உலக புத்தக தினம் ஏப்ரல் 23...!
பவுத்தம்
"வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட, அழகான பொருட்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.".ஹென்றி வார்ட் பீச்சர்.
புத்தகமும்..உலக புத்தகதினமும்...!
நாம் படிக்கத் தெரிந்த காலம் முதல் புத்தகம் படிக்கிறோம்..! புத்தகம் என்பது ஒரு காலத்தின் வரலாறு. வரலாறு எழுத்துக்கள் மூலம் பதிவு செயப்படுகிறது. புத்தகங்களை சேமிக்கும் இடத்தை நூலகம் என்கிறோம். உளவியல் வல்லுனர்கள் குழந்தைகளுக்குப் பேசத் தெரியாவிட்டாலும் கூட புத்தகம் படித்துக் கட்ட வேண்டும் என்று கூறுகின்றனர். அதனால் அவர்களின் மூளை வளர்ச்சியும், அறிவுத்திறனும், முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். எப்படியாயினும் புத்தக படிப்பை ஊக்குவிக்க, சில சமயம் ஒரு தூண்டுதல் தேவையாயிருக்கிறது. புத்தகத்தின் தேடலுக்கு, வாசிப்பு ருசிக்கு யாரோ ஒருவர் தூண்டலாக இருந்திருக்கின்றனர். யுனெஸ்கோ (UNESCO) என்ற உலக கல்வி நிறுவன அமைப்பும் கூட, மக்களிடையே புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கவும், அதற்காக அதிக புத்தகங்களை வெளியிடவும் முடிவு செய்தது. அதன் அடிப்படையில் 1995 முதல் ஏப்ரல் 23, உலக புத்தக தினம் என்று அறிவிக்கப்படுகிறது. அது முதல் ஏப்ரல் 23 உலக புத்தக் தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
முதலில் புத்தக தினம் தொடங்கப்பட்டபோது, லண்டனில் பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கு ஒரு பவுண்ட் மதிப்புள்ள அடையாள வில்லை தந்தனர். அதனைக் கொண்டு அவர்கள் எங்கு வேண்டுமானாலும் குழந்தை புத்தகங்கள் வாங்கலாம் . நாமும் கூட அதைப் போல குறைந்த விலையில் குழந்தைகளுக்குகாக புத்தகம் அச்சிட்டு, குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்..
எழுத்தாளர்களின் குறியீடான புத்தக தினம்..!
ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக உருவானதிற்கு ஓர் அருமையான பின்னணி உண்டு. உலகம் முழுவதும் படிக்கத் தெரிந்த மனிதர்கள் அனைவரும் இந்நாளில் புத்தகத்தையும், அவற்றை உருவாக்கியவர்களையும் மிகுந்த மரியாதை செய்கின்றனர். உலகில் பல இலக்கியவாதிகள் இந்த தினத்தில் பிறந்தும் மறைந்தும் இருக்கின்றனர். முக்கியமாக, உலகின் தலை சிறந்த சோக காவியமான லியர் அரசன், காதல் காவியம் ரோமியோ ஜுலியட்' ஜுலியஸ் சீசர், ஒத்தெல்லோ, மாக்பெத் போன்றவைகளையும், மச் அடோ அபவுட் நத்திங் (Much Ado About Nothing) என்ற நகைச்சுவை நாடகத்தையும் எழுதியவர் தலைசிறந்த இலக்கியவாதியான வில்லியம் ஷேக்ஸ்பியர். இவர் பிறந்தது மட்டுமல்ல உலகைவிட்டு மறைந்ததும் ஏப்ரல் 23ல் தான்.
அது போலவே, ஸ்பெயின் நாட்டில் (1923) ஏப்ரல் 23ம் நாள் இறந்த பிகுல்டி செர்வேண்டிசின் நினைவாகவும் புத்தக தினம் கொண்டாடுவதாக சொல்லப் படுகிறது. 1616, ஏப்ரல் 23ம் நாள் உலகின் புகழ் பெற்ற எழுத்தாளர்களான ஷேக்ஸ்பியர், செர்வேண்டிஸ், இன்கா கார்கிலாசோ (William Shakespeare, Miguel de Cervantes, Inca Garcilaso de la Vega ) போன்றோர் இறந்தனர். மாரிஸ் டிரியூன் , ஹால்டோர் லேக்சனஸ், விளாதிமிர் நபொகோவ், ஜோசப் பிலா மற்றும் மானுவல் மெஜியா (Maurice Druon, Haldor K.Laxness, Vladimir Nabokov, Josep Pla and Manuel Mejía Vallejo) போன்ற எழுத்தாளர்களும் இந்த உலகத்தைப் பார்த்த நாள் ஏப்ரல் 23 தான். இவர்களை மரியாதை செய்யும் வகையில், ஒரு குறியீடாக ஏப்ரல் 23ஐ உலகப் புத்தக் தினமாகக் கொண்டாட யுனெஸ்கோ அமைப்பு முடிவு செய்தது. உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் வாசிப்பின் நேசிப்பையும், ருசியையும், இன்பத்தையும் கண்டறிய வேண்டியும், அதன் மூலம் சமூக, கலாச்சார முன்னேற்றம் மற்றும் மனித நேய உணர்வை வென்றெடுத்து, மரியாதை செய்ய வேண்டியும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்க புத்தக தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
வாழ்க்கைப் போராட்டத்தில் வென்ற இலக்கியவாதிகள்..!
வில்லியம் ஷேக்ஸ்பியரும், ஜான் மில்டனும் ஆங்கில இலக்கியத்தின் இரு கண்களாகப் போற்றப்படுகின்றனர். ஆனால், இவர்களின் இளமைக்காலத்தைப் புரட்டிப் பார்த்தால், கதை வேறு மாதிரி இருக்கிறது. கல்விக் கூடத்தில் சரியாகப் போதனை பெற முடியாமல், சமூக நீதிகளும், சமூக காரணங்களும், இவர்கள் இருவரையும், ஓட ஓட விரட்டி இருக்கின்றன. "கல்வி அனைவருக்குமானது; புத்தகம் பொதுவானது" என துண்டுப் பிரசுரம் கொடுத்ததிற்காக, மில்டன் சிறைச்சாலையை சந்திக்க நேரிட்டது. அவருக்கு இந்த வெளி உலகைக் காண முடியவில்லை. அக உலகின் கண்கள் மட்டுமே அவருக்கு திறந்திருந்தன. இந்த நிலையிலும்,கல்வி மேல், மீளாக் காதல் கொண்டவர் மில்டன். எனவே, சிறைக் கம்பிகளுக்கிடையேயும், மற்றவர் வாசிக்கக் கேட்டு, மேதையானார். உலகப் புகழ் பெற்ற கவிதையான "பாரடைஸ் லாஸ்ட்" (Paradise lost) என்ற அழியா நூலை உருவாக்கினார். இது போலவேதான், வில்லியம் ஷேக்ஸ்பியரும் அரச மொழி என்று போற்றப்பட்ட "லத்தீனை" எதிர்த்து, தனது தாய் மொழியான ஆங்கிலத்தை இலக்கியத்தில் நுழைப்பதற்காகவே பல காவியங்கள் புனைந்தவர். வாசிப்பின் லயிப்பில் மனம் ஈடுபட்டு, தூக்கத்தைத் துறந்தவர்..!
முதல் புத்தகம்..குகையும்..எலும்புகளும்..!
இன்றைய நவீன அறிவியல் யுகத்தில், வலைத்தளமும், தொலைபேசி, கைபேசிகளும், மின்னஞ்சலும், முக்கியமாக தொலைக்காட்சியும், மக்களின் புத்தகம் படிக்கும் பழக்கத்தை பிடுங்கிவிட்டன; புதைகுழிக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்றன எனலாம். ஆனால் புத்தகம்தான் நிரந்தரமாய் நிலைத்து நின்று சுவையும், இன்பமும், ரசனையும தரவல்லது. படிப்பதன் ஆழ்ந்த அருமையான சுவை என்பது, வலைத் தளத்தில் நிச்சயமாகக் கிடைக்காது. புத்தகம் என்பது ஒருவரின் சொத்து..! படிக்கப் படிக்க இன்பமும் தேடுதலும் கிடைக்கும். புத்தகம் படிக்காமல் ஒருவர் அறிவாளி ஆகிவிட முடியாது. எழுத்துக்களின் சரித்திரம் மற்றும் வயது தெரியுமா? எழுத்துக்களின் முதல் பதிவு குகைச் சுவர்களிலும், இஷாங்கோ (Ishango) எலும்புகளிலும் தான். இவை , சுமார் 37,000 ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்து விட்டன. பின்னர் களிமண் கலவைகளிலும், பாப்பிரஸ் மரப்பட்டைகளிலும், ஆட்டின் தோலிலும் எழுதப்பட்டன. அவை அனைத்துமே புத்தகங்கள்தான்..! வரலாற்றுப் பதிவுகள்தான்..!
எழுத்தாளர் தினம்...புத்தக தின வரலாறு ..!
ஸ்பெயினிலுள்ள காட்டலோனியா (Catalonia) என்ற ஊரில் 1436ம் ஆண்டில், ஏப்ரல் 23 , செயின்ட் ஜார்ஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அது ரோஜாவின் தினம் என்றும் சொல்லப்படுகிறது. அன்று தன் இதயம் கவர்ந்தவர்களுக்கும், விருப்பமானவர்களுக்கும், மரியாதைக்குரிய பெரியவர்களுக்கும் புத்தகத்துடன் ரோஜாவைப் பகிர்ந்து கொண்டனர். அன்றுதான் உலக இலக்கிய தினமாக கருதப்பட்டு, ஒவ்வொரு புத்தகம் விற்கும்போதும், அதனுடன் ஒரு ரோஜாப் பூவினை அன்பளிப்பாகத் தந்தனராம். அன்று எல்லோரும் புத்தகம் வாங்க வேண்டுமாம். இப்படித்தான் புத்தக தினத்துக்கான கரு, காட்டலோனியாவில் ஏப்ரல் 23ல் உருவானது. அது போல, புத்தக தினத்தில் அனைவரும் புத்தகம் வாங்க வேண்டும் என உறுதிமொழி எடுக்க வேண்டும். உலக புத்தக தினம் & காப்புரிமை தினம் கொண்டாட வேண்டும் என்பதன் வெற்றி என்பது புத்தக எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள், தனியார் மற்றும் பொது நிறுவனங்கள், மனித நேயமிக்க தன்னார்வல நிறுவனங்கள், ஊடகங்கள் போன்றவர்களால்தான். இவர்கள் அனைவரும் யுனெஸ்கோ அமைப்பை அணுகி, கேட்டுக் கொண்டதற்காகவே இது உருவாக்கப்பட்டது. மிகுந்த வெற்றியுடன் உலகப் புத்தக தினமும், காப்புரிமை தினமும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
• "மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்தது புத்தகமே..!" என 20 ம் நூற்றாண்டின் சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியுள்ளார்.
மனித நாகரிக வரலாறு..!
இந்த பூமி உருவாகி சுமார் 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. உயிரினம் சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானது. மனித இனத்தின் சரித்திரம் மற்றும் பரிணாமத்தின் வயது 50 இலட்சம் ஆண்டுகள்..! நாம் பல நிலைகளைக் கடந்துதான் இன்று "வெள்ளையும் சொள்ளையுமாக" நாகரீக மனிதர்களாய் பரிணமித்துள்ளோம். ஆதி மனிதன் காடுகளிலும், மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்திருக்கிறான். மனித இன பரிணமிப்பில் மூன்று நிகழ்வுகள் உலகைப் புரட்டிப்போட்டு சாதனை படைத்தவை.
1 . ஒலி, மொழியான பரிணமிப்பு சுமார் 2,00,000 ௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பு. அனைத்து சமூக விலங்குகளும் (தேனீ முதல் திமிங்கலம் வரை )ஒன்றுடன் ஒன்று தகவல் பரிமாற்றம் நடத்தினாலும், மனித இனம் மட்டுமே மற்ற விலங்குகளிலிருந்து மாறுபட்டு அதனை மொழியாக மாற்றியது.
2. ஒலிகளை, எண்ணங்களைப் பதிவு செய்தல் (சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன், எலும்பில் பதிவு& குகைப் பதிவு).
3 . புத்தக உருவாக்கம்.
சக்கரம் சுழலத் துவங்கிய பின்னர்தான், மனித தொழில் நுட்பத்தின் பரிணாமத்தின் முதல் அத்தியாயம் துவங்கியது. ஆனால் அதற்கும் முன்பே, பலப் பல வடிவங்களில் மனிதன் தன கருத்துகளை, எண்ணங்களை பதிவு செய்யத் துவங்கிவிட்டான்..!
உலகின் முதல் நூலகம்..!
இதுவரை கண்டறிந்ததில் உலகின் மிகப் பழமையான முதல் நூலகம் சிரியாவிலுள்ள எப்லா (Ebla) என்ற நகரில்தான் இருந்திருக்கிறது. அங்கு குயூநிபாரம் எழுத்துக்களால் எழுதப்பட்ட சுமார் 20,000 சுட்ட களிமண் (20,000 cuneiform tablets) பலகைகள் கிடைத்திருக்கின்றன. அவற்றின் வயது சுமார் கி.மு. 2250 ஆண்டுகள். அவை சுமேரிய எழுத்து வடிவத்தில் எப்லைட் மொழியில் (Eblaite language)செமிடிக் மற்றும் அக்காடியன் மொழி (Semitic language and closely elated Akkadian) கலந்தது. இப்போது அவை சிரியாவின் அலெப்போ, டாமாஸ்கஸ் & இட்லிப் ,(Syrian museums of Aleppo, Damascus, and Idlib)அருங்காட்சியகத்தில் உள்ளன.
முதல் புத்தகம்/முதல் பேப்பர் பணம்!
பேப்பர் பாரம்பரியமாக சீனாவில் காய்லூன் காலத்தில் கி.பி. 105ல் உருவானது. மல்பரி இலை மற்றும் வேறு சில சணல் கழிவுகளைக் கொண்டு பேப்பர் தயாரித்தனர். பின் கி.பி. 3ம் நூற்றாண்டில்தான் இது எழுத பயன்பட்டது. அங்கு தான் முதன் முதலில் கி.பி. 1000த்தில் முதல் பேப்பர் பணத்தை சீன சங் வம்சம் அச்சடித்தது. 9ம் நூற்றாண்டில், டையமண்ட் சூத்திரங்கள் (Diamond suthra) என்ற 868 சூத்திரங்கள் அடங்கிய முதல் அச்சுப் புத்தகம் உருவாக்கப்பட்டது. ஆனால் இவை எல்லாம் உருவாக்கபடுவதற்கு முன், நம் மூதாதையர்கள் உலகில் நடந்த அனைத்தையும் பாரம்பரியமாக வாய் வழி மரபாகவே தன் சந்ததிகளுக்குக் கதையாகச் சொல்லி வந்தனர்.
உலகின் முதல்..பதிவு..!
குகைகளில் எழுதத் தொடங்கு முன்பே, எலும்புகளில் பதிவு செய்துவிட்டனர். ஆம், ஆனால் முதன் முதலில் இதைச் செய்ததும் ஒரு பெண்ணே என தற்போது தெரிய வந்துள்ளது. அதுதான் உண்மை..!.. பபூன் குரங்கின் கை எலும்பில்தான் அந்த அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. பெண்கள், மாதத்தின் நாட்களை, குறியீடாக அந்த எலும்பில் தனது மாதவிடாயை, கருக்காலத்தைக் கணக்கில் கொள்ள, வானில் நிலவு வந்து போகும் காலக் கெடுவுடன் தொடர்புடையதாக குறித்து வைத்துள்ளனர். ஆப்பிரிக்காவின் "லேபோம்பா" (Lebombaஅ) எண்ற இடத்தில் அந்த குறியீடு செய்துள்ள எலும்பு கிடைத்தது. எனவே அதன் பெயரிலே லேபோம்பா எலும்பு என்றே அழைக்கப்பட்டது. அதன் வயது என்ன தெரியுமா? சுமார் 37,௦௦௦000 ஆண்டுகள்.! இந்த எலும்பில் 29 கோடுகள்/பட்டைகள் உள்ளன. அதுபோலவே, இஷாங்கோ என்ற இடத்தில் கிடைத்த எலும்பின் பெயர் "இஷாங்கோ எலும்பு". எலும்பின் நுனியில் அதனை எழுதப் பயன்படுத்திய படிகக் குச்சியும்(crystal) உள்ளது. இதுவும் ஆப்பிரிக்க எரிமலைப்படிவுகளில் கிடைத்துதான். இதன் வயது 20,000 -25,000 ஆண்டுகள். இதில் 3 வரிசைகளில் எண்கள் பற்றி "டாலி( Tally )" குறியீட்டில் பதிவு செய்துள்ளனர் அக்கால பெண்கள்! இதில் 6 மாத சந்திர காலண்டர் பொறிக்கப்பட்டுள்ளது.
எலும்பில் எழுதிய மனிதன், மலையின் குகைகளில் எழுதினான். பிறகு பாப்பிரஸ் மரபட்டைகள், ஆடு மற்றும் கன்றுகுட்டியின் தோல்கள், மரபட்டைகள், களிமண், மண் ஓடுகள் மற்றும் பேப்பர்கள் என எழுத்தின் பதிவு கொஞ்சம் கொஞ்சமாக பரிணாமம் பெற்றது. இன்று மின்னஞ்சலில், வலைதளத்தில், e-எழுத்தாக மாறியுள்ளது.
காலப் பதிவுகள்..மனிதப்..பரிணாமத்தில்...!
1. கி.மு..2,00,000 -1,00,000 பேச்சு பிறந்தது.
2. கி.மு...40,௦௦௦000- …. குகை ஓவியம்/கிறுக்கல்கள்.ஐரோப்பாவில்
3. கி.மு.. 30,000 -6,500 விலங்குகளின் எலும்பில் எழுத்து .பிரான்சில்
4. கி.மு ..5,500 - 4.,500 …எழுத்துப் பதிவின் துவக்கம் ஆப்ரிக்கா
5. கி.மு ..3,500 -3,000 ….. சுமேரியப் படப் பதிவு
6. கி.மு ..3,000 - 2,800 ……எகிப்தின் களிமண் பதிவுகள்
7. எகிப்திய பாப்பிரஸ் எழுத்துக்கள்
8. கி.மு ..2,500 .. உலகில் கிழக்குப் பகுதி நோக்கி கியுனிபாரம் எழுத்துக்கள் பரவுதல்
9. கி.மு ..2,500 சிந்துசமவெளி நாகரிகம், எழுத்து மற்றும் படப் பதிவுகள்
10. கி.மு ..2,100 களிமண் எழுத்துக்கள்-எலும்பு எழுத்துக்கள் கண்டுபிடிப்பு
11. கி.மு ..1,500௦௦ சீனர்களின் குறியீட்டு எழுத்துப் பதிவு
12. கி.மு ..1,400 உகாரிட் பதிவுகள்
13. கி.மு ..1,100 - 900 தமிழ் நவீன எழுத்துக்கள்
14. கி.மு ..8,000௦௦ கிரேக்க நவீன எழுத்துக்கள்
நூலக...பிறப்பு...!
எகிப்தின் அலெக்சாண்டிரியாவில், கி. மு 247ல் உலகின் மிக பெரிய நூலகம் இருந்ததாம். சுமார் 7,00௦,000௦க்கும் மேற்பட்ட ஆட்டுத்தோல் புத்தகங்கள் அங்கு இருந்தனவாம்; 5,௦௦௦௦௦௦௦௦௦000 மாணவர்கள் படித்தனராம். இந்தியாவில் கி.பி. 2ம் நூற்றாண்டில் ஆந்திராவில் நாகர்ஜுன அரசன் உருவாக்கிய நூலகம் "நாகார்ஜுன வித்யா பீடம்". இந்த நூலகத்தில் பல விலங்குகளின் வடிவில் 5 மாடிகளும், 1500 அறைகளும் இருந்தன. கி.பி 7ம் நூற்றாண்டில் 68,700 பனை ஓலை நுல்களும், 36,௦058 பாப்பிரஸ் சுருள் புத்தகங்களும் இருந்தன. நாம் யன் படுத்தும் காகிதத்தை சீனர்கள் கண்டு பிடித்தாலும், புத்தகப் புரட்சியைப் செய்தவர்கள் அரேபியர்கள்தான். முகம்மதியர்களிடமிருந்தே பேப்பர் புத்தக பரிமாணம் துவங்கியது. 8ம் நூற்றாண்டில், மொராக்கோவில் 100 புத்தகக் கடைகள் இருந்தனவாம்.
தமிழ்நாட்டு நூலக வரலாற்றில் பிதாமன் இராமாமிர்தம் ரங்கநாதன். இவர்தான் "சென்னை மாநிலத்தின் நூலகத் தந்தை" என்று அழைக்கப்பட்டு, மரியாதை செய்யப்படுபவர். 1928 ஜனவரியில் சென்னை நூலக சங்கம் ரங்கநாதனால் உருவாக்கப்பட்டது. 1931ல், அக்டோபர் 21ம் நாள் புதன்கிழமை மாலை 5 மணிக்கு மன்னார்குடிக்கு அருகிலுள்ள மேலவாசலில், நடமாடும் நூலக வண்டிப் பயணம் தொடங்கப்பட்டது. அங்கு 72 கிராமங்களில், 275 பயணங்கள் இந்த வண்டி மூலம் நடத்தப்பட்டது..! இதில் 3,782 புத்தகங்கள், 20,000 தடவைகளுக்கு மேல், மக்களுக்குக் கொடுத்து, திரும்பப் பெறப்பட்டன. ! ஆனால் இன்று அரசுப் பள்ளிகளில் கூட நூலகம் இல்லாத நிலைமை..!
1990களில் இந்தியா முழுவதும் அறிவொளி இயக்கம் என்ற மாபெரும் கல்வி இயக்கம் வந்தது. அதன் தொடர்பாக, கிராமத்து மக்களைப் படிக்க வைக்க, அறிவொளித் தொண்டர்கள் மாட்டுவண்டிகளிலும், சைக்கிளிலும் ஊர் ஊராக புத்தகம் எடுத்துச் சென்று விற்பனை செய்தனர். ஊர்க்கூட்டம் போட்டு புத்தகம் வாசிக்க கற்றுக் கொடுத்தனர் . இப்போதும் கூட அறிவியல் இயக்க உறுப்பினர்கள் உலக புத்தக வாரத்தின்போது, ஊர் ஊராக சைக்கிளில், தெருமுனைகளில் புத்தகம் எடுத்துச் சென்று புத்தக விற்பனை செய்கின்றனர். வாசிப்பின் நேசிப்பை உணர, ஊர்களில் வாசிப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து, புத்தக வாசிப்பும் செய்கின்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து வாசிப்பு முகாம்களை, குறிப்பாக குழநதைகள் கல்வி குறித்த்து நடத்திக்கொண்டிருக்கிறது.
மனித நாகரிக வளர்ச்சியின் பதிவு நூலகமே..!
"புத்தகங்கள் வெறும் உயிரற்ற காகிதங்களின் குவியல் அல்ல. அவை அலமாரியில் இருந்து நம்மை வழி நடத்தும் உயிரோடு இருக்கும் மனிதங்கள்" என்றார் அமெரிக்க எழுத்தாளர் கில்பர் ஹையாத். . மனிதன் வரலாற்றுக்குரியவன் ..! நேற்று, இன்று, நாளை என்ற மூன்றும் மனிதனுக்குரியவை. சமூகத்தில் நிலவும் கருத்தாக்கங்கள், நம்பிக்கைகள், சந்தோஷங்கள், சவால்கள், மதிப்பீடுகள், நுணுக்கமான கருத்துக்கள் அனைத்தும் கல்விப் பொருளாக, புத்தகங்களாக மாற வேண்டும்..! காலத்தின் நிகழ்வுகள் உரிய, சரியான முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். அத்தகைய உள்ளடக்கம் கொண்ட கல்விதான் மக்களை விடுதலை செய்யும்.
ஹுமாயூன் உல்லாசபுரியாக இருந்த ஷேர் மண்டல் மாளிகையை அரிய நூல்களைக் கொண்ட நூலகமாக மாற்றினார்.
இந்தியநாட்டின் விடுதலைக்காகப் போராடி தனது 23 வது வயதில் தூக்கிலிடப்பட்ட மாவீரன் பகத் சிங் தூக்குக்கயிறு கழுத்தில் அரங்கேறும் வரை படித்துக்கொண்டே இருந்தான்.
ஒரு புத்தகத்தைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு தருபவனே மனித குலத்தின் உண்மையான விடிவெள்ளி --ஜான் மில்டன்.
ஒரு புத்தகம் 100 நண்பர்களுக்குச் சமம் சர் ஐசக் நியூட்டன்.
துப்பாக்கிகளைவிட பயங்கரமான ஆயுதங்கள் புத்தகங்கள்..மார்ட்டின் லூதர் கிங்.
ஆட்சி அதிகாரத்தையே உலுக்கிவிடும் பேராற்றல் ஒரு புத்தகத்திற்கு உண்டு.
"மனிதன் இருப்பு மௌனத்தால் கட்டப்படவில்லை. ! அவன் வார்த்தகளால், செயல்களால், எதிர்வினை தூண்டும் ஆழமான நடவடிக்கைகளால் கட்டமைக்கப்படுகின்றான். "--பாவ்லோ பிரையர்
உலக நாயகனான சார்லி சாப்ளின், ஒவ்வொரு புதிய படம் நடிக்க ஒப்புக்கொள்ளும்போதும், அதன் முன் பணத்தில் முதல் 100 டாலருக்கு புத்தகம் வாங்குவாராம்.
"ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது, உலகினை நோக்கிய ஒரு சன்னலைத் திறக்கிறோம்"...தோழர் சிங்காரவேலர்.
"வேறு எங்கோ ஒரு அற்புத உலகில் வசிக்க விரும்புவோருக்காக கண்டுபிடிக்கப்பட்டது புத்தகம் மட்டுமே"..மார்க் ட்வைன்
"ஒரு நல்ல வாசகனைக் கொண்டே, ஒரு நல்ல புத்தகம் அடையாளம் காட்டப் படுகிறது" ஜார்ஜ் பெர்னாட்ஷா
"ஒருவர் மூளைக்கும் இருக்கும் சிந்தனை மகரந்தங்களை மற்றொரு மூளைக்குள் கொண்டு செல்லும் தேனீக்கள்தான் புத்தகம்" -ஜேம்ஸ் ரஸ்ஸல்
"ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள்; அதைத் திருப்பித் தருபவன் அதைவிடப் பெரிய முட்டாள்"..-அரேபியப் பழமொழி.
என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள், இங்கே ஒரு புத்தகம் உறங்குகிறது என்று- பெட்ரண்ட் ரஸ்ஸல்
புத்தகங்களும், நூலகங்களும் இல்லாத நாடு சிறைச் சாலைக்கு ஒப்பாகும்..நெப்போலியன்
மொத்த இறந்த காலத்தின் ஆன்மாவும் வசிக்குமிடம் புத்தகம்..தாமஸ் கார்லைல்
வாசிப்பின் வாசங்களை குழந்தைகளுக்குத் திறந்து கொடுக்கத் தெரிந்த பெற்றோரே வரம் பெற்றோர்
ஒரு நூலகத்தின் கதவு திறக்கப்படும்போது ஒரு சிறைச் சாலையின் கதவு மூடப்படுகிறது...பைபிள்
அனைவரும் மூளையை உரசிப் பார்க்கும் புத்தகங்களை வாங்குங்கள்..!
குழந்தைகள், நண்பர்கள், நெருங்கியவர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இன்று புத்தகங்கள் பரிசளியுங்கள்...!
நாம் உலகப் புத்தக தினத்தன்று குழந்தைகளையும், பெரியவர்களையும் ஒன்றாகக் கூடி புத்தகம் படிக்க ஏற்பாடு செய்வோம்.
"புத்தகம்தான் சமூக மாற்றத்திற்கான திறவுகோல்..!"
நன்றி கீற்று.
Posted by .
-புவனாமகேந்திரன்.
மதி கல்வியகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக