பக்கங்கள்

ஞாயிறு, 17 ஜூன், 2018

விடுதலைப் போராட்ட வீரர் கக்கன்ஜி பிறந்த தினம் ஜூன் 18 , 1908 .


விடுதலைப் போராட்ட வீரர் கக்கன்ஜி பிறந்த தினம் ஜூன் 18 , 1908 .

தமிழக அரசியல்வாதி கக்கன் வாழ்க்கை வரலாறு ,இவர் விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதரப் பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்தவரும், தலைசிறந்த அரசியல்வாதியும் ஆவார்.
மதுரை மாவட்டம் தும்பைப்பட்டியில் பிறந்தவர் அப்பழுக்கற்ற அரசியல்வாதி, காந்தியவாதி, காங்கிரஸ்காரர் கக்கன். காமராஜ், பக்தவச்சலம் அமைச்சரவையில் 10 ஆண்டுகள் பணியாற்றியவர். ஐந்தாண்டுகள் லோக்சபா உறுப்பினராகவும் இருந்தார். என்றாலும் குடியிருக்க வீடில்லாமல் வாடகை வீட்டில் வாழ்ந்தார். அரசு பஸ்சில் பயணம் செய்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவரது கடைசிகாலம் கழிந்தது.
பொதுவாழ்வில் தூய்மையும், நேர்மையும், செயல்திறனும் கொண்டு அரசுப்பணியை மக்கள் பணியாக நேர்த்தியாக செய்தவர். அமைச்சரானதும் மதுரை மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் ஓராசிரியர் பள்ளியை நிறுவ முதல் உத்தரவை பிறப்பித்தார். மதுரையின் பெருமைகளில் ஒன்றான விவசாயக்கல்லூரி அமைய காரணமானவர்.ஊழலற்ற, நேர்மையான, தலையீடுகள் இல்லாத நிர்வாகத்திற்கு உதாரணமாக திகழ்ந்த கக்கன், இன்று நம் 'கனவு அரசியல்வாதி'. மக்கள் சேவைக்கு வருபவர்கள் இவர் போல் இருக்கமாட்டார்களா என்று நாம் ஏங்க வேண்டி உள்ளது.
இளமைக்காலம் ;கக்கன் ஜூன் 18, 1907 ஆம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ள தும்பைபட்டி என்ற கிராமத்தில் ஒரு பறையர் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக)ப் பணிபுரிந்தவர்.தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்ற அவர் திருமங்கலம் அரசு மாணவர் விடுதியில் தங்கி பி. கே. என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வியை கற்றார்.
இந்திய விடுதலை போராட்டம் ;
கக்கன் தனது பள்ளி மாணவப்பருவத்திலேயே காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபடலானார்.அன்றைய காலகட்டத்தில் பறையர்கள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. இராஜாஜி அரசு கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம், 1939 என்ற சட்டத்தினைக் கொண்டு வந்ததின் விளைவாகத் பறையர்கள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நூழைய தடைசெய்யப்பட்டிருந்ததை இச்சட்டம் நீக்கியது. மதுரையில் கக்கன் பறையர்கள் மற்றும் சாணர்களைத் தலைமை தாங்கி மதுரை கோயிலினுள் நுழைந்தார் ஆங்கிலேயனே வெளியேறு இயக்கத்திலும் கக்கன் பங்கேற்று அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1946 இல் நடந்த தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று 1946 முதல் 1950 வரை உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார்.

சுதந்திர இந்தியாவில் அரசியல் பணி ;
கக்கன் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார்.
காமராசர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தான் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டி) தலைவர் பதவியை விட்டு விலகியபொழுது கக்கன் அந்தப் பதவியை ஏற்றார் 1957 இல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மகாணத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை,ஆதிதிராவிடர் நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957 இல் பொறுப்பேற்று கொண்டார் மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார் ஏப்ரல் 24, 1962, முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார் அக்டோபர் 3, 1963 அன்று மாநில உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று 1967 வரை அப்பொறுப்பிலிருந்தார்
மேலூர் தெற்கு தொகுதியில் 1967 சட்டமன்றத் தேர்தலில் கக்கன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஒ.பி. ராமனிடம் தோற்றார். இத்தேர்தல் தோல்விக்குப்பின் 1969 முதல் 1972 வரை தமிழ்நாடு காங்கிஸ் குழுத் (கமிட்டித்) தலைவர் பொறுப்பு வகித்தார். 1973 இல் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றார்.
கக்கனின் தந்தையார் கோயில் அர்ச்சகராக இருந்த காரணத்தினால், கக்கன் அதிக சமயப்பற்றுள்ளவராக திகழ்ந்தார். மகாத்மா கந்தியின் வழியை பின்பற்றி நடப்பவர். பெரியார் தனது சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் இந்துக்களின் கடவுளான இராமனின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தை அறிவித்தபொழுது, கக்கன் அதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். இது ஒரு சமூக விரோதச் செயல் என்றும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட காந்தியின் நம்பிக்கைக்குரிய கடவுளை அவமதிப்பதாகும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்
கக்கனின் பொதுவாழ்வு தூய்மையை அறிய, அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குனர் இளசை சுந்தரம் எழுதிய 'தியாகசீலர் கக்கன்' என்ற புத்தகத்தில் இருந்து சில...
தங்கப்பேனா தகுதிக்கு மீறியது: ஒருமுறை மலேசிய அமைச்சர், கக்கனை சந்தித்தார். கக்கன் வைத்திருந்த பழமையான பேனாவை பார்த்து விட்டு, தனது பேனாவை அவர் தந்தார். அந்த தங்கப்பேனாவை வாங்க மறுத்த கக்கன், அந்த தகுதி தனக்கு இல்லை என்றார். எனினும் விடாப்பிடியாக அவர் தர, வேறு வழியில்லாமல் பெற்றுக்கொண்ட கக்கன், ஊழியரை அழைத்து அதனை அலுவலக புத்தகத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்தார். 'இது அரசுக்கு அல்ல; உங்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு தான் தந்தேன்' என்று மலேசிய அமைச்சர் கூறியும் கக்கன் கேட்கவில்லை. 'நான் அமைச்சராக இல்லை என்றால் இந்த தங்கப்பேனாவை தந்திருப்பீர்களா? மக்களுக்கு தொண்டாற்ற பொறுப்பேற்றுள்ள நம்மை போன்றவர்கள் பரிசுப்பொருட்களை சொந்த பயன்பாட்டிற்கு வைத்துக்கொள்ள கூடாது' என்றார் கக்கன்.'உங்கள் சொந்த பயன்பாட்டிற்கு வைத்துக்கொள்ளாமல், அரசுப்பொருட்களோடு சேர்ப்பதாக இருந்தால் தரமாட்டேன்' என அந்த அமைச்சர் கூற 'நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்' என்று தங்கப்பேனாவை திருப்பி தந்து விட்டார் கக்கன்.கறைபடாத கரத்திற்கு சொந்தக்காரர் கக்கன் என்பதற்கு இந்த சம்பவம் சிறு உதாரணம்.

மனைவி என்றாலும்: ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, கக்கன் வீடு திரும்பும் போது அவரது வீட்டிற்கு அரசு ஊழியர் ஒருவர் மண்ணெண்ணெய் வாங்கி வருவதை கண்டார். 'யார் வாங்கி வரச்சொன்னது' என்று கக்கன் கேட்க, 'அம்மா தான்(கக்கன் மனைவி) வாங்கி வரச்சொன்னார்' என்று ஊழியர் கூற, மனைவியை அழைத்து அவர்கள் முன்னிலையில் சத்தமிட்டார். 'இவர் யார் தெரியுமா? அரசு ஊழியர். உனக்கு ஊழியம் செய்பவர் அல்ல' என்று திட்டி தீர்க்க கண்ணீர் மல்க நின்றார் கக்கன் மனைவி. 'அதோ ரோட்டில் மண்ணெண்ணெய் கேன் உள்ளது. நீயே வீட்டிற்கு எடுத்துப்போ' என்றார். அரசு ஊழியர்கள் அரசுப்பணியை மட்டுமே செய்ய வேண்டும் என்பது கக்கன் கருத்து.
அரசு உண்டியலில் அம்மா நகை : கக்கனின் மூத்த மகன் பத்மநாபனின் மகள், தீயணைப்பு துறையின் முதல் பெண் அலுவலர், வடமேற்கு மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் தன் தாத்தா பற்றி கூறுகிறார்.என் அம்மா கிருஷ்ணகுமாரி ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுப்பையாவின் மகள். எங்க அப்பாவிற்கு அம்மாவை திருமணம் செய்ய முடிவு செய்த காலகட்டம் அது... தாத்தா கக்கன், அம்மாவின் அப்பாவை அழைத்து, ''அமைச்சர் வீட்டில் சம்பந்தம் செய்ய போகிறோம் என கடன் பட்டு விடாதே, பெண்ணை மட்டும் அனுப்பினால் போதும்,'' எனக் கூறி விட்டார்.ரொம்ப எளிமையாக வாழ்ந்தவர் தாத்தா. நேர்மை, ஒழுக்கம், அன்பை இறுதி வரை பேணியவர். அமைச்சரான பிறகும் கூட அவர் இரண்டு வேட்டிகள், இரண்டு சட்டைகள் மட்டுமே வைத்திருந்தார். மறுநாள் அரசு விழா என்றால், முதல் நாள் இரவு ஒரு சட்டை, வேட்டியை துவைத்து காய வைப்பார். அரசு பணம் வீணாக கூடாது என இறுதி வரை செயல்பட்டார். அவர் அரசு வீட்டில் இருந்தால், அவரது அறையில் மட்டும் தான் விளக்கு எரியும்.உலக போர் நடந்த போது, மறைந்த பிரதமர் நேரு அழைப்பின் பேரில் என் அம்மா உட்பட வீட்டுப் பெண்களுடைய வளையல், செயின் போன்ற நகைகளை எல்லாவற்றையும் தாத்தா வாங்கி அரசு உண்டியலில் போட்டு விட்டார்.1966ல் அவர் மாம்பலத்தில் அரசு வீட்டில் வாடகைக்கு குடியிருந்த போது, ஒரு முறை அரசு பஸ்சில் பயணித்துள்ளார். அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு அவரிடம் போதிய காசு இல்லை. அவரை தெரிந்து கொண்ட கண்டக்டரும், 'இருக்கிறதை கொடுங்க,' எனக் கூறியுள்ளார். ஆனால் தாத்தா, தன்னிடமிருந்த காசை கொடுத்து விட்டு அதற்கான ஸ்டாப் வந்ததும் இறங்கி நடந்து சென்றுள்ளார். அவரது பேத்தி என்பது எனக்கு பெருமை.
அமைச்சர் பதவியை விட்டு விலகியதும் வாடகை வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கே பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.
எம்.ஜி.ஆர் மதுரை முத்துவை பார்க்க வந்தவர் செய்தி கேட்டு இவரைக்கண்டு கலங்கினார் ,”நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன் !” என்று அவர் கேட்டுக்கொள்ள ,”நீங்கள் பார்க்க வந்ததே போதும் !” என்று இயல்பாக மறுத்தார். யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப்போனார்.
சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன அவரின் பிறந்தநாள் 18 ஜூன் 1908 இன்று...


அரிதினும் அரிதான அரசியல் தலைவர்... கக்கன்

1980-ம் ஆண்டு. தமிழகத்தின் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்த கால கட்டம் அது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதுரை முத்துவை சந்தித்து நலம் விசாரிக்கச் சென்றார் எம்.ஜி.ஆர். அப்போது காளிமுத்து சொன்ன தகவலால் பதறி போனார் எம்.ஜி.ஆர். உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள சாதாரண வார்டுக்கு எம்.ஜி.ஆர். சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவரை கண்ட உடன் கலங்கினார். உடனடியாக அவரை சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டார். அப்போது சிகிச்சை பெற்று வந்தவர் எம்.ஜி.ஆரிடம் வேண்டாம் என்றார். 'எல்லோருக்குமான சிகிச்சை பிரிவே எனக்கு போதும். நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி' என்றார் அவர்.
எம்.ஜி.ஆர். அங்கிருந்த மருத்துவ பொறுப்பாளர்களை அழைத்து, "இவர் யார் எனத் தெரியுமா? இவர் போன்றவர் பெற்றுத் தந்த சுதந்திரத்தில் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவருக்கு தனி அறை வசதியும் உயர்ந்த மருத்துவமும் அளியுங்கள்" என உத்தரவிட்டுச் சென்றார். எம்.ஜி.ஆரை கலங்க வைத்த... 'இவரில்லாவிட்டால் நாம் இல்லை' என பெருமையுடன் அறிமுகப்படுத்தப்பட்ட நபர் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் முக்கியமானவரான கக்கன். சென்னை சென்ற உடன் முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்து பயணம் போன்றவற்றிற்கு உத்தரவிட்டார் எம்.ஜி.ஆர். அத்தோடு கக்கனுக்கு ஓய்வூதியமும் கிடைக்க வழியேற்படுத்தினார்.
ஆனால் படிப்படியாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. 1981ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சில நாளில் நினைவிழந்த கக்கன், நினைவு திரும்பாமலேயே 1981 டிசம்பர் 23-ம் நாள் இறந்தார். அவரின் நினைவு தினம் இன்று. உயிரே போகும் சூழலிலும் எளிமையாய் வாழ்ந்தவர் கக்கன். அவரது உடலை காமராசர் நினைவிடம் அருகே புதைக்கவேண்டும் என்பது அவரது உறவினர் மற்றும் நண்பர்களின் விருப்பமாக இருந்தது. அதை அரசின் காதுகளுக்கும் கொண்டு சென்றனர். ஆனால் கடைசி வரை அந்த குரலுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. மக்களோடு மக்களாக வாழ்ந்த தலைவன் 1981ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி கண்ணம்மா பேட்டை சுடுகாட்டில் எரியூட்டப்பட்டார்.
எளிமைக்கு உதாரணமாக திகழ்ந்த கக்கன்



பொதுவாழ்க்கைக்கு வருபவர்கள், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எளிய வாழ்க்கையை வாழ பழகிக்கொள்ள வேண்டுமென்று வாழ்ந்து காட்டி தமிழ்நாட்டு மக்களின் மனதில் நிலைத்துவிட்ட கக்கன் பிறந்த ஊர் மேலூரிலிருந்து கொட்டாம்பட்டி செல்லும் வழியிலுள்ள தும்பைப்பட்டி. சமகால அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களை பார்த்துப்பழகிப்போன நமக்கு கக்கன் போன்ற தலைவர்களின் வரலாறு கண்ணீர் சிந்த வைக்கிறது.
காமராஜரின் அமைச்சரவையில் இடம்பெற்ற அனைத்து அமைச்சர்களும் இவரைப்போன்று இருந்தார்களா என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், முதல்வராக இருந்த காமராஜரும், அமைச்சர் கக்கனும் சாகும் வரையில் எளிமையாகவும், நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தார்கள் என்று அடித்து சொல்லலாம். இவர்களின் அரசியல் எதிரிகள் கூட இதை மறுக்கமாட்டார்கள்.
மேலூர்காரரான கக்கனுக்கு சென்னை திருவற்றியூர் தாங்கலில் மன்றம் வைத்து இன்றும் அவரைக் கொண்டாடுகிறார்களென்றால் அவருக்கு புகழ் எதனால் வந்தது என்பதை அறிய முடியும். இன்று மதுரை மாவட்டத்தில் நிலைத்து நிற்கும் பல நல்ல திட்டங்கள், பாசனக்கால்வாய்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமணைகள் என வருவதற்கு கக்கன் தான் காரணம். இருந்தாலும் அவர் விரும்பிய சாதீய சமநிலை மட்டும் மதுரை மாவட்டத்தில் இன்னும் வரவில்லை என்பதும் உண்மை.
இப்பவே அப்படியென்றால் அவர் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் இங்கு எவ்வளவு கீழ் நிலையில் இருந்திருப்பார்கள் என்பதை எண்ணி பார்க்கவே வேதனையாக உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி.யில் ஒரு மதிப்பெண்ணில் தோல்வி அடைந்தவுடன், எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் அப்போது அவர் ரோல் மாடலாக ஏற்றுக்கொண்ட மகாத்மா காந்தி, காமராஜர் வழியில் செல்ல முடிவு செய்தார் கக்கன். பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை ஒன்றை மட்டும் எதிர்பார்த்து மற்றவர்கள் போராடியதற்கும் கக்கனின் போராட்டத்திற்கும் வேறுபாடு உண்டு. தான் பிறந்த சமூகத்தின் விடுதலைக்கும், நாட்டு விடுதலைக்கும் இணைந்து போராட வேண்டிய நிலையில் இருந்தார்.
தீண்டாமை கொடுமையை களைவதற்குமுன், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி அவசியம் என்பதில் குறியாக இருந்தார். அதனால்தான் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட அரிஜன சேவா சங்கத்தில் ஒரு வாலண்டியராக இணைந்து மேலூர் வட்டாரத்தில் தொடங்கப்பட்ட அரிஜனப்பள்ளியின் விடுதி பொறுப்பாளராக இருந்து சேவையாற்றினார்.


பகலில் விடுதலைபோராட்டம். இரவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்விப்பணி. தும்பைபட்டியில் அமைந்திருந்த ஊருணியில் ஒடுக்கப்பட்ட மக்களை தவிர மற்ற சாதியினர் அனைவரும் நீரெடுக்கலாம். ஒடுக்கப்பட்ட மக்களோ ஊருக்கு வெளியிலிருந்த குளத்தை மட்டும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த அசுத்தமான குளத்துக்கு ஊர்க்காரர்கள் வைத்த பெயர் பீக்குளம்.
மேலூர் தாலுகா காங்கிரஸ் தலைவராக இருந்த கக்கனுக்கு இந்த கொடுமையை பார்த்து மனம் சகிக்கவில்லை. அதற்காக உடனே களத்தில் இறங்கி போராடவும் அவர் நினைக்கவில்லை. இந்த கொடுமையை தன்னோடு கட்சிப் பணியாற்றும் மற்ற காங்கிரஸ் காரர்களிடம் சொல்லியும் பலனில்லை. காரணம் அந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியில் சாதிக்கட்டமைப்பையும், தீண்டாமயையும் ஆதரிப்பவர்களே அதிகம் அங்கம் வகித்தனர்.
கக்கனின் வேதனையை புரிந்துகொண்ட தும்பைபட்டி அம்பலம் ஒருவரும் செட்டியார் ஒருவரும் ஊர் பஞ்சாயத்தை கூட்டி தாழ்த்தப்பட்ட மக்களையும் ஊர் பொதுக்குளத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று பேசினார்கள். பொங்கி எழுந்த ஆதிக்க சாதி கூட்டம், இந்த இரண்டு பேரையும் தாக்க முற்பட்டனர். வாக்கு வாதத்துக்கு பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள், குளத்தின் இன்னொரு கரையை பயன்படுத்திக்கொள்ள ஒத்துக்கொண்டனர்.
இது ஒரு அரைகுறை தீர்வென்றாலும் அந்த காலகட்டத்தில் ஆதிக்க சாதியினர் இந்தளவுக்கு இறங்கி வந்ததே பெரிய சாதனைதான். காமாரஜருக்கு அடுத்து கக்கனுக்கு மிகவும் பிடித்தவர் யாரென்றால் அமைதி வழியில் போராடும் குணத்தை உருவாக்கிய வைத்தியநாதய்யர். அரிஜன மக்களின் முன்னேற்றத்தில் எந்தவொரு பாசாங்குமில்லாமல் உழைத்தவர் வைத்தியநாதய்யர்.
இதற்காக அவர் இழந்தது ஏராளம். மீனாட்சியம்மன் கோயில் ஆலய நுழைவுப்போராட்டத்தை கக்கனோடு சேர்ந்துதான நடத்தினார். அதற்கு பின்பும் கக்கனுக்கு பல வகையிலும் உதவியாக இருந்தார். அதனால்தான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தபோது 1955 ம் ஆண்டு வைத்தியநாதய்யர் இறந்தார். தகவலறிந்து உடனே மதுரை கிளம்பினார் கக்கன்.
இறுதிச்சடங்கு செய்யும் நேரத்தில் வைத்தியநாதய்யரின் பிள்ளைகளோடு கக்கனும் மொட்டையடித்து கொள்ளி வைக்க தயாரானார். இதனைக்கண்ட ஐயரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். வைத்தியநாதய்யரின் பிள்ளைகளோ, நாங்கள் பிறப்பால் மகன்கள். கக்கன் வளர்ப்பால் மகன். அவருக்கும் உரிமை இருக்கிறது என்றனர். இதைக் கேட்ட ஐயரின் உறவினர்கள் அதிர்ந்து போனார்கள். சிலர் கோவித்துக்கொண்டு இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் கிளம்பி சென்றார்கள்.
காங்கிரசை கடுமையாக எதிர்த்தாலும் அரியலூர், மேலூர் சட்டமன்றத்தொகுதியில் கக்கன் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை திமுக. கக்கன் மீது தனி மரியாதை வைத்திருந்தது. 1967ல் காங்கிரஸ் ஆட்சிக்கு பெரும் கெட்ட பெயர் ஏற்பட்ட நிலையில்தான் அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தினார்கள். காங்கிரசின் படுதோல்விக்கு பிறகு மிகவும் கஷ்டமான நிலைக்கு கக்கன் குடும்பம் சென்றுவிட்டது. நிறைய கடன் வேறு. அதை தெரிந்துகொண்ட பழ.நெடுமாறன் மதுரையில் கக்கனுக்கு மணிவிழா எடுத்து நிதி வசூல் செய்து 21 ஆயிரம் வழங்கினார். அதை வங்கியில் டெபாசிட் செய்ய மறுத்த கக்கன், நாவினிபட்டி பண்ணையார் போன்றவர்கள் தேர்தல் செலவுக்கு நன்கொடையாக கொடுத்த பணத்தை கடனாக எழுதி வைத்திருந்தார். நெடுமாறன் வழங்கிய நிதியின் மூலம் இக்கடன்களை அவர்கள் கேட்காமலே அடைத்தார்.
அப்போது மதுரை மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்தவர் பின்னாளில் புதுவை பலகலைகழக வேந்தராக பதவி வகித்த வேங்கடசுப்ரமணியன். இவரிடம் மதுரை மாவட்ட தலித் மக்களின் நிலையை எடுத்து சொல்லி விடுதிகளுடன் கூடிய பள்ளிகளை அதிகம் திறக்க வைத்தார். அதில் பிற்பட்ட சாதி மாணவர்களுக்கும் அதிக விடுதிகள் கட்ட ஏற்பாடு செய்தார். ஓராசிரியர் பள்ளிகள் அதிகம் திறக்கப்பட்டது.
காவல்துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். அவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். லஞ்ச ஒழிப்பு துறையை உருவாக்கியதும் இவர்தான். சாதி கலவரங்களுக்கு அடிப்படையாக உள்ள பிரச்னைகளை கண்டறிய தனி பிரிவை காவல்துறையில் ஏற்படுத்தினார். என்னதான் காவல்துறையை அவர் கண்ட்ரோலில் வைத்திருந்தாலும், கலவரங்களில் உயர்சாதி வெறியோடு செயல்படும் காவலர்களை, அதிகாரிகளை தடுக்கவோ தண்டிக்கவோ அவரால் முடியவில்லை. வெளியே சொல்ல முடியாத இந்த வேதனை அவரிடம் இருந்துள்ளது.
கக்கனிடம் நீண்டகாலம் தனிச்செயலாளராகப் பணியாற்றிய கே.ஆர். நடராஜன் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் சொல்லும்போது, "விடுதலை வேள்வியில் சவுக்கடிகளின் தழும்புகளைப் பரிசாகப்பெற்றவர். சொல்லொண்ணாத் துயரத்துக்கு ஆளானவர். அரசியல் உலகில் பிழைக்கத்தெரியாதவர் என்ற பட்டப்பெயருக்குச் சொந்தக்காரர். இன்றைக்கு அவரை யார் நினைக்கிறார்கள். அவர் செய்த ஒரே பாவம் தாழ்த்தப்பட்ட குலத்திலே பிறந்தது தான். பார்த்தால் பாவம், தொட்டால் தீட்டு என்கிற வர்ணாசிரம அகராதியில் அவர் ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்பட்டார். தமிழகத்தில் இதுவரை கக்கன்ஜியைவிட உயர்ந்தவர்கள் எவரும் இல்லை. இனியும் பிறக்கப்போவதும் இல்லை. இது சத்தியம்.." என்றிருந்தார்....அது உண்மையிலும் உண்மைதான்.
மூத்தவர்கள் தங்கள் பதவிகளை விட்டு விலகி கட்சிப்பணிகளை செய்ய வேண்டுமென்று அறிவித்து அதற்கு தானே முன்னுதராணமாக முதல்வர் பதவியிலிருந்து விலகிய காமராஜர், அடுத்த முதல்வராக கக்கனை முன்மொழிய நினைத்தார். இதை தெரிந்துகொண்ட கக்கனோ, தன்னைவிட சீனியரான பக்தவச்சலத்தை முன்மொழிந்தார். காமராஜரின் ஆசை நிறைவேறாமல் போனது.


கக்கன்ஜியின் அப்பழுக்கற்ற பொதுவாழ்க்கையை பற்றி நிறைய சம்பவங்களை கூறலாம். அது ஓரளவு நமக்கு தெரிந்த விஷயங்கள்தான். ஊழலிலும் குற்றங்களிலும் புழுத்துப்போன சமகால அரசியலை அவதானித்துவரும் இன்றைய செல்பி தலைமுறையினருக்கு மீண்டும் மீண்டும் இவைகளை நினைவு படுத்த வேண்டியது அவசியம்.....
வேளாண்மைத் துறை அமைச்சராக கக்கன் இருந்தபோது அவரை மலேஷிய நாட்டின் வேளாண்மைத் துறை அமைச்சர் சந்திக்க வந்திருந்தார். அவர் கக்கனுக்கு ஒரு பேனா பரிசளித்தார். கக்கன் அந்த பேனாவை ஆச்சரியமாக பார்த்தார். அதற்கு மலேஷிய அமைச்சர், இது தங்கப்பேனா என்றார். அப்படியானால் இதை வைத்துக்கொள்ளும் தகுதி எனக்கில்லை. நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.. என்றார் கக்கன்.
மலேஷிய அமைச்சரோ இது நட்பிற்கான அடையாளம். எனது பரிசு என்றார். உடனே கக்கன், தன் உதவியாளரை அழைத்து, பதிவு புத்தகத்தில் இந்த பேனா வந்தது குறித்து பதிவு செய்து எடுத்து வாருங்கள் என்றார். மலேஷிய அமைச்சர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அதை பதிவு செய்யாமல் வாங்கிக்கொள்ள கக்கன் உடன்படவில்லை. கடுப்பான மலேஷிய அமைச்சர் அந்த பேனாவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.
கக்கனின் தம்பி விஸ்வநாதன், சிறந்த ஓட்டப்பந்தய வீரர். இவருக்கு போலீஸ் வேலையில் சேர ஆர்டர் வந்தது. இந்த விஷயத்தை அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அண்ணன் கக்கனிடம் விஸ்வநாதன் சொல்ல, வேண்டாம், நீ போலீஸ் வேலையில் சேரக்கூடாது. அந்த துறை என் பொறுப்பில் உள்ளது. நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், என் சிபாரிசில் வந்ததாகச் சொல்வார்கள் என்று அவரை போலீசில் சேர கக்கன் அனுமதிக்கவில்லை.
உடனே அப்போது ஐ.ஜியாக இருந்த அருளைக் கூப்பிட்டு, விஸ்வநாதனின் விரல்கள் சரியாக செயல்படாது. துப்பாக்கியை கையாளுவதெல்லாம் சிரமம். பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறவர்கள் முழுத் தகுதியுடையவர்களாக இருக்கவேண்டும் என்று சொன்னதோடு அவருக்கு வழங்க இருந்த பணி ஆணையையும் நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
ஆனால் உண்மை என்னவென்றால், விஸ்வநாதன் இளவயதில் விளையாடும்போது தவறிவிழுந்ததால் அவரது வலது முழங்கையின் மேல்புறத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. அதனால் சுண்டு விரலும் மோதிர விரலும் சற்று வளைந்திருந்தது இதை விஸ்வநாதன் அருளிடம் தெரிவிக்க.. இதற்காகவா அமைச்சர் அப்படி கூறினார், என போலிஸ் அதிகாரி அருள் ரொம்பவும் கவலைப்பட்டுள்ளார்.
இப்படி தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஏகப்பட்ட சம்பவங்களை நாம் கற்றுக்கொள்ள பாடமாக வைத்துவிட்டு சென்றுள்ள கக்கனை இன்று மட்டுமல்ல எப்போதும் நினைவில் கொள்ள வேண்டியது மிக அவசியம். ஏனென்றால் கக்கன் அரிதினும் அரிதான அரசியல் தலைவர் கக்கன்.


கக்கன்: அரசியல் நேர்மையின் முகம்

நேர்மையான அரசியலின் அடையாளம் என்று தமிழகமே கொண்டாடும் தலைவர் கக்கன். இப்படியொரு தலைவர் தமிழகத்தில் ரத்தமும் சதையுமாக இருந்திருக்கிறார், இயங்கியிருக்கிறார் என்று சொன்னால் அதை இன்றைய தலைமுறையினர் ஏற்பார்களா என்பது மிகவும் சிரமம்தான். 1909 ஜூன் 18-ல் மதுரை அருகே தும்பைப்பட்டியைச் சேர்ந்த பூசாரி கக்கன் - குப்பி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் கக்கன். ஆம், தந்தைக்கும் மகனுக்கும் ஒரே பெயர். வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை இடையிடையே விட நேர்ந்தது. எனினும், பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பள்ளிப்படிப்பை முடித்தார் கக்கன்.
அரசியல் ஆர்வம்
சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்துகொண்டிருந்த காலகட்டம் அது. பள்ளி மாணவரான கக்கனுக்கும் சுதந்திர வேட்கை தொற்றிக்கொண்டது. காந்தியும் காங்கிரஸும்தான் கக்கனுக்கான ஈர்ப்புப் புள்ளிகள். படிக்கும் நேரம் போக எஞ்சிய நேரங்களில் அரசியலில் ஆர்வம் செலுத்தினார். படிப்பு சரியாக வரவில்லை. என்றாலும், கக்கனின் காங்கிரஸ் பாசத்தையும் மக்களுக்குத் தொண்டாற்றும் ஆர்வத்தையும் புரிந்துகொண்ட வைத்தியநாதய்யர், மதுரையில் உள்ள சேவாலயம் என்கிற விடுதியில் காப்பாளர் வேலையைக் கக்கனுக்கு வாங்கிக் கொடுத்தார்.
1932-ல் சொர்ணம் பார்வதி என்ற பெண்ணை மணம் செய்துகொண்டார் கக்கன். அதன் பிறகுதான் அரசியல் நடவடிக்கைகளில் அதிக அளவில் ஈடுபட்டார். காந்தி மதுரைக்கு வந்தபோது அவருக்கு கக்கனை அறிமுகம் செய்துவைத்தார் என்.எம்.ஆர்.சுப்பராமன் என்கிற மூத்த காங்கிரஸ் தலைவர். அது கக்கன் வாழ்வில் முக்கியமான நிகழ்வு. தமிழகத்தின் பல இடங்களுக்கும் காந்திக்குத் துணையாகச் சென்றுவந்தார் கக்கன். அந்தப் பயணமும் பழக்கமும் கக்கனின் மனதில் தனிப்பட்ட முறையிலும் அரசியல்ரீதியாகவும் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயப் பிரவேசத்தை வைத்தியநாதய்யர் நடத்தியபோது, அந்தப் போராட்டத்தில் பங்கேற்றார் கக்கன்.
முதல் பதவி, முதல் சிறை
1940-ல் மதுரை மேலூர் வட்டார காங்கிரஸ் செயலாளரானார். அதுதான் காங்கிரஸில் அவர் வகித்த முதல் பதவி. அப்போது காந்தி அறிவித்த போராட்டம் ஒன்றில் பங்கேற்ற கக்கன், பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டார். முதல் சிறைவாசம் அதுதான். அதன் பிறகு, போராட்டங்களும் சிறைவாசங்களும் தொடர்ந்தன. வட்டார காங்கிரஸ் தலைவராக இருந்த கக்கன், மதுரை மாவட்டப் பொருளாளரானார்.
1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் ஈடுபட்டபோது, போலீஸாரின் கண்ணில் சிக்காமல் தப்பிக்கத் தலைமறைவாக இயங்கினார் கக்கன். ஒருகட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். தமிழகத்தில் நடக்கும் போராட்டத்தைப் பற்றிய முழு அம்சங்களும் கக்கனுக்குத் தெரியுமென்பதால், தலைமறைவாக உள்ள மற்ற தலைவர்களைப் பற்றிய விவரங்களைச் சொல்லுமாறு சித்திரவதை செய்தனர் காவலர்கள். ஆனால், கக்கனிடமிருந்து ஒரு துப்புகூடக் கிடைக்கவில்லை. ஆத்திரம் அடைந்த பிரிட்டிஷ் அரசு, கக்கனை அலிப்பூர் சிறைக்கு அனுப்பிவைத்தது. 18 மாதங்களுக்குக் கொடும் சிறைவாசம்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
1946-ல் மத்திய சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்வானார் கக்கன். 1952-ல் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடந்தபோது, மதுரை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். கக்கனின் எளிமையான வாழ்க்கைமுறையும் பொதுமக்களை அணுகும் பாங்கும் மதுரை வட்டாரத்தில் அவரைச் செல்வாக்கு மிக்க தலைவராக உயர்த்தியது. 1954-ல் காமராஜர் முதல்வரானபோது, அவர் வகித்துவந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கக்கனுக்குத் தரப்பட்டது.
தமிழக காங்கிரஸ் தலைவராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய கக்கன், 1957-ல் நடந்த தேர்தலில் மேலூர் சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் அமைந்த காமராஜர் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, தாழ்த்தப்பட்டோர் நலத் துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சரானார் கக்கன்.
நேர்மையும் எளிமையும்
அமைச்சர் பதவியில் இருந்தபோது அதிகபட்ச நேர்மையைக் கடைப்பிடித்தவர் கக்கன். சிபாரிசு, பரிந்துரை போன்ற வார்த்தைகளை அடியோடு நிராகரித்தார். துறைசார்ந்த திட்டங்களைக் கொண்டுவருவதில் அக்கறையும் ஆர்வமும் செலுத்தினார். அமைச்சராக இருந்தபோதும் தனது குழந்தைகளை அரசு மாநகராட்சிப் பள்ளிகளிலேயே படிக்கவைத்தார்.
1962 தேர்தலில், சமயநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கக்கனை விவசாயத் துறை அமைச்சராக்கினார் காமராஜர். மணிமுத்தாறு, அமராவதி போன்ற நீர்த்தேக்கத் திட்டங்கள் அமலுக்கு வந்தது, மேட்டூர் அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டது, வைகை, பாலாறு திட்டங்களை நிறைவேற்றியது, பூண்டி நீர்ப்பாசன ஆய்வு மையம் அமைத்தது ஆகியவற்றில் கக்கனின் பங்களிப்பு முக்கியமானது.
விவசாயிகளுக்குக் குறித்த நேரத்தில் உரம் கிடைக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தினார் கக்கன். பசுந்தாளுரம் அறிமுகமானது கக்கனின் காலத்தில்தான். கூட்டுறவு விற்பனை நிலையத்தின் வழியாக விவசாயிகளுக்கான பொருட்களை வழங்க வழிவகை செய்தவர் கக்கன்.
பதவியும் பணிகளும்
1963-ல் காமராஜர் ராஜினாமா செய்ததை அடுத்து, பக்தவத்சலம் முதல்வரானார். அப்போது தமிழக அரசின் உள்துறை அமைச்சரானார் கக்கன். தேர்வுகள் வழியே காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது, காவலர் பயிற்சிப் பள்ளிகளை உருவாக்கியது, சாதிக் கலவரங்கள் மூள்வதை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க ரகசியக் காவலர் பிரிவைத் தொடங்கியது, லஞ்ச ஒழிப்புக் காவல் பிரிவை உருவாக்கியது என கக்கனின் பணிகள் அநேகம்.
1967 தேர்தலில் மேலூர் தெற்குத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ.பி.ராமனிடம் வெற்றிவாய்ப்பை இழந்தார் கக்கன். தூய்மையான அரசியலுக்கு விழுந்த சம்மட்டி அடியாகவே கக்கனின் தோல்வி பார்க்கப்பட்டது. தான் வசித்துவந்த அரசு வீட்டிலிருந்து வெளியேறி, குடும்பத்தோடு வாடகை வீட்டுக்குக் குடியேறினார். சுதந்திரப் போராட்டத் தியாகி என்ற அடிப்படையில், தனக்குத் தரப்பட்ட நிலத்தை வினோபா பாவேவின் பூமிதான இயக்கத்துக்குத் தானமாகக் கொடுத்துவிட்டவர் கக்கன் என்பது இங்கே நினைவுகூர வேண்டிய சங்கதி. 1971 தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளராகக் கக்கனை நிறுத்தினார் காமராஜர். வெற்றி வசப்படவில்லை. ஆகவே, அரசியலிலிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்டார் கக்கன்.


வறுமையும் நோயும்
கக்கன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வதும் அரசுப் பேருந்தில் பயணிப்பதும் வரிசைகளில் காத்திருப்பதும் பொருளாதாரரீதியாகச் சிரமப்படுவதும் பத்திரிகைகளில் அவ்வப்போது செய்திகளாக வந்தன. அதைப் பார்த்த சிவாஜி கணேசன், தனக்குப் பரிசாக வந்த தங்கச் சங்கிலி ஒன்றைப் பொதுவெளியில் ஏலம் விட்டு, அதில் கிடைத்த தொகையைத் தனியார் நிதி நிறுவனத்தில் நிரந்தர முதலீடு செய்து, அதன்மூலம் கிடைக்கும் வட்டித்தொகை ஒவ்வொரு மாதமும் கக்கனுக்குக் கிடைக்க ஏற்பாடுசெய்தார்.
சில ஆண்டுகள் வீட்டிலேயே இருந்த கக்கனுக்கு மீண்டும் உடல்நலன் பாதிக்கப்படவே, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரின் உத்தரவால் தரமான மருத்துவ சிகிச்சைகள் தரப்பட்டபோதும் கக்கனுடைய உடல்நலன் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே போனது. இறுதியாக, 23 டிசம்பர் 1981 அன்று மரணம் அடைந்தார் கக்கன். அரசியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அதிகபட்ச நேர்மையைக் கடைப்பிடித்த கக்கனைப் போல் இன்னொரு தலைவர் வருவாரா என்று பேசவைத்தது அவரது வாழ்நாள் சாதனை!- ஆர்.முத்துக்குமார்.
நன்றி விகடன்.தி இந்து  தமிழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக