வெள்ளி, 5 மார்ச், 2010

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!


ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள்?
ஒரே அம்மா
அருமை மனைவி
எதிர்வீட்டு அக்கா
குடைபிடித்த டீச்சர்
பழைய காதலி என
அழகான பெண்கள்
அருகருகே இருக்கிறார்கள்.
அந்தப் பெண்மை
எப்போது அசல் அழகாகிறது?
மேல்சட்டை கூட்டுக்கு
கையசைத்துவிட்டு
தாவணிப் பந்தலுக்குள்
தஞ்சம் புகுவாளே, அப்போதா?
தெரு மணலில்
நீள கோடுகள் இழுத்து
பாவாடை சொருகி
பாண்டியாடுவாளே, அப்போதா?
தாய்
தலையில் விழுந்த
சிக்கவிழ்க்கையில்
சிரச்சேதம் செய்வதாக
அழுது மடிவாளே, அப்போதா?
சூடான குழம்பை
ருசி பார்க்க முனைந்து
உதடு சுட்டு நாவை
‘உஷ்’ என்றிழுப்பாளே, அப்போதா?
சூரியனுக்கு முன்விழித்து
ஈரமாய் தலைகுளித்து
கூந்தலில் துண்டு சுற்றி
குளுகுளுவென சிரிப்பாளே, அப்போதா?
கரு உண்டான தகவலை
முதலில்
மணந்தவனுக்குச் சொல்வதா?
மாமியாருக்குச் சொல்வதா? & என
சிக்கிச் சிரிப்பாளே, அப்போதா?
வேலைக்குப் போகும்
வேகாத அவசரத்திலும் ஓர்
ஒற்றை ரோஜாப்பூவை
படக்கென்று பறித்துச் சூடி
பளிச்சென்று நடப்பாளே, அப்போதா?
சமையல் அறையினூடே
கடுகு பொரியும் புகையில்
மேக மண்டல நிலவாய்
மெச்சப்பணி செய்வாளே, அப்போதா?
களிப்பையும் களைப்பையும்
கண்ணோரம் குடிவைத்து
புதுத் திருமணப் பெண்ணாய்
வெட்கம் வெடிக்க இருப்பாளே,
அப்போதா?
இடுப்பு பெருத்து
இளங்காது பெருத்து
வயிற்றைத் தள்ளிக்கொண்டு
வீடெங்கும் திரிவாளே, அப்போதா?
பாசத்தின் அழுகையோ
பாசாங்கு அழுகையோ
குழாய் திறந்தது மாதிரி
பொலபொலவென
குளிர்விழிகள் நனைப்பாளே,
அப்போதா?
முன்னழகு திருத்தி
இடுப்பில் ஒரு சின்ன
இடக்கரம் ஊன்றி
கண்களில் திமிர்தொனிக்க
கணமுறைப்பு முறைப்பாளே,
அப்போதா?
உடம்பெல்லாம் விறைக்க
உயிர்ப்பாதை திறக்க
வெளியேறும்
உதிரம்படிந்த சிசுபார்த்து
ஒருமூச்சு விடுவாளே, அப்போதா?
இன்னும் எத்தனையோ
தருணங்களில் பெண்
அழகாய் மிளிர்ந்தாலும்
என்னை ஈர்த்தது
இரண்டு தருணம்தான்!
ஊன் உயிர் தரித்து
குழவியாய் கிடக்கையில்...
கூன்மயிர் விழுந்து
கிழவியாய் சிரிக்கையில்...
பேரழகாகிறாள் பெண்!

பா.விஜய்
கவிதை தந்த பா.விஜய்க்கு நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக