பக்கங்கள்

சனி, 28 டிசம்பர், 2019

மாசற்ற குழந்தைகள் தினம் டிசம்பர் 28.


மாசற்ற குழந்தைகள் தினம் டிசம்பர் 28.

மாசற்ற குழந்தைகள் தினம் என்றால் என்ன? இதனைக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? உரோமை அரசால், யூதர்களை ஆள்வதற்கு என்று நியமிக்கப்பட்ட ஏரோது அரசரால் கொல்லப்பட்ட குழந்தைகளைத்தான், மாசற்ற குழந்தைகள் தினமாக, திருச்சபை கொண்டாடுகிறது. ஏரோது எதற்காக, ஒன்றுமறியாத பச்சிளங்குழந்தைகளைக் கொல்ல வேண்டும்?

ஞானிகளால் மெசியா பிறந்திருக்கிறார் என்பதை அறிந்த ஏரோது, குழந்தையினால் தன்னுடைய அரசுக்கு ஆபத்து என்று நினைத்தான். ஆனால், எந்த குழந்தை தன்னுடைய பதவிக்கு ஆபத்தாக வருகிறது என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னுடைய பதவியை காப்பாற்றுவது ஒன்றே, அவனுடைய இலக்காக இருந்தது. அதற்காக எத்தனை குழந்தைகளை பழிகொடுத்தாலும் தகும் என்று நினைத்தான். அவர்கள் அனைவரையும் ஈவு, இரக்கமில்லாமல் கொன்றொழித்தான். எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் என்பது தெளிவாக இல்லை. ஆனால், கொல்லப்பட்ட குழந்தைகள் அனைவருமே, திருச்சபையினால் மறைசாட்சிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதிகார வெறிக்கு பழிகடாக்கள் தான் இந்த மாசற்ற குழந்தைகள். இன்றைக்கு பெற்றோர், தாங்கள் நிறைவேற்ற முடியாத ஆசைகளை தங்களின் குழந்தைகளிடத்தில் திணித்து, அவர்களை தங்களுடைய விருப்பு, வெறுப்புக்களுக்கு ஏற்ப வளர்க்க வேண்டும் என்று நினைத்து, குழந்தைகளின் ஆளுமையைச் சிதைக்கின்றனர். குழந்தைகளை அவர்களின் இயல்பில் வளர நாம் முயற்சி எடுப்போம்.



கடவுளின் கரம்

யூதப் பாரம்பரிய மக்கள் கனவு வழியாக கடவுள் மக்களோடு பேசுகிறார் என்று நம்பினர். எனவே, கனவு வருகிறபோது, அவர்கள் அதை சாதாரணமானதாக கருதுவதில்லை. அதில் இருக்கக்கூடிய அர்த்தங்களை விளக்குவதற்கு ஏராளமான பேர், பாலஸ்தீனத்தில் இருந்தார்கள். எனவே, யோசேப்பு கனவை சிந்தித்து, அர்த்தம் கண்டுபிடிக்க முனைவதில், பொருள் இருக்கிறது. ஆனால், இந்த பகுதியை வாசிக்கிறபோது, நமக்கு எழுகிற முக்கியமான கேள்வி: யோசேப்பு எதற்காக எகிப்திற்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்? எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் என்ன தொடர்பு? இவற்றை இப்போது பார்ப்போம்.

யூதர்களுக்கு எப்பொழுதெல்லாம் வேற்று அரசர்கள் வந்து அவர்களைத் துன்புறுத்தினார்களோ, அப்போதெல்லாம் தாங்கள் புகலிடம் செல்லும் இடமாக எகிப்தை அவர்கள் வைத்திருந்தார்கள். ஒருவேளை அவர்களது முன்னோர் அங்கே பல ஆண்டுகளாக பாரவோன் மன்னனுக்கு அடிமைகளாக இருந்ததால், அவர்களின் பல உறவுகள் அங்கே இருந்தனர். அங்கிருந்து வேற்று நாட்டிற்கு வந்துவிட்டாலும் கூட, நிச்சயம் எகிப்தும் அவர்களுக்குத் தாய்வீடு போன்றதுதான். அவர்களது முன்னோர் வாழ்ந்த நாடு. இதனால், எகிப்தின் ஒவ்வொரு நகரங்களிலும் ஏராளமான யூதர்கள் வாழ்ந்து வந்தனர். அலெக்ஸாண்டிரியாவில் மட்டும் ஏறத்தாழ பத்து இலட்சம் யூதர்கள் வாழ்ந்ததாக ஒரு புள்ளவிபரம் கூறுகிறது. எனவே, எகிப்திற்குச் சென்றால் உணவுக்கோ, தங்குமிடத்திற்கோ கவலைப்படத் தேவையில்லை. அது அவர்களுக்கு அந்நிய தேசம் அல்ல. ஆக, குழந்தைக்கு ஆபத்து என்றதும், யோசேப்பு தப்பியோட, எகிப்தைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியம் அல்ல.

கடவுளுடைய கரம் தேவைப்படுகிற நேரத்தில், யோசேப்பிற்கு கிடைக்கிறது. என்ன செய்வது? ஏது செய்வது? என்ற குழப்பமான நேரத்தில் கடவுள் யோசேப்பிற்கு உதவி செய்கிறார். நிச்சயம் அந்த கடவுளின் கரம் நம்மையும் தேற்றும் என்றால் அது மிகையாகாது. நாம் துன்பப்படுகிற நேரத்தில் கடவுள் தாமே, தம் தூதரை அனுப்பிக் காத்திடுவார்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக