உலக முதியோர்கள் தினம் அக்டோபர் 1,
இன்று சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.
சுமார் அறுபது வயது தாண்டியவர்களை மூத்த பிரஜைகள் என்றாலும் அவர்களுக்கு கண்ணியமும் கனமும் கிடைப்பதில்லை என்பது ஒரு முதியவரின் அங்கலாய்ப்பு. முதுமை என்பது விஞ்ஞான ரீதியாக நோக்கும் போது, அவர்களின் உடலியல் செயற்பாடு பாதிப்புகள் அதிகமாகும். இதனால் சரீர உணர்வு சக்தி குறையத் தொடங்கும். இளமைக்கு எப்போதும் முதுமை பற்றிய அறிவு இருத்தல் வேண்டும். காவோலை விழுதென்று குருத்தோலை சிரிக்க முடியாது. அந்த குருத்தோலையும் ஒருநாள் காவோலையாக மாறும் என்பது உண்மையாகும். இஃது இன்றைய முதியவர் தினத்தில் நாம் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை கருத்தில் கொண்டு முதியோருக்கான தினம் மற்றும் சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டன. 1990 ஆம் வருடம் ஐ.நா.வினால் உத்தியோக பூர்வமாக அங்கீகரித்து, 1991 ஆம் ஆண்டு அக்டோபர் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகமெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக்கென ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்த நாளின் பிரதான நோக்கம்.
உலக ரீதியில் 7.5 பில்லியன் மக்கள் தொகை இருந்தாலும் இதில் 0.9 பில்லியன் வீதமானவர்கள் அதாவது 962 மில்லியன் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் இலங்கை சனத்தொகையில் 7.9 வீதமானவர்கள் 64 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் சமூக அமைப்பில் கூட்டுக்குடும்பம் என்ற கட்டமைப்பே சுமார் ஐந்து தசப்தகாலத்திற்கு முன் காணப்பட்டது. ஆனால் தனிக்குடித்தனம், தொழில் ரீதியாக நகரங்களை நோக்கி இடம் பெயர்வு, நவீன வீடமைப்புகள், அவ்வீடுகளும் ஒரு குடும்பம் மட்டுமே தங்கக் கூடிய விதத்தில் அமைக்கப்படுவதாலும், கணவன் மனைவி தொழில் செய்வதாலும், கூட்டுக் குடும்ப சங்கிலி அறுக்கப்பட்டு, குடும்பத்திலுள்ள வயதுமுதிர்ந்த நபர்கள் தனிமையில் வாழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அத்துடன், பொருளாதார சூழ்நிலையினாலும், பெற்றோரின் செயற்பாட்டினாலும் இவர்களை சுமையாக நினைக்கின்றனர். குடும்ப பிணக்கு சூழ்நிலைகளினாலும் பெற்றோர் மற்றும் முதியவர்கள் கைவிடப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களையே சிரேஷ்ட பிரஜைகள் என்ற சமூக அந்தஸ்தை அரசால் வழங்கியிருந்தாலும், இந்த மூத்த பிரஜைகளை குறித்ததான விசாரிப்பு, கரிசனை மிக குறைவாகவே காணப்படுகின்றது. பல குடும்பங்களில் முதியவர்கள் கறிவேப்பிலை போலவே காணப்படுகின்றனர். முதுமை என்பது ஒவ்வொரு நபரின் பிறப்பிலிருந்து ஆரம்பமாகிறது. ஒரு குழந்தை வளர்ந்து பெரிதாகும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் முதுமை நிகழ்வு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. ‘ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்’ என்பது போல இளமையும் முதுமையும் பிறப்பின் பரிணாமமாகும்.
இன்றைய சூழ்நிலையில் அதிகமான பெற்றோர்கள் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுவதும் அல்லது சில பெற்றோர்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதும் அதிகரித்து செல்லுகின்றது. அத்துடன், நாட்டில் முதியோர் இல்லங்கள் அதிகரித்த வண்ணமே இருந்தாலும், முதியோரை பராமரிப்பதும் ஒரு வியாபாரமயப்படுத்தப்பட்டுள்ள நிலை காணப்படுகிறது. அதாவது பணத்தின் பெறுமதியில் முதியோர் இல்லங்கள் வகைப்படுத்தப்பட்டு காணப்படுகிறது.
‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா...’ என்பது போல் ஓடியோடி உழைத்த கால்களும், கைகளும் ஓர் இடத்தில் அமர்வதென்பது மிகவும் கடினமான விடயமாகும். இதேநேரத்தில் தனது பிள்ளைகளைத் தனது இதயத்தில் வைத்து கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து, அவர்களை சமுதாயத்தில் அந்தஸ்துள்ளவர்களாக உருவாக்கிய பெற்றோர்களும் கைவிடப்படுகின்றனர். இதேநேரத்தில் பிள்ளைகளின் குடும்ப விடயங்களில் பெற்றோர் தலையிடுவது, ஆலோசனை கூறுவது அதிகமான பிள்ளைகள் விருப்பப்படாத ஒன்றாகவே காணப்படுகிறது.
முதியவர்களுக்காக பேரளவில், மற்றவர்களின் முன்னிலையில் வாழ்த்து மடல் பரிசு பொருட்களைக் கொடுத்தால் போதுமானது என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால் உலகெங்கிலும் வாழும் முதியோர் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்து, அவர்களுக்கென ஒரு சமூக கட்மைப்பை உருவாக்குவதும், முதியவர் குறித்தான ஒரு விழிப்புணர்வையும் உருவாக்குவதே இதன் பிரதான இலக்காகும். ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 75 வயதாகும். அதற்கு மேல் அவர்களின் உடல் ஆரோக்கியமே அவர்களை வாழ வைக்கிறது. முதியவர்களின் சரீரம் தளரும் போது, தோல் சுருக்கமும் வியாதிகளும் தொற்றிக் கொள்கின்றன
முதியவர்கள் சிறுபிள்ளைத் தன்மையுடையவர்களாகவும், பிடிவாத குணமுள்ளவர்களாகவும் மாறுகின்றனர். சிலர் தங்களது தனிமையை நினைத்து மனந்தளர்வு அடைகின்றனர். ஒரு சிலர் முதிர்வயதிலும் உழைத்து உழைப்பாளியாக இருக்கவே விரும்புகின்றனர். இது வரவேற்கத்தக்க விசயம்.
நமது நாட்டை பொறுத்த வரை அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் முதியோர் பராமரிப்பு, முதியோர் கொடுப்பனவு பங்களிப்புகள் இருந்தாலும் அவை அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு போதுமானவையாக இல்லை. வயது முதிர்ந்த பெற்றோர் தமது பிள்ளைகளின் நிழலில் வாழவே விரும்புகின்றனர்.
நாமும் முதியோரின் சுதந்திரம், பாதுகாப்பு, சுகாதாரம், தேவைகள் குறித்து அவதானம் செலுத்தல் வேண்டும். அத்துடன், அவர்களை மதித்து, கெளரவித்து அவர்களின் உரிமைகளை விருப்பங்களை அறிந்து அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுத்தப்பட வேண்டும். அவர்களின் நற்கருத்துகளுக்கு மதிப்பளித்து அவர்களின் உள்ளத்தை மகிழ்வித்தல் வரவேற்கத்தக்க செயற்பாடாகும்.
நாம் மேலை நாடுகளை சுட்டிக்காட்டிக் கொண்டு எமது பாரம்பரியங்களையும், சமூக விழுமியங்களையும், குடும்ப சூழலையும் மறந்து விடுகிறோம். ‘நாம் முதியோர்களாகும் வரை பெற்றோரின் அருமை தெரியாது’ என்பர். நாம் எமது பெற்றோரையும் குடும்பத்திலுள்ள முதியவர்களையும் எப்படி கவனிக்கிறோம் என்பதை எமது பிள்ளைகளின் சிறிய கண்கள் அவதானிக்கும் என்பதை மறந்திடலாகாது. நாம் அளக்கும் அளவின்படியே எமக்கு அளக்கப்படும் என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.
இன்றைய தினத்திலாவது எமது குடும்பத்திலுள்ள சிரேஷ்ட பிரஜைகளுக்கு சிறிய பரிசொன்றை கொடுத்து மகிழ்வித்தல் நன்று. இத்தினத்தை கடமைக்கான தினமாக மாற்றாமல் அனுதினமும் எமது குடும்பத்திலுள்ள முதியவர்களை நேசிக்கும் தினமாக மாற்றியமைப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக