பக்கங்கள்

வியாழன், 19 மார்ச், 2020

உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20


மகிழ்ச்சி எனும் மலர்ச்சிப் பூ இன்று உலக மகிழ்ச்சி தினம்

நாம் அணியும் எல்லாப் பொன் நகைகளையும் விடவும் அழகானது நம் முகம் சிந்தும் இனிமையான புன்னகை. மலர்ச்சியும் மகிழ்ச்சியும் நம் வாழ்நாளை வெகுவாக நீட்டிக்கிறது. ஒவ்வொரு விடியலிலும் மகிழ்வலைகள் நம்முள் எழ என்ன செய்யவேண்டும்?
வெறுப்பை மறுத்துச் சிரிப்பை நம் உள்ளத்திற்குள் ஊற்ற என்ன செய்யவேண்டும்?


ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து வாழ்பவனுக்கு அவன் மனம் அருவிபோல் பொங்கத் தான் செய்யும். அந்தந்த கணத்தை அனுபவித்து வாழ்பவனுக்கு இந்த வினாடி மட்டுமன்று எல்லா வினாடிகளும் அருமையானதுதான். வளர்ந்த செடியால் தொட்டியையும் துளைத்துக் கொண்டு மண்ணில் வேர் பரப்ப முடிகிறது. சென்டி மீட்டர்களால் வளர்ந்ததாய் காட்டிக் கொண்டிருக்கும் நம்மால் அவ்வாறு ஏன் முடியவில்லை? வேதனைப் பரப்பில் நம் வேர்களைப் படரவிட்டு வருத்தத்தின் நிறுத்தத்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம்.
வெளியில் இல்லை

நமக்கு நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் நாமே பொறுப்பு என்று உணரத் தொடங்கினால் எங்கும் எப்போதும் மகிழ்ச்சிதான். தேனடையில் தேனீ சேர்த்து வைத்திருக்கும் தேனைத் தன் கரங்களால் பிழிந்தெடுக்க முடிந்த மனிதனால் எவ்வாறு மலர்களுக்கு வலிக்காமல் தேனைச் சேகரிப்பது என்ற ரகசியத்தை மட்டும் ஏன் தெரிந்துகொள்ள முடியவில்லை. சந்தோஷம் என்றும் வெளியில் இல்லை. அது உள்ளுக்குள் உள்ளது, உணர்வாய் தெரிவது.


பிறந்தகுழந்தையின் பிஞ்சுப்பாதம், இளங்காலைப் பொழுதின் இனிய தென்றல், ஆலம் விழுது களில் ஆடிய ஆட்டம், கால்நுனி நனைக்கும் கடலலை நுரை. பேருந்துப் பயணத்தில் வழியும் இசை. தேடிவந்து காது நிறைக்கும் நண்பர்களின் இனிய பேச்சு, பதறிச் செய்யாத நல்ல காரியம், நதிப்புனல் குளியல் என எல்லாம் இன்பமயம், ஏன் துன்ப பயம்?நம்மை வேறுயாரும் ஊக்கப் படுத்தாவிட்டால் பரவாயில்லை, நம்மை நாமே நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்வோம்.


மகிழ்ச்சியின் திசைநோக்கி நம்மைத் திருப்பிக்கொள்வோம். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா? என்று கேட்டுக்கொள்வோம், அப்படிக்கேட்கமுடிந்ததால்தான் பாரதியால் தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா' என்று பாடமுடிந்தது.

சிரிப்பு தரும் சிறப்பு

புன்னகை மலர்கள் பூக்கும் வேளையில் சோகங்கள் எல்லாம் சுகங்களாகும். விக்கலைத் தண்ணீர் ஊற்றி நிறுத்துகிறமாதிரி சிக்கலைச் சிரிப்பைச் சிந்துவதால் மட்டுமே நிறுத்த முடியும். தீமையறியா மனம் மகிழ்வைத் தரும் தினம். பூத்துக் குலுங்குகிற மலர்களைப்போல் பார்த்துக் குலுங்குகிறது வாழ்வெனும் வனம். தற்படம் எடுக்கிறவரின் முகமாய் வாழ்வு நம் மகிழ்வலைகளைப் பதிவு செய்துகொண்டே இருக்கிறது.


நான் இப்போதும் எப்போதும் உற்சாகமாய் இருப்பேன் என்று நமக்குள் சொல்லிக் கொள்ளும் போதுதான் மகிழ்ச்சியாய் வாழ்கிறோம். சின்ன சின்ன மகிழ்ச்சிகளால் நிறைகிறது இந்த வாழ்வு. கவனிக்காமல் சைடுஸ்டாண்ட் போட்டு இருசக்கர வாகனத்தில் பயணிக்கிற சகமனிதனைச் சப்தமிட்டு கவனமாக்குவது முதல் வடிவேல் காமெடி பார்த்து வயிறுகுலுங்கச் சிரிப்பது வரை சின்னசின்ன சந்தோஷங்களால் நிறைந்திருக்கிறது இந்த வாழ்வு.

அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதற்காக நம்மை எல்லாவற்றுக்கும் மாற்றிக்கொள்ளத் தொடங்கினால் என்றும் நிம்மதி கிடைக்கப்போவதில்லை. எல்லாவற்றையும் மனம்தான் தீர்மானிக்கிறது, அதனால்தான் “மனிதன் என்பவன் தெய்வமாகலாம், வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம், மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம், வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம். துணிந்துவிட்டால் தலையில் எந்தச் சுமையும் தாங்கலாம்” என்று கண்ணதாசன் எழுதினார்.

நிறைவான வாழ்வு

நிறைவான வாழ்வில்தான் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் உள்ளது. மரமேறத் தெரியவில்லையே என்று மீன்கள் வருத்தப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது? தொட்டிக்குள் வாழ முடிய வில்லை என்று புலிகள் புலம்பினால் நன்றாக இருக்குமா? வளர்ச்சியின் தொடக்கம் வாய்ப்பு களைப் பயன்படுத்துவதில் உள்ளது. நமக்குகிடைக்காத ஒன்று மற்றவர்களுக்கும் கிடைக்காமல் போகவேண்டும் என்கிற எண்ணம் நம்மையும் அழித்து மற்றவர்களையும் அழிக்கிறது. மற்றவர்களிடம் அன்புக்கு ஏங்குகிற நாம், அந்த அன்பை மற்றவர்கள் பெற அவர்களை வெகுவாக ஏங்க வைக்கிறோம்.


வேரில்லாமலும் நீரில்லாமலும் நம்முள் வளர்கிறது பொறாமை எனும் பெருஞ்செடி! தினமும் அஞ்சியஞ்சிச் சாவதைவிட ஒருநாள் சவாலை எதிர்கொள்வது எவ்வளவோ மேலானது. துணிவே துணை என்று வாழ்பவர்களுக்கு எல்லா நாட்களும் மகிழ்ச்சி நாட்களே!

மகிழ்ச்சியும் மலர்ச்சியும்

எப்போதும் எங்கேயும் குறைகூறிக்கொண்டே இருக்காமல் எல்லோரையும் நேசிப்பவர்களையே எல்லோரும் நேசிக்கிறார்கள், அவர்கள் வாழ்வில் எல்லா நாட்களும் மகிழ்வான நாட்கள்தான். இல்லாத மாயைகளுக்காக இருக்கிற இனிமையான வாழ்வைப் பணயம் வைக்கிற மனிதர்களாக நாம் ஏன் இன்னும் இருக்க வேண்டும்? விட்டுவிடுதலையாகி விரிவானில் பறக்கிற சிட்டுக்குருவிகளைப் பார்க்கும்போது நம் மனம் பரபரப்பதை மகிழ்ச்சி என்று சொல்லாமல் வேறுஎன்ன சொல்ல?

மகிழ்ச்சியும் மலர்ச்சியும் மனதின் புன்னகை மலர்கள். சருகுகளின் சப்தத்தில் கானகங்கள் வருந்துவதில்லையே!அதைப்போல இறந்த நாட்களுக்காகவும் இழந்தபொருட்களுக்காகவும் புன்னகை மனிதர்கள் எப்போதும் புலம்புவதேயில்லை. நினைவுகள் எப்போதும் புனைவுகளாயிருந்தாலும் இன்பமாய் இருந்த நிமிடங்களில்தான் இளைப்பாறிச் செல்கிறது இளகிய மனம்.

எப்போதெல்லாம் நம் மனம் சோர்வடைகிறதோ, அப்போதெல்லாம் நாம் ஏற்கனவே மகிழ்ச்சியாயிருந்த நிமிடங்களை நினைத்துப் பார்த்துக்கொள்ளலாம். தினமும் நாம் எத்தனையோ மனிதர்களைச் சந்தித்தாலும், சிலர் நம் மன அறைக்குள் தங்கள் செயல்களாலும் ரசனையாலும் நின்று நிலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் ரசித்து ருசித்து உணவருந்துவதைக் காணலாம்.

சிலர் தலையை ஆட்டியபடி கண்களை மூடி இன்னிசை கேட்பதைக் காணலாம், சிலர் ஓடியாடி பயணப்பட்டுக் கொண்டே வாழ்வை ரசிப்பதைக் காணலாம். சிலர் வண்ணவண்ண மீன்களை ரசித்து அவற்றோடு பேசியபடி நந்தவன நிமிடங்களைக் கழிப்பதில் மகிழ்ச்சியடைவதைக் காண்கிறோம், சிலர் பூங்காவில் நடைபயின்றபடி நண்பர்களோடு சிரித்து மகிழ்ந்து நடப்பதைக் காணமுடிகிறது. சிலர் காலை முதல் இரவுவரை நுாலகத்தின் புத்தகப் பக்கங்களுக்குள் தன்னைத் தொலைத்து மகிழ்வதைக் காண்கிறோம்.

இந்தப் பட்டியல் போல்ஆயிரமாயிரமாய் தொடரும் மகிழ்வலைப் பட்டியலில் ஏதோவொரு பக்கத்தில் உங்கள் பெயரிருந்தால் நீங்களும் மகிழ்வர்தான். ரசித்து வாழ்தல் ஒன்றே சிரித்து மகிழும் வாழ்வின் அடையாளம்.
நன்றி தினமலர்

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக