பக்கங்கள்

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

மனித உரிமை தினம் டிசம்பர் 10


மனித உரிமை தினம் டிசம்பர் 10 

ஐக்கிய நாடுகள் அவை 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் உலக மனித உரிமைப் பேரறிக்கை என உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை பிரகடனப்படுத்தியது. அந்த நாளைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும்
டிசம்பர் 10 ஆம் தேதி உலக நாடுகள் அனைத்தாலும் ”மனித உரிமை நாள்” கொண்டாடப்படுகிறது.
1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய
ஐக்கிய நாடுகளின் பொது அவையால்
அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல், டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.
நோக்கம்
ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதும், மற்ற மனிதரையும் வாழ விடும் நெறிமுறையை உணர்த்துவதே இப்பிரகடனத்தின் முக்கியக் கருத்தாகும். எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்களாகவும், உரிமையிலும், கண்ணியத்திலும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் என்பதை இப்பிரகடனம் வலியுறுத்துகிறது. இனம் ,
நிறம் , பாலினம் , மொழி , மதம் , அரசியல் ,
நாடு, சமுதாய தோன்றல், சொத்து,
பிறப்பு அல்லது சமூக உயர்வு போன்ற எந்த வித வேறுபாடுகளும் இன்றி ஒவ்வொரு மனிதனும் வாழ்வதன் அவசியத்தையும் உணர்த்தவே இந்நாள் கொண்டாடப்படுகிறது.


சர்வதேச மனித உரிமைகள் தினம்

சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்து இழப்பு, படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப் பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனம்.
மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத உரிமைகளை மனித உரிமைகள் என்று அழைக்கிறோம். மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதும் அல்ல. எனவே ஒருவரின் உரிமையை பறிக்க எவருக்கும் உரிமையில்லை.
1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவான அடுத்தாண்டு, பிப்ரவரி மாதம் 16ம் தேதி ஐக்கிய நாடுகள் 'மனித உரிமை ஆணைக் குழு' உதயமானது. ஐம்பத்து மூன்று நாடுகளை அங்கமாகக் கொண்ட இக்குழு, முதல் வேலையாக 'சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.
இக்குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. டிசம்பர் 10, 1948ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியது.
டிசம்பர் 10 என்ற இதே நாளை 1950ம் ஆண்டிலிருந்து 'சர்வதேச மனித உரிமைகள் தினமாக' அறிவித்து கொண்டாடப்பட்டு வருகிறது. உலகத்தில் பிறக்கும் எல்லா மனிதர்களும் சமமான உரிமைகளும், அடிப்படைச் சுதந்திரங்களும் கொண்டிக்கின்றனர் என்ற உண்மையை தான் இந்த நாளில் உலகம் உரத்து கூற வேண்டியது.
மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும் வகையிலும், மனித உரிமைகள் தொடர்பான விஷயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் இந்த தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.
1948ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 'சர்வதேச மனித உரிமைகள் சாசனம்' 30 உறுப்புரைகளைக் கொண்டது.
1. சமத்துவ உரிமை - சகல மனிதர்களும் சுதந்திரமாக பிறக்கின்றனர். அவர்கள் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.
2. ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை - இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்துகளால் வேறுபடுத்த முடியாமல் உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் சம உரிமை பெற்றவர்கள்.
3. சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு.
4. யாரையும் அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை.
5. சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற தாக்குதல்களுக்கும் உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.
6. சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமை
7. பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் எல்லோரும் உரித்தானவர்கள்.
8. ஒருவரின் உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை.
9. சட்டத்துக்கு புறம்பாக ஒருவரை காவலில் வைக்கவோ, நாடு கடத்தவோ யாருக்கும் உரிமை இல்லை.
10. நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை
11. குற்றஞ்சாட்டப்படுவோர், குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் உரிமை.
12. தனிப்பட்ட அல்லது அந்தரங்க விஷயத்தில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம்.
13. ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறவும், திரும்பி வரவும் உரிமை.
14. ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு.
15. ஒவ்வொரு பிரஜைக்கும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற தேசிய இனத்தை மாற்றிக்கொள்ள உரிமை.
16. எந்த ஆணும், பெண்ணும் விரும்பினால், திருமணம் செய்துகொண்டு பாதுகாப்புடன் குடும்பம் நடத்துவதற்கான உரிமை. சமுதாயத்தாலும், அரசாலும் இது பாதுகாக்கப்பட வேண்டும்.
17. சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை. தனியாகவும், கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
18. சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
19. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எவருக்கும் உண்டு. எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகள் இன்றி தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரம்.
20. எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள, சங்கத்தில் உறுப்பினராக யாருக்கும் உரிமை உண்டு.

21. அரசியல் உரிமை - அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபெறவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.
22. சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உரிமை
23. ஒவ்வொருவரும் விரும்பிய தொழில் செய்யவும், வேறுபாடு எதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரிமை கொண்டவர்கள். ஒவ்வொருவருக்கும் தொழிற்சங்கம் அமைக்க உரிமை. அவற்றில் சேர்வதற்கும் உரிமையுண்டு.
24. இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை.
25. ஒவ்வொருவரும் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் உட்பட தமது குடும்பத்தினாலும், உடல் நலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமை உடையவர்.
அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு பெறவும் உரிமை உண்டு.
தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேஷ கவனிப்பு மற்றும் உதவியை பெற உரிமை கொண்டவை.
26. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமாக இருத்தல் வேண்டும்.
27. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையில் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலை மற்றும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
28. மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக அமைப்புகளில் பங்குபற்றும் உரிமை.
29. ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்.
30. இந்த பிரகடனத்தில் குறிபிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் ஒருவர் பெறுவதற்கு தடையாக இருக்க உரிமை கிடையாது.
1979லிருந்து பல நாடுகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கண்காணிக்க தொடங்கின. 1995 இல் எல் சல்வடோர், கம்பொடியா, ஹெயிட்டி, ருவண்டா, புரூண்டி ஆகிய நாடுகளில் ஐ. நா தன் கவனத்தைச் செலுத்தியது.
1993 ஜுன் 14 இல் வியட்னாமில் நடந்த 2வது மனித உரிமைகள் மகாநாடு பெண்கள் உரிமைகள் பற்றி கவனம் செலுத்தியது. இலங்கையில் யுத்த நிலையின் போது உரிமை மீறல்கள் தொடர்பாக கவனத்தில் எடுத்தது.
இப்பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில் இலங்கை ஐ.நா.வில் அங்கம் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஆங்கிலேய காலனித்துவத்திடமிருந்து இலங்கை அதே ஆண்டில் தான் சுதந்திரத்தை பெற்றுக் கொண்டது.
நாம் ஏற்கெனவே பார்த்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் சரத்தில் எவற்றை இலங்கைத் தீவில் வாழும் மக்களுக்கு சாதகமாக இலங்கை ஆட்சியாளர் பாவித்துள்ளார்கள்? உண்மையை கூறுவதானால் சர்வதேச மனித உரிமை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள அத்தனை சரத்துக்களையும் இலங்கை மீறியுள்ளதற்கான ஆதாரங்கள் பலதை உதாரணப்படுத்தலாம்.
இலங்கை சுதந்திரம் பெற்ற வேளையிலே குடியுரிமை, வாக்குரிமை பற்றி எடுத்துக் கூறும் இருபத்தியோராம் உறுப்புரையை மீறியது. அதாவது மலையகத் தோட்டத் தொழிளாலர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு சிங்களச்சட்டம் மூலம் சரத்து 2, 3 மீறப்பட்டன. 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இனக் கலவரங்கள் மூலம் சாரம் 3, 5, 12, 17 ஆகியவை மீறப்பட்டுள்ளன.
நூறு ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களை 1964 ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் நாடு கடத்தியதன் மூலம் சாரம் 4, 15, 23 ஆகியவை மீறப்பட்டுள்ளன. தமிழ் மாணவர்கள் சம கல்வி மறுக்கப்பட்டு தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் சாரம் 26 மீறப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான அவசரகால நிலையுடன் கூடிய பயங்கரவாதச் சட்டம் மூலம் சரத்துக்கள் 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 மீறப்பட்டுள்ளன. இவ்வாறு அடிக்கிக் கொண்டு போகலாம். இந்நிலை யுத்தகாலத்தில் அதிகமாக இருந்தது.
இலங்கை போன்ற நாடுகளில் இனப்படுகொலை, சிறுபான்மையினர் ஒதுக்கப்படல், கல்வி, வேலை வாய்ப்புக்களில் சமத்துவமற்ற நிலை, வழக்கு ஆதாரம் இல்லாமல் கைது செய்தல், காணாமல் போதல், தடுப்புக்காவல் தண்டனைகள், சிறைக்குள் படுகொலை, ஆகிய மனித உரிமை மீறல்கள் இனிமேலும் நடைபெறாதவாறு ஐ.நா சட்டரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
மனித உரிமைகள் ஜனநாயகத்தின் ஆணிவேர், உயிர் நாடி, அது அனைவராலும் மதிக்கப்பட வேண்டும். முழு உரிமைகளும் அது பற்றிய விழிப்புணர்வு தேவை.


சர்வதேச மனித உரிமை தினம் (டிசம்பர் 10) இன்றாகும். அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது.
‘உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிப்போம்’ என்பது இவ்வருட சர்வதேச மனித உரிமைகள் தினத்தின் தொனிப்பொருளாகும். இனி கட்டுரைக்குள் நுழைவோம்.
உலகில் பிறப்புரிமை, எழுத்துரிமை , கருத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப்பெற்று அனைவரும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐ.நா. அமைப்பால் ஆண்டுதோறும் டிச.10-ம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
நாட்டின் சமூக, பொருளாதார அரசியல், நீதி ஆகியவற்றில் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு நாடு,மதம், இனம், மொழி, ஜாதி,, வசதி என்ற காரணங்களால் இந்த உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்பதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
மனித உரிமை
மனித உரிமை என்பது எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் ஆகும்.
இந்த உரிமைகள் ‘மனிதர்கள் மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான விட்டுக் கொடுக்க இயலாத மறுக்க முடியாத சில உரிமைகளாக’கருதப்படுகின்றன.
இனம் சாதி நிறம் சமயம் பால் தேசியம் வயது உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள் மனிதர் சுதந்திரமாக சுமூகமாக நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன.
மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள் வாழும் உரிமை சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் சட்டத்தின் முன் சமநிலை நகர்வுச் சுதந்திரம் பண்பாட்டு உரிமை உணவுக்கான உரிமை கல்வி உரிமை என்பன முக்கியமானவை.
அடிப்படை மனித உரிமைகள்
எவை அடிப்படை மனித உரிமைகள் என்பது தொடர்பாக பல்வேறு வெளிப்படுத்தல்கள் உள்ளன.
அனைத்துலக மட்டத்தில் ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட உலக மனித உரிமைகள் சாற்றுரைகள் அடிப்படையாக பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்த சான்றுரை குடிசார் அரசியல் உரிமைகளையும் பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் என்ற சான்றுரையிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள்
செயல்முறைக் காரணங்களுக்காக ஏதாவதொரு அரசாங்கத்திற்கு மக்களின் சகல மனித உரிமைகளையும் சட்டத்தினால் நன்கு பாதுகாக்கமுடியாது.
மனித உரிமைகளுள் சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ள உரிமைகள் மாத்திரம் அடிப்படை உரிமைகள் என அறிமுகமாகிறது.
அதாவது உலக மனித உரிமைப்பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சகல மனித உரிமைகளும் இலங்கை அரசினால் செயற்படுத்தமுடியாது என்பதுடன் 1978 ம்; ஆண்டு அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மாத்திரமே மக்களுக்கு உரித்தானதாகும்.
உதாரணமாக உலக மனித உரிமைப்பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 3ம்பிரிவு உயிர் வாழும் உரிமை பற்றிக் கூறுகின்றபோதிலும் இலங்கை அரசின் 1978 ம் ஆண்டு அரசியலமைப்பின்கீழ் இது அடிப்படை உரிமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இலங்கை அரசின் 1978 ம் ஆண்டு அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள்
1978 ம்; ஆண்டு அரசியலமைப்பின்கீழ் இது அடிப்படை உரிமைகளத் தயாரிப்பதற்கு ஜக்கிய நாடுகளின் உலக மனித உரிமைகள் பிரகடனத்தைப் பின்பற்றியுள்ளது.
உதாரணம் .
அடிப்படை உரிமைகள் பற்றி 1978 ம் ஆண்டு அரசியலமைப்பின் 3ம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 3ம் அத்தியாயத்திலுள்ள
10வது 11வது 12 வது 13 வது 14வது 15வது உறுப்புரைகள்.
அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தில் கல்வி
1948 டிசம்பர் 10ம் திகதி ஜக்கிய நாடுகள் பொதுச்சபை அனைத்துலக மனித உரிமை பிரகடனத்தை ஏற்றுச் சாற்றியது.
மொத்தமாக 30 உறுப்புரைகள் உள்ளன. அதில் உறுப்புரை 26 நேரடியாக கல்வி உரிமையைப் பற்றிச் சொல்கிறது.
உறுப்புரை 26.
(1) ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது தொடக்க அடிப்படைக்கட்டங்களிலாவது கல்வி இலவசமாயிருத்தல் வேண்டும்.தொடக்கக்கல்வி கட்டாயமானதாயிருத்தலவசியம்.தொழினுட்பக்கல்வியும் உயர்தொழிற்கல்வியும் பொதுவாக பெறக்கூடியதாயிருத்தல் வேண்டும்.உயர்கல்வியானது யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக்கூடியதாக்கபடுதலும் வேண்டும்.
(2) கல்வியானது மனிதனின் ஆளுமையை முழுதாக விருத்தி செய்யுமுகமாகவும் மனித உரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மரியாதையை வலுப்டுத்துமுகமாகவும் ஆற்றுப்படுத்தப்படல் வேண்டும். அது சகல நாடுகளுக்குமிடையேயும் இன அல்லது மதக் குழுவினருக்கிடையையேயும் மன ஒத்திசைவு பொறுதியுணர்வு தோழமை ஆகியவற்றை மேம்படுத்துதல் வேண்டும் என்பதுடன் சமாதானத்தைப் பேணுவதற்காக ஜக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளை மேற்கொண்டு செல்லுவதற்குதவவும் வேண்டும்.
பொருளாதார கலாசார உரிமைகள் சமவாயத்தில் கல்வி
பொருளாதார கலாசார சிவில் உரிமைகள் சர்வதேச சமவாயத்தில் 15 உறுப்புரைகள் உள்ளன.அவற்றில் 13வது 14 வது உறுப்புரைகள் கல்வியைச் சார்ந்ததாகும்.
கல்வியோடு சம்பந்தப்பட்ட சிறுவர் அணி பற்றியும்; அவர்களது உரிமைகள் பற்றியும் சற்று பார்க்கலாம்.
சிறுவர்கள் என்ற தரப்பினர் இரண்டாம் உலக மகா யுத்தம் வரையில் கவனத்தில் கொள்ளப்படாத குழுவினராக காணப்பட்டனர். சிறுவர்களுக்கு பாதுகாப்பு, பராமரிப்பு ஆகியன மிக மிக அத்தியவசியமான தேவையாகும். இச் சந்தர்ப்பத்தில் சிறுவர்கள் பாதுகாக்கப்படுதல் என்பது 1948ம் ஆண்டு ஜக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் வருகையுடனே ஆரம்பித்தது.
குறிப்பாக சிறுவர் உரிமைகள் தொடர்பில் 1989ம் ஆண்டு சிறுவர் உரிமை சாசனம் கொண்டுவரப்பட்டமை ஒரு மைல் கல்லாகும். 1989ம் ஆண்டு பொதுச் சபையினால் கொண்டுவரப்பட்ட சிறுவர் உரிமைகள் சாசனம் உயிர் வாழ்தல் பாதுகாப்பு அபிவிருத்தி பங்குபற்றல் ஆகிய பிரதான உரிமைகளை உள்ளடக்கிருந்தது.
இலங்கை அரசு 1991ம் ஆண்டு சிறுவர் உரிமை சாசனத்தை ஏற்று அங்கீகரித்த போதிலும் கடந்த காலத்தின் அத்தியாயத்தை புரட்டிப் பார்க்கையில் யுத்தம்பொருளாதார நெருக்கடிகள் போசாக்குப் பற்றாக்குறை போன்ற பல காரணங்களாலும் சிறுவர்களை கடத்தல் மற்றும் மோசடி போன்ற காரணங்களாலும் பாலியில் ரீதியான வன்முறைகளாலும் சிறுவர் தொழில் போன்ற சுரண்டல்களாலும் ஆயிரக்கணக்கான சிறார்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக யுத்தத்திற்கு பிந்திய காலத்தில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்கள் பல்வேறு வடிவங்களில் தலைதூக்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் கடந்த வருடங்களில் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்ற போக்கை அவதானிக்க கூடிய அதேவேளை மலையகத்தை எடுத்துக் கொண்டால், சிறுவர்கள் தொழிலாளர்களாக்கப்படுவதால் சிறுவர்களின் உரிமைகள் மீறப்படுகின்ற அதே நேரம் தொடர்ச்சியான மர்ம மரணங்கள், சிறுவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்றதுடன் இலங்கைச் சமூகம் எதிர்நோக்கும் ஒரு புதிய பிரச்சினையாகவும் மாறியுள்ளது.
அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அண்மையில் அரச மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து சிறுவர்களுக்கெதிரான தொடர்ச்சியான வன்முறை பற்றிய கலந்துரையாடலை மேற்கொண்ட போது சிறுவர் உரிமை மீறல்களுக்கு பிரதான காரணங்களாக பின்வருவன இனங்காணப்பட்டன.
1. பெற்றோர் பாதுகாவலரின் கவனமின்மை
2. துஸ்பிரயோகத்தை மேற்கொள்வதற்கான சூழல் அல்லது சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தல்
3. குற்றவாளிக்கு அதிகாரிகள் அல்லது ஒரு சில சமூகப்பெரியோர்கள் மூலம் பாதுகாப்பு வழங்கல்.
4. சிறுவர் உரிமைகள் மீறப்படும் போது வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பாக விழிப்புணர்வின்மை
5. கலாசார காரணிகள்
பொதுவாக இன்றைய பொருளாதார நெருக்கடியுடன் பிள்ளைகளை சிறந்த நிலைக்கு கொண்டு வருவதற்காக பாடுபடும் பெற்றோர்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதில் கூடுதலான கவனத்தை காட்டுகின்றனர்.
இதனால் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகுகின்றது. குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளை எடுத்துக் கொண்டால், அதிகளவில் துஸ்பிரயோகங்களுக்குள்ளாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமை சாசனமானது 18 வயதுக்குட்டபட்ட சகலரும் சிறுவர்கள் என்று வரையறுத்த போதிலும் இலங்கையை பொறுத்தளவில் கட்டாயக்கல்வி என்பது 14 வயது வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பல பாடசாலைகள் ஆரம்பக் கல்வியை மாத்திரம் கொண்டு அமைந்திருப்பதாலும் மேலும் பல்வேறு காரணிகளாலும் மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகிச் சென்று சிறுவர் தொழிலாளர்களாக உருவாகும் சிறார்களின் நிலைமைகளை நோக்கும்போது தலைவிதி மரணத்தில் முடிவடைந்துள்ளது.
மேலும் இன்றைய சிறார்களை ஆட்டிப்படைக்கும் இன்னொரு காரணியாக கல்விக் கூடங்களில் சிறுவர்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைகளைச் சுட்டிக் காட்டலாம். பாடசாலைகளிலும் தனியார் வகுப்புகளிலும் சென்று மாணவர்கள் ஆசிரியர்களால் பாலியல் ரீதியான சுரண்டல்களுக்குள்ளாகின்றனர்.
எனவே இத்தகைய நிலமைகளின் போது குற்றவாளிகளாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள் உயர் மட்ட அதிகாரிகளினால் பாதுகாக்கப்படுகின்றனர்.
இன்று இவ்வாறான பல சம்பவங்களை நாம் அவதானிக்க முடிகின்றது. சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளின் அசமந்த போக்கின் காரணமாக குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கின்றனர்.
உதாரணமாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சட்ட உதவியை நாடுகின்ற போது தேவைப்படும் ஆவணங்களை பெற்றுக் கொடுப்பதனை தாமதமாக்குதல் உரிய ஆவணங்களை வழங்க மறுத்தல் போன்றவற்றை குறிப்பிடலாம்.
கலாசார ரீதியான காரணிகள் இன்று சிறுவர் உரிமை மீறல்களை வெளிக் கொணர்வதில் பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறுவர்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் குடும்பத்தின் கௌரவம் அந்தஸ்து பிள்ளையின் எதிர்காலம் ஆகிய காரணிகளைக் கருத்திற் கொண்டு வெளிக்கொணரப்படுவதில்லை.
இலங்கை போன்ற நாடுகளில் சிறுவர் உரிமை மீறல்களுக்கு ஏதுவான காரணிகளுள், மக்கள் சிறுவர்கள் உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வில்லாதிருப்பதையும் அதேபோல் சிறுவர்களின் உரிமைகள் மீறப்படும் போது விதிக்கப்படும் தண்டனைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் தெளிவின்மையையும் குறிப்பிடலாம்.
சிறுவர் துஸ்பிரயோகம் என்பது வேறு தரப்பினரால் சிறுவர் சட்டபூர்வமற்ற ஒரு செயலுக்காக ஈடுபடுத்துதல்.
சிறுவர் துர்நடத்தை என்பது சிறுவனாலேயே செய்யப்படுகின்ற சட்டபூர்வமற்ற செயல்களாகும்.
இவ்விதமாக இரு விதங்களில் உந்தவொரு செய்கையும் சட்டத்தின் பிரகாரம் தண்டனை பெறக்கூடிய குற்றமாகும்.
முக்கிய விடயங்கள்
18 வயதைப் பூர்த்தி செய்தவரின் சட்டப்படி பராயமடைந்தவராகக் கருதப்படுவார்.
ஒரு பெண்ணுக்கு அல்லது ஒரு ஆணுக்கு திருமணம் செய்து கொள்வதற்கான குறைந்த வயது 18 ஆகும்.(முஸ்லிம் விதிவிலக்கு)
16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளையுடன் அவரின் விருப்பத்துடனோ அல்லது இல்லாமலோ பாலியல் தொடர்பு கொள்ளும் ஒருவர் தண்டனைச் சட்டக்கோவையின்படி பாரதூரமான குற்றத்தைச் செய்தவராகிறார்.
13 வயதுக்கு குறைவான சிறுவனை வேலைக்கமர்த்தினால் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
14 வயதுக்கு குறைந்த பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புதல் கட்டாயமாகும்.1997ஆம் ஆண்டின் 100-35 இலக்க அரச வர்த்தமானி கூறுகிறது.
பாடசாலைச் சிறுவர்களுக்கு உடல் சார்ந்த தண்டனையளித்தல் கல்வியமைச்சின் 2005-17ம் இலக்க சுற்றுநிருபம் கூறுகிறது.
ஜக்கிய நாடுகளின் சிறுவர்உரிமைகள் பற்றிய உடன்படிக்கை என்பது உலகிலுள்ள சகல சிறுவர்களுக்கும் வழங்கப்பட்ட உரிமைகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாசனமாகும்.இது 1989 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இவ் உடன்படிக்கைக்கு இன்று வயது 101 ஆகும். இதில் 54 பிரிவுகள் உள்ளன. முதல் 42 பிரிவுகள் சிறுவர் உரிமை பாதுகாப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.மீதி 12ம் அந்த அரசாங்கத்தினால் செயற்படுத்தப்பட வேண்டியன பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் சட்டவமைப்பினுள் சிறுவர் உரிமைகள் இலங்கையில் 1883 ல் முதல்முறையாக சிறுவர்க்கான தண்டனைச்சட்டக் கோவை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு 1995 இலும் 1998இலும் திருத்தம் செய்யப்பட்டது.
ஐ.நா சிறுவர் உரிமைகள் சாசனம் 18 வயதிற்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என்று கூறுகிறது. உலகில் வாழ்கின்ற மக்களில் 1/3 பங்கினர் சிறுவர்களாகக் காணப்படுகின்றனர். சிறுவர்கள் நாளைய தலைவர்கள்.
அவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் தங்கி வாழ்கின்றவர்களாகவும் காணப்படுகின்றனர்.
உலக நாடுகளில் இடம்பெற்ற யுத்தங்கள், கலவரங்கள், இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றில் அதிகமாக பாதிப்புக்குள்ளானவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர்.
எனவே தான் ஒவ்வொரு நாடுகளும் சிறுவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
-விபுலமாமணி தேசமான்ய வி.ரி.சகாதேவராஜா-


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக