உலக புலிகள் தினம் ஜூலை 29.
இயற்கையை விரும்புபவர்களுக்குப் புலிகள் பிடிக்கும். புலிகளைத் தவிர்த்து விட்டு காடுகளைப் பாதுகாக்க முடியாது. புலிகளைப் பாதுகாப்பது என்பது மனிதர்களைக் காப்பது என்பதே பொருள். புலிகள் சுதந்திரமாகப் பாதுகாக்கப்பட்டால் காடுகளையும், காட்டில் வாழும் மற்ற விலங்குகளையும், உயிரினங்களின் உணவுச் சங்கிலியையும் காப்பாற்றி விட்டோம் என்றே அர்த்தம். 13 நாடுகளில்தான் இவை இருக்கின்றன. 15 முதல் 25 வருடங்கள் வரை வாழும் இவை உண்மையில் ஒரு தனிமை விரும்பி. மான்களை விரும்பி உண்ணும் புலிகள் 2 முதல் 6 குட்டிகள் போடும். இதன் கர்ப்ப காலம் 105 நாள்கள்தான். பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த புலிகளின் உடலில் உள்ள கோடுகள் ஒவ்வொரு புலிகளுக்கும் தனித்துவமானவை.
பதினெட்டு கிலோ எடை இறைச்சியை உண்ணும் இவை தனியாகவே வேட்டையாடும். தனியாக மோதினால் சிங்கத்தை வெல்லக்கூடிய ஆற்றல் படைத்தது புலி. மனிதனை விட 6 மடங்கு கூர்மையான ஆற்றல்கொண்ட புலிக்கு 30 மைல் சுற்றளவை தனது எல்லையாக கொண்டு வாழும். அதில் வேறொரு புலி வந்தால் சண்டைதான். 60 கி.மீ. வேகத்தில் ஓடும். 10 மீட்டர் வரை உயரம் தாண்டும். இந்த நீளமான புலியைப் பற்றிய தகவல்கள் எல்லாம் ஏன் என்கிறீர்களா? சர்வதேச புலிகள் தினம் இன்றுதான்.
அழிந்து கொண்டே வரும் புலிகள் இனத்தைக் காப்பதற்கு என்றே 2010-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொர் ஆண்டும் ஜூலை 29-ம் நாளை கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மூவாயிரம் புலிகளை மட்டுமே உலகெங்கும் விட்டு வைத்திருக்கிறோம். சுமத்ரான், சைபீரியன், மலேசியன், காஸ்பியன், ஜவான், பாலினீஸ், பெங்கால், இந்தோசீனா, தென்சீன புலிகள் என 9 வகைகள் இருந்து வந்துள்ளன. அதில் ஜவான், காஸ்பியன், தென்சீன புலி வகை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. சுமத்ரான் வகை புலிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளைப் பாதுகாக்க 49 காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் புலிகள் அழிந்து போவதை பெரும்பாலும் தடுக்கவே முடியவில்லை. அரசு மட்டுமல்ல, நாமும் இணைந்து விழிப்புஉணர்வை உண்டாக்கினால்தான் புலிகளின் அழிவை, இல்லை இல்லை நமது அழிவையும் தடுத்துக் கொள்ளலாம்.
நன்றி விகடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக