பக்கங்கள்

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை


தாய்ப்பாலூட்டும் சரியான பொசிஷன் என்ன?!: உலக தாய்ப்பால் வார ஸ்பெஷல்

தாய்ப்பாலூட்டும் சரியான பொசிஷன் என்ன?!: உலக தாய்ப்பால் வார ஸ்பெஷல்
தாய்ப்பாலூட்டும் சரியான பொசிஷன் என்ன?!: உலக தாய்ப்பால் வார ஸ்பெஷல்
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு அது குறித்த பரவலான விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில். தாய்ப்பாலின் மகத்துவம், பாலூட்டுவதால் தாய்க்கு நேரும் நன்மைகள் மற்றும் அவர் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள், தாய்ப்பாலூட்டும் சரியா பொசிஷன் பற்றி விரிவாகச் சொல்கிறார், மகப்பேறு மருத்துவர் பிரேமலதா.


சீம்பால்... சிறப்புகள்!

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டப்படும்போது, உலகம் முழுக்க ஒரு மில்லியன் சிசு இறப்பைத் தவிர்க்க முடியும் என்கிறது ஒரு ஆய்வு. காரணம், குழந்தை பிறந்ததும் பழுப்பு நிறத்தில் தாய்க்குச் சுரக்கும் முதல் பாலான சீம்பாலில் இருக்கும் கொலஸ்ட்ரம். அதிக ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கவல்ல இந்த சீம்பால்தான், குழந்தைக்கு இயற்கை அளிக்கும் முதல் நோய்த்தடுப்பு மருந்து. அதை அவசியம் குழந்தைக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும், தண்ணீர்கூடத் தேவையில்லை. ஏழாவது மாதத்தில் இருந்து தாய்ப்பாலுடன் சேர்த்து இணை உணவுகள் கொடுக்க ஆரம்பிக்கலாம்.


தாய்ப்பாலின் மகத்துவம்!

தாய்ப்பாலால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் பலன்கள், புட்டிப்பால், பசும்பால் போன்றவற்றால் ஈடுகொடுக்க முடியாதவை.

* தாய்ப்பாலில் உள்ள இம்யூனோகுளோபுளின்என்ற நோய் எதிர்ப்பு சக்தி, குழந்தை பிறந்த முதல் 10 நாட்களில் தாய்க்குச் சுரக்கும் பாலில் அதிகளவு இருக்கும். அது பல்வேறு விதமான அடிப்படை நோய்களில் இருந்து குழந்தையைப் பாதுகாக்கும்;

தொற்று, நிமோனியா, குடல் சார்ந்த நோய்கள்
ஏற்படுவதற்கான வாய்ப்புகளைத் தவிர்க்கும்.

* தாய்ப்பால் ஊட்டப்படும் குழந்தைகளுக்குக் காதுகளில் தொற்று ஏற்படும் வாய்ப்பு இரண்டு வயதுவரை 43% குறைக்கப்படும்.

* பிறந்த மூன்று மாதங்களில், குழந்தையின் எடையை இரண்டு மடங்கு அதிகரிக்கும் தனிச்சிறப்பு தாய்ப்பாலுக்கு மட்டுமே உண்டு.

* தாய்ப்பால் குடித்த குழந்தைகளுக்கு சர்க்கரை நோய், இதய நோய், ஆஸ்துமா, புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

* ‘லான்சர்’ மருத்துவ இதழின்படி, தாய்ப்பால் புகட்டுவதினால் 5 வயதுக்குட்பட்ட குழந்தை மரணங்கள் 13% தடுக்கப்படுகின்றன.

* புட்டிப்பால் குடித்த குழந்தைகளைவிட தாய்ப்பால் குடித்த குழந்தைகள் 5% & 8% வரை அதிக
அறிவாற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். குழந்தைப் பருவத்திலும், வளரிளம் பருவத்திலும் அறிவுசார் தேர்வுகளில் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளைவிட தாய்ப்பால் குடித்த குழந்தைகள் திறனுடன் செயல்படுகிறார்கள் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

தாய்ப்பால், தாய்க்குத் தரும் பலன்களும் அதிகம்!

* பாலூட்டும் தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப் பின்னர் ஏற்படும் ரத்தப்போக்கு குறையும்.

* தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு, கர்ப்பகாலத்தில் அதிகரித்த உடல் எடை இயற்கையாகவே இயல்புநிலைக்குத் திரும்பும்.

* குழந்தைக்குப் பாலூட்டும் காலம்வரை, அடுத்த கர்ப்பம் இயற்கையாகவே தவிர்க்கப்படும். இது ஒவ்வொரு பெண்ணைப் பொருத்து மாறுபடலாம்.

* தாய்ப்பால் ஊட்டுவது மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பைப் புற்றுநோய், இரண்டாம் வகை சர்க்கரை நோய் ஆகிய நோய்கள் பின்னாளில் அந்தப் பெண்களைத் தாக்கும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.

* தாய்க்கும் குழந்தைக்குமான அற்புத உறவை வலுப்படுத்தும்.

பாலூட்டும் தாய்க்கான சிறப்பு உணவுகள்!

பொதுவாக தாய்க்கு ஒரு நாளைக்குக் குறைந்தது 850 மிலி பால் சுரக்கும். அதற்காக அவருக்கு 600 கலோரி எனர்ஜி, இயல்பைவிட அதிகமாகத் தேவைப்படும். அதை ஈடுகட்டக்கூடிய சிறப்பு உணவுகள் இவை...

பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள்

பழங்கள்

பால்
வேர்க்கடலை மற்றும் நாட்டுச் சர்க்கரை
பேரீச்சம்பழம், உலர் பழங்கள், நட்ஸ்

மீன், கோழி, ஆட்டு இறைச்சி


நாட்டுக்கோழி முட்டை

முளைகட்டிய தானியம் மற்றும் பருப்பு-, பயறு வகைகள்


தாய்ப்பால் புகட்டும் சரியான பொசிஷன் எது?

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது, மார்பகக்காம்பும் அதைச் சுற்றியுள்ள கருவட்டப் பகுதியும் குழந்தையின் வாய்க்குள் இருக்கும்படி புகட்ட வேண்டும். அப்போதுதான் குழந்தையால் தாய்ப்பாலை முழு ஆற்றலுடன் உறிஞ்சிப் பெற முடியும். மார்பகக்காம்பில் மட்டும் வாயைவைத்துக் குடிக்கும்போது குழந்தைக்கு பாலை உறிஞ்சுவது சிரமமாக இருக்கும் என்பதுடன், தாய்க்கும் அது வலி, புண்ணை ஏற்படுத்தலாம்.

குழந்தையின் கழுத்தும் தலையும் நேராகவோ, அல்லது கழுத்து சற்று பின்புறம் வளைந்தோ இருக்க வேண்டும்.

குழந்தையின் உடம்பு, தாயை நோக்கி உடலோடு உடல் அணைத்தவாறு இருக்க வேண்டும்.

தாய் குழந்தையின் உடல் முழுவதையும் தன் கரங்களால் தாங்கிப் பிடித்து, அதற்கு கதகதப்பான பாதுகாப்பு உணர்வைக் கொடுக்க வேண்டும்.

குழந்தை மற்றும் தாய் இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். அப்போது சரியான முறையில் பால் புகட்டப்படுவதுடன், குழந்தைக்குப் போதுமான பால் கிடைக்கப்பெற்றதா என்பதை தாயால் உணர முடியும்.


தாய்ப்பால்... உலக நாடுகளில் இந்தியாவின் இடம்.?!

உலகிலேயே தாய்ப்பால் ஊட்டுவதில் முதல் இடம் வகிக்கிறது, ருவாண்டா. அந்நாட்டில் சுமார் 90% தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். இலங்கை 76% பெற்று இரண்டாவது இடத்திலும், கம்போடியா மற்றும் நேபாள நாடுகள் 74% பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளன. தாய்ப்பால் ஊட்டுவதில் 25% பெற்று இந்தியா 31வது இடத்தில் இருப்பது வருத்தமான செய்தி. வரும் ஆண்டுகளில் இளம் தாய்மார்கள் இந்நிலை மாற்றுவார்கள் என்று நம்புவோம்!
நன்றி விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக