பக்கங்கள்

புதன், 3 ஜூன், 2020

உலக சைக்கிள் தினம் ஜூன் 03.


உலக சைக்கிள் தினம் ஜூன் 03.

'உலக சைக்கிள் தினம்'- சைக்கிளில் வந்து மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஹர்ஷவர்தன்!

சைக்கிள்.. நிச்சயம் இந்த வார்த்தையை கடக்காமல் யாரும் வளர்ந்திருக்க முடியாது. ஒரு காலத்தில் போக்குவரத்திற்கு முக்கியச் சாதனமாக இருந்த இது, இன்று பெரும்பாலும் உடற்பயிற்சி சாதனமாகத் தான் மாறி விட்டது. ஆனாலும், சமீபகாலமாக சைக்கிள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. காரணம் ஒன்று உடல் ஆரோக்கியம். குறைந்த நேரத்தில் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் அதிக கலோரிகளை எரிக்க முடியும். உடல் எடையை எளிதாக குறைக்க உதவும்.

இரண்டாவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு. பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடும் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் நிறைய சுவாசப் பிரச்சினைகள் உருவாகின்றன. சைக்கிளால் இந்த பாதிப்பைக் குறைக்க முடியும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், சைக்கிள் ஓட்டுவது என்பது ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
சரி, ஏன் இப்போது சம்பந்தமில்லாமல் சைக்கிளைப் பற்றி இப்படி மானே, தேனே என பேசிக் கொண்டிருக்கிறோம் எனக் கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது. இன்று ’உலக சைக்கிள் தினம்’.



அமெரிக்காவைச் சேர்ந்த லெசுச்செக் சிபிலிசுக்கி என்ற பேராசிரியர் தனது சமூகவியல் மானவர்களுடன் இணைந்து உலக மிதிவண்டி நாளை ஐக்கிய நாடுகள் மூலம் பிரகடனப்படுத்த வேண்டும் என பரப்புரை செய்தார். அவரது முயற்சிக்கு 56 நாடுகள் ஆதரவளிக்க, ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதியை உலக மிதிவண்டி நாளாக அறிவித்தது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை.

எந்தக் காலத்திலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானது சைக்கிள். நம் முன்னோர்கள் ஒவ்வொரு பொருளையுமே நமது உடலை வலிமையாக்கும் பொருட்டே உருவாக்கினர். ஆனால் நாம் தான் நாகரீகம், நவீனம் என்ற பெயரில் அவற்றை தொலைத்து வருகிறோம். இது சைக்கிளுக்கும் பொருந்தும்.

சைக்கிள் வரலாறு:

பதினேழாம் நூற்றாண்டில் பொழுதுபோக்காக பிரான்ஸைச் சேர்ந்த கோம்டி மீடி டீ ஷிவ்ராக் (Comte mede de Sivrac) உருவாக்கியது தான் சைக்கிள். இரண்டு மரத்துண்டுகளை வைத்து விளையாட்டுத்தனமாக சைக்கிளுக்கு அவர் உருவம் கொடுத்தார். அப்போது அவருக்குத் தெரியாது, பின்னாளில் இது பூமிக்கு எவ்வளவு தேவையான பொருளாக உருமாறப் போகிறது என்று.

தான் உருவாக்கிய அமைப்பை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி, 1791ம் ஆண்டு மரச் சைக்கிள் ஒன்றை உருவாக்கினார் கோம்டி. இந்த சைக்கிளுக்கு பெடல்கள் கிடையாது. காலால் தரையை உந்தித் தள்ளி தான் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும்.

கோம்டி உருவாக்கிய இந்த மாடல், ‘The Celerifere’ என்று அழைக்கப்பட்டது. இதில் திசைமாற்றி, மிதி இயக்கி, தடை என எதுவுமே கிடையாது. 1794ம் ஆண்டு தனது கண்டுபிடிப்பை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்தார் கோம்டி.
இதன் பிறகு மிதிவண்டியை இன்னும் மேம்பட்ட வசதிகளுடன் உருவாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர் மக்கள். அவர்களில் ஒருவர் தான் ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் வோன் ட்ரைஸ் ( karl Von Drais). இவர் 1817ம் ஆண்டு மரத்தினால் திசைமாற்றியுடன் கூடிய முதல் மிதிவண்டியை உருவாக்கினார். சுமார் 30 கிலோ எடை கொண்டதாக அந்த சைக்கிள் இருந்தது.

இந்த சைக்கிள் 1818- ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பாரிஸில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. உலகிலேயே முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட மிதிவண்டி இதுதான்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனின் கண்டுபிடிப்புகள் மெருகேறுவது வழக்கமான விசயம்தானே. சைக்கிளும் அதற்கு விதிவிலக்கல்ல. அதுவரை மரத்தால் மட்டுமே செய்யப்பட்டு வந்த மிதிவண்டிகளுக்கு மாற்றாக, லண்டனைச் சேர்ந்த டென்னிஸ் ஜான்சன் (Denis Johnson) என்ற கொல்லர் முதன் முதலில் உலோகத்தை பயன்படுத்தி சைக்கிளைத் தயாரிக்க முயற்சி செய்தார். 1818-ஆம் ஆண்டு அவர் சில குறிப்பிட்ட பாகங்களில் உலோகப்பொருளை பயன்படுத்தி புதிய சைக்கிள் ஒன்றை வடிவமைத்தார். அதன் நேர்த்தியான தோற்றம் மற்றும் எளிதில் உருளக்கூடிய சக்கரம் ஆகியவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆனால், டென்னிஸ் செய்த சைக்கிளிலும் பெடல் எனப்படும் மிதி இயக்கி இல்லை. உலகின் முதல் பெடல்களைக் கொண்ட மிதிவண்டியை, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் (Krikpatric Macmillan) என்பவர் உருவாக்கினார். 1839ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அவரது சைக்கிள் அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்ததால், வரலாற்றில் சைக்கிளைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமை கிர்க்பாட்ரிக்கிற்குக் கிடைத்தது. ஆனால் இந்த சைக்கிளில் பின்புறச் சக்கரம், முன்புறச் சக்கரத்தைக் காட்டிலும் அளவில் சற்று பெரிதாக இருந்தது.

அதனைதொடர்ந்து மேம்பட்ட மிதிஇயக்கி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றார் பிரான்ஸைச் சேர்ந்த எர்னெஸ்ட் மிசாக்ஸ் (Ernest Michaux). அவரது தீவிர உழைப்பின் பலனாக 1863-ஆம் ஆண்டு கிராங்ஸ் மற்றும் பால் பியரிங்க்ஸ் கொண்டு வடிவமைக்கப்பட்ட மிதிஇயக்கி ஒன்றைத் தயாரிப்பதில் வெற்றிகொண்டார். முந்தைய சைக்கிள்களை விட மிசாக்ஸ் கண்டுபிடித்த சைக்கிளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. காரணம் அதனை பயன்படுத்தும் முறை எளிதாக்கப்பட்டது தான்.

தனது சைக்கிளுக்கு மக்களிடம் வரவேற்பை வணிக ரீதியாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார் மிசாக்ஸ். தனது பெயரிலேயே 1868ம் ஆண்டு சைக்கிள் கம்பெனி ஒன்றை அவர் ஆரம்பித்தார். உலகிலேயே முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட சைக்கிள் கம்பெனி இது தான்.
மைல்கல்:

சைக்கிளில் ஒவ்வொரு பாகமாக மேம்படுத்தப்பட்டு வந்தாலும், சக்கரம் என்னவோ மரத்தால் ஆனதாகவே இருந்தது. இதற்கும் ஒரு தீர்வு கண்டார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஸ்டெர்லி. பென்னி பார்த்திங் (Penny farthing) என்ற கொல்லருடன் இணைந்து, சைக்கிளின் சக்கரங்களையும் அவர் உலோகத்தில் உருவாக்கினார். இவர்களது முயற்சியின் விளைவாக 1872ம் ஆண்டு பெண்களும் பயன்படுத்தும் வகையிலான புதிய நேர்த்தியான சைக்கிள்கள் உருவானது. பெண்களுக்கென்று மூன்று மற்றும் நான்கு சக்கரங்களைக் கொண்ட சைக்கிள்கள் இந்த காலகட்டத்தில் விற்பனைக்கு வந்தது.

1876ம் ஆண்டு சைக்கிள் தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் ஒரு மைல்கல் என்றே சொல்ல வேண்டும். அந்த ஆண்டு தான், ஹென்றி லாசன் (Henry Lawson) என்ற இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் பல்சக்கரம் (Sprocket) மற்றும் இயக்கி சங்கிலி (Drive Chain) போன்றவற்றை உருவாக்கினார். இந்த கண்டுபிடிப்பு ஒட்டுமொத்த வாகன தொழில்நுட்பத்தில் ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.

இப்படியாக ஒவ்வொரு மாற்றங்களாய் பெற்று, 1885ம் ஆண்டு சான் கெம்பு இசுட்டார்லி (John Kemp Starley) என்பவர் புதிய மிதிவண்டி ஒன்றை உருவாக்கினார். இவர் தான் இன்றைய நவீன சைக்கிளின் தந்தை என அழைக்கப்படுகிறார். அவர் வடிவமைத்த மாடலைத் தான் இன்று நாம் பயன்படுத்துகிறோம்.

ஹர்க்குலீஸ்:

சைக்கிள் பல்வேறு காலகட்டங்களில் பல மாற்றங்களுக்குப் பிறகு நல்லதொரு வடிவம் பெற்றது. மக்கள் பெருமளவில் அதனை போக்குவரத்திற்குப் பயன்படுத்தத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து சர் எட்மண்டு கிரேன் (Sir Edmund Crane) என்பவர், 1910ம் இங்கிலாந்தில் எர்க்குலீஸ் (Hercules) சைக்கிள் கம்பெனியைத் துவக்கினார். படிப்படியாக எல்லா நாடுகளுக்கும் சைக்கிளைக் கொண்டு சென்ற பெருமை எர்க்குலீஸுக்கே சேரும்.

 

எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல உதவியதால், சைக்கிளின் தேவை நாளுக்கு நாள் ஆரம்பித்தது. புதிய புதிய சைக்கிள் கம்பெனிகள் முளைக்கத் தொடங்கின. ஆனால், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தனது உடல் உழைப்பைக் குறைக்க நினைத்த மனிதன், படிப்படியாக சைக்கிளை முன்மாதிரியாகக் கொண்டு மோட்டார் சைக்கிள்களை உருவாக்கினான். அதன் வளர்ச்சி தான் இன்று சைக்கிளை இருந்த இடம் தெரியாமல் அழித்து விட்டது.

ஆனால், உலகிற்கே சவால் விடும் வகையில் வாகனப் பெருக்கங்களின் காரணமாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனால், சீனா, நெதர்லாந்து போன்ற மேலை நாடுகளில் போக்குவரத்திற்கான முதன்மை வாகனமாக சைக்கிளுக்கு மாறி வருகின்றனர். அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளிலும் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் சைக்கிளையே பயன்படுத்துகிறார்கள்.

சைக்கிள் 2.0 :

ஆனால் நம் நாட்டில் போக்குவரத்திற்குப் பயன்படுத்த சைக்கிளை உடற்பயிற்சிக்கான ஒரு கருவியாக மாற்றி வைத்திருக்கிறோம். இது நிச்சயம் சைக்கிளின் 2.0 வெர்சன் என்று தான் சொல்ல வேண்டும். வீட்டிற்குள் ஒரே இடத்தில் சைக்கிள் போன்ற இயந்திரத்தில் உடற்பயிற்சி செய்வதைவிட இயற்கையான சூழலில் நிஜ சைக்கிளை ஓட்டுவது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

தற்போது இந்த விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம். சென்னை போன்ற மாநகரங்களில் காலை அல்லது இரவு நேரத்தில், போக்குவரத்து குறைந்த சாலைகளில் பலர் சைக்கிளில் செல்வதைப் பார்க்க முடிகிறது. அதுவும் உடற்பயிற்சிக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சைக்கிள்கள் தான் என்றாலும், இப்படியாவது அதனை பயன்படுத்துகிறார்களே என நிம்மதி அடைய முடிகிறது.

கால் பாதத்தில் இருந்து, மூளை வரை உடலின் அத்தனை உறுப்புகளையும் இயங்க வைப்பது சைக்கிள். இதனால் அரைமணி நேரம் சைக்கிள் ஓட்டினாலே 300 கலோரி கொழுப்பு எரிக்கப்படுகிறது. இதன் மூலம் சர்க்கரை அளவை சீராக்க முடியும் என்பது இனிப்பான செய்தி.
சைக்கிள் பகிர்வு திட்டம்:

உலக சைக்கிள் தினத்தையொட்டி இன்று டெல்லியில் 8 கிமீ தூர சைக்கிள் பந்தயம் நடைபெறுகிறது. உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் ஒன்றாக டெல்லி உள்ளது. எனவே, அங்கு வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக சைக்கிளை பயன்படுத்தவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதோடு, சைக்கிள் பகிர்வு திட்டம் அங்கு தொடங்கப்பட உள்ளது. டெல்லி முழுவதும் 50 இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு மையங்களிலும் 10 முதல் 20 சைக்கிள்கள் இருக்கும். ஒரு மணி நேரத்துக்கு ரூ.10 என்ற கட்டண அடிப்படையில் அந்த சைக்கிள்களை பொதுமக்கள் பயன்படுத்தலாம். பின்னர், ஏதேனும் ஒரு சைக்கிள் மையத்தில் சைக்கிளை ஒப்படைக்க வேண்டும்.

முன்னுதாரணமாக மாறிய மத்திய அமைச்சர்:

சைக்கிள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹர்ஷவர்தன், இன்று காலை சைக்கிளில் வந்து பொறுப்பேற்றுக் கொண்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில்,

‘என் மீது நம்பிக்கை வைத்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி. மக்களின் ஆரோக்கியமே மோடி அரசின் முக்கிய நோக்கமாகும். சைக்கிளிங் எனக்கு பிடித்த விளையாட்டு. சைக்கிளில் செல்வது எளிமையாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருக்கும். காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த இது சிறந்த வழி’ எனத் தெரிவித்துள்ளார். அதோடு, தான் சைக்கிளில் பயணம் செய்யும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற மோடி அரசின் பதவியேற்பு விழாவிற்கு, பாஜக எம்.பிக்கள் மற்றும் கட்சியினர் பலர் சைக்கிளில் சென்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக