பக்கங்கள்

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

உலக பூமி தினம் ஏப்ரல் 22.


உலக பூமி தினம் ஏப்ரல் 22.

உலகெங்கும் 192 நாடுகளில் ஏப்ரல் 22ஆம் தேதியை எர்த் டே (Earth Day)ஆக – பூமி தினமாகக் கொண்டாடுகிறோம்.

எப்படி பூமி தினம் ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கு ஒரு வரலாறு உண்டு. 1969ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பாரா என்ற இடத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு 10000 கடல் பறவைகளை அழித்தது. 30 லட்சம் காலன் என்ற பெரிய அளவில் ஏற்பட்ட இந்த எண்ணெய்க் கசிவு மனித குலத்தைச் சிந்திக்க வைத்தது. இதனால் மனம் நொந்த அமெரிக்க செனேடர் கேலார்ட் நெல்ஸன் (Gaylord Nelson)  பூமியைக் காக்க விழிப்புணர்வு ஊட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்து 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் நாள் முதல்  பூமி தினத்தைக் கொண்டாடினார்.

இதனால் உலகெங்கும் ஏராளமானோர் விழிப்புணர்வு பெற்றனர்.

பல்வேறு நாடுகளிலும் கடந்த 47 ஆண்டுகளில் சுற்றுப்புறச் சூழலைக் காக்கப் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

மனித குலத்திற்கே தீங்கு விளைவிக்கும் பல இரசாயனப் பொருள்களின் பயன்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

நீரைக் காக்க வேண்டிய அவசியத்தையும் காற்றைச் சுத்தமாகக் காக்க வேண்டிய அவசியத்தையும் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் முதல் வயதானோர் வரை அனைவருக்கும் இந்த தினத்தில் விழிப்புணர்வூட்டும் பிரச்சாரம் நடைபெறுகிறது.

நூறு கோடி சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் பங்கு கொள்ளும் தீவிர இயக்கமாக பூமி தினக் கொண்டாட்டம் இன்று ஆகி  விட்டது.

இதில் நாமும் பங்கு கொண்டு நம் பங்கிற்கு உரியதை ஆற்றுவது நமது கடமையாகும்.

ஆற்றிலிருந்து மண் வளம் சுரண்டப்படாமல் இருத்தல், நீரைச் சேமித்தல், பாதுகாத்தல், அசுத்தப்படாமல் வைத்திருத்தல், ஒளி மாசை அகற்றல், வாகனங்கள் வெளிப்படுத்தும் நச்சுப்புகையைக் கட்டுப்படுத்தல் மற்றும் அவற்றை அறவே இல்லாமல் ஆக்குதல், ஒலி மாசைக் கட்டுப்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல், இயற்கை வளமான காட்டுச் செல்வத்தைக் காத்தல், அரிய விலங்குகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், அருகி வரும் இனமாக ஆகி விட்ட திமிங்கிலங்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவை இனங்களைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு நலம் பயக்கும் திட்டங்களை ஏற்படுத்தவும் செயல்படுத்தவும் பூமி தினம் உதவுகிறது.

ஒவ்வொருவரும் இதில் இணைந்து வளம் வாய்ந்த பூமியை உருவாக்குவோம்; நிலை நிறுத்துவோம்!



சுற்றுப்புறச் சூழலைக் காக்க உலகெங்கும் உள்ள சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் நாள் பூமி தினமாக 192 நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

பிரபஞ்சத்தில் தனித்தன்மை கொண்ட கிரகமாகத் திகழும் பூமியை நேசித்துக் கொண்டாடும் நாள் இது.

பூமி தினம் சம்பந்தமாக ஒவ்வொருவரும் அறிந்து  கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள் இதோ:-

பூமி தினத்திற்கென தனியாகக் கொடி உண்டு. இதற்கு ஈகாலஜி ஃப்ளாக் (Ecology Flag) என்று பெயர். ரான் காப் (Ron Cobb) என்ற ஒரு கார்டூனிஸ்ட் தான் முதன் முதலில் இதை உருவாக்கினார். இதில் இடம் பெற்றுள்ள இரு ஆங்கில எழுத்துக்களான E மற்றும் O ஆகியவை Envirronment மற்றும் Organism ஆகிய வார்த்தைகளின் முதல் எழுத்திலிருந்து எடுக்கப்பட்டு கிரேக்க எழுத்துப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பதிமூன்று பட்டைகள் பச்சை மற்றும் வெண்மை நிறங்களில் மாறி மாறி இடம் பெறுகின்றன.


பூமி தினத்திற்கான தனிப் பாடல் ஒன்றும் உண்டு. 1970ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் இரண்டு கோடிப் பேர் இந்த முதல் பூமி தினத்தில் பங்கு கொண்டனர்.

உலகெங்கிலுமுள்ள 192 நாடுகளில் 22000க்கும் மேற்பட்டோர் சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். உலகின் மிகப் பெரும் இயக்கமாக இது உருவெடுத்துள்ளது. இன்று நூறு கோடிப் பேர் இந்த இயக்கத்தில் இணைந்து அரிய பூமியைக் காக்க சபதம் கொண்டுள்ளனர்.

2012ஆம் ஆண்டு சீனாவில் ஒரு லட்சம் பேர் கார்பன் டை ஆக்ஸைடு நச்சுப் புகை வெளியேறுவதைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சைக்கிள்களை ஓட்டி விழிப்புணர்வு ஊட்டினர். இந்த நாளில் உலகெங்குமுள்ள தன்னார்வத் தொண்டர்கள் ஆங்காங்கே குப்பைகளை அகற்றி வாழுமிடத்தைச் சுத்தப்படுத்துவதோடு மரக்கன்றுகளையும் நடுகின்றனர்.

நம்மை உயிர் வாழ வைக்கும் பூமித் தாயை நன்றியுடன் போற்றுவதில் நாமும் இணைவோமாக!


”நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்” புவியை பாதுகாக்காவிட்டால்- உலக பூமி தினம் இன்று

 நாம் வாழும் "பூமித்தாய்" நம்மை தாங்கிப் பிடிக்காவிட்டால் இந்த தேர்தல், ஓட்டு, ஊழல் என்று எதுவுமே இருந்திருக்காது.

ஆனால், நாம்தான் நல்லது செய்வோரை உடனே மறந்து விடுவோமே!அப்படித்தான் பூமியையும் நாம் மறந்தே போனோம்.

அதனை நினைவில் நிறுத்தத்தான் இன்று அனுசரிக்கப்படுகின்றது "உலக பூமி தினம்".1970 ஆம் ஆண்டு முதல் கிட்டதட்ட 44 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.


 World Earth Day 2014 today…

எதிர்வினை நிச்சயம்:

ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்ற நீயூட்டனின் மூன்றாம் விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும் . இயற்கை கூட இதில் விதிவிலக்கு கிடையாது.

மறந்துபோன இயற்கை:

இன்றைய இயந்திரச் சூழலில் நமக்கும் இயற்கைக்குமான உறவைப்பற்றி சிந்திக்க நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கிறோம் . இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட நம்மால் வாழ முடியாது .

"ஒருநாள்"தான் ஒதுக்குகிறோம்:

வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் ஒரு விதமான கவர்ச்சி தேவைப்படுகிறது . நம்மை தாங்கிக் கொண்டிருக்கும் பூமியைப்பற்றிச் சிந்திக்கக்கூட நமக்கு " உலக பூமி தினம் " என்று ஒரு நாள் தேவைப்படுகிறது .

காயப்படும் பூமி:

பூமியின் முதல் எதிரி யார் என்று கேட்டால் அது சந்தேகமே இல்லாமல் மனிதன் தான் . இன்று பூமி இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருப்பதற்கு நாமும் , நம் வாழ்க்கை முறையும்தான் காரணம் . அறிவியல் என்ற பெயரிலும் , கண்டுபிடிப்புகள் என்ற பெயரிலும் தினமும் பூமியைக் காயப்படுத்துகிறோம் .

எதிரான அறிவியல்:

இயற்கையோடு இணைந்த அறிவியலால் மட்டுமே மனித குலத்திற்கு நன்மை ஏற்படும் . இயற்கைக்கு எதிரான அறிவியல் சிறிய நன்மையையும் , பெரிய தீமையையும் கொண்டிருக்கும் .

பூமி எனும் குப்பைத்தொட்டி:

நமது ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் இயற்கைக்கு எதிராகவே உள்ளது . இயற்கையின் தன்மைக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் அமைவதில்லை . நமது பயன்பாடும் , வர்த்தகமும் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன . விளைவு , பூமியே ஒரு பெரிய குப்பைத்தொட்டி ஆனதுதான் மிச்சம் .

பயன்படுத்து - தூக்கி எறி:

இன்று நாம் பயன்படுத்தும் பொருள்களில் எத்தனை மண்ணில் மட்கக்கூடியவை . மிகவும் குறைவு . "பயன்படுத்தியபின் தூக்கி எறி" கலாச்சாரம்தான் இன்றைய உலகை இயக்குகிறது . இந்தக் கலாச்சாரம் பொருள்களுக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் தான் .

மனிதனுக்கும் இதுதான் நிலை:

ஒரு மனிதனை எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விடக்கூடியச் சூழல்தான் இன்று உள்ளது . நிலம் , நீர் , காற்று என்று பாகுபாடில்லாமல் அனைத்தும் மாசடைந்துள்ளது .

குப்பை வாழ்க்கை:

நம் மீது நாமே குப்பைகளை அள்ளிப்போட்டுக்கொண்டு குப்பைகளுடனே வாழ்கிறோம் . நம் வீட்டில் இருப்பது மட்டும் நம் குப்பையல்ல , பூமியில் எங்கு குப்பை இருந்தாலும் அது நம் குப்பைதான் .அதற்கு நாம் மட்டுமே காரணம் .

குறையுங்கள் குப்பைகளை:

சரி எப்படி பூமியை பாதுகாப்பது என்று கேட்கிறீர்களா? பிளாஸ்டிக் மற்றும் பூமிக்கு எதிரான மண்ணோடு மண்ணாக மட்காத அனைத்தையும் குறையுங்கள்.

முடிந்தவரை உபயோகி:

நாம் பயன்படுத்தும் அனைத்து பொருள்களையும் எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்திய பிறகுதான் குப்பைக்கோ, மறுசுழற்சிக்கோ போட வேண்டும் .

மீண்டும் உருவாக்கு:

மண்ணில் மட்கும் தன்மை இல்லாத பொருட்களை கண்டிப்பாக மறுசுழற்சி செய்ய வேண்டும் . அது மிகச் சிறிய பொருளாக இருந்தாலும் சரி .

இயற்கையை சேமிப்போம்:

இயற்கையின் எந்தப் பொருளைப் பயன்படுத்தினாலும் அந்தப்பொருளை மீண்டும் உருவாக்கி சமநிலையைக் காக்க வேண்டும் . உதாரணமாக ஒரு மரத்தை வெட்டினால் மீண்டும் ஒரு மரத்தை நட வேண்டும் . இயற்கைச் சமநிலை பாதிக்கப்படும் வரை நம்மால் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாது

கடைசியில் நரகம்தான்:

முடிந்த அளவுக்கு இவற்றை உங்கள் அன்றாட வாழ்க்கைக்குள் கொண்டு வாருங்கள் . இல்லையெனில் சுனாமியும், சூரியனும் சுட்டெரித்து நாமெல்லோரும் நரகத்திற்குத்தான் போக வேண்டும்.அதற்குள் பூமியே நரகமாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை.


பூமிக்குப் பிறந்த நாள்... மரக்கன்றை பரிசளிப்போம்!

பூமியின் சாயலில் பல கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை பூமியைத் தவிர வேறு எந்த கோள்களிலும் உயிரினங்கள் இருந்ததாக கண்டுபிடிக்கப்படவில்லை.

நாம வசிக்கிற இந்த பூமிக்கு நாளைக்குத்தான் பிறந்தநாள். அதாவது பூமியோட நலனை பாதுகாப்பதற்காக அதைப் பற்றிய விழிப்புணர்வு ஊட்டும் புவி தினம் நாளை (ஏப்ரல் 22) கடைப்பிடிக்கப்படுகிறது. நாம வசிக்கிற இந்த பூமியைப் பத்தியும், புவி தினத்தோட அவசியம் பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சுக்குவோமா...

* சூரிய குடும்பத்தில் உள்ள ஒரே உயிர்க்கோள் பூமி. உருண்டை வடிவம் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், பூமி உண்மையில் உருண்டையானதல்ல. சில பக்கங்களில் சாய்வுகள் கொண்ட கோள வடிவமானது. பூமி தோன்றி 450 கோடி ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

* பூமியில் உள்ள ஈர்ப்புவிசையே நாம் நடக்கவும், பூமியை விட்டு விலகிவிடாமல் இருக்கவும் காரணமாக இருக்கிறது.

* பூமியைச் சுற்றிலும் கடல் சூழ்ந்துள்ளது. கடல்பரப்பில் நாம் அறிந்து கொண்டது கால் பகுதிகூட இருக்காது. ஆயிரக்கணக்கான உயிரினங்களை விஞ்ஞானிகள் வகைப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் கடலில் அறியப்படாத 2.5 கோடி உயிரினங்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நீங்கள் விஞ்ஞானியாகி அந்த புதிய உயிரினங்களை கண்டுபிடித்துச் சொல்லலாம்.

*  நீங்கள் நகரங்களுக்குச் செல்லும்போதும், பயணங்களின் போதும் எங்கு பார்த்தாலும் மக்கள் வசிப்பதை பார்க்கலாம். அதனால் பூமியில் ஜன நெருக்கடி அதிகமாகிவிட்டது என்று கருதிவிட வேண்டாம். இப்போதைய மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிட்டால், 20 லட்சம் சதுர கிலோமீட்டருக்கு 56 ஆயிரம் பேர் மட்டுமே வசிக்கிறார்கள். அப்படியென்றால் பூமி எவ்வளவு பரந்து விரிந்தது என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

* பூமியின் சாயலில் பல கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை பூமியைத் தவிர வேறு எந்த கோள்களிலும் உயிரினங்கள் இருந்ததாக கண்டுபிடிக்கப்படவில்லை. வேற்றுக் கிரகத்தில் குடியேற்றங்களை நிறுவும் முயற்சியும் இன்னும் சாத்தியமாகவில்லை. செவ்வாயில் மனித காலனியை உருவாக்கும் திட்டம் நிறைவேறவும் இன்னும் நிறைய சவால்களை சந்திக்க வேண்டும். எனவே பூமியே நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். மரங்களை அழிப்பதாலும், பிளாஸ்டிக், பெட்ரோல் போன்ற கரிமப் பொருட்களாலும் பூமியின் சுற்றுச்சூழல் மாறிவருகிறது. பூமியின் சுற்றுச்சூழல் மாசுபடாமல் காப்பதன் மூலமே நாம் இங்கு நிம்மதியாக வசிக்கலாம். அதை வலியுறுத்தவே பூமி தினம் அனுசரிக்கப்படுகிறது.

* 1969–ல் நடந்த யுனெஸ்கோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 1970–ம் ஆண்டு மார்ச் 21–ந் தேதி முதன்முதலில் புவிதினம் கடைப்பிடிக்கப்பட்டது. அமெரிக்கா புவி நாளுக்கு தனி தினம் ஒதுக்க கோரி ஏப்ரல் 22–ந் தேதியை பரிந்துரை செய்தது. 1970 முதல் அந்த தேதியில் புவி தினமாக அனுசரித்து வந்தது. 1990 முதல் ஏப்ரல் 22–ந் தேதி புவிதினமாக அனுசரிக்க ஐ.நா.சபையும் ஒப்புதல் அளித்தது. பல இடங்களில் அந்த வாரம் முழுவதும் புவி வாரமாக அனுசரிக்கும் நிகழ்வுகளும் நடக்கிறது. 2009–ம் ஆண்டு ஐ.நா. சபையானது புவிதினத்தை, சர்வதேச தாய்பூமி தினமாக அறிவித்தது.

புவியின் சூழல் பற்றிய சில புள்ளி விவரங்களை பார்க்கலாம்...

* உலகின் சரிபாதி வெப்ப மண்டலக் காடுகள்  அழிந்துவிட்டதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

* ஒரு மனிதன் தினமும் 2 கிலோ கழிவுகளை தூக்கி எறிகிறான். 45 ஆயிரம் லிட்டர் தண்ணீரை ஆண்டுதோறும் உபயோகிக்கிறான். இதனால் இயற்கை வளம் வேகமாக காலியாவதுடன், மாசுபட்டும் வருகிறது.

* அமெரிக்காவில் 27 சதவீத காகிதங்களே மறு சுழற்சி செய்யப்படுகின்றன. 100 சதவீத காகிதங்களையும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தினால் ஆண்டு தோறும் 25 கோடி மரங்களை வெட்டப்படாமல் தடுக்கலாம்.

* ஆண்டுதோறும் 204 கோடி கிலோ அளவுள்ள கழிவுகள் கடலுக்கு செல்கின்றன. அவை ஆண்டிற்கு 10 லட்சம் உயிரினங்களை பலி வாங்குவதாக கணிக்கப்படுகிறது.

* எம்.பி.யாக இருந்த கேலார்டு நெல்சன், புவிதினத்தை அமெரிக்காவில் தொடங்கி வைத்தார். அவரது முயற்சியால் நாடு முழுவதும் புவிதின விழிப்புணர்வு பரவியது. அதற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது.

* டெனிஸ் ஹேய்ஸ் என்பவர் புவிதினம் உலகம் முழுவதும் கொண்டாட காரணமாக இருந்தார். உலகம் முழுவதும் இந்த தினத்தை விடுமுறையாக அறிவித்தால் 100 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த தினத்தை சிறப்பாக அனுசரிப்பார்கள் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

* முதல் புவிதினத்தை அமெரிக்காவில் 2 கோடி பேர் கலந்து கொண்டு கொண்டாடினார்கள். அவர்கள் சுற்றுச்சூழலுக்கு தாங்கள் ஒத்துழைப்பு அளிப்பதாக அமைதிப் பேரணி நடத்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள். இதில் 2 ஆயிரம் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 10 ஆயிரம் ஆரம்பப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் இதில் பங்கெடுத்தன.

* மரங்களை நட்டும், கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்தியும், கடல்பரப்பை சுத்தம் செய்தும், கையெழுத்து போராட்டம் நடத்தியும், சுற்றுச்சூழலுக்கான திட்டமிடல் செய்தும் புவிதினம் கொண்டாடப்படுகிறது. பள்ளிகளில் புவி வாரமாக அனுசரித்து புவி பற்றிய பாடங்களையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார்கள்.

* சீனாவில் 2012–ம் ஆண்டு ஒரு லட்சம் பேர் சைக்கிள்களை ஓட்டி கார்பன்–டை–ஆக்சைடு மாசு இல்லாத பயணத்திற்கு சைக்கிள்களை பயன்படுத்துவோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

* ஆப்கானிஸ்தானில் 2011–ம் ஆண்டு புவி தின அமைப்பு 2.8 கோடி மரங்களை நட்டு பிரமிக்க வைத்தனர்.

* பனாமா புவிதின கொண்டாட்டத்தில் 100 வகையான அருகி வரும் பூச்செடிகளை எல்லா இடங்களிலும் நட்டு அவற்றின் அழிவைத் தடுக்க சபதமேற்றனர்.

*  புவிதினத்தை மற்றவர்கள் எப்படி கடைப்பிடித்தார்கள் என்று பார்த்தோம். நாமும் புவி தினத்தை பூமியின் பிறந்த தினமாக கொள்வோம். அவற்றுக்கு விருப்பமான மரக்கன்றுகளை பரிசாக நிலத்தில் நட்டு பராமரிப்போம்!

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக