பக்கங்கள்

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

உலக சிங்கம் தினம் – ஆகஸ்ட் 10


உலக சிங்கங்கள் தினம் ஆகஸ்ட் 10,
World Lion Day August 10,

ஒரு புலி காப்பாற்றப்படும்போது, அது சராசரியாக வாழும் 40 சதுர கிலோ மீட்டர் காடு மறை முகமாக காப்பாற்றப்படுகிறது. அதனுடன் அதன் இரை விலங்குகள் உயிர் வாழ தேவையான நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் சதுர பரப்புள்ள காடுகளின் புல்வெளிகள் காப்பாற்றப்படுகின்றன. இதனால் காடுகளில் பெய்யும் மழையை தாங்கி பிடித்து பல வற்றாத நதிகள் உற்பத்தியாகின்றன.  ஆண்டு தோறும் வலசை போகும் யானைகள் காக்கப்படும்போது, அவைகளின் சாணத்தின் மூலம் காடுகளின் விதைப் பரவல் இயற்கையாய் நடைபெறுகிறது. இது போல பறவைகள், பூச்சிகள் முதல் காடுகளின் ராஜாவான சிங்கங்கள் வரை ஒவ்வொன்றும் தமது பங்குக்கு இயற்கையோடு இயற்கை யாய் இணைந்து வாழ்கின்றன. ஆனால் மனித இனம் மட்டுமே இயற்கையை அளவுக்கு அதிகமாய் சுரண்டி பிழைக்கிறது.இப்படி உலகம் முழுவதும் இன்று அருகிக் கொண்டே இருக்கும் காடுகளை காப்பாற்றும் முயற்சி யில் ஒன்றுதான் உலக கானுயிர்களை அடையாளப்படுத்தி அவற்றுக்கான சர்வதேச தினங்கள் கொண்டாடப்படுவதன் நோக்கம். அப்படித்தான் உலக புலிகள் தினம், உலக யானைகள் தினம்,  உலக சிங்கங்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று ஆக. 10-ம் தேதி (உலக சிங்கங்கள் தினம் கொண்டாடப்படுகிறது.


இந்தியா மற்றும் ஆப்பிரிக்க காடுகளில் மட்டுமே சிங்கங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. பெரும்பாலும், அடர்ந்த காடுகளை விரும்பாமல் அடர்த்தி குறைந்த இலையுதிர்க்காடுகளில் வாழ்வதையே விரும்பும் சிங்கங்கள், இயற்கையிலேயே கேட்கும் திறன் அதிகம் பெற்றவை. சிங்கங்களின் கர்ஜனை பல கிலோமீட்டர் தூரம் வரை கேட்கும் என்பது அதன் சிறப்பம்சம். ஆண் சிங்கம் 150 முதல் 250 கிலோ வரையிலும், பெண் சிங்கம் 120 முதல் 150 கிலோ வரையிலும் எடை கொண்டதாக இருக்கும். “வனங்களின் அரசன்” என வர்ணிக்கப்படும் சிங்கங்களைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை வலியுறுத்தும் வகையில், உலக சிங்கங்கள் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது


இது குறித்து கானுயிர் ஆர்வலர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, “இன்றைய கானுயிர்களில் உள்ள பெரிய பாலூட்டிகளின் எண்ணிக்கையை வைத்தே, நமது காடுகளின் வளத்தை எளிதாக கணக்கிட்டு விடலாம். கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை இந்தியாவில் 44 ஆயிரமாக இருந்த புலிகளின் எண்ணிக்கை, கணக்கில்லா வேட்டைகளின் மூலம் இன்று வெறும் 2,226 மட்டுமே உள்ளன. புலிகளைப் போல அல்லாமல், திறந்த வெளியில் வாழப் பழகிய சிங்கங்களுக்கு அவைகளின் வாழ்க்கை முறையே எமனாகிப் போனது. மனிதர்களின் பேராசை களால் தொடர்ந்து சிங்கங்கள் கடுமையான அழிவை சந்தித்தன. பல நூற்றாண்டுகளுக்கு முன் கிழக்கு ஐரோப்பா, பாரசீகம் என்று அழைக்கப்பட்ட ஈரானில் இருந்து ஈராக், பலூசிஸ்தான், இந்தியாவின் மேற்கு, மத்திய பகுதிகள் முழுவதும் பரவி நர்மதை நதிக்கரை வரை வாழ்ந்து வந்த ஆசிய சிங்கங்கள் இன்று வெறும் 500 சதுர மைல் பரப்பளவுள்ள வனப் பகுதியில் முடங்கி கிடக்கின்றன.


முதலாம் நூற்றாண்டு முதல் கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் வாழ்ந்த ஆசிய சிங்கங்களின் அழிவுகள் துவங்கி பதினெட்டாம் நூற்றாண்டில் பாரசீகம், மற்றும் இந்தியாவில் ஆங்கிலேயர் களாலும், மன்னர்களாலும் வேட்டையாடி கொன்று குவிக்கப்பட்டன. இந்தியா சுதந்திரம் அடையும் வேளையில் ஜுனாகத் நவாப்பின் காப்புக்காடுகளில் மட்டும் ஒரு சில ஆசிய சிங்கங்கள் வாழ்ந்து வந்தன. அவைகளின் சந்ததிகளே இன்று குஜராத்தின் கிர் வனப்பகுதிகளில் வாழ்கின்றன. 2015 ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி இவைகளின் எண்ணிக்கை வெறும் 523 மட்டுமே.


அதில் முழு வளர்ச்சி அடைந்த ஆண் சிங்கங்கள் எண்ணிக்கை 109, பெண் சிங்கங்கள் 201 மற்றும் குட்டிகள் 213 என்று கணக்கிடப் பட்டுள்ளது. இதில் வேதனை என்னவென்றால் நூற்றுக்கும் மேற்ப்பட்ட சிங்கங்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் வனப்பகுதிகளுக்கு வெளியே இருக்கிறது என்பதே.” என்றார்கள்.


#lion_day
"காட்டின் ராஜா" என்று அழைக்கப்படும் சிங்கத்தினை கவுரவிக்கும் பொருட்டு, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி 'உலக சிங்க தினமாக' கொண்டாடப்படுகிறது.

வனவிலங்குகளில் அச்சமூட்டக்கூடிய ஒரு படைப்பாக விளங்குகிற சிங்கத்திற்கு மரியாதையை செலுத்தும் இந்த நிகழ்வினை, 'பிக் கேட் ரெஸ்க்யூ' என்னும் அமைப்பு உருவாக்கியது. இதுவே உலகிலேயே சிங்கங்களுக்கென்று பிரத்தேயேகமாக அமைந்த ஒரு சரணாலயமாகத் திகழ்கிறது. இந்த நாளில் உலகின் பல்வேறு பகுதிகளில் அமைந்திருக்கும் மக்கள் ஒன்று கூடி தங்களால் இயன்ற வகையில் சிங்கத்திற்கு மரியாதை செலுத்துகின்றனர்

சிங்கங்களை பொறுத்த வரை, மனிதர்களோடு அதற்கு உள்ள தொடர்பு என்பது, 32 ஆயிரம் வருடங்களாகத் தொடர்கிறது. பிரான்சின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள, அர்டேக் பள்ளத்தாக்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 'பேலியோலித்திக்' கால மனிதனின் குகை ஒவியங்களில் கூட சிங்கங்கள் பற்றிய ஓவியங்கள் காணப்படுகின்றன.

வரலாற்று ரீதியாக சிங்கங்கள், யூரேசியா, வட அமெரிக்கா வழியாக தென் அமெரிக்கா வரை காணப்படுகின்றன. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சஹாரா பகுதிகளை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் இந்தியாவின் வட மேற்கு பகுதிகள் ஆகியவற்றில் மட்டுமே காணப்பபடுகின்றன. ஆனால் பெரும்பாலானவை ஆப்பிரிக்காவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் காணப்படுகின்றன.


பண்பாட்டு ரீதியாக பொறுத்த வரை பைபிளில் 157 இடங்களில் சிங்கங்களை பற்றிய குறிப்புகள் வருகின்றன. வேறு எந்த மிருகங்களை பற்றியும் இந்த அளவில் குறிப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழ்நிலையில் தேசங்களின் கொடிகள் , சின்னங்கள் ஆகியவற்றில் சிங்கத்தின் உருவம் இடம்பெறுகிறது.

சிங்கங்களில் வாழிடம் அழிக்கப்படுவது, உணவு கிடைக்காமல் போவது, மனிதர்களினால் உண்டாக்கும் பிரச்சினை ஆகியவையே தற்போது சிங்கங்களுக்கான தலையாய பிரச்சினைகளாக இருக்கின்றன.

ஆப்பிரிக்காவை பொறுத்தவரை சிங்கங்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்து வருகிறது என்ற போதும், இந்தியாவைப் பொறுத்த வரை சிங்கங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது.


#world_lion_day_august_10

உலக சிங்க தினம்; அழிவின் விளிம்பில் ‘காட்டு ராஜா’- 2 லட்சமாக இருந்த எண்ணிக்கை 20 ஆயிரமாக குறைந்தது

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10-ம் தேதி உலக சிங்க தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

திறந்த புல்வெளி காடுகளின் அழிவாலும், கடுமையான வேட்டை யாலும் சிங்கங்கள் அழிவைச் சந்திக்கின்றன. சிங்கங்களைப் பாது காக்கவும், அது தொடர்பாக மக்கள் விழிப்புணர்வு அடையவும் கென்யா வன உயிரின ஆர்வலர்களின் முயற்சியால் இந்த நாள் முதலில் கடைபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழு வதும் சிங்கங்களின் நலன் பேணும் விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலகில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை 2 லட்சத்துக்கும் மேல் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை இன்று வெறும் 20 ஆயிரமாக குறைந்துவிட்டது. அவற்றிலும் ஆசிய சிங்கங்கள் 500-க்கும் குறைவாகவே உள்ளன.

மன்னர்கள் காலத்தில் இருந்து சிம்மம் என்னும் சொல் தலைவன், அரசன் என்பதை குறிக்கும் சொல்லாகவே கருதப்படுகிறது. உதாரணமாக சிம்மாசனம், சிம்ம சொப்பனம் என்று பல சொற்களை குறிப்பிடலாம். ஆற்றலின் அடை யாளமாகவே சிங்கம் அடையாளப் படுத்தப்படுகிறது. இந்த வழக்கம் நமது நாட்டில் மட்டும் அல்ல, ஆப்பிரிக்க பழங்குடிகள் தொடங்கி ஐரோப்பா வரை இருந்துவருகிறது.


பூனை இனங்களில் புலிகளுக்கு முன்னர் மிகக் கடுமையான அழிவை சந்தித்தவை சிங்கங்களே. கிட்டத்தட்ட 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இவற்றின் அழிவு தொடங்கிவிட்டது. அரசர்கள் வேட்டையாடியபோதும், போர்களின்போதும் நாடுவிட்டு நாடு பயணம் செல்லும் வேளைகளிலும், வீர விளையாட்டு என்ற பெயரில் சிறைபிடிக்கப்பட்டு கொன்றழிக்கப்பட்ட சிங்கங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை.

இதுகுறித்து மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த வன உயிரின ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன் கூறியதாவது:

ஆப்பிரிக்க சிங்கங்கள் இனத்தில் 7 உள்ளினங்களும், ஆசிய இனத்தில் ஒரே ஒரு இனம் மட்டுமே மீதம் உள்ளன. ஆப்பிரிக்க இனங்களின் உள்ளினங்களில் ஒன்று பார்பெரி சிங்கம், இவை ஐரோப்பா, வடமேற்கு ஆப்பிரிக்க பகுதிகளில் காணப்பட்டன. இவை தற்போது காடுகளில் முழுமையாக வேட்டையாடப்பட்டு விலங்கு காட்சியகங்களில் மட்டுமே சொற்ப எண்ணிக்கையில் எஞ்சியுள்ளன. இரண்டாவது, செனகல் சிங்கங்கள் எனும் மேற்கு ஆப்பிரிக்க சிங்கங் கள். இவையும் அழிவின் விளிம்பில் உள்ளன. மூன்றாவது காங்கோ சிங்கம் அல்லது உகாண்டா சிங்கம் என்ற இனம். இவை காங்கோவில் உள்ள தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நான்காவது, கட்டாங்கா சிங்கங்கள் அல்லது தென் மேற்கு ஆப்பிரிக்க சிங்கங்கள்.


ஐந்தாவது மசாய் சிங்கங்கள் அல்லது கிழக்கு ஆப்பிரிக்க சிங் கங்கள். இவை மிக அழகான வையாக கருதப்படுகின்றன. அதன் நீண்ட கால்களும், சீரான பிடரி முடிகளும், அழுத்தமான முக அமைப்பும் தனி அடையாளமாக திகழ்கின்றன. ஆறாவது, கலகாரி சிங்கங்கள் அல்லது தென்கிழக்கு ஆப்பிரிக்க சிங்கங்கள். இவை மசாய் சிங்கங்களைப் போன்றே மிகப் பெரியவை. ஏழாவது, எத்தியோப்பிய சிங்கங்கள். இவை வெகு சமீப காலத்தில்தான் மரபணு சோதனையின் மூலம் கிழக்கு ஆப்பிரிக்க வகை சிங்கங்களில் இருந்து தனி இனமாக அறிவிக்கப்பட்டன. இதன் சிறப்பு அடர்ந்த பிடரி முடியில் இருக்கும் கருப்பு வண்ணமே.


இந்த 7 வகை சிங்கங்களைத் தவிர, துருக்கியில் இருந்து தென்மேற்கு ஆசியா முழுவதும் பரவி இருந்த ஆசிய சிங்கங்கள் இன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மட்டுமே உள்ளன. ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை மிகவும் அருகிவிட்டன. திடீரென பரவும் தொற்றுநோய்கள், ஒரே குடும்பங்களுக்குள் நேரும் இனச்சேர்க்கையினால் பலவீனம் அடைதல், இடநெருக்கடிகளால் காடுகளை விட்டு வெளியேறும் சிங்கங்களால் ஏற்படும் மனித - விலங்கு மோதல்கள் போன்ற பிரச்சினைகளை ஆசிய சிங்கங்கள் எதிர்கொள்கின்றன. அரசர் காலத் தில் சிங்கங்கள் பெரிய அழிவை சந்தித்திருந்தாலும், அதையே சொல்லிக்கொண்டு இருக்காமல் தற்போதுள்ள பிரச்சினைகளை களைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வன உயிர்களை காப் பதன் மூலம் இயற்கையின் சம நிலையை நிலை நிறுத்தினால் நமக்குத் தேவையான நீர், காற்று, ஆரோக்கியம் போன்ற செல்வங் களையும் பெறலாம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக