம் ஆண்டுக்கான உலக நீர் நாள்
யுனெஸ்கோவினால் "நீரும் கலாசாரமும்" ( Water and Culture ) என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.
2007 இல், "நீர் பற்றாக்குறையுடன் ஒத்துழைப்பது" ( 'Coping with Water Scarcity' ) என்ற தொனிப்பொருளில் FAO அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.

கருப்பொருள்கள்

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட ஒரு கருப்பொருளைக் கொண்டு இந்த நாள் நினைவில் கொள்ளப்படுகின்றது.
2018 - இயற்கைக்காக தண்ணீர்
2017 - ஏன் நீரினை வீணாக்க வேண்டும்?
2016 - சிறந்த நீர், சிறந்த தொழில்கள்
2015 - நீரும், நிலையான மேம்பாடும்
2014 - நீரும் ஆற்றலும்
2013 - நீர் நிறுவனம்
2012 - தண்ணீர் மற்றும் உணவு பாதுகாப்பு
2011 - நகரங்களுக்கு தண்ணீர்- நகர்ப்புற மாற்றங்களுக்கு பதிலளித்தல்
2010 - தரமான நீர்
2009 - தண்ணீர் மற்றும் வாய்ப்புகள் பகிர்ந்துகொள்ளல்
2008 - சுகாதாரத்திற்கான ஆண்டு
2007 - தண்ணீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளல்
2006 - நீரும் பண்பாடும்

நோக்கம்

நீர்வளத்தைக் காப்பதும், அதனைப் பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும்.


உலக தண்ணீர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 1993-ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 22-ஆம் தேதியை உலக தண்ணீர் ‌தினமாக கொண்டாடித்தான் வருகிறோமே தவிர, தண்ணீர் சிக்கனம் என்பது ஒவ்வொரு மனிதனிடமும் இன்றுவரை காணப்படவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல கோடி மக்கள் தண்ணீரின்றி ‌திண்டாடி வரும் ‌நிலையும் எந்த வகையிலும் அகலவில்லை.
நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும்.
நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, ‌நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும் நன்கு அறிந்ததே. பூமியில் 30 ‌விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். ‌மீதமிருக்கும் 70 ‌விழுக்காடும் ‌நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 ‌விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான ‌நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது.
உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.ஆனால் உரிய முறையில் நீரை மறுசுழற்சி செய்தால் அந்த தட்டுப்பாடு குறையும் என்கின்றனர் நீரியல் ஆய்வாளர்கள்.
இதுமட்டுமின்றி அன்றாடம் செய்யும் சிறுசிறு வேலைகளும் தண்ணீர் சேமிப்புக்கு வழிவகுக்கும். பல் துலக்கும் போது குழாயை அடைத்துவிட்டு பல் துலக்கலாம் இதன்மூலம் நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும், தண்ணீர் குழாயை பயன்படுத்தி முடித்த பிறகு மறக்காமல் குழாயை அடைப்பதும் வீணாக திறந்திருக்கும் குழாய்களை பார்த்தால் அதை அடைப்பதும் தண்ணீர் சேமிப்பிற்கு வழிவகுக்கும்.
தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும்போது தண்ணீர் நிரம்பி வீணாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். புதியதாக வீடு மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் சேர்த்து கட்டுவதன் மூலம் நீர் வீணாகாமல் பார்த்து கொள்வதோடு சேமிக்கவும் முடியும்.
உலக தண்ணீர் தினத்தை ஒரு நாளாக மட்டும் கடைபிடிக்காமல் ஒவ்வொரு நாளும் தண்ணீரின் தேவையையும், சிக்கனத்தையும் மனதில் வைத்தே செயல்பட வேண்டும். தண்ணீர் குடிக்காமல் உங்களால் எத்தனை நாட்கள் அதிகப்பட்சமாக வாழ்ந்திட வாழ முடியும்?. ஒரு வாரம் கூட என வைத்துக்கொள்வோம். ஆனால் அதற்கு மேல் நம்மால் வாழ முடியாது. எனவே தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொரு துளி தண்ணீரையும் காப்பது நம் தலையாய கடமை.


உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்....

இன்று உலக தண்ணீர் தினம். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. ‘வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப்’ என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர். கடந்த 1992ம் ஆண்டு ஐ.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22&ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரைதான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. மக்களின் தேவையை இந்த தண்ணீர் பூர்த்தி செய்வது கேள்வி குறிதான்.
உலகில் கிடைக்க கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுக்க தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
மாசுபட்ட குடிநீரால் டைபாய்டு, அமிபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரியாசிஸ், கொக்கி புழு, தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது.
நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். ‘தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம். நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம்’ என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவோம்.


நீர்வளம் நம் உயிர்நலம்

தமிழகத்தில் சில மாதங்களுக்குமுன் உயிர்களையும் உடமைகளையும் காவு வாங்கியதோடு, லட்சக்கணக்கானோரின் இயல்பு வாழ்க்கையையும் புரட்டிப்போட்டது பெருவெள்ளம். அனைத்தையும் இழந்து இன்றும் நடைபிணமாக அலைபவர்கள் ஏராளம். இந்தச் சேதத்துக்கான முக்கியகாரணம் வானம் பொத்துப் பெய்த மழைமட்டுமல்ல. நீர்மேலாண்மையில் நாம் தோற்றுப்போனதும்தான்.அசுரத்தனமாகப் பெய்த இந்த மழைக்கு, புவிவெப்பமயமாதல்தான் பிரதான காரணம் என்றாலும், இனி இப்படித்தான் இருக்கும். அதிக வெப்பத்தையும் அனுபவிக்கவேண்டியதிருக்கும். அதிக மழையையும் எதிர்நோக்க வேண்டியதிருக்கும். வருங்காலங்களில் தமிழகத்தில் பருவ மழை பெய்யும் நாட்கள் குறையலாம்.
ஆனால், மழையின் அடர்த்தி 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கும். அதாவது 42 நாட்களாக நீடிக்கவேண்டிய பருவ மழைக்காலம், 30 நாட்களாகச் சுருங்குவது மட்டுமன்றி, ஐந்து, ஆறு மணி நேரம் பெய்ய வேண்டிய மழை இரண்டு, மூன்று மணி நேரத்தில் பெய்து தீர்த்துவிடும். குறைந்த நேரத்தில் கொட்டித்தீர்க்கும் மழையை, எதிர்கொள்ள நாம்தான் தயாராக இருக்கவேண்டும். நமது நீர்நிலைகளைத் தயாராக வைத்திருக்கவில்லை யெனில், வெள்ளச் சேதம் தவிர்க்க முடியாததாகிவிடும். மழை நீரைச் சேமிக்கவில்லையென்றால் கோடையில் கடும் வறட்சி தலைகாட்டும்.
மழை மறைவு பிரதேசம் :ஏன் நீர்நிலைகளில் நீரை சேமிக்கவேண்டும்? எனக் கேட்கலாம். தமிழகம் மழை மறைவு பிரதேசம். தேசத்தின் மக்கள் தொகையில் தமிழகம் 7 சதவிகிதம். ஆனால், நீர்வளத்தில் 3 சதவிகிதம்தான். இந்தியாவின் ஆண்டு சராசரி மழையளவு 1,170 மி.மீ. தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை 925 மி.மீ. இது, தேசிய சராசரியை விடக்குறைவு.உலக நீர்வளத்தில் மனிதன் பயன் படுத்தக் கூடிய நீரின் அளவு 48000 கன கிலோ மீட்டர். இதில் தமிழ்நாட்டில் 4.8 கனகிலோ மீட்டர்தான் உள்ளது. இது, உலக அளவில் பத்தாயிரத்தில் ஒரு பங்கு. ஆனால் தமிழ்நாட்டின் மக்கள் தொகை உலகில் நுாறில் ஒரு பங்கு. மக்கள் தொகையில் நுாறில் ஒரு பங்கு இருந்தாலும் கிடைக்கும் நீரின் அளவோ பத்தாயிரத்தில் ஒரு பங்குதான். இதிலிருந்தே தமிழ்நாடு மிகமிக அதிக நீர் பற்றாக்குறையோடு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள இயலும். அதனால் நீர்நிலைகளில் மழைநீரை சேமித்தல் அவசியமாகிறது.


நீர் ஆதாரங்களை உருவாக்குதல் :தண்ணீரின் தேவையையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்தவர்கள் பண்டைத் தமிழர்கள். பண்டை மன்னர்கள் ஒரு கிராமத்தை உருவாக்கும் போது அங்கு நீர்ஆதாரங்களையும் ஏற்படுத்தினர். "காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கினர்". நாட்டில் குளம் வெட்டினால் தான் நலம் பெருகும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்திருந்தனர் என்பதற்கு இந்தப் பட்டினப்பாடல் வரி சான்று. நீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்திய முறையை மணிமேகலையிலுள்ள "கருங்கை" என்ற வார்த்தை சான்றளிக்கிறது.
தஞ்சைப் பெரியகோவில் வளாகத்தில் பெய்யும் மழை நீர் முழுமையும், சேமிக்கும் இடமாகச் சிவகங்கைக் குளத்தை மன்னன் ராஜராஜன் அமைத்தான் என்ற கல்வெட்டு செய்தி மூலம் நீர்சேமிப்பில் தமிழ் மன்னர்களின் கரிசனம் புலனாகிறது. நீர்நிலைகளைப் பழுதுபார்த்ததையும், கரைகளைச் செப்பனிடப்பட்டதையும் கல்வெட்டு செய்தி மூலம் அறிகிறோம். அன்று நாம் நீர்மேலாண்மையில் கில்லாடிகளாகத்தான் இருந்தோம். ஆனால் இன்று...? பெய்யும் மழையைக் கூட சேமித்து வைக்க முடியவில்லை.
எங்கே நீர்நிலைகள்:1970--80 காலகட்டத்தில் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது. அந்தப் புள்ளி விபரப்படி தமிழகத்தில் 39,202 ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் இருப்பதாகக் கூறப்பட்டது. இதில் எத்தனை நீர்நிலைகள் இருக்கின்றன? என்பது ஆக்கிரமித்தவர்களுக்கே வெளிச்சம். "தமிழ்நாட்டிலுள்ள 39,202 கண்மாய்களில் 10 சதவிகிதம் அழிந்து போய்விட்டன' என்று அதிரவைக்கிறது சர்வதேச நீர் மேலாண்மை மையம். அதாவது சுமார் நான்காயிரம் கண்மாய்கள் அழிந்துவிட்டன. நீர் தேங்கி வந்த இடங்கள் அரசியல் செல்வாக்கினாலும், அதிகாரிகள் துணையாலும் மெல்ல மெல்ல ஆக்கிரமிப்புக்கு உள்ளாயின. "வளர்ச்சி" என்ற பெயரில் அரசும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யத் தவறவில்லை.
2015-ல் ஏற்பட்ட சேதத்துக்கு கொட்டிய மழைதான் காரணம் என நாம் சொல்வது தவறு. 1976, 1985, 1996 மற்றும் 2005லும் அதிகளவு மழை பெய்து உள்ளது. எனவே நீர்நிலை கொள்ளையே சேதத்துக்குக் காரணம். வரும் காலங்களிலாவது, அரசு மேற்கொள்ளும் திட்டங்களுக்கும் நீர்நிலைகளைப் பயன்படுத்திடக் கூடாது. நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும்.
சீனத்து வேளாண்மையின் அடிப்படையே நீர் மேலாண்மைதான். மக்கள் சீனம் மலர்ந்த போது, கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு எல்லாம் நீர் மேலாண்மை பற்றி மாவோ பயிற்சி வழங்கியதாக சீன வரலாறு சொல்லுகிறது.இப்போது நெல் உற்பத்திக்கு ஒரு டன் நெல்லுக்கு ஆயிரம் டன் தண்ணீர் என்ற அளவு குறைக்கப்பட வேண்டும். நுாறு டன் நீரே போதும் என்பதே நவீன விஞ்ஞானத்தின் முடிவு. நீர் பயன்பாட்டில் 91 சதவிகிதம் விவசாயத்திற்கு செல்கிறது என்பதால் இந்த நடவடிக்கை அவசியம்.
குறைந்த நீர் தேவைப்படும் சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு, சோளம், மக்காசோளம், தினை, வரகு போன்ற பயிர் வகைகளை பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்கவேண்டும். இதனால் பாசனத்திற்கு என செலவாகும் தண்ணீரை பெரும் அளவில் சேமிக்க முடியும். சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன முறைகளை கையாளலாம்.
தண்ணீர் சேமிப்பு:நாம் சேமிக்கும் ஒவ்வொரு துளி நீரும் நமக்குக் கிடைக்கும் கூடுதல் நீர் என்பதை முதலில் மனதில் நிறுத்திக் கொள்ளுதல் அவசியம். குழாயைத் திறந்து வைத்து ஹாயாகக் குளிக்காமல் வாளியில் நீரை பிடித்துக் குளியுங்கள். 22 லிட்டர் வரை சேமிக்கலாம். மேற்கத்திய கழிவறைகளுக்குப் பதிலாக, நமது நாட்டு கழிவறை கோப்பைகளை பொருத்துவதால், ஒரு முறைக்கு 12 லி., நீரை சேமிக்க முடியும். ஒவ்வொரு நீர்நிலைகளையும் பொதுச்சொத்தாக அறிவித்து, அதனால் பயன்பெறும் பயனாளிகளைக் கொண்ட உள்ளூர்க் குழுக்களை அமைக்கவேண்டும். மக்கள் கையில் நீர் நிர்வாகம் வரவேண்டும்.,
ஆறுகளிலும், நீர் நிலைகளிலும், நீரைத் தக்கவைப்பது மணல்தான். எனவே மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுக்க வேண்டும். நீர் வளத்தை பாதுகாத்திடவும், பராமரித்திடவும், சேமித்திடவும் தொடர்ந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் அவசியம்.
தண்ணீர் தினம்:தண்ணீரே வாழ்க்கையின் அடிப்படைக் கட்டுமானப் பொருள். உண்மையான வளர்ச்சிக்கு தண்ணீர் மிகவும் அவசியமானது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், பொருளாதார, சமூக மற்றும் மனித மேம்பாட்டுக்கும் அத்தியாவசியமானது. நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து மக்களிடம் உணர்த்த 'உலக தண்ணீர் தினம்' கொண்டாடப்பட வேண்டும் என்று ஐ.நா., 1992-ல் தீர்மானித்தது. இதையடுத்து ஆண்டு தோறும் மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம்
சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. "சிறந்த தண்ணீர்... சிறந்த வேலை" என்பதே இந்தாண்டு (2016) உலக தண்ணீர் தினத்தின் கோஷம்.தமிழகம் வறட்சியையும் வெள்ளத்தையும் மாறிமாறி சந்தித்துக்கொண்டிருக்கிறது. இப்போது கூட வெள்ள நிவாரணம் அல்லது வறட்சி நிவாரணம் இரண்டில் ஒன்றைத்தானே மாறிமாறி பெற்று வருகிறோம். இந்தநிலை மாறவேண்டும். நீர்நிலைகளைக் காப்பதன் மூலம் நீர்வளம் காப்போம். நீர்வளம், நிலவளத்தை உருவாக்கும். நிலவளம் என்பது நம் உயிர்நலம்.

உலக தண்ணீர் தினம்... கொண்டாடும் நிலையிலா இருக்கிறது தமிழகம்? #WorldWaterDay

மார்ச் 22-ம் தேதியான இன்று 'உலக தண்ணீர்தினம்'. 1993-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா சபையின் 47வது கூட்டத்தொடரில் உலக தண்ணீர் தினம் அறிவிக்கப்பட்டது. நீர்நிலைகளைக் காப்பதும், நீர்வளத்தைப் பெருக்குவதும்தான் உலக தண்ணீர் தினத்தின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக பூமியில் நிலப்பரப்பானது வெறும் 30 சதவிகிதம் மட்டும்தான். மீதம் இருக்கும் 70 சதவிகிதம் நீர்ப்பரப்பாகத்தான் உள்ளது. 70 சதவிகிதம் நீர்ப்பரப்பு இருந்தாலும் அதில் 97.5 சதவிகிதம் உப்பு நீர்ப்பரப்புதான் இருக்கிறது. இதில் நிலத்தடிநீர் வெறும் 2.5 சதவிகிதம்தான். அதில் பனிப்பாறைகளாகவும் பனித்தரைகளாகவும் உள்ளது போக மீத நன்னீர்ப் பரப்பு 0.26 சதவிகிதம்தான். இந்த நீரைத்தான் உலக மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

30 சதவிகிதம் நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கு 0.26 சதவிகிதம் நீர்தான் உயிராதாரம். இந்த நீரைத்தான் மனிதனின் தேவைகளுக்கும், விவசாயம் என பல வழிகளில் நாம் பயன்படுத்திக்கொள்கிறோம். கூடுதல் தண்ணீர்த் தேவைக்கு மழையையும் ஆறுகளையும் ஏரிகளையும்தான் நம்பி இருக்கிறோம். இன்று ஒருநாள் மட்டும் நீரைப்பற்றிப் பேசிவிட்டு மீதமுள்ள நாட்களில் அதனைப் பற்றி மறந்துவிடுகிறோம். தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் கடந்த 2016-ம் ஆண்டு வடகிழக்குப் பருவக்காற்றும், தென்மேற்குப் பருவக்காற்றும் ஏமாற்றிப்போனது. ஆனால் அதற்கு முந்தைய 2015-ம் ஆண்டில் பெய்தமழையை வரலாறு காணாத மழை என அறிஞர்கள் வர்ணித்தனர். ஆனால் பெய்த மழைநீரை முழுவதுமாகத் தேக்கி வைக்க முடியாமல் போனாலும், பாதியளவுகூட அப்போது தேக்கி வைக்கவில்லை என்பதே உண்மை. அன்று தண்ணீர் சூழ்ந்த குடியிருப்புகளில் சரிபாதி நீர்நிலைகளை அழித்துக் கட்டப்பட்டது என்பதை அந்த மழை உணர்த்தியது.
இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் குடிநீர்ப்பஞ்சம் ஏற்படும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு காரணம், போதிய மழையின்மையும், ஏரிகள் வறண்டு வருவதுமே ஆகும். இன்று நகரமையமாக்கல் என்ற பெயரில் நீர்நிலைகளை அழித்துக் குடியேறியதன் விளைவுதான் இன்றைய குடிநீர்ப்பஞ்சம். முன்னரெல்லாம் கோடைக்காலங்களில் வீட்டுக்கு வெளியே ஒரு பாத்திரத்திலோ அல்லது பானையிலோ தண்ணீர் வைக்கப்படும். அந்த வழியாகச் செல்லும் வழிப்போக்கர்கள் பானையில் உள்ள நீரை அருந்தி தனது தாகத்தைத் தணித்துக்கொள்வர். இன்றைய நிலையில் அதுபோன்ற காட்சிகளை எங்கே காணமுடிகிறது. இதற்கெல்லாம் காரணம் கட்சியையும், ஆட்சியையும் தக்கவைத்துக் கொள்ள தமிழகத்தை வறட்சிக்குத் தாரைவார்த்து விட்டனர், நம்மை ஆண்ட அரசியல்வாதிகள். காமராஜருக்குப் பின்னர் தமிழ்நாட்டில் நீர்த்தேக்கங்கள் கட்டப்படவில்லை என்பதே நாம் தண்ணீர் மேலாண்மையில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான ஆறுகள் இன்று வறண்ட நிலையிலும், கழிவுநீர் கலக்கப்பட்டு கொலை செய்யப்பட்டும் கிடக்கின்றன. இதற்கெல்லாம் கோடிகள் ஒதுக்கப்படுகின்றன, ஆனால் திட்டம் முழுமையாக நடந்து வளமடைந்ததா என்பது கேள்விக்குறிதான்.
கிராமப்புறங்களில் வாழும் இந்தியர்களில் 6.3 கோடி பேருக்கு சுத்தமான நீர் என்பது எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது என்று வாட்டர் எய்டு (WaterAid) அறிக்கை கூறுகிறது.
 தமிழ்நாடு தண்ணீருக்காக இன்று அண்டையில் இருக்கும் மூன்று மாநிலங்களிடமும் கெஞ்சும் நிலைதான் இருக்கிறது. தண்ணீருக்குத் தவிக்கும் தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி என்ற சொல்லைக் காட்டி இயற்கை எரிவாயுவையும் அணு உலையையும் தீர்வாகத் தருகிறது, மத்திய அரசு. இந்த வளர்ச்சி என்ற சொல் தமிழ்நாட்டு விவசாயிகள் தண்ணீரின்றி வறட்சியால் உயிர்விடும்போது எங்கே போனது என்று தெரியவில்லை... இந்த 'உலக தண்ணீர் தினம்' என்பது, கோடைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் தண்ணீரைப் பற்றிய விழிப்பு உணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டது. 'தண்ணீர் ஒரு மனிதனின் வாழ்வாதாரம்' என்பதை ஒவ்வொரு மனிதனும், அந்நாட்டு அரசும் புரிந்துகொள்ளும் வரையில் இதற்குத் தீர்வு கிடைக்காது. தமிழ்நாட்டில் வரும் கோடைக்காலம் வரலாறு காணாத வறட்சியாக இருக்கும் என்ற எச்சரிக்கையோடு தண்ணீரை
இப்போதிருந்தே சேமித்துப் பயன்படுத்த ஆரம்பிப்போம்.



நீரை சேமிக்க சில குறிப்புகள்

இந்த பிரபஞ்சமானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களால் ஆனது. இந்த ஐம்பூதங்களும் இல்லை என்றால் இந்த உலகத்தில் எந்த உயிரனமும் வாழ முடியாது. ஆனால் தொழில்நுட்ப யுகத்தில் வாழும் மனிதர்கள் இந்த ஐம்பூதங்களையும் மாசுபடுத்துகின்றனர். வளர்ச்சி என்ற பெயரில் இந்த உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் இயற்கையை அழித்து வருகின்றன.
இந்நிலையில் மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான தண்ணீரை பாதுகாக்க உலக தண்ணீர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தண்ணீரை சேகரிக்க சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1. பல் துலக்கும்போது குழாயை அடைத்துவிட்டு பல் துலக்கவும், இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணிரை சேமிக்க முடியும்.
2. தண்ணீர் குழாயை பயன்படுத்தி முடித்த பிறகு மறக்காமல் குழாயை அடைத்துவிட வேண்டும்.
3. வீணாக திறந்திருக்கும் குழாய்களை பார்த்தால் அதனை கண்டிப்பாக அடைக்க வேண்டும்.
4. ஷவரில் குளிக்கும் போது அதிக நேரம் நின்று கொண்டு தண்ணீரை வீணடிக்க கூடாது. ஷவரில் குளிக்கும் போது ஒரு நிமிடத்திற்கு 6 முதல் 45 லிட்டர் தண்ணீர் செலவாகிறது.
5. வெயில் காலங்களில் ஷவரில் குளிப்பதற்கு பதிலாக ஒரு வாளியில் தண்ணீரை பிடித்து வைத்துக்கொண்டு குளிக்கலாம்.
6. வாஷிங் மிஷினில் துணி துவைக்கும்போது முழு கொள்ளளவையும் பயன்படுத்த வேண்டும். குறைவான அளவு மட்டுமே துணிகளை துவைக்கும் போது அதிகமாக தண்ணீர் செலவாகும்.
7. அக்குவா ஃபினா, கென்ட் போன்ற தண்ணீர் வடிகட்டும் கருவியை பயன்படுத்தும்போது வீணாக செல்லும் தண்ணீரை ஒரு வாளியில் பிடித்து அதை துணி துவைக்கவோ அல்லது பாத்திரம் கழுவவோ பயன்படுத்தலாம்.
8. தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும்போது தொட்டி நிறைந்து தண்ணீர் வீணாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
9. சென்னை, கோவை போன்ற மாநகராட்சிகளில் லாரியில் தண்ணீரை பிடிக்கும்போது போட்டி போட்டுக்கொண்டு நீரை வீணடிக்காமல் பொறுமையாக தண்ணீர் பிடிக்கலாம்.
10. புதிதாக வீடு கட்டுபவர்கள் மழை நீர் சேகரிப்பு தொட்டியையும் சேர்த்து கட்டினால் உங்களுடைய வருங்கால சந்ததியினர் அதிகம் பயன்பெறுவார்கள்.

-நன்றி விக்கிபீடியா,புதியதலைறை,தினகரன்,தினமலர்,விகடன்.நியூஸ்7.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக