புதன், 23 டிசம்பர், 2009

கிறிஸ்துமஸ்... கிறிஸ்துமஸ்...

கிறிஸ்துமஸ்... கிறிஸ்துமஸ்...


உலகெங்கும் அதிகமான மக்கள் கொண்டாடும் பண்டிகைகளும் முக்கியமானது கிறிஸ்துமஸ். மனிதர்களை ரட்சிப்பதற்காகத் தேவமைந்தன் ஒரு சுடராக தொழுவத்தில் தோன்றிய நாள். உலகெங்கிலும் இதில் வித்தியாசமே இல்லை. ஆனால் கலாசாரத்துக்குக் கலாசாரம், நாட்டுக்கு நாடு கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறுசிறு வித்தியாசங்களுடன் கொண்டாடுகிறார்கள். அடிப்படை உணர்வு ஒன்றுதான்.
உலகெங்கும் வீடுகளிலும், தேவாலயங்களிலும் “நட்சத்திரங்களும்”, விளக்குகளும் பூத்து ஜொலிக்கும். கிறிஸ்துமஸ் மரங்கள் மினுக்கும் விளக்குகளை காய்த்துச் சிரிக்கும். தேவபுதல்வனை வரவேற்கும் பாடல்கள் ஒலிக்கும். இனிமை பூத்துக் கிடக்கும் இந்தக் குளிர்கால வேளையில் எங்கெங்கும் ஓர் உற்சாகம் மிதக்கும். உச்சக்கட்ட கொண்டாட்டம், கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தின மாலையில்தான். அப்போது மக்கள் புத்தாடை அணிந்து பிரார்த்தனை செய்கிறார்கள். இயேசுவைப் போற்றிப் பாடுகிறார்கள். ஆடுகிறார்கள். வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று “கேக்” போன்ற இனிப்புகளுடன் விருந்தும், பரிசுப் பொருட்கள் பரிமாறலுமாக உள்ளங்கள் பூரித்துப் பொலிவு பெறுகின்றன. நூற்றாண்டுகளாக இந்தக் கொண்டாட்டம், இந்த உற்சாகம் தொடர்ந்து வருகிறது. கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மதத்தினரும் கிறிஸ்துமஸ் பண்டிகையைப் பேரார்வத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.
பெத்லகேமில் கிறிஸ்துமஸ்
இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்லகேமில் உள்ள “சர்ச் ஆப் நேட்டிவிட்டி” யில் எளிமையான, இனிமையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெறுகிறது. மேற்குக் கரையில் உள்ள சிறுநகரான பெத்லகேமில் ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் இருந்து வரும் கிறிஸ்தவர்களும், உள்ளூர் மக்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையைச் சேர்ந்து கொண்டாடுகிறார்கள். இதையொட்டி “சர்ச் ஆப் நேட்டிவிட்டி”, வண்ண வண்ணக் கொடிகளாலும், அலங்கார விளக்குகளாலும் அலங்கரிக்கப்படுகிறது. நாடகங்களுடன் கூடிய ஊர்வலம் ஒன்றும் நடத்தப்படுகிறது. இதில், அலங்கரிக்கப்பட்ட குதிரைகளில் அமர்ந்தவர்கள் முன்னிலை வகித்துச் செல்கிறார்கள். பெருவாரியான மக்கள், மத குருக்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கிறார்கள். தேவாலயத்தில் தெய்வக் குழந்தையின் சொரூபமும், அதன் பிறப்பைக் குறிக்கும் வெள்ளி நட்சத்திரமும் அமைந்திருக்கும் இடத்தில் ஊர்வலம் முடிவடைகிறது.கிறிஸ்துமஸை ஒட்டி பெத்லகேமில் உள்ள ஒவ்வொரு கிறிஸ்துவரின் இல்லத்திலும் முன் கதவில் “சிலுவை” தீட்டப்படுகிறது. தொழுவத்தில் இயேசு பிறப்புக் காட்சியை உருவாக்கி வைக்கிறார்கள்.
ஈரானில் கிறிஸ்துமஸ்
இஸ்லாமிய நாடான ஈரானிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. இயேசு அவதரித்த போது இருந்த முப்பெரும் மனிதர்கள் வசித்த நாடாக ஈரான் கருதப்படுகிறது. ஈரானிய கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸை ஒட்டி டிசம்பர் 1-ம் தேதி முதல் நோன்பு இருக்கின்றனர். இக்காலத்தில் அவர்கள் அசைவம் உண்பதில்லை. இது “சிறுநோன்பு” எனப்படுகிறது. (ஈஸ்டருக்கு முந்தைய ஆறு வார காலத்தில் அவர்கள் “பெருநோன்பு” நோற்கின்றனர்.) கிறிஸ்துமஸ் அன்று தடபுடலான விருந்து உண்டு.
சீனாவில் கிறிஸ்துமஸ்
கம்யூனிச நாடான சீனாவில் கிறிஸ்தவம், அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்ட மதமல்ல. ஆனால் இங்கும் ஆண்டுக்காண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.
கிறிஸ்துமஸ் தாத்தா
கிறிஸ்துமஸ் காலத்தில் வெள்ளைத் தாடி, சிவப்புத் தொப்பி-ஆடையில் வரும் “சான்டா கிளாஸ்” எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா, இரவில் யாருக்கும் தெரியாமல் பரிசுப் பொருட்களை வீட்டுக்குள் எறிந்துவிட்டுப் போவதாக உலக மழலைகள் நம்புகிறார்கள். துருக்கி நாட்டைச் சார்ந்த “செயின்ட் நிக்கோலஸ்” என்ற பாதிரியார்தான் கிறிஸ்துமஸ் தாத்தா ஆனதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு வரலாற்று ரீதியான ஆதாரம் இல்லை என்று சொல்வோரும் உண்டு. ஆனாலும் அன்பின் அடையாளமாக கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருவது சிறுவர்களை மகிழ்விக்கிறது.
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை
1843-ம் ஆண்டு சர்.ஹென்றி கோல் என்பவரால் முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்பப்பட்டது. 1846-ல் ஜோசப் அன்டால் என்ற ஓவியர் ஆயிரக்கணக்கில் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டார். மக்கள் வாழ்த்து அட்டைகளில் வடிவு, நேர்த்தி, தொழில் நுட்பம் என பல்வேறு வகைகளிலும் கவரப்பட்டு கோடிக்கணக்கான மில்லியன் டாலர் வியாபாரப் பொருளாக வாழ்த்து அட்டை புழக்கத்திற்கு வந்தது. கிறிஸ்துமஸ் விழாவின் போது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்தும் அன்பும் அறிவித்து அன்புறவை புதுப்பிக்கும் பணியை வாழ்த்து அட்டைகள் செய்கின்றன.
கிறிஸ்துமஸ் நட்சத்திரம்
அரேபிய நாடான சிரியா நாட்டைச் சேர்ந்த மூன்று அரசர்களுக்கு இறை இயேசு பிறந்த இடத்தை காட்டிய வான் நட்சத்திரத்தை வாழ்த்தவும் அப்புதுமையை நினைவுபடுத்தவும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தொங்க விடப்படுகிறது.
கிறிஸ்துமஸ் குடில்
1223-ம் ஆண்டு இத்தாலி நாட்டில் பிரான்சிஸ் அச்சி என்ற புனிதரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இயேசுவின் பிறப்பை வெளிப்படுத்தும், நினைவூட்டும் சிலைகளின் வழிபாடே கிறிஸ்துமஸ் குடில் வழிபாடு எனப்படுகிறது. இறை இயேசு பிறந்த மாட்டுக் குடில், இறை இயேசுவின் பெற்றோர்கள் இறை இயேசு என அன்றைய பெத்லகேமை ஒவ்வொரு ஊரிலும் அமைப்பதே மாட்டுக் குடிலும், தேவபாலமும் என்ற கிறிஸ்துமஸ் குடிலின் அமைப்பாகும். பிறந்த இயேசு பாலனை முத்தமிட்டு மகிழும் உள்ளங்களில் அன்பு, அமைதி, சமாதானம் என்று இறை இயேசு பிறக்கிறார் என்கிற நம்பிக்கையை உருவாக்க அமைக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் மரம்
மனித வழிபாட்டு முறைகளின் துவக்கம் இயற்கை வழிபாடாகும். மனிதன் இயற்கையை வணங்கினான். ஸ்காண்டி நேவியர்கள் மரத்தை வழிபடுபவர்கள். அவர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மனம் மாறினார்கள். கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளினபடி கலாச்சார மயமாகுதல், பண்பாடு மயமாகுதல் என்ற நெறிப்படி புதிய கிறிஸ்துவ மதத்திலும் ஸ்காண்டி நேவிய மக்களுக்கு மரத்தை வழிபட வழியிருந்தது. அவர்கள் மரங்களை மின் விளக்குகளால் அலங்கரித்து வணங்கினர். 500 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியர்கள் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்க ஆரம்பித்தனர். 1841-ம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் ஆல்பர்ட் தனது ராஜமுறை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ் மரத்தை அறிமுகப்படுத்தினார்.
கிறிஸ்துமஸ் கேக்
ஒவ்வொரு விழாக்களுக்கும் ஓர் சிறப்பான உணவு விழா உணவாக கருதப்படும். கிறிஸ்துவம் மேற்கித்திய கலாச்சாரத்தின்படி கேக் கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பான உணவு பொருளாக இருக்கிறது.
கிறிஸ்துமஸ் பூ
மெக்சிகோவில் “போய்ன்செட்டியா” என்பது கிறிஸ்துமஸ் மலராகக் கருதப்படுகிறது. இதைப் “புனித இரவின் பூ” என்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் ஆடு
ஸ்வீடனில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் ஒன்றாக “ஜுல்பக்” என்ற வைக்கோலால் ஆன வெள்ளாடு இடம் பெறுகிறது.
கிறிஸ்துமஸ் நம்பிக்கைகள்
கிறிஸ்துமஸ் குறித்து கிறித்தவர்களிடம் வேறு சில நம்பிக்கைகளும் நிலவுகின்றன. அவை;
கிறிஸ்துமஸ் நாளில் பிறக்கும் குழந்தைக்குச் சிறப்பு அதிர்ஷ்டம் உண்டு.
கிறிஸ்துமஸ் நாளில் பனி பொழிந்தால் ஈஸ்டர் காலம் பசுமையாக இருக்கும்.


கிறிஸ்துமஸ் நாளில் நீங்கள் எத்தனை வீடுகளில் விருந்து உண்கிறீர்களோ, வரு கிற ஆண்டில் அத்தனை மாதங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும்.
கிறிஸ்துமஸ் கேக்குகளில் நாணயம், மோதிரம் போன்றவற்றை மறைத்து வைத்துப் பரிசளிப்பது மேலை நாடுகளில் வழக்கம். நாணயம் கிடைக்கப் பெற்றவர் பணக்காரராவர். மோதிரம் கிடைத்தால் விரைவில் திருமணமாகும் என்பது பொதுவான நம்பிக்கை.
கிறிஸ்துமஸ் மாலையில் நீங்கள் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் அடுத்த ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
கிறிஸ்துமஸ் நள்ளிரவில் பரலோகத்தின் கதவுகள் திறக்கின்றன. அப்போது அமரராவோர் நேராக பரலோகத்தை அடைவர்.
கிறிஸ்துமஸ் இரவில் ஏற்றப்படும் மெழுகுவர்த்திகள் மறுநாள் காலையில் அவை தானாக அணையும்வரை அணைக்கப்படக் கூடாது.
கிரேக்க நாட்டில், தொடர்ந்து வரும் ஆண்டில் தங்களைத் துரதிர்ஷ்டம் தீண்டக்கூடாது என்பதற்காக மக்கள் கிறிஸ்துமஸ் காலத்தில் பழைய காலணிகளை எரிக்கிறார்கள்.
உக்ரைனில், கிறிஸ்துமஸ் நாளில் வீட்டில் புதிதாக சிலந்தி வலை அமைத்திருந்தால் அது அதிர்ஷ்டகரமானதாகக் கருதப்படுகிறது.
கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ் திருநாளுடன் தொடர்புடைய பிரபலமான ஒன்றாகும். பொதுவாக பசுமை மாறா ஊசியிலை கூம்பு மரங்கள் வீட்டுகுள்ளேயோ வெளியேயோ நிறுத்தப்பட்டு கிறிஸ்துமஸ் விளக்குகளாலும் பிற கிறிஸ்துமஸ் அழகூட்டும் பொருட்களாலும் அழகூட்டப்படுவது வழக்கமாக உள்ளது. கிறிஸ்துமஸ் திருநாளுக்கு முன் சில நாட்களில் இம்மரத்தின் அழகூட்டப்படுவதைக் காணலாம். மரத்தின் உச்சியில் ஒரு முக்கோணம் அல்லது நட்சத்திர வடிவம் ஒன்றையும் சேர்த்துக் காணலாம் அல்லது சிறு சிறு நட்சத்திரங்கள் மின்னும். ஆமாம். இந்த கிறிஸ்துமஸ் மரம் எப்படி தோன்றியிருக்கும்?
எகிப்திய நாட்டு மக்களின் பழமையான கலாச்சாரங்களில் பசுமையை வழிபடுதலும் ஒன்றாய் இருந்தது. அதிலும் குறிப்பாக குளிர் காலங்களில் மரங்கள் எல்லாம் நிராயுதபாணிகளாய் இலைகளை இழந்து நிற்கையில் பேரீச்சை இலைகளை வெட்டி வந்து வாழ்வின் மறுமலர்ச்சி விழா, அல்லது சாவை வெற்றி கொண்ட விழா கொண்டாடுவது அவர்களுடைய வழக்கம்.
ரோமர்களின் கலாச்சாரத்தை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய சாத்துர்னாலியா விழாவே விவசாயக் கடவுளை வழிபடும் விழா தான். அந்த நாளை பச்சை இலைகளுடனும், தாவரங்களுடனும் கொண்டாடுவதே அவர்களுடைய வழக்கம். வீடுகளையெல்லாம் இலை தோரணங்களால் அலங்கரிப்பது அவர்களுடைய விழாவின் சிறப்பம்சம்.
பிரிட்டனில் பல நூற்றாண்டுகளுக்கு முன் பச்சை இலைகளையும், கொம்புகளையும் வாசல்களில் தொங்க விட்டால் தீய ஆவிகள் அணுகாது என்னும் நம்பிக்கை ஆழமாக இருந்தது.
-இந்த நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு கிறித்துவ மதத்தில், கிறிஸ்துமஸின் போது கிறிஸ்துமஸ் மரம் இடம் பெற்றிருக்கலாம் என்கின்றனர் சிலர்.
ஜெர்மனியே கிறிஸ்மஸ் மரத்தின் பிறப்பிடம் என்னும் சிறப்புப் பெருமையைப் பெறுகிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புனித போனிபேஸ் என்பவர் ஜெர்மனியில் கிறிஸ்தவ மத போதனைகளைச் செய்து கொண்டிருந்தபோது ஒரு கூட்டம் மக்கள் அங்குள்ள ஓக் மரம் ஒன்றை வழிபடுவதைக் கண்டார். அதைக் கண்டு கோபமடைந்த அவர் அந்த மரத்தை வெட்டி வீழ்த்த அதனடியிலிருந்து உடனடியாக ஒரு மரம் முளைத்து வளர்ந்ததாக கூறப்படும் கதை ஒன்றுள்ளது. இதனடிப்படையில்தான் கிறிஸ்துமஸ் மரம் தோன்றியது என்று சொல்வோரும் உண்டு.
சுமார் ஆயிரத்து ஐநூறாம் ஆண்டு மார்ட்டின் லூத்தர் கிங் ஒரு கிறிஸ்மஸ் காலப் பனி நாளில் நடந்து செல்கையில் சிறு சிறு பச்சை மரங்களின் மீது படர்ந்திருந்த பனி வெளிச்சத்தில் பிரமிக்க வைக்கும் அழகுடன் ஒளிர்வதைக் கண்டார். உடனே ஒரு ஃபீர் மரத்தை எடுத்து அதை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அதைக் கிறிஸ்து பிறப்பு விழாவில் பயன்படுத்தினார். அன்றிலிருந்து கிறிஸ்மஸ் விழாக்களில கிறிஸ்மஸ் மரம் இடம் பெற்றது என்றும் சொல்கிறார்கள்.
1521ல் பிரான்ஸ் இளவரசி ஹெலீனா தனது திருமணத்திற்குப் பிறகு ஒரு கிறிஸ்மஸ் மரத்தை பாரீஸ் நகருக்குக் கொண்டு வந்து விழா கொண்டாடியதால், அன்றிலிருந்து கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்மஸ் மரம் இடம் பெற்றுள்ளது என்கிறது ஒரு வரலாற்றுச் செய்தி.
பதினைந்தாம் நூற்றாண்டுகளில் டிசம்பர் இருபத்து நான்காம் நாளை ஆதாம், ஏவாள் தினமாகக் கொண்டாடும் வழக்கம் இருந்தது. விலக்கப்பட்ட மரத்தின் கனியைத் தின்றதால் பாவத்துக்குள் தள்ளப்பட்ட ஏதேன் காலத்தை நினைவு கூறும் விதமாக மரத்தை ஆப்பிள் போன்ற பழங்களால் அலங்கரித்து அந்த நாளைக் கொண்டாடி வந்தார்கள். பதினொன்றாம் நூற்றாண்டிலேயே இந்த வழக்கம் இருந்ததாக நம்பப்பட்டாலும், பதினைந்தாம் நூற்றண்டில் இந்த வழக்கம் இருந்தது என்று பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இப்படி கிறிஸ்துமஸ் மரம் குறித்து பல செய்திகள் சொல்லப்படுகின்றன.


ந‌ன்றி‍‍‍ .. முத்துக்க‌ம‌ல‌ம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக