உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5
1972 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் உலகசுற்றுச்சூழல் தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.‘தீவு நாடுகளும், காலநிலை மாற்றமும்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக சுற்றுச் சூழல் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.உங்கள் குரலை உயர்த்துங்கள் கடல் மட்டதுக்கு அல்ல என்ற வாசகத்தை இந்த ஆண்டு(2014) ஐக்கிய நாடுகள் சூழல் திட்ட அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.அரசியல் கவனத்தையும் மற்றும் செயல்முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் பயன்படுகிறது. உயிர்களின் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும் உலக சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கும் சுற்றாடல் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும், சுற்றுச் சூழல்லைப் பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் பிரதான நோக்கமாகும்.
இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது. நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, கைத்தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைகிறது. இரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் என்பவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது.
சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. ஒருபுறத்தில் வரட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கையின் அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன. மேற்குலகில் சூழலியல் அரசியலின் முக்கியமானதொரு அம்சமாகியுள்ள காரணத்தினால் பசுமைக்கட்சிகள் தோற்றம் பெற்று பாராளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றி மனிதருக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்புப் பற்றி மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு உருவாகுவதற்கு பெரும் பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றன.
மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு முதுசத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன்.
சுற்றாடலும் அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றன. புவி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச் சூழலின் சமநிலையில் ஏற்பட்ட பாரிய விளைவுகளாகும். மேலும் சுற்றுச் சூழல் தொடர்பாக காலநிலை மாற்றம், புவிக்கோளம் உஸ்ணமடைதல், ஓசோன் படை பாதிப்பு, நன்னீர் வளம், சமுத்திரம், கடற்கரைப் பிரதேசங்கள், காடழிப்பு, வனாந்திரமாக்கல், உயிரியல் மாறுபாடு , உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம், இரசாயன பாதுகாப்பு போன்றவை கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அக்கறை என்பது சில நிபுணர்கள் மாத்திரம் நட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்குகளை நடத்தி விவாதிக்கும் ஒரு விவகாரம் என்று இன்னும் கூட பலர் நினைக்கிறார்களோ என்று வியக்கவேண்டியிருக்கிறது. சுற்றுச் சூழலியலாளர்களின் பணிகள் காரணமாக அண்மைய சில ஆண்டுகளாக பிறந்த சுற்றுச் சூழலைப்பற்றி மக்கள் மத்தியில் ஓரளவுக்கு உணர்வு காணப்படுகின்ற போதிலும், அரசியல் தலைமைத்துவங்கள் இதுவிடயத்தில் போதியளவு அக்கறை காண்பிக்காததால் கணிசமான முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை.
சுற்றுசூழல் முக்கியத்துவத்தைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளத்திலும் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியது மனிதன் உணர்ந்து கருமத்தை ஆற்ற வேண்டியதும் முக்கியமானதாகும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பல வகைகளில் மாசுபட்டு கிடக்கிறது. இந்த மாசடைதலை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். முதலாவது வளிமண்டலம் மாசடைதல், இரண்டாவது நிலம் மாசடைதல், 3-வது நீர் மாசுபடுதல். இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், சோலைகள், கடற்கரைகளில் ஏற்படும் மாசுபாடுகள் சுற்றுச்சூழலை மட்டுமின்றி மனித, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச் சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் அமைந்துவிடுகிறது.
நவீன விஞ்ஞான, தொழில் நுட்ப, கைத்தொழில் துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. ரசாயனக்கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது.
மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலேயான உறவு மிகவும் முக்கியமானதாகும். ஒரு மரம் தன் வாழ்நாளெல்லாம் வெளியிடும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் மேலானது என கணக்கிடப்பட்டுள்ளது. மனித வாழ்வுக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதை பலரும் உணருவதில்லை.
மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மரங்களை அழித்து உலகை பாலைவனமாக்கி வருகிறோம். உலகில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.
வாகனத்தின் என்ஜினில் எரிபொருள் எரிந்து புகை வெளிப்படுகிறது. இதில் கரித்துகள், கார்பன் மோனாக்சைடு, கார்பன்-டை-ஆக்சைடு, நீராவி, சல்பர் டை ஆக்சைடு, காரீயம் ஆகியவை கலந்திருக்கும். இவற்றுள் கார்பன்- மோனாக்சைடும், காரீயமும் தீங்கு விளைவிக்க கூடியவை. இவை நச்சுதன்மை வாய்ந்தவை.
வாகனங்கள் வெளியிடும் புகையில் கார்பன் மோனாக்சைடின் அளவை கண்டுபிடிப்பதற்கான சோதனைகள் செய்யப்படுகின்றன. இது 4.5 பிபிஎம் அளவுக்கு குறைவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வாகனத்தை பழுது பார்க்க வேண்டும். கார்பன் அளவு அதிகமானால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படும்.
இதேபோல சுற்றுச் சூழல் சீர்கேட்டுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பிளாஸ்டிக் திகழ்கிறது. குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்காமல் பல நூற்றாண்டுகளுக்கு அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் குப்பைகளை எரித்து விடலாம் என்றாலும் அதிலிருந்து பரவும் நச்சு வாயுக்கள் மனித இனத்திற்கு பேராபத்தை விளைவிக்க கூடிய பல அபாயகர நோய்களை விளைவிக்கும்.இந்த நச்சு வாயுக்களால் மலட்டு தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? என்பது நியாயமான கேள்வி. அனைத்து வகை பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத் தக்கூடாது என்பது நடை முறைக்கு உகந்தது அல்ல.ஆனால் நாம் வைராக்கியம் கொண்டால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க முடியும். பூமி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பாகும்.
பூமி சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள். மனிதர்கள் உள்பட பல்லாயிரக் கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்த பூமி அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாக கருதப்படுகிறது. இத்தகையை சிறப்பு வாய்ந்த பூமி சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பாதிக்கப்படுகிறது.
எனவே உஷ்ணமடைதல், காலநிலை மாற்றம், ஓசோன் படலாம் பாதிப்பு, கடல், கடற்கரை பிரதேசங்கள், காடு ஆகியவை அழிப்பு, உயிரியல் மாறுபாடு, உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் ரசாயன பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
சுற்றுச்சுழலை பாதுகாப்போம்..எதிர்கால சந்ததியினருக்கு இயற்கையின் அதிசயங்களினை விட்டுச்செல்வோம் என இந்த நாளில் சூளுரைப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக