பக்கங்கள்

திங்கள், 2 டிசம்பர், 2019

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 03.


உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 03.

உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (பன்னாட்டு ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3ஐ அனுசரிக்கின்றது.

1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.


உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன. பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


நோக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசாங்கமும், சேவை வழங்கும் நிறுவனங்களும், பெற்றோரும், ஏனைய மனிதர்களும் உதவுவதும், இவர்களின் வாழ்க்கையில் எல்லோரையும் போல சகல உரிமைகளையும் பெற வைப்பதும் ஒரு சமுதாய கடமையாகும் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.


ஊனமுற்றோர் வகைப்பாடு(இந்திய அளவில்)

1 . பார்வை குறைபாடுடையோர். 2 . கை,கால் குறைபாடுடையோர். 3 . செவித்திறன் குறைந்தோர் மற்றும் பேச இயலாதவர் 4 . மனவளர்ச்சி குன்றியவர்கள். 5 . தொழுநோய் பாதித்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள். - என்று ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர்.

ஊனமுற்றோர் மறுவாழ்வு முயற்சிகள் தொகு
1957 -ம் ஆண்டு ஊனமுற்றோருக்கான முதல் வேலைவாய்ப்பு மையம் பம்பாயில் ஏற்படுத்தப்பட்டு, தொடர்ந்து 22 நிலையங்கள் மத்திய அரசால் பெரும் நகரங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 55 உப அலுவலகங்கள் பல்வேறு கிராமப்பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளது.
1968 -ம் ஆண்டு மத்திய அரசால் ஊனமுற்றோர் மறுவாழ்வு இல்லங்கள் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது 17 இல்லங்கள் இந்தியாவின் பெரும் நகரங்களில் நடத்தப்பட்டு வருகின்றது.
1981 -ம் ஆண்டு சர்வதேச ஊனமுற்றோர் ஆண்டாக அனுசரிக்கப்பட்டது.
1969 -ம் ஆண்டு முதல் வேலை பார்க்கும் ஊனமுற்றோர்களுக்கு வகைக்கு இரண்டு பேராக 10 நபர்களுக்கும், அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் 5 நபர்களுக்கும் தேசிய விருதுகள் சர்வதேச ஊனமுற்றோர் தினம் அன்று, குடியரசு தலைவரால் வழங்கப்படுகிறது.
1995 -ம் ஆண்டின் ஊனமுற்றோர்(சம வைப்புகள்,உரிமைகள்,பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு)சட்டமும்,1992 -ம் ஆண்டின் மறுவாழ்வு குழுமச் சட்டமும், 1999 -ம் ஆண்டின் ஊனமுற்றோர் நலனுக்கான தேசிய அறக்கட்டளைச் சட்டமும் அவர்கள் நலனுக்காக இந்திய அரசால் இயற்றப்பட்டவை ஆகும்.
இந்தியாவில் மத்திய அரசால் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 183 ஊனமுற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகின்றது.
இவை போக அனைத்து மாநில அரசுகளும் ஊனமுற்றோர் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.


மாற்றிக்காட்டிய மாற்றுத்திறனாளிகள் ;

உலகை வெல்வது சாதனையா? இல்லை! உண்மையில் தன் உடலை, தன் தடையை வெல்வதே சாதனை! இயற்கை தந்த சோதனையைத் தன் தளரா மனஉறுதியால் தீரத்துடன் எதிர்கொண்ட மாற்றுத்திறனாளிகள் விடாமுயற்சியாலும் தீவிரமான பயிற்சியாலும் நம்மை மலைக்க வைக்கிறார்கள்.

'வலி தந்த வலிமையால் வாழ்வுப் பயணத்திற்குப் புதியவழி கண்டவர்கள் நாங்கள். நரம்புகளிலும் நம்பிக்கையுள்ளதால் குறையொன்றும் இல்லை' என நெஞ்சுறுதியோடு தடைகளை உடைத்து ஒவ்வொரு துறைகளையும் மாற்றிக்காட்டிய மாற்றுத்திறனாளிகளை நாம் போற்றிப் புகழவேண்டாமா.


ஊக்கத்தால் தாக்கமேற்படுத்தியவர்
கண்களிருந்தும் மற்றவர்கள் துன்பங்களைப் பாராதவர்களுக்கு மத்தியிலே கழுத்துக்குக் கீழேஉறுப்புகள் செயல்படாதபோதும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி நுாற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகளின் திறன்களை ஊக்கப்படுத்தி, அவர்களைக் காக்கும் அமைப்பான அமர்சேவா சங்கத்தைத் தென்காசிக்கு அருகில் உள்ள ஆய்க்குடியில் நடத்தி நாடிவந்தோருக்குத் தேடிச்சென்று உதவிடும் ராமகிருஷ்ணன் வாழ்ந்துகாட்டியல்லாமல் வேறுயார்?

முன்னேறுபவர்கள் ஒருநாளும் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பதில்லை!
அவர்கள் மூச்சுப்பிடித்து முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். தடுமாறி விழுந்தவர்கள் களையும், தடம்மாறிச் சென்றவர்களையும் நேர்வழிப்படுத்தும் பேராசிரியர்களாக உலகப்புகழ் பெற்ற மாற்றுத்திறனாளிகள் இருந்திருக்கிறார்கள் என்பதற்குச் சான்று பேராசிரியர் ஸ்டீவன் ஹாக்கிங்.இங்கிலாந்தில் பிறந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கற்று எல்லோரையும் போல் இயல்பாய் வாழ்ந்துகொண்டிருந்தபோது 21 வயதில் இயக்கு நரம்பணு நோயால் பாதிக்கப்பட்டுக் கைகால்கள் செயலிழந்து வாய்பேசமுடியா நிலைக்குத் தள்ளப்பட்டார்.

கணினியைப் பயன்படுத்தி அவர் சொல்வதை மாணவர்கள் புரிந்துகொள்ளுமளவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தன் குறையை அவர் துணிச்சலாக எதிர்கொண்டார். உடல்குறையை ஒரு பொருட்டாக எண்ணாமல் கடும்முயற்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
மாற்றுத்திறன்
உலகஅளவில் பேசப்படும் 'காலத்தின் ஒரு வரலாற்றுச் சுருக்கம்' எனும் நுாலை எழுதி பாராட்டைப் பெற்றார். இயற்பியல் ஆய்வுகளுக்காக உலகின் பலநாடுகளுக்குப் பயணிக்க அவருக்கென்று வடிவமைக்கப்பட்ட விமானத்தில் பயணித்து ஆய்வுச் சொற்பொழிவுகளை வழங்கினார். என் வாழ்வின் இலக்கு விண்வெளிப் பயணம் மேற்கொண்டு நிலவைச் சுற்றிவருவதுதான் என்று மிகத்துணிச்சலாகக் கூறினார். ஒரு நாளைக்கு 18 மணிநேரம் உழைத்து 19 ஆய்வுநுால்களை உருவாக்கினார். பேராசிரியர் ஸ்டீவன் ஹாக்கிங் தேனீயைப் போல் உலவிய அறிவியல் விஞ்ஞானி!உலகின் சிறந்த இசைமேதையான லுடுவிக் வான் பேத்தோவன், பியானோ இசைக்கலைஞராகத் தொடக்கத்தில் அறியப்பட்டார். புகழ்பெற்ற இசையமைப்பாளராக அவர் உருவான காலத்தில் 26வது வயதில் செவித்திறனை முற்றிலும் இழந்தார். இழந்த செவித்திறன் குறித்து அவர் வருந்தினார், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கூட வந்தது, அவரது நண்பர்கள் தந்த ஊக்கத்தின் உதவியால் அதிலிருந்து மீண்டு இசையில் மூழ்கினார். உலகப் புகழ்பெற்ற நைன்த் சிம்பனி, வயலின் நோட்ஸ்களை உருவாக்கினார். அவரது இறுதிஊர்வலத்தில் இருபதாயிரம் பேர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். ஒருதிறன் குறைந்தால் மாற்றுத் திறன் உள்ளுக்குள்ளிருந்து பீறிட்டெழுந்தே தீரும் என்பதற்குச் சான்று பேத்தோவன்.


நம்பிக்கையால் சிகரம் எட்டியவர்
கைப்பந்தாட்ட வீரராகத் திகழ்ந்த அருணிமா சின்கா ஓடும் ரயிலில் இருந்து திருடர்களால் துாக்கிவீசப்பட்டு இடதுகாலைத் தொடர்வண்டியின் சக்கரங்களில் இழந்தார். கால்களை இழந்தாலும் நம்பிக்கையை அவர் இழக்கவில்லை. மனம் தளராமல் ஒற்றைக் காலோடு மத்தியப் பாதுகாப்புப் படையில் தலைமைக் காவலரானார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியேதீருவேன்! என்று கடும் முயற்சி செய்து 2013ல் அருணிமா சின்கா எவரெஸ்ட் சிகரத்தில் கால்பதித்து இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். எவரெஸ்ட் சிகரத்தில் கால்வைத்த இந்தியாவின் முதல் மாற்றுத்திறன் சாதனையாளர் என்ற பெயர் பெற்றார்.
தடையைத் தாண்டியவர்கள்
சிறுவயதில் வந்த மர்மக் காய்ச்சலால் பேசும் திறனையும் கேட்கும் திறனையும் இழந்த ஹெலன் ஹெல்லர் தடையை வென்று சைகை மொழியைக் கற்றுக்கொண்டு பல நுால்களை எழுதிய எழுத்தாளராக நாற்பது நாடுகளுக்குப் பயணித்த சொற்பொழிவாளராகத் தன்னை மாற்றிக்கொண்டார்.புகழ்பெற்ற நடனக்கலைஞரான சுதா சந்திரன், 17 வயதில் விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்தார். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் செயற்கைக்கால் மாட்டி நடக்கத் தொடங்கினார். முயற்சியாலும் பயிற்சியாலும் மீண்டும் நடனமாடத் தொடங்கினார். மாற்றுத்திறன் பெற்ற தடகள வீரரான மாரியப்பன் தங்கவேலு, உலக பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று உயரம் தாண்டுதலில் டி- 42 பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றார்.

இளமையில் கண்பார்வை இழந்த கவிஞர் ஜான்மில்டன் இழந்த சொர்க்கம், மீண்ட சொர்க்கம் எனும் புகழ் பெற்ற படைப்புகளை இயற்றினார். கற்கும் திறனற்றவர் என்று பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசனை ஊக்கப்படுத்தி அவருக்குக் கல்வியைக் கற்றுத்தந்து ஆய்வாளராக்கியதில் அவர் தாய் நான்சி எடிசனுக்குப் பங்குண்டு. மூளைவளர்ச்சித் திறனற்றவர் என்று முத்திரை குத்தப்பட்ட எடிசன், தன் மாற்றுத்திறனால் ஆயிரமாயிரம் கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தார்.

யாரால் முடியும்
தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸ்சாண்டர் கிரகாம்பெல் சிறுவயதில் கற்பதில் ஆர்வமற்றவராகவே இருந்தார். அவரது தாயாரும், அவரது துணைவியாரும் மாற்றுத் திறனாளிகள், அவர்கள் தந்த ஊக்கத்தால் உலகப்புகழ் பெற்ற ஆய்வறிஞராகத் திகழ்ந்தார். 'நம்மால் முடியாவிட்டால் யாரால் முடியும்?'இப்போது முடியாதென்றால் எப்போது முடியும்?' எனும் தன்னம்பிக்கை வாசகம்தான் அணுகுண்டுத் தாக்குதல்களால் சின்னா பின்னமான ஜப்பான் நாட்டை உயர்த்திய வாசகம்.

மாற்றுத்திறனாளிகளின் சாதனைகளை ஊக்கப்படுத்துவதும் அவர்கள் தளரும்போது தட்டிக் கொடுப்பதும்தான் நாம் செய்யவேண்டியது. விழுவதன் வலியை அழுவதன் மூலமாக அல்ல, எழுவதன்மூலமாகத்தான் நாம் காட்டவேண்டும்.
நன்றி விக்கிபீடியா. தினமலர்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக