வியாழன், 1 செப்டம்பர், 2016

அன்னை தெரேசா நினைவு தினம் செப்டம்பர் 05.




அன்னை தெரேசா நினைவு தினம் செப்டம்பர் 05.

அன்னை தெரேசாவை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த பதிவில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை கூறியுள்ளேன்.

பிறந்தது யூகோஸ்லோவியாவில் உள்ள ஸ்கோப்ஜி நகரம்.
பிறந்த தேதி 26-08-1910
இயற்பெயர் : ஆக்னஸ் கோஞ்செ பொயாஜியூ (Agnes Gonxha Bojaxhin).
செல்லப்பெயர் : கோன்ஸா
தந்தையின் பெயர் நிகோலா பொயாஜியூ (Nikola Bojaxhin).
தந்தையின் தொழில் பிரபலமான கட்டட ஒப்பந்தக்காரர் (யுகோஸ்லோவியாவின் ஸ்கோப்ஜி என்ற நகரின் மிக உயர்ந்த கட்டடங்கள் அவரது பெயரை அலங்கரித்துக் கொண்டு இருந்தன).
தாயின் பெயர் திரானி பெர்னாய் (Drane Bernai)
தாயின் தொழில் : வீடு, குடும்பம் மற்றும் கடவுள் இந்த மூன்றும் தான் இவரது உலகம்.
உடன் பிறந்தவர்கள் : அக்கா அகா (Aga) மற்றும் அண்ணன் லாஸர் (Lasar).

mother_teresa

‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக தனது ஐந்து வயதிலேயே அனைத்து பாடங்களையும் நுனி நாக்கிலேயே வைத்திருப்பார். அவரது பாடல்கள் மற்றும் பாடங்களைப் பற்றிய பேச்சு ‘மடை திறந்த வெள்ளம் போல்’ காணப்படும். படிப்பு தவிர நகைச்சுவை உணர்வும் மிக அதிகமாக இருந்தது. இதனாலேயே எல்லோருடைய கவனத்தையும் எளிதில் வசீகரித்து விட்டார் ஆக்னஸ்.
ஆக்னஸின் சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்ததால் தனது துள்ளித் திரிந்த வாழ்க்கை ஒரு மூலைக்கு தள்ளப்பட்டது.

குடும்ப வருமானம் : தன் கணவனின் இறப்பிற்கு பிறகு பெர்னாய் தனக்கு தெரிந்த மற்றும் காலத்துக்கு ஏற்றவாறு அலங்கார ஆடைத் தயாரித்து விற்று மற்றும் ஸ்கோப்ஜி நகரின் முக்கியமான பாதிரியார் ஜாம்பிரான் கோவ்க், பெர்னாயின் குடும்பத்தின் சூழ்நிலை அறிந்து குழந்தைகளின் கல்விக்காக சில உதவிகளை செய்தார். தனது 12-ம் வயதில் தனது ‘சமூகச் சேவை’ செய்வது பற்றி சிந்திக்க ஆரம்பித்தார்.

• ஏழை, எளியவர்களுக்கு சேவை செய்தல்
• உடல் ஊனமுற்றோர்க்கு உதவி செய்தல்
• பள்ளியில் உள்ள மாணவ மாணவியருக்கு உதவி செய்தல்
• தேவாலயங்களைப் பெருக்கி சுத்தம் செய்தல்
• மருத்துவ மனைகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு மருந்து போட்டு விடுதல்
இதைப்பற்றி பள்ளிக்குச் செல்லும் முன் தன் தாயாரிடமும் பள்ளியில் நுழைந்தவுடன் ஆசிரியர்களிடமும், வீட்டுக்கு வருகின்ற வழியில் பேசுவார். இதைப்பற்றி பலரிடமும் விசாரிக்கும் போது ‘லொரெட்டோ சகோதரிகள்’ (Loreto Nuns)  என்ற அமைப்பு இருப்பதை அறிந்தார். அவர்கள் மூலம் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் ‘சமூக சேவை’ செய்வதை பற்றி அறிந்தார்.

சமூக சேவை செய்வதே முடிவாகக் கொண்ட அவர் 1923-ம் ஆண்டு பொதுச் சேவையில் ஆர்வம் இருக்கின்ற பெண்களுக்கான சமுதாய இயக்கமான Sodality of Children of Mary எனற அமைப்பில் சேர்ந்தார். இதனை ஆரம்பித்தவர் பாதிரியார் ஜாம்பிரன் கோவிக் (Jambiran Covic) ஆவார். இந்த அமைப்பில் சேர்ந்த சில நாட்களிலேயே இந்த அமைப்பின் முக்கிய ‘கருப்பொருளாக’ மாறினார். தனது சேவையின் மூலம் ‘அனைவரின் உள்ளத்திலும் இடம்பிடிக்க’ ஆரம்பித்தார். இந்த சூழ்நிலையில் ‘மேற்கு வங்காளம்’ சென்று திரும்பிய சகோதரிகளை சந்டிக்கலானார். அப்போது அவர்களிடம் இந்தியாவைப் பற்றிய அனைத்து விசயங்களையும் திரட்டினார். இந்தியாவின் மீதான ‘கனவுகள் விரிய அரம்பித்தன’. உடனே பாதிரியார் ஜாம்பிரனிடம் சென்று பேசினார். பாதிரியாரின் பதில், ‘உனது முடிவு இதுதான் என்றால் நல்லது, உன்னுடைய தாயாரிடம் அனுமதி வாங்க வேண்டும்’ என்றார். அன்று இரவே தாயாரிடம் பேசினார். தாயாரின் முடிவு  சாதகமாகவே அமைய, தாயின் அனுமதியோடு சேவையில் ஈடுபட தொடங்கினார். அப்போது இராணுவத்தில் பணியாற்றி வந்த தனது அண்ணன் லாகஸிற்கும் கடிதம் எழுதினார். ‘கன்னியாஸ்திரியாகப் போவதற்கு உறுதியாக இருக்கிறாயா?’ என்றார் லாகஸ். தனது சமூக சேவை மீதுள்ள பற்று, தனது அண்ணனின் கேள்விக்கு இவ்வாறு பதில் கூறினாள். “நீ இரண்டு மில்லியன் வீரர்களை நிர்வகிக்கும் மன்னனுக்குச் சேவை செய்து கொண்டிருக்கிறாய். நான் உலகையே நிர்வகிக்கும் கடவுளுக்குச் சேவை செய்யப்போகிறேன்”.

தனது 18-ம் வயதில் 12 அக்டோபர், 1928-ம் ஆண்டு ராத்ஃபர்ன்ஹாம் (Rathfarnham) என்று அழைக்கப்படும் அயர்லாந்தில் உள்ள சிஸ்டர்ஸ் ஆஃப் லொரேட்டோ (Loreto Abbey) என்கிற கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டார். அதுவரை ஆங்கிலப் புலமை இல்லாத அவர் மிகக் குறுகிய காலத்தில் ஆங்கிலத்தில் மிகச் சரளமாகப் பேச எழுத புரிந்து கொள்ளக் கற்றுக் கொண்டார். அடுத்த கட்டமாக ‘ஒரே தேவை சேவை’. பாரபட்சம் இல்லாமல் குழந்தை, நோயாளி, முதியவர், ஏழைகள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சேவை செய்வதற்கான நுணுக்கங்களை கற்றுக் கொண்டார். இறுதியாக வங்காளத்தைச் சென்றடைய விரும்பினார். ஆனால் நிர்வாகம் தயக்கம் காட்டியது. காரணம் – ‘இவ்வளவு திறமையான பெண்ணான உன்னை அனுப்ப எங்களுக்கு மனம் இடம் கொடுக்க வில்லை’. அவளது விடாப் பிடிவாதத்தின் காரணமாக இந்த ‘இளம் புயலை’ வங்காள மாநிலம், கல்கத்தா நகருக்கு அனுப்புவதற்கு சம்மதித்தது.

1929-ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபையை வந்தடைந்தார். வந்த சில நிமிடங்களிலேயே கத்தோலிக்க சபை ஒரு கட்டளையை பிறப்பித்தது. ‘சட்ட விதிகளின் படி’ புதிதாக வந்து சேர்பவர் பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று. அதன்படி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சகோதரி தெரசா மார்டின் ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் பணிவிடை செய்வதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொள்ள நினைத்தவர். அதற்கு அவரது உடல்நிலை இடம் கொடுக்க வில்லை. ‘காசநோய்’ காரணமாக தனது 24-ம் வயதில் இயற்கை எய்தினார். அவர்களது நினைவாக தனது பெயரை “தெரசா” என்று மாற்றிக் கொண்டார்.

கல்கத்தாவில் சில நாட்கள் தங்கி இருந்த தெரசா அவர்களுக்கு அங்கு நிலவிய வறுமையான சூழல், ஏழைத் தொழிலாளர்கள், வேலையில்லாத் திண்டாட்டம், பசியுடன் காத்திருக்கும் குழந்தைகள், சாக்கடை அருகிலேயே சமையல், சுகாதாரமற்ற குடியிருப்புகள், தொற்று வியாதிகள் ஆகியவைகள் அவரது மனதை மிகவும் பாதித்தது. இந்த சூழ்நிலையில் டார்ஜிலிங்கில் உள்ள லொரேட்டா இல்லத்தின் பள்ளியில் ஆசிரியர் பணி  நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் அங்கு வரலாறு, புவியல் பணி காலி இடங்களாக இருந்தன. தெரசாவின் ஆர்வம்  காரணமாக அந்த பாடங்களுக்கு ஆசிரியையாக நியமிக்கப்பட்டார். தெரசாவின் உதடுகளில் புன்னகை திரும்பி இருந்தது. உற்சாகம் கொப்பளிக்க பாடம் சொல்லி கொடுக்க தொடங்கினார். பள்ளிக்கு ஏற்ற ஆசிரியையாகவும், குழந்தைகள் மீது அன்பாகவும், பாசத்தோடு இருந்தாலும் படிப்பு, பாடம் மற்றும் பழக்க வழக்கம் என்று வந்து விட்டால் கண்டிப்பான ஆசிரியையாக மாறி விடுவார். இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய உடனேயே அவரின் மனதில் தோன்றிய எண்ணங்கள்,
O இந்தியா தான் என் தாய்நாடு
O இந்தியா தான் என் வாழ்க்கை
O இந்தியா தான் என் எதிர்காலம்
இதற்கு கூடுதலாக “இந்தி மொழி” முக்கியமானதாக அமைந்தது. இதனையும் மேலோட்டமாக கற்றுக் கொண்டார்.

இந்த சமயத்தில் மீண்டும் கல்கத்தாவிற்கே பணிமாற்றம் செய்யப்பட்டார். அங்கு கல்வியோடு சமூக சேவையும் செய்ய வேண்டியதாயிற்று. பிள்ளைகளுக்கு கல்வி அளிப்பதோடு மட்டும் நின்று விடாமல் பிள்ளைகளைக் குளிப்பாட்டுவது, சாக்கடை சுத்தம் செய்வது என பல சேவைகளை மற்ற ஆசிரியர்களோடு இணைந்து செய்ய ஆரம்பித்தாள். பள்ளிக்கூடம், குடிசை மக்களுக்கு சேவை என்று மாறி மாறிப் போய்க் கொண்டிருந்த தெரசாவின் வாழ்க்கை குறுகிய காலத்தில் ‘பள்ளி முதல்வர்’ தெரசாவக மாறினார். பள்ளி முதல்வராக பணியாற்றிய காலத்திலேயே, 1940-ம் ஆண்டு கல்கத்தாவில் வசித்து வந்த பாதிரியார் செலஸ்டி வான் எக்செம் (Celeste Van Exem) என்பவரை தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டார். பதினேழு ஆண்டுகள் அந்தப் பள்ளியிலேயே பணியாற்றிய தெரசா, இதில் ஏராளமான நல்ல அனுபவங்களைப் பெற்றார்.

1942-43-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த காலம். பஞ்சம் வாட்டி வதைக்க ஆரம்பித்தது. கையில் வேலையின்றி, பணமின்றி மக்கள் திண்டாடினார்கள். பசிக்கொடுமை தாங்காமல் பலமுதியவர்கள் மயக்கத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர். ஒரு புறம் போர், இன்னொரு புறம் பஞ்சம், இன்னொரு புறம் விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. இந்த சமயத்தில் முஸ்லிம் லீக் என்கிற கட்சி இயக்கம் உருவானது. இந்தியாவை இரண்டாக பிரித்து பாகிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோஷம் வலுத்தது. பஞ்சத்தின் பிடியில் இருந்த அவர்களை விடுவிக்க வேண்டும். அவர்களுடைய சுகாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். சிந்திக்க ஆரம்பித்தார்!!! ஆனால் லொரோட்டாவின் விதிமுறைகள் கடுமையானவை. ஆகையால் அந்த சிக்கலான விதிமுறைகள் தெரசாவின் சேவையை முழு நேரமாகவோ அல்லது அதிக நேரம் செலவழிக்கவோ அனுமதி கொடுக்கவில்லை. இதன் காரணமாக லொரேட்டாவில் இருந்த விலகுவதாக முடிவு செய்த தெரசா தனது ராஜினாமா கடிதத்தை பேராயர் மூலமாக ரோமுக்கு அனுப்பினார். நாள்கள், வாரங்கள், மாதங்கள் கடந்தன. இறுதியாக ஏப்ரல் 12, 1948 அன்று உத்தரவாதக் கடிதம் வந்துவிட்டது. “இனிமேல் என்னுடைய விருப்பத்திற்கு ஏற்றவகையில் ஏழைகளுக்குச் சேவை செய்வதில் எந்தத் தடையும் இல்லை” – உற்சாகம் பொங்க கூறிக்கொண்டார் தெரசா.

‘ஐந்து ரூபாய் பணம். நீல நிறத்தில் மூன்று சேலைகள்’. இதுவே தெரசாவின் சொத்து லொரேட்டாவில் இருந்து வெளியேறிய போது. வெள்ளை ஆடையுடன் அழுக்கான குடிசைப் பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்த மக்களைப் பார்த்து பேசினார். அவர்களுடைய நல்வாழ்வுக்காகத் தன்னால் முடிந்ததைச் செய்து தருவதாக கூறினார்.

தன்னை “செவிலியர்” பணியில் மேம்படுத்திக் கொள்ள விரும்பிய தெரசா அதற்காக பாட்னாவில் உள்ள செயின்ட் ஃபேமிலி மருத்துவமனையில் மருத்துவ பயிற்சிகளை எடுத்துக்கொண்டார். அங்கு அவர் பலவிதமான நோய்கள் பற்றியும், அவற்றுக்குச் சகிச்சை அளிக்கும் முறைகள் பற்றியும் முறையாக கற்றுக் கொண்டார். தனது பயிற்சி காலங்களில் மருத்துவர்கள் தெரசாவைப்பற்றி கூறியது – மருத்துவப் பயிற்சிக்குத் தேவையான மூன்று குணங்களான மிகுந்த உற்சாகம், ஆர்வம் மற்றும் பொறுப்பு ஆகியவற்றை ஒருங்கே பெற்றுள்ளார் தெரசா.

தெரசாவின் சிஷ்யைகள் பத்துப் பேரைக் கொண்ட முதல் சேவைக்குழு உருவானது. அவர்கள் அனைவருமே லொரேட்டாவில் முன்னாள் மாணவிகள். சமூக சேவைகளுக்கான ஆரம்பம் பள்ளிக்கூடம் கட்டுவதுதான் தனது முதல் நோக்கமாகக் கொண்டு, முதலில் குடிசை வாழ் ஏழைக் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டுவோம் என்று நினைத்தனர். 1949-ம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மோத்திஜில் என்ற பிரபலமான குடிசைப் பகுதிக்குச் சென்றனர். அது பல பகுதிகளைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களும், ஏழைகளும் ஒன்றாக வசித்த பகுதி. முதல் கட்டமாக அங்குள்ள ஏழைக்குழந்தைகள் பற்றிய தகவல்களை குறித்துக்கொண்டு, குழந்தைகளின் பெற்றோர்களைச் சந்தித்தார். “விரைவில் இந்த பகுதியில் பள்ளி ஒன்றைத் தொடங்க இருக்கிறேன். அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். முதலில் வெறும் 5 குழந்தைகளுடன் கரும்பலகை கூட இல்லாமல் தண்ணீர்த் தொட்டியின் நிழலில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்கூடம் குறுகிய நாட்களில் மெல்ல மெல்ல எண்ணிக்கை உயர்ந்து 46 குழந்தைகளை எட்டியது.

நோயால் தனது வீட்டின் வாசற்படியில் மயங்கிக்கிடந்த ஒரு பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றும், பண வசதி இல்லாத கால தாமதத்தால் அந்த பெண் இறக்க நேரிட்டாள். இந்த ‘கோர சம்பவத்தை’ அனுபவித்த அன்னை தெரசா “சிறய அளவில் மருத்துவமனை” ஆரம்பிப்பது என முடிவு செய்தார். அரசாங்கமே முடியாமல் விட்டு வைத்துள்ள சூழ்நிலையில் “கடுமையாக முயற்சி செய்தால்” சாத்தியமாகி விடும் என்று தனக்குத்தானே நம்பிக்கையை வளர்த்துக் கொண்டார். இதன் முதற்கட்டமாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் சென்று “உபரி மருந்துகளை கொடுத்து உதவுங்கள். எல்லாம் ஏழை மக்களுக்குத்தான்” என்று உதவிக் கேட்டார்.

அக்டோபர் 7, 1950-ம் ஆண்டு மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டிஸ் என்ற அறக்கட்டளையை துவங்கினார். இதன் மூலம் பசியால் வாடுகின்றவர், வீடின்றி தவிக்கின்றவர், கண்பார்வை இல்லாதவர், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர் என தன்னால் முயன்ற அத்தனை உதவிகளையும் பாரபட்சம் இல்லாமல் செய்து வந்தார். கவனிப்பார் இல்லாமல், வாரிசுகளால் புறக்கணிக்கப்படுகின்ற முதியவர்களுக்கு கருணை இல்லம் உருவாக்க விரும்பினார் அன்னை தெரசா. அரசாங்க உதவியுடன் ‘காளிகட்’ என்னுமிடத்தில் ஹீக்ளி நதிக்கரையின் அருகில் கிடைக்கப்பெற்ற “நிர்மல் ஹ்ருதய்” என்ற கட்டிடத்தை முதியோர் காப்பகமாக மாற்றினார். இதன்  பெயர்தான் பின்னாளில் “காளிகட் இல்லம்”.

செப்டம்பர் 23, 1955-ம் ஆண்டு முதன் முறையாக சிசுபவன் ஆரமப்பிக்கப்பட்டது. இதன் மூலம் ஊனமுற்ற குழந்தைகள், மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள், குப்பைத்தொட்டி மற்றும் சாக்கடைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள் என அனைவரும் இந்த காப்பகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

1957-ல் முதல் முறையாக தொழுநோயாளிகளுக்கான நடமாடும் மருத்துவமனையைத் தொடங்கினார். பிறகு அதே ஆண்டில் தொழுநோய் மருத்துவமனை ஒன்றையும் ஆரம்பித்தார். இங்கு இலவசமாக உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன. இதற்கு “காந்தி பிரேம் நிவாஸ்” என்று பெயரிடப்பட்டது. மேலும் “தொழுநோயாளிகளின் தினம்” என்ற ஒன்றை அறிவித்து அந்நாளில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினார்.

அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெரு தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம். ஒரு நாள், ஒரு கடைக்கு முன் சென்று நின்று யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார். அந்தக் கடைக்காரர் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார். கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிட வேண்டும் என்று உறுதியுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். கடைக்காரர் தெரசாவை கோபமாக பார்த்து விட்டு ‘”தெரசா நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார்”. அப்போது சற்றும் மனம் தளராமல் “மிக்க நன்றி!!! நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்” அந்தக் கடைக்காரர் “இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்” என்று கூறி விட்டு நொடிப் பொழுதில் கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து அன்னை தெரசா நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார். இறுதி வெற்றி தெரசாவுக்குத்தான். இப்படி தெரசாவின் ஒவ்வொரு வெற்றியின் பின்னணியிலும் பல்வேறு அவமானங்கள் இருந்தன.

ஒரு முறை போப்பாண்டவர் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, தனது சுற்றுப்பயணத்திற்காக பயன்படுத்திய விலையுயர்ந்த காரை அன்னை தெரசாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சொகுசு காரில் பயணம் செய்வதற்கு சிறிதளவும் விருப்பமில்லை ஆனாலும் அதனை மறுக்கவும் விருப்பமில்லை. எனவே புன்னகையோடு ஏற்றுக்கொண்டார். அடுத்த நிமிடமே அந்தக் காரை ஏலம் விடுமாறு கோரிக்கை விடுத்தார். அந்தப் பணத்தை அறகட்டளை நிதியில் சேர்த்துக் கொண்டார். இது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த சம்பவம். இது போன்று தாம் பெறும் அனைத்து பரிசுகளையும் ஏலமிட்டு அந்தப் பணத்தை அறக்கட்டளை நிதியில் சேர்த்தார்.

தனது முழுநேரமும் ஏழைகளுக்காகவும், ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும், குடிசை வாசிகளின் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துக்காவும் செலவழித்தார். இதனால் அனைவரும் அன்னை தெரசாவை ‘குடிசை சகோதரி’ என்று அழைக்க ஆரம்பித்தனர்.


சேவைக்காக உலகம் ஒரு சுற்றுப் பார்வை :
•  1963-ல் ஏழைச் சிறுவர்களுக்கான பிரத்யோக பள்ளிக்கூடம் ஜீலியன் ஹென்றி மற்றும் பிஷப் ஆல்ஃப்ரட் ஆகியோரது உதவியுடன் கட்டப்பட்டது.
•  1965-ல் வெனிசூலாவில் இருக்கும் ஏழைகளுக்கு உதவி செய்தார். குறிப்பாக குடிசை பகுதிகளுக்குச் சென்று தங்கி சேவை செய்தார். அதே ஆண்டில் ஆஸ்திரேலியா சென்று போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள், சிறைக்கைதிகள் மற்றும் அன்புக்கு ஏங்கும் அனாதைக் குழந்தைகள் ஆகியோர்க்கு சேவை செய்தார்.
•  1970-ல் ஐந்து கன்னியாஸ்திரிகளுடன் ஜோர்டன் சென்று அங்குள்ள அகதிகளுக்கு பணிவிடை செய்தார். அதே ஆண்டில் இலண்டன் சென்று அங்கு சாலையோரத்தில் மிகவும் மோசமான நிலமையில் வாழ்ந்தவர்களுக்கு உதவி செய்தார்.
•  1971-ல் மேற்கு பாகிஸ்தானில் நடந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார். ஆதரவற்ற பெண்களுக்குத் தங்களுடைய குழந்தைகளை காப்பாற்றுவதற்காக சிறு தொழில்களையும் கற்றுக் கொடுத்தார்.
•  1973-ல் எத்தியோப்பியாவுக்குச் சென்று அங்கு வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார். அதே ஆண்டு ஜோர்டன், இங்கிலாந்து, அமெரிக்கா, பங்களாதேஷ், மொரீஷியஸ், இஸ்ரேல், பெரு, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் தனது சேவை மையங்களை ஆரம்பித்தார்.
•  1977-ல் ஆந்திரப்பிரதேசம் கடும் புயலால் தாக்கப்பட்ட போது அங்கு தெரசாவும், அவரது சகோதரிகளும் விரைந்து சென்று உதவி செய்தனர்.
•  1978-ல் தனது சொந்த ஊரான ஸ்கோப்ஜிக்கு யூகோஸ்லேவிய அழைப்பின் பேரில் சென்றார்.
•  1981-ல் ஜப்பான் ஃபேமில் லைஃப் அசோசியேஷன் என்கிற அமைப்பு விடுத்த அழைப்பினை ஏற்று டோக்கியோவில் தனது சேவை மையத்தை ஆரம்பித்தார்.
•  1985-ல் அமெரிக்காவில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
•  1988-ல் ரஷ்யா, க்யூபாவுக்குச் சென்று சேவை மையங்களை ஆரம்பித்தார். அதே ஆண்டு தென்னாப்பிரிக்கா சென்ற தெரசா  ‘எனக்கு வெள்ளை, கறுப்பு, பச்சை மற்றும் மஞ்சள் எனகிற எந்த வித நிற பேதமும் கிடையாது. நாம் எல்லோரும் அன்பைப் பெறுவதற்காக, அன்பு செலுத்துவதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோம்’ என்று பேசினார்.
•  1991-ல் அமெரிக்கா மற்றும் ஈராக் அதிபர்களுக்கு வளைகுடாப் போரை நிறுத்த வலியுறுத்தி கடிதம் எழுதினார்.
•  1992-ல் பிரதமர் சதாம் உசேன் அழைப்பின் பேரில்  ஈராக் சென்று மறு நிர்மாண நடவடிக்கையில் பங்கு கொண்டார்.
உலகம் முழுவதும் மொத்தம் 123 நாடுகளில் நான்காயிரம் தன்னார்வு தொண்டர்களோடு கூடிய 600 சேவை மையங்கள் உருவாக்கப்பட்டன.
மார்ச் 13, 1997-ல் அறக்கட்டளையின் பொறுப்புக்கள் அனைத்தையும் நிர்மலாவிடம் ஒப்படைத்துவிட்டு சாதாரண தொண்டராகவே தனது பணியினை தொடர்ந்தார் அன்னை தெரசா.

செப்டம்பர் 5, 1997-ம் ஆண்டு அதிகாலையிலேயே விழித்த அவர் ‘நெஞ்சு வலிப்பது போல் இருக்கிறது’ என்று முனகியபடியே பேசினார். தெரசாவுக்குச் சிகிச்சை அளித்துவரும் சிறப்பு மருத்துவர் வந்து பார்த்தார். சிறதளவு முன்னேற்றம் ஆனாலும் பேசுமளவுக்கு கூட தெம்பில்லை. அன்று இரவு 9.30 மணிக்கு ‘நெஞ்சு வலிக்கிறதே’ என்று மெல்லிய குரலில் மீண்டும் முனகினார் தெரசா.  “கடவுளே இவருக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்று பிராத்தித்தார்கள், பதறினார்கள்”. ஓசைகள் நின்று போய் படுத்திருந்தார். ஆத்மா சாந்தியடைந்தது. இன்றும் அவர்களது சேவைகள் மற்றும் தொண்டுள்ளம் நம் மனதில் நீங்கா இடம் பெற்றுக் கொண்டு இருக்கிறது.

கிடைத்த விருதுகள் :
•  1962 – பத்ம ஸ்ரீ விருது
•  1971 – 23வது போப் ஜான் அமைதி விருது
•  1971 – குட் சமரிட்டன் விருது
•  1971 – கென்னடி விருது
•  1972 – சர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது
•  1973 – டெம் பிள்டன் விருது
•  1977 – இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
•  1979 – அமைதிக்கான நோபல் பரிசு
•  1982 – பெல்ஜியம் நாட்டு பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
•  1985 – சுதந்திரத்துக்கான பிரிசிடென்ஷியல் விருது
• 1996 – அமெரிக்காவின் கெளரவப் பிரஜை

வடக்கு கல்கத்தாவைச் சேர்ந்த மோனிகா பெர்ஸா என்ற பெண்மணி நீண்ட நாட்கள் தீரா வயிற்று வலியால் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தார். ஒரு நாள் ‘வீட்டில் யாரும் இல்லாத நேரம் வயிற்று வலி வந்து விட்டது. சுடு மணலில் விழுந்த மீன் போலத் துடித்தார்’. படுக்கைக்கு அருகே அன்னை தெரசாவின் படம் இருந்தது. ‘அன்னையே என் வீட்டில் யாரும் இல்லை. உங்களுடைய பாதுகாப்பில்தான் இருக்கிறேன். நீங்கள்தான் என்னுடைய தீரா வயிற்று வலியைய் குணமாக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டு அங்கு இருந்த அன்னை தெரசாவின் உருவப் படத்தை வயிற்றின் மீது வைத்ததாகவும் அதன் பிறகு பெர்ஸாவுக்கு ‘வயிற்று வலி’ வரவே இல்லை எனவும் கூறப்படுகிறது.

கிருஸ்துவ மரபின்படி ஒருவர் இறந்த பிறகு அடுத்த ஐந்து வருடங்களில் ஏதாவது ஒரு அதிசயம் அவரது பெயரில் நிகழ்ந்தால் “ஆசிர்வதிக்கப்பட்டவர்” என்ற பட்டம் வழங்கப்படும். இங்கு பெர்ஸா வாழ்வில் நிகழ்ந்த அதிசயம் அன்னை தெரசா ஆசிர்வதிக்கப்பட்டவர் என்ற பட்டம் பெற காரணமாக இருந்தது.

அக்டோபர் 19, 2003-ல் வாடிகன் நகரின் புனித பீட்டர் சதுக்கத்தில் 3 இலட்சம் பேர் முன்னிலையில் சுமார் இரண்டரை மணி நேர விழா நடைபெற்றது. இரண்டாம் ஜான் பால் விழாவிற்கு வருகை தந்திருந்தார். அவரது முன்னிலையில் தெரசாவுக்கு ‘ஆசிர்வதிக்கப்பட்டவர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

புனிதர் பட்டம் : அவரது பெயரால் இரண்டாவது அதிசயம் ஒன்று நிகழ வேண்டும். அது நிகழ்ந்து விட்டால் புனிதர் பட்டம் உறுதி செய்யப்படும். அதற்காக காத்திருப்போம்.

“அன்னை தெரசா” நிச்சயம் புனிதராவார். 
நன்றி -என்கிறுக்கல்கள்

ஆசிரியர் தினம் Teacher's Day


ஆசிரியர் தினம் Teacher's Day
ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது.

நாடுகளின் அடிப்படையில் ஆசிரியர் நாளின் தேதி
நாடு     தேதி
ஆப்கானித்தான்     அக்டோபர் 3
அல்பேனியா     மார்ச்சு 7
அல்சீரியா     பெப்ரவரி 28
அர்ச்சென்டினா     செப்டம்பர் 11
ஆர்மீனியா     அக்டோபர் மாத்ததின் முதல் ஞாயிறு
ஆஸ்திரேலியா     அக்டோபர் மாதத்தின் கடை வெள்ளி
அசர்பைஜான்     அக்டோபர் 5
பக்ரைன்     பெப்ரவரி 28
பெலருஸ்     அக்டோபர் மாத்ததின் முதல் ஞாயிறு
புரூணை     செப்டம்பர் 23
பூட்டான்     மே 2
பொலிவியா     சூன் 6
பிரேசில்     அக்டோபர் 15
பல்கேரியா     அக்டோபர் 5
சிலி     அக்டோபர் 16
கொலொம்பியா     மே 15
சீன மக்கள் குடியரசு     செப்டம்பர் 10
செக் குடியரசு     மார்ச்சு 28
எக்குவடோர்     ஏப்ரல் 13
எகிப்து     பெப்ரவரி 28
எல் சால்வடோர்     சூன் 22
எசுத்தோனியா     அக்டோபர் 5
செருமனி     அக்டோபர் 5
குவாத்தமாலா     சூன் 25
ஃகொங்கொங்     செப்டம்பர் 10
அங்கேரி     சூன் மாத்ததின் முதல் ஞாயிறு
இந்தியா     செப்டம்பர் 5
இந்தோனேசியா     நவம்பர் 25
ஈரான்     மே 2
ஈராக்     மார்ச்சு 1
யமேக்கா     மே 6
ஜோர்தான்     பெப்ரவரி 28
லித்துவேனியா     அக்டோபர் 5
லெபனான்     மார்ச்சு 9
லிபியா     பெப்ரவரி 28
மலேசியா     மே 16
மெக்சிகோ     மே 15
மொல்டோவா     அக்டோபர் 5
மங்கோலியா     பெப்ரவரி மாத்ததின் முதல் சனி மற்றும் ஞாயிறு
மொரோக்கோ     பெப்ரவரி 28
நேபாளம்     நேபாள மாதம் அஷாதின் வறும் முழு நிலவு தினம்
நியூசிலாந்து     அக்டோபர் 29
ஓமான்     பெப்ரவரி 28
பாக்கித்தான்     அக்டோபர் 5
பனாமா     திசம்பர் 1
பராகுவே     ஏப்ரல் 30
பெரு     சூலை 6
பிலிப்பீன்சு     அக்டோபர் 5
போலந்து     அக்டோபர் 14
கத்தார்     அக்டோபர் 5
உருமேனியா     அக்டோபர் 5 ?
உருசியா     அக்டோபர் 5
சவுதி அரேபியா     பெப்ரவரி 28
செர்பியா     அக்டோபர் 5
சிங்கப்பூர்     செப்டம்பர் மாத்ததின் முதல் வெள்ளி
சிலோவாக்கியா     மார்ச்சு 28
தென் கொரியா     மே 15 (சியோலில் 1963 முதல் மற்றும் சுன்சு நகரில் 1964 முதல்)
இலங்கை     அக்டோபர் 6
எசுப்பானியா     சனவரி 29
சிரியா     மார்ச்சு 18
தாய்வான் (சீனக் குடியரசு)     செப்டம்பர் 28
தாய்லாந்து     சனவரி 16
துனீசியா     பெப்ரவரி 28    
துருக்கி     நவம்பர் 24
உக்ரைன்     அக்டோபர் மாத்ததின் முதல் ஞாயிறு
ஐக்கிய அரபு அமீரகம்     பெப்ரவரி 28
அமெரிக்க ஐக்கிய நாடு     மே மாதத்தின் முதல் வாரம் தேசிய ஆசிரியர் வாரமாகக் கொண்டாடப்படுகின்றது. அவ்வாரத்தின் செவ்வாய்க் கிழமை ஆசிரியர் நாள் ஆகும்
உசுபெக்கிசுத்தான்     அக்டோபர் 1
வியட்நாம்     நவம்பர் 20
யெமன்     பெப்ரவரி 28
மொரிசியசு     அக்டோபர் 5

இந்தியாவில் ஆசிரியர் நாள் செப்டம்பர் 05.....

இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஓர் ஆசிரியரான அவர், தனது நண்பர்களும் மாணாக்கரும் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என விரும்பியபோது, அந்நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார். 2014 இல் இந்நாளை பெயர் மாற்றம் செய்து, குரு உத்சவ் என்று கொண்டாட வேண்டுமென மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிக்கை வெளியிட்டது[1]. ஆனால் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் அந்நாளுக்குரிய கட்டுரைப் போட்டிக்கே அப்பெயர் இடப்பட்டுள்ளதாகவும் நடுவண் கல்வி அமைச்சர் விளக்கம் தெரிவித்தார்.
//
 (இந்தியா)
ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளைப் பற்றி விரிவாகக் காண்போம்.

ஆசிரியர் தின வரலாறு

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் ஆசிரியர் தினம் வருகிறது.

ஆசிரியர் பணி என்றால் என்ன?

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.

ஆசிரியர் தினம்

தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய சிறப்பு

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.

1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில்,  தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.

இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் கூறலாம்.

1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.

ஆசிரியர் தினக் கொண்டாட்டம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ‘ஆசிரியர் தின’ நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும், சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.

ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.
நன்றி-விக்கிபீடியா ,இட்ஸ் தமிழ் .

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த தினம் செப்டம்பர் 05.



சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த தினம் செப்டம்பர் 05.

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் (Sarvepalli Radhakrishnan, தெலுங்கு: సర్వేపల్లి రాధాకృష్ణ) ; 5 செப்டம்பர் 1888 – 17 ஏப்ரல் 1975) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். மேலும் சிறந்த தத்துவஞானியும் ஆவர்.

இளமைக் காலம்

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்,1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் திருத்தணியில் ஏழை தெலுங்கு நியோகி (ஆந்திராவில் உள்ள பிராமணப்பிரிவு) குடும்பத்தில் பிறந்தார். தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். இவருடைய தந்தை பெயர் சர்வபள்ளி வீராசாமி,தாயார் பெயர் சீதம்மா. இவர், தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

இல்லற வாழ்க்கை

இராதாகிருஷ்ணன் தன்னுடைய தூரத்து உறவினரானசிவகாமு,[என்பவரை தம்முடைய 16-ம் அகவையில் மணம் புரிந்தார். இது பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டத் திருமணமாகும். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்று தொடர்பான துறையில் முக்கியமானவர்களில் ஒருவர். சிவகாமு 1956-ம் ஆண்டு இறந்தபோது இராதாகிருஷ்ணனுடைய 56 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவு பெற்றது.
அரசியல் நிலைபாடுகள்

1938 ஆம் ஆண்டு சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி உயர் நிலைப் பள்ளிகளில் இந்தி மொழிப்பாடம் கட்டாயம் என அறிவித்த போது, அந்த அறிவிப்பை வலுவாக எதிர்த்த சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இராதாகிருஷ்ணன் திகழ்ந்தார். 1965 ஆம் ஆண்டு மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டபோது அதனை எதிர்த்து மத்திய அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியம், ஓ. வி. அழகேசன் பதவியை ராஜினாமா செய்தார்கள்.இந்தி ஆட்சி மொழிக்கு ஆதரவான பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இவ்விரு அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்தார். ஆனால் அதனை குடியரசுத்தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் ஏற்க மறுத்தார்.[6]
ஆசிரியப் பணி

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் பயின்றவர்.

இவர் ஆசிரியராகப் பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
எழுதிய நூல்கள்

    முதன்மை உபநிடதங்கள்
    இந்துக்களின் வாழ்க்கை நோக்கு
    இந்தியத் தத்துவம் தொகுதி I & II
    கிழகக்திய சமயங்களும் மேற்கத்திய சிந்தனைகளும்
    தம்மபதம்
    பகவத் கீதை விளக்க உரை
    கிழக்கும் மேற்கும்
    மகாத்மா காந்தி
    கிழக்கு மற்றும் மேற்கின் தத்துவ வரலாறு
    பிரம்ம சூத்திரம் விளக்க உரை
    இரவீந்திரநாத்தின் தத்துவங்கள்
    இந்திய சமயங்களின் சிந்தனை
    இந்துஸ்தானின் இதயம்
    சமயமும் கலாச்சாரமும்
    சமகால இந்திய தத்துவம்
    சமயமும் சமுதாயமும்
    உண்மையான கல்வி
    இந்தியச் சமயங்கள்

விடுதலைப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரம்பிள்ளை பிறந்த தினம் செப்டம்பர் 5 .


விடுதலைப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரம்பிள்ளை பிறந்த  தினம்    செப்டம்பர் 5 .
வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை (V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936)  ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.
    
வாழ்க்கைச் சுருக்கம்

வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.

தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. 1892- ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.

இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.
இளமைப் பருவம்
பிறப்பு

வ.உ.சி. 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்[2].
கல்வி

ஆறு வயதில் வீரப் பெருமாள் அண்ணாவி என்ற தமிழாசிரியரிடம் தமிழ் கற்றுக் கொண்டார். அவரது பாட்டியாரிடம் சிவபுராணக்கதைகளையும் பாட்டனாரிடமிருந்து இராமாயணக் கதைகளையும், பாட்டனாரோடு சேர்ந்து சென்று அல்லிக் குளத்து சுப்ரமணிய பிள்ளை கூறிய மகாபாரதக் கதைகளையும் கேட்டறிந்தார்.

அரசாங்க அலுவலரான திரு.கிருஷ்ணன் வ.உ.சி.க்கு ஆங்கிலம் கற்பித்தார். பதினான்கு வயதில் ஓட்டப்பிடாரத்திலிருந்து தூத்துக்குடிக்குச் சென்று புனித சேவியர் பள்ளியிலும் கால்டுவெல் பள்ளியிலும் கல்வி கற்றார். திருநெல்வேலியில் இந்துக் கல்லூரியிலும் சேர்ந்து கல்வி கற்றார்.
வழக்கறிஞர் தொழில்

வ.உ.சி. சில காலம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்தார். பின்னர் அவரது தந்தை அவரை சட்டக் கல்வி பெற திருச்சிக்கு அனுப்பி வைத்தார். கணபதி ஐயர், ஹரிஹரன் ஆகியோர் அவருக்கு சட்டம் கற்பித்தனர். அவர் சட்டத் தேர்வை 1894-ஆம் ஆண்டு எழுதித் தேர்ச்சி பெற்றார். 1895ல் ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் துவங்கினார். அவர் உரிமையியல் மற்றும் குற்றவியல் என இரு வகை வழக்குகளைக் கையாண்டாலும் குற்றவியல் வழக்குகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் வசதியற்றவர்களுக்காக இலவசமாக வாதாடினார். வழக்குகளுக்காக இடைத்தரகர்களுக்குப் பணம் கொடுப்பதை ஆதரிக்கவில்லை. வ.உ.சி. பெரும்பாலான வழக்குகளில் வெற்றி பெற்றார். சில வழக்குகளில் இரு கட்சியினரும் சமாதானமாகப் போகும்படி செய்தார். அவருடைய தகுதி, திறமை, நேர்மை இவற்றிற்காக நீதிபதிகளின் மதிப்புக்குரியவராக இருந்தார்.

காவல் துறையினரால் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வ.உ.சி. யினால் விடுதலையானதால் காவல் துறையினரின் கோபத்திற்கு ஆளானார். இச்சூழ்நிலையை விரும்பாத அவரது தந்தை வ.உ.சி.யை 1900-ஆம் ஆண்டு தூத்துக்குடிக்குச் சென்று பணியாற்றும்படி அனுப்பி வைத்தார். வ.உ.சி. தூத்துக்குடியிலும் புகழ் பெற்ற வழக்கறிஞரானார்.
திருமணம்
வ. உ. சிதம்பரம் பிள்ளையின் திருமண அழைப்பிதழ்

வ. உ. சிதம்பரத்தின் திருமணம் மீனாட்சி அம்மாளுடன் 8 செப்டம்பர் 1901 அன்று தூத்துக்குடியில் நடந்தது.
பாரதியாருடன் நட்பு

வ.உ.சி. சென்னைக்குச் செல்லும் போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார். பாரதியார் ஒரு பெரும் புலவர். வ.உ.சி.யும் பாரதியாரும் அருகருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவரின் தந்தையரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சந்தித்துக் கொண்ட பொழுது இருவரின் கருத்துகளும் ஒன்றாக இருப்பதை அறிந்தனர். இருவரும் எப்பொழுதும் நாட்டைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். பாரதியார் தனது உணர்ச்சி மிக்க பாடல்களால் நாட்டு மக்களைத் தட்டி எழுப்பினார். வ.உ.சி.யும் பாரதியாரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.
சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் தாக்கம்

தென்னிந்தியாவில் ராமகிருஷ்ண இயக்கத்திற்கு வித்திட்ட, ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியுமான ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் துறவியான ’சுவாமி ராமகிருஷ்ணானந்தருடனான’(சசி மகராஜ்) சந்திப்பு வ.உ.சி யின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரை வ.உ.சி. சென்னை ஐஸ் ஹவுஸில் தான் சந்தித்திருக்க வேண்டும். ’சசி மகராஜ் என்னிடம், "சுதேச எண்ணங்கள் பல நன்மைகளைத் தரக் கூடியது, இது என் கருத்து" என்று கூறினார். அவர் சொன்னது ஒரு விதையாக என்னுள் விழுந்தது. என் உள்ளம் அதனைப் போற்றிக் காத்தது’ என்று அந்த சந்திப்பைப் பற்றிக் கூறுகிறார் வ.உ.சி. இந்த ’விதை’யின் இரு தளிர்களே ’தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்’ மற்றும் ’தரும சங்கம்’ என்று தமது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார் வ.உ.சி[3]
சமுதாயப் பணி
தொடங்கப்பட்ட தேசிய நிறுவனங்கள்

வ.உ.சி. தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கினார். அவர் ஆளுமை மிக்க மனிதர். அவர் "சுதேசி பிரச்சார சபை", "தர்ம சங்க நெசவு சாலை", "தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்", "சுதேசிய பண்டக சாலை", "வேளாண் சங்கம்" போன்றவற்றை ஏற்படுத்தினார்.
கப்பல் நிறுவனம் சுதேசிய நாவாய் சங்கம்-1906

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி", இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார்.

வ.உ.சி.,1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்). நிறுவனத்தின் மூலதனம் ரூ.10,00,000. ரூ.25 மதிப்புள்ள 40,000 பங்குகள் கொண்டது. ஆசியர்கள் அனைவரும் இதில் பங்குதாரர்கள் ஆகலாம். 4 வக்கீல்களும் 13 வங்கியரும் இருந்தனர். கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தவுடன் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் வ.உ.சி. இறங்கினார். ஜனாப் ஹாஜி முஹம்மது பக்கீர் சேட் 8000 பங்குகளுக்காக ரூ. 2,00,000 கொடுத்தார். ஆனால் நிறுவனத்திற்குச் சொந்தமாகக் கப்பல் இல்லை. "ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி"யிடமிருந்து கப்பல்களை வாடகைக்கு எடுக்க வேண்டியதாக இருந்தது. "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி" இந்தப் புதிய போட்டியை விரும்பாததால் அது "ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி" யை அச்சுறுத்தியது. அதனால் இது கப்பல்களை வாடகைக்குக் கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்திய கப்பல் நிறுவனத்திற்கென்று சொந்தமாகக் கப்பல் இல்லாததால் இந்திய வணிகர்கள் திகைத்துப் போயினர். ஆனால் வ.உ.சி. அஞ்சவில்லை. உடனடியாக கொழும்பு சென்று ஒரு கப்பல் வாடகைக்கு எடுத்து வந்து கப்பல் போக்குவரத்து தொடர்ந்து நடக்கும்படி செய்தார்.

ஆனால் சொந்த கப்பல்கள் இல்லாமல் கப்பல் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த இயலாது என்பதை அறிந்து கொண்டார். அதனால் சொந்த கப்பல்கள் வாங்க முடிவு செய்தார். தூத்துக்குடி வணிகர்கள் உதவி செய்தனர். ஆனால் அது போதுமானதாக இல்லை. அதனால் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் சென்றார். அங்குள்ள வணிகர்கள் அவரது பேச்சாற்றலால் கவரப்பட்டு கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆனார்கள். வ.உ.சி. வட இந்தியாவிற்குக் கிளம்பும் போது "திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்", என்று சூளுரைத்துச் சென்றார். வ.உ.சி. தனது சபதத்தை நிறைவேற்றினார். "எஸ்.எஸ். காலியோ" என்ற கப்பலுடன் திரும்பினார். இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். கப்பல் 42 முதல் வகுப்பு இருக்கைகள், 24 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் மற்றும் 1300 சாதாரண இருக்கைகள் இவற்றைக் கொண்டிருந்தது. மேலும் 4000 சாக்கு மூட்டைகளை ஏற்றிச் செல்ல இயலும். திரு. எஸ் வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று "எஸ். எஸ். லாவோ" என்ற கப்பலை வாங்கி வந்தார். நீராவி இயந்திரம் பொருத்தப்பட்ட இரு படகுகளும் வாங்கினர்.

இந்திய செய்தித் தாள்கள் அனைத்தும் இது குறித்து கட்டுரைகள் வெளியிட்டு வ.உ.சி. அவர்களைப் பாராட்டின. கப்பல் நிறுவனம் மெதுவாக வளர்ந்தது. மக்கள் சுதேசிக் கப்பலிலேயே பயணம் செய்தனர். வணிகர்கள் தங்கள் சரக்குகளை சுதேசிக் கப்பலிலேயே அனுப்பினர். பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. கடைசியில் இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்தின் தந்திரம் குறித்து வ.உ.சி. மக்களிடையே விளக்கினார். சுதேசி கப்பல் நிறுவனத்தை அழித்த பிறகு அவர்கள் தங்கள் கட்டணத்தை விருப்பம் போல் ஏற்றிவிடுவார்கள். அப்போது இந்தியர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போகும். அதனால் இந்தியர்கள் இலவசப் பயணத்தை மறுத்துவிட்டனர். உடனே வ.உ.சி.க்கு கையூட்டு கொடுக்க முயற்சி செய்தனர். சுதேசி கப்பல் நிறுவனத்தை விட்டு விலகினால் ரூ.1,00,000 கொடுப்பதாகக் கூறினர். வ.உ.சி. மறுத்துவிட்டார்.

ஆங்கில அரசு பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்திற்கு பலவிதங்களிலும் உதவி செய்தது. அது ஆங்கிலேயர்களின் கப்பலில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசு அதிகாரிகளுக்கு இரகசிய கடிதம் அனுப்பியது. சுங்க அதிகாரிகள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் பல விதமான தொல்லைகள் ஏற்படுத்தினர். இந்திய கப்பல் ஆங்கிலேயர்களின் கப்பலுடன் மோத வந்தது என்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. வ.உ.சி. அது பொய்க் குற்றச்சாட்டு என்று நிரூபித்து இந்திய கப்பல் செல்ல அனுமதி பெற்றார். ஆனால் சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியை அவர்களால் தடுக்க இயலவில்லை.
அரசியல் பணி
தூத்துக்குடி நூற்பாலை வேலை நிறுத்தம்

சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றியுடன் வ.உ.சி. திருப்தியடையவில்லை. அவர் மக்களிடையே விடுதலைப் போராட்ட உணர்வைத் தூண்ட நினைத்தார். இந்திய தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட வ.உ.சி.க்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. லார்டு. ராய் இந்தியாவில் இருந்த ஆங்கில அரசு அதிகாரி. அவர் 1905-ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஆங்கிலேய வணிகப் பெருமக்களின் கூட்டத்தில்,"இந்தியாவில் முதலீடு செய்யலாம். ஏனெனில் அங்கே தொழிற்சங்கம் இல்லை. அதனால் தொழிலாளர்களின் கூலி மிகக் குறைவு" என்று பேசினார். இந்த வகையான பேச்சிலிருந்து இந்தியாவில் அந்த கால கட்டத்தில் தொழிலாளர்களின் நிலையை நாம் அறியலாம். தூத்துக்குடியில் கோரல் நூற்பாலை என்று ஒரு தொழிற்சாலை இருந்தது. அங்கே தொழிலாளர்களுக்குக் கூலி மிகக் குறைவு.ஆனால் அவர்கள் நாள் முழுவதும் இடைவேளை இல்லாமல் பன்னிரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக கடினமாக உழைக்கவேண்டும். அவர்களுக்கு விடுமுறை கிடையாது. தொழிலாளர்கள் ஏதேனும் தவறு செய்தால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.

தொழிலாளர்களின் அவல நிலையைப் பார்த்து வ.உ.சி. மிகவும் வருந்தினார். நூற்பாலை தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்யும்படி தூண்டினார். வ.உ.சி.யும் சுப்ரமணிய சிவாவும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்தனர். 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாள் வ.உ.சி. தூத்துக்குடியில் சொற்பொழிவு ஆற்றினார். 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாள் நூற்பாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வ.உ.சி.யும் சுப்ரமணிய சிவாவும் வேலை நிறுத்தத்திற்குத் தலைமை தாங்கினர். அவர்கள் கோரிக்கைகள் பின்வருமாறு: 1. கூலி உயர்வு 2. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை 3. மற்ற விடுமுறை நாட்கள்

மாவட்ட ஆட்சியர் திருநெல்வேலியில் இருந்து இரண்டு அதிகாரிகளையும் சிவகாசியில் இருந்து 30 காவலர்களையும் தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தார். குற்றவியல் நடுவர் பொதுக்கூட்டங்களைத் தடை செய்தார். மறுநாள் மாவட்ட ஆட்சியர் திரு.விஞ்ச் தூத்துக்குடிக்கு வந்தார். தன்னைச் சந்திக்கும்படி வ.உ.சி.க்குச் சொல்லி அனுப்பினார். அந்த சந்திப்புக்குப் பிறகு வ.உ.சி. தொழிலாளர்களிடையே பேசினார். இந்தப் பொதுக்கூட்டம் ஒரு தனியாரின் இடத்தில் நடைபெற்றது. நூற்பாலை நிருவாகத்தின் கொடூரமான நடவடிக்கைகளே இந்த வேலை நிறுத்தத்திற்குக் காரணம் என்று மாவட்ட ஆட்சியரிடம் தான் கூறியதாகத் தொழிலாளர்களிடம் கூறினார். வ.உ.சி. தொழிலாளர்களுக்குப் பொதுமக்களின் துணையுடனும் தனது சொந்த சொத்துக்களில் மூலமாகவும் உதவினார். இதன் காரணமாக அவர் தனது சொந்த சொத்தில் பெரும் பகுதியை இழந்தார்.

நூற்பாலை நிருவாகம், தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்து விரைவில் வேலைக்குத் திரும்பிவிடுவார்கள் என்று நினைத்தது. ஆங்கில அரசு நூற்பாலை நிருவாகத்திற்கு உறுதுணையாக இருந்தது. ஆனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தது. நூற்பாலை நிருவாகத்தின் பாடு திண்டாட்டமாகிவிட்டது. சிலரை அச்சுறுத்தியது. சிலரை வேலையைவிட்டு நீக்கியது. சிலருக்கு ஆசை காட்டியது. எல்லாம் வீணானது. வேலை நிறுத்தம் இந்திய நாட்டில் உள்ள அனைவரின் கவனத்தை ஈர்த்தது. வ.உ.சி. பொதுமக்களிடையே தினமும் தொழிலாளர்களின் நிலை குறித்துப் பேசினார். அதனால் பொதுமக்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளித்தனர். வேலை நிறுத்தம் மேலும் மேலும் தீவிரமடைந்தது.மாவட்ட துணை ஆட்சியர் வ.உ.சி.யை அச்சுறுத்தினார். ஆனால் வ.உ.சி. அந்த அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடத்தினார். தொழிலாளர்கள் தினமும் ஊர்வலம் சென்றனர். வணிகர்கள் ஆங்கிலயர்களுக்குப் பொருட்களை விற்க மறுத்தனர். அதனால் அவர்கள் இலங்கையிலிருந்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். அவர்கள் தூத்துக்குடியில் தங்க அஞ்சி நடுக்கடலில் கப்பலில் தங்கினார்கள்.

இறுதியில் நூற்பாலை நிருவாகம் அவர்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தது. 1908-ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் நாள் திரு. சுப்ரமண்ய பிள்ளை, நூற்பாலை நிருவாக அலுவலர், வ.உ.சி.யைச் சந்தித்தார். வ.உ.சி.தொழிலாளர்கள் 50 பேருடன் நூற்பாலை நிருவாக இயக்குனரைச் சந்தித்தார். அவர்கள் கூலியை உயர்த்தவும் வேலை நேரத்தைக் குறைக்கவும் ஞாயிற்றுக் கிழமையன்று வார விடுமுறை அளிக்கவும் சம்மதித்தனர். 9 நாள் வேலை நிறுத்தத்திற்குப் பிறகு தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர். வேலை நிறுத்தம் பெரும் வெற்றி பெற்றது. அது தொழிற்சங்கங்கள் இல்லாத ஒரு காலம். இந்தியாவில் முதல் தொழிற்சங்கமே 1920-ஆண்டுதான் தொடங்கப்பட்டது. சோவியத்புரட்சி 1917-ஆம் ஆண்டு நடைபெற்றது. வ.உ.சி. 1908-ஆம் ஆண்டே தொழிற்சங்கங்கள் இல்லாமல் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் பங்கு பெறச் செய்து அவர்களை வழி நடத்தி வேலை நிறுத்தத்தைப் பெரும் வெற்றி பெறச் செய்தார். வ.உ.சி. எல்லோருக்கும் முன்னோடியாக வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். இந்த வேலை நிறுத்தத்தின் பயனாக மற்ற ஆங்கில நிறுவனங்களின் தொழிலாளர்களும் பயன் பெற்றனர். அவர்கள் கூலியை அதிகரித்ததுடன் கொடூரமாக நடத்துவதையும் நிறுத்தினர். ஸ்ரீ அரவிந்தர் இந்த வேலை நிறுத்தம் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது என்று பாராட்டி வந்தே மாதரம் என்ற இதழில் எழுதினார்.
கைது-1908

சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சி ஆங்கிலயர்களை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. நூற்பாலை வேலை நிறுத்தத்தின் வெற்றி அவர்களை அச்சுறுத்தியது. இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வ.உ.சி.யைக் கைது செய்வது அவசியம் என்று உணர்ந்தார்கள். அவர்கள் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார்கள்.

வ.உ.சி. வெளி நாட்டுப் பொருட்களைப் புறக்கணித்தார்.மக்களும் புறக்கணித்தார்கள்.அந்த காலகட்டத்தில் வின்ச் தான் மாவட்ட ஆட்சியர். ஆனால் மக்கள் வ.உ.சி. யின் சொற்களைக் கட்டளையாக ஏற்றனர். மக்கள் வ.உ.சி.யை அவ்வளவு மதித்தனர். அவருக்குப் பின்னால் தொழிலாளர்கள் அனைவரும் இருந்தனர்.சுதந்திரப் போராட்ட உணர்ச்சி மக்களிடையே கொழுந்துவிட்டு எரிந்தது. வ.உ.சி. சொல்லும் எதையும் செய்ய மக்கள் தயாராக இருந்தார்கள். வ.உ.சி.காலத்திற்கு முன்பு படித்தவர்கள் மட்டுமே சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் தொழிலாளர்கள், உழைப்பாளிகள் என அனைவரையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடச் செய்த பெருமை வ.உ.சி.க்கே உரியது. அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபட்டனர். அவர்கள் ஆங்கிலேயர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் வேலை பார்க்க மறுத்துவிட்டனர்.ஆங்கிலேயர்கள் மிகுந்த சிரமப்பட்டார்கள். வ.உ.சி. யின் செல்வாக்கு அளப்பரியது. .

வ.உ.சி. சுதேசி கப்பல் நிறுவனத்தை ஆரம்பித்தது பணத்துக்காகவோ புகழுக்காகவோ அல்ல. ஆனால் பங்குதாரர்கள் பலர் பணம் ஈட்டவே விரும்பினர். அவர்கள் வ.உ.சி. சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விரும்பவில்லை. ஆனால் வ.உ.சி. அவர்கள் கருத்தை ஏற்க மறுத்துவிட்டார்.

வங்கத்தின் சுதந்திரப் போராட்டத் தலைவரான பிபின் சந்திர பால் 1908-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் நாள் விடுதலையாக இருந்தார். வ.உ.சி. அதை ஒரு விழாவாக கொண்டாட எண்ணினார்.அந்த விழா நடந்தால் வ.உ.சி. மக்களிடையே பேசுவார். அதை ஆங்கில அரசு விரும்பவில்லை. அதனால் வ.உ.சி.யைக் கைது செய்ய முடிவு செய்தனர். ஆனால் அவரைத் தூத்துக்குடியில் கைது செய்தால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படும். அதனால் வ.உ.சி.யைத் திருநெல்வேலி வந்து தன்னைச் சந்திக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஒரு ஆணை அனுப்பினார். வ.உ.சி. அந்த ஆணையை ஏற்றுத் திருநெல்வேலி செல்லத் தயாரானார். அவர் கைது செய்யப்படுவார் என்று அனைவருக்கும் தெரியும். அதனால் எல்லோரும் அவரைச் செல்ல வேண்டாம் என்று தடுத்தனர். ஆனால் வ.உ.சி. அனைவரையும் சமாதானப்படுத்தி திருநெல்வேலிக்கு அவரது ஆப்த நண்பர் சுப்ரமண்ய சிவாவுடன் சென்றார்.

சுப்பிரமணிய சிவா, மதுரைக்கு அருகில் உள்ள வத்தலகுண்டு என்ற ஊரைச் சேர்ந்தவர். அவர் அந்த கிராமத் தலைவரின் மகன். அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் மிக்க புலமை வாய்ந்தவர். அவர் கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே தாய் நாட்டின் சுதந்திரம் குறித்துப் பேசுவார். அவர் 1907-ஆண்டு தூத்துக்குடிக்கு வந்து சொற்பொழிவாற்றினார். வ.உ.சி.கடற்கரையில் நடந்த அந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரது பேச்சாற்றலும் தாய் நாட்டுப் பற்றும் வ.உ.சி.யை மிகவும் கவர்ந்தது. அவர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். வ.உ.சி.யும் சிவாவும் மக்களிடையே சுதந்திரப் போராட்ட உணர்ச்சியைத் தூண்டினர். ஆங்கில அரசு அவர்களது நடவடிக்கைகளை நிறுத்த நினைத்தது.

இருவரும் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க சென்ற போது இருவரையும் திருநெல்வேலியைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்றும் பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்றும் கூறினார். வ.உ.சி. அவரது நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டார். அதனால் வ.உ.சி.யும் சிவாவும் 1908-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் நாள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டதன் விளைவுகள்-1908

வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் கொந்தளித்தனர்.திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பள்ளிகளும் கல்லூரிகளும் சேதப்படுத்தப்பட்டன.மண்ணெண்ணெய் கிடங்கு தீ வைக்கப்பட்டது. இரண்டு நாட்கள் இந்த நிலை நீடித்தது. அஞ்சல் நிலையமும் தீ வைக்கப்பட்டது.காவல் நிலையமும் நகராட்சி அலுவலகமும் தாக்கப்பட்டது. தூத்துக்குடியில் வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் இரவு முழுவதும் தூங்கவில்லை. கடைகள் மூடப்பட்டன. கோரல் நூற்பாலை மற்றும் "பெஸ்ட் அண்ட் க்ம்பெனி" தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். நகராட்சி ஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டி ஓட்டுபவர்கள் போன்றோரும் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். இதுவே இந்தியாவில் முதல் அரசியல் வேலை நிறுத்தம்.1908-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் நாள் முதல் மார்ச் 19-ஆம் நாள் வரை நடைபெற்றது. பொதுமக்களும் அதில் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடைபெற்றன. காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானார்கள். இந்த நிகழ்வை திருநெல்வேலி எழுச்சி என்று கூறுகிறார்கள்.

வ.உ.சி. சிறையிலிருந்தபோது அவரது நண்பர்கள் அவரை ஜாமீனில் வெளிவரும்படிக் கேட்டுக் கொண்டனர். சிவாவும் பத்மநாப ஐயங்காரும் அவருடன் சிறையில் இருந்தனர். அவர் தனது நண்பர்களை விட்டுவிட்டுத் தனியாக வெளி வர விரும்பவில்லை. இந்நிகழ்ச்சியில் இருந்து அவரது தைரியத்தையும் நேர்மையையும் நாம் அறிந்து கொள்ளலாம்.
நீதிமன்றத் தீர்ப்பும் சிறைத் தண்டனையும்-1908

காவல் துறையினர் வ.உ.சி.க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

    1. வ.உ.சி. ஆங்கில அரசுக்கு எதிராக சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.(பிரிவு 123-அ)
    2. வ.உ.சி. சுப்ரமண்ய சிவாவிற்கு அடைக்கலம் கொடுத்தார்.(பிரிவு 153-அ)

வழக்கு நேர்மையாக நடைபெறாததால் வ.உ.சி. அதில் பங்கேற்க மறுத்துவிட்டார். இரண்டு மாதங்கள் நடந்த இந்த வழக்கு விவரங்களை இந்தியா முழுவதும் மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்தனர்.

நீதிபதி திரு. பின்ஹே தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பு விவரம் பின்வரமாறு:

    1. ஆங்கில அரசுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும்படி மக்களைத் தூண்டிவிட்டதற்காக 20 ஆண்டு தீவாந்திரத் தண்டனை.
    சிவாவுக்கு ஆதரவு அளித்ததற்காக மற்றுமொரு 20 ஆண்டு தீவாந்திரத் தண்டனை.
    2. சிவாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை.

40 ஆண்டு தீவாந்திரத் தண்டனை! யாருக்கும் கொடுக்கப்படாத கொடுமையான தண்டனை. ஆங்கில அரசுக்கு வ.உ.சி.யிடத்தில் அளவு கடந்த பயம். இந்தக் கொடுமையான தண்டனைக்கு அந்த பயமே காரணம். அவரைச் சிறையில் அடைத்தால்தான் அவர்களால் தொடர்ந்து இந்தியாவில் ஆட்சி செய்ய முடியும். வ.உ.சி.க்கு அப்பொழுது 36 வயது தான்.

இந்தக் கொடிய தீர்ப்பைக் கேட்டு இந்திய மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். வங்காளி, "அமிர்த பஜார்", " "சுதேசமித்ரன்", "இந்தியா", "ஸ்வராஜ்யா" மற்றும் பல செய்தித்தாள்கள் இத்தீர்ப்பைக் கண்டித்தனர். ஆங்கில இதழான "ஸ்டேட்ஸ் மேன்" இத்தீர்ப்பு நியாயமற்றது என்றும் வ.உ.சி.யின் தியாகம் போற்றத்தக்கது என்றும் குறிப்பிட்டது. ஆங்கில அரசை ஆதரிப்பவர்கள் கூட இந்தக் கொடிய தண்டனையை ஏற்றுக் கொள்ளவில்லை. லார்டு மார்லி, இந்தியாவுக்கான ஆங்கில அமைச்சர், இக்குரூரமான தண்டனையை ஏற்றுக் கொள்ள இயலாது என லார்டு மன்றோவுக்கு எழுதினார். அந்தத் தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீடு செய்ததில் 10 ஆண்டு தீவாந்திரத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அந்தமான் அனுப்ப இயலாது என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார் . அவரது நண்பர்கள் லண்டனில் உள்ள மன்னர் அவையில்(பிரிவியூ கௌன்சிலில்) முறையீடு செய்ததில் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையாகக் குறைந்தது.
சிறைத்தண்டனை 1908–1912

கப்பலோட்டிய தமிழனர் வ.உ.சிதம்பரனாருக்குத் சிறைத்தண்டனை தரக் காரணமாக இருந்ததால் ஆட்சியர் ஆசு என்பாரை வாஞ்சி சுட்டுக் கொன்றதாகத் தகவல் தரப்பட்டுள்ளது.

வ.உ.சி. முதலில் கோயம்புத்தூர் சிறையிலும் பின்னர் கண்ணனூர் சிறையிலும் அடைக்கப்பட்டார். இப்பொழுதெல்லாம் அரசியல் கைதிகள் நல்ல முறையில் நடத்தப்படுகின்றனர். அக்காலத்தில் அவர்கள் மற்ற ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளைப் போலவே நடத்தப்பட்டனர். கடுமையான வேலைகள் செய்ய வேண்டும். வ.உ.சி. செல்வந்தர். நல்ல ஆரோக்கியமான சுவையான உணவு உண்ணும் வழக்கம் உடையவர். ஆனால் சிறையில் கல்லும் மண்ணும் இருக்கும் கூழைக் குடிக்க வேண்டியிருந்தது. சிறை ஆடைகள் முரடானவை. தலையை மொட்டையடித்து கை, கால்களில் விலங்கிட்டிருப்பர்.

செக்கிழுத்த செம்மல்

சிறையில் வ.உ.சி. கடுமையான வேலைகளைச் செய்தார். சணல் நூற்றார். அப்பொழுது அவரது உள்ளங்கைகளில் இருந்து ரத்தம் கசிந்தது. கல் உடைத்தார். மாடுகள் இழுக்கும் செக்கினை இழுத்தார். அந்தப் புகழ் பெற்ற வழக்கறிஞர் ஒரு மாடு போல உழைத்தார். அவரது எடை மிகவும் குறைந்தது. மருத்துவர் சிறையதிகாரியை எச்சரித்தார். உடனே அரிசி உணவு வழங்கப்பட்டது. பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் அவர் சொந்த உணவை உண்ணலாம் என்று கூறியது.
வ. உ. சி. இழுத்த செக்கு சென்னை காந்தி மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் வடுகுராமன் என்ற கைதி வ.உ.சி.யை வணங்கினார். அதைப் பார்த்த சிறை அதிகாரி கோபமடைந்து வடுகுராமனிடம் இனிமேல் வ.உ.சி.யை வணங்கினால் செருப்பால் அடி கிடைக்கும் என்று கூறினார். வடுகுராமன் சிறை அதிகாரியைக் கொலை செய்ய முடிவு செய்தான். வ.உ.சி. கொலை செய்வதைத் தடுத்துவிட்டார். ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம் சிறைக் கைதிகள் கலவரம் செய்தனர். சிறை அதிகாரி கடுமையாகத் தாக்கப்பட்டார். சிறைக் கைதிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைத்தது. வ.உ.சி. அவரது நண்பர்களுக்கு எழுதி மேல்முறையீடு செய்து தண்டனக் காலத்தைக் குறைத்தார். வ.உ.சி. கைதிகள் பக்கம் சாட்சி கூறினார். அவர், சிறை அதிகாரி மிக மோசமான உணவை வழங்கியும் கடுமையாக அடித்தும் கைதிகளைக் கொடுமைப்படுத்தியும் கொடூரமாக நடந்து கொண்டதே கலவரத்திற்கான காரணம் என்று கூறினார்.

சிறை இயக்குநர் ஒரு நாள் வ.உ.சி.யிடம் சிறை அலுவலராக பணியேற்றுக் கொண்டால் தண்டனைக் காலம் குறையும் என்றும் இன்னும் பல நன்மைகள் கிட்டும் என்றும் கூறினார். வ.உ.சி. அப்பதவியை மறுத்துவிட்டார். வ.உ.சி. கேரளாவில் உள்ள கண்ணனூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கே சிறைக்கைதிகளுக்கு ஒரு வித்தியாசமான தண்டனை கொடுக்கப்பட்டது. அவர்கள் கம்பளியால் போர்த்தப்பட்டு அடிக்கப்பட்டார்கள். வ.உ.சி.யை அச்சுறுத்த சிறை அதிகாரி ஒரு கொடூரமான சிறைக்கைதியை வ.உ.சி.யின் அறைக்கு வெளியே தூங்கும்படி செய்தார். வழக்கமாக அவன்தான் எல்லோரையும் அடிப்பான். ஆனால் ஆச்சரியப்படத்தக்க வகையில் அவன் வ.உ.சி.யின் சீடனாகிவிட்டான்.

வ.உ.சி. சிறையிலிருந்த போது சுதேசி கப்பல் நிறுவனம் மூழ்கிப் போனது. அவரில்லாமல் மற்றவர்களால் நிறுவனத்தை நடத்த இயலவில்லை. அவர்கள் கப்பலை விற்றுவிட்டனர். அதுவும் "எஸ்.எஸ்.காலியோ" என்ற கப்பலை ஆங்கில கப்பல் நிறுவனத்திற்கே விற்றுவிட்டார்கள். அது வ.உ.சி.யை மிகவும் பாதித்தது. அந்தக் கப்பலை வாங்க வ.உ.சி.என்ன பாடுபட்டார்?

1912-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள் வ.உ.சி. விடுதலை அடைந்தார். அப்பொழுது அரசியல் சூழ் நிலை முற்றிலும் மாறி இருந்தது. சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது கொள்கையைத் தொடர்ந்தால் அது சுதந்திரப் போராட்டத்திற்கு இடையூறாகிவிடும். ஒரு தனிக்கட்சி ஆரம்பிக்கும் அளவு செல்வாக்கும் புகழும் இருந்த போதும் அவர் அப்படிச் செய்யவில்லை. அதன் மூலம் அவரது நாட்டுப்பற்றையும் மேன்மையான குணத்தையும் அறிந்து கொள்ளலாம்
விடுதலைக்குப் பின்னர் (1913–1936)

வ.உ.சி. விடுதலைக்குப் பின்னர் சென்னை, கோயம்பத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் வசித்தார்.
சென்னை வாழ்க்கை(1913–1920)

வ.உ.சி. விடுதலைக்குப் பின்னர் சென்னைக்குச் சென்றார். அவர் ஒரு மண்ணெண்ணைக் கடை ஆரம்பித்தார். ஆனால் ஒரு வணிகராக அவரால் வெற்றி பெற இயலவில்லை. அவர் அன்புள்ளமும் தாராள மனமும் கொண்டவர். அவரால் எப்படி வாணிகத்தில் வெற்றி பெற முடியும்? 1920-ஆம் ஆண்டு கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. வ.உ.சி.ஒரு பிரதிநிதியாக அதில் கலந்து கொண்டார். வ.உ.சி. லோக மான்ய பால கங்காதர திலகரின் சீடர். திலகர் செயல் வீரர். காந்திஜி மிதவாதி. வ.உ.சி.க்கு காந்திஜியின் வழிமுறைகளில் விருப்பமில்லை. வ.உ.சி. சிந்தித்தார். காந்திஜியின் வழிமுறைகளைப் பின்பற்றுவதா? மனசாட்சிப்படி நடப்பதா? வ.உ.சி. மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார். ஆனால் வ.உ.சி.யும் காந்திஜியும் ஒருவரை ஒருவர் மதித்தனர். காந்திஜி வ.உ.சி.யின் சுய நலமற்ற சேவையை அறிவார்.வ.உ.சி. காந்திஜியின் எளிமையும் தூய்மையும் மிக்க வாழ்க்கையை மதித்தார்.

வ.உ.சி. சென்னையில் தொழிற்சங்கங்கள் தொடங்கி அதற்காகத் தீவிரமாகப் பணியாற்றினார். வ.உ.சி.யின் பெரும்பான்மையான தமிழ் நூல்கள் அவர் சென்னையில் வசிக்கும் போதே வெளியாகின. வ.உ.சி. சிறை சென்றதால் வழக்கறிஞர் பணி செய்வதற்கான உரிமையை இழந்தார். அவரால் வழக்கறிஞராகப் பணியாற்ற இயலவில்லை. திலகர் மாதம் ரூ.50 அனுப்பி வைத்தார்.
கோயம்புத்தூர் வாழ்க்கை(1920–1924)

கோயம்புத்தூரில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றார். அங்கே ஒரு வங்கி இயக்குனராகவும் பணியாற்றினார். இந்த வருமானம் அவருக்கு வாழ்க்கைக்குப் போதுமானதாக இல்லை. வ.உ.சி. தான் சிறையில் இருந்தாலும் அரசியல் கைதியாக மட்டுமே இருந்தமையால் வழக்கறிஞராகப் பணியாற்ற அனுமதிக்கும்படி அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார். திரு. ஈ.எச். வாலஸ் 1908-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பணியாற்றியிருந்ததால் அவர் வ.உ.சி.யின் நேர்மையும் திறமையும் அறிந்திருந்தார். அதனால் அவர் அனுமதி அளித்தார். அவரது அச்செயலுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவர் தனது கடைசி மகனுக்கு "வாலேஸ்வரன்" என்று பெயரிட்டார்.
கோவில்பட்டி வாழ்க்கை (1924–1932)

கோவில்பட்டியில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அங்கேயும் அவர் வசதியற்றவர்களுக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் இலவசமாக வாதாடினார். 1927-ஆம் ஆண்டு அவர் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்தார். சேலத்தில் நடந்த மூன்றாவது கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். கட்சி செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். ஆனால் சேலம் மாநாட்டிற்குப் பிறகு மீண்டும் ஒதுங்கியே இருந்தார். அவர் கட்சியில் இருந்து விலகி இருந்தாலும் அவர் கடைசி வரை திலகரின் சீடராகவே இருந்தார். கடைசி மூச்சு வரை ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து வந்தார்.
தூத்துக்குடி வாழ்க்கை (1932–1936)

1932-ல் தூத்துக்குடி வந்தார். தமிழ் நூல்களை எழுதுவதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்து வந்தார். தமிழ் இலக்கியங்கள் குறித்து நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாக் கொண்டிருந்தார். வ.உ.சி. சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பினார்.இரண்டாம் உலகப் போர் மூண்டால் இந்தியா சுதந்திரம் பெறுவது உறுதி என்று அவர் கூறியிருந்தார்.அதே போல் இந்தியா இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் சுதந்திரம் பெற்றது. வ.உ.சி. 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாள் மறைந்தார்.
தமிழறிஞர் வ.உ.சி.
நூல்கள்

வ.உ.சி. இயற்றிய நான்கு நூல்களுமே கவிதைகளால் ஆனவைதான். அவை 1.மெய்யறம் 2.மெய்யறிவு 3.பாடல் திரட்டு 4.சுயசரிதை

மெய்யறம்-1914

மெய்யறம் 125 அதிகாரங்களை உடையது. ஒவ்வொரு அதிகாரமும் 10 பாடல்களைக் கொண்டது. ஒரு பாடல் என்பது ஒரு வரி மட்டுமே உடையது. மெய்யறம் 5 பகுதிகளை உடையது. முதல் பகுதி மாணவர்களுக்கானது. அதில் 30 அதிகாரங்கள் உள்ளன. இரண்டாவது பகுதி இல்லறத்தார்களுக்கானது. அதுவும் 30 அதிகாரங்கள் உடையது. மூன்றாவது பகுதியில் ஓர் அரசன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று 50 அதிகாரங்களில் வ.உ.சி. விளக்குகிறார். நான்காவது பகுதி 10 அதிகாரங்களுடன் நன்னெறி குறித்து விளக்குகிறது. கடைசிப் பகுதியில் உண்மையை அடைவது எப்படி என்று 5 அதிகாரங்களில் வ.உ.சி. விளக்குகிறார்.

மெய்யறிவு-1915

வ.உ.சி. கண்ணணூர் சிறையில் இருக்கும் போது மற்ற கைதிகளுக்கு நீதி, நெறிகளை விளக்குவார். அக்கைதிகள் இந்த அறிவுரைகள் செய்யுள் வடிவில் இருந்தால் மனனம் செய்ய எளிதாக இருக்கும் என்று வ.உ.சி. யிடம் கூறினார்கள். அவ்வாறு இயற்றப்பட்ட செய்யுள்களே மெய்யறிவு என்ற நூலாகும். அது 10 அதிகாரங்கள் உடையது. ஒவ்வொரு அதிகாரமும் 10 செய்யுள்கள் உடையது. ஒவ்வொருசெய்யுளும் 4 வரிகள் உடையது. இந்த நூலில் வ.உ.சி தன்னை அறிந்து கொள்வது எப்படி, நம் விதியைத் தீர்மானிப்பது எவ்வாறு, ஆரோக்கியத்தைப் பேணும் முறைகள், மனதை ஆளுவது எங்ஙனம், நம் மனத்தில் தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களை ஏற்படுத்துவது எப்படி, உண்மை நிலையை என்ன செய்ய வேண்டும் என்று விளக்குகிறார்.

பாடல் திரட்டு-1915

இந்நூல் பல சந்தர்ப்பங்களில் வ.உ.சி. எழுதிய பாடல்களின் தொகுப்பாகும். இது அவரது தலை சிறந்த படைப்பாகும்.

சுயசரிதை-1946

இது இரு பகுதிகளை உடையது. முதல் பகுதி 1916-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் அவர் தனது குழந்தைப் பருவம், ஆசிரியர்கள், குடும்பம், சட்டக்கல்வி இவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இரண்டாவது பகுதி 1930-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் கோயம்பத்தூர் சிறை வாழ்க்கை, சிறை அதிகாரி மீது தாக்குதல், சிறையில் ஏற்பட்ட கலவரம், கண்ணணூர் சிறை வாழ்க்கை, ஆஷ் கொலை, விடுதலை இவை குறித்து விளக்குகிறார். அவர் இறந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1946- ஆம் ஆண்டு இரண்டு பகுதிகளும் சேர்ந்து ஒரே நூலாக வெளி வந்தது.
உரை எழுதிய நூல்கள்

வ.உ.சி. இன்னிலை, சிவஞான போதம், திருக்குறள் ஆகிய நூல்களுக்கு உரை எழுதி உள்ளார்.

இன்னிலை-1917

வ.உ.சி. ரத்தினக் கவிராயர் எழுதிய இன்னிலை என்ற நூலுக்கு விளக்க உரை எழுதினார். அந்த நூலைப் படிக்கும் போது அவரது இலக்கணப் புலமையை நாம் அறிந்து கொள்ளலாம்.

சிவஞான போதம்-1935

சிவஞான போதம் ஒரு பக்தி நூலாகும். வ.உ.சி. இந்நூலுக்கு மிகச் சிறந்த விளக்க உரை எழுதியுள்ளார். இந்நூலினை ஆழமாக ஆராய்ச்சி செய்ததில் தத்துவம் மற்றும் பக்தியில் சிறந்தவர் ஆனார். மத வேற்றுமை காண்பவர்கள் "யான், எனது" என்னும் மத வெறி பிடித்தவர்களென்றும் நாடு இருக்கும் ஒற்றுமையற்ற நிலையில் மதவேற்றுமை காண்பது நாட்டு ஒற்றுமைக்குத் தீங்கு ஏற்படுத்தக் கூடியது என்றும் வ.உ.சி. இந்நூலில் கூறுகிறார். அவர் இந்நூலில் மதங்களின் பொய்யான உயர்வு, தாழ்வு குறித்து ஒன்றும் எழுதவில்லை.

திருக்குறள்-1935

பழந்தமிழ் இலக்கியங்களான திருக்குறள், தொல்காப்பியம் இவற்றின் மீது வ.உ.சி.க்கு அளவு கடந்த பற்று உண்டு. அவரது உரை அவரது ஆழ்ந்த இலக்கண அறிவை வெளிப்படுத்துகிறது. அவர் பொருள் கூறும் விதம், பல் வேறு உரைகளை ஒப்பிடும் விதம், அவர் தரும் இலக்கணக் குறிப்புகள் இவற்றின் மூலம் அவர் எவ்வளவு பெரிய மேதை என நாம் அறியலாம்.

வ.உ.சி. யால் பதிப்பிக்கப்பட்ட நூல்கள்

    1.திருக்குறள் (மணக்குடவர் உரையுடன்)-1917
    2.தொல்காப்பியம் (இளம்பூரனார் உரையுடன்)-1928

கட்டுரைகள்

வ.உ.சி பல்வேறு விஷயங்களைப் பற்றி வெவ்வேறு பத்திரிக்கைகளில் நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளார். வ.உ.சி. எழுதிய நூல்கள் பல போதிய நிதி வசதி இல்லாததால் பதிப்பிக்கபடவில்லை. ஆனால் இப்பொழுது அக்கையெழுத்துப் பிரதிகள் கிடைக்கவில்லை. அவை காணாமல் போய்விட்டன. அவற்றுள் சில நமக்குக் கிடைத்துள்ளன.

    கடவுளும் பக்தியும்
    கடவுள் ஒருவரே
    மனிதனும் அறிவும்
    மனமும் உடம்பும்
    வினையும் விதியும்
    விதி அல்லது ஊழ்

வ.உ.சி.யின் அரசியல் சொற்பொழிவு

வ.உ.சி.தலை சிறந்த மேடைப் பேச்சாளர்.சேலத்தில் நடந்த மூன்றாவது காங்கரஸ் மாநாட்டில் அவர் நிகழ்த்திய தலைமையுரை "எனது அரசியல் பெருஞ்சொல்" என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது.

பத்திரிக்கை ஆசிரியராக வ.உ.சி.

வ.உ.சி. விவேகபானு, இந்து நேசன், தி நேஷனல் போன்ற பத்திரக்கைகளுக்கு ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
மொழி பெயர்ப்பாளராக வ.உ.சி.

வ.உ.சி.4 நூல்களை மொழிபெயர்த்துள்ளார். அவையனைத்தும் ஜேம்ஸ் ஆலன் என்பவரால் எழுதப்பட்டது. மொழிபெயர்ப்புப் பணி அவ்வளவு எளிதானதல்ல. எளிதாகப் புரிந்து கொள்வதற்காக சில வார்த்தைகளைச் சேர்த்தும் சில வார்த்தைகளைச் தவிர்த்தும் மொழிபெயர்த்துள்ளதாக வ.உ.சி.கூறுகிறார். வ.உ.சி.யின் மொழிபெயர்ப்பு நிறைவானதாகவும் மதிப்பு மிக்கதாகவும் அவரது திறமையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. அவை அனைத்துமே அறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய நூல்களாகும்.

மனம் போல் வாழ்வு-1909

ஜேம்ஸ் ஆலனின் "As a man Thinketh" என்ற நூலை வ.உ.சி. "மனம் போல் வாழ்வு" என்று மொழி பெயர்த்தார். மனிதர்களின் எண்ணங்களே அவர்களது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. எண்ணங்களே விதைகள். செயல்களே மலர்கள். இன்பங்களும் துன்பங்களும் கனிகள். எண்ணங்களே சொற்களாகவும் செயல்களாவும் பழக்கமாகவும் மாறுகின்றன. பழக்கமே ஒரு மனிதனின் ஒழுக்கமாக மாறுகிறது. வ.உ.சி. நூல் திரட்டு. பக்க எண் 615.

அகமே புறம்- 1914

ஜேம்ஸ் ஆலனின் "Out from the heart" என்ற நூலை வ.உ.சி. "அகமே புறம்" என்று மொழி பெயர்த்தார்.இந்நூல் மனோ நிலைமையின் வலிமையை விளக்குகிறது. நம் மனம் அளவு கடந்த வலிமை உடையது. மனதால் ஒரு மனிதனை ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். அதனால் மனிதன் நல்லவற்றைச் சிந்திக்கும்படி மனதைப் பழக்கப்படுத்த வேண்டும். அறச் செயல்களே செய்ய வேண்டும். நமது சொற்களைக் கட்டுப்படுத்த வேண்டும். நல்ல மன நிலையிலிருந்து சுகமும் தீய மன நிலையிலிருந்து துக்கமும் ஏற்படுகின்றன. நாம் அறிவுடையவர்களாக இருந்தால் தீய செயல்களைச் செய்யமாட்டோம். வ.உ.சி. நூல் திரட்டு. பக்க எண் 602.

வலிமைக்கு மார்க்கம்- 1916

ஜேம்ஸ் ஆலன் எழுதிய "From Poverty to Power"என்ற நூலின் முதல் பகுதி "The part of prosperity" ஆகும். அதனை வ.உ.சி. "வலிமைக்கு மார்க்கம்" என்று மொழி பெயர்த்தார். ஒவ்வொரு துன்பமும் ஒரு அனுபவத்தைக் கொடுத்துவிட்டு விரைவில் மறைந்துவிடுகிறது. ஆனால் அது ஒரு நல்ல ஆசிரியர். நாம் கற்றுக்கொள்ளத் தயாராக இருந்தால் அது நமக்கு நல்வழிகளைக் கற்பிக்கும். வலிமை என்பது மகிழ்ச்சி போன்று புற அனுபவம் இல்லை. அது ஓர் உள் அனுபவம். நாம் வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பினால் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் நாமே எதையும் செய்யும் வலிமையுடையவர்களாக இருக்க வேண்டும். ஒருவன் தன்னைத் தானே கட்டுப்படுத்த முடிந்தால் அவனால் மற்றவர்களையும் கட்டுப்படுத்த முடியும். வ.உ.சி. நூல் திரட்டு. பக்க எண் 615; பக்க எண் 652-653.

சாந்திக்கு மார்க்கம்- 1934

ஜேம்ஸ் ஆலன் எழுதிய "From Poverty to Power"என்ற நூலின் இரண்டாம் பகுதி "The way to peace" ஆகும். அதனை வ.உ.சி. "சாந்திக்கு மார்க்கம்" என்று மொழி பெயர்த்தார். ஆத்ம தியானம் கடவுளை அடைவதற்குரிய வழியாகும். தியானமென்பது ஒரு கொள்கையை அல்லது ஒரு விஷயத்தை முற்றிலும் அறிய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆழ்ந்து சிந்தித்தல் ஆகும். அன்பு எல்லாவற்றையும் ஆளக் கூடியது. அடக்கம் கடவுள் தன்மை ஆகும். எவன் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொறுமையானவனாகவும், இனிமையானவனாகவும், அன்பானவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கிறானோ அவன் தான் மெய்ப்பொருளை உணர்கிறான். சுய நலத்தைத் துறத்தலும் இறை நம்பிக்கையும் கடவுள் தன்மையை அடைவதற்கு உரிய வழிகளாகும். அன்பே நிரந்தரமானது. வ.உ.சி. நூல் திரட்டு. பக்க எண் 715; 740; 760; 766.
சான்றிதழ்

    "சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்"

1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகளே இவை. வ.உ.சி.யின் விடுதலை வேட்கைக்கும் வேகத்துக்கும் இதனை விடச் சிறந்த அங்கீகாரத்தை வேறு எவரும் தந்துவிட முடியாது.

வ.உ.சிதம்பரனார் குறித்து மு.வரதராசனார் எழுதிய பாடல்

    ஒழுக்கத்தின் உரவோய் நாட்டின்
    உரிமைப்போர் நடந்த காலை
    எழுச்சியின் தலைமை ஏற்றே
    இணையிலாத் தியாகம் செய்தோய்
    மொழிப் பற்றும் நாட்டுப் பற்றும்
    முற்றிலும் ஒன்றி நிற்க
    விழிப் பொறி இரண்டும் போல
    விழுப்பமாய்க் கொண்டாய் அய்யா
    பாரதி பெற்ற நண்ப
    பழியிலா வீர வாழ்க்கை
    பாரெல்லாம் ஏத்தும் வண்ணம்
    பண்புடன் நடத்தி நின்றோய்
    வேருடன் நைந்து வாடி
    வெள்ளையர் ஆட்சி வீழ
    நேரிலாப் போர்கள் செய் தாய்
    நித்தமும் நின் பேர் வாழி"


ம.பொ.சிவஞானம்.

வ. உ. சிதம்பரனார் செய்த தியாகங்களை உலகறிய செய்தவர் ம.பொ.சி. வ.உ.சியின் வரலாற்றை பற்றி, ம.பொ.சி எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூல் பெருமை வாய்ந்தது. இதன் காரணமாக பின்னாளில் வ.உ.சி, 'கப்பலோட்டிய தமிழன்' என்றே தமிழ்நாடு முழுவதும் போற்றப்பட்டார். பி. ஆர். பந்துலு ம.பொ.சியின் நூலை தழுவி கப்பலோட்டிய தமிழன் என்னும் திரைப்படத்தை இயக்கினார். சிதம்பரனார் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்:

    கப்பலோட்டிய தமிழன் [1944]
    தளபதி சிதம்பரனார் [1950]
    கப்பலோட்டிய சிதம்பரனார் (விரிவான பதிப்பு) [1972]

வ.உ.சி சிலைஅமைத்தல்

1939 ஆம் ஆண்டு சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், வ.உ.சிதம்பரனாருக்கு சிலை வைக்க முயன்று அச்செலவிற்கு பணம் படைத்தோரின் உதவி நாடி அம்முயற்சி தோல்வியுற்றதால் மனம் வருந்தி, ஹாமில்டன் வாராவதியருகிலுள்ள கட்டைத் தொட்டிக் கடைக்காரர்களிடம் சென்று கடைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று கையேந்தி பணம் பெற்றும் டிராம்வே தொழிலாளர் சங்கம், ராயபுரம் அலுமினியம் தொழிலாளர் சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களின் உதவியோடும் சிலை வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமான நினைவுச் சின்னங்கள்.
சிலைகள்

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலக முகப்பு.(1939)
    திருநெல்வேலி பாளையங்கோட்டை நுழைவாயில்.
    சென்னை மெரீனா கடற்கரை.
    தூத்துக்குடி துறைமுகம்.(முன்னாள் பிரதம மந்திரி திருமதி. இந்திரா காந்தி அம்மையாரால் திறந்து வைக்கப்பட்டது.)
    மதுரை சிம்மக்கல் (முன்னாள் முதல் அமைச்சர் திரு. எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.)
    திருநெல்வேலி வ.உ.சி. நினைவு இல்லம். (முதல் அமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.)

இன்னும் பல இடங்களில் வ.உ.சி. சிலைகள் உள்ளன. தெருக்கள், பள்ளிகள், குடியிருப்புகள் ஆகியவற்றிற்கு வ.உ.சி. பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நினைவு இல்லங்கள்

    ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி. யின் இல்லம்.[6]

தமிழ்நாடு அரசு வ.உ.சிதம்பரனார் பிறந்த தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஊரில் வ.உ.சிதம்பரனார் இல்லம் அமைத்துள்ளது. இதில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இங்கு வ.உ.சி. அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

    திருநெல்வேலி வ.உ.சி. நினைவு இல்லம்.

அஞ்சல் தலை

வ.உ.சி. யின் நூற்றாண்டு விழாவின் போது முன்னாள் பிரதம மந்திரி திருமதி. இந்திரா காந்தி அம்மையாரால் வெளியிடப்பட்டது.
திரைப்படம்

வ.உ.சி. யின் வாழ்க்கை வரலாறு கப்பலோட்டிய தமிழன் என்ற பெயரில் வெளியானது. நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன் அவர்கள் வ.உ.சி. யாகத் தோன்றினார். திரு. டி. ஆர். பந்துலு அவர்கள் படத்தைத் தயாரித்து இயக்கினார்.
செக்கு

கோயம்புத்தூர் மத்தியசிறையில் வ.உ.சி. இழுத்த செக்கு சென்னை காந்தி நினைவு மண்டபத்தில் நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது.
துறைமுகம்

தூத்துக்குடி துறைமுகம் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடியைத் தலைநகராகக் கொண்டு 1986-ல் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது இவருடைய பெயர் அந்த மாவட்டத்துக்கு வைக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி


விநாயகர் சதுர்த்தி
பிள்ளையார் அல்லது விநாயகர் (சமசுகிருதம்: गणेश; சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி: கணேஷா; இந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க), இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள்.விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது. அத்துடன் இந்து சமயம் தவிர்த்து பௌத்தம், சமணம் போன்ற மதங்களிலும் உள்ளது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார்.

விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் (சமசுகிருதம்: गाणपत्य; IAST: gāṇapatya) எனப்படுகிறது. இந்த காணாதிபத்தியம் பின்பு சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒன்றிணைந்தது.

இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும்[, யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார்.
விநாயகரின் வேறு பெயர்கள்
வித்தியாசமான விநாயகர் சிலை

    பிள்ளையார்
    கணபதி - கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.
    ஆனைமுகன் - ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
    கஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
    விக்னேஸ்வரன் - விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்

    பிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை.

காணபத்தியம்

இந்து மதத்தினுள் உள்வாங்கப்பட்ட சமயமான காணாபத்தியம் எனும் பிரிவு விநாயகரை மையப்படுத்திய சமயம்.

இந்துக்களின் புராணங்களில் விநாயகர் மற்றைய இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும் முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் கூறப்படுகிறார். இக்கடவுளின் வாகனம் மூஞ்சூறு .

’கணேச புராணம்’, கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுகின்றது.
கிருத யுகம்

காஸ்யப முனிவருக்கும் அதீதீ தேவிக்கும் பிள்ளையாக அவதரித்து அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். கிருத யுக அவதாரத்தில் பிள்ளையாரின் திருநாமம் மகாகடர்.
திரேதா யுகம்

அம்பிகை பார்வதியின் பிள்ளையாக அவதரித்து, அழகான மிகப்பெரிய மயிலை தம் குழந்தைப் பருவத்தில் பிடித்து விளையாடியதால் மயூரேசர் என்ற திருநாமம்
துவாபர யுகம்

கஜானனன் என்ற திருநாமத்துடன் அவதரித்து, பராசர மகரிஷி மற்றும் பராசர மகரிஷியின் தேவி வத்ஸலாவால் சிறப்பாக வளர்க்கப்பட்டார்.
கலி யுகம்

சிவபெருமானுக்கும் அம்பிகை பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்து அதர்மம் செய்வோரின் செயல்களில் தடங்கல்களையும் தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்கியும் வருவதாகக் கணேச புராணம் குறிப்பிடுகின்றது

புராணங்களும் வரலாறும்
’வேத காலம்’ என்று கூறப்படும் தொன்மையான காலகட்டத்திற்கும் முன்பிருந்தே விநாயகர் வழிபாடு உலகின் பலபகுதிகளிலும் இருந்து வந்ததை சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
’கணேச புராணம்’ விநாயகர் அவதாரத்தை யுகத்திற்கொன்றாக நான்கு அவதாரமாகக் கூறுகின்றது.

விநாயகரின் தோற்றம் பற்றி பலவிதமான கருத்துக்கள் வழங்கப்படுகின்றன.

    கைலாயத்தில் பார்வதி தேவி குளிக்கச் செல்லும் போது, தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிற்கச்சொன்னார்.(உமையம்மை மஞ்சளைத் திரட்டி விநாயகர் செய்தார் என்றும் கூறுவர் ) யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார். அதன் பின்னர் தாம் காவல் காக்கும்போது உள்ளே நுழைய அங்கே வந்த சிவபெருமானைத் தடுத்தான் அந்தச் சிறுவன். கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையை துண்டித்தார். பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான், தன் பூதகணங்களை அழைத்து அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்துவருமாறு கூறினார். அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை. சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்துவந்தனர். அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்ட வைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது வெளியே வந்த பார்வதி பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே அச்சிறுவனுக்கு பெயராகிவிட்டது. அச்சிறுவன் தான் பிள்ளையார்.

    கயிலாய மலையின் மந்திர சித்திர மண்டபத்தில் சிவபெருமான் உமையம்மையோடு எழுந்தருளினார். அங்கு ஏழு கோடி மந்திர சித்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் நடுவே சமஷ்டிப் பிரணவம் என்ற இரு மந்திரங்கள் அமைந்திருந்தன. சிவபெருமானும் உமையம்மையும் அவற்றை நோக்க அவ்விரு மந்திரங்கள் வடிவாய் யானை முகத்துடன் விநாயகர் அவதரித்தார்.
    சிவபெருமான் மற்றும் பார்வதி தம்பதியினர் யானைகளாக உருவம் தரித்து விநாயகரை பெற்றெடுத்தனர் என மகாபுராணங்களில் ஒன்றான இலிங்க புராணம் கூறுகிறது.
சிவபெருமான், உமையம்மைக்கு யானை முகம் மனித உடலும் உடைய ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தையை எடுத்து மகிழ்ந்தார் பார்வதி தேவி. அக்குழந்தை தாயின் மடிவிட்டு இறங்கி கைகொட்டி தாண்டவம் ஆடியது. ஐந்து கைகளை உடைய குழந்தை என்பதால் ஐங்கரன் என்று அழைக்கப்பட்டார்.

தமிழகத்தில் விநாயகர் வழிபாட்டு வரலாறு

சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கிய மன்னனின் வாதாபி என்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இவருக்கு வாதாபி கணபதி என்று பெயர்.
திருவுருவ விளக்கம்
திருவடி

ஆன்மாவைப் பொருந்தி நின்று மலகன்ம மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.
பெருவயிறு

ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.
ஐந்துகரங்கள்

பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே பிரம்மாவாகிறார். தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. எனவே இவரே மகாவிஷ்ணுவாகிறார் துதிக்கை அனுக்ரகம் செய்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது.எனவே, இவா் ருத்ரா் ஆகிறார் மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே,இவரே சா்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்
கொம்புகள்

மகாபாரதத்தை எழுதுவதற்காக தமது கொம்பையே ஒடித்தது வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதை உணர்த்துவதாகக் கூறப்படுகின்றது.
தாழ்செவி

விநாயகரின் முறம் போன்ற பெரிய காதுகள் செவியில் விழும் செய்திகளை சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றன.
விநாயகர் மூர்த்தங்கள்

பொதுவாக யானைமுகமும், மனித உடலுமாக காட்சியளிக்கும் விநாயகர், பல்வேறு வடிவங்களிலும் கோவில்களில் காட்சியளிக்கிறார்.

நரமுக விநாயகர் - மனித முகத்துடன் காட்சியப்பவர். சிதலப்பதி முத்தீசுவரர் கோயிலில் உள்ள விநாயகர் தும்பிக்கையின்றி மனித உருவில் உள்ளார்
நடன கணபதி, நர்ததன கணபதி - நடனமாடும் விநாயகர். சித்தி, புத்தி கணபதி - மனைவிகளான சித்தி மற்றும் புத்தி ஆகியோருடன் காட்சியளிப்பவர்.
முப்பத்தியிரண்டு விநாயக மூர்த்தங்கள்

    உச்சிட்ட கணபதி
    உத்தண்ட கணபதி
    ஊர்த்துவ கணபதி
    ஏகதந்த கணபதி
    ஏகாட்சர கணபதி
    ஏரம்ப கணபதி
    சக்தி கணபதி
    சங்கடஹர கணபதி
    சிங்க கணபதி
    சித்தி கணபதி
    சிருஷ்டி கணபதி
    தருண கணபதி
    திரயாக்ஷர கணபதி
    துண்டி கணபதி
    துர்க்கா கணபதி
    துவிமுக கணபதி
    துவிஜ கணபதி
    நிருத்த கணபதி
    பக்தி கணபதி
    பால கணபதி
    மஹா கணபதி
    மும்முக கணபதி
    யோக கணபதி
    ரணமோசன கணபதி
    லட்சுமி கணபதி
    வர கணபதி
    விக்ன கணபதி
    விஜய கணபதி
    வீர கணபதி
    ஹரித்திரா கணபதி
    க்ஷிப்ர கணபதி
    க்ஷிப்ரபிரசாத கணபதி



வருடந்தோறும் ஆவணி மாதம் வளர்பிறைச்சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, இக்கடவுளுக்கான விழாக்களுள் முக்கியமானதாகும்.

துர்வா கணபதி விரதம் துர்வா யுக்மம் எனும் சொல்லானது அருகம்புல்லைக் குறிப்பதாகும். விநாயகருக்கு விரதம் இருந்து அருகம்புல்லால் அர்ச்சனை செய்வதும், மாலையிடுவதும் இந்நாளில் செய்யப்படுகிறது.
விநாயகர் அகவல்


ஔவையார் விநாயகர் மேல் பாடிய அகவல் ’சீதக்களப செந்தாமரை.." எனத்துவங்கும் விநாயகர் அகவல்.விநாயகர் அகவலைத் தினமும் பாராயணம் செய்துவருவோரைத் தீவினை நெருங்காது, நல்லதே நடக்கும் என்பது தொன்நம்பிக்கை
கணேச பஞ்சரத்னம்

கணேச பஞ்சரத்னம் ஆதிசங்கரர் இயற்றிய, விநாயகப்பெருமானை வழிபடும் சுலோகம்.
தமிழ் நாட்டின் சிறப்பு
மூஞ்சூறு வாகனத்தில் பிள்ளையார்.

தமிழ் நாட்டின் சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோவில்கள் இருப்பதேயாகும். கோயில் என்று பெயர் வைத்து கூறையும் விமானமும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பது கூட இல்லாமல் அரசமரத்தடி, குளக்கரை முச்சந்தி நாற்சந்தி தெருமுனை என வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஒரே சுவாமி பிள்ளையார்தான்.
ரூபாய் நோட்டில்

இந்தோனேஷியா நாட்டின் ருபியா நோட்டில் விநாயகப் பெருமானின் திருவுருவம் உள்ளது.
/////

விநாயகர் சதுர்த்தி-விநாயகர் வழிபாடுபற்றி...

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா"
என்று முத்தமிழையும் வேண்டிப் பாடுகிறார் ஔவையார்.
முத்தமிழ் மட்டுமன்று; ஆய கலைகள் அறுபத்தினான்கினையும் ஏய உணர்விக்கின்ற செல்வம் ஐந்து கைகளையும் யானை முகத்தையும் இளம் பிறைச் சந்திரனைப் போன்ற தந்தத்தை உடையவரும் சிவனது திருமகனும் ஞானச் சிகரமாய் விளங்குபவரும் அறிவினில் வைத்து வணங்க வேண்டிய திருவடிகள் உடையவரும்மாகிய விநாயகப் பெருமான்.
"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே"
திருமந்திரம்.
சிவபெருமானின் திருவருட் சம்மதத்தோடு உமையம்மையால் ஆக்கப்பட்ட குழந்தையே விநாயகப் பெருமான். நந்தி(சிவன்) மகன் என திருமந்திரம் சிவபெருமானின் திருப்பிள்ளையை உரைக்கின்றது.
எல்லா உயிர்களுக்கும் தந்தையாகிய சிவனுக்கும் தாயாகிய உமைக்கும் முதல் பிள்ளையாய் பூத்ததால் பிள்ளையார் எனும் செல்லப் பெயருக்கு உரியவர். பார்வதி தேவி நீராடும்வேளையில் தனது பாதுகாப்புக்காக தோற்றுவித்த புதல்வனே விநாயகர் என்றும்
புராணங்கள் கூறுகின்றன. பார்வதிதேவி தான் நீராடும்போது பாதுகாப்புக்காக விநாயகரை உருவாக்க, கஜமுகசூரனின் வதமே சிவனின் திருவருட் சம்மதமாக இருந்தது. ஆற்றங்கரைகளிலும் கிணற்றுக் கரைகளிலும் பிள்ளையார் குடிகொண்டது பார்வதி தேவி நீராடும்போது தனது பாதுகாப்புக்கு உருவாக்கியதன் நிமித்தமே என்பர்.
ஆற்றங்கரைகள் மட்டுமல்ல, அரச மரத்தடியிலும் பிள்ளையாரைக் காணலாம்.
அரச மரத்தில் பதினொரு உருத்திரர்களும் அட்ட வசுக்களும் மும்மூர்த்திகளும் வாசம் புரிவதாக பிரமாண்ட புராணம் கூறுகின்றது. அரச மரத்தினை இறை சிந்தையோடு வலம் வந்தால் சனிசுவரனால் ஏற்படும் இன்னல்கள் சூழமாட்டாது என்பர். ஒருமுறை தசரதனுக்கும் சனிசுவரனுக்கும் போர் மூண்டதாகவும் அதன்போது தசரதன் அரசமரத்தடியில் இருந்து சனிசுவரனை நோக்கி வழிபாடுகளை மேற்கொண்டதனால் சனிசுவரன் அருள்பாலித்ததாகவும் புராண கதைகள் எடுத்து இயம்புகின்றன.
சனிசுவரனிடம் அகப்படாத கடவுள் பிள்ளையார் மட்டுமே! பிள்ளையாரைப் பிடிக்க வேண்டிய தருணம் சனீசுவரனுக்கு வந்ததும் பிள்ளையாரிடம் சென்றபோது, பிள்ளையார் பெருமான்,தான் இன்று ஆய்த்தமாக இல்லை என்றும் ஆதலால் நாளை வருமாரும் வேண்டியவர் தனக்கு நினைவூட்டும் வகையில் "நாளை வருவேன்" என எழுதி வைக்கச் சொல்லுகிறார். எனவே சனீசுவரன் மீண்டும் வரும் வேளைகளில் எல்லாம் எழுதியதைப் படிக்க வேண்டுவார். "நாளை வருவேன்" என சனிசுவரனும் படிக்க, அதுவே அவரது வாக்காக கருதி நாளை வரும்படி மீண்டும் வேண்டுவார். இப்படி, சனிசுவரரிடம் பிடிபட்டு இருக்கவேண்டிய காலத்தை பிடிபடாமல் புத்திசாதூரியமாக கழித்துவிடுவார். பிள்ளையாரிடம் ஏமாற்றம் அடைந்த சனிசுவரன் பிள்ளையாரை வழிபடுபவர்களுக்கு "அதிக இன்னல்களை கொடுக்கேன்" என வாக்குறுதி வழங்கினார்.இதனால் பிள்ளையாரை வழிபடுபவர்கள் சனிசுவரனின் இன்னல்களால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவதில்லை. எனவே சனிசுவரனின் இன்னல்களில் இருந்து விடுவிக்கும் அரச மரமும் பிள்ளையாரும் ஒரே இடத்தில் இருப்பது வழக்கமாயிற்று.

விநாயகரின் நாபி பிரம்ம அம்சம்,முகம் திருமாலின் அம்சம்,கண்கள் சிவமயம்,இடப்பாகம் சக்தி அம்சம், வலப்பாகம் சூரிய அம்சம்.அரச மரம் மும்மூர்த்திகளின் தெய்வாம்சம் நிறைந்த விருட்சமாதலால் மும்மூர்த்திகளின் திருவருள் நிறைந்த பிள்ளையார் அங்கு வீற்றிருந்து அருள்பாலிப்பதும் முறையே.
விநாயகப்பெருமானின் திருவுருவம் ஓம் எனும் ஓங்கார வடிவமானதாகும். "கண்ணெதிரே காணும் இந்த உலகனைத்தும் ஓங்கார வடிவம்.சென்றவை,இருப்பவை,வருபவை எல்லாம் ஓங்காரம்.காலத்தின் மூன்று பகுதிகளைக் கடந்து நிற்கிற ஒன்றும் ஓங்காரமே." என்கிறது மாண்டூக்ய உபநிடதம்.
"வேதங்கள் எந்த வார்த்தையைக் குறிக்கோளாய்க் கொண்டிருக்கின்றனவோ, எதை முன்னிட்டு எல்லா தன்னொழுக்க முறைகளும் (தவம்) மேற்கொள்ளப்படுகிறதோ, எதை நாடி பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கப்படுகிறதோ அந்தக் குறிக்கோளை அடைவதற்கான மந்திரம் ஓம் என்பதாகும்"
"ஓம் என்ற இந்த மந்திரமே இறைவன்.இதுவே கடைசி எல்லை. இம்மந்திரத்தை அறிந்தவன் எதை விரும்பினாலும் அது கிடைக்கும்.இதுவே மிகச் சிறந்த ஆதாரம்.இதுவே மிக உயர்ந்த ஆதாரமும்.இந்த ஆதாரப் பொருளை அறிந்தவன் பிரம்ம லோகத்தில் சிறப்படைகிறான்"
என ஓங்காரம் வேத சாரம் என்பதை தெளிவாக்கிறது கட உபநிடதம். விநாயகரின் வாயின் வலதுபுற ஓரம் தொடங்கி, கன்னம்,தலை வழியாகச் சுற்றிக் கொண்டு இடதுபுறத்தில் தும்பிக்கையின் வளைந்த நுனிவரை வந்தால் ஓம் எனும் வரி வடிவத்தைக் காணலாம்.
ஓம் எனும் பிரணவ மந்திரம் அகரம்,உகரம்,மகரம் எனும் மூன்றெழுந்துகளால் ஆனது. "அ" படைத்தல் தொழிலுக்குரிய பிரம்மாவையும், "உ" காத்தல் தொழிலுக்குரிய திருமாலையும், "ம" அழித்தல் தொழிலுக்குரிய உருத்திரனையும் குறிக்கின்றது. ஓம் எனும் பிரணவ வடிவாய் இருக்கும் பிள்ளையார் மும்மூர்த்திகளின் அம்சமாய் விளங்குகின்றார் என்பது தெளிவாகும்.
எதை எழுதத் தொடங்கினாலும் "உ" என அடையாளம் இட்டு எழுதுவர். "உ" என்பது சிவசக்தியை குறிக்கும் நாதம்,விந்து ஆகியவற்றின் சேர்க்கையே ஆகும். இதனைப் பிள்ளையார் சுழி என்பர். சிவசக்தி இணைந்த நிலையை பிள்ளையாராகக் கருதுவதாலேயே அவ்வாறு அழைப்பர்.
முதல் வழிபாட்டுக்குரியவர் விநாயகப் பெருமான்.சிவ பூதகணங்களின் பதி என்பதால் கணபதி எனப் போற்றப்படுவார்.
கணேசன்,ஏகதந்தன்,சிந்தாமணி,விநாயகன்,டுண்டிராஜன்,மயூரேசன்,லம்போதரன்,கஜானனன்,ஹேரம்பன்,வக்ர துண்டன்,ஜேஷ்டராஜன்,நிஜஸ்திதி,ஆசாபூரன்,வரதன்,விகடராஜன்,தரணிதரன்,சித்தி புத்தி பதி,பிரும்மணஸ்தபதி,மாங்கல்யேசர்,சர்வ பூஜ்யர்,விக்னராஜன் என்று இருபத்தியொரு திருப்பெயர்கள் உடையவர் பிள்ளையார் என புராணங்கள் கூறுகின்றன.
விநாயகரின் பெண் வடிவமே விநாயகியாகும். அதாவது பெண் உருவப் பிள்ளையார். மதுரை,சுசீந்திரம்,திருச்செந்தூர் கோயில்,திருவண்ணாமலை அம்மன் ஆலயத் தூணிலும் ,ஏனைய ஒரு சில இடங்களிலும் தமிழ்நாட்டில் இப்பிள்ளையாரைக் காணலாம். எனினும் வடநாட்டில் ஏராளமான பெண் பிள்ளையார் சிலைகள் காணப்படுகின்றன. சித்தி,புத்தி என மனைவியர் இருவர் பிள்ளையாருக்கு உண்டு என வடநாட்டில் கருதுவர்.
விநாயகப் பெருமானின் திருநடனத்தை கண்டு சிரித்தமையால் சந்திரன் தேயத் தொடங்கினான். விநாயகர் நிந்தை செய்வோருக்கு ஞானத்தில் தேய்பிறை என்பது திண்ணம்.ஞானம் கைகூடாது. கைகூடிய ஞானமும் கைவிட்டுப் போகும் என்க.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது கொன்றைவேந்தனில் ஔவையாரின் வாக்கு.
மாங்கனிக்காய் உலகை சுற்றிவர வேண்டியிருக்கையில் தாயையும் தந்தையையும் சுற்றி வந்து மாங்கனியை வென்றவர் பிள்ளையார். "தாயும் தந்தையுமே உலகு" என்பதையும் சிவசக்திக்குள் உலகம் அடக்கம் என்பதையும் உணர்த்தவே மாங்கனித் திருவிளையாடல் என்க.
முருகனோடு வள்ளி காதல் கொள்ள யானையாக வந்து உதவியவர் பிள்ளையார்.
வள்ளி என்னும் ஆன்மாவை இறைவனாகிய முருகன் தேடி வந்து தன்பால் ஈர்க்க முயலும்போது இறைவனாகிய விநாயகர் உதவுதல் என்பதே இதில் உள்ள தத்துவம் என்க.

பாசங்களில் இருந்து பசுக்களை மீட்டு தன்பால் ஈர்க்கும் பதியின் கருணையை சுட்டுவதே இதன் பொருளாகும். வள்ளியைத் தேடி முருகன் காடுகளிலும் அருவிகளிலும் அலைவது ஆன்மாவை பற்றுகளில் இருந்துவிடுபட இறைவன் எடுக்கும் முயற்சியைக் குறிக்கிறது. விநாயகர் யானையாக வந்து வள்ளியை முருகன்பால் திருப்புவது, இறைவன் ஆன்மாவை பற்றுகளில் இருந்துவிடுபட்டு பதியை நோக்கி நகர இறைவனே சோதனைகளை உருவாக்கி இறைவனை உணர்த்துவான் என்பதாகும்.


மாணிக்கவாசகப் பெருமானுக்கு நரி-பரி என்று பல்வேறு சோதனைகளையூட்டி ஆட்கொண்டமை இந்தத் தத்துவத்தை தெளிவுபடுத்துகிறது. "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்று மணிவாசகராகிய மாணிக்கவாசகர் உருகுவதும் இதனையே ஆகும்.
கஜமுகசூரனின் மனைவியார் உமையை வழிபட்ட காரணத்தால் கஜமுகசூரனுடனான போரில் அவனை வதைக்காது மூசிக வாகனமாக மாற்றி ஏற்றருளியவர் விநாயகப் பெருமான்.
சிவபெருமான் விநாயகரை மறந்து திரிபுர தகனத்திற்கு சென்றதனாலேயே சிவபெருமானின் தேர் அச்சு முறிவுக்கு உள்ளாகியது என்பர். பரம்பொருளான சிவபெருமான் காரிய சித்தி தங்குதடையின்றி கைகூட வேண்டுமென்றால் விநாயகரை வழிபட வேண்டும் என்பதை பாருக்கு அறிவிக்கவே அவ்வாறு திருவருட்சம்மதம் பூண்டார் எனலாம்.
"நற்றவா உன்னை நான் மறக்கினுஞ் சொல்லுநா நமசிவாயவே" என்கின்றார் சுந்தர மூர்த்தி நாயனார். அதுபோல் பிள்ளையாரைக் கண்டதும் மனம் மறந்தாலும் உடல் அவயவங்கள் தோப்புக்கரணம் போட மறக்காது என்பது மனதார யாவரும் உணர்ந்ததே! கஜமுகாசூரனிடமிருந்து தேவர்களை மீட்ட பிள்ளையாருக்கு செலுத்தும் நன்றியுணர்வாக அசூரன் முன்னேயிட்டு வந்த தோப்புக்கரணத்தை, தேவர்கள் பிள்ளையார் முன் இட விரும்பி வரமாக பிள்ளையாரிடம் வேண்டினர். அசூரனிடம் இருந்து தேவர்களை மட்டுமா மீட்டார்? உலகையே மீட்டார் என்பதாலேயே நாமும் தோப்புக்கரணம் நன்றியுணர்வுடன் போடும் பழக்கம் உருவாயிற்று.
மகாவியாச முனிவர் மகாபாரதத்தைப் சொல்லச்சொல்ல எழுதிக் கொண்டிருந்த விநாயகப் பெருமானின் எழுத்தாணியின் முனை மழுங்க, தனது வலது தந்தத்தை முறித்து அதையே எழுத்தாணியாகப் பயன்படுத்தி மகாபாரதத்தை தொடர்ந்து எழுதினார். அதேபோல் ஒருமுறை பரசுராமர் சிவபெருமானைத் தரிசிக்க கயிலாயம் வந்தபோது, இடைமறித்த விநாயகருடன் போர் தொடுத்தார். அப்போது சிவபெருமானால் அளிக்கப்பட்ட பரசு ஆயுதத்தை விநாயகப் பெருமான் மீது ஏவ அது சிவாம்சம் பொருந்திய ஆயுதம் என்பதால் அதை எதிர்ப்பின்றி தனது இடது தந்தத்தால் தாங்கியபோது, அவரது இடது தந்தமும் உடைந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு இருதந்தமும் இல்லாத நிலையில் அருள்பாலிக்கின்ற விநாயகரை திருவாரூர் தியாகேசர் கோயிலில் பாதிரி மரத்தடியில் காணலாம்.

மாணிக்கவாசகப் பொருமான் சிதம்பரத்துக்கும் தில்லைக் காளியம்மன் ஆலயத்திற்கும் இடையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சதுர்முடி விநாயகர் ஆலயத்தை வழிபட்ட பின்னரே திருவாசகத்தைப் பாடினார் என்கின்றது அவ்வாலயத்துக்குரிய கர்ணபரம்பரை கதை.
சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தில் வாழ்ந்த ஔவையார் (பல ஔவையார்கள் உண்டு.), சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை , குதிரை மீது ஏறிக்கொண்டு திருக்கயிலைக்குச் சென்று கொண்டிருக்க, விநாயகர் பூசையை செய்து விநாயகர் அகவலைப் பாடி, விநாயகப்பெருமானின் துதிக்கையின் உதவியுடன்(துதிக்கையால் ஔவையாரை தூக்கி கைலாயத்தில் இறக்கிவிட்டார்) அவர்களுக்கு முன்னரே உடலுடன் திருக்கயிலையை அடைந்தார்.விநாயக உபாசனை, குண்டலினி யோகம் ஆகியவற்றைத் தமிழகத்தில் பிரபலப்படுத்துவதில் இவ் ஔவையார் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார் என்பர் தமிழறிஞர்கள்.
"ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே." என்று ஆத்தி சூடியிலும் (ஆத்திசூடி" என்ற பெயர் "ஆத்திமாலையை அணிந்திருப்பவன்" என்ற பொருளைத் தரும்)"கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே" என்று கொன்றை வேந்தனிலும் ("கொன்றைவேந்தன்" - சிவன்; அவனுடைய "செல்வன்" - விநாயகன். ) "வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு" என்று மூதுரையிலும் "பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் " என்று நல்வழியிலும் பிள்ளையாரை கடவுள் வாழ்த்தில் பாடும் ஔவையார்; பிள்ளையாருக்கு,
"சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!
............."
என்று "விநாயகர் அகவல்" என்னும் பாமாலையையும் சூட்டியுள்ளார்.
முருகன் மீது தமிழை திருப்புகழாக்கி சூட்டிய அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பிள்ளையாருக்கு உகந்த இருபத்தியொருவகையான படையல்(நிவேதன) பொருட்களை பட்டியல் இடுகின்றார்.
"இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடனெய்
எட்பொரிய வற்று வரையிள நீர்வண்
டெச்சில் பயறப்பவகை பச்சரிசி பிட்டு
வெளரிப்பழமிடிப் பல்வகை தினிமூலம்
மிக்க அடிசிற் கடலை பட்சணமெனக் கொளொரு
விக்கின சமார்த்தனெனு மருளாழி
வெற்ப குடி லச்சடிவ விற்பரம ரப்பரருள்
வித்தக மருப்புடைய பெருமாளே"
இக்கு(கரும்பு), அவரைக்காய், நற்கனிகள்,சர்க்கரை,பருப்பு, நெய்,எள்,பொரி,அவல்,துவரை,இளநீர், வண்டு எச்சில்(தேன்),பயறு,அப்பம்,பச்சரிசி,அரிசி மாவினால் செய்யப்பட்ட பிட்டு, வெள்ளரிப்பழம், இடிப்பல் வகை(அரிசியை இடித்து செய்யப்படும் மோதகம்) தனி மூலம்(ஒப்பற்ற கிழங்குகள்) மிக்க அடிசில்(சிறந்த உணவு வகைகளான சித்ரான்னம்),கடலை என விநாயகப் பெருமானுக்கு உவந்த நிவேதனப் பொருட்களை திருப்புகழில் தீட்டியுள்ளார் அருணகிரிநாதர்.
முருக பக்தரான அருணகிரிநாதர் ஏன் பிள்ளையாரின் படையலுக்கு ஏற்ற பொருட்களை பாடலாக்க வேண்டும் என ஐயம் எழலாம். வயலூர் எனும் தலத்திற்கு வந்த அருணகிரிநாதருக்கு எதைப்பற்றி பாடுவதென்று உணரமுடியாது குழப்பம் ஏற்படவே திருப்புகழை தொடர்ந்து பாட முடியாமல் போயிற்று. அப்போது அங்கு எழுந்தருளி அருள்பாலிக்கின்ற பொள்ளாப் பிள்ளையார்(உளியால் செதுக்கப்படாது தானாகத் தோன்றிய பிள்ளையார்) ஆறுமுகன் புகழைப் பாட வழிகாட்டினார். ஆதலால் ஐம்முகனுக்கு நன்றி செலுத்தவே பிள்ளையார்மீதும் திருப்புகழைப் பாடிப்பரவசம் அடைந்தார்.
எருக்கம் பூ, அருகம் புல் போன்ற எளிய பொருட்களால் வழிபடக் கூடியவனும் ஆகம முறை, ஆகமம் அற்ற முறை என இருமுறைகளிலும் எழுந்தருளியிருப்பவனும் கோமயமும் அருகம்புல்லும் இருந்தாலே திருவுருவம் தாங்கும் தன்மையினால் ஏழை எளியவர்களின் குடிசைகள் தொட்டு செல்வந்தர்களின் மாளிகைகள்வரை எளிமையாக எழுந்தருளக்கூடியவனுமாக விளங்குபவன் விநாயகப் பெருமான்.
அருகம்புல்லுக்கு இணையானது என்று வன்னி மர இலையும் மந்தார மலரும் கருதப்படுகின்றது. இரு திருடர்கள் வன்னி மரத்தின் மேலேறி நின்று சண்டையிட்டு கிழே விழுந்து மரணித்தபோதும், அவர்கள் சண்டை செய்கையில் உதிர்ந்த வன்னி மர இலைகள் கிழே இருந்த விநாயகப் பெருமான் மீது வீழ்ந்த காரணத்தால் தேவலோக வாழ்வை பெற்றனர் என்று ஓர் கதையும் உண்டு.
காசியப்ப முனிவரின் யாகத்தினைக் குழைக்க முயன்ற அசுரனை யாகத்திற்காக வைத்திருந்த கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை எடுத்து அவன் மீது வீசி அவ்வசூரனை அழித்தார். யாகத்திற்கு ஏற்பட்ட இடையூறை தேங்காயைக் கொண்டு அழிந்ததனால், விக்கினங்கள் தீர்க்கும் விக்னேசுவரன் முன்னால் "இடர்களை உடைத்து காப்பான்" என்பதை உணர்த்தும் பொருட்டு தேங்காய் உடைக்கும் பழக்கம் உண்டாயிற்று.
மிகுந்த வெப்ப தேகம் கொண்ட அனலாசுரன் என்ற அசுரனை விழுங்கியதால் விநாயகரின் திருமேனி வெப்பத்தால் தகித்தது.இந்த வெப்பத்தைப் போக்கி விநாயகரை குளிர்வித்த மகிமையுடையது அருகம்புல். அகரம் புல் என்பதுவே அருகம்புல் என வழங்கலாயிற்று என்பர். இவ் அருகம்புல் விநாயகரை வழிபட எளிய பூசைப் பொருளானதும் இதன் பொருட்டே!
பிள்ளையாருக்கும் அனந்தேசர் என்பவரின் பிள்ளையாகிய நம்பியாண்டார் நம்பிக்கும் உள்ள பந்தம் மூலம் திருமுறைகளை சைவத்தமிழ் உலகுக்கு அளித்த அருமை பிள்ளையாரின் பெருமையாகும்.அனந்தேசர் என்ற அந்தணர் திருநாரையூரில் உள்ள சுயம்பு பிள்ளையாராகிய பொள்ளாப் பிள்ளையாருக்கு பூசை செய்து வந்தார். சுவாமிக்குப் படைக்கும் நைவேத்தியத்தை பக்தர்களுக்கு கொடுத்துவிட்டு வீட்டிற்கு செல்வது அவரது வழக்கம். வீட்டிலிருக்கும் அவரது மகன் (சிறுவன்) நம்பியாண்டார்நம்பி அவரிடம் நைவேத்தியத்தை கேட்கும்போது, "விநாயகர் சாப்பிட்டுவிட்டார்" என சொல்லிவிடுவார். ஒருசமயம் அனந்தேசர் வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், மகனை பூசை செய்ய அனுப்பினார். அவன் விநாயகருக்கு நைவேத்தியம் படைத்தான். தந்தை சொன்னபடி, விநாயகர் அதை சாப்பிடுவார் என நினைத்து காத்திருந்தான். ஆனால், விநாயகர் சாப்பிடவில்லை. எவ்வளவோ மன்றாடி மனமுருகிப் பார்த்தான். ஆனாலும், நைவேத்தியம் அப்படியே இருந்தது. இதனால் சிறுவன் நம்பி, சுவாமி சிலையில் முட்டி நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்ளும்படி முறையிட்டான். விநாயகர் அவனுக்கு காட்சி தந்து நைவேத்தியத்தை எடுத்துக் கொண்டார். இதை அறிந்த தந்தை அனந்தேசர் "நம்பி உண்டுவிட்டு பொய் சொல்கிறான் பிள்ளையார் எப்படி சாப்பிடுவார்?" என ஐயம் கொண்டு அதட்டியபோது நம்பி பிள்ளையாரே உண்டார் என பதிலளிக்கவே, மறுநாளும் நம்பியையே பூசைக்கு அனுப்பி சோதித்தபோது பிள்ளையார் உண்பதை உணர்ந்து நம்பி பொய்யுரைப்பதாக தவறாக கருதி தண்டித்ததை எண்ணி வருந்துகிறார். இப்படி நம்பியுடன் விளையாடியதால் "பொல்லாப்"பிள்ளையார் என்றும் இப்பிள்ளையார் வழங்கப்படலானார்.
நம்பியாண்டார் நம்பிக்கு வேதாகமங்களை ஓதாமல் உணர்வித்த இப்பொள்ளாப் பிள்ளையாரை "திருமுறை காட்டிய விநாயகர்" என்றும் அழைப்பர். திருமுறைகள் இருக்கும் இடத்தை அசரீரியாக நம்பியாண்டார் நம்பிக்கு கூறி,உலகுக்கு கிடைக்க வழிசெய்தமையால் இக்காரணப் பெயரும் உருவாயிற்று.
"பொள்ளா" என்றால் உளி கொண்டு செதுக்காத சுயம்பு என்று பொருள் - இது காழியூரார் அளித்த விளக்கம்.
கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணத்தில்,"கேடில்பிதா உரைத்தமொழிப் படியேஅந்தி
இளமதிச் செஞ்சடைப் பொல்லாப் பிள்ளையாரை
ஏத்திஆ ராதிப்பான் இனிதின் ஏகி
உளமலி அன்பொடு திருமஞ் சனமுன்னாகும்
உரியஎலாஞ் செய்துநிவே தனமுன் வைத்து"
என்று "பொல்லாப் பிள்ளையார்" எனக் குறிப்பிடுதல் நம்பியாண்டார் நம்பிக்கு செய்த திருவிளையாடல்களை கருத்தில் கொண்டே என்க.
காகமாய் வந்து அகத்தியரின் கமண்டலத்தை தட்டிவிட்டு காவேரியை பெருக்கெடுத்து ஓடச் செய்தமை, விபூடணனின் கைகளில் இருந்த திருவரங்கப் பெருமானை காவேரிக் கரையில் எழுந்தருளச் செய்தமை என பிள்ளையார் பெருமைகள் ஏராளம்.
"பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் ஆற்றங்கரை மீதிலே அரசமர நிழலிலே வீற்றிருக்கும் பிள்ளையார்" பெருமைகளை மனதில் நிறுத்தி விநாயகர் சதுர்த்தியை அநுட்டித்து சிவஞானம் சித்திக்க வேண்டுவோமாக.
"பிடியத னுருவுகை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வெளி வலமுறை இறையே"
என்கின்ற ஞானக்குழந்தை திருஞானசம்பந்தனின் தமிழால் பார் முழுதும் அமைதியும் சமாதானமும் உண்டாக பிரார்த்தித்துக் கொள்வோம்.

///
 விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு!
எப்படி வந்தது யானை முகம் ?
விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார். இவர் யானை முகத்தை தனக்கு வைத்திருக்கிறார். அநேகமாக, எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது? எல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான். கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்; கேட்ட வரம் கிடைத்தது. ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு. அவன் நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான்.
தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர். அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, பிள்ளையார் என பெயர் சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா? எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார். அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம். அந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள். சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.
யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத்தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது. விநாயகருக்கு, சுமுகர் என்ற பெயருண்டு. ச என்றால் மேலான அல்லது ஆனந்தமான என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர். யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார். விநாயகர் சதுர்த்தி நன்னாளில், ஓம் கணேசாய நம என்ற மந்திரத்தை, 108 முறை சொல்லி, அருகம்புல் அணிவித்து வழிபட்டால், அவரது நல்லருளைப் பெறலாம்.
பெண் உருவ பிள்ளையார்
பிள்ளையாரைப் பெண்வடிவில் காணும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது. பெண்மைக் கோலம் கொண்ட பிள்ளையார் கணேசினி என்றும், கஜானனி என்றும் வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் தூண் ஒன்றில், ஒரு காலை ஊன்றியும், மற்றொரு காலை மடக்கியும் நர்த்தனம் ஆடும் இவர், பெண்ணுருக் கொண்டு இருகரங்களில் அபய, வரத முத்திரைகளைக் கொண்டு நிற்கிறார். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சுவாமி சன்னதி நுழைவு வாயிலின் வலது பக்க தூணில் கணேசினியின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவரது கால்கள் புலிக்கால்களாக அமைந்திருப்பதால் வியாக்ரபாத கணேசினி என அழைக்கப்படுகிறார்.
பிள்ளையார் சுழி தேவதைகள்!
பிள்ளையார் சுழியில் உள்ள அகரத்திற்குப் பிரம்மன், உகரத்திற்குத் திருமால், மகரத்திற்கு ருத்திரன், பிந்துவிற்கு மகேசன், நாதத்திற்குச் சிவன் என்று குறிப்பிடுகின்றனர். எனவே, ஐந்து தெய்வ வணக்கமே பிள்ளையார் சுழி என்பர்.
விநாயகரும், சர்ப்பமும்!
விநாயகர் உதரவந்தம் பாம்பு. அணி பாம்பு, பூணூல் பாம்பு எனத் தம் உடலில் சர்ப்ப அணிகலன் கொண்டுள்ளார். பிள்ளையார்பட்டியில் லிங்கமும் பாம்பும், திருப்பரங்குன்றத்தில் கரும்பும், பவானியில் வீணையும், மானாமதுரையில் சங்கும், சங்கரன்கோவிலில் பாம்பாட்டிச் சித்தர் பீடத்தில் நாகத்தையும் கையில் கொண்டுள்ளார். தேனியில் அமிர்த கலசம் ஏந்தி காட்சியளிக்கிறார்.
பிள்ளையார் பிரார்த்தனை பலன்கள்!
மண்ணால் செய்த விநாயகரை வழிபட்டால், நற்பதவி கிடைக்கும். புற்று மண்ணில் உருவாக்கப்பட்ட விநாயகரை வணங்கினால், லாபம் கிட்டும்.உப்பால் உருவான விநாயகரை வணங்கிட எதிரிகள் அழிவர்.கல்லால் அமைந்த விநாயகரை வழிபட, சகல பாக்கியங்களும் பெறலாம்.


விநாயகர் - சில தகவல்கள்!
தமிழ்நாட்டில் முதன் முதலாக தங்கத் தேரில் பவனி வந்த பிள்ளையார் என்ற பெருமையைப் பெற்றவர் கோவை ஈச்சனாரிப் பிள்ளையார். இங்குள்ள தேர், ஏழரை கிலோ தங்கம், 18 கிலோ வெள்ளியால் செய்யப்பட்டது.
இழந்த பதவிகளை மீண்டும் பெற...
சிலருக்கு தொழிலில் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம்; சிலருக்கு பதவி இழப்பு ஏற்பட்டிருக்கலாம்; சிலருக்கு சொத்து இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம். இவர்கள், நடனமாடும் தோற்றத்தில் இருக்கும் நர்த்தன விநாயகரை அணுகி, அவருக்கு அபிஷேகம் செய்து, இனிப்பு நைவேத்யம் செய்து, வழிபட்டு வந்தால், இழந்தவைகளை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.

வியப்பூட்டும் விநாயகர்!
வித்தியாசமான விநாயகர்: கை - தொழில், கும்பம் ஏந்திய கை - ஆக்கும் தொழில், மோதகம் ஏந்திய கை - காக்கும் தொழில், அங்குசம் ஏந்திய கை - அழிக்கும் தொழில், பாசம் ஏந்திய கை -மறைத்தல் தொழில். விநாயகருக்கு விருப்பமான நிவேதனம்: மோதகம், அப்பம், பழம், பொரி கடலை, கரும்பு, மா, பலா, வாழை, நாகப்பழம், விளாம்பழம், தேங்காய், இளநீர், அவரை, துவரை, சுண்டல், கொய்யா, புட்டு, பொங்கல், எள் உருண்டை, வடை, பாயசம், தேன், கல்கண்டு, சர்க்கரை, தினை மாவு, பாகு, அதிரசம் முதலியன. பன்னிரெண்டு விநாயகர்: வக்ரதுண்டர், சிந்தாமணி, கணபதி, கஜானை கணபதி, விக்ன கணபதி, மதுரேச கணபதி, துண்டு கணபதி, வல்லப கணபதி, தூப கணபதி, கணேசர், மதோத்கட கணபதி, ஹேரம்ப கணபதி, விநாயகர். விநாயகர் என்ற சொல்லுக்கு சிறந்த தலைவர் என்று பொருள். வி - சிறந்த, நாயகர் - தலைவர். விநாயகரை உருவாக்க: கருங்கல், சலவைக்கல், பளிங்குக்கல், சுத்தி, வெள்ளை எருக்குவேர், பஞ்சலோகம், வெள்ளி, செம்பு, பொன், தந்தம், மஞ்சள், சந்தனம், சர்க்கரை, பசுஞ்சாணம், முத்து, பவளம், மண், விருட்ச மரங்கள் முதலியன.


கணபதியின் 16 வடிவங்கள்
விநாயகரை 16 வடிவங்களில் அலங்கரிக்கலாம். இந்த அமைப்பில் வணங்குவதால் மாறுபட்ட பலன்கள் நமக்கு கிடைக்கும்.
1. பாலகணபதி: மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும் கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.
2. தருண கணபதி: பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், தெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக்கைகளில் ஏந்தி, சூரியோதய கால
ஆகாயத்தின் செந்நிற மேனியுடைய இளைஞனாகக் காட்சி தருபவர். இவரை
வழிபடுவதால் முகக்கலை உண்டாகும்.
3. பக்த கணபதி: தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினாலான பாயாசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தி நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடன் காட்சியளிப்பவர். இவரை வழிபடுவதால் இறை வழிபாடு உபாசனை நன்கு அமையும்.
4. வீர கணபதி: தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, ரவுத்ராகாரமாக வீராவேசத்தில் செந்நிற மேனியுடன் விளங்கும் ரூபத்தை உடையவர். இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.
5. சக்தி கணபதி: பச்சைநிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்தூர வண்ணம் கொண்டவர். இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.
6. துவிஜ கணபதி: இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சயமாலையும், தண்டமும், கமண்டலமும் ஏந்தியவர். வெண்ணிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும்.
7. சித்தி கணபதி: பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றைக் ஏந்தி ஆற்றலைக் குறிக்கும். சித்தி சமேதராகவும் பசும்பொன் நிறமேனியானவரான இவருக்குப் பிங்கள கணபதி என்ற பெயர் வந்தது. வழிபடுவதால் சகல காரியம் சித்தியாகும்.
8. உச்சிஷ்ட கணபதி: வீணை, அட்சமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார். கருநீல வண்ணமேனியுடைய இவரை வழிபடுவதால் வாழ்க்கை உயர்வு, பதவிகளை பெறலாம்.
9. விக்னராஜ கணபதி: சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடாரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி ஸ்வர்ண நிற
மேனியுடன் பிரகாசமாக விளங்குபவர். இவரை வழிபடுவதால் விவசாயம் விருத்தியாகும்.
10. க்ஷிப்ர கணபதி: கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களிலும் ரத்தினங்களை பதித்த கும்பத்தை தனது துதிக்கையிலும் ஏந்திய செம்பருத்தி மலரைப் போன்ற சிவந்த மேனியுடைய இவர் சீக்கிரமாக அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.
11. ஹேரம்ப கணபதி: அபய ஹஸ்தங்களுடன் (கரங்கள்), பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடாரி, இரும்பினாலான வலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி, பத்து கைகளும், ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருகிறார். நேபாள நாட்டில் காணப்படும் இவர் திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது முகத்துடனும் விள
ங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகள் இவற்றில் புகழ் பெறுவார்கள்.
12. லட்சுமி கணபதி: பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி தன் இருபுறமும் இரு தேவிகளை அணைத்துக் கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.
13. மகா கணபதி: பிறை சூடி, மூன்று கண்களுடன் தாமரை மலர் ஏந்தி தன் சக்தி நாயகராகிய வல்லபையை அணைத்த வண்ணம் கைகளில் மாதுளம்பழம், கதை, கரும்பு, சக்கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும் துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிகப்புநிற மேனியாய் விளங்குபவர். இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும்.
14. புவனேச கணபதி: விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால் அசுரனது சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன் ஓடினான் கஜமுகாசுரன். அவன் மீது பாய்ந்து ஏறி அவனை தன் வாகனமாக்கிக் கொண்ட இவர் செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார். இவரால் விவகாரம், வியாஜ்ஜியம் வெற்றியாகும்.
15. நிருத்த கணபதி: மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதகம் இருக்கும் துதிக்கையை உயர்த்தி ஒற்றைக்காலில்நிருத்த கணபதியாகக் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.
16. ஊர்த்துவ கணபதி: பொன்னிற மேனியுடைய இவர் எட்டு கைகள் கொண்டவர். தேவியை தன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.
ஐங்கரன்- பெயர்க்காரணம்
இறைவன் செய்யும் தொழில்கள் பஞ்சகிருத்யங்கள் எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். விநாயகர் நான்கு கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டுள்ளவர். அதனால் ஐங்கரன் என்று பெயர் பெற்றார். நாற்கால் பிராணிகள் முன்னங்கால்களையே தம் கைகளாக பயன்படுத்துகின்றன. ஆனால் யானை மட்டும் இதில் விதிவிலக்கானது. யானையின் தும்பிக்கை, கையாகவும், மூக்காகவும், வாயாகவும் பயன்படுகிறது. விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம், பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை ஆகியவையும், ஐந்தாவது கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும் வைத்திருப்பார். இதில் எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும், கொழுக்கட்டை காத்தல் தொழிலையும், அங்குசம் அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில் ஏந்தியிருக்கும் அமுதகலசம் அருளலையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்.
ஊத்துக்குளி நர்த்தன விநாயகர்
விநாயகரது, நர்த்தனக் கோலம் (நடனமாடுவது) மிகவும் அபூர்வமான ஒன்றாகும். இப்படி ஒரு அபூர்வ கோலத்தை திருப்பூர் அருகேயுள்ள ஊத்துக்குளி பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் கோயிலில் காணலாம். இக்கோயிலிலுள்ள விநாயகர் தனது வாகனமான மூஞ்சூறு மீது நடனமாடும் கோலத்தில் காட்சியளிக்கிறார். இதனால் நர்த்தன விநாயகர் என்றழைக்கப்படுகிறார். விநாயகர் சன்னதி முன் மூஞ்சூறு இருப்பது வழக்கம். ஆனால் ஊத்துக்குளி பெரியநாயகி கைலாசநாதர் கோயிலிலுள்ள விநாயகர் மூஞ்சூறு மீது நடனமாடும் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது விசேஷமாகும்.
பிள்ளை மனம் கொண்டவர் வெள்ளை குணம் உடையவர்
விநாயகருக்குப் பலவிதமான பெயர்கள் வழங்கப்படுகின்றன. அப்பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் உண்டு.
கணபதி பூதகணங்களுக்கெல்லாம் தலைவன்
விக்னேஸ்வரன் தடை அனைத்தையும் போக்குபவர்
லம்போதரன் தொந்தி உடையவர்
ஐங்கரன் ஐந்து திருக்கரங்களைக் கொண்டவர்
வக்ரதுண்டன் வளைந்த துதிக்கை பெற்றவர்
பிள்ளையார் குழந்தைபோல் வெள்ளைமனம் கொண்டவர்
ஒற்றைக்கொம்பன் ஒரு கொம்பு உடையவர்
ஹேரம்பர் திக்கற்றவர்களுக்கு உதவுபவர்
விநாயகர் மேலான தலைவர்
தந்திமுகன் தந்தத்தை பெற்றவர்
தந்தையைப் போல் பிள்ளை
தாயைப் போல பிள்ளை என்பது தான் உலக வழக்கு. ஆனால், தன் தந்தை சிவபெருமானின் தோற்றத்தை விநாயகப்பெருமான் ஒத்திருப்பார். இருவரும் வேறு வேறு அல்லர். சிவபெருமானின் மற்றொரு வடிவமே விநாயகப்பெருமான் என்பர்.
1) சிவபெருமானைப் போலவே விநாயகப்பெருமான் சிவந்த மேனியை உடையவர்
2) சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பது போல ஹேரம்ப கணபதிக்கு 5 தலைகள்
3) இருவருக்கும் மூன்று கண்கள்
4) தலையில் இருவரும் மூன்றாம் பிறையணிந்திருப்பர்
5) இருவரும் பாம்பை ஆபரணமாக அணிந்திருப்பர்
6) தந்தையைப் போல இவரும் ஐந்தொழில்களைச் செய்வர்
7) இருவரும் நடனக்கோலத்தில் காட்சி தருவர்(நடராஜர், நர்த்தன கணபதி)
8) பார்வதி சிவனின் இடப்பாகத்தில் இருப்பது போல், வல்லபை விநாயகரின் இடப்பக்கம் இருப்பாள்.

எலி மீது யானை அமர்ந்தது எப்படி?
யானை வடிவம் கொண்ட விநாயகர் எப்படி ஒரு எலியின் மீது அமர முடியும் என்ற சந்தேகம் எழுவது இயல்பே. ஒரு பெரிய உருவம் ஒரு சிறிய விலங்கின் மீது ஏறி அமர்கிறது என்று இதற்கு பொருள் கொள்ளக்கூடாது. அணுவுக்கு அணுவாகவும், பெரிதுக்கும் பெரிதானவனுமாக இறைவன் இருக்கிறான் என்பதே இதன் தத்துவம். இறைவனை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது. பார்வையில்லாத ஐவர் ஒரு யானையைத் தொட்டுப்பார்த்தனர். ஒருவர் யானையின் வயிறைத் தொட்டு, அது சுவர் போல் இருப்பதாகச் சொன்னார். இன்னொருவர் அதன் வாலைத் தொட்டு கயிறு போல் இருக்கிறதென்றார். மற்றொருவர் காலைத் தொட்டு தூண் போல் உள்ளதென்றார். ஒருவர் துதிக்கையைத் தொட்டு உலக்கை போல் இருக்கிறதென்றார். ஒருவர் காதைத் தொட்டு முறம் போல் உள்ளதென்றார். இதில் எதுவுமே உண்மையில்லை. அதுபோல், இறைவனையும் இன்னாரென வரையறுத்துச் சொல்ல முடியாது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது. எலி மீது யானை ஏறுவதென்பது எப்படி கற்பனைக்கு கூட சாத்தியமில்லையோ, அது போல் இறைவனும் நம் கற்பனைகளையெல்லாம் கடந்தவன் என்பதே இதன் தத்துவம்