அட்சய திருதியை
அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என அறியப்படுவது இந்து மற்றும்
சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.
இந்து மதத்தில் குறிப்பிடப்படும் காக்கும் கடவுளான திருமாலால் ஆளப்படுவதாகும். மேலும் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார். இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது. சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிசபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
"அட்சயா" எனும் சொல் சமசுகிருதத்தில்
எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. மரபியல் வழிவந்தவர் அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.
சோதிட முக்கியத்துவம்
இந்து மதத்தின் நல்ல நேரம் (முகூர்த்தம்) பார்க்கும் சோதிடத்தின் படி மூன்று பௌர்ணமி நாட்கள் ( திதிகள் ) மிக மங்களகரமானவையாகக் கருதப்படுகின்றன. இவை மூன்றரை திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை: சித்திரை மாத வளர்பிறையின் முதல் திதி புது வருட துவக்கமாகவும்,
ஆவணி மாதத்தின் வளர்பிறையின் பத்தாம் திதி விஜய தசமியாகவும் , வைகாசி மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் திதி ’’அட்சய திருதியை யாகவும்’’ (பரசுராமர் ஜெயந்தி) கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை மாதத்தின் வளர்பிறையின் முதல் திதி அரை திதியாகக் கணக்கில் கொண்டு இவை "மூன்றரை (3 1/2) முழுத்தங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. முதல் மூன்று திதிகள் முழுமையான திதிகளாகவும் கடைசி திதி அரை திதியாகவும் கணக்கிடப்படுகின்றன. இவை மொத்தம் சேர்ந்து மூன்றரை முழுத்தத்தை வழங்குகின்றன. சோதிட சாத்திரத்தின்படி இந்நாளில் சூரியனும் சந்திரனும் சம அளவு உயரொளியுடன் விளங்கும் என நம்பப்படுகிறது.
அட்சய திருதியை நவன்ன பர்வம் எனவும் அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை ரோஹிணி நட்சத்திரத்துடன் வரும் நாள் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
மத முக்கியத்துவம்
இந்து இதிகாசப்படி, அட்சஷய திருதியை நாளன்றே வேதவியாசர் மகாபாரத இதிகாசத்தை விநாயகரிடம் எழுதச் சொல்லி கட்டளையிட்டார்.
திருமாலின் அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.இன்றும்
கோவாவும் கொங்கண் பகுதியும் பரசுராம சேத்திரங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன.
வைசாக மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் நாளான அட்சய திருதியை வருடத்தின் மிகப் புனிதமான நாட்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
பொதுவாக இந்த நாளில் திருமாலை நெல் அரிசியுடன் வணங்கியும் உண்ணா நோன்பிருந்தும் வழிபடுவர். இந்நாளில்
கங்கை நதியில் நீராடுவது மிக மங்களகரமானது எனக் கருதப்படுகிறது.
காசியில் அன்னபூரணித் தாயாரிடமிருந்து, சிவபெருமான் தமது பிட்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்றதும் அட்சய திருதியை அன்றுதான்.
பாஞ்சாலியின் மானம் காக்க, கண்ணன் ’அட்சய’ என்று கூறி பாஞ்சாலியின் ஆடையை வளரச் செய்ததும் அட்சய திருதியை நாளன்றுதான்.
வேதத்தில் அட்சய திருதியை நாளில் அறிவு பெறுதல் அல்லது கொடையளித்தல் நல்ல பலனளிக்கும் எனக் கூறுகின்றன. இது புதிய வணிகத்தினையோ அல்லது முயற்சியையோ துவங்க வெகு நன்னாளாகக் கருதப்படுகிறது. பலர் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர்.
மக்கள் இந்த நாளில் உண்ணாநோன்பும் பூசைகளும் கடைபிடிக்கின்றனர். விசிறி, அரிசி, உப்பு, நெய். சருக்கரை, காய்கறிகள், புளி , பழம், துணிகள் ஆகியவற்றை கொடையாக அளிக்கின்றனர். இந்த நாளில் திருமாலை வணங்குகின்றனர். தீப வழிபாடு செய்யும்போது சிலையின் மீது அல்லது அருகில் துளசி தீர்த்தம் தெளிக்கப்படுகின்றது.
வங்காளத்தில், அட்சய திருதியை நாளில், "அல்கதா" எனும் விழா கொண்டாடப்படுகிறது. அது விநாயகர் மற்றும் லட்சுமியை வணங்கி புதிய வணிகக் கணக்குப் புத்தகத்தை எழுதத் தொடங்கும் நாளாகும். வங்காளிகள் இந்த நாளில் பல சமயச் சடங்குகளையும் செய்கின்றனர்.
இந்த நாள் ஜாட் எனப்படும் விவசாய சமூகத்திற்கும் மிக மங்களகரமான நாளாகும். விடியற்காலையில் ஜாட் குடும்பத்தின் ஓர் ஆண் நிலத்திற்கு
மண்வெட்டியுடன் செல்வார். நிலத்திற்குச் செல்லும் வழியில் எதிர்ப்படும் அனைத்து விலங்குகளும் பறவைகளும் மழை மற்றும் பயிர்களுக்கு நிமித்தங்களாகவும் அறிகுறிகளாகவும் கருதப்படுகின்றன.
அட்சய திருதியை திருமணங்களுக்கு ஏற்ற காலமாகவும் கருதப்படுவதால் அந்நாளில் பெரும் எண்ணிகையிலான திருமணங்களும் நடத்தப்படுகின்றன.
செல்வத்திற்கு அதிபதியான குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார். இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் எனும் நூல் கூறுகிறது. இந்த நாளில், குபேர லட்சுமி பூசை நடத்தப்படுகிறது. அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்சன குபேர எந்திரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.
சமணம்
சமண நாட்காட்டியிலும் அட்சய திருதியை ஒரு புனித நாளாகும். வருடம் முழுவதுமான ஒரு நாள் விட்டு ஒரு நாள் உண்ணா நோன்பு இருப்பவர்கள் அவர்களின் தப்சயா எனப்படும் நோன்புச் சடங்கினை இந்த நாளில் முடித்துக் கொள்கின்றனர்.
அட்சய திருதியையின் போது செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும்
வருடப்பிறப்பு திதியாக இருந்தால்,
மதிக்கத்தக்க செயல்"களான பாராயணம் , தவம், கொடைகள்,சடங்கு ரீதியான முழுக்கு , தியாகங்கள், வேள்விசெய்தல் ஆகியன மிகவும் நன்மையளிப்பதாகும். ஆனால் முப்புரிநூல் அணிதல், திருமணம், நோன்பு முடித்தல், வீடு கட்டுதல், புதுமனை புகுதல், கடும் உழைப்பு மற்றும் நடவு நடுதல் போன்ற செயல்களைத் தொடங்குவது/செய்வது சில சமூகங்களில் தடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பெரும்பாலானோர் உறவுகள், வாங்குதல் மற்றும் முடிவு செய்தவற்றை நிறைவேற்றுதல் போன்றவற்றைத் தொடங்குதல்/மீண்டும் தொடங்குதலுக்கு இதை மங்களகரமான நாளாகக் கருதுகின்றனர். சிலரைப் பொறுத்தவரை இது ஆன்மீக நடவடிக்கைகளுக்கே உகந்ததேயன்றி உலகாதாயச் செயல்களுக்கல்ல.
இருப்பினும், இந்த திதியில் உலகாதாய நடவடிக்கைகள் தொடங்குவதும் கூட சிறப்பே. ஆனால் இந்து மதத்தின் நல்ல நேரம் பார்க்கும் சோதிட சாத்திரத்தின் நேரத்துடன் பொருந்தியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கோள்களின் நகர்வும் அது போன்ற அம்சங்களும் செயலைச் செய்பவருக்கு சாதகமாக இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதைப் பின்பற்றுபவர்கள் இந்தத் திதியை குருட்டுத்தனமாக அனைத்து விதமான வாழ்வு-செயற்பாடுகளைத் துவக்கவும் நடத்தவும் பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கப்படுகின்றனர். குறிப்பிட்ட நடவடிக்கைக்கான திதிகளின் மங்களாம்சமானது அதே நேரத்தில் நிகழும் பஞ்சாங்க சுத்தி , முழுத்த யோகங்கள் மற்றும் இதர இந்து நல்ல நேரம் பார்க்கும் சோதிடக் கூறுகளின் இருத்தலையும் சார்ந்துள்ளது.
இந்த நாளில் புதிய செயலைத் துவங்குவது அல்லது விலை மதிப்பற்றவைகளை வாங்குவது நன்மையையும் வெற்றியையும் சேர்க்கும் எனக் கருதப்படுகிறது. இந்த நாளில் பரிசுப் பொருட்கள் அளிப்பதன் மூலம் கிடைக்கும் மதமுறையிலான புண்ணியமானது பன்மடங்காகப் பெருகும் எனக் கருதப்படுகிறது. பலர் இந்த நாளில் புதிய தங்க நகைகளை வாங்குகின்றனர். இந்த நாளில் விற்பதற்காகப் பெரும்பாலான நகைக்கடைகள் "லட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட" தங்க நாணயங்கள், வைர நகைகள் மற்றும் தங்க அணிகலன்கள் உள்ளிட்ட பல கடவுளர்கள் மற்றும் பெண் கடவுளர்களின் படங்களைக் கொண்டுள்ள புதிய நகை மாதிரிகளை இருப்பில் வைக்கின்றனர்.
ஜோதிட அடிப்படையில் கூறப்படுபவை
கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, நர்மதை, துங்கபத்ரா, கோதாவரி, கண்டகி, தாமிரபரணி போன்ற புனித நதிகளையும் மானஸசரோவரம், புஷ்கரம், கௌரி குண்டம் ஆகிய புனித தடாகங்களையும் மானசீகமாக வழிபடுவதும் நீராடுவதும் புண்ணிய பலன் தரும்.
ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு செய்யும் தானம், தர்மம், உதவிகள் பல பிறவிகளுக்கு புண்ணிய பலன் தரும்.
சாளக்கிராமம், ருத்ராட்சம், ஸ்படிகலிங்கம் மற்றும் ஆராதனைக்கு வைத்துள்ள விக்கிரக தெய்வத்திருவுருவங்களுக்குப் பச்சை கற்பூரம், குங்குமப்பூ சேர்த்து சந்தனக் கட்டையால் அரைத்த சந்தனம் பூசி வழிபட உடலில் ஏற்படும் வெப்ப சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
வெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும்.
தங்கம் வாங்கினால் தீராத கடன்களையும் ஏழ்மையையும் மிக்குறுகிய காலத்தில் தீர்க்கும்
தயிர் சாதம் ஏழைகளுக்குத் தருவது 11 தலைமுறைக்கு குறைவில்லா அன்னம் கிடைக்க வழிவகுக்கும்.
பிளாட்டினத்திற்கு தெய்வீக சக்திகள் எதுவும் கூறப்படுவது இல்லை, எனவே இதனை வாங்குவதால் பலம் இருப்பதாகக் கூறப்படுவது இல்லை.
ஆலய வழிபாடு
சில குறிப்பிட்ட கோவில்கள் அட்சய திருதியை நாளன்று வழிபட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள முக்கூடல் தீர்த்தத்தில் நீராடுதல்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர் பெருமாள் தரிசனம்.
கும்பகோணம் பெரிய தெருவில் பதினாறு பெருமாள்களும் ஒருசேர தரும் தரிசனம் காணுதல்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளூரில் உள்ள மகாலட்சுமி பிரதிஷ்டை செய்த திருக்காமீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்தல்,
சி த்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திரிதியை, 'அட்சய திருதியை' எனப்படுகிறது. 'அட்சயம்' என்றால் வளர்வது என்று பொருள். அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு வளரும். அதனால் அட்சய திருதியை அள்ள, அள்ள குறையாமல் செல்வத்தை அள்ளி தரும் சிறப்புமிக்க திருநாள் என்று போற்றப்படுகிறது.
வனவாச காலத்தில், சூரிய பகவானை வேண்டி தர்மர் அட்சய பாத்திரம் பெற்றதும், மணி மேகலை அட்சய பாத்திரம் பெற்றதும், பரசுராமர் அவதரித்த தினமும் இதே அட்சய திருதியை தினத்தில்தான் என்று புராணங்கள் எடுத் துரைக்கின்றன. அன்னபூரணி தாயாரிடம் இருந்து சிவபெருமான் தனது பிச்சைப்பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்று, பிரம்மஹஸ்தி தோஷத்தில் இருந்து விடுபட்டதும் இந்த நாளில் தான்.
தங்கம் மட்டுமின்றி உப்பு, அரிசி, ஆடைகள், விலை உயர்ந்த பொருட்கள் என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். மேலும் அன்று புதிதாக தொழில் தொடங்குவதும், பூமிபூஜை செய்வதும் நல்ல பலனைத் தரும். அட்சய திருதியை அன்று ஏழைகளுக்கு தானம் செய்தால், அது பல மடங்கு புண்ணியத்தை தரும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம், பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையுமாம். அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு, வறுமைநீங்கி வளமான வாழ்வு அமையும்.
விரதம் இருக்கும் முறை
அட்சய திருதியை தினத்தில் அதிகாலை எழுந்து நீராடி, பூஜை அறையில் கோலமிட வேண்டும். லட்சுமி நாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைத்து, சந்தனம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும். அந்தப் படங்களின் முன்பு குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பூஜை அறையில் போடப்பட்ட கோலத்தின் மீது பலகை வைத்து, அதன் மீதும் கோலம் போட வேண்டும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயம், சிறிய நகைகளை போட வேண்டும். பின்னர் அந்த சொம்பில் நீர் நிரப்பி, அதற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். பின்னர் சொம்பின் மேல் தேங்காய் வைத்து, அதைச் சுற்றிலும் மாவிலையை வைத்து கலசமாக தயார் செய்து பலகையில் வைக்க வேண்டும்.
பிறகு கும்பத்தின் முன்பு நுனி வாழை இலையில் அரிசியை பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றிவைக்க வேண்டும். அதன் அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, அதற்கு குங்குமம் இட்டு பூ போட வேண்டும். மேலும் பொன் மற்றும் புதியதாக வாங்கிய பொருட்களை கலசத்திற்கு அரு கில் வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் அளவற்ற பலன் கிடைக் கும் என்பது ஐதீகம்.
அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை நீங்கும். உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம். கால்நடைகளை தானமாக வழங்கினால், வாழ்வு வளம் பெறும். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால், பாவ விமோசனம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்சாதம் தருவது, 11 தலைமுறைக்கு குறையில்லா அன்பை கிடைக்கச் செய்யும்.
அட்சய திருதியையில் நடந்த அற்புதங்கள்
* கவுரவர்களுடன் சூதாடியதன் காரணமாக தனது நாடு, சொத்து, தம்பிகள் அனைவரையும் தர்மர் இழந்தார். பின்னர் தனது மனைவி திரவுபதியையும் பந்தயப் பொருளாக வைத்து தோற்றுப்போனார். இதையடுத்து திரவு பதியை சபைக்கு இழுத்து வரச் சொன்ன துரியோதனன், அவளை துகிலுரிக்க உத்தரவிட்டான். அதன்படி துச்சாதனன் துகிலுரிக்க முற்பட்டான். திரவுபதி அபயம் வேண்டி சபையோரிடம் வேண்டினாள். ஆனால் அந்த சபையில் பீஷ்மர், துரோணாச்சாரியார் போன்றோர் இருந்தும் அவளுக்கு உதவ முன்வரவில்லை. பின்னர் கண்ணனை நினைத்து கைகூப்பி வேண்டினாள்.
அப்போது கிருஷ்ணர் தன் கையை உயர்த்தி, 'அட்சய' என்றார். அவரது கையில் இருந்து புறப்பட்ட ஆடை, திரவுபதியின் உடலை சுற்றி வளர்ந்து கொண்டே இருந்தது. துச்சாதனன், திரவுபதியின் புடவையை இழுத்து, இழுத்து கைசோர்ந்து மயங்கி விழுந்துவிட்டான். திரவு பதியின் மானத்தை கிருஷ்ண பகவான் காப்பாற்றிய தினம், 'அட்சய திருதியை' ஆகும்.
* கிருஷ்ணனின் பால்ய நண்பர் குசேலன். இவர் வறுமையில் வாடிய நிலையில், கிருஷ்ணரை சந்திப்பதற்காகச் சென்றார். அவரை கண்ட மாத்திரத்தில் ஓடோடி வந்து வரவேற்ற கிருஷ்ணர், குசேலர் கொண்டு சென்ற அவலில் ஒருபிடியை எடுத்து வாயில் போட்டு கொண்டு 'அட்சயம்' என உச்சரித்தார். மறுவினாடி குசேலன் வீட்டில் செல்வம் குவிந்தது. குழந்தைகளுக்கு நல்ல உணவு, ஆடைகள், ஆபரணங்கள் கிடைத்தன. குடிசை வீடு, பெரிய பங்களாவாக மாறியது. இப்படி குசேலர் எல்லா செல்வங்களையும் பெற்ற திருநாள் 'அட்சய திருதியை' தினமாகும்.
*நாட்டை இழந்த பாண்டவர்கள், வனவாசத்தின்போது சூரியனை வேண்டி அட்சய பாத்திரம் ஒன்றை பெற்றனர். அந்தப் பாத்திரத்தில் இருந்து உணவைப் பெற்று பாத்திரத்தை கழுவி விட்டால் மீண்டும் உணவு பெற முடியாது. மறுநாள் தான் அதில் இருந்து உணவைப் பெற முடியும்.
இந்த நிலையில் பாண்டவர்களை துன்புறுத்த துரியோதனன் திட்டமிட்டான். இதற்காக அடிக்கடி கோபம் கொள்ளும் துர்வாச முனிவரை அழைத்து உபசரித்து பணிவிடைகள் செய்தான். அவர் மகிழ்ந்து வேண்டிய வரம் கேட்கச் சொல்ல, 'காட்டில் உள்ள எங்கள் சகோதரர்களான பாண்டவர்களுக்கும் அருள்புரிய வேண்டும்' என கேட்டுக்கொண்டான். அவ்வாறே செய்வதாக கூறி துர்வாசர் காட்டிற்கு சென்று பாண்டவர்களை சந்தித்தார்.
அப்போது பாண்டவர்கள் உணவருந்தி முடித்துவிட்டு அட்சய பாத்திரத்தை கவிழ்த்து விட்டிருந்தனர். இதனால் கலக்கமடைந்த பாண்டவர்கள் முனிவரிடம், 'ஆற்றுக்கு சென்று நீராடிவிட்டு வாருங்கள்' எனக் கூறினர். தங்கள் தர்மசங்கடமான நிலையை நினைத்து திரவுபதி, கண்ணனை வேண்டினாள். பகவான் அங்கு தோன்றினார். அட்சய பாத்திரத்தை கொண்டுவரும்படி கூற, அதில் ஒரே ஒரு பருக்கை சாதமும், கீரையும் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை பகவான் எடுத்து வாயில் போட்டு வயிற்றை 'அட்சய' எனக்கூறி தடவினார். அந்த நேரத்தில் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த துர்வாச முனிவருக்கும், அவரது சீடர்களுக்கும் உணவை உண்ட திருப்தி ஏற்பட்டது. அவர்களால் இனி சாப்பிட முடியாது என்ற நிலையில் பாண்டவர்கள் இல்லத்திற்கு வராமல் திரும்பி சென்றுவிட்டனர். இவ்வாறு கண்ணன், பாண்டவர்களுக்கு அருள்புரிந்த தினமும் அட்சய திருதியை என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
தண்ணீர் தானம்
அட்சய திருதியை அன்று தண்ணீர் தானம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதற்கு ஒரு கதை கூறப்படுகிறது.
ஒரு முறை பாஞ்சாலை நாடு கடும் வறட்சியில் சிக்கித் தவித்தது. அப்போது பூரியசஸ் என்ற மன்னன் நாட்டை ஆட்சி செய்து வந்தான். திடீரென்று அவனது நாட்டை, எதிரிகள் கைப்பற்றிக் கொண்டனர்.
மன்னன் எதிரிகளின் கையில் சிக்காமல், தன் மனைவியுடன் காட்டுக்குள் தப்பி ஓடினான். அங்கு சில முனிவர்களை சந்தித்தான். அவர்களிடம், 'என்னுடைய இந்த நிலைக்கு என்ன காரணம்?' என்று கேட்டான். பூர்வ ஜென்மத்தில் நீ செய்த பாவங்கள் காரணமாக உனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. அதே போல் அட்சய திருயை தினத்தில் நீ செய்த தண்ணீர் தானம்தான், உன்னை மன்னராக ஆக்கியிருக்கிறது. இருப்பினும் நீ செய்த பாவங்களின் பலனை அனுபவிக்க
வேண்டும்' என்றனர்.
இதையடுத்து அந்த மன்னன் காட்டில் வசித்தபடி, நாராயணரை நினைத்து தியானம் செய்து வந்தான். மேலும் அட்சய திருதியை நாளில்,வெயிலில் வருபவர்களுக்கு நிழல் கொடுத்தும், குடிநீர் தானம் செய்தும் தொண்டு செய்து வந்தான்.
மன்னனின் தொண்டைக் கண்டு ஸ்ரீமன் நாராயணர் அவனுக்குக் காட்சியளித்தார். மன்னன் இறைவனிடம், 'சுவாமி! நான் அடுத்த பிறவியில் புழுவாய் பிறந்தாலும், உன்னிடம் மாறாத பக்தி கொண்டவனாக இருக்க வேண்டும்' என்றான். அதற்கு இறைவனும் அவன் எண்ணப் படியே வரம் கொடுத்தார்.
பூரியசஸ் மன்னனுக்கு, மகாவிஷ்ணு தரிசனம் கொடுத்த நாள் அட்சய திருதியை ஆகும். அவன் செய்த தானத்தின் பலனாக, சில நாட்களில் உறவினர்கள் சிலர் உதவியுடன், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினான். அதன்பிறகு நல்ல முறையில் ஆட்சி செலுத்தினான்.
அட்சய திருதியை பற்றி 60 தகவல்கள்
1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது.
2. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.
3. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
4. அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.
5. அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.
6. அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.
7. அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.
8. சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
9. பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.
10. அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.
11. ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும்.
12. அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார்.
13. வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள்.
14. அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.
15. ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும்.
16. வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள்.
17. ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது.
18. பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.
19. அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள்.
20. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.
21. அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
22. அட்சய திருதியை நாளில் தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
23. அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு `பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.
24. ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.
25. அரிதான வேலையை சந்திப்பதை `அலப்ய யோகம்‘ என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.
26. அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு `அட்சதை’ என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்ஞறும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு `அட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.
27. அட்சய திருதியை தினத்தை சமணர்கள் “அட்சய தீஜ்’’ என்றழைக்கிறார்கள்.
28. ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.
29. அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடைபிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.
30. மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.
31. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.
32. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை’ நாளில் செய்யப்படுகிறது.
33. மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.
34. கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
35. தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
36. அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
37. வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.
38. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.
39. ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.
40. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.
41. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது.
42. அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், “கனகதாரை’’ நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள்.
43. அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.
44. அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.
45. அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.
46. அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.
47. அட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதி-பரமேஸ்வரரின் அருள் கிடைக்கும்.
48. அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.
49. கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள்.
50. அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
51. அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.
52. அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை `தர்மகடம்‘ எனப்போற்றுவர்.
53. அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.
54. அட்சய திருதியை நாளில் `வசந்த் மாதவாய நம’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். முக்கியமான ஒன்று... தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பில் இறங்குவது சாஸ் திரத்துக்கு உடன் பாடில்லை.
55. அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.
56. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.
57. புதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும்.
58. ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.
59. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.
60. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக