பக்கங்கள்

ஞாயிறு, 17 ஜூன், 2018

மணியாச்சி ஸ்டேஷனை உலுக்கிய வாஞ்சிநாதனின் துப்பாக்கி ஜூன் 17... 1911


மணியாச்சி ஸ்டேஷனை உலுக்கிய வாஞ்சிநாதனின் துப்பாக்கி ஜூன் 17... 1911 

சரியாக 106 வருடங்களுக்கு முன் இதேநாளில்தான் இந்திய சுதந்திரப்போராட்டத்துக்கு எழுச்சி ஏற்படுத்திய அந்த சம்பவம் நிகழ்ந்தது.
1911 ஜூன் 17 ஆம் தேதி திருநெல்வேலி சந்திப்பிலிருந்து காலை சரியாக 9.30 மணிக்கு மணியாச்சி மெயில் என்கிற ரயில் புறப்பட ஆயத்தமாகிக்கொண்டிருந்தது. ரயிலின் முதற்பெட்டியின் அருகே சில ஆங்கிலேயே காவலர்கள் நின்றுகொண்டிருந்தனர். காரணம் அந்த பெட்டியில் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட்  ஆஷ் தன் மனைவியுடன் பயணம் செய்ததே. கொஞ்ச நேரத்தில் பிளாட்பாரத்திலிருந்தவர்கள் விலகிநிற்க ரயிலின் புறப்பாடு சத்தம் பிளாட்பாரத்தின் கடைக்கோடி வரை கேட்டது. அப்போது இரு இளைஞர்கள் விறுவிறுவென ஓடிவந்தனர். ரயிலின் ஓட்டத்திலேயே இரண்டாம் வகுப்பு பயணப்பெட்டியில் அவர்கள் தாவி ஏறினார்கள். வண்டி வேகமெடுத்தது. மெயில், திருநெல்வேலி - மதுரை சந்திப்புகளுக்கிடையில் உள்ள மணியாச்சி ரயில்நிலையத்தில் நின்றபோது மணி சரியாக 10.35. இரண்டாவது மற்றும் 3 வது நடைமேடைகளுக்கு நடுவே உள்ள ரயில் பாதையில் ரயில் இப்போது நின்றுகொண்டிருந்தது.

கொடைக்கானலுக்கு செல்பவர்கள் 10.48 க்கு 3-வது நடைமேடைக்கு வரும் போட் மெயிலில் ஏறிச்செல்லவேண்டும். பதறியடித்து அதில் செல்லவேண்டிய பயணிகள் இறங்கி சுமைகளுடன் பிளாட்பாரத்தினை கடந்து ஓடிக்கொண்டிருந்தார்கள். ஆஷ்சும் கொடைக்கானலுக்குதான் செல்லவேண்டும். ஆனால், ஆங்கிலேய கலெக்டர் என்பதால் அவரிடம் ஒரு பதற்றமுமில்லை. போட் மெயில் வந்தபின் செல்ல முடிவெடுத்து வண்டியிலேயே அமர்ந்திருந்தார். ஆனால், முன்னேற்பாடாக அவரது உதவியாள் காதர் பாட்சா ஆஷின் உடைமைகளை, இரண்டாவது நடைமேடையில் இருந்த முதல்வகுப்பு பயணிகள் அறையில் எடுத்துக்கொண்டுபோய் வைத்தான்.

துப்பாக்கி
கலெக்டர் ஆஷ் வந்திருப்பதை அறிந்து ஸ்டேஷன் மாஸ்டர் முதல்வகுப்பு பெட்டிக்கு வந்து ஆஷிடம் சம்பிரதாயமாக நலம்விசாரித்துவிட்டுச் சென்றார். ஸ்டேஷன் மாஸ்டரின் பிள்ளைகள் இருவர் தூரத்திலிருந்தபடி தங்களின் வெள்ளைக்கார கலெக்டரை ஆச்சர்யமாகப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தனர். ஆஷ் அவர்களை சிநேகமான பார்வை பார்த்தார். மணித்துளிகள் ஓடிக்கொண்டிருந்தன. அப்போது இரண்டாம் நடைமேடையின் தென்பகுதியிலிருந்து இரு வாலிபர்கள் தலையை குனிந்தவாறு ஆஷ் இருந்த பெட்டியை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். ஆம்...வண்டி கிளம்பியபின் வந்து ஏறிய அந்த இருவர்தான் அவர்கள்! இந்திய சுதந்திர வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் இந்த சம்பவமும் அதற்கு காரணமாகப்போகும் இந்த இருவரும் அந்த நொடியில் வெறும் ரயில்பயணிகளாத்தான் அங்கு மற்ற பயணிகளுக்கு தெரிந்தார்கள். அதனால் அவர்களை சர்வசாதாரணமாக கடந்துபோய்க்கொண்டிருந்தார்கள்.

இருவரில் பச்சை சட்டை அணிந்த நபர் ஆஷ் இருந்த பெட்டியில் ஏறினார். மலையாளி போன்ற உடை அணிந்த மற்றொருவர் முதல்வகுப்பு பயணிகளின் வேலையாட்களுக்கான ஓய்வு அறையில் இருந்தபடி ஆஷ் இருந்த பெட்டியின் மீது தீவிரமாக தன் பார்வையை பதித்திருந்தார். அவர்கள் திட்டமிட்ட காரியம் நடக்க சில மணித்துளிகளே இருந்ததால் அவர் முகத்தில் சற்று பதற்றம் கூடியிருந்தது.

முதல்வகுப்பு பெட்டியில் ஏறிய பச்சை சட்டை வாலிபர் தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து ஆஷை குறிவைத்தார். ஆங்கிலேயர்கள் குறிப்பாக மேலதிகாரிகள் மட்டும் பயணம் செய்யும் அந்தப் பெட்டியில் எளிய உடையில் ஒருவன் ஏறுவதை அதுவரை குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்த ஆஷ் அவன் கைத்துப்பாக்கியை எடுத்து தன்னை குறிவைத்தபோது ஏதோ விபரீதம் நிகழப்போவதை உணர்ந்தார். டோண்ட் சூட் என கத்தினார். அதேசமயம் வாலிபனின் கவனத்தை திசைதிருப்ப தன் கனமான தொப்பியை எடுத்து அவன் மீது வீசவும் தவறவில்லை அவர். ஆனால், தொப்பிக்கு ஆஷை காப்பாற்ற விருப்பமில்லைபோல. அது குறிதவறி ஜன்னல் வழி பறந்து இரண்டாவது நடைமேடையில் போய் விழுந்தது. ஆஷ்க்கு எதிரே அமர்ந்தபடி ஜன்னல் வழியே பிளாட்பாரத்தில் ஊர்ந்துகொண்டிருந்த மக்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த திருமதி ஆஷ்க்கு இந்த சத்தத்துக்குப்பிறகுதான் அந்நியன் ஒருவனுடன் கணவர் போராடுவது புரிந்தது. அவளும் சத்தம் எழுப்பினாள். ஆனால் எல்லாம் வீண். பச்சை சட்டை வாலிபனின் கையிலிருந்த பிரௌனிங் எனப்படும் தானியங்கி துப்பாக்கியிலிருந்து குண்டு ஆஷ் நெஞ்சை துளைத்தது. ஆனாலும் மேலும் குண்டு பாய்ந்துவிடாதபடி நெஞ்சை பிடித்தபடி வாலிபனை விரட்டிப்பிடிக்க முயன்றார் ஆஷ். ஆனால் முடியாமல் சரிந்து விழுந்தார். அதற்குள் ஆஷின் மனைவி அவரைத் தாங்கியபடி கொலை கொலை என கூச்சலிட்டாள். அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஸ்டேஷன் மாஸ்டரின் பிள்ளைகள் பதறியடித்தபடி அங்கிருந்து ஓடினார்கள்.

பச்சை சட்டை வாலிபனுடன் வந்தவர் இப்போது அங்கு இல்லை. வெடிச்சத்தம் கேட்ட நொயில் ஓடி மறைந்திருந்தார். பச்சை சட்டை வாலிபரை ஆஷின் உதவியாளான காதர்பாட்ஷா உள்ளிட்ட சில பயணிகள் துரத்தியபடி சென்றனர். இரண்டாவது மேடையிலிருந்து பந்தென எகிறிகுதித்து ரயில் நிலைய வடக்குப்பகுதிக்கு வந்த பச்சை சட்டை வாலிபர் அங்கிருந்த கழிவறைக்குள் நுழைந்தார். தன்னை சூழ்ந்திருந்தவர்களை விலகி ஓடிவிடும்படி துப்பாக்கியை காட்டி பயமுறுத்த பெரும் பதற்றம் சூழ்ந்திருந்தது ரயில் நிலையத்தை. அதற்குள் ஆஷ்க்கு முதலுதவி அளிக்க அவர் வந்த ரயில் திரும்ப திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், செல்லும் வழியிலேயே சரியாக 11-30 மணிக்கு மனைவியின் மடியிலேயே ஆஷின் உயிர் பிரிந்தது. அதிக ரத்தப்போக்கு அவர் மரணத்துக்கு காரணமானது.


ஆஷ் துரை

அதேநேரம் கழிவறையில் புகுந்த வாலிபன் துணிச்சலாக மக்களை விரட்டும் முயற்சியில் இருந்தான். அதற்குள் மணியாச்சி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு இரண்டு காவலர்கள் துப்பாக்கியுடன் அங்கு வந்தனர். கழிவறையை திறந்துபார்த்தபோது தலைப்பகுதியில் குண்டு பாய்ந்து முகம் முழுக்க ரத்தக்குவியலுடன் இறந்துகிடந்தார் வாலிபர். யார் இந்த ஆஷ் இவருக்கும் ஒரு இந்திய வாலிபனுக்கு என்ன தகராறு...

பச்சை சட்டை வாலிபனின் சட்டைப்பையில் இருந்த கடிதம் எல்லாவற்றுக்குமான விடைகளை சொன்னது. “ஆங்கில சத்ருக்கள் நமது தேசத்தை பிடுங்கிக்கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தை காலால் மிதித்து துவம்சம் செய்துவருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்ருக்களாகிய வெள்ளையனைத் துரத்தி தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சித்துவருகிறான். ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜினன் முதலியோர் தர்மம் செழிக்க ஆட்சி செய்த தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஒரு ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசித்துக்கொண்டு பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம். அதை தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இச்செய்கையை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவவொருவனும் செய்யவேண்டிய கடமை”... இப்படிக்கு, வாஞ்சி அய்யர்.

தங்களுக்கு கிலி கொடுத்த இந்த விவகாரத்தின் பின்னணியை ஆங்கிலேய அரசு ஆராய முற்பட்டபோதுதான் தாய்நாட்டுக்காக தன் உயிரை ஈந்த அந்த பச்சை சட்டை வாலிபன் செங்கோட்டை சன்னதித் தெருவில் வசிக்கும் ஓய்வுபெற்ற மணியக்காரர் ரகுபதி என்பவரின் மகனான வாஞ்சிநாதன் என்பது உலகிற்கு தெரியவந்தது. அவருடன் சென்ற மற்றொரு வாலிபர் சங்கர கிருஷ்ணய்யர் என்பது பின்னாளில் நடந்த அடையாள அணிவகுப்பில் உறுதியானது. வாஞ்சிநாதனால் எந்தவிதத்திலாவது திட்டம் தோல்வியடைந்தால் சங்கர கிருஷ்ணய்யர் அதைத்தொடர்ந்து முடிப்பது என்பது அவர்களின் திட்டம் என்பது தெரியவந்தது.


வாஞ்சிநாதன்
இந்திய சுதந்திரப்போருக்கு விதைப்போட்ட அரசியல் கொலை சம்பவங்களில் முக்கியமானதாக வரலாற்றில் பதிவானது இந்த சம்பவம். வாஞ்சிநாதனை இப்படி ஓர் முடிவை நோக்கித் தள்ளிய விஷயம் என்ன?...

அன்றைய திருநெல்வேலி மாவட்டம் தூத்துக்குடி நகரில் வெள்ளையருக்கு எதிரான போராட்டம் உச்சமாக இருந்தது. துறைமுக நகரான தூத்துக்குடியில் வெள்ளையர் நடத்திவந்த கப்பல் நிறுவனத்தின் முறையற்ற போக்கையும் அதற்கு காரணமான வெள்ளையர்களை கண்டிக்கும் விதமாக சுதேசிக்கப்பல் கம்பெனியை நிறுவி நடத்தினார் வ.உ.சிதம்பரனார். இதனால் வெள்ளையர் எதிர்ப்புக்கு காரணமானார்.

இந்த நேரத்தில் துாத்துக்குடிக்கு உதவி ஆட்சியராக பணியில் அமர்த்தப்பட்டவர்தான் ஆஷ். ஆஷ் ஒரு கொடூரமானவன் கிடையாது. ஆனால் இனவெறி கொண்டவன். மேலதிகாரிகளின் சொற்படி கேட்டு நடப்பவன். 'இந்தியர்கள் ஒடுக்கப்படவேண்டியவர்கள்; தங்கள் சொற்படி பணிந்துசெல்லவேண்டியவர்கள்' என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவன். அதனால் தூத்துக்குடியில் வ.உ.சி தலைமையில் நடந்த பல சுதந்திரப் போராட்டங்களை நிகழ்வுகளை மழுங்கடிக்க பல யுக்திகளை செய்தான்.


1908 ல் நடந்த ஒரு போராட்ட நிகழ்வில் வ.உ.சி மற்றும் சிலரை தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைத்ததோடு இதுதொடர்பாக அவன் எடுத்த நடவடிக்கைகளை சில வெள்ளையர் அதிகாரிகளேகூட ஏற்கவில்லை. அத்தனை சர்வாதிகாரியாக இருந்தான் ஆஷ்.
ஆஷின் மரணத்துடன் வாஞ்சிநாதனை இணைத்த புள்ளி எது....செங்கோட்டையில் பள்ளிப்படிப்பும் திருவனந்தபுரம் ஸ்ரீமூலம் திருநாள் கல்லூரியில் இளங்கலை படிப்பும் படித்த வாஞ்சிநாதனுக்கு வனத்துறையில் அரசுப் பணி கிடைத்தது. ஆங்கிலேயர்களை விரட்ட உருவான தர்ம பரிபாலன சங்கம் என்ற அமைப்பில் அவருக்கு தொடர்பு உருவானது.

புரட்சிக்கர கருத்துகளை கொண்ட புத்தகங்களை படித்ததால் நண்பர்களுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக தீவிரமாகப் போராடும் மனநிலை ஒருகட்டத்தில் உருவானது. 22வது வயதில் முன்னீர்பள்ளம் சீதாராமையர் மகள் பொன்னம்மாளை மணந்தார். அப்போது நெல்லை மாவட்டத்தில் சுதந்திர போராட்டம் தீவிரமடைந்தது. வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோர் ஆங்கிலேய அரசால்  சிறைப்படுத்தப்பட்டு கொடுமைக்குள்ளானது அவரது கவனத்துக்கு வந்தது.

அப்போது புதியதாக கலெக்டராக வந்த ஆஷ் உத்தரவினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அதனால் 4 பேர் இறந்ததும் பலர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிவந்ததும் வாஞ்சிநாதனைப்போன்ற சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்ற பல ஆயிரம் இளைஞர்களுக்கு ஆத்திரம் தந்தது. ஆங்கிலேயர்களுக்கு பாடம் புகட்டவேண்டும் என வாஞ்சிநாதன் உள்ளிட்ட சிலர் முடிவெடுத்தனர்.

வாஞ்சிநாதன்
இதற்காக வாஞ்சிநாதன் தன் நண்பர்களான சாவடி சொக்கலிங்கபிள்ளை, தர்மராஜ் ஐயர், ஜெகநாத ஐயர், அரிகர ஐயர், மகாதேவ ஐயர், அழகப்ப பிள்ளை, புனலூர் ராமசாமி பிள்ளை, எட்டயபுரம் சுப்பிரமணியம், தென்காசி சிதம்பரம் பிள்ளை, கடையநல்லூர் சங்கர கிருஷ்ணையர், தூத்துக்குடி சுப்பையா பிள்ளை, முத்துகுமாரசாமி பிள்ளை, ஓட்டப்பிடாரம் மாடசாமி பிள்ளை, தஞ்சாவூர் நீலகண்ட பிரம்மசாரி பிள்ளை ஆகியோருடன் 1911 ஆம் ஆண்டு செங்கோட்டை சாவடி அருணாசலப் பிள்ளை வீட்டில் ரகசிய கூட்டம் ஒன்றை நிகழ்த்தினார். கூட்டத்தில் ஆஷ்துரையை சுட்டுக் கொலை செய்வதென முடிவெடுக்கப்பட்டு சீட்டு குலுக்கிப் போடப்பட்டது. இதில் வாஞ்சிநாதன் பெயர் வர அடுத்தடுத்த முயற்சிகளில் இறங்கினார் வாஞ்சி. இதற்காக சில மாதங்கள் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார். இந்த காலகட்டத்தில் அவரது குழந்தை இறந்தபோதும் அதில் வாஞ்சிநாதன் கலந்து கொள்ளவில்லை. வெள்ளையர்கள் மீது அத்தனை கோபத்தில் இருந்தார்.

இந்நிலையில், ஆஷ்துரை கொடைக்கானலுக்கு 1911 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி ரயிலில் புறப்பட்டுச் செல்வதாக வாஞ்சிநாதனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பிறகு நடந்தவைகளை நாடறியும். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆஷ் கொலை ஒரு மறக்கவியலாத வரலாறானது. நெல்லை சதி வழக்கு என நடத்தப்பட்ட இந்த வழக்கில் 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 1912 பிப்ரவரி 15 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்திய சுதந்திர வரலாற்றில் பின்னாளில் வாஞ்சிநாதனின் தியாகம் குறித்து இருவேறு கருத்துகள் பேசப்பட்டன. எப்படியிருந்தாலும் தாய்நாட்டுக்காக ரத்தம்சிந்திய அவரது நினைவு போற்றத்தக்கதுதான் என்பதில் சந்தேகமில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக