திங்கள், 19 ஆகஸ்ட், 2019

உலக புகைப்பட தினம் ஆகஸ்ட் 19. (World photograph day)


உலக புகைப்பட தினம் ஆகஸ்ட் 19. (World photograph day)

உலக புகைப்பட நாள் (World photograph day) புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

வரலாறு

20ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றை மாற்றியுள்ளன. உதாரணமாக, சீனவீரர்களின் ராணுவ பீரங்கியை எதிர்த்து நின்ற டேங்க் மேன், வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், 1994ம் ஆண்டு, சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த குழந்தையின் போட்டோ ஆகியவற்றை சொல்லலாம்.

லூயிஸ் டாகுரே

19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், லூயிசு டாகுவேரே என்பவர், "டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 19ம் தேதி , பிரான்ஸ் நாட்டு அரசு "டாகுரியோடைப்' செயல்பாடுகளை ""ப்ரீ டூ தி வேர்ல்டு என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் இன்றைய தினம் உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.

முதல் புகைப்படம்

1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் முதல் நிலையான நவீன புகைப்படத்தை எடுத்தார். இந்த புகைப்படம் நாளடைவில் அழிந்தது. இதன் பின், 1839ம் ஆண்டு லுõயிஸ் டாகுரே பாரிசில் உள்ள போல்வர்டு கோயிலை அருகில் உள்ள தெருவை புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இது.

புகைப்பட விருதுகள்

சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டு தோறும் பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்திரிக்கை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு "வேர்ல்டு பிரஸ் போட்டோ' ,"டைம்' இதழ் மற்றும் புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

உலக கொசு ஒழிப்பு தினம் ஆகஸ்ட் 20


உலக கொசு ஒழிப்பு தினம் ஆகஸ்ட் 20

உலகில் முக்கியமாக 3 வகை கொசுக்கள்தான் கொடிய நோய்களை பரப்புகிறது. அனோபிலஸ் என்ற கொசு மலேரியா காய்ச்சலையும், ஏடிஸ் ஏஜிட்டி என்ற கொசு டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோயையும், கியூலக்ஸ் என்ற கொசு யானைக்கால் நோயையும், ஜே.இ. என்ற கொசு ஜப்பானிய மூளை காய்ச்சலையும் பரப்புகிறது. என கடந்த 1897ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி சர் ரெனால்ட் ராஸ் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். அந்நாளே கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


world mosquito day today 1987 incident reason for this day

இன்று உலக கொசு ஒழிப்பு நாள்!!! 1987-ல் நடந்த இந்த விஷயம்தான் இந்நாள் உருவாக காரணம்...தெரிஞ்சுக்க வாசிங்க...

உலகிலேயே மொத்தமாக மூன்று விதமான கொசுக்கள் மட்டும்தான் மிகக் கொடிய நோய்களை பரப்புகின்றன.

உங்களுக்குத் தெரியுமா?

உலகிலேயே மொத்தமாக மூன்று விதமான கொசுக்கள் மட்டும்தான் மிகக் கொடிய நோய்களை பரப்புகின்றன. அவை: மலேரியாவைப் பரப்பும் 'அனோபிலஸ்' கொசு, டெங்கு மற்றும் சிக்கன் குனியாவை பரப்பும் 'ஏடிஸ்' கொசு மற்றும் யானைக்கால் நோயைப் பரப்பும் கியூலக்ஸ் கொசு.


உலக கொசு ஒழிப்பு தினம் எப்படி வந்தது?

கடந்த 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி சர் ரெனால்ட் ரோஸ் என்ற விஞ்ஞானி பெண் கொசுக்கள் மனிதனின் இரத்தத்தைக் குடித்து மலேரியாவைப் பரப்புகிறது என்றும் ஜே.இ. (ஜப்பான் என்சப்பாலிட்டிஸ்)  என்ற கொசு ஜப்பானிய மூளைக் காய்ச்சலைப் பரப்புகிறது என்று கண்டறிந்தார். அவர் கண்டுபிடித்த நாளே வருடா வருடம் உலக கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த சந்தேகம் உங்களுக்கு வந்துச்சா?

பெண் கொசுக்கள் இரத்தம் குடிக்கும் என்றால் ஆண் கொசுக்கள் என்ன பண்ணும் தெரியுமா? ஆண் கொசுக்கள் மலர்களில் இருந்து தனது உணவைப் பெற்றுக் கொள்ளும் திறன் வாய்ந்தவை.

யானைக்கால் வியாதிக்கு மருந்து இருக்கிறதா?

யானைக்கால் வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கடற்கரைப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கியூலெக்ஸ் கொசுக்களால் ‘பைலேரியா’ எனப்படும் யானைக்கால் வியாதி உருவாகிறது. இவ்வகைக் கொசுக்கள் இரவில்தான் கடிக்கும். இவை சாக்கடை, வயல்வெளி போன்ற இடங்களில் இனப்பெருக்கம் செய்யும்.

உலக மனிதநேய தினம் World Humanitarian Day (WHD). ஆகஸ்ட் 19


உலக மனிதநேய தினம் World Humanitarian Day (WHD). ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

உலகளாவிய ரீதியில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், நோய், போஷாக்கின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பல இலட்சம் மக்களை நினைவுகூரும் வகையிலும், துன்பத்திலிருந்து விடுவிக்கப் படுவோருக்காகப் பணியாற்றுவோர் மற்றும் இப் பணிகளின் போது கொல்லப்பட்டோர், காயமடைந்தோர் ஆகியோரையும் நினைகூரும் வகையிலும் இத்தினத்தைஅனுஷ்டிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

2008 டிசம்பர் 11 ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் A/RES/63/139 இலக்கத் தீர்மானப்படி இத்தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கமைய முதலாவது உலக மனித நேய தினம் World Humanitarian Day ஆகஸ்ட் 19 2009 இல் கொண்டாடப்பட்டது.

இத்தினத்தை நாடுகளின் அரசாங்கங்களும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும், அரச சார்பற்ற நிறுவனங்களும், மனித நேயம் கொண்டவர்களும் இணைந்து உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையைப் பொறுத்தவரை மோதல் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மேற்கொண்டுள்ள பணிகளில் எட்டிய வெற்றிகள் மற்றும் சவால்களை வெளிப்படுத்தும் தருணமாக இத்தினம் விளங்குவதாக ஐ.நா. தகவல் நிலையம் 2010 இல் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

உலக வரலாற்றில் மனிதகுலம் பல தடைகளைத் தாண்டி முன்னேறியுள்ளது. ஆரம்பத்தில் கடல் கொந்தளிப்பு, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கையின் சீற்றங்களிலிருந்து தம்மைக் காத்துக்கொண்டு மனிதன் வளர்ந்தான். அடுத்தபடியாக, காட்டுவாழ்க்கையில் புலி, கரடி, சிங்கம், பாம்பு போன்ற கொடிய மிருகங்களின் தாக்குதல்களைச் சமாளித்து வாழக் கற்றுக் கொண்டான். மனிதன் குடும்பமாக வாழத்தலைப்பட்டதும் சமூக வாழ்வில் புதுவித ஆபத்து மனிதனுக்கு வந்தது. மனிதர்களிலேயே பலர் மிருகங்களாக மாறி, மற்றவர்களை இனத்தின் பெயரால், நிறத்தின் தன்மையால், தேசத்தின் பெயரால், மதத்தின் பெயரால் தாக்கத் தலைப்பட்டனர். இவ்வாறு மனிதர்களால் மனிதர்களுக்குத் தரப்படும் கொடுமைதான் இன்றைய காலம் வரை நீடித்து வருகிறது.

ஆயினும் ஒவ்வொரு காலகட்டத்திலும், அன்போடு, அருளோடு, தன்னலமற்ற பொதுநலத்துடன், மனித நேயத்துடன் மற்ற உயிர்களையும் காத்து நிற்கும் உத்தமர்கள் ஒரு சிலர் இருந்த காரணத்தால்தான் மனித குலம் இன்னமும் தழைத்து நிற்கிறது.

"உண்டால் அம்ம இவ்வுலகம்" என்ற புறநானூற்றுப் பாடலில் கூறியபடி, இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்தும், தமக்கென வாழாப் பிறர்க்குரிய சான்றோர்களில் சிலர் மனித நேயத்துடன் உலகில் வாழ்கின்ற காரணத்தால்தான், உலகம் என்பது இருக்கிறது. இன - மத - தேச வேறுபாடுகளைக் கடந்து, மனிதனை மனிதனாக மதிக்கும் மனித நேயம் மனித குலத்துக்கு நம்பிக்கையைத் தருகிறது.

"அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய், தம்நோய்போல் போற்றாக் கடை'' என்பது வள்ளுவம். கல்வியறிவு, செல்வச் செழிப்பு, பட்டம், பதவி ஆகியவை பெருமளவில் ஒருவனுக்குக் கிடைத்திருந்தாலும், அவற்றுடன் மனித நேயம் என்பது அவனிடம் இல்லை என்றால், சேர்ந்துள்ள மற்ற வசதிகளால் அவனுக்கோ அவன் சார்ந்த சமுதாயத்துக்கோ எந்தப் பயனும் இல்லாமற் போய்விடும்!

மனிதரின் தன்மையின் உயர் போக்கினை அடிப்படையாகக் கொண்ட உலக நோக்கு மனிதநேயம் ஆகும். சிறப்பாக மீவியற்கை அம்சங்களில் கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்காமல் மனிதரின் பகுத்தறிவை, அறத்தை, ஆற்றலை மனிதநேயம் முன்னிறுத்துகின்றது. அனைத்து மனிதர்களையும் அது மதிப்போடு நோக்குகின்றது. தமிழில் மனிதநேயத்தை மனிதபிமானம், மனிதத்துவம் என்றும் குறிப்பிடுவர்.

மனிதநேயம் என்பது மனித வாழ்க்கையில் மிக உத்தமமான ஓர் உணர்வாகும். ஆனால் இன்று மனிதாபிமானம் மனிதனிடத்தே செத்துக் கொண்டு வருவதாக பொதுவாகக் கூறப்படுகின்றது. உலகத்தில் வாழக்கூடிய அனைவரும் ஒரே நிலையில் வாழ்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியும். வரலாற்றுக் காலம் முதல் சமூக ஏற்றத்தாழ்வுகள் ஒரு பொதுவான விடயமே. இன்றைய 'உலகமயமாக்கல் யுகம்' இந்த ஏற்றத்தாழ்வுகள் பெரிதும் விரிவடைந்துவிட்ட நிலையில் மனிதன் பணத்தையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் காரணத்தினால் மனிதநேயம் என்பது வெகுவாக குறைந்த வண்ணமே உள்ளது.

இன்று உலகளாவிய ரீதியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் நாடுகளின் எண்ணிக்கை அதிகம். பொதுவாக இந்நாடுகளில் போசாக்கின்மை, இதன் காரணமாக ஏற்படும் பாதிப்பான விளைவுகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வண்ணமே உள்ளது. ஒரு நேர உணவுக்குக் கூட சிரமப்படும் மக்கள் வாழும் நிலையில் அபிவிருத்தியடைந்த நாடுகள் மனிதாபிமானத்தைப் பற்றியும் மனிதநேயத்தைப் பற்றியும் கதைத்துக் கொண்டு தத்தமது நாடுகளின் அபிவிருத்தியையும், பாதுகாப்பினையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கோடான கோடி டொலர்களை மூலதனமாக்குவதை நோக்குமிடத்து மனிதநேயம் என்பதற்கு புதிய வரைவிலக்கணத்தை தேடவேண்டியுள்ளது.

உலகளாவிய ரீதியில் நோக்குமிடத்து போசாக்கின்மை, இயற்கை அனர்த்தங்கள், யுத்த அனர்த்தங்கள், பயங்கர நோய்கள், வறுமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலையை ஆழமாக சிந்திக்க வேண்டியதாக உள்ளது. மனிதன் என்று வரும்போது அனைவரும் எலும்புகளாலும் தசைகளாலும் படைக்கப்பட்டவர்கள். அனைத்து மனிதர்களின் உணர்வுகளும் ஒன்றே. ஒரு மனிதன் இயற்கையாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ பாதிக்கப்படும்போது அந்த மனிதனின் உள நிலைகளை சிந்திக்க வேண்டியதும், அம்மனிதர்களுக்கு உதவ வேண்டியதும் பாதிப்புக்குட்படாத மனிதர்களின் மனிதாபிமானத்தின் உயர் பண்பாகக் காணப்பட்டாலும்கூட, இதனை எத்தனை பேர் நிறைவேற்றுகின்றார்கள் என்பது கேள்விக்குறியே!

முதலாளித்துவ சமூக அமைப்புக்கள் தலைவிரித்து தாண்டவமாடிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒருவனுக்கு செய்யும் உதவிகள் கூட பேருக்காகவும், புகழுக்காகவும், விளம்பரத்துக்காகவும் அமைந்திருப்பது வேதனைக்குரிய ஒரு விடயமே. நவீன தொழில்நுட்ப விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எல்லாவற்றையும் சிந்திக்கும்போது மனிதாபிமானத்தின் அடிப்படையை உணரத் தவறுகிறோம். மனிதாபிமான சிந்தனைகள் உயரிய முறையில் முன்னெடுக்கப்படுமிடத்து இன்றைய உலகில் எத்தனையோ பிரச்சினைகளுக்கு எப்போதோ முடிவெடுத்திருக்கலாம்.

ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மனிதாபிமான தினத்தை பிரகடனம் செய்கையில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், நோய், போஷாக்கின்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதை கவனத்தில் எடுக்கும் தினமாகவும் இத்தகையோருக்கு உதவிகள் வழங்குவோரை கௌரவிக்கும் தினமாகவும் கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தது. இத்தகைய நிலைப்பாடுகளுக்கு ஒரு தினம் மாத்திரம் போதாது. பாதிக்கப்பட்டோரின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டியது மனிதாபிமானமிக்க ஒவ்வொருவரினதும் கடமையாகும். இத்தகைய உணர்வூட்டல்கள் சமய ரீதியாக, கல்வியியல் ரீதியாக ஊட்டப்பட வேண்டியது அத்தியாவசியமான ஒன்றே.

மனித உணர்வுகளை ஓரிரு தினங்களுக்குள் மாற்றிவிட முடியாது. ஒரு மனிதனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நிலை இயல்பாக உருவாக்கம் பெறுமிடத்து இதனால் ஏற்படக்கூடிய பலாபலன் நிலையானது. நிச்சயமாக புகழை எதிர்நோக்காமல் இலாப நோக்கங்களைக் கருத்திற் கொள்ளாமல் இவற்றையே வியாபாரமாக்காமல் உண்மையான நோக்குடன் மனிதநேயமிக்கவர்களை கௌரவிக்க வேண்டியது கடமையே. அதேநேரம், உண்மையான நோக்கமிக்கவர்கள் இத்தகைய கௌரவங்களை எதிர்பார்க்கப் போவதுமில்லை.

இலங்கையில் சர்வதேச மனிதநேய தினம்:

இலங்கையில் சர்வதேச மனிதநேய தினம் நாடளாவிய ரீதியில் ஆகஸ்ட் 19ம் திகதி அனுஸ்டிக்கப்பட்டது. இதன் பிரதான நிகழ்வு கொழும்பிலுள்ள ஐ.நா.அலுவலகத்தில் நடைபெற்றபோது நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரைநிகழ்த்திய ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி 'நீல் பூனே' பின்வருமாறு தெரிவித்தார்.

'......உலக மனிதநேய தினத்தை நாம் ஏன் அனுஷ்டிக்கின்றோம் என்பதற்கு முதலாவது காரணமாக 7 வருடங்களுக்கு முன்னர் ஈராக் பாக்தாத்தில் ஐ.நா.தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 21 மனிதாபிமான பணியாளர்கள் பலியாகியிருந்த சம்பவத்தைக் கூறவேண்டும்....

..... இச்சம்பவத்தில் உலக நாடுகளைச் சேர்ந்தவர்களும் ஈராக்கியர்களும் பலியாகி இருந்தனர். அத்துடன் ஐ.நா.செயலாளர் நாயகத்தின் உதவிச் செயலர்களில் ஒருவரும் பலியானார். அத்துடன் பாக்தாத் சம்பவம் மட்டுமன்றி மேலும் பல காரணங்களும் உலக மனிதநேய தினம் அனுஷ்டிக்கப்படுவதற்கு ஏதுவாக அமைந்தது....

.... மோதல் வலயங்களிலிருந்து வெளியேறும் மக்களைப் பாதுகாப்பு வழங்கும் இலங்கை அரசின் முயற்சிக்கு நாமும் ஆதரவினை வழங்கியிருந்தோம். இம்மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் அரசுடன் எமக்குப் பரந்தளவிலான பங்கு இருந்தது. அக்காலப்பகுதியில் இலங்கையர்கள் (அரச தரப்பு, தனியார் தரப்பு), அரச சார்பற்ற நிறுவனங்கள், பாதுகாப்புப் படையினர், ஐ.நா.உதவி அமைப்புகளுடன் பணியாற்றும் உலகளாவிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், மக்களின் உயிரைப் பாதுகாக்க சிக்கலானதும் கடினமானதும் உடனடியான பணிகளை மேற்கொண்டிருந்தனர்....

....அத்துடன், மக்கள் தமது இயல்பு வாழ்வைத் தொடர்வதற்குத் தேவையான பலத்தினைப் பெற்றுக் கொள்ளவும் இவர்கள் ஆதரவாகச் செயற்பட்டுள்ளனர். இவற்றிற்கான நிதி அரசினாலும், உள்ளூர் மக்களாலும் வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு மக்களாலும் வழங்கப்பட்டுள்ளது....

....மக்கள் விரக்தி அடைந்திருந்த காலத்தில் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பல சவால்களும் பல சிக்கலான சூழ்நிலைகளும் இருந்தன. இறுதியில் கடின உழைப்பு, சிறந்த ஒத்துழைப்பு, மனிதாபிமானக் கொள்கைகளைப் பிரயோகித்தல், பாதிக்கப்பட்ட மக்களின் முயற்சி ஆகியவற்றின் ஊடாக சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றன. தமது வாழ்வை மீள ஆரம்பிக்கும் தகுதியை மக்கள் பெற்றுக் கொண்டனர். பாதிக்கப்பட்ட மக்களும் நாட்டிலுள்ள ஏனையவர்களும் சமாதானத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற வாய்ப்பை பயன்படுத்தும் சந்தர்ப்பத்தைப் பெற்றுள்ளனர்....

.....அனைத்து இலங்கையர்களுக்கும் தேவையான பாதுகாப்பான சுதந்திரமான வாழ்வுக்குரிய நிலையான அத்திவாரத்தை இடவும் மக்கள் மீட்சிபெற்று வாழ்வைக் கட்டியெழுப்ப ஐ.நா.தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்....

....இவ்வருட முதல் 6 மாதத்தில் 5 இலட்சம் மக்களுக்குத் தேவையான உணவு, வடக்கில் 130000 ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான உணவு, மீளக்குடியேறிய 40 ஆயிரம் குடும்பங்களுக்குத் தலா 25 ஆயிரம் நிதி உதவி, 92,800 குடும்பங்களுக்கு உணவற்ற பொதிகள் ஐ.நா.வால் வழங்கப்பட்டது. அத்துடன் 2009 இலும், 2010 இலும் 3 இலட்சம் இடம்பெயர்ந்த மக்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரச் சேவை வழங்கப்பட்டு நோய்களிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர்...


...இவ்வருடம் ஜனவரி முதல் மே வரை அரசும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து 123 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளது....

....மக்கள் மீளக்குடியேறிய பகுதிகளில் 2915 கிணறுகள் சுத்திகரிக்கப்பட்டதுடன், 515 கிணறுகள் தரமுயர்த்தப்பட்டன. 275 வேலை நாட்களுக்கான பணப்பெறுமதியுடைய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 19,000 குடும்பங்களுக்கு விவசாய, மீன்பிடி, பண்ணை வளர்ப்புக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது....

....75 ஆயிரம் ஏக்கர் வயலும் 17 ஆயிரம் ஏக்கர் நிலமும் மீண்டும் பயிர்ச்செய்கைக்கு உகந்ததாக சீரமைக்கப்பட்டுள்ளதுடன், மெனிக்பாம் உள்ளிட்ட முகாம்களில் தொற்றுநோய்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களில் 5 வயதுக்கு குறைவான சிறுவர்களின் போஷாக்கின்மை வீதம் 32 ஆக இருந்தது. தற்பொழுது 2 வீதமாக குறைக்கப்பட்டு சிறுவர்கள் போஷாக்குடன் உள்ளனர்...

....புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் 57,673 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அத்துடன் 3,214 வீடுகள் இடம்பெயர்ந்த மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இச்செயற்பாடுகள் ஐ.நா.உதவி அமைப்புகளினால் மேற்கொள்ளப்பட்டவை ஆகும். இருந்தாலும் இன்னும் பலதேவைகள் இடம்பெயர்ந்த மக்களுக்காக நிறைவேற்றப்படவேண்டியுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தற்பொழுதும் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். இம்மக்களுக்கு அதாவது அண்மையில் மீளக்குடியமர்ந்த மக்களுக்குரிய அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும். மெனிக்பாம் மற்றும் ஏனைய முகாம்களில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் தங்கியுள்ளனர்...

...அத்துடன் இம்மக்கள் அபிவிருத்தி என்பதையே எதிர்கொள்ளவேண்டியுள்ளது. அத்துடன் ஸ்திரமான சமாதானத்தையும் ஸ்திரமான அபிவிருத்தியினையும் ஏற்படுத்த வேண்டிய தருணம் இது.."வெனத் தெரிவித்தார்.

நிகழ்வின் ஓர் அங்கமாக மன்னாரிலும் இத்தினம் மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து மன்னார் சிறுவர் பூங்கா வளாகத்தினுள் மேற்படி நிகழ்வினை நடத்தின. இதன் போது சுமார் 30 ற்கும் மேற்பட்ட அரச சார்பற்ற அமைப்புகள் கலந்துகொண்டதோடு நூற்றுக்கணக்கான மனிதாபிமான பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது இயற்கை அனர்த்தம் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களையும் உயிர் இழந்தவர்களையும் நினைவு கூர்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பினால் மன்னார், அடம்பன், மடு ஆகிய வைத்தியசாலைகளுக்கு பெறுமதி வாய்ந்த குடி நீரை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அதேநேரம் ஏ.சீ.எப். தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 17 ஊழியர் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இதுவரையில் தண்டனை விதிக்கப்படவில்லை என பிரான்ஸ் அதிருப்தியை வெளியிட்டிருந்தது. 2006ம் ஆண்டு மூதூர் பிரதேசத்தில் தன்னார்வ தொண்டர்கள் 17பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

படுகொலையாளிகள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் 'பெர்னாட் குச்னர்' தெரிவித்துள்ளார். இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளும், அரசாங்கமும் ஒருவரை மாறி ஒருவர் குற்றம் சுமத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

மனிதாபிமான தொண்டர்களின் பாதுகாப்பு மிகவும் முதன்மையானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனிதாபிமான தொண்டர்களின் பாதுகாப்பு குறித்து எதிர்வரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளதாகவும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் மனிதநேயம் பற்றிய ஓர் தகவல்

இந்தியாவில் சிதம்பரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க வாழ் அறிவியல் மேதை வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009 ஆண்டு இரசாயண வியலுக்கான நோபல் பரிசு பெறுவோரில் ஒருவராக அறிவிக்கப்பட்டவுடன் உலகச் செய்தி ஊடகங்களில் அவரைப் பற்றிய செய்திகள் உலாவரத் தொடங்கின.அவர் பற்றி 'தி ஹிந்து' பத்திரிகை அக்டோபர் 08.2009இல் வெளியிட்ட செய்தியொன்றை இவ்விடத்தில் குறிப்பது பயனுள்ளதாக அமையும் எனக் கருதுகின்றேன்.

ஓர் விஞ்ஞான மேதையாக அகில அறிமுகம் பெற்ற வெங்கட்ராமன் ராம கிருஷ்ணனின் மனிதநேய மனத்தை அவரது சகாவும் ஓய்வுபெற்ற அணுக்கரு இயற்பியல் துறை பேராசிரியருமான ஜே.எஸ்.பண்டுக்வாலா வெளிப்படுத்தியுள்ளார். வெங்கி என்று செல்லமாக அழைக்கப்படும் டாக்டர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், சிறு வயது முதலே குஜராத் மாநிலம் வடோதராவில் வளர்ந்தவர். இவரது தந்தையார் வெங்கட்ராமன் மஹாராஜா சாயஜிரங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், தாயார் ராஜலஷ்மியும் குழந்தை உணவூட்டம் மற்றும் உயிர் வேதியல் துறையில் பேராசிரியர்.

பெற்றோர் இருவரும் பேராசிரியர்கள். எனவே இவரையும், இவரது சகோதரியையும் வளர்த்த வேலைக்கார அம்மையார் மீது இவருக்கு பாசம் அதிகம். அவருடைய குடும்பத்தை இவர் இன்றும் பரிவோடு கவனித்து வருகிறார்.

2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சங்பரிவார மதவெறியர்கள் மூட்டிய கலவர நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. வடோதராவில் இருந்த பெஸ்ட் பேக்கரியில் 12 முஸ்லிம்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். பேராசிரியர் பண்டுக்வாலாவின் வீடும் சூறையாடப்பட்டது. இதை அறிந்து மிகவும் வருந்திய டாக்டர் ராமகிருஷ்ணன், தனது நண்பர் பண்டுக்வாலா மூலம், வறுமையில் வாடும் முஸ்லிம் சிறுவர்கள் சிறுமிகளின் கல்வி தடைபடாமல் தொடர நிதியுதவி செய்து வருகிறார். பணம் கொடுத்தோம், கடமை தீர்ந்தது என்று இல்லாமல், அடிக்கடி ஏழை முஸ்லிம் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை விசாரித்து அறிவாராம். குறிப்பாக கணிதம், இயற்பியல், இரசாயணவியல் பாடங்களில் அவர்களுக்கு ஆர்வ மூட்டுமாறு பேராசிரியர் பண்டுக்வாலாவிடம் கேட்டுக் கொள்வாராம்.

சிதம்பரத்தில், பிராமண குடும்பத்தில் பிறந்து, குஜராத்திற்கு குடிபெயர்ந்து பின்னர் அமெரிக்காவில் கல்வி பயின்று, அந்நாட்டின் நிரந்தரக் குடியுரிமையையும் பெற்றுள்ள டாக்டர் ராமகிருஷ்ணன், குஜராத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அக்கறை செலுத்துவதும், முஸ்லிம் சிறார்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவுவதும் பாராட்டிற்குரியது.


"மனிதன் அறிவாளியாவது எளிது, அறிவாளி மனிதநேயத்தோடு திகழ்வது தான் அரிதினும் அரிது."

நோபல் பரிசு பெற்றுள்ள டாக்டர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அறிவாலும், மனிதநேயத்தாலும் உயர்ந்து நிற்பதுமூன்றாம் உலக நாடுகளில் வாழும் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்.


மனிதநேயம் வளர்ப்போம்
         
இன்று (ஆகஸ்டு 19-ந்தேதி) உலக மனிதநேய நாள்.

மானுடத் துயர் என்பது மனிதர்களுக்கு ஏற்படும் இழப்பு. உயிர் அழிப்பு, பொருள் அழிப்பு, உடமைகள் அழிப்பு என மனிதர்களுக்கு அழிவினை ஏற்படுத்தும் அனைத்துமே மானுடத்துயர்தான்.

அந்த மானுடத்துயர் இயற்கைச்சீற்றங்களால், சாதி, மதச்சண்டைகளால், நாட்டிற்கிடையே நடைபெறும் போர்களால், இனங்களுக்கிடையே ஏற்படும் கலவரங்களால் நிகழலாம். எப்படி நிகழ்ந்தாலும் மானுடத்துயர் என்பது துயரமும் துன்பமும் மிக்கது. நடைபெறும் கலவரங்களில், போர்களில் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்கள்தான்.

எந்தவிதமான குற்றமும் இழைக்காத லட்சக்கணக்கான பொதுமக்கள் மானுடத்துயரத்தில் மாட்டிக்கொள்கிறார்கள். சொல்லொண்ணாத் துயரத்தினை அடைகின்றார்கள். அகதிகளாக நாடு விட்டு நாடு புலம் பெயர்கிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களை இழக்கின்றார்கள். பெண்கள் மொத்தமாக பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றார்கள். கொல்லப்படுகின்றார்கள்.

இப்படிப்பட்ட துயரங்களை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். கலவரங்களுக்கு நடுவே மனித நேயர்கள் களப்பணியாற்றுகிறார்கள். காயம்பட்டு குருதி வழிந்து கிடப்பவர்களை மனிதர்களாக மட்டுமே பார்க்கத் தெரிந்தவர்கள் இவர்கள்.

அவர்களுக்கு மனித உயிர்தான் முக்கியம். அதனைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் முக்கியம். எனது சாதியா, எனது மதமா, எனது இனமா, எனது நாடா எனப்பார்க்காமல் ஒரு மனித உயிர் தன்னுயிரைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறது. அந்த உயிரைக் காப்பாற்ற மருந்து கொடுக்க வேண்டும், தன்னுயிரைக் கொடுத்தாவது உயிருக்கு போராடும் அந்த உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்னும் உன்னத நோக்கத்தை மட்டும் கொண்டு களப் பணியாற்றுபவர்கள்.

அவர்களை நினைவுகூரும் நாள்தான் மனிதநேய நாள். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

2003-ம் ஆண்டு, ஆகஸ்டு 19-ந்தேதி ஈராக் நாட்டில் உள்ள பாக்தாத் நகரத்தில் ஐக்கிய நாடு சபைகள் சார்பாக களப்பணியாற்றிக்கொண்டிருந்த ஐ.நா. சபையின் சிறப்பு பிரதிநிதி செர்சியோவெய்ரா டீமெல்லோ என்பவரும் அவரோடு இருந்த 21 ஐ.நா.சபை ஊழியர்களும் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர்.

செர்சியோவெய்ரா டீமெல்லோ பிரேசில் நாட்டைச்சார்ந்தவர். வங்காளம், சூடான், மொசம்பியா, பெரு, கம்போடியா, யூகோஸ்லிவியா எனப் பல்வேறு நாடுகளுக்குச் சென்று 30 ஆண்டுகளுக்கு மேலாக மானுடத்துயர் நீக்கியவர். அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக ஆகக்கூடியவர் என்று எதிர்பார்க்கப்பட்டவர். அப்படிப்பட்டவர் 2003-ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந்தேதி கொல்லப்பட்டார்.

அவரை சிறப்பிப்பதற்காக இறப்பிற்கு பின்பு ஐ.நா. சபையால் அவருக்கு மனித நேய விருது அளிக்கப்பட்டது. இந்த விருதினைப் பெற்றுக்கொண்ட செர்சியோவெய்ரா டீமெல்லோவின் குடும்பத்தினர் அவருடைய பெயரால் ஒரு அறக்கட்டளையை நிறுவினர்.

குடும்பத்தினை மறந்து கலவர பூமிகளில் தங்கி பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைத்தவர்களை, துடைப்பவர்களை நினைவுகூரும் ஒரு நாளினை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என விரும்பினர். அதற்காக 2004-ம் ஆண்டிலில் இருந்தே முயற்சிகள் செய்தனர்.

2008-ம் ஆண்டு டீமெல்லோ அறக்கட்டளையின் சார்பாக ஒரு தீர்மான வரைவினை ஐ.நா.சபையில் அளித்தனர். அந்த தீர்மானத்தினை நிறைவேற்றித்தருமாறு பிரான்சு, சுவிட்சர்லாந்து, ஜப்பான், பிரேசில் போன்ற நாடுகளைக் கேட்டுக்கொண்டனர். அதனை ஏற்றுக்கொண்ட சுவிட்சர்லாந்து நாடு ஐக்கியநாடுகள் சபையில் அந்த தீர்மானத்தைக் கொண்டுவந்தது.

அதனை ஏற்றுக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபை டிசம்பர் 2008-ம் ஆண்டில் ஆகஸ்டு 19-ந்தேதியை உலக மனிதநேய நாளாக அறிவித்தது. ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகளாக இருக்கும் 192 நாடுகளிலும் மனிதநேய நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. அந்த நாளில் கலவர பூமிகளில் பணியாற்றி மறைந்த மனிதநேயர்களின் குடும்பத்தினர் சிறப்பிக்கப்படுகின்றனர்.

2003-ல் டீமெல்லோ கொல்லப்பட்ட பின்பு இந்த நாள்வரை 4 ஆயிரத்து 76 மனிதநேயர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் அல்லது காயப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களின் நினைவை, செயலைப் போற்ற வேண்டும் என்பதற்கான நாளே உலக மனிதநேய நாளாகும்.

இந்த ஆண்டு மனிதநேயநாள் முழக்கம், ‘பொதுமக்களை குறிவைக்காதீர்கள்’, போராளிகளோ அரசாங்கமோ போரிடும்போது பொதுமக்களை குறிவைக்காதீர்கள் என்பதுதான் இந்த ஆண்டின் கருத்துருவாக்கம்.

இப்படிப்பட்ட முழக்கங்களின் மூலமாகவும் முகநூல், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாகவும் பரப்புரை மூலமாகவும் போர்களை நீக்கிய உலகத்தினைப் படைக்க இந்த நாள் பயன்படும் என நம்புகின்றனர்.

‘அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்றார் திருவள்ளுவர். மனித நேயப்பணியாளர்களின் பணி பெரும்பணி. சக மனிதர்களின் மேல் அன்பு சுரக்கும் அற்புதபணி. எந்தவித எதிர்பார்ப்புமின்றி கொல்கத்தா நகரின் தெருக்களிலே தொழுநோயால் படுத்துக்கிடந்த மனிதர்களுக்கு தன்னுடைய கருணையால் மருத்துவம் அளித்த அன்னை தெரசா போன்றவர்கள் மனிதநேயப் பணியாளர்கள்.
‘தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்; தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும்; தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே; சண்டையில்லை தன்னலந்தான் தீர்த்ததாலே’ என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

ஆம் தாயுள்ளம் கொண்ட மனித நேயப்பணியாளர்களை நினைவில் கொள்ளும் நாள் இது. நாமும் நினைவில் கொள்வோம். அவர்களைப் போற்றுவோம். அவர்களுக்கு உதவி செய்வோம்.
- எழுத்தாளர் முனைவர் வா.நேரு
நன்றி ஒன் இந்தியா.தினத்தந்தி.

உலக மனிதநேய தினம் ஆகஸ்ட் 19. (World Humanitarian Day)


உலக மனிதநேய தினம் ஆகஸ்ட் 19. (World Humanitarian Day) 

உலக மனிதநேய நாள் (World Humanitarian Day) என்பது மனிதாபிமானப் பணியாளர்களையும், மனிதாபிமான காரணங்களுக்காக தங்களது உயிர்களை இழந்தவர்களையும் நினைவுகூரும் ஒரு நாள் ஆகும். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் சுவீடனால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு அமைய இந்நாளை ஆண்டுதோறும் ஆகத்து 19 ஆம் நாள் கொண்டாடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.இந்நாளிலேயே ஐநா பொதுச் செயலரின் ஈராக்க்குக்கான சிறப்புத் தூதர் சேர்ச்சியோ வியெய்ரா டி மெல்லோ என்பவரும் அவரது 21 பணியாளர்களும் பகுதாது நகரில் குண்டுத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டனர்.

மனித நேயம் (மனித நேயம் = மனிதம் + நேயம்) தொடர்புடைய பலம் வாய்ந்த குணங்களாக அன்பு, கருணை, இரக்கம் மற்றும் சமூக நுண்ணறிவு இருக்கின்றன. சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதை மனித நேயம் எனக் கூறலாம். இதில் உயிரிரக்கப் பண்பு என்பது மனித நேயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. பிறருக்கு துன்பம் அளிக்காமல் இருத்தல், இயலாதவர்களின் துன்பத்தைப் போக்குதல், இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருத்தல் என்றும் கூறலாம். 1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அனைவரையும், ‘‘சகோதர... சகோதரிகளே...’’ என்று விவேகானந்தர் உரையாற்றி உலக மக்களிடையே மனித நேயத்தை எடுத்துரைத்தார்.

தமிழ் மொழியில் மனித நேயம்

"அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு" - திருவள்ளுவர்

கணியன் பூங்குன்றனார் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று கூறுகிறார்.

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றார் வள்ளலார்

வரலாற்று பின்னணி

கன்ஃபூசியஸ் கோட்பாடு

கன்ஃபூசியஸ் மனித நேயத்தை (ரென்) "பிற அல்ல சக மனிதனிடத்தில் அன்பு செலுத்துவது" என்றார். மேலும் "நீ நிற்க வேண்டுமென்றால் பிறரை நிற்க வை" என்றார்.மனித நேயம் (ரென்) என்பது அன்பு மற்றும் தன்னலமற்று இருப்பதன் முக்கியத்துவத்தை கூறுகின்றது.

கிரேக்க கோட்பாடு

கிரேக்க அறிஞர்கள் பிளாட்டோ மற்ற அரிஸ்டாட்டில் இருவரும் மனிதப் பண்புகள் குறித்து விரிவாக எழுதியுள்ளனர். ஆனாலும் மனித நேயத்தை பற்றி மனிதப் பண்பாக குறிப்பிடவில்லை மாறாக அன்பும் கருனையும் முக்கியம் என குறிப்பிடுகிறார்கள்

இஸ்லாமியத்தில் மனிதநேயம்

நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்". (அல்-குர்ஆன்:5:32)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட ஒரு போரில் ஒரு பெண்மனி கொல்லப்பட்டுக் கிடந்தாள். எனவே நபி (ஸல்) அவர்கள் (போரில்) பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதை விட்டும் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­லி) நூல்: புகாரி (3015)

இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், 'ஓர் எறும்பு உங்களைக் கடித்துவிட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே" என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தார் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மனித நேயத்தின் பலம்

அன்பு

அன்பு பல்வேறு வகையான விளக்கங்களை கொண்டிருந்தாலும் அது இரு நபர்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் அன்யோன்யம், ஆறுதல் மற்றும் நேர்மறை உணர்வுகளை பிரதிபலிக்கிறது.

இரக்கம்

சமூக நுண்ணறிவு

இதிகாசங்களில் மனித நேயம்

இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் மாலை நேரங்களில் போர் செய்வது தவிர்க்கபட்டன. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது போர் புரிவது தவிர்க்கப்பட்டது. நிராயுதபாணியாக போர்க்களத்தில் நின்ற தனது எதிரியான இராவணனைக் கூட இராமன் "இன்று போய் நாளை வா" என்று கூறியதாக மனித நேயத்தை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

மனித நேயம் காத்த மனிதர்கள்

அன்னை தெரேசா
நெல்சன் மண்டேலா

மனித நேய பிரச்சனைகள்

மனித ஆற்றலால் கழிநிலை வெளியேற்றுதல்
வதையா இறப்பு
இந்தியாவில் வதையா இறப்பு
மரண தண்டனை குறித்த விவாதங்கள்

வாழும் மனித நேயம் - நாளிதழ்களில்

ஒரு தலைமைக் காவலரின் மனித நேயம்!
சமூக சேவையே உயிர் மூச்சு!
சில நூல்கள்

சங்க இலக்கியங்களில் மனித நேயம் (நூல்)



வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

முனைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் ஆகஸ்ட் 17,1962.


முனைவர் தொல்.திருமாவளவன்  பிறந்த நாள் ஆகஸ்ட் 17,1962.

முனைவர் தொல்.திருமாவளவன் (பிறப்பு ஆகத்து 17, 1962), தமிழ்நாட்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், அரசியல்வாதியும் ஆவார். தலித்துக்கள் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு தலித்துக்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகின்றார்.[சான்று தேவை] இவரின் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் வாழ்வு
தலித் சிறுத்தைகள் என்னும் தலித் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய மலைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்டபோது, மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொல். திருமாவளவன் மதுரையில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அந்த அமைப்பின் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் எனப் பெயர் மாற்றிய திருமாவளவன் நீலம் மற்றும் சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அந்த இயக்கத்திற்காக வடிவமைத்து 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் மதுரையில் அக்கொடியை ஏற்றினார்.
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்தபோது 1999 ஆம் ஆண்டு ஆகத்து 17 ஆம் நாள் தொல். திருமாவளவன் தனது அரசுப் பணியைத் துறந்தார்.

இவர் 2009 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், சிதம்பரம் தொகுதியிலிருந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

இவர் 2014 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், இதே சிதம்பரம் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளரான சந்திரகாசியிடம் தோல்வியடைந்தார்.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.இத்தேர்தலில் திருமாவளவன் அவர்கள் 5,00,229 வாக்குகள் பெற்று (அதிமுக வேட்பாளரை விட 3219 வாக்குகள் வித்தியாசம்) வெற்றி பெற்றார்.


அரசியல் கொள்கை
தலித் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்துதல், தனித்தமிழ் வளர்ச்சிக்கு உதவுதல், சாதிய அடக்குமுறைக்கு எதிராக கருத்திடுதல், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் தனித்தமிழீழக் கொள்கைக்கும் ஆதரவளித்தல், இந்துத்துவ கொள்கையினை எதிர்த்தல் போன்றவை அவரது முக்கியக் கொள்கைகளாகும்.

படைப்புகள்
சாதீய அடக்குமுறையினை எதிர்த்தல், ஈழ விடுதலை ஆதரவு, இந்துத்துவ கருத்துகளை எதிர்த்தல் போன்ற கொள்கையினை வலியுறுத்தும் விதமாக முனைவர் திருமாவளவன் பல கட்டுரைகள் மற்றும் நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில:

அத்துமீறு
தமிழர்கள் இந்துக்களா?
ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ஈழம்
இந்துத்துவத்தினை வேரறுப்போம்
அமைப்பாய் திரள்வோம்
இவற்றில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

நூல்கள்

முள்வலி
அமைப்பாய்த் திரள்வோம்
கருத்தியலும் நடைமுறையும் (கட்டுரைத் தொகுப்பு)


திரைப்படங்கள்

திருமாவளவன் தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றிலும் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ளார். இவரது முதல் திரைப்படம் அன்புத்தோழி ஆகும். இதில் இவர் கிளர்ச்சித் தலைவர் வேடம் ஏற்று நடித்துள்ளார்.[4] இப்பாத்திரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை மாதிரியாக வைத்து அமைக்கப்பட்டதாக விமர்சிக்கப்படுகின்றது. இது தவிர கலகம், என்னைப்பார் யோகம் வரும், மின்சாரம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

ரக்க்ஷா பந்தன்


ரக்க்ஷா பந்தன்

ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப் பணடிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும்.

Raksha Bandhan

Examples of Rakhi.
அதிகாரப்பூர்வ பெயர்
Raksha Bandhan. रक्षा बन्धन
பிற பெயர்(கள்)
Rakhi or Rakhri
கடைபிடிப்போர்
Religious festival:' Hindus and Jains.Multicultural: Sikhs,Buddhists, Christians and Muslims.
கொண்டாட்டங்கள்
Religious: Sister-Brother get together, tie Rakhi on wrist, perform aarti, mark tilak, brother promises to protect sister, sister feeds brother, brother gives gift, hugs. Multicultural: tying Rakhi, giving gifts, honoring relationships of siblings.
நாள்
Purnima (full moon) of Shravana श्रावन पुर्णिमा
2018 இல் நாள்
Sunday, August 26
2019 இல் நாள்
Thursday, August 15
2020 இல் நாள்
Monday, August 3
தொடர்புடையன
Bhai Duj; Bhai Tika
Learn more


வட இந்தியாவில் பிரபலமாக உள்ள இந்த நிகழ்ச்சி தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. வண்ணமயமான ராக்கிகள், தென்னிந்தியாவில் சின்னச் சின்ன கடைகளில் கூட தொங்குவதைக் காணலாம்.

ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவதற்கான காரணம்

மகாபாரதத்தில் பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, அவரின் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு, கிருஷ்ணரின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவரை எல்லா தீயசக்திகளிடமிருந்தும், பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாப்பதாக அவருக்கு உறுதியளித்தார். அவரளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்று திரிதராஷ்டிராவின் நீதிமன்றத்தில் திரௌபதியை துகிலுரிய முயன்றபோது அவரின் மானத்தைக் கிருஷ்ணர் காப்பாற்றினார். திரௌபதி கிருஷ்ணரின் கையில் புடவையை கிழித்து கட்டிய நிகழ்வே இன்று ரக்ஷாபந்தன் விழாவாக கொண்டாடப் படுகிறது.


ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுவது தொடர்பான மற்றொரு வரலாற்று சம்பவமும் கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சித்தூர் நாட்டை கர்ணாவதி என்ற ராணி ஆட்சி புரிந்து வந்தார். குஜராத்தை ஆண்ட சுல்தான் பகதூர் ஷா சித்தூர் நாட்டை கைப்பற்ற அந்த நாட்டின் மீது போர் தொடுத்தார். இதை கேள்விப் பட்ட ராணி முகலாய பேரரசர் ஹுமாயுன் அவர்களுக்கு ‘ராக்கி’ என்னும் புனிதக்கயிறை அனுப்பினார். பாச உணர்ச்சிக் கொண்ட ஹுமாயுன் ராணியையும் அவரது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற முற்பட்டார். ஆனால் அதற்குள் ராணியை வென்று வெற்றிக்கொடி நாட்டினார் பேரரசர் பகதூர் ஷா.

கிமு 326 ல் மாவீரர் அலக்சாண்டர் இந்தியாவில் படையெடுத்து இந்தியாவின் ஏறக்குறைய வடக்குப் பகுதியனைத்தையும் கைப்பற்றிய பின்னர் போரஸ் மன்னரிடம் போரிட்டார். போரஸ் மன்னரின் வலிமையை கேள்விப் பட்ட அலக்ஸாண்டரின் மனைவி ரோக்ஷனா போரில் தன் கணவரின் உயிருக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தக் கூடாது என்று அவருக்கு ஒரு புனித நூலை அனுப்பினார். போரில் அலக்சாண்டரை நேரடியாக வீழ்த்த வாய்ப்புக் கிடைத்தும் கையில் கட்டியிருந்த புனித நூலைப் பார்த்ததும் அலக்ஸாண்டரை விட்டு விட்டார்.

இப்படி ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப் படுவதற்கு கதை கதையாக சொல்லிக்கொண்டு போகலாம். தற்போது ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் அல்லது அழகாக வடிவமைக்கப்பட்ட நூல்களால் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப் பணடிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும்.

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

இந்திய சுதந்திர தினம் ஆகஸ்ட் 15,1947.


இந்திய சுதந்திர தினம் ஆகஸ்ட் 15,1947.

‘1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி’ என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், ‘நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்’ மற்றும் ‘ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள்’ என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்லலாம். நமது தாய்நாடான இந்தியா சுதந்திரமடைந்து, சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து, நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே! இருநூறு ஆண்டுகளாக, நமது நாட்டிலேயே நாம் அந்நிய தேசத்தவரிடம் அடிமைகளாக இருந்த போது, அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி, வெற்றியும், தோல்வியும் கண்டுள்ளனர். சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தமது இன்னுயிரையும் துறந்த மகான்களின் தியாக உள்ளங்களையும், அவர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை, அந்நாளில் நாம் களிப்புற கொண்டாடுகிறோம், என்றென்றைக்கும் கொண்டாடுவோம். நமது சுதந்திரத்திற்காகப் போராடிய பல தலைவர்களும், புரட்சியாளர்களும் தள்ளாடும் வயதைக் கடந்துகொண்டிருக்கும் வேளையில், சுதந்திரத்தைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் நமது இந்திய நாட்டின் பிரஜைகள் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.


ஆரம்பகால இந்தியா

‘தீப கற்பம்’ என்றும் ‘பாரத தேசம்’ என்றழைக்கப்படும் நமது நாடானது, மேற்கே பாகிஸ்தான், கிழக்கே வங்காளதேசம், எனப் பெருவாரியானப் பரப்பளவைக் கொண்டு ஒரே நாடாக இருந்தது. மன்னர்கள் ஆட்சியில் மிகவும் செழிப்பாகவும், பசுமையாகவும் இருந்த நமது நாடு, செல்வ செழிப்பில் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சிம்மசொப்பனமாக இருந்தது. தென்னிந்தியாவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து, அவர்களது புகழை மேன்மேலும் ஓங்கச் செய்தனர். இவர்களைத் தொடர்ந்து, இசுலாமியர்கள் (1206–1707), தில்லி சுல்தானகம் (1206–1526), தக்காணத்து சுல்தானகங்கள் (1490–1596), விஜயநகரப் பேரரசு (1336–1646), முகலாயப் பேரரசு (1526–1803), மராட்டியப் பேரரசு (1674–1818), துர்ரானி பேரரசு (1747–1823), சீக்கியப் பேரரசு (1799–1849) எனப் பலரும் நமது நாட்டின் எல்லைகளையும், செல்வங்களையும் விரிவுபடுத்துவதிலே மிகவும் கவனமாக இருந்தனர்.


மேலைநாட்டவர்களின் வருகை

விஜயநகரப் பேரரசு காலத்தில், நமது இந்தியாவிற்குக் கடல்வழியாக முதன்முதலில் வந்தவர் தான், வாஸ்கோடகாமா. ‘வந்தோரை வாழவைக்கும் நாடெங்கள் நாடு’ என்ற பெருமை நமது இந்தியாவிற்குத் தொடக்கத்திலிருந்தே உள்ளது. ஒரு போர்ச்சுகீசியரான அவர், கடல் வழியே இந்தியாவிற்கு வழியைக் கண்டு பிடித்து, நமது நாட்டில் கால்பதித்தார். இவரது வருகையைத் தொடர்ந்து, இந்தியாவில் உணவுக்கு சுவை சேர்க்கும் கறிமசாலா பொருட்கள் இருப்பதை அறிந்த ஐரோப்பியர்கள், அதைத் தங்களது நாடுகளுக்கு விற்பனை செய்யும் வணிகத்தில் ஈடுபட எண்ணி, கோழிக்கோடு துறைமுகத்தில் 1498-ஆம் ஆண்டு வந்திறங்கினர். இதுவே, பண்டமாற்று முறைக்கு வித்திட்டது. போர்ச்சுகீசியர்கள் இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச், ஆங்கிலேயர்கள் போன்ற அந்நிய நாட்டவர்கள் நமது நாட்டிற்கு வருகைத் தந்ததால், அவர்களும் போர்ச்சுகீசியர்கள் போலவே வாணிக முகாம்களை அமைக்க எண்ணி, சூரத்தின் வடக்கு கரையோரத்தில் நிறுவினர். 1619 ஆம் ஆண்டில், பிரெஞ்சுகாரர்களும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். வாணிகம் என்ற பெயரில் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் நுழையும் ஐரோப்பியர்கள், நாட்கள் செல்ல செல்ல அந்நாட்டின் சிம்மாசனப் பொறுப்பைக் கைப்பற்றுவர். அதற்கேற்றவாறு, பல நாட்டவரும் இந்தியாவுக்குள் நுழைந்ததால், பல போர்களும், குழப்பங்களும் நிலவியதால், ஐரோப்பியர்கள் அரசியல் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தனர். ஆனால், தாங்கள் கைப்பற்றிய அனைத்து நாடுகளையும், ஒரே நூற்றாண்டில் ஆங்கிலேயர்களிடம் இழந்தனர்.


ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி

ஐரோப்பியர்களை மிகவும் சூழ்ச்சியால் வென்ற ஆங்கிலேயர்கள், இந்தியாவில் இருந்து வாணிகம் செய்து வந்ததோடு மட்டுமல்லாமல், அப்போதைய முகலாயப் பேரரசர் ஜெஹாங்கிரின் அனுமதிப் பெற்ற பின்னர், இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு அவர்களது கிழக்கிந்திய கம்பெனியையும் நிறுவினர். நாளடைவில் அவர்கள் வரி செலுத்தாமலேயே வாணிகம் செய்ததால், அவர்களை வங்காளத்தின் நவாப் ‘சிராஜ் உட துலாத்’ என்பவர் எதிர்த்ததால், 1757 ஆம் ஆண்டில், ‘பிளாசி யுத்தம்’ தொடங்கியது. இதில், நவாப் ஆங்கிலேயர்களிடம் தோல்வியுற்றதால், அவர்கள் இந்தியாவில் உள்ள நிலங்களை ஆக்கிரமிக்கத் துவங்கினர். இதையடுத்து, 1764 ஆம் ஆண்டில் பக்சார் போரிலும் வெற்றிப் பெற்று, வங்காளத்தை ஆட்சி செய்ய அப்போதைய முகலாயப் பேரரசரிடம் அனுமதிப்பெற்றதால், இந்தியா முழுவதும் ஆங்கிலேயரின் ஆட்சிக்குள் வர அதுவே, முதன்முதல் காரணமாக இருந்தது. இதன் பின்னர், வரிகள், நிலங்கள் கையகப்படுத்துதல், போன்றவற்றால் இந்தியா பஞ்சம் வரும் நிலைமைக்குத் தள்ளப்பட்டது. 20 மில்லியன் மக்கள் ‘கிரேட் பாமின் ஆஃப் 1876–78’ மற்றும் ‘இந்தியன் பாமின் ஆப் 1899–1900ல்’ மடிந்ததொடு மட்டுமல்லாமல், ‘மூன்றாம் பிளக் பாண்டமிக்’ என்ற கொடிய நோயால் மேலும் 10 மில்லியன் மக்கள் செத்து மடிந்தனர். கிழக்கிந்திய நிறுவனத்தால், ஏற்பட்ட இத்தகைய மாபெரும் இழப்பைக் கண்டு வெகுண்டத் துடிப்பான இளைஞர்கள் பலரும் இணைந்து, ‘1857 இந்திய கலகம்’ என்ற இயக்கத்தை முகாலாயப் பேரரசர் பகதூர் ஷா சபர் அவர்களை மானசீக தளபதியாகக் கொண்டு உருவாக்கினர். இதுவே, ‘முதல் இந்தியப் போர்’ என்று அழைக்கப்பட்டது. ஒரு வருடமாகப் போராடிய பின்னர், இவ்வியக்கத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதன் தளபதியையும் நாடு கடத்தி, முகலாய வம்சத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தனர், ஆங்கிலேயர்கள்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கம்

முதல் இந்தியப் போரைத் தொடர்ந்து, தனது அதிகாரத்தை நேரடியாக செயல்படுத்த முடிவெடுத்தனர், ஆங்கிலேயர்கள். என்னதான் ஆங்கிலேயர்கள் ஒருபுறம் தனது ஆதிக்கத்தை மேலோங்கச் செய்து கொண்டே இருந்தாலும், நமது இந்தியர்கள் ‘முதல் இந்தியப் போரைத்’ தொடர்ந்து, பல போராட்டங்களிலும், கிளர்ச்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். 1867ல் ‘கிழக்கிந்திய கூட்டமைப்பை’ தாதாபாய் நவ்ரோஜியும், 1876ல் ‘இந்திய தேசிய கூட்டமைப்பை’ சுரேந்திரநாத் பானர்ஜியும் உருவாக்கினர். 1877 ஆம் ஆண்டில், விக்டோரியா மகாராணி டில்லியில் முடிசூட்டப்பட்டதால், ஓய்வுபெற்ற பிரித்தானிய பொதுப்பணி சேவகர் ஏ.ஓ.ஹ்யூமினால் இந்தியர்கள் பலரும் தூண்டப்பட்டு, 1885ல் மும்பையில் எழுபத்து மூன்று இந்தியப் பிரதிநிதிகள் இணைந்து ‘இந்திய தேசிய காங்கிரஸை’ நிறுவினர். சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், பால கங்காதர திலகர், லாலா லஜபத் ராய், விபின் சந்திர பாலர், வ. உ. சிதம்பரம்பிள்ளை, ஸ்ரீ அரபிந்தோ, சுப்பிரமணிய பாரதி, சுப்பிரமணிய சிவா, பக்கிம் சந்திர சட்டர்ஜி, சர் சயீது அஹ்மது கான், ரபீந்திரநாத் தாகூர் மற்றும் தாதாபாய் நவ்ரோஜி போன்றோரின் உழைப்பு விடுதலை உணர்வுக்கான புத்தெழுச்சியை பரவச்செய்தது.

1905ல், ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டார், அப்போதைய வங்காளத்தின் வைஸ்ராயும், கவர்னர் ஜெனரலுமான கர்சன் அவர்கள். வங்காளப் பிரிவினையைக் கண்டு கொதித்த இந்தியர்கள் பலரும், சுதேசி மற்றும் புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர். முதல் இந்திய தேசியவாதியாக இருந்து, சுயராஜ்ஜியத்தை ஏற்றுக் கொண்டார், பால கங்காதர திலகர். இதனால், தேசியவாதம் அடிப்படைவாதம் என இரண்டு தலைமைகளில் காங்கிரஸ் இரண்டாக 1907ல் பிரிந்தது. தொடர்ச்சியான வன்முறைகளும், கொந்தளிப்புகளும் நாட்டில் நிலவியதால், அதைத் தடுக்க எண்ணிய ஆங்கிலேயர்கள், தலைவர்களான பால கங்காதர திலகர் மற்றும் வ.உ.சியை 1908 ஆம் ஆண்டில் கைது செய்தனர். வங்காளப் பிரிவினையால் தொடர் போராட்டங்கள் ஏற்பட்டதால், அந்தச் சூழ்நிலையைத் தணிக்க முயற்சித்த ஆங்கிலேயர்கள், 1911 ஆம் ஆண்டில், ஐந்தாம் ஜார்ஜ் டர்பாரில் என்பவரை இந்தியாவிற்கு அனுப்பிவைத்தனர். அவர், வங்கப் பிரிவினையை மீண்டும் பெறப்போவதாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல், டெல்லியின் வடக்குப்பகுதியில் கட்டப்படவிருந்த நகரத்திற்கு தலைநகரத்தை கல்கத்தாவிலிருந்து மாற்றுவதாகவும் அறிவித்தார்.

முதல் உலகப் போரும், இந்தியர்களின் துணிவும்

உலகிலுள்ள நாடுகளுக்கிடையே நிலவிய மோதல்கள் மற்றும் விரோத போக்குகளால் 1914ல் ‘முதல் உலகப் போர்’ ஆரம்பமானது. ஆங்கிலேயர்கள் நமது இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்ததால், அவர்களது போர் முயற்சிகளுக்கு நமது இந்தியா பெருமளவில் பங்களித்தது. முதல் உலகப்போரின் பின்விளைவுகளாக உயர் உயிரிழப்பு விகிதம், உயர்ந்த பணவீக்கம், பரவிய இன்புளூயன்ஸா கொள்ளைநோய் மற்றும் போரின்போது ஏற்பட்ட வர்த்தகத்தின் பாதிப்பு போன்றவை, இந்திய மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், பிரித்தானிய ஆட்சியைத் தூக்கியெறிய இந்திய வீரர்கள் முற்பட்டனர். அச்சமயம், அதாவது, 1915 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்தின் முக்கியத் தலைவராக இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், மீண்டும் இந்தியாவிற்கு வந்தார். இந்திய மக்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்ததால், 1916ல் கத்தர் கட்சியினரை பிரிட்டிஷார் வேட்டையாடியதோடு மட்டுமல்லாமல், 1918ல் ‘கறுப்புச் சட்டம்’ என்ற ‘ரௌலட் சட்டம்’ ஒன்றை நடைமுறைக்குக் கொண்டுவந்தனர். இதன் மூலம் ‘பத்திரிக்கைகளை மூடுதல், விசாரணையின்றி அரசியல் செயல்பாடுகளை நசுக்குதல், மற்றும் கைதாணை இல்லாமல் கலகம் அல்லது ராஜ துரோகத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் எந்த ஒரு தனிநபர்களையும் கைது செய்தல்’ போன்ற அக்கிரமங்களை, அதிகாரம் என்ற பெயரில் துஷ்ப்ரயோகம் செய்தனர், வைஸ்ராய்கள். மேலும், 1919ல், அமிர்தசரசில் ஜாலியன் வாலாபாக்கில் கூடியிருந்த நிராயுதபாணியான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற சந்தேகித்திற்கு இடமற்ற கூட்டத்தை நோக்கி சுடமாறு பிரித்தானிய ராணுவத் தளபதியான பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் ஆணையிட்டார். இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை, இரண்டாக பிளவுற்ற காங்கிரஸ் கட்சி, போராட்டங்கள், கிளர்ச்சிகள் எனப் பிரிந்திருந்த இந்திய மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தது. 1920 ஆம் ஆண்டில், ‘கிலாபாத்’, ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘கம்யூனிஸ்ட் கட்சி’, ‘அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ்’ போன்றவைகள் உதயமானது. தனது நாட்டில் நிலவிய சூழலைத் தடுக்க மகாத்மா காந்தி அவர்கள், முதல் சத்தியாக்ரஹ இயக்கத்தைத் தொடங்கி, ஆங்கிலேயர்களை எதிர்த்தார். இதனால், காந்திக்கு 1922ல் ஆறுவருட சிறைதண்டனை விதிக்கப்பட்டு, இரண்டாண்டுகளிலேயே விடுதலையும் செய்யப்பட்டார். 1929ல், டில்லி பாராளுமன்றத்தில் பகத்சிங் குண்டு வீசினார். இதை மிகவும் கடுமையாக எதிர்த்த காந்தியடிகள், ‘அமைதியால் மட்டும் தான் சுத்தந்திரம் அடைய முடியுமென்று’ எண்ணி, 1930 ஆம் ஆண்டில் ‘தண்டி யாத்திரை’ எனப்படும் ‘உப்பு சத்தியாக்கிரகம்’ நடத்தினார். அப்போது தான் முதல் வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. அடுத்த ஆண்டில், ‘காந்தி-இர்வின்’ ஒப்பந்தம் கையெழுத்தானதோடு மட்டுமல்லாமல், அவர் லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டார். இந்த மாநாடு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் இந்தியா திரும்பினார். அதே ஆண்டில் தான் ஆங்கிலேயர்களை எதிர்த்த பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டார்.

இரண்டாம் உலகப் போரில் இந்தியா கலந்துகொண்டது. மேலும், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலேயர்கள், இந்தியாவை இரண்டு நாடுகளாகப் பிரித்தனர். 1940ல் ‘தனிநபர் சத்தியாக்கிரகம்’ மற்றும் 1942ல் ‘வெள்ளையனே வெளியேறு தீர்மானம் போன்றவை நிறைவேற்றப்பட்டது. 1943 ஆம் ஆண்டில், நேதாஜி இந்திய ராணுவத்தை தென்கிழக்காசியாவில் நாடுகடத்தப்பட்ட இந்திய தேசபக்தர்களையும் ஜாப்பான் உதவியுடன் உருவாக்கினார். இதைத் தொடர்ந்து, 1946ல் ‘ஆர்ஐஎன் கழகம்’ எனப்படும் ‘கப்பற்படை எழுச்சி’ எழுப்பப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைதல்

சுதந்திரத்திற்காகப் பல போராட்டங்களையும், கிளர்ச்சிகளையும் எழுப்பியத் தலைவர்களும், புரட்சியாளர்களும் சிறிதளவு கூட களைப்படையவில்லை. ஆனால், பிரித்தானிய மக்களும், பிரித்தானிய ராணுவமும் இந்தியாவில் மென்மேலும் அடக்குமுறையை ஏற்படுத்துவதற்கு விருப்பமற்றிருந்தது. 1947 ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்திய கவர்னர்-ஜெனரலான விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன் அவர்கள், ஜூன் 3 ஆம் தேதியன்று ‘பிரித்தானிய இந்தியப் பேரரசை மதச்சார்பற்ற இந்தியா’ என்றும், ‘முஸ்லீம் பாகிஸ்தான்’ என்றும் பிரித்தளிப்பதாக அறிவி்த்தார். இந்தத் தேசப் பிரிவினையால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் தேதி பாகிஸ்தான் தனி தேசமாக பிரிந்துசென்றது. மேலும், இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி நள்ளிரவில், சுதந்திர தேசமானது. சுதந்திர இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப் பிரதமராக சர்தார் வல்லபாய் படேலும் பதவியேற்றனர். அவர்கள், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டனை அதே பதவியில் தொடரும்படி அழைத்தனர். அவர்களது அழைப்பை ஏற்ற அவரும், சிறிது காலம் பதவியில் இருந்தார். பின்னர், 1948 ஆம் ஆண்டு ஜூனில் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி அவருக்கு பதிலாக அமர்த்தப்பட்டார்.

சுதந்திர தின கொண்டாட்டங்கள்

ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தேசியக் கொடியேற்றி நலத் திட்ட உதவிகளை வழங்குவார்கள். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய பின்னர், விடுமுறை அளிக்கப்படும். டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்படும் இத்தினத்தில், நாட்டின் பிரதமர் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து, உரையாற்றுவார். இவ்விழாவில், முப்படை அணிவகுப்பு, நடனம், நாட்டியம் எனப் பல்வேறு வண்ணமயமான நிகழ்ச்சிகளும் இடம்பெறும். ஒவ்வொரு பிரஜைக்கும் முக்கியமான தினம் என்பதால், அனைவரும் தங்களது வாழ்த்துகளை, இந்நாளில் தங்களது பிரியமானவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

தேசபக்தியுடன் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க பாரதம்!!!
Thanks Itstamil 

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்கிரம் அம்பாலால் சாராபாய் பிறந்த தினம் ஆகஸ்ட் 12, 1919

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை 
விக்கிரம் அம்பாலால் சாராபாய் பிறந்த தினம் 
ஆகஸ்ட் 12, 1919. Vikram Ambalal Sarabhai, 

விக்கிரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhai, ஆகஸ்ட் 12, 1919 – டிசம்பர் 30, 1971) இந்திய இயற்பியலாளர். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார். 1969ம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார்.

விக்கிரம் அம்பாலால் சாராபாயி

Dr.விக்கிரம் சாராபாயி
பிறப்பு
ஆகத்து 12, 1919 
அகமதாபாத், இந்தியா
இறப்பு
30 திசம்பர் 1971 (அகவை 52)
கேரளா, இந்தியா
தேசியம்
இந்தியர்
துறை
இயற்பியல்
பணியிடங்கள்
இந்திய விண்வெளி ஆய்வு மையம்
இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்
ஆய்வு நெறியாளர்
சர். ச.வெ.இராமன்
அறியப்படுவது
இந்திய விண்வெளித் திட்டம்
விருதுகள்
பத்ம பூசன் (1966)
பத்ம விபூசண் (இறந்த பிறகு அளிக்கப்பட்டது) (1972)

1919ஆம் ஆண்டு ஆகசுது 12 அன்று ஆமதாபாதில் ஒரு செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தார்.

ஆய்வு நிலையங்கள் நிறுவுதல்

இங்கிலாந்தில் Ph.D. ஆராய்ச்சியை முடித்துத் திரும்பிய சாராபாயி, ஆமதாபாதில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை (Physical Research Laboratory) 11 நவம்பர 1947இல் நிறுவினார். 1955ல் காசுமீரம் குலுமார்கில் அதன் கிளை ஒன்றையும் நிறுவினார். பின்னர், திருவனந்தபுரம், கோடைக்கானல் ஆகிய இடங்களிலும் ஆய்வகங்களை நிறுவினார்.

இந்தியாவை விண்வெளி யுகத்திற்கு இட்டுச்செல்லல்

இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமானவர் விகிரம். SITE எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சி’ மூலம் 2,4000 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (ISRO) விரிவாக்கினார்.

பிற துறைகளில் பங்கீடு

விண்வெளித்திட்டங்கள் தவிர, பஞ்சாலைத் தொழில், மேலாண்மைப்பயிற்று நிலையம் ஆகியவற்றையும் தொடங்கினார்.

விருதுகளும் பெருமைகளும்

பதும பூசண்
பதும விபூசண்
1973ல் உலகளாவிய வானியல் ஒன்றியம் நிலவிலுள்ள அமைதிக்கடல் (Sea of Serenity) பகுதியில் உள்ள ஒரு பெருங்குழிக்கு விக்கிரமின் பெயரைச் சூட்டினர்.

உலக இளைஞர் தினம் ஆகஸ்ட் 12.


சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரப் பிரகாரம் சர்வதேச இளைஞர் தினம் International Youth Day (IYD) ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி கொண்டாப்படுகின்றது. இளைஞர்கள் ஒரு நாட்டின் நிர்ணய சந்ததிகள். இளைஞர்களை ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தலாம். அதேநேரம், அழிவுபூர்வமாகவும் பயன்படுத்தலாம். பொதுவாக ஒரு நாட்டின் சொத்துக்களாகக் கருதப்படும் இளைஞர்களை நெறிப்படுத்தி அவர்களை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி சௌபாக்கியமான எதிர்காலமொன்றுக்கு வழிகாட்டுவதும் அவர்களது உணர்வுகளை சிறந்த முறையில் நெறிப்படுத்துவதும், நம்பிக்கை உணர்வினையும், வெற்றி மனப்பாங்கினையும் ஏற்படுத்துவதுடன், இளைஞர்களின் செயற்பாடுகளை கௌரவித்து மதிப்பளிப்பதும் இத்தினத்தின் முக்கிய நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது.
1998ம் ஆண்டு ஆகஸ்ட் 08ம் தேதி முதல் 12ம் தேதி வரை லிஸ்பன் நகரில் நடைபெற்ற உலக நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் குழு சர்வதேச ரீதியில் இளைஞர்களின் பிரச்சினைகளையும், இளைஞர்களின் செயல்பாடுகளையும் கவனத்திற் கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கான சர்வதேச தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என சிபாரிசு செய்தது. இதன்படி 1999 டிசம்பர் 17ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 54/120/ ( resolution 54/120) இலக்க பிரேரனைப்படி சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12ம் தேதி கொண்டாடப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய 2000ம் ஆண்டு முதல் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலக இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பிரதானமாக கவனத்தில் ஈர்க்கும் முகமாக உலகளாவிய ரீதியில் அரசுகள், அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் செயல்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறாக ஆகஸ்ட் 12ம் தேதி சர்வதேச ரீதியில் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டாலும்கூட, சர்வதேச தினம் என்பதை விட ஒவ்வொரு நாடுகளும் தேசிய ரீதியில் இத்தினத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவதை அவதானிக்கலாம். உதாரணமாக இந்தியாவில் விவேகானந்த அடிகளாரின் பிறந்த தினத்தை மையமாகக் கொண்டு 1985ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜனவரி 12ம் தேதி தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படுகின்றது. எவ்வாறாயினும் சர்வதேச ரீதியிலும் சரி, தேசிய ரீதியிலும் சரி, பிரதேச ரீதியிலும் சரி இவ்வாறு கொண்டாடப்படும் விழாக்கள் ஒரே அடிப்படையினைக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.

நமது வாழ்க்கையை உடலியல் அடிப்படையில் குழந்தைப் பருவம், இளமை, முதுமை என மூன்று பிரதானப் பிரிவுகளாக வகுக்கலாம். குழந்தைப் பருவத்தில் உடலாலும் மனதாலும் நமது தேவைகளை நிறைவு செய்ய மற்றவர்களைச் சார்ந்துள்ளோம். இந்தப் பருவம் ஒவ்வொருவரின் எதிர்கால வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. நல்ல பழக்கங்கள், துணிச்சல் தன்னம்பிக்கை ஆகியன ஆழ்மனதுக்குள் செலுத்தப்பட வேண்டிய பருவம். சொந்த அனுபவங்கள் இல்லாத பருவம். பாகுபாடு காணத் தெரியாத உழைக்க முடியாத பருவம்.

விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டமாகும். இப் பருவத்துக்கான வயதெல்லை எல்லாப் பண்பாடுகளிலும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. பல காலமாகவே பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுவந்துள்ளது. அண்மைக் காலங்களில் பருவமடைதல் காலம் விடலைப் பருவத்துக்கு முன்னதாகவே தொடங்கி விடலைப் பருவத்துக்கு அப்பாலும் போவதைக் காணக்கூடியதாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் விடலைப் பருவத்தை 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட காலம் என வரையறை செய்துள்ளது.


விடலைப் பருவத்துக்கு பின்னர் வரும் பருவம் இளமை ஆகும். பொதுவாக 18 - 24 அல்லது 29 வயதுவரை இளமைப் பருவம் எனப்படுகிறது. இவர்களை இளையோர் அல்லது வாலிபர் என்பர். பிற பருவத்தினருடன் ஒப்பிடுகையில் இளயோரிடம் குறிப்பிடத்தக்க சில பண்பியல்புகள் உண்டு. இளைய பருவம் மாற்றத்தை இலகுவில் ஏற்று தன்னை மாற்றியமைத்துக்கொள்ள கூடியது, துணிவுமிக்கது, செயற்பாட்டை முதன்மைப்படுத்துவது. இப்பருவத்தில் பாலியல் கவர்ச்சியும் ஈடுபாடும் அதிகம் இருக்கும். இளையோரை பெரும் சதவீதமாக கொண்ட ஒரு சமூகம் வன்முறைப் போக்கு எடுப்பதற்கு கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு என்றும் கூறப்படுகின்றது. அனேக நாடுகளில் இளையோரே அதிகம் வேலையற்றோராக இருக்கின்றார்கள்.

முதுமை என்பதை 60க்கு மேல் எனக் கூறுவதே பொருத்தமாய் இருக்கும். பெரும்பாலும் 60 வருடம் என்பது பணி நிறைவுக்கான வயது. அதன்பின் ஓய்வு என்பது நடைமுறையிலுள்ள அரசு விதி, முதுமையில் பணிபுரிவதில் சக்தியின்மை இருந்தாலும் வாழ்க்கை அனுபவத்தால் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் வாய்ப்பு உண்டு.

சுவாமி விவேகானந்தர், “இளைஞர்கள் 100 பேரை என்னிடம் கொடுங்கள்; இந்திய நாட்டையே நல்ல நாடாக மாற்றிக் காட்டுகிறேன்" என்று கூறியது இளைஞர் தம் சிறப்பு. உத்வேகம், அர்ப்பணிப்பு, நாட்டுப்பற்று மிக்க இளைஞர்களை வழிநடத்திச் செல்லக் கூடிய இளமை, துடிப்பு, சுயநலமில்லாது பாடுபடும் அர்ப்பணிப்பு, ஞானம் மிகுந்த விவேகானந்தரைப் போல் ஒரு வழிகாட்டியைக் கண்டுகொள்வதுதான் இன்றையச் சூழலின் தேவையாகிறது.

இன்று உலகின் எல்லா நாடுகளிலும் இளைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்தி அந்த நாடுகளின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக உள்ளனர். கடும் குளிர், மிகுந்த வெப்பம் என எந்தவிதமான நிலையிலும் பணிபுரியும் தகுதியுள்ளவர்கள். உடல் ஆற்றலுடன் அறிவாற்றலில் சிறந்து விளங்குபவர்கள் நம் நாட்டு இளைஞர்கள். உலகின் பல முன்னோடி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளைத் தம் தகுதியால் அலங்கரித்து வருபவர்கள். பணிபுரிய சுய கௌரவம் பார்க்காமல் குடும்பப் பொறுப்புடன் செயல்படும் இளைஞர் பட்டாளம் நம்மிடையே உள்ளது. சிக்கலான கல்வி கற்பதிலே முன்னணியில் நிற்பவர்கள் நம் இளைஞர்கள். தமக்கென தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, அதில் திறமையுடனும், துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் பயணிப்பவர்கள்தான் நம் இளைஞர்கள்.

இவ்விடத்தில் சோக்ரடீஸின் வரலாற்றுடன் இணைந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. ஓர் இளைஞன் சோக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சோக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சோக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார். அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான். சோக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?" என்று கேட்டார். அந்த இளைஞன் “காற்று" என்று பதிலளித்தான். சோக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்" என்று சொன்னார். இதைத் தவிர வேறு எந்த இரகசியமும் இல்லை.

இந்த உதாரணம் இளைஞர்களின் உணர்வுக்களிக்கப்படும் முக்கியத்துவத்தை படிப்பினையுடன் கூடி எடுத்துக் காட்டுகின்றது. ஒவ்வொரு இளைஞனும் தன்னம்பிக்கையுடன் தனது பணியினை முன்னெடுக்கக் கடமைப்பட்டுள்ளான்.


இன்றைய இளைஞர்கள் ஒருவரைப் பின்பற்றும்போது முழுக்க முழுக்க அவராகவே மாறிவிடக்கூடாது. மாறாக, நல்ல குணங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை விவேகானந்தர் அழகாகக் கூறுகிறார். 'ஒரு விதையை நிலத்தில் போடுகிறோம். அதன் வளர்ச்சிக்குத் தேவையான எரு, தண்ணீர் ஆகியவற்றை அளிக்கிறோம். அவ்விதை எருவாகவோ, தண்ணீராகவோ மாறாமல் தன் இயல்பிலேயே எடுத்துக்கொண்டு பிரம்மாண்ட மரமாகிறது". அது போல, 'கற்றுக்கொள்ள வேண்டியதை மட்டும் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வழி சொல்கிறார்.'அளவற்ற தன்னம்பிக்கை உடையவர்களாக இருங்கள். நான் இளமையில் அத்தகைய நம்பிக்கை உடையவனாக இருந்தேன். அதுதான் இப்பெரிய காரியங்களைச் செய்யக்கூடிய சக்தியை எனக்களித்து இருக்கிறது. இளமையும், சக்தியும், நம்பிக்கையும் இருக்கும் காலத்தில்தான் உங்கள் எதிர்கால இலட்சியத்தை நீங்கள் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.

உங்களின் மீதும் உங்கள் திறமைகளின் மீதும் உங்களுக்கு உள்ள ஆழமான நம்பிக்கைதான் உங்கள் கனவுகளை நிறைவேற்றும். உங்கள் கனவைச் சொல்லும்போது, உங்கள் வார்த்தைகளில் உயிர் துடிப்பு இருக்க வேண்டும். உங்களின் ஆர்வம் கேட்போரைத் தொட வேண்டும். உங்கள் கனவு எதுவாக இருந்தாலும் அதை சாத்தியமில்லாது என்று ஒதுக்க வேண்டாம். “சாத்தியமில்லாதது" என்று எதுவுமேயில்லை.

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது. தன்னம்பிக்கையோடு திட்டமிட்டு, விடாமுயற்சியோடு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். “Never, neer, neer give up" என்று வின்ஸ்டன் சர்ச்சில் சொல்வதுண்டு. வீட்டில் சன்னலருகே வைக்கப்பட்டுள்ள செடியானது வெளிச்சம் தேடி வெளியே வளைந்து செல்வதைப் போல, விடா முயற்சியுடையவர்கள் புதிய பாதைகளைத் தேடிக்கொண்டு தொடர்ந்து முன்னேறுவர்.

வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது தாங்கள் மட்டும் விழித்திருந்து உழைத்தவர்களே. சலிப்புக்கு இடங்கொடாமல் கடும் உழைப்பை உணவாக உட்கொண்டவர்கள், “ஒளி படைத்த கண், உறுதிகொண்ட நெஞ்சம், களிபடைத்த மொழி, கடுமை கொண்ட தோள், தெளிவு பெற்றமதி" என்றெல்லாம் முகமன் கூறிய பாரதியின் வார்த்தைகளை இளையபாரதம் மெய்ப்பிக்க வேண்டும். குறுகிய சிந்தனையில் வாழ்வைக் குலைத்துக்கொள்ளாமல் சமுதாய நோக்கில் சிந்தித்து செயல்பட்டால் இளைஞர்களுக்கு வெற்றி நிச்சயம்.

சர்வதேச இளைஞர் தினம் கலைவிழாக்கள், போட்டி நிகழ்ச்சிகள், இளைஞர் பாசறைகள், கலாசார நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களினூடாக முன்னெடுக்கப்படுகின்றன. 2000ம் ஆண்டில் முதலாவது சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்பட்ட போது இத்தினத்தை முறைப்படி கடைபிடிப்பதற்கு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

2001ம் ஆண்டில் வேலையின்மை, சுகாதாரம் ஆகியவற்றில் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், 2002ம் ஆண்டில் நிகழ்க்காலத்திலும், எதிர்காலத்திலும் அபிவிருத்தி செயற்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்புகள் குறித்தும், 2003ம் ஆண்டில் இளைஞர்களுக்கு பண்புமிக்கதும், உற்பத்தித் திறனுடையதுமான தொழில் வாய்ப்புக்களை தேடிக் கொடுப்பது பற்றியும், 2004ம் ஆண்டில் சமூக அபிவிருத்தியில் இளைஞர்களின் பங்கு பற்றியும், 2005ம் ஆண்டில் இளைஞர்களின் பணிகள் பற்றியும், 2006ம் ஆண்டில் வறுமை ஒழிப்பில் இளைஞர்களின் பங்கு பற்றியும், 2007ம் ஆண்டில் அபிவிருத்திப் பணிகளில் இளைஞர்களின் கடப்பாடு பற்றியும்,

2008ம் ஆண்டில் காலநிலை மாற்றம், நேரமுகாமைத்துவம் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்பு பற்றியும், 2009ம் ஆண்டில் அபிவிருத்தி, உற்பத்தி செயற்பாடுகளில் இளைஞர்களின் சவால்களும், எதிர்காலம் பற்றியும் கருப்பொருளாகக் கொள்ளப்பட்டன. குறிப்பாக சூழல், சமூகம், பொருளாதாரம் ஆகிய செயற்பாடுகளில் இளைஞர்களின் மனோநிலை விருத்தியை வளர்ப்பது குறித்தும், இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வது குறித்தும் இத்தினத்தில் விசேடமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றன.

இளைஞர் தினத்தின் தொணிபொருள்களை பின்வருமாறு ஒரு பார்வையில் நோக்கலாம்.
நன்றி புன்னியாமீன்

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

உலக யானைகள் தினம் ஆகஸ்ட் – 12.



உலக யானைகள் தினம் ஆகஸ்ட் – 12.

 யானைகள் நிலைமை நாளுக்கு நாள் மனிதர்களின் வாழ்க்கை முறைகளால் கடுமையாக பாதிக்கப் பட்டு வருகிறது. இனியும் இயற்கை முன் வந்து யானைகளை காக்க வேண்டும் என்றால் பரிணாமத்தில்யானைகளுக்கு இறக்கைகள் தான் முளைக்க வேண்டும். இன்றைய நிலையில் இந்தியா முழுவதும் யானைகள் இருப்பதைப் போன்ற பிம்பம் நமக்கு கோவில் யானைகளை காண்பதினால் ஏற்ப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் மேற்கு தொடர்ச்சி மலை, ஒடிசா, ஜார்கண்ட், உத்தர்கண்டு, அஸ்ஸாம் காடுகள், மற்றும் இமயமலைச் சாரல்களில் முப்பதினாயிரம் யானைகள் மட்டுமே வாழ்கின்றன. யானைகளின் உதவியினால் இந்த காடுகள் மட்டுமே இன்றும் இந்தியாவில் பல்லுயிர் சூழலோடு பசுமையாய் இருக்கின்றன. யானைகளைப் பொறுத்தவரை சிறு சிறு குழுக்களாக நீர் வளம் மிக்க காடுகளுக்கு இடையே வலசை சென்று கொண்டே இருக்கும். அங்கே நம் மண்ணின் மரம், செடி, கொடிகளை உண்டு தொடர்ந்து விதைப் பரவல் நடக்கச் செய்யும். யானைகளின் வலித்தடத்தையும், அவை கண்டறியும் நீர் ஊற்றுக்களையும், யானையின் சாணத்தை சார்ந்தே உயிர் வாழும் பல உயிர்கள் காடுகளில் உண்டு, ஆனால் இன்று யானைகள் வாழும் காடுகளும் அதன் வழித்தடங்கள் முழுவதும் புறநகர் ஆக்கிரமிப்புக்கள், சாலை குறுக்கீடு, இரயில் பாதைகள், சுரங்கங்கள் என காடுகள் முழுவதும் துண்டாடப்பட்டு கிடக்கின்றன. இதனால் யானைகள் மட்டும் அழியவில்லை.வளமிக்க காடுகளையும் நாம் அழித்துக் கொண்டு இருக்கிறோம். இயற்கையாய் யானைகளின் மூலம் நடைபெறும் விதைபரவல்தடைபடுவதால் காடுகளில் அந்நிய களைச் செடிகளின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. இந்த மோசமான மாற்றங்கள் எல்லாம் நாளைய இயற்கை சூழல், தட்ப வெப்ப மாற்றங்களுக்கு வழிவகுக்கும். எனவே நாம் செய்யும் தவறுகளுக்கு நமது நாளைய சந்ததிகள் பதில் சொல்ல வேண்டி வரும். எனவே எதிர்கால சந்ததிகளின் நலன் கருதி நம் வனத்தையும், நம் வன உயிர்களையும் காப்போம். இந்த உலகில் ஒரு சிறிய எறும்பு முதல் பெரிய யானைகள் வரை இயற்கையை சார்ந்து அதன் வளத்துக்கு ஊறு விளைவிக்காமல் வாழ்கின்றன. ஆனால் , மனிதன் ?…இனியாவது, நாமும் வாழ்வோம் . பிற உயிர்களையும் வாழ்விடுவோம்.


யானைகள் பற்றி ஆச்சரியமூட்டும் 10 உண்மைகள்

0
921
யானைகள் நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினங்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆஃப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவி வாழ்ந்து வரும் யானைகள் இப்பூவுலவில் வாழும் பிற விலங்குகளில் இருந்து பல உருவத்தில் மட்டுமல்லாது, பல்வேறு குணங்களிலும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.
அற்புதமான இந்த யானைகளில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை ஆஃப்ரிக்க யானைகள், மற்றொன்று ஆசிய யானைகள். இந்தியாவில் இருந்து தெற்கே இலங்கை முதல் வடக்கே பூட்டான் வரை  கிழக்கே இந்தோனேசியா, வியட்நாம்  வரை பரவி வாழ்பவை ஆசிய யானைகள். ஆஃப்ரிக்கா கண்டத்தின் பாதி பகுதிகளில் வாழ்பவை  ஆஃப்ரிக்க யானைகள். ஆஃப்ரிக்கா யானைகளுடன் ஒப்பிடுகையில் ஆசிய யானைகள் உருவத்தில் சற்றே சிறியவை.
யானைகளின் வித்தியாசமான  நடவடிக்கைகள் அவ்வப்போது நம்மில் பலரை ஆச்சரியப்படுத்துவதை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். இந்த அழகிய, அறிவார்ந்த மற்றும் அமைதியான விலங்குகள் பற்றிய விழிப்புணர்வுக்காக, யானை பற்றிய ஆச்சரியமூட்டும் 10 உண்மைகள் இங்கே.
  1. 1யானைகளுக்கு நீரில் நீந்த தெரியும்

    யானைகள் நீர்நிலைகளைக் கண்டால் சிறு குழந்தைகள் போல, உடனே ஓடிச்சென்று, உடல் முழுவதும் நனைய ஆட்டம் போடுபவை. நீரில் மூழ்கியும், தண்ணீரை உடலின் மீது பீய்ச்சி அடித்தும் குதூகலத்துடன் விளையாடுபவை. உங்களுக்கு தெரியுமா? யானைகளுக்கு ஆழமான நீர்நிலைகளிலும், ஆறுகளிலும் எளிதாக மிதக்கத் தெரியும்.
    இவ்வளவு பெரிய யானைகள் எப்படி மிதக்கின்றன? யானையின் மிகப்பெரிய உடலே அது எளிதில் மிதப்பதற்கு உதவுகிறது. நீந்தும் போது யானை, தனது பெரிய நுரையீரல்களால் மிதக்கும் திறனை பெறுகிறது. தும்பிக்கையை நீருக்கு மேலே நீட்டி காற்றை சுவாசிக்கிறது. யானை தனது பெரிய உடலைத்  தாங்க கால்களை எப்போதும் பயன்படுத்தும். மிதப்பதால் யானை தனது கால்களுக்கும், மூட்டுகளுக்கும் ஓய்வைத் தருகிறது. 
  2. 2யானையின் தோல் அதிக உணர்திறன் கொண்டது.




    யானையின் சருமம் மிகுந்த உணர்திறன் கொண்டது. யானையின் தோல் தடிமனாக இருந்தாலும், தன் மீது ஒரு சிறு ஈ அமர்வதைக் கூட உணர்ந்து கொள்ளும். 
  3. 3நீண்ட கர்ப்ப காலம் - 22 மாதங்கள்




    பாலூட்டி வகைகளிலேயே மிக அதிக கர்ப்ப காலம் கொண்டது யானை மட்டும் தான். 22 மாதங்கள் குட்டியை சுமக்கிறது. மிக மிக அரிதாக எப்போதாவது இரண்டு குட்டிகளை ஈனும். யானைகளின் சராசரியாக  60 வயது வரை வாழ்பவை என்ற போதும், பெண் யானை 50 வயது வரை கர்ப்பம் தரித்து குட்டியை ஈனும்.
  4. 4யானைக்குட்டி பிறந்த சிறிது நேரத்திலேயே எழுந்து நிற்கும்




    புதிதாக பிறந்த யானைக்குட்டிக்கு கண் பார்வை தெரியாது. யானைக் குட்டி பிறக்கும் போது அதிகபட்சமாக 115 கிலோ எடை இருக்கும். ஆனால், இவ்வளவு பெரிதாக இருந்தாலும் கூட பிறந்த சிறிது நேரத்திலேயே யானைக்குட்டியால் எழுந்து நிற்க முடியும். காட்டில் இருக்கும் பிற வேட்டை விலங்குகளான சிங்கம், புலி ஆகியவற்றிடம் இருந்து தப்பிக்க உடனடியாக எழுந்து நிற்பதும், நடப்பதும் அவசியம். யானைகளின் மரபணுவிலேயே பரிணாம வளர்ச்சியால் உருவான எச்சரிக்கை குணத்தால் விரைவில் எழுந்து நிற்பது சாத்தியம் ஆனது. 
  5. 5யானை துதிக்கையால் வாசனையை நுகரக்கூடியது




    யானைகள் காற்றில் வரும் வாசனையைக் கொண்டு சுற்றுப்புறத்தை  அலசுகின்றன. வேட்டை விலங்குகள் அருகில் இருந்தாலோ அல்லது வேறு எந்த வகையிலுமோ இருக்கும் இடம் பாதுகாப்பாக இல்லையெனில், கூட்டமாக அவ்விடத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான வேறு இடத்துக்குச்  சென்று விடும்.
  6. 6யானையின் பிளிறல் சத்தம் 9 கி.மீ தொலைவு கேட்கும்




    யானை பல வகையான ஒலியை எழுப்பக்கூடியது. உற்சாகத்தின் போதும், துன்பத்தின் போதும் அல்லது ஆக்ரோஷமாக இருக்கும் போதும் துதிக்கையை தூக்கி எழுப்பும் பிளிறல் ஒலியை 9 கி.மீ க்கு அப்பால் உள்ள மற்றொரு யானையால் கேட்க முடியும். மேலும், தனது காலின் கீழ் உள்ள தசையின் மூலம் அதிர்வுகளையும் கேட்கக்கூடியது யானை. மேலும், தனது துதிக்கையை தரையில் வைத்தும், அதிர்வுகளை உணர்ந்து அதற்கேற்றது போல் செயல்படக் கூடியது.
  7. 7யானையின் தந்தம் உடைந்தால் மீண்டும் வளரக்கூடியது




    யானையிடம் இருக்கும் ஒரு கூர்மையான ஆயுதம் அதன் தந்தம் ஆகும். வெட்டுப்பற்கள் தான் பெரிதாக வளர்ந்து தந்தமாகிறது. பிற விலங்குகளுடன் சண்டையிட தந்தத்தை பயன்படுத்துகிறது. சில நேரங்களில் சண்டையின் போது, தந்தங்கள் உடைந்து விடக்கூடும். பாதியளவு தந்தம் உடைந்தால் மீண்டும் வளர்ந்துவிடும். ஆனால், வலுவான மற்றொரு யானையுடன் மோதும் போது தந்தம் முழுவதுமாக முறிந்து விடக்கூடும். அவ்வாறு முறிந்துவிட்டால், ரத்தம் கசிய வலியுடன் பிளிறிக்கொண்டு உயிரை காப்பாற்றிக்கொண்டு ஓடிவிட வேண்டியது தான். விழுந்த தந்தம் மீண்டும் முளைக்காது. அதன் பிறகு காலம் முழுதும் தந்தம் இல்லாமல் தான் வாழ வேண்டும். சரி! இவ்வளவு ஆபத்து இருக்கும் போது எதற்காக சண்டையிடுகின்றன என்கிறீர்களா? வேறென்ன... பெண் யானைக்காகத்தான்.
  8. 8துதிக்கையில் 40000 தசைகள் உள்ளன




    யானை 40000 தசைகள் உள்ள தனது, துதிக்கையை பயன்படுத்தி ஒரு பொருளின் அளவு, வடிவம் மற்றும் வெப்பநிலையை உணரக் கூடியது. யானை துதிக்கையை உணவை எடுக்கவும், தண்ணீரை உறிஞ்சி அதன் வாயில் ஊற்றி  குடிக்கவும் பயன்படுத்துகிறது. துதிக்கையை நிலத்தில் ஊன்றி சுற்றுப்புற அதிர்வுகளையும் கேட்கும்.
  9. 9கண்ணாடியை பார்த்து தன்னை அடையாளம் கண்டுகொள்ளும்.

    உலகில் வாழும் விலங்குகளில், கண்ணாடியை பார்த்து தன்னை அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய விலங்குகள் வெறும் 5 தான். மனிதர்கள், குரங்குகள், மாக்பை(Magpie) எனப்படும் ஒரு வகை பறவை, டால்ஃபின் தவிர கண்ணாடியை பார்த்து தன்னை அடையாளம் கண்டு கொள்ளும் அறிவுள்ள விலங்கு யானை.
  10. 10யானைகள் குடும்பமாக வாழும் சமூக விலங்குகள்




    யானைகள், வயது முதிர்ந்த பாட்டி யானையின் தலைமையில் கூட்டமாக வாழக்கூடியவை. ஒரு யானைக்குட்டி புகார் செய்தால், கூட்டத்தில் இருக்கும் அனைத்து யானைகளும், முழு அரவணைப்போடு அதைத் தொட்டு ஆறுதல் அளிக்கும். யானைகள் மகிழ்ச்சி, சோகம், இரக்கம், எச்சரிக்கை உணர்வு  ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. 
    வயது வந்த ஆண் யானை, கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியே சுற்றித் திரியும், அல்லது, பெண் யானைகளே அதை கூட்டத்திலிருந்து பிரித்து அனுப்பி விடும். குடும்பத்தில் முழுதும் பெண் யானைகளின் ஆதிக்கம் தான். வயது வந்த ஒரு ஆண் யானை கூட கூட்டத்தில் இருக்காது.
    காட்டு யானையின் சராசரி வாழ்நாள் 50 முதல் 70 ஆண்டுகள். லிங் வாங் எனறு பெயரிடப்பட்ட ஆசிய யானை மிக அதிகமாக 86 வயது வரை வாழ்ந்தது. மிகப் பெரிய யானை 11000 கிலோ எடையும், 13 அடி உயரமும் இருந்தது.
    யானைகள் பற்றி உங்களுக்கு ஏதேனும் சிறப்பான தகவல் இருந்தால் கீழே பின்னூட்டம் இடவும். நன்றி!
  11. Tanks Neotamil.