பக்கங்கள்

புதன், 11 டிசம்பர், 2019

சர்வதேச மலைகள் தினம் டிசம்பர் 11.


சர்வதேச மலைகள் தினம் டிசம்பர் 11.

மலை வளம் காக்கவும், மழை வளம் பெறவும், ஐ.நா., சார்பில், 'சர்வதேச மலைகள் தினம்' இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.சர்வதேச அளவில், பல்லுயிர்க் காடுகளின் அஸ்திவாரமாகவும், வனவிலங்குகளின் வாழ்விடமாகவும் இருப்பவை, மலை பிரதேசங்களே.உலக நிலப்பரப்பில், 27 சதவீதம் மலைகளே உள்ளன. இதனால் தான், நிலையான பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது.உலகெங்கிலும் உள்ள மக்கள் தொகையில், 13 சதவீதம் பேர், மலைகளில் வாழ்கின்றனர். தண்ணீர், உணவு, சுத்தமான காற்று என, அனைத்திற்கும் மலைகளை நம்பியே மக்கள் உள்ளனர்.மலைகளில் இருந்து தான், 75 சதவீதம் நன்னீர் பெருக்கெடுக்கிறது. மலைகளில் விளையும் அற்புத மூலிகைகளும், அவை பாதுகாத்து வைத்துள்ள எண்ணற்ற உயிரினங்களும் தான், உணவுச் சங்கிலியில், மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.இத்தகைய மலைகள், இன்று மெல்ல மெல்ல காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றன. கிரானைட்டுக்காக மலைகளை வெட்டுவதும், மலைகளில் உள்ள மரங்களை வெட்டிச் சூறையாடுவதும் தொடர்கிறது.அதனால், பல மலைப்பிரதேசங்களில், அவற்றின் இயற்கையான சூழல் மாறி, அங்கு, இயல்பான குளிரையே காண முடிவதில்லை. இவற்றுள், மிக முக்கிய அழிவை சந்தித்து வருபவை, நம் நாட்டில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகள் தான்.இது குறித்து, இயற்கை ஆர்வலர், எஸ்.சரவணன் கூறியதாவது:உலகின், 20 சதவீத சுற்றுலா வருவாய், மலைகளை நம்பியே உள்ளது. சர்வதேச அளவில், வளரும், வளர்ந்த நாடுகளில், மலைகள் மற்றும் மலை சார்ந்த வனங்களை பாதுகாப்பதில், முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.அதேநேரம், நாகரிக வளர்ச்சிக்காக, கனிம வளங்களை அழிப்பதும், இன்றுவரை தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.அந்த வகையில், பாரம்பரியமிக்க மலை பிரதேசங்களை கொண்ட, இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில், மற்ற நாடுகளை விட மலை வளம், கனிம வளம் அழிப்பு என்பது, அதிகளவில் நடக்கிறது.இதுவே, நம் நாட்டின் மிக முக்கிய மலைத்தொடர்களான, கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகள், அழிய காரணமாக உள்ளது.ஒடிசாவில் தொடங்கும், கிழக்கு தொடர்ச்சி மலைகள், நீலகிரியின் மேற்கு பகுதியுடன் இணைந்து நீடிக்கிறது.இதனுள் அடங்கியது தான், சேர்வராயன், கல்வராயன், ஏற்காடு, கொல்லி மலை உள்ளிட்ட மலைத்தொடர்கள்.இந்த மலைத்தொடர்கள் பயணிக்கும் பகுதிக்கு ஏற்றவாறு, அலுமினியம், பாக்சைட், இரும்பு, மேக்னசைட் உள்ளிட்ட எண்ணற்ற தாது பொருட்கள் உள்ளன.இவற்றில், பெரும்பாலானவை நாகரிக வளர்ச்சிக்காகவும், தொழில் தேவைகளுக்காகவும் அழிக்கப்பட்டு வருகின்றன.கனிம வளங்கள் அழிவால், 50 ஆண்டுகளில், கிழக்கு தொடர்ச்சி மலைகளின் பயணம், பெரும்பாலான இடங்களில் துண்டிக்கப்பட்டு, அங்கு பாய்ந்த வாணியாறு, வெள்ளாறு, சரபங்கா, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதி, ஸ்வேதா நதி உள்ளிட்ட பல நதிகளும் அழிந்துவிட்டன.இதில் திருமணிமுத்தாறு, அடுத்த கூவமாகவே மாறிவிட்டது. கடல் மட்டத்தில் இருந்து, 1,600 மீட்டர் உயரம் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள், குஜராத்தில் துவங்கி கன்னியாகுமரி வரை பயணிக்கிறது.இந்த மலைத்தொடர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த, ஐ.நா., சபை, இதை, உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்து, அதற்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கவும், மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.ஆனால், ஐ.நா., உத்தரவையும் மீறி, மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மரங்களை வெட்டி சூறையாடுவதும், தேயிலை தோட்டங்கள் அமைப்பதும், நடந்து கொண்டு தான் இருக்கிறது.இதனால், இந்தியாவில் பருவமழை பொய்த்து, சில ஆண்டுகளாக புயல், வெள்ளம் என, இயற்கை பேரிடர்கள் அதிகரித்துள்ளன.இது ஒருபுறமிருக்க, சர்வதேச அளவில், பல மலைத்தொடர்களில் உள்ள பனிப்பாறைகள், பருவநிலை மாற்றங்களாலும், புவி வெப்பமயமாதலாலும் அழிவை சந்தித்து வருகின்றன.கடந்த, 10 ஆண்டுகளில், 600க்கும் மேற்பட்ட பனிப்பாறைகள் அழிந்துள்ளன. இதனால், கடல் மட்டம் உயர்ந்து, பல இடங்கள் மாயமாகும் சூழல் உருவாகி உள்ளது.அதேபோல், மலைகள் அழிவால், சர்வதேச அளவில் மலைகளை நம்பியே வாழும், 40 சதவீத பழங்குடியின மக்கள், உணவு பற்றாக்குறையால் தவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதை தடுக்கவும், மலைப்பகுதியின் மகத்துவத்தை உணர்ந்து, மலைகளை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும், 2002ம் ஆண்டை, 'அகில உலக மலைகள் ஆண்டு' என, ஐ.நா. சபை அறிவித்தது. தொடர்ந்து, 2003ல், யுனெஸ்கோவால், டிச., 11ம் தேதி, 'சர்வதேச மலைகள் தினமாக' அறிவிக்கப்பட்டது.அதன்படி, ஒவ்வொரு ஆண்டும், டிச., 11ம் தேதி, ஏதேனும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து, 'சர்வதேச மலைகள் தினம்' கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக, ஐ.நா., நிர்ணயித்து இருப்பது, 'இயற்கை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் வளர்ச்சி மற்றும் உணவு பாதுகாப்பு' என்பதாகும்.அதாவது, மலைகளில் ஏற்படும் வளர்ச்சியானது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், மக்களுக்கு உணவு பாதுகாப்பை அளிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என, ஐ.நா., கருதுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.மலையும், மலை சார்ந்த வனங்களும், நம் முன்னோர்கள் நமக்கு அளித்த கொடை. அவற்றை, பழமை மாறாமல் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு அளிப்பதே, நாம் அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு செய்யும், மிகப்பெரும் உதவியாக அமையும்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக