கார்கில் போர்வெற்றி தினம் ஜூலை 26.
இந்தியா ராணுவ பலத்தை உலகறிய செய்த அந்த நாள்!
டெல்லி: கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களை மரியாதை செய்வதற்காக நாளை மறுநாள் ஜூலை 26 ஆம் தேதி இந்தியா கார்கில் விஜய் திவஸ் தினம் அனுசரிக்க உள்ளது. இதோடு கார்கில் போர் முடிந்து 19 வருடங்கள் ஆகிறது.
1999 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் இந்தியாவின் எல்லைப் பகுதியான கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பு செய்வதற்கு ஊடுருவியுள்ளதாக இந்திய ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. முதலில் இந்திய ராணுவம் அவர்கள் முஜாஹிதீன் தீவிரவாதிகள் என்று நினைத்தது.
ஆனால், அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினர் என்றும் அவர்கள் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கார்கிலில் இருந்து பாகிஸ்தான் துருப்புகளை விரட்டியடிக்க இந்தியா ஆபரேஷன் விஜய் என்கிற போர் திட்டத்தை அறிவித்தது.
இதைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு கார்கில், லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடுமையான போர் நடந்தது. பங்களாதேஷ் பிரிவினையின் போது 1971 ஆம் ஆண்டு நடந்த போருக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற போர் இது.
போர் நடைபெற்றபோது அந்த நேரத்தில் இந்தியாவின் பிரதமராக வாஜ்பாயி இருந்தார். அப்போது கார்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் துருப்புகளையும் தீவிரவாதிகளையும் இந்திய எல்லைகளில் இருந்து ஒழிப்பதற்காக ஆபரேஷன் விஜய் நடத்தப்பட்டது. இந்த கார்கில் போர் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 1999 ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஜூலை வரை நடைபெற்றது.
இந்த ஆபரேஷன் விஜய் நடவடிக்கை வெற்றிகரமானது என்று 19 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டது. அப்போதைய பிரதமர் வாஜ்பாயி ஆபரேஷன் விஜய் வெற்றியடைந்தது என ஜூலை 14 ஆம் தேதி அறிவித்தார். ஆனால், அலுவல் ரீதியாக அதிகாரப்பூர்வமாக ஜூலை 26 ஆம் தேதி ஆபரேஷன் விஜய் வெற்றியடைந்தது என்று அறிவிக்கப்பட்டது.
இந்த கார்கில் போரில் இந்திய தரப்பில் 500 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ராணுவ வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் உள்பட 3000 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஆபரேஷன் விஜய் நிறைவுபெற்றதாக அறிவிக்கப்பட்ட ஜூலை 26 ஆம் தேதியில் கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களை கௌரவிக்கும் விதமாக கார்கில் விஜய் திவாஸ் நினைவு தினம் இந்தியாவால் அனுசரிக்கப்பட உள்ளது.
நன்றி ஒன் இந்தியா தமிழ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக