'காது கொடுத்துக் கேட்போம்': உலக காது கேளாதோர் தினம்.செப்டம்பர் கடைசி ஞாயிறு..
ஒலியை உணர்வதற்கு காதுகள் மிக அவசியம். இதில் சிரமம் ஏற்பட்டால், அதுவே காது கேளாமை. உலகளவில் 36 கோடி பேர் இப்பிரச்னையால் தவிக்கின்றனர். சமூகத்தில் இவர்
களுக்கு உரிய வசதிகள் செய்து தர வலியுறுத்தி செப்., 25ல்(கடைசி ஞாயிறு), உலக காது கேளாதோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இத்தினத்தை உலக காது கேளாதோர் அமைப்பு, 1958ல் உருவாக்கியது. முழுமையாகவோ,
பாதியாகவோ ஒலியை உணர அல்லது புரிந்து கொள்ள முடியாதவர்கள் காது கேளாதவர் எனப்
படுகிறார். சிலர் நாம் சொல்வதை திரும்ப திரும்ப கேட்பார்கள்.
அப்படியெனில் அவர்களுக்கு காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
இளைஞர்களின் காது கேட்கும் திறன் சாதாரணமாக 20 ஹெர்ட்ஸில் இருந்து 20 ஆயிரம் ஹெர்ட்ஸ் வரை உள்ளது.
காரணங்கள்
அதிக சப்தத்தை கேட்பதால் கூட காது கேட்கும் திறன் பாதிக்கிறது. உலக மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் இந்த வகையில் பாதிக்கப்படுகின்றனர். பெற்றோருக்கு இக்குறைபாடு இருப்பின் குழந்தையையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அடிக்கடி சளி, தொண்டை வலி ஏற்பட்டாலும் காது கேட்காமல் போகலாம்.
குழந்தைகளுக்கு காது கேளாமை இருந்தால் உடனே டாக்டரிடம் பரிசோதிக்க வேண்டும்.
இல்லையெனில் இது குழந்தையின் பேச்சுத்திறனை பாதிக்கும். அலைபேசி கதிர்வீச்சு
காரணமாக கூட கேட்கும் திறன் பாதிக்கப்படலாம்.
இதை செய்யாதீர்கள்
காதில் அழுக்கை சுத்தம் செய்கிறோம் என்ற பேரில் குச்சியை பயன்படுத்துவது, எண்ணெய்
ஊற்றுவது, கேட்கும் திறனை பாதிக்கும். இதற்கு பதிலாக அதற்கென தயாரிக்கப்பட்டுள்ள 'பஞ்ச்' உள்ள குச்சியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பலத்த சத்தம் ஏற்படும் இடங்களில் வேலை செய்வோர், ஒலித்தடுப்பு கருவிகளை பொருத்திக் கொண்டால், காது கேளாமையில் இருந்து தப்பிக்கலாம்.
கருவிகள்
தற்போது அறிவியல் வளர்ச்சியால் 'புரோகிராம்' செய்யப்பட்ட காது கேட்கும் கருவிகள் வந்து விட்டன. இதை 'ஹெட் போன்' போல மாற்றிக் கொள்ள முடியாது. இதற்கு சில காலம் பயற்சி பெற வேண்டும்.
ஈ.என்.டி., டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் இதனை பொருத்திக் கொள்ளலாம். காது கேளாதவர்களின் கேட்கும் திறனை பொறுத்து, இக்கருவியின் ஒலி அளவு நிர்ணயிக்கப் படுகிறது. இது நிரந்தரமாக காது கேளாமை பிரச்னையை தீர்க்காது. காது கேட்பதற்கு இக்கருவி உதவும்.
உலக காது கேளாதோர் தினம
ஒலியை கேட்பதில் சிரமம் ஏற்பட்டால், அதுவே காது கேளாமையாகிறது. உலகில் 36 கோடி பேர் காது கேளாமல் இருக்கின்றனர். இவர்களில் 80 சதவிகிதம் பேர் வளரும் நாடுகளில் உள்ளனர் என உலக காது கேளாதோர் அமைப்பு தெரிவிக்கிறது. 1958இல், காது கேளாதோர் தினம் தொடங்கப்பட்டது. அதாவது செப்டம்பர் கடைசி ஞாயிறு அன்று இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று, செப்டம்பர் கடைசி ஞாயிறு என்பதால் உலக காது கோளாதோர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. சமூகத்தில் காது கேளாதோர் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களது கோரிக்கைகள், அவர்களுக்கான வசதிகள் ஆகியவற்றை ஒவ்வொரு அரசும் பரிசீலிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.
காது கேளாதோருக்கு ஏற்பட்டுள்ள செவிக் குறைபாடும் பாதுகாப்பும்:
காதினுள் உள்ள இம்மென்மையான உறுப்புகளில் ஏதேனும் ஒன்று பழுதுபட்டால் கூட நம்மால் ஒலியுணர்வை முழுமையாகப் பெறமுடியாமல் போகிறாது. எதிர்பாராத நிலையில் காது பழுதுபடுவதால் செவிடாக நேரிடுகிறது. உரக்கப்பேசினால் மட்டுமே சிலருக்குக் கேட்கும். குடும்பத்தில் பிறவிச் செவிடர்கள் இருந்தால் ரத்த உறவில் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் காது கேளாமலிருக்க வாய்ப்புண்டு. உறவில் மணம் முடிப்போருக்கு இத்தகைய குறைபாடுடைய குழந்தைகள் பிறக்கலாம் என்று கூறப்படுகிறது. கேட்கும் திறனை அளவிட்டு செவிக்குறைகள் அறியப்படுகின்றன. இத்தகையவர்கள் ஒலியைப் பெருக்கித்தர வல்ல காதொலிக் கருவியைக் காதில் பொருத்திக் கொண்டால் காது நன்கு கேட்கும். முழுச் செவி குறைபாடு உடையவர்களுக்கு இத்தகைய கருவிகளால் பயனில்லை.
கேட்கும் தன்மைக்கேற்ப பேச்சுத்தன்மையும் அமைகிறது. எனவே செவிட்டுத்தன்மையைப் புறக்கணிக்கக்கூடாது. சிறு குழந்தைப் பருவத்தில் காது கேட்கவில்லை என்றால் அந்தக் குழந்தையின் பேச்சும் பாதிக்கக்கூடும். காலங்கடத்தாது மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே சிறந்ததாகும். அடிக்கடி சளி பிடித்தாலும் தொண்டை வலி ஏற்பட்டாலும் காதின் கேட்புத்திறன் பாதிக்கக்கூடும். சளி பிடித்து மூக்கிலும் தொண்டையிலும் சளி கட்டிக் கொண்டிருக்கும்போது நடுச்செவியையும், தொண்டையையும் இணைக்கும் சிறிய குழாயும் வீங்கிப் போகிறது. இந்த வீக்கத்தினால் நடுச்செவி அடைபடுகிறது. இதன் தொடர் விளைவாகத் தற்காலிகமாக காது கேட்காமல் போகக்கூடும். மூக்கை, வேகமாகச் சிந்தக்கூடாது. சிந்தினால் மூக்கிலும் தொண்டையிலும் உள்ள கிருமிகள் நடுச் செவிக்குள் புகுந்து காதைச் செவிடாக்கிவிடக்கூடும்.குழந்தைகளின் காதில் ஒருபோதும் அறையக்கூடாது. அறைந்தால் காதுக்கு ஊறு ஏற்பட்டு செவி கேளாமல் போகக்கூடும்.
எனவே கீழ்குறிப்பிடும் பாதுகாப்பை கடைபிடிப்பது அவசியம் என்கிறார் காது, மூக்கு, தொண்டை (ஈ.என்.டி) நிபுணர் சிவராசன்…
“காதின் வெளிப்பக்கத்தை சோப்பு மற்றும் தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். காதில் அழுக்கு அடையாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். அழுக்கை அகற்ற காது குடைதல் என்ற பெயரால் குச்சியைக் கொண்டு காது குடையாமல் அதற்கென்று உள்ள பஞ்சுக் குச்சிகளையே பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் செவிப்பறை கிழிந்து போகக்கூடும். காது நலிவடைந்து சீழ் வடிதலும் ஏற்படலாம். மருத்துவரிடமே முறையாகக் காட்டி அழுக்கை அகற்ற வேண்டும்.
காதில் இருக்கும் மெழுகு போன்ற பொருளை (குரும்பியை) எடுக்கக்கூடாது. அது செவிப் பாதுகாப்புக்கு மிகவும் இன்றியமையாதது. இக்குரும்பி கசப்பாக இருக்கும். அதில் எந்த பூச்சியும் நுழையாது. ஒருவேளை பூச்சி ஏதாவது காதுக்குள் நுழைந்து விட்டால் சில சொட்டுகள் தேங்காய் எண்ணெய் அல்லது கடலை அல்லது நல்லெண்ணெய் அல்லது ஏதாவது ஒரு சுத்தமான எண்ணெய் காதில் விட்டால் அந்தப் பூச்சியைக் கொன்றுவிடும். பிறகு பீச்சான் குழலைப் பயன்படுத்தி எடுத்து விடலாம். பூச்சி கண்ணுக்கு தெரிந்தால் அதற்கான கருவி கொண்டு அதை எடுத்து விடலாம். எல்லாவற்றிற்கும் மேலாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வதே சிறந்ததாகும்.
மேலும், காதில் குச்சிபோட்டுக் குடையக்கூடாது. குச்சியைப் பயன்படுத்தினால் செவிப்பறை கிழிந்துபோக வாய்ப்புண்டு. காதில் சீழ் வழியக்கூடிய அபாயமும் ஏற்படக்கூடும். காதிலுள்ள முடிகள் மிகவும் முக்கியமானவை, தூசியும், பூச்சியும் காதுக்குள் நுழையாமல் அவை தடுக்கின்றன. எனவே, இவற்றை வெட்டி எடுக்கக்கூடாது. பலத்த சத்தம், அதிக இரைச்சல் உள்ள இடங்களில் வேலை செய்வோர் காதுகளில் ஒலித்தடுப்பி(Muff)களைப் பொருத்திக் கொண்டு பணி செய்தால் காது கேளாமையைத் தவிர்க்கலாம்” என்கிறார்.
இன்றைக்கு உலக காது கேளாதோர் தினம்.
சகோதரர் உண்மைத் தமிழனின் பதிவு
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
‘அது’ எப்போது, எப்படி ஆரம்பித்தது என்பது எனக்கு இப்போதும் தெரியவில்லை. நானும் மற்றவர்களைப் போல் எப்போதும் சாதாரணமாகத்தான் இருந்து வந்தேன்..
‘சானா, சர்ர்ர்ரு..’ என்று செல்லமாக என்னை அழைப்பவர்களிடம் சட்டென்று திரும்பிப் பார்த்துப் பேசியிருக்கிறேன். எந்த மாறுபாடும், வேறுபாடும் என்னிடம் காணப்படவே இல்லை. ஒரு மதிய நேரம் எனக்கு அந்த உண்மையைக் காட்டும்வரையில்..
அன்றும் வழக்கம்போல் திண்டுக்கல் ஐ.டி.ஐ.யில் டீசல் மெக்கானிக் வகுப்பில் அமர்ந்திருந்தேன். முதல் நாள் இரவு எனது தந்தையுடன் மருத்துவமனையில் தங்கியிருந்ததால் அரைத் தூக்கத்தில் வகுப்பறையில் இருந்தேன்.
வகுப்பு ஆசிரியர் திரு.ராதாகிருஷ்ணன் என்னை உற்று உற்றுப் பார்த்தவர் என்னைப் பார்த்தபடியே ஏதோ சொல்ல. ஒட்டு மொத்த வகுப்பும் என்னையவே திரும்பிப் பார்த்தது. அப்போதும் எனக்கு அவர் சொன்னது காதில் விழவில்லை.
ஆசிரியர் அருகில் வந்து என் கன்னத்தில் விட்ட ஒரு அறைதான் எனது அரைகுறைத் தூக்கத்தை விரட்டியது. "ஒண்ணு தூங்கு.. இல்லாட்டி பாடத்தைக் கவனி.. அரைத் தூக்கத்துல என்னைப் பார்த்து என்னையும் தூங்க வைக்கதடா.." என்றார் ஆசிரியர். அடித்ததைவிடவும் அவர் சொன்ன வார்த்தைகள்தான் எனக்கு நிறைய துக்கத்தைக் கொடுத்தது..
வகுப்பு முடிந்து வெளியில் வந்தவுடன் சக நண்பர்கள் "என்னடா ஸார் அவ்ளோ நேரம் உன்னைப் பத்தியே பேசுறாரு.. அப்படியே இடிச்சப்புளியாட்டம் உக்காந்திருக்கிறே..?" என்றார்கள். அப்போதும் நான் அவர்களிடம் கேட்டேன்.. "அப்படியா.. என்ன சொன்னார்..?" என்றேன்.. ஏதோ வித்தியாசமாக என்னைப் பார்த்தபடியே சென்றார்கள் நண்பர்கள்.
வீடு திரும்பியவுடன் எனது அக்கா வாசலிலேயே காத்திருந்தவர் சத்தம் போடத் துவங்கினார், "ஏண்டா காலைல எத்தனை தடவ கத்துறது.. நீ பாட்டுக்கு கண்டுக்கா போய்க்கிட்டே இருக்க.. சரி.. சரி.. சீக்கிரமா போ.. மாமா ஏதோ ஊருக்குப் போகணுமாம்.. அதுனால உன்னை உடனே ஆஸ்பத்திரிக்கு வரச் சொன்னார்.." என்று விரட்டினார்.
ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும் என்பதைவிட காலையில் அக்கா கூப்பிட்டது என் காதில் ஏன் விழுகவில்லை என்பதே எனக்குப் பெரிய கேள்வியாக இருந்தது.
மருத்துவமனையில் இரவு நேரத்தில் எனது தந்தை தூக்கம் வராமல் “ஒரு ஊசியைப் போடச் சொல்லுடா.. செத்தாவது போகிறேன்..” என்று கண்ணீர் சொட்டாக வடிய கெஞ்சியபோது அதுகூட எனக்குக் கேட்காமல் போய் பக்கத்து பெட்காரர் அதைக் கேட்டு எனக்கு டிரான்ஸ்லேட் செய்தபோது சத்தியமாக எனக்குத்தான் சாவு வர வேண்டும் போல இருந்தது.
அங்கே இருந்த நர்ஸ் என்னைத் தோளைத் தட்டி இழுத்து "என்னாச்சு உனக்கு? காது கேட்காதா..?" என்று கேட்டபோதுதான் அப்படியரு விஷயமே எனது காதுக்கு வந்தது.
கொஞ்சம் லேசாக கேட்டேன்.. உற்றுக் கேட்டேன்.. ஆம்.. எனது காதில் ஏதோ ஒரு சப்தம் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டேயிருந்தது.. 'கிர்ர்ர்' என்ற சப்தம். டேபிள் பேன் ஓடினாலும் ஒரு லேசான சப்தம் எழுமே.. அதே போல்தான்.. எனது இனிய காதுக்கு ஏதோ ஒன்றாகிவிட்டது என்பது எனக்குப் புரிந்தது..
மருத்துவர்களிடம் ஓடினேன்.. தேனினும் இனிய செய்தியை நமது தேனமுத தமிழில் என் செவியில் திணித்தார்கள். “உங்களது செவித்திறன் கேட்பு எலும்பின் சக்தி குறைந்துள்ளது. அதனால் உங்களுக்கு கேட்கும் சக்தியும் குறைந்துள்ளது..” என்று.. இந்தச் செய்தியை கேட்கும் சக்தியே எனக்கில்லை..
அப்போது நான் ஒரு வயதுக்கு வந்த 16 வயது வாலிபன். ‘விக்ரம்’ படத்தை 6 முறை பார்த்துவிட்டு, நானே கமல்ஹாசனைப் போல் மனதிற்குள் எண்ணிக் கொண்டு ஒரு கனவுலக கதாநாயகனாக எனக்குள்ளேயே ஒரு வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருப்பவன். ஒரு காது அவுட் என்று சொல்லி ஒரே நிமிடத்தில் என்னை ஜனகராஜ் இடத்திற்கு கொண்டு வந்தார் அந்த மருத்துவர்.
உதடு துடிக்கிறது. வார்த்தைகள் வெளியில் வரவில்லை. ஏதாவது செய்யக்கூடாதா என்று கண்களில் திரண்டு நின்ற கண்ணீரோடு கேட்கிறேன்.
"இல்லை சரவணன்.. இது பரம்பரை வியாதியாக உங்களைத் தொற்றியிருக்கிறது. உங்களது அம்மாவின் 40-வது வயதில் பிறந்திருக்கிறீர்கள். அப்போது உங்களது அம்மாவுக்கும் உடம்பில் சக்தி குறைந்துள்ளது. அதனால் பிறக்கின்றபோதே இந்த வீக்னஸோடுதான் பிறந்திருக்கிறீர்கள். அதோடு உங்க அம்மாவுக்கும் இப்போது இந்த வியாதி வந்துள்ளது. ஸோ.. வருவதை.. வந்துவிட்டதை ஒன்றும் செய்ய முடியாது.." என்றார் டாக்டர் மோகன்ராவ்..
ஏற்கெனவே அப்பாவுக்கு கேன்சர் என்று ரணகளமாக இருந்த எனது இல்லம், இப்போது எனது காதுகளும் அவுட் என்றவுடன் இன்னும் கொஞ்சம் சோகத்தை அப்பிக் கொண்டுவிட்டது.
அதன் பிறகு தினமும் அனைவரும் எனது பாணியில் கத்தத் துவங்கினார்கள். “கத்திதான் பேச வேண்டும். வேறு வழியில்லை.. நாங்க சமாளிச்சுக்குறோம்..” என்று எனது அக்கா ஆறுதல் பாணியில் சொல்லி என்னைத் தேற்றினார்.
பின்னாளில் இந்த நோய்க்கு பரிகாரம் என்னவெனில் “எலும்பு மாற்று அறுவை சிகிச்சைதான்..” என்றார் சென்னையின் மிகப் பெரிய காது மருத்துவர். “ஆஸ்திரேலியாவிலிருந்து எலும்பை வரவழைப்போம். ஒரு சுமாரா 8 லட்சம் ரூபாய் செலவாகும்..” என்று கூலாகச் சொன்ன டாக்டரிடம் அவருடைய பீஸ¤க்கு ஆகும் பணத்தையே கடன் வாங்கி வந்திருக்கிறேன் என்பதை சொல்ல முடியுமா என்ன..?
“ஊரில் என் தாத்தாவிடம் கேட்டுவிட்டு வருகிறேன் ஸார்..” என்று சொல்லிவிட்டு வந்தவன்தான், இன்னும் அந்த கிளினிக் பக்கமே செல்லவில்லை.
ஒரு மாதம் நான் என் நினைவிலேயே இல்லை.. எனது தந்தையிடம்கூட நான் சொல்லவில்லை. அவரே “தன்னைக் கருணைக் கொலை செய்துவிடு” என்று என்னிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். அவரிடம் போய் நான் என் சோகத்தைச் சொல்லி என்ன செய்ய என்று விட்டுவிட்டேன்..
எப்படி வந்தது இது?
மருத்துவக் காரணங்கள் ஒரு புறம் இருக்கட்டும். நான் செய்த அரிய செயல்களைப் பாருங்கள்..
கிரிக்கெட் என்றால் எனக்கு அப்போது உயிர். ரேடியோவை தலைமாட்டில் வைத்து கிரிக்கெட் கேட்டுக் கொண்டே இருப்பேன். “ரேடியோவை கொஞ்சம் தள்ளிதான் வையேண்டா...” என்று என் வீட்டினர் கெஞ்சினாலும் ரேடியோ என் காதோரம்தான் இருக்கும்.
ஐடிஐயில் படித்தபோது எனது நண்பன் மோகன்தாஸ் ஒரு சிறிய கையடக்க டேப்ரிக்கார்டரை கொண்டு வந்தான். அதில் கிரிக்கெட் கமெண்ட்ரியை கேட்பதற்காக hear phone-ஐ மாட்டி கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பேன்.
முன் வரிசையில் இருக்கும் நண்பர்கள் என்னிடம் திரும்பி ஸ்கோர் கேட்கும்போது நான் வேண்டுமென்றே பந்தா செய்து ஒரு இரண்டு, மூன்று கெஞ்சல்களுக்குப் பிறகு சைகையில் சொல்வேன்.. ஒரு நாளல்ல.. இரண்டு நாளல்ல.. ஒரு வருடம் தொடர்ந்தது..
ஏற்கெனவே வைட்டமின் சி அல்லது டி எதுவோ ஒன்று குறைபாடுடன் இருந்த நான் இதையும் கேட்க கேட்க.. காதின் உள் எலும்பின் சக்தி தாக்கப்பட்டு வலுவிழக்க ஆரம்பித்து, கடைசியில் முக்கால் செவிடன் என்கிற இன்றைய நிலைமைக்கு கொண்டு வந்து விட்டது..
நண்பர்களை விடுங்கள்.. அவர்கள் பரவாயில்லை.. பக்கத்திலேயே வந்து பேசுவார்கள்.. சமாளித்துக் கொண்டேன். மற்றவர்கள்.. முதலில் அக்கம் பக்கம் பார்த்துப் பேசி எனக்கே வெட்கமாகி பின்பு வெளியாள் யாருடனும் பேசாமல் என்னை நானே குறுக்கிக் கொண்டேன்..
அப்போதுதான் “மருத்துவர் காது கேட்கும் கருவியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வேறு வழியில்லை..” என்று சொன்னவுடன் எனது கனவுலகத்தைக் கலைத்துவிட்டு ஒரு பெரும் மனப் போராட்டத்திற்குப் பிறகு காது கேட்கும் கருவியை வாங்கிப் பொருத்திக் கொண்டேன்.
அப்போதும், இப்போதும் சிலர் கத்த முடியாமல் வெறுப்பாக என்னிடமே தங்களது முகத்தைக் காட்டும்போது அப்படியே ஜன்னல் வழியாக கீழே குதித்துவிடலாமா என்ற எண்ணம்தான் எனக்குள் வரும்.. இதற்காகவே எங்கு வேலை பார்த்தாலும் அநாவசியமாக யாரிடமும் சென்று பேசாமல் இருந்துவிடப் பழகிவிட்டேன்.
முதலில் இப்படி ஒரு நோய் இருக்கிறது என்பதைக் கண்டறிய முடிந்திருந்தால் அதற்கான சிகிச்சை முறைகளை சிறிய வயதிலேயே நான் எடுத்திருந்தால் என் காது பிழைத்திருக்கும். அந்த அளவிற்கான அறிவுத்திறன் என் இல்லத்தில் யாருக்கும் இருக்கவில்லை என்பதும் ஒரு குறைதான்..
இப்படியரு குறை இருக்கிறது என்று எனக்குத் தெரிந்திருந்தால் நானும் அதிகமாக ஒலியைக் கேட்காமல் தவிர்த்து எனது காதைக் காப்பாற்றியிருக்கலாம்.
அன்றிலிருந்து வாக்மேனில் பாட்டு கேட்கும் பழக்கத்தைத் தொலைத்தே விட்டேன். இப்போதும் யாராவது “வாக்மேனில் மேட்டரைத் தருகிறேன். கேட்டு டைப் செய்து கொடுங்கள்..” என்று சொன்னால் எவ்வளவு பணம் தருகிறேன் என்றாலும் “முடியாது..” என்று சொல்லிவிடுவேன்.
ஏனெனில் அதிகமான ஒலியை இப்போதும் எனது காதில் கேட்டால் அன்று இரவே என் காதில் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு ரீங்காரமான சப்தம் என்னைத் தூங்கவிடாமல் செய்து தலைவலியை கொண்டு வந்துவிடும்.
இந்தக் காரணத்திற்காகவும் நான் வெளியில் வண்டியோட்டிச் செல்லும்போதுகூட காது கேட்கும் கருவியை மாட்டாமல்தான் சென்று வருகிறேன்.
இந்தத் தலைவலியும், அதன் உடன்பிறப்பான காய்ச்சலும் தொடர்ந்து வந்தால் நான் அடித்துச் சொல்வேன்.. எனது காது கேட்கும் திறன் 2 டெசிபல்கள் குறைந்துள்ளது என்று..
ஒவ்வொரு முறையும் இப்படித்தான் எனது காது கேட்கும் திறனான டெசிபல்கள் குறையும். அதை நான் கவனித்தே வந்திருக்கிறேன்.
இந்த காது கேளாமை நோயும் இப்போது பரவலாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அதிகமான சத்தம், இரைச்சலான சப்தம் ஏற்படும் இடங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு முதலில் தொற்றக்கூடியது இந்நோயாகத்தான் இருக்கும்.
ஏனெனில் உடல் ஊனமுற்றவர்களில் இந்த காது கேளாமை வாயிலாக ஊனமுற்றவர்களின் எண்ணிக்கைதான் உலகளவில் முதலிடமாம்.
இப்போது உலகம் முழுவதும் 50 கோடி பேர்கள் இந்த காது கேளாமை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. அதிலும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இளைஞர்கள்தான்.
இந்தியாவில் 1000-த்துக்கு 2 அல்லது 3 குழந்தைகள் பிறவியிலேயே காது கேளாமை நோயோடு பிறக்கின்றன என்று பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நோயால் பாதிக்கப்பட்டோரில் 6.3 சதவிகிதம் பேர் இந்தியாவில் இருப்பவர்களாம்.
இன்றைக்கு கக்கூஸில் இருக்கும்போதுகூட செல்போனில் பேசிக் கொண்டே அவசர வாழ்க்கை வாழ்ந்து வரும் இளைஞர்கள் நிறைய பேர், நாளைய முதியவர்களாகும்போது காது கேளாமையால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
அதிகபட்சமான கூம்பு வடிவ ஸ்பீக்கரின் அருகில் நின்று பாட்டு கேட்பது, மேடை கச்சேரிகளின்போது அருகில் சென்று கேட்டு காதைக் கிழித்துக் கொள்வது.. நாடகம் பார்க்கச் சென்று நடிகர், நடிகைகளை அருகில் பார்க்க நினைத்து நம் காதிற்குள் வம்பாக அதிகப்பட்சமான ஒலியை திணித்துக் கொள்வது..
இவை போன்று நம்மால் முடிகின்ற விஷயங்களைத் தவிர்த்தோமானால் என்னைப் போன்ற தவிர்த்திருக்கக்கூடிய சிலரும் பிழைத்துக் கொள்ளலாம்.
நம்முடைய குழந்தைகளுக்கும் இந்த வைட்டமின் குறைபாடுகள் உள்ளனவா என்று இப்போதே செக் செய்து கொண்டு அதற்கேற்ற மருத்துவம் எடுத்துக் கொண்டு வருமுன் காப்பது அனைவரின் குடும்பத்திற்கும் நல்லது.
அனுபவப்பட்டவன் சொல்கிறேன்..
ஏனெனில் அனுபவமே வாழ்க்கை..!
அனுபவமே இறைவன்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக