பக்கங்கள்

புதன், 3 அக்டோபர், 2018

விடுதலைப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பிறந்த தினம் அக்டோபர் 4,



விடுதலைப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பிறந்த தினம் அக்டோபர் 4,


கொடிகாத்த குமரனின் வாழ்க்கை வரலாறு

தேசியக் கொடியைக் காப்பதற்காக தன் இன்னுயிரைத் தியாகம் செய்தவர் தான் திருப்பூர் குமரன்.
நேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி கூட்டத்தின் பிரம்படி வாங்கி உயிரை விட்டு ஒவ்வொரு தமிழனையும் யோசிக்க வைத்த கொடிகாத்த குமரன் இறந்த நாள் இன்று.
கொடிகாத்த குமரனின் வாழ்க்கை வரலாறு
திருப்பூர் குமரனின் இயற்பெயர் குமாரசாமி. இவரது சொந்த ஊர் ஈரோட்டை அடுத்த சென்னிமலை. தறி நெய்யும் நெசவாளி குடும்பத்தைச் சேர்ந்தவர்.
சென்னிமலை கைத்தறித் துணி உற்பத்திக்குப் பெயர் பெற்றது. இங்கு நாச்சிமுத்து முதலியார் கருப்பாயி அம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் குமாரசாமி. இவர் 1904ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தார்.
தறியில் துணி நெய்துப் பிழைக்கும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர் சென்னிமலையில் தனது ஆரம்பகால கல்வியை ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். மேலே படிக்க வசதி இன்மையால் பள்ளிப்பாளையத்தில் இருந்த தாய்மாமன் வீட்டுக்குச் சென்றார். அங்கும் இவரது குலத் தொழிலான கைத்தறி நெசவுத் தொழிலை மேற்கொண்டார்.
ஈரோடு சென்று அங்கு நூல் வாங்கிக் கொண்டு வந்து துணி நெய்து மீண்டும் ஈரோடு சென்று விற்று பிழைப்பு நடத்தினார். அப்போதெல்லாம் போக்கு வரத்துக்கு போதிய வசதிகளோ அல்லது பேருந்து வசதிகளோ இல்லாத நிலையில் இவர் மாட்டு வண்டிகளிலோ அல்லது சுமையைத் தலையில் சுமந்து கால் நடையாகவோ சென்று வந்தார்.
இந்தத் தொழிலில் போதிய வருமானம் இல்லாமையாலும், அலைச்சல் ஒத்துக் கொள்ளாததாலும், இவர்கள் குடும்பம் திருப்பூருக்குக் குடி பெயர்ந்தது. அங்கு இவர் தனக்குப் பழக்கமான தறியடிக்கும் தொழிலைச் செய்யாமல், சென்னியப்ப முதலியார் மற்றும் ஈங்கூர் ரங்கசாமிக் கவுண்டர் ஆகியோர் நடத்திய தரகு மண்டியில் கணக்கு எழுதும் வேலையில் சேர்ந்தார்.
பஞ்சு எடைபோட்டு வாங்குவது கொடுப்பது என்பதில் மிகவும் நேர்மையாக நடந்து கொள்பவர்களைத்தான் முதலாளிகள் நியமிப்பார்கள், அப்படிப்பட்ட நேர்மையாளராக இருந்த குமாரசாமிக்கு அந்த வேலையை அவர்கள் அளித்திருந்தார்கள்.
பஞ்சு மண்டி வேலை முடிந்ததும், பொது வேலைகளிலும் ஈடுபட்டு நாட்டுச் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் குமாரசாமி. அப்போது திருப்பூரில் இயங்கி வந்த தேசபந்து வாலிபர் சங்கத்தில் இவர் உறுப்பினரானார்.
திருமண வாழ்க்கை
இவரது பத்தொன்பதாவது வயதில் இவருக்குத் திருமணம் நடந்தது. அப்போது பதினான்கே வயதான ராமாயி இவரது மனைவியானாள். ஆறாண்டு காலம் இவரது திருமண வாழ்வு இனிதே நடந்தும் மகப்பேறு இல்லை.
கதர் இயக்கத்தில் இணைந்தார்
மகாத்மா காந்தி ஐந்து முறை திருப்பூருக்கு வந்திருக்கிறார். கதர் இயக்கம் இங்குதான் சிறப்பாக நடந்து வந்தது. குமாரசாமியும் கதர் இயக்கத்தில் கலந்து தலையில் கதர்க் குல்லாய், கதர் உடை என்று அந்த நாள் காங்கிர தொண்டர்களின் உண்மைத் தோற்றத்தில் விளங்கினார்.
1932ம் ஆண்டு காங்கிரஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டிருந்தார். பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. சட்ட மறுப்பு இயக்கம் அதனைச் சார்ந்த மறியல் போன்றவைகள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகின. பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் அடக்குமுறை தலை விரித்தாடியது.
ஆங்கிலேய அரசு அடக்குமுறையை ஏவிவிடவும், அதனை எதிர்த்து மக்களின் போராட்டமும் மேலும் மேலும் வலுவடைந்தது. எல்லா இடங்களைப் போலவே திருப்பூரிலும் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்பட்டது, காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பூட்டி சீலிடப்பட்டது.
தேசபந்து ஊர்வலம்
இந்த தடைகளையெல்லாம் மீறி திருப்பூரில் 10-1-1932இல் ஓர் ஊர்வலம் நடத்த முடிவாகியது.
தேசபந்து வாலிபர் சங்கத்தினர் முன்னிலையில் இருந்து ஏற்பாடுகளைச் செய்தனர். அந்த ஊர்வலத்துக்கு அவ்வூர் செல்வந்தரும் மிகப் பிரபலமாயிருந்தவருமான ஈஸ்வர கவுண்டர் தலைமை ஏற்பது என முடிவாகியது.
ஊர்வலத்துக்கு முதல் நாள் மக்களிடம் செல்வாக்குள்ள பி.டி.ஆஷர், அவர் மனைவி பத்மாவதி ஆஷர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமை வகிப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்த ஈஸ்வர கவுண்டர் வரவில்லை. எனவே புகழ்பெற்ற தியாகி பி.எஸ்.சுந்தரம் என்பார் அவரைத் தேடி அவர் வீடு சென்றார், பின்னர் அவரது பஞ்சாலைக்குச் சென்றார். அங்கு கவுண்டர் இருப்பதைப் பார்த்தார். ஊர்வலத்துக்கு வர அவர் மறுத்து விட்டார்.
இந்தச் சூழ்நிலையில் தியாகி பி.எஸ்.சுந்தரம் அவர்களே ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். அவரது தலைமையில் குமாரசாமி, இராமன் நாயர், விசுவநாத ஐயர், நாச்சிமுத்து கவுண்டர், சுப்பராயன், நாச்சிமுத்து செட்டியார், பொங்காளி முதலியார், அப்புக்குட்டி எனும் மாணவன், நாராயணன் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஊர்வலம் திருப்பூர் வீதிகளில் தேசபக்த முழக்கங்களோடு சென்று கொண்டிருந்தது. வீரர்கள் இரண்டு இரண்டு பேராக அணிவகுத்துச் சென்றனர்.
சாலையில் கூடியிருந்த மக்கள் என்ன நடக்குமோ இந்த வீரர்களை பொலிஸ் அரக்கர்கள் எப்படியெல்லாம் தாக்குவார்களோ என்று அஞ்சியபடி பார்த்துக் கொண்டிருந்தனர். ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து பொலிஸ் நிலையத்தை நெருங்கியது.
அப்போது பொலிஸ் நிலையத்திலிருந்து இரு உயர் அதிகாரிகள் உட்பட சுமார் முப்பது நாற்பது பொலிஸ்காரர்கள் கைகளில் தடியுடன் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது பாய்ந்தனர். ஊர்வலத்தில் வந்த தொண்டர்களைப் போல பல மடங்கு அதிகமான பொலிசார் அந்த சிறு ஊர்வலத்தில் வந்தவர்களைக் கண் மண் தெரியாமல் அடித்துப் புடைத்தனர்.
அவர்கள் கைகள் சோர்ந்து ஓயும் வரை அடித்தனர். மண்டைகள் உடைந்தன. கை கால்கள் முறிந்தன. தொண்டர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்து உயிர் பிரியும் நிலையிலும், மகாத்மா காந்திக்கு ஜே, பாரத மாதாக்கு ஜே என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.
குமாரசாமியின் மரணம்
குமாரசாமியின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது. ரத்தம் பீரிட்டு எழுந்து கொட்டியது. அவன் கையில் பிடித்திருந்த கொடிக்கம்பு மட்டும் பிடித்த பிடி தளரவேயில்லை.
வாய் ஜே கோஷம் போட்டபடி இருந்தது. குமாரசாமி எனும் அந்த வீரத்தியாகி உடல் சரிந்து தரையில் விழுந்தபோதும் அவன் கையில் பிடித்திருந்த கொடிக்கம்பும் கொடியும் மட்டும் கீழே விழவேயில்லை.
நினைவு இழந்து தரையில் வீழ்ந்து கிடந்த குமாரசாமியைத் தன் பூட்ஸ் கால்களால் பொலிசார் உதைத்தனர். சிலர் அவன் உடல் மீது ஏறி மிதித்தனர். அவன் கை கெட்டியாகப் பிடித்திருந்த கொடிக் கம்பை ஒரு பொலிஸ்காரர் சிரமத்துடன் பிடித்து இழுத்து வீசி தரையில் எறிந்தார்.
குமாரசாமியும், ராமன் நாயரும் ரத்தமும் நிணமுமாக தரையோடு தரையாக வீழ்ந்து கிடந்தனர். மண்டையில் அடிபட்ட பி.எஸ்.சுந்தரத்துக்கு காட்சிகள் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தனவே தவிர காதில் எந்த ஒலியும் கேட்கவில்லை.
பொலிசார் அடித்த அடியில் அவரது கேட்கும் சக்தி முழுமையாகப் போய்விட்டது தெரிந்தது. அவரது உடலில் கை, கால்கள், இடுப்பு, விலா ஆகியவிடங்களில் மொத்தம் பதினான்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. இந்த நிகழ்ச்சியின் விளைவாக தியாகி பி.எஸ்.சுந்தரம் தன் வாழ்நாள் முழுவதும் உடல் ஊனமுற்றவராக, செவிடராக இருக்க நேர்ந்த கொடுமையும் நடந்தது.
அடிபட்டு வீழ்ந்த சிலரை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். மற்றவர்களை அவர்களது உற்றார் உறவினர் எடுத்துச் சென்று விட்டனர். இவ்வளவு அடிபட்ட காந்தியத் தொண்டர்கள் பொலிஸ் மீது கல் எறிந்து தாக்கியதாகவும், குழப்பம் விளைவித்ததாகவும், அதனால் பொலிஸ் தடியடி நடத்தியதாகவும் வழக்கு பதிவாகியது.
சுந்தரம், குமாரசாமி, ராமன் நாயர் ஆகியோர் உடல்களைத் தூக்கி சாமான்களை வீசுவது போல ஒரு வண்டியில் வீசினார்கள். மரண அடிபட்ட குமாரசாமிக்கு மண்டை உடைந்து ஏதோவொன்று மூளைக்குள் சென்று விட்டது. நினைவு இல்லை. ரத்தம் நிற்கும் வழியாக இல்லை. சிறிது நேரம் துடித்துக் கொண்டிருந்த குமாரசாமியின் உயிர் 11-1-1932 அன்று இரவு தன் மூச்சை நிறுத்திவிட்டுப் பிரிந்து சென்றது.
அந்த வீரத் திருமகனின் உடல் ஒரு துணியால் கட்டப்பட்டு மூங்கிலால் தூக்கப்பட்ட ஒரு தூணியில் கிடத்தப்பட்டு தூக்கிச் சென்று அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடம் எது? பொலிசார் செய்த ரகசிய சவ அடக்கத்தினால், அது எந்த இடம் என்று தெரிந்து கொள்ள முடியாமல் போனது.
ஒரு வீர தேசபக்த இளைஞனின் உடல், அவன் பிறந்த நாட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டதே தவிர, அவன் விளைத்த வீரப் போரின் விவரத்தை யாராலும் மறைக்க முடியாது.
வாழ்க திருப்பூர் குமரனின் புகழ்!


திருப்பூர் குமரன் ( அக்டோபர் 4, 1904 - ஜனவரி
11 , 1932 ) இந்திய விடுதலைப் போராட்ட
தியாகி ஆவார். இவர் ஈரோடு
மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில்
பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு
இயக்கம் மீண்டும் தொடங்கிய போது
தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய
நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற
உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு
செய்த மறியல் போராட்டத்தில்
தீவிரமாகப் பங்குகொண்டு, 1932
ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்று
கையில் தேசியக் கொடியினை ஏந்தி,
தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று,
அணிவகுத்துச் சென்றபோது
காவலர்களால் தாக்கப்பட்டு
தடியடிபட்டு மண்டை பிளந்து கையில் இந்திய
தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி
விழுந்து, பின்னர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். ஜனவரி 11 இல்
உயிர் துறந்தார் திருப்பூர் குமரன் .
இதனால், கொடிகாத்த
குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

இளமைப்பருவம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை
அருகிலுள்ள செ.மேலப்பாளையம்
என்னும் சிற்றூரில் 1904 அக்டோபர் 4ம் தேதி,
நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதியினருக்கு
முதல் மகனாகப் பிறந்தார். குடும்ப
சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை
ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக்
கொண்டார். கைத்தறி
நெசவுத் தொழிலை செய்து
வந்த குமரன், 1923ல் தனது 19வது வயதில்,
14 வயது ராமாயியை மணம் முடித்தார்.
கைத்தறி நெசவுத் தொழிலில்
போதிய வருமானம் இல்லாததால்,
மாற்றுத் தொழில் தேடி திருப்பூர்
சென்று, ஈஞ்ஞையூர் கந்தசாமி
கவுண்டர் நடத்திய மில்லில் எடைபோடும்
பணியில் சேர்ந்தார். காந்தி
கொள்கையில் அதிக ஈடுபாடு
கொண்ட குமரன், நாட்டு
விடுதலைக்காக காந்தி அறிவித்த
போராட்டங்களில் எல்லாம் கலந்து
கொண்டார்.

இறுதி ஊர்வலம்

ஜனவரி 10 இல் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்ட திருப்பூர் குமரன் 11 இல்
மருத்துவமனையில் அதிகாலையில்
உயிரிழந்தார். பொதுமக்கள்
அவரது இறுதி ஊர்வலத்தில்
பங்குகொண்டனர். முதலில்
அவரது தம்பி ஆறுமுகமும், பின்னர் குமரன்
தேசத்தின் பொதுச்சொத்து
என்று கூறி ராஜ கோபால அய்யர்,
மாணிக்கம் செட்டியார்,
வெங்கடாசலம் பிள்ளை என பலரும்
இறுதிச் சடங்கான கொள்ளி
வைத்தனர்.
குமரன் மறைந்த ஒரு மாதத்திற்குள் திருப்பூர்
வந்த மகாத்மா காந்தி, அவரது
குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
காமராஜர் உயிருடன் இருந்தவரை குமரன்
குடும்பத்தினருடன் அவ்வப்போது
தொடர்பு கொண்டு
விசாரிப்பார்.

துணைவியார்

இவரது துணைவியார் ராமாயி
அம்மாள் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல்
மாதம் உயிர் நீத்தார்.

நினைவகம்

தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன்
தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில்
திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை
அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நூல்
நிலையம் உள்ளது. படிப்பகம் ஒன்று
செயல்பட்டு வருகின்றது. மேலும்
இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின்
படங்கள் வரைந்து பொதுமக்கள்
பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தபால் தலை
இவரது நூறாவது பிறந்த நாளைச்
சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் 2004 இல்
சிறப்பு நினைவுத் தபால் தலை இந்திய
அரசால் வெளியிடப்பட்டது.
..........................................
கொடி காத்த குமரன்
..........................................
இந்தியரை அடிமைப்படுத்திய
வெள்ளையரிடமிருந்து உரிமை
பெறுவதற்காக 1930ம் ஆண்டு
காந்தியடிகள் உப்புச் சத்தியாகிரகப்
போராட்டத்தை அறிவித்தார்.
உப்பு இல்லாமல் மனிதன் உயிர்
வாழ முடியாது. அது கடற்கரையில்
தானாக விளைகிறது. கடல் நீரை
பாத்திகளில் தேக்கி வைத்து, கதிரவனின்
வெம்மையால் உலர்த்தி
தயாரிக்கப்படுகிறது. இயற்கை நமக்கு
இலவசமாகக் கொடுத்துவரும்
உப்பை ஆங்கில அரசாங்கம் தனதாக்கிக்
கொண்டு அதற்கும் வரி விதித்தது.
வரி செலுத்தியவருக்கே உப்பு எடுக்கும்
உரிமை உண்டு.
இதைக்கண்ட காந்தியடிகளின் “உப்புக்கு
வரி போட்டது தவறு. நீருக்கும் காற்றுக்கும் வரி
போட்டால் நாம் ஒப்பமாட்டோம். உப்புக்கு
வரி போட்டதை நாம் அற முறையில் எதிர்ப்போம்”
என்று அறிவித்தார்.
காந்தியடிகள் அறிவிப்பு மக்களை
வீறுகொள்ளச் செய்தது.
மக்கள் ஆங்காங்கே அச்சட்டத்தை எதிர்க்கத்
திரண்டு வந்தனர். “உப்பு விளையும்
கடற்கரையில் உப்புச் சட்டத்தை மீறி
உப்பெடுப்போம். அதோடல்லாமல் மற்ற
இடங்களிலும் உப்பு மண்ணை நீரில் கரைத்துக்
காய்ச்சி உப்புச் சட்டத்தை அமைதியான
முறையில் எதிர்ப்போம். முதலில் நான்
இச்சட்டத்தை மீறுகிறேன். அதன் பிறகு நாடு
முழுவதும் என்னைப் பின்பற்றி
உப்புச்சத்தியாகிரகம் செய்யுங்கள்”
என்று அறிவித்து தண்டி என்னுமிடத்தில்
உப்பளத்தை நோக்கி தொண்டர்களுடன்
சென்று சட்டத்தை மீறி உப்புக் காய்ச்சிட
முயன்றார்.
தமிழகத்தில் வேதாரண்யத்தில்
இராஜாஜியும், சென்னைக்
கடற்கரையில் ஆந்திர கேசரி பிரகாசம் பந்துலு
என்ற தலைவரும், தொண்டர்களும்
உப்புச் சட்டத்தை மீறினார்கள். தமிழகம்
முழுவதும் உப்புச் சத்தியாகிரகம்
தீவிரமாகவும், வலுவாகவும்
நடைபெற்றது.
இந்தியா முழுவதிலும், தமிழகம் எங்கும்
நடைபெற்ற உப்புச் சட்ட எதிர்ப்புப்
போராட்டம் திருப்பூரிலும் நடைபெற்றது.
கொடி காத்த குமரன் என்று
பெருமையுடன் அழைக்கப்படும்
தியாகியின் வரலாறு
எழுச்சியூட்டுவதாகும். அப்போதைய கோவை
மாவட்டம், தற்போது ஈரோடு மாவட்டம்,
சென்னிமலை என்ற சிறு நகரில் ஒர் ஏழை
நெசவாளர் குடும்பத்தில் 1904ம்
ஆண்டு அக்டோபர் மாதத்தில் நாச்சிமுத்து
முதலியாருக்கும், கருப்பாயி என்பவருக்கும்
புதல்வனாக குமரன் பிறந்தார்.
குமரன் பள்ளியில் கல்வி மீது மிகவும்
நாட்டம் கொண்டு படித்தார்.
ஆனால் பெற்றோரின் வறுமை அவருடைய
கல்விக்குத் தடை விதித்தது. ஐந்தாம் வகுப்போடு
குமரனின் கல்வி முடிந்துவிட்டது.
பெற்றோர் தம் பிள்ளைக்குச் சூட்டிய
பெயர் குமாரசாமி என்பதாகும்.
அப்பெயர் அவ்வருமைப் பிள்ளை விடுதலைப்
போரில் ஈடுபட்டு அமரன் ஆன பின்னர்
“குமரன்” என்று மாறியது.
பள்ளிப்படிப்பைக் கைவிட்ட குமரன்
பள்ளிப்பாளையத்திற்குச் சென்று
நெசவுத் தொழிலில்
ஈடுபட்டார் குமரன். பட்டுச் சேலை
நெய்வதில் சிறந்த நிபுணராக
விளங்கினார். பின்னர் தமது
சொந்த ஊரான
சென்னிமலைக்கு வந்து
அத்தொழிலைச் செய்து
குடும்பத்தின் வருவாயைப்
பெருக்கினார். குமரனுக்கு 19 வயதில்
இராமாயி என்னும் பெண்ணைத்
திருமணம் செய்து வைத்தனர்
பெற்றோர்.
குமரனின் குடும்பம் நெசவுத்
தொழிலில் இருந்து கிடைத்த
வருமானம் போதாமல் வறுமையில் உழன்றது.
வேறு வேலை தேடும் நோக்கத்தூடன் ஈரோட்டிற்குச்
சென்றார். அங்கு பல
நிறுவனங்களில் வேலை கேட்டும் வேலை
கிடைக்காமல், திருப்பூரில் பஞ்சு
வியாபாரக்கடையில் வேலை செய்தார்.
பின்னர் எடை பதிவு செய்யும்
குமாஸ்தா வேலை
கொடுக்கப்பட்டது. அதையும் திறம்பட
செய்தார். குமரன் தமக்கு
கொடுக்கப்பட்ட வேலையின்
பொறுப்பு நிலையுணர்ந்து,
முதலாளிக்கு நட்டம் ஏற்படாத வகையில்
மிகவும் கவனித்து எச்சரிக்கையாகப்
பணியாற்றி வந்தார்.
குமரன் தமிழ்மறையான திருக்குறள் மீது
ஆர்வம் கொண்டு பயின்றார்.
குமரன் எப்போதும் சுத்தக் கதராடையையே உடுத்தி
வந்தார். நாள்தோறும் கைராட்டையில் நூல்
நூற்று வந்தார்.
குமரனுக்கு வீர உணர்வையும், தியாக
உணர்வையும் எவரும் ஊட்டவில்லை அது
அவரிடம் இயல்பாகவே அமைந்திருந்தது.
1930 ஆம் ஆண்டு வேதாரண்யத்தில்
இராஜாஜி தலைமையில் நடைபெற்ற
உப்பு சத்தியாகிரகத்தில்
கலந்துக்கொள்ளத் துடித்தார்.
ஆனால் அவரது பெற்றோர்களும்,
முதலாளியும் தடுத்து விட்டனர்.
அப்பொழுது நடைபெற்ற
போராட்டம் உப்புச் சட்டத்தை மீறுதல் என்ற
அளவில் நின்றுவிடவில்லை. நாடு முழுவதும்
பரவியது. அப்போராட்டம் நிலவரி
கொடா இயக்கமாகவும்
வளர்ந்தது. மதுபானக் கடைகள்,
அயல்நாட்டுத் துணிக்கடைகள் முன்பு மறியல்
போராட்டங்களும் நடைபெற்றன.
போராட்டத்தின் விளைவால் ஆங்கிலேயர்
ஒப்பந்தம் போட முன் வந்தனர். அதுதான்
காந்தி - இர்வின் ஒப்பந்தம் ஆகும். அந்த
ஒப்பந்தத்தின் மூலம் உப்புவரி நீக்கப்பட்டது.
இர்வின் பிரபு தனது பதவிக்காலம்
முடிந்து இங்கிலாந்துக்குச்
சென்றுவிட்டார். அவருக்குப் பிறகு
ஆங்கில அரசின் பிரதிநிதியாக
ஏகாதிபத்திய வெறி பிடித்த
வெல்லிங்டன் பிரபு என்பவர் பதவி
ஏற்றார். அவர் இந்திய விடுதலைப்
போராட்டத்தை வெறுப்பவர். இந்திய
மக்களுக்கு இம்மியளவும் உரிமை
கொடுக்கக்கூடாது என்ற
கொள்கை உடையவர். எனவே காந்தி
– இர்வின் ஒப்பந்தத்தை
கிழித்தெறிந்தார். ஒப்பந்தம் மூலம்
வழங்கப்பட்ட உரிமைகளைப் பறித்தார்.
அந்த சமயத்தில் லண்டனில் நடந்த
வட்டமேஜை மாநாட்டில் காந்தியடிகள்
கலந்து கொண்டு இந்திய
விடுதலைக்கான கருத்துக்களை முன் வைத்தார்.
ஆங்கில ஏகாதிபத்தியம் அவற்றை ஏற்றுக்
கொள்ளவில்லை.
இந்தியா வந்த பின்னர் காந்தியடிகள்
கைது செய்யப்பட்டார். அவரைத்
தொடர்ந்து நேரு, வல்லபாய் படேல்
போன்ற தலைவர்களும் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டனர்.
சுதந்திரப் போரில் இரண்டில் ஒன்றைப்
பார்த்துவிட வேண்டும் என்று துடித்துக்
கொண்டிருந்த
தொண்டர்களும்,
பொதுமக்களும் தலைவர்களின் கைது
செய்தியைக் கேள்விப்பட்டவுடன்
கொதித்தெழுந்தனர். மீண்டும்
சட்டமறுப்பு மறியல்கள் கடுமையாக
நடைபெற்றன. போராட்டத்தை ஆங்கிலேய
அரசு கண்மூடித்தனமாக அடக்கு முறைகளை
மேற்கொண்டு ஒடுக்க முயற்சித்தது.
தமிழகம் முழுவதும் போராட்டம்
தீவிரமடைந்தது. திருப்பூரில் தேசபந்து வாலிபர்
சங்கத்தினர் மறியல் நடத்துவதற்கான
ஏற்பாட்டைச் செய்தனர். குமரன் அதை
அறிந்து அச்சங்கத்தினருடன் இணைந்து
செயல்படத் துணிவு
கொண்டார். குடும்பத்தினர்களும்
நண்பர்களும் தடுத்தும் குமரன்
போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு
செய்துவிட்டார். குடும்பத்தைப் பற்றியும்,
மனைவியைப் பற்றியும் கவலைப்படாமல் தேச
விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கு
பெறவும், குண்டாந்தடிகள்
தாக்கினாலும், குண்டுகள் நெஞ்சைப்
பிளந்தாலும், கொடுஞ்சிறையில்
அடைக்கப்பட்டாலும், செத்து
மடிந்தாலும் கவலை இல்லை, இந்தியாவின்
விடுதலையே தனது இலட்சியம் என்று உறுதி
கொண்டார்.
மறியல் போராட்டத்தில் கலந்து
கொள்ளச் செல்லும் முன்பு
குமரன் தன் தாயாரிடம் வணங்கி, ஆசி
கூறி அனுப்பும்படி வேண்டினார். மகனை
அனுப்ப விருப்பம் இல்லாத தாய்
கருப்பாயி, ஒருவாறு மனதை
தேற்றிக்கொண்டு மகனின்
உணர்ச்சியைக் கண்டு கண்ணீருடன் ஆசி கூறி
அனுப்பினார்.
திருப்பூரில் மங்கள விலாஸ்
மாளிகையின் முன்பு கூடினார்கள் மறியல்
போராட்ட வீரர்கள். அவர்களை மாதரசிகள்
மனங்கனிந்து முன்வந்து ஆரத்தி எடுத்து,
திலகமிட்டு, வாழ்த்தி வழி அனுப்பினர்.
“உடல், பொருள், ஆவி” என்ற
மூன்றையும் இந்திய தேச விடுதலைப்
போராட்டத்தில் இழந்தாலும் சரி என்று
போராட்டக்களம் நோக்கி புறப்பட்டனர்.
பின்னர் குமரன் என்று வழங்கப்பட்ட
குமாரசாமி தேசியக் கொடியை
கையில் பிடித்துக்கொண்டு
தலைநிமிர்ந்து ஏறுநடை போட்டுச் சென்றார்.
தொண்டர்படை சென்ற
வீதியில் தான் காவல் நிலையம் இருந்தது.
தொண்டர் படையைக் கண்டதும்,
சுமார் 30 காவலர்களும், 2 காவல்
அதிகாரிகளும் தடிகளுடன் காவல்
நிலையத்திலிருந்து ஓடி வந்தனர்.
தொண்டர் படையின் அருகில்
வந்ததும் கண்மூடித்தனமாக சுதந்திரப்
போராட்ட வீரர்களைத் தாக்கினார்கள்.
“கொடியை பிடித்துக்
கொண்டு ஊர்வலம் போவது
சட்டவிரோதமாகும் என்று அறிவித்து
இருக்கிறோம். ஆகையால் அணிவகுத்துச்
செல்வதைத் தடை செய்கிறோம். கலந்து
போய்விடுங்கள். இல்லையென்றால்
வன்முறையைக் கையாண்டு உங்களைச் கலைக்க
முற்படுவோம்” என்று எச்சரிக்கை ஏதும்
செய்யாமல் காவலர்கள் எடுத்த
எடுப்பிலேயே தடியால் தாக்கினார்கள்.
தொண்டர்கள் காவலர்களுக்கு
எவ்விதத் துன்பமும் செய்யவில்லை.
தடியால் வெறிநாயை அடிப்பது போல்
அடித்தார்கள். அதன் மூலம் சுதந்திர
உணர்வை, ஆர்வத்தை அழித்துவிடலாம் என்று
நினைத்தார்கள். தடியால் கடுமையாகத்
தாக்கியதுடன், தொண்டர்களின்
கரங்களிலிருந்து தேசியக் கொடியைப்
பிடுங்கி எறிந்தனர். காவலர்கள் தாக்கிய
போதும், குமரன் தனது கையில் பிடித்திருந்த
தேசியக் கொடியை காவலர்களிடம்
பறிகொடுக்காமல்
கெட்டியாகப் பிடித்திருந்தார்.
காவலர்கள் குமரனின் கரங்களிலிருந்து
பலவந்தமாக தேசியக்கொடியை
பிடுங்கி எறிந்தனர்.
குமரனும், இராமன் நாயர் என்ற
தொண்டரும் நினைவிழந்து இரத்த
வெள்ளத்தில் கிடந்தனர். அரசாங்க
மருத்துவமனைக்கு கொண்டு
சென்றனர். காவலர்களின்
தாக்குதலால் குமரனின் மண்டை சிதறி மூளை
பாதிக்கப்பட்டுவிட்டது. அதனால்
மருத்துவர்களால் காப்பாற்ற
முடியவில்லை. 11.01.1932 அன்று குமரனின்
உயிர் பிரிந்தது. குமரனின் இறுதி ஊர்வலம்
காவல்துறையால் மிகவும் இரகசியமாக
வைக்கப்பட்டு, மக்கள் கலந்து
கொள்வது தடுக்கப்பட்டது.
இந்திய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு
தனது இன்னுயிரை ஈந்த தியாகி குமரனை
'கொடிகாத்த குமரன்' என்று தேசம்
போற்றுகிறது. குமரனின் தியாகம் போற்றுவோம்!
அவர் புகழ் பரப்புவோம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக