உலகக் கைகழுவும் நாள் ( Global Handwashing Day-GHD ) அக்டோபர் 15.
உலகக் கைகழுவும் நாள் ( Global Handwashing Day-GHD ) உலக மக்கள் நாள்தோறும் தங்களது கைகளை நீர் மற்றும் சோப்பு கொண்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் நோக்கத்தோடு பன்னாட்டளவில் அனுசரிக்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் நாள் உலகக் கைகழுவும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. கைகளைக் கழுவிச் சுத்தமாக வைத்திருப்பது நோய்த்தடுப்புக்கு ஒரு முக்கிய வழியாகும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும்.
உலக கை கழுவும் தினம் ( Global Hand Washing Day) உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. இந்த நாளை எதற்கு கொண்டாட வேண்டும்? கை கழுவுவது அவ்வளவு முக்கியமா?
உலகில் 2 மில்லியன் குழந்தைகள் டயரியா போன்ற வயிற்றுப் போக்கு மற்றும் நுரையீரல் தொற்றுக்களால் இறக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. முறையாக சோப்பை பயன்படுத்தி கைகள் கழுவுவதன் மூலம் இந்த எண்ணிக்கையை குறைக்க முடியும். இதன் முக்கியத்துவம் உணரப் பட்டதால் PPPHW (PUBLIC-PRIVATE PARTNERSHIP FOR HAND WASHING என்ற அமைப்பு 2008 முதல் ஒரு இயக்கமாக மாறி கைகழுவதன் முக்கியத்துவத்தை பல்வேறு வகைகளில் மக்களுக்கு உணர்த்தி விழிப்புணர்வு உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. அதில் ஒன்றே உலக கைகழுவும் தினம் கொண்டாடுதல்.
இந்த அமைப்பில், உலக வங்கி, யூனிசெப்,(United Nations International Children Emergency fund) மற்றும் தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல் படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதியன்று கை கழுவும் தினம் கொண்டாட முடிவு செய்யப் பட்டது
முக்கியமாக பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கை கழுவுவதன் அவசியத்தை உணர்த்துவதை இவை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இன்றைய நாளில் பள்ளிகளில் மதிய உணவு உண்பதற்கு மாணவர்கள் மாணவர்கள் ஆசிரியர் முன்னிலையில் சோப்பு போட்டு கைகழுவும் திருநாளாக கொண்டாடுகிறார்கள். ஆசிரியர்களுக்கும் கைகளை எவ்வாறு முறையாக சோப்பை பயன்படுத்தி கைகழுவ பயிற்சிகளும் அளிக்கப் படுகின்றன. சுகாதாரமற்ற சூழலில் வாழும் அடித்தட்டு மக்கள் இதனை உணர்ந்து தங்களையும் தங்கள் குழந்தைகளையும் நோய்க்கு ஆட்படாமல் தடுக்கவேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம். பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த நல்ல பழக்கத்தை உருவாக்குதன் மூலம் எதிகால சமுதாயத்தின் சுகாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பப் படுகிறது.
உலகின் பெரும்பாலான நாடுகளில் உணவை எடுத்து உண்பதற்கு கைகளே பயன்படுத்தப் படுகின்றன. சரியாகக் கழுவப் படாத கைகள் கிருமிகளின் தாயகமாக விளங்குகிறது. வயிற்றுப் போக்கு டைபாயிட் காலரா போன்ற தொற்றுக்களுக்கு ஆதாரமாக விளங்குவது மனித மலம். ஒரு கிராம் மனித மலத்தில் சுமார் 1கோடி வைரஸ்களும்,10 லட்சம் பாக்ட்டீரியாக்களும் வாசம் செய்து கொண்டிருக்குமாம். இவை பல்வேறு விதங்களில் மலத்திலிருந்து ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பரவினாலும் எப்படியோ கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உண்ணும்போதோ விரல்களை வாயில் வைக்கும் போதோ ஜாலியாக உடலுக்குள் நுழைந்து தன வேலையை காட்டத் தொடங்குகிறது. அசுத்தமான தண்ணீர் வழியாகவும், ஈக்கள் மூலமாகவும் இந்த நுண்ணுயிரிகள் பரவும் என்றாலும். என்றாலும் குறிப்பிடத் தக்க அளவு கைகளுடன்தான் இந்தக் கிருமிகள் கைகோர்த்துக் கொள்கின்றன
எப்போதெல்லாம் சோப்பு போட்டு கை கழுவ வேண்டும்?
மலம் கழித்த பின்பு
சாப்பிடுவதற்கு முன்
சமைப்பதற்கு முன்
உணவுப் பொருட்களை தொடுவதற்கு முன்
உணவு பரிமாறுவதற்கு முன்
குழந்தைகள் மலம் கழித்த பின்அதை சுத்தம் செய்த பின்
வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்ததும்
கழிப்பறைகளை சுத்தம் செய்தபின்
மருத்துவமனை சென்று வந்த பின்
அசுத்தமான இடங்களில் கை வைத்த பின்
எப்படிக் கழுவ வேண்டும் ?
வெறும் நீரால் நீண்ட நேரம் கை கழுவினாலும் கையில் உள்ள நுண்கிருமிகள் கையை விட்டு செல்வதில்லை. விடாப் பிடியாக கண்ணுக்குத்தெரியாமல் ஒட்டிக கொண்டிருப்பவற்றை அகற்ற சோப்பை பயன்படுத்தி நன்றாக தேய்த்து கைகளை கழுவ வேண்டும் நகங்கள் அழுக்கை சேமிக்கும் கிடங்காதலால் அதை அவ்வபோது வெட்டிவிட வேண்டும்.நகங்கள் இருந்தால் சோப்பு போடும் போது அங்கேயே கிருமிகளும் அழுக்கும் தங்கிவிட அதிக வாய்ப்பு உண்டு
கைகளை நீரினால் ஈரமாக்கிக் கொண்டு சோப்பு அல்லது சோப்பு கரைசலை தடவ வேண்டும்
உள்ளங்கைகளை நன்கு தேய்த்துக் கொள்ள வேண்டும்
விரல்களை ஒன்றினுள் ஒன்றாக செலுத்தி நன்கு தேய்க்க வேண்டும்
வலது கை விரல் நுனிகளை இடது கை உள்ளங்கையிலும், இடது கை விரல் நுனிகளை வலது உள்ளங்கையிலும் வைத்து தேய்க்கவேண்டும்
கைகளில் சோப்பு நுரை குறைந்தது 30 வினாடிகளாவது இருக்க வேண்டும் .
பின்னர் கைகளை சோப்பு நுரை போகும் வரை சுத்தமாக கழுவ வேண்டும்
குழந்தைகள் என்றால் முழங்கை வரையிலும் , பெரியவர்கள் என்றால் மணிக்கட்டு வரையிலும் நன்கு கழுவ வேண்டும்
விலை உயர்ந்த சோப்பைத்தான் பயன் படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரண சோப்பே போதுமானது.
இதோ இந்தப் படத்தில் உள்ளது போல் சோப்பு போட்டு கைகளை கழுவுவது சரியான முறையாகும்.
ஆசிரியர்கள் மட்டுமல்ல .பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு சுத்தமாக கை கழுவும் பழக்கத்தைகற்றுத் தர வேண்டும். அவர்களிடம் சொல்வதை விட நாம் தேவைப்படும் சமயங்களில் கை கழுவும் பழக்கம் கொண்டிருந்தால் குழந்தைகளுக்கும் தானாகவே வந்து விடும்.
நோய்க்கு நாமே இடம் கொடுக்கலாமா?
மு. வீராசாமி
இக்காலக் குழந்தைகள் சுத்தத்தில் எப்படி இருக்கிறார்கள்? ‘சுகாதாரம்னா என்ன?’ - ஒரு கிராமத்துப் பள்ளி மாணவர்களிடம் கேட்ட கேள்வி இது. சுற்றுப்புறத்தை நல்லா வச்சுக்கணும் என்றும், பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்றும், உடம்பில் நோய் வராம பாத்துக்கணும் என்றும் தினமும் குளிக்கணும் என்றும் மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த பதில்களைச் சொன்னார்கள். ஆனால், பின்பற்றுவதில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள்?
குளிப்பதற்கு நேரமில்லை
‘நேரமாகிவிட்டது’ என்றோ, இல்லையென்றால் ‘நேரமில்லை’ என்றோ ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டு, பேருக்குக் கொஞ்சம் தண்ணீரை உடம்பின் மேல் ஊற்றிவிட்டு, ‘இதோ வந்துவிட்டேன்’ என்ற நிலையில் கடமைக்குத்தான் பலரது குளியலும் இருக்கிறது. வாரத்துக்கு எத்தனை நாள் அழுக்கு தேய்த்து ஒழுங்காகக் குளிக்கிறோம் என்று நினைத்துப் பாருங்கள். ‘அக்குள்’ போன்ற மறைவான பகுதிகளில் நன்றாகத் தேய்த்துக் குளிக்கிறோமா? அது அவசியம். அத்துடன் குளித்த பிறகு ஈரம் போக நன்றாகத் துடைக்கவும் வேண்டும். ஆடை அணிவதிலும் அலங்கரிப்பதிலும் நமக்கு இருக்கும் ஈடுபாடு, சுயசுத்தத்தைப் பேணுவதில் இருக்கிறதா? இக்காலக் குழந்தைகளுக்குச் சுத்தம் பற்றி முறையாக வழிகாட்டுகிறோமோ!
காந்தியின் அக்கறை
ஒருமுறை பம்பாயில் ‘பிளேக் நோய்’ தீவிரம் காட்டியபோது காந்தியடிகள், தானே சுகாதாரக் குழுவினருடன் சேர்ந்து சுற்றுப் புறத்தைச் சுத்தப்படுத்த கடுமையாக முயற்சித்தார். வீடுவீடாகச் சென்று கழிப்பறையை ஆய்வு செய்து, சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறினார். ‘இந்தியர்கள் சுத்தத்தைக் குறித்துக் கவலைப்படமாட்டார்கள், சுற்றுப்புறத்தைச் சுகாதாரமாக வைத்திருக்க மாட்டார்கள்’ என்று அந்தக் காலத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, பொய் என்று நிரூபிக்க அதிகக் கவனம் செலுத்தினார் காந்தி. இது நடந்தது ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பு.
‘உடல் ஆரோக்கியம், சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதில் இருந்து தொடங்குகிறது’, என்று காந்தி சொன்ன கருத்து இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாமல் போனது வருத்தமான செய்திதான். அவருக்கு இருந்த ஆழ்ந்த அறிவின் காரணமாகவே அவரால் 1905 காலகட்டத்தில் ‘இந்தியன் ஒப்பினியனில்’ ஆரோக்கியம் குறித்து ‘ஆரோக்கிய வழி’ என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுத முடிந்தது. பின்னாளில் அதுவே ‘ஆரோக்கியத் திறவுகோல்’ என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றது.
சுயசுத்தம் என்றவுடன் என்னமோ ஏதோ என்று நினைக்கிறார்கள். தலையில் தொடங்கிக் கால்வரை சுத்தமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தினாலே போதும். தலையை அடிக்கடி அலசித் தூய்மையாக வைத்திருப்பது மிக அவசியம். குறிப்பாகப் பெண்கள் வாரத்துக்கு இரண்டு முறையாவது தலையை அலச வேண்டும். தினமும் காலையிலும் இரவிலும் பல் துலக்குவதும், அழுக்கு தேய்த்துக் குளிப்பதும் அவசியம். செருப்பில்லாமல் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியில் செல்லக்கூடாது. இவை எல்லாமே நமக்குத் தெரிந்தவைதான். ஒன்றும் புதிதல்ல. ஆனால், இவற்றைக் கடைப்பிடிக்கிறோமா என்பதுதான் கேள்வி.
சரியாகக் கை கழுவுகிறோமா?
‘சாப்பிட வாங்க’ என்று அம்மா அழைத்தவுடன், குழந்தைகள் ஒரே ஓட்டமாக ஓடிப்போய் வாளியிலோ அல்லது வாஷ்பேசினிலோ கையை நனைத்துவிட்டுச் சாப்பிட உட்கார்ந்துவிடுகிறார்கள். சில வீடுகளில் பெற்றோரும் கை கழுவுவதில்லை, குழந்தைகளும் கை கழுவுவதில்லை.
சாப்பிடும் முன் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டியது மிக மிக அவசியம். இதை ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் 15-ம் தேதி ‘உலகக் கைகழுவும் நாள்’ என்ற பெயரில் வலியுறுத்த வேண்டியதாகிவிட்டது. விளையாடிவிட்டு வந்த பிறகும், மலம் கழித்துவிட்டு வந்த பிறகும், சாப்பிடுவதற்கு முன்பும் கைகளை நன்றாக, நிதானமாகத் தேய்த்துக் கைகளைக் கழுவ வேண்டும். அவசரம் காட்டக்கூடாது.
கைவிரல் நகங்களை வாரத்தில் ஒருநாள் வெட்டிவிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். குழந்தைகளின் நகத்தைப் பார்த்தால் நகத்தினுள் ‘கண்ணேங்கரேலென்று’ அழுக்கு சேர்ந்திருக்கும். நாம் சாப்பிடும் உணவுடன் இந்த அழுக்கும் கிருமிகளும் சேர்ந்து உடலுக்குள் சென்று உடல்நலக் கேட்டை ஏற்படுத்தும்; வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வயிற்றில் பூச்சித்தொல்லை, சளி, இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு இதுவும் ஒரு காரணம்.
ஏன் இந்த அவசரம்?
குழந்தைப் பருவத்தில் ஆரோக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். ஆனால், நம் ஊரில் நிலைமையோ தலைகீழ். காலையில் குழந்தைகள் எழுந்திருப்பதே மிகத் தாமதமாகத்தான். விளையாட வேண்டிய பருவத்தில், நாம்தான் பள்ளிக்குத் தள்ளிவிட்டு விடுகிறோம். பள்ளிக்கு நேரமாச்சு, இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்பியாக வேண்டும் என்று காலையில் குழந்தைகளைப் பெற்றோர் படுத்தும்பாடு சொல்லி மாளாது.
பல் துலக்குதல், காலைக்கடன் கழிப்பது, குளித்துச் சாப்பிடுவது என்று எல்லாமே இந்த அரை மணி நேரத்துக்குள் நடந்தாக வேண்டும். அப்போது எப்படி அந்தக் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்? சுத்தம் கண்டிப்பாக நோய்க்கு இடம் தராது, சுகம் தரும்; நிச்சயமாக ஆரோக்கியமான உடலையும் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக