பக்கங்கள்

செவ்வாய், 19 ஜூன், 2018

உலக அகதி தினம் ஜூன் 20, (World Refugee Day )



உலக அகதி தினம் ஜூன் 20, (World Refugee Day )

உலக அகதி நாள் (World Refugee Day ), ஆண்டுதோறும் ஜூன் 20 -ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது.
2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆபிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20 இல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும்.
அன்றைய நாள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால் அரசியல், சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) ஒவ்வோர் ஆண்டும் இந்நிகழ்வுகளுக்கான கருப்பொருளைத் தீர்மானிக்கிறது.


ஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகிறது. ஆரம்பத்தில் ஜூன் 20 ஆபிரிக்க அகதிகள் தினமாகத்தான் Africa Refugee Day நினைவு கூரப்பட்டது.. பின்னர் இத்தினமானது 2000ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் United Nations General Assembly சிறப்புத் தீர்மானமொன்றின்படி, ஆபிரிக்க அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள்ளும், பிற நாடுகளுக்குள்ளும் இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கியமான நோக்கமாகும்.
உறவுகளை இழந்த மனிதன் அனாதை! சொந்த தேசத்தை இழந்தவன் அகதி! எனக் கூறுவார்கள். இங்கு தேசம் எனும்போது தான் வாழும் பிரதேசத்தை விட்டு அகன்ற நிலையையும் சுட்டிக் காட்டுவதாக இருக்கும். எனவே, அகதி எனும் பதத்துக்கு ஒரு திட்டவட்டமான வரையறை விதிக்க முடியாது. இத் தினத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு போர்களால் அரசியல், சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன...

அகதி என்பது, இனம், சமயம், தேசிய இனம், குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில் உறுப்பாண்மை, அரசியல் கருத்து என்பவை காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவரும்; அவருடைய நாட்டுக்கு அல்லது சொந்த இடத்துக்கு வெளியில் இருப்பவரும்; அந்நாட்டினுடைய பாதுகாப்பைப் பெற முடியாத அல்லது பயம் காரணமாக அவ்வாறான பாதுகாப்பை நாட விரும்பாதவருமான ஒருவரைக் குறிக்கும். 1951ம் ஆண்டின் அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு அகதிகள் பற்றி மேல் குறிப்பிட்டவாறு வரைவிலக்கணம் தருகிறது. அகதி என்ற கருத்துரு, மேற்படி உடன்பாட்டின் இணைப்புக்கள் மூலமும், ஆபிரிக்காவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் நடைபெற்ற பிரதேச மாநாடுகளிலும் விரிவாக்கம் பெற்றது. இதனால், சொந்த நாட்டில் இடப்பெறும் போர் அல்லது வேறு வன்முறைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறுபவர்களும் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. தன்னை அகதியாக ஏற்றுக்கொள்ளும்படி விண்ணப்பிக்கும் ஒருவர், அகதித் தகுதி கோருபவர் எனப்படுகின்றார்.
அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு என்பது அகதி என்பவர் யார் என்பதையும், அவர்களின் உரிமைகளையும், புகலிடம் கொடுத்த நாடுகளின் பொறுப்புகளையும் வரையறை செய்த அனைத்துலக உடன்பாடு ஆகும். இது டிசம்பர் 4, 1952 அன்று டென்மார்க்கில் முதலில் ஏற்புறுதி செய்யப்பட்டது. இதுவரை 147 நாடுகள் இந்த உடன்பாட்டை உறுதிசெய்துள்ளன. இரண்டாவது உலகப் போரைத் தொடர்ந்து, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து ஏராளமானவர்கள் வெளியேறியதைத் தொடர்ந்தே அகதிகள் ஒரு சட்டபூர்வமான குழுவாக வரையறுக்கப்பட்டனர். அகதிகள் பாதுகாப்புத் தொடர்பான ஒருங்கிணைப்பு வேலைகளைச் செய்வது, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் United Nations High Commissioner for Refugees (UNHCR) ஆகும். இந்நிறுவனம் 2006 இல் உலகிலுள்ள மொத்த அகதிகள் தொகையை 8.4 மில்லியன் எனக் கணக்கிட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க அகதிகள் மற்றும் குடிவருவோருக்கான குழு உலகின் மொத்த அகதிகள் தொகை 12, 019, 700 என்கிறது. அத்துடன் உள்நாட்டிலேயே அகதியானோர் உட்பட போரினால் இடம்பெயர்ந்த மொத்த அகதிகள் 34, 000, 000 எனவும் இக்குழு மதிப்பிட்டுள்ளது. 2009ம் ஆண்டு ஜுன் மாதத்தில் பிபிசி உலக சேவை வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி மோதல்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான துன்புறுத்தல்கள் காரணமாக உலகில் சுமார் 42 மில்லியன் மக்கள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையம் மதிப்பிட்டுள்ளது என செய்தி வெளியிட்டிருந்தது.
ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகளில் மோசமடைந்துவரும் பாதுகாப்பு நிலைமை காரணமாக குறைந்த அளவிலானோரே தமது குடியிருப்புகளுக்கு திரும்ப முடிந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்த்தானுகராலயம் தெரிவிக்கின்றது. அகதிகளை பராமரிப்பதற்கான பிரதான பொறுப்பு அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் மீதே சுமத்தப்படுவாகவும் உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிடுகின்றது.ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது தென்னாபிரிக்காவே அதிக அளவான தஞ்சமடைவோரின் விண்ணப்பங்களை பெறுகின்றமையும் இந்த எண்ணிக்கை அமெரிக்காவை விட நான்கு மடங்கு அதிகமானதென்பதும் குறிப்பி்டத்தக்கது.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் United Nations High Commissioner for Refugees (UNHCR) அல்லது ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானியம் என்னும் ஐக்கிய நாடுகள் அமைப்பானது அகதிகளைப் பாதுகாப்பதற்கும், ஆதரவளிப்பதற்கும், அரசின் அழைப்பினாலோ அல்லது ஐக்கிய நாடுகளின் அழைப்பினால் அகதிகளை மீளத் திரும்புவதற்கோ அல்லது மீள் குடியமர்விற்கோ உதவுவதைக் கருப்பொருளாகக் கொண்டதாகும். 14 டிசம்பர் 1950ல் ஆரம்பிக்கப்பட்ட இவ் அமைப்பின் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் அமைந்துள்ளது. இவ்வமைப்பானது ஐக்கிய நாடுகளின் உதவி மற்றும் மீள்குடியேற்ற நிர்வாகம் மற்றும் சர்வதேச அகதிகள் அமைப்பின் வழிவந்த அமைப்பாகும். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் 1954லும் 1981லும் சமாதானத்திற்கான நோபல் பரிசினை வென்றுள்ளது. இவ்வமைப்பானது உலகளாவிய அகதிகள் பிரச்சினையை முன்னின்று மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் செயற்பட்டு அகதிகளைப் பாதுகாத்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வருகின்றது.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் United Nations High Commissioner for Refugees (UNHCR) வரையறுத்துள்ளபடி, அகதிகள் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுகள், அகதிகள் தாமாகவே சொந்த நாட்டுக்குத் திரும்புதல், குடியேறிய நாட்டிலேயே கலந்துவிடுதல், மூன்றாம் நாடு ஒன்றில் குடியேற்றுதல் என்பனவாகும். 2005 ஆம் ஆண்டு நிலையின் படி மிக அதிகமான அகதிகள், பாலஸ்தீனப் பகுதிகள், ஆப்கனிஸ்தான், ஈராக், மியன்மார், சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆகும். உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரை அதிகமாகக் கொண்ட நாடு சூடான் எனப் படுகின்றது.
இலங்கையிலும் அகதிகள் பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. இலங்கையில் உள்நாட்டினுள்ளே எத்தனை பேர் அகதிகளாக உள்ளார்கள் என்ற சரியான புள்ளிவிபரம் வெளியிடப்படாவிடினும்கூட, கணிசமான எண்ணிக்கையினர் அகதிகளாக இருக்கலாம் என கருத இடமுண்டு.
2007ம் ஆண்டு அகதிகள் நாளையொட்டி தமிழர்களின் அகதி வாழ்க்கை குறித்த அறிக்கை ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள்
வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கைப் பிரகாரம் வட பகுதியிலிருந்து ஏப்ரல் 2006 முதல் 2007ம் ஆண்டு வரை 3 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையம் தெரிவித்திருந்ததாக கூறப்பட்டிருந்தது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில் ஒரு மிகக் குறிப்பிட்ட காலத்திலேயே மிகப் பெரும் தொகையான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 2004ம் ஆண்டு ஆழிப்பேரலையின் போது 3,50,000 பேர் தமிழர் தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட சிங்கள பொதுமக்களுக்கு அனைத்துலக உதவியுடன் நிரந்தரமான வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. பெருந்தொகையான பாதிக்கப்பட்ட தமிழ் மக்களோ இன்னமும் தற்காலிக முகாம்களில்தான் வசித்து வருகின்றனர். தமிழ் மக்களுக்கான ஆழிப்பேரலை நிதி உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் தடுத்துவிட்டது. மழையாலும் வெள்ளத்தாலும் அந்த மக்கள் மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் தமிழர் தாயகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் அனைத்துத் தமிழர்களுமே ஒரு முறையேனும் இடப்பெயர்வுக்குள்ளாகி இருக்கின்றனர் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், 1983ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளால் கொழும்பிலிருந்தும் தமிழர் தாயகத்திலிருந்தும் பெருந்தொகையான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர் என்றும் கூறப்பட்டிருந்தது.
அதேநேரம், 1990களில் வட புலத்திலிருந்து முஸ்லிம்கள் அப்பிரதேசத்திலிருந்து துரத்தப்பட்ட நேரம் சுமார் 1 லட்சம் அளவில் இன்னும் அகதிகளாவேயுள்ளனர். எமது இலங்கiயில் 30 ஆண்டு யுத்தத்தால் சொந்த மண்ணிலேயே அகதிகளானோரும், அகதிகளாகப் புலம் பெயர்ந்தோரும் அனாதைகளானோரும் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக நடைபெற்ற யுத்தத்தினால் இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக இந்தியாவின் தமிழ்நாட்டிலும் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த 1983-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளில் கடும் சண்டை நடந்தது. அப்போது 1 லட்சத்து 34 ஆயிரத்து 53 பேர் அகதிகளாக தமிழ் நாட்டுக்கு வந்தனர் எனக் கூறப்பட்டது. இவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 117 முகாம்களில் 75,738 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. மறுபுறமாக 2009ஆம் ஆண்டு வட புலத்தில் நடந்த இறுதி யுத்தத்தின் போது சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாகியுள்ளனர்.
அகதிகளின் பொதுவான வாழ்க்கை நிலையை நோக்கும்போது இவர்களின் அன்றாட அடிப்படை இன்னல்களையும் சிக்கல்களையும் உலக அரங்கிலும் உள்ளநாட்டு மக்கள் மத்தியிலும் புலப்படுத்துவதற்காக அனுஷ்டிக்கப்படுவதே இந்த அகதிகள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது எனலாம். இதனை வேறு வகையில் குறிப்பிடுவதாயின் வாழ்கை சிதைக்கப்பட்ட நிலையில் உயிர் வாழ்தல் ஒன்றைத் தவிர வேறு எந்த பலனும் இல்லாத அகதிகளின் மனக் குமுறல்களை வெளி உலகம் உணர வேண்டும் என்பதே இத் தினத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.. ஆனால் உலகம் உணர்ந்ததா என்பது கேள்விக் குறியே! அழகான இச்சிறு கோளினைச் சீரழித்து வரும் அனைத்து யுத்தங்களுமொழிந்து, உலகமெங்கனும் சமாதானமும், அமைதியும் , இன்பமும் மலர்ந்திட, அனைத்து அகதிகளின் வாழ்விலும் நல்ல ஒரு விடிவு காலம் வர இந்த உலக அகதிகள் தினம் உதவியாக இருக்குமெனில் சந்தோஷமே!!
நன்றி ஒன்  இந்தியா.

''ஜூன் 20 உலக அகதிகள் தினம்: கண்ணீரில் மிதக்கும் ஈழம்! விகடன்.
''நீரற்றது கடல்
நிலமற்றது தமிழ்
பேரற்றது உறவு''
முள்ளிவாய்க்காலில் சிதைக்கப்பட்ட ஈழ தமிழினத்தின் கொடும் வலியை, எட்டு திக்கிலும் தூக்கி வீசப்பட்ட ரணத்தை, தாய்மண்ணை இழந்த பெருங்கோபத்தை, அகதி வாழ்வின் ஆற்றாமையோடு.. ஈழத்து கவிஞர் சேரன் வெம்பி அழுத 'பெயரற்ற' கவிதை இது!
தாயை, தந்தையை, அக்காவை, அண்ணனை, தங்கையை, தம்பியை, பிள்ளையை, உறவை, வாழ்வை, பிறந்த மண்ணை, விளையாடிய தெருவை, படித்த பள்ளியை யுத்தத்திற்கு தின்னக் கொடுத்து விட்டு... எல்லையை கடக்கும் அப்பாவிகள் சிந்தும் கண்ணீரே நம் கண்களுக்கு பெருங்கடலாக காட்சியளிக்கிறது!
உலகம் முழுவதும் வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகி, அகதிகளாக அலையும் அபலைகளின் வலியை, வாழ்வின் நிமித்தம் கசியும் அழுகுரலை, மிச்சமாய் ஏதேனும் உரிமை கிடைக்குமா என ஏங்கும் மானுடத்தின் வேதனையை உலகம் உணர வேண்டும் என்பதற்காக 'ஜூன் 20-ம் தேதி உலக அகதிகள் தினம்' என அறிவித்தது ஐ.நா. மன்றம். வறுமையும் கொடூரமும் தாண்டவமாடும் ஆப்பிரிக்க காடுகளில், இஸ்லாமியம் மிதக்கும் பாலை நிலங்களில், அன்பை போதிக்கும் கிறித்துவ நிலங்களில், புத்தம் போதிக்கும் போதிமர மண்ணில்.. என உலகம் முழுக்க காய்ந்த கண்ணீரோடு 5 கோடிக்கும் அதிகமானவர்கள் எல்லையை கடக்கிறார்கள் என்கிறது ஐ.நா. மன்றத்தின் அகதிகளுக்கான ஆணையம்!
உலகமெங்கும் சிதறி வாழும் அகதிகளை நினைவு கூறும் நேரத்தில், ஈழத்தில் சொந்த நாட்டின் அகதிகளாய் வாழும் நம் தொப்புள் கொடி உறவுகளின் இன்றைய நிலையை கொஞ்சம் பார்ப்போம். ''இலங்கை தீவில் யுத்தம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும், நித்தமும் தமிழர்களின் ரத்தம் சிந்தி கொண்டே தான் இருக்கிறது.கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழர்களின் வாழ்வில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இலங்கை அரசாங்கமும், சர்வதேசமும் எம் மக்களுக்கு ஒன்றுமே உருப்படியாக செய்யவில்லை. வறுமை, வேலையில்லா திண்டாட்டம், பசி, பட்டினி தலை விரித்தாடுகிறது. கடும் பஞ்ச நிலையில் அத்தியாவசிய பொருட்களின் அதிகப்படியான விலைவாசி ஏற்றம் மீதம் இருக்கும் மக்களையும் கொல்கிறது. ஒரு படி அரிசிக்கும், ஒரு புட்டி பால் பவுடருக்கும் கையேந்தி நிற்க வேண்டிய அவல நிலையிலே எம்மக்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழர்களுடைய காணிகளை அபகரிக்கும் வேலையிலும், தமிழர் பகுதிகளில் சிங்களர்களை குடியேற்றுவதிலும் மும்முரமாக செயல்படுகிறது இலங்கை அரசு. வடக்கு மற்றும் கிழக்கில் 2 லட்சம் ஏக்கர் காணியை ராணுவம் ஆக்கிரமித்து இருக்கிறது. வன்னி பிரதேசத்தில் மட்டும் 6 ஆயிரத்து 381 ஏக்கர் காணியை ராணுவம் ஆக்கிரமித்து இருக்கிறது. வடிகாமத்தில், முல்லைத்தீவில், கேப்பாபிளவில், வவுனியாவில் தென்னிலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட சிங்கள குடும்பங்களை கொண்டு சிங்கள கிராமங்களையே உருவாக்கி கொண்டு இருக்கிறது இலங்கை அரசு.
முள்வேலி முகாமை மூடி விட்ட போதிலும், யாழ்ப்பாணத்தில் மட்டும் 50 ஆயிரம் மக்கள் அகதி முகாமிலே முடக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். சம்பூர் முகாமில் 6000 தமிழ் குடும்பங்கள் இருப்பதாக அரசாங்கமே சொல்கிறது. கிளிநொச்சியில், மன்னாரில், திரிகோணமலையில் உள்ள அகதிகள் முகாம்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் குடும்பங்கள் ஆட்டு மந்தையைப் போல அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்த ஈழமே திறந்தவெளி சிறைச்சாலையாக காட்சியளிக்கிறது. நாங்கள் யாவரும் சொந்த நாட்டிலே அகதிகளாக வாழ்கிறோம் என்பதே நூறு சதவிகிதம் உண்மை. ராணுவ ஆட்சியில் சிக்கி தவிக்கும் தமிழர்களை தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், தமிழக மக்களும் காப்பாற்ற வேண்டும். ஏனென்றால் தமிழகத்தில் போராட்டங்கள் வெடிக்கும் போதும், தமிழக முதல்வரின் திடகாத்திரமான தீர்மானங்கள் நிறைவேறும் போதும் ராஜபக்சேவின் அரசு ஆட்டம் காணுகிறது. ஈழ மக்கள் நெஞ்சில் ஒரு தெம்பு பிறக்கிறது'' என்கிறார் கிளிநொச்சி மாவட்ட எம்.பி.சிறீதரன்.
''தமிழர்களின் மீது உளவியல் போர் இன்னமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மற்ற எல்லாரையும் விட பெண்கள், குழந்தைகள், முதியவர்களின் வாழ்க்கை பெரும் கேள்விக்குறிக்கு உள்ளாகி இருக்கிறது. மருத்துவ வசதி, கல்வி வசதி, போக்குவரத்து வசதி என எதுவும் எங்களுடைய மக்களுக்கு கிடைக்கவில்லை. எங்கு பார்த்தாலும் ராணுவமே இருப்பதால், ஒருவித பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுகிறது. சில பெண் போராளிகளை கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்த்து, அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவுகளை கொடுத்து வருகிறது சிங்கள ராணுவம். சரணடைந்த முன்னாள் போராளிகளையும், அப்பாவி தமிழ் இளைஞர்களையும் மீண்டும் மீண்டும் கைது செய்வதும், கடத்துவதும், கொல்வதையுமே சிங்கள பேரினவாத அரசு தொழிலாக கொண்டுள்ளது'' என்கிறார் லண்டனில் வசிக்கும் ஈழத் தமிழ் செயற்பாட்டாளர் சந்திரிகா.
''அகதி வாழ்வின் வலியை உணர வேண்டுமென்றால் ஒரே ஒரு நாள் அகதியாக வாழ்ந்து பாருங்கள். அநாதை போன்ற ஓர் உணர்வை எந்த வார்த்தையாலும் வடிக்க முடி யாது. கடல் கடந்து வந்த போதிலும் எமக்கு எங்கள் நிலத்தில் உள்ள நிலைமை தான் அதிகபடியான வலியை தருகிறது. கிழக்கு மாகாண மகளிர் விவகார துறை அமைச்சரின் புள்ளி விவரங்களில்படியே, 'யுத்த பிரதேசத்தில் 86 ஆயிரம் விதவைகள் இருக்கிறார்கள். பெண்கள் குடும்ப தலைவராக இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 716, ஊனமுற்றவர்கள் 16 ஆயிரத்து 326, அநாதை குழந்தைகள் 1827. இலங்கைக்குள்ளேயே இடம் பெயர்ந்தவர்கள் ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர்' என்கிறார். இத்தனை ஆயிரம் பேருடைய வாழ்க்கையும் சொல்லில் வடிக்க முடியாத வேதனையிலே தத்தளிக்கிறது. இவர்களுக்கு உதவி செய்ய யாருமே இல்லை.
இன்னொரு பக்கம் சிங்கள ராணுவ ஆட்சியில் இருந்து தப்பி பிழைக்க ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட கண்காணா தேசங்களுக்கு கள்ளத் தோணிகளில் செல்லும் மக்களின் நிலை மிக மோசமாக இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் 10 ஆயிரத்து 311 பேரும், கனடாவில் 12 ஆயிரத்து 959 பேரும், ஆஸ்திரேலியாவில் 597 பேரும் அகதிகளாக தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். இந்தியாவில் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் 1 லட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்களை போல புலம் பெயர்ந்து வந்திருக்கும் பலரும் சொல்லொண்ணா வேதனையில் சிக்கித் தவிக்கிறார்கள். எட்டு திக்கிலும் சிதறி கிடக்கும் ஈழத்தமிழ் உறவுகளுக்காக தமிழகத்தில் எழுந்த மாணவர் போராட்டம் புது நம்பிக்கையை கொடுத்தது. எமக்கான உரிமையை ராஜ தந்திர முறைப்படியே வென்றெடுக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கையோடு சர்வதேச சமூகத்தின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கிறோம்'' என்கிறார் சந்திரிகா.
''ஒன்றுப்பட்ட இலங்கைக்குள் வாழ்வதையே தமிழர்கள் வாழ்வதாக ஜனாதிபதி சொல்கிறார். இலங்கைக்கு வந்து பாருங்கள். இரண்டு நாடுகள் இருப்பது தெரியும். செல்வ செழிப்பிலும், பொருளாதார வளர்ச்சியிலும், உயர்ந்த கட்டடங்களின் ஆக்கிரமிப்பிலும் ஜொலிக்கும் தென்னிலங்கை. வறுமையிலும், ஒட்டிப் போன வயிற்றோடு திரியும் வட இலங்கை. இப்போது குண்டு மழை பொழிவதும், செல்லடிப்பதும் மட்டுமே நின்று போய் இருக்கிறது. தமிழனத்தை அழிக்கும் உத்தியை மாற்றி கொண்டு படுகொலைகளையும், ரத்த காவு வாங்குவதையும் சிங்கள ராணுவம் தினமும் செய்து கொண்டே தான் இருக்கிறது. அடையாளம் தெரியாத பிணங்கள் ஆங்காங்கே கண்டெடுப்பதும், தற்கொலை என்ற பேரில் கொத்து கொத்தாய் செத்து கிடப்பதும் திட்டமிட்ட படுகொலைகள் தான். கைது,'வழக்கமான' விசாரணை, தாக்குதல் என சட்டப்படி பல இடங்களில் நடந்தாலும் ஆள் கடத்தல், கொள்ளை, பாலியல் வன்புணர்ச்சி, வழிப்பறி என அனைத்திலும் ராணுவத்தின் பங்கும், உளவு போலீஸின் பங்கும் இருக்கிறது.
சாட்சியம் இல்லாமல் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்களின் சிதிலங்களை காட்டி, சுற்றுலா வியாபாரம் செய்கிறது சிறீலங்கா அரசு. தமிழர்கள் வாழக்கூடிய வடக்கிலும், கிழக்கிலும் எங்கு பார்த்தாலும் மதுபான கடைகளும், கேளிக்கை விடுதிகளும், போதை பொருட்கள் விற்கும் கொட்டகைகளும் நிரம்பி வழிகின்றன. போதாக் குறைக்கு சாலையோர கொட்டகைகளே இப்போது பாலியல் தொழிற்சாலைகளாக மாறி விட்டன. அங்கே இருப்பவர்களில் பாதி பேர் தமிழ் யுவதிகள். மீதி அனுராதபுரத்தை சேர்ந்த அப்பாவி சிங்களர்கள். தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே சிங்கள பேரினவாத திட்டமிட்டு இது போன்ற கலாச்சார சீரழிவு வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. அதன் விளைவாகவே இலங்கையிலே மது விற்பனையிலும், போதை பொருட்கள் உட்கொள்வதிலும், குற்ற செயல்கள் அதிகம் நடப்பதிலும் வடக்கு மாகாணம் முன்னிலையில் இருக்கிறது.
சிங்கள ராணுவத்தினரின் அட்டகாசத்தை தாங்க முடியாத பெற்றோர்கள் அவர்களுக்கு இரண்டு லட்சம், மூன்று லட்சம் கப்பம் கட்டி, படகில் ஆஸ்திரேலியாவிற்கு தங்களுடைய பிள்ளைகளை அனுப்புகிறார்கள். 'கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஒரு மாதத்திற்கு குறைந்தது 35 பேர் இலங்கையை விட்டு போகிறார்கள்.அவர்களில் 14 பேர் 25 வயதிற்கும் குறைவானவர்கள்' என ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. அப்படியென்றால் கடந்த 4 ஆண்டுகளில் எத்தனை ஆயிரம் பேர் தாய் நாட்டை விட்டு போய் இருக்கிறார்கள் என தெரியும்.

ஐரோப்பாவிற்கோ, கனடாவிற்கோ போய் செட்டிலாகி, தங்களுடைய குடும்பத்தையும் அங்கேயே அழைத்து கொள்வார்கள். அங்கே பல்வேறு குழுக்களாக பிரிந்து கொண்டு, தமிழக அரசியல்வாதிகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு போலி வாழ்க்கை வாழ்வதும், தங்களுக்குள்ளே அடித்து கொள்வதுமாகவே இருப்பார்கள். ஈழத்திருநாட்டையும் அதற்காக செத்த மக்களையும், மாவீரர்களின் தியாகங்களையும் மறந்து விடுவார்கள். இதை தான் இலங்கை அரசாங்கமும் விரும்புகிறது. நாம் வெல்ல வேண்டுமென்றால்,மெல்ல நம்மை நாமே மாற்றி கொண்டு ஒற்றுமையாக போராட வேண்டுமல்லவா?'' என்று வேதனையை கொட்டுக்கிறார் வன்னிப் பகுதியின் மூத்த பத்திரிகையாளர்.
ஈழத்தின் சொல்லொண்ணா வேதனைகள் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் தாய்த் தமிழகத்தில் மண்டபம் முகாமும், பூந்தமல்லி முகாமும் நரக முகாம்களாக காட்சியளிக்கின்றன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழ் சொந்தங்கள் தமிழகம் முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் நிலை குறித்து கரூர் முகாமில் இருக்கும் ஓர் இளம்பெண்ணிடம் பேசினோம். ''ஈழத்திற்காக மூச்சிறைக்கப் பேசுபவர்கள் கூட எமக்கான உரிமையை பெற்று தரவில்லை.எங்கள் அவல வாழ்வை தீர்க்க வில்லை. தினம்தினம் காக்கி சட்டைகளின் கட்டுப்பாட்டிலும், அடக்குமுறையிலும் சிக்கி தவிக்கும் எமக்கு விடுதலை பெற்று தரவில்லை. வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு எங்கள் கழுத்துகள் அதிகாரமிக்கவர்களாலும், தமிழ் சமூகத்தாலும் தொடர்ந்து நெறிக்கப்படுவதாலே திருட்டு தனமாக கள்ளத்தோணிகளில் பயணிக்கிறோம். கரையை சேருமுன்னே மடக்கப்படுகிறோம் அல்லது செத்து மடிகிறோம். எவ்வித சுதந்திரமும் இல்லாமல், அடிப்படை வசதிகளின்றி ஏதிலியாக வதை முகாம்களில் முடக்கப்பட்டிருக்கிறோம் என்ற வேதனையை விட 'சிலோன்காரன், அகதி, தீவிரவாதி' என எங்கள் உறவுகளாலே இழித்துரைப்பதை நினைக்கும் போது கண்ணீரை அடக்க முடியவில்லை'' என வார்த்தைகள் உடைந்து கண் கசிந்தார்!
'ஆண்டவனின் பிள்ளைகள்' என்று சொல்லப்படுவதால் தான் அகதிகளுக்கு இத்தனை சோதனையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக