வெள்ளி, 22 ஜூலை, 2016

மாஞ்சோலை தாமிரபரணி தியாகிகள் தினம் ஜூலை 23.


மாஞ்சோலை  தாமிரபரணி   தியாகிகள்   தினம் ஜூலை 23.

தமிழ்நாட்டின் ஜீவநதி தாமிரபரணி. 1999 ஜூலை 23ம் தேதி மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்கு பேரணியாக வருகிறார்கள். ‘இவர்களுக்கு பாடம் புகட்டு’ என மேலிட உத்தரவு கொலை பாதகத்தில் அமலாகிறது. 17 உயிர்கள் பலி. இரண்டரை வயது மகனாவது பிழைக்கட்டும் என நீரில் மூழ்கிக் கொண்டிருந்த ரத்தினமேரி, குழந்தை விக்னேஷை தூக்கி தரையில் போடுகிறாள். நீசக் காவலர்கள் அப்பாலகனையும் கொன்று ஆற்றில் வீசிய கொடுமையும் அரங்கேறியது.

மனித ரத்தத்தில் ஆறு சிவப்பானது. திருநெல்வேலி நகரம் எவ்விதச் சலனமும் இன்றி மாமூலாக இருந்தது. ஏன்? இறந்தவர்கள் தொழிலாளர்கள் என்பதோடு தலித்துகள் என்ற இரட்டைக் காரணங்களால் நெஞ்சின் ஈரம் வறண்டு விடுகிறது. 1968 டிசம்பர் 25ம் நாள் கால்படி நெல் கூலி உயர்வு கேட்ட 44 கீழ் வெண்மணி விவசாயக் கூலிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். பத்திரிகை உலகமும் இருட்டிப்புச் செய்தது. அரசியல் கட்சிகளும் கண்டு கொள்வதில்லை. தியாகிகளே! உங்களை நினைவு கூர்வது கம்யூனிஸ்ட் இயக்கமும், சில தலித் அமைப்பினர் மட்டுமே. “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை; உங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலியைத் தவிர” என்பது காரல் மார்க்கசின் உன்னத வரிகள். “இந்தியாவைப் பொருத்தவரை இழப்பதற்கு ஒன்று உண்டு. அது தனக்கு கீழ் உள்ள சாதி அடுக்கு” என்ற அம்பேத்கரின் கருத்தும் கவனிக்கப்பட வேண்டியது.

சாதி முறையில்லாத நாடுகளில் வர்க்க ஒற்றுமையால் சமத்துவம் கிடைக்கப்பெறும். இந்தியாவில் வர்க்கப் போராட்டமும்,சாதி எதிர்ப்பு போராட்டமும் இணைய வேண்டியுள்ளது. மாஞ்சோலை தொழிலாளர்களின் சகோதரர்கள் தான் கேரளாவின் தேவிகுளம், பீர்மேடு பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர்கள். 300 ஆண்டுகளுக்கு முன்பு தாதுப்பஞ்சம். பலஆயிரம் பேர் பட்டினியால் செத்து மடிந்தனர். உயிர் வாழ உணவு மட்டும் கிடைத்தால் போதும் என்றிருந்த தலித் கூலிக ளின் உழைப்பால் முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. கங்காணிகளால் மலைப் பகுதிக்குக் கொண்டு செல் லப்பட்டனர். இலங்கைக்கும் சென்றனர். இவர்களில் அனேகர் தலித்துகள். அந்நியச் செலவாணியை ஈட்டிக் கொடுக்கும் இத்தொழிலாளர்கள் நிலைமை இன்றும் பரிதாபமே! சாஸ்திரி-ஸ்ரீமாவோ பண்டார நாயகா ஒப்பந்தம். 300 ஆண்டுகளை ஒட்டி கூலிகளாக இலங்கை வந்து, மத்திய பகுதியிலுள்ள மலைப் பகுதியை தேயிலைத் தோட்டங்களாக மாற்றியவர்கள் மலையகத் தமிழர்கள் எனப்பட்டனர்.

இவர்களின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. 5 லட்சம் பேர் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழ்நாட்டுக்கு வந்துள்ள இலங்கை அகதிகள், “முள்ளிவாய்க்கால் முள்வேலிக்குள் இருந்தவர்களின் நிலைமை போல்தான் உள்ளது. ஒருவருக்குத் தினப்படி 39 காசு. விருப்பப்படி வெளியூருக்கு வேலைக்குப் போக முடியாது. தினம் காலை, மாலை ஆஜர்பட்டியல் எடுக்கிறார்கள். வெள்ளையர்கள் காலத்தில் குற்றப் பரம்பரையினர் நிலைமை தான் ஞாபகத்திற்கு வருகிறது. நரக வாழ்க்கைதான் நடக்கிறது. தமிழர்களுக்காக வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் கூட்டத்தினரும் சிறு துரும்பைக் கூட தூக்கிப் போட தயாரில்லை. மத்திய, மாநில அரசுகளும் அக்கரைப்படவில்லை. ஏன்? அந்த அகதிகளுக்கு ஓட்டு உரிமை இல்லை; அவர்கள் தலித்துகள்.காஷ்மீர் பண்டிட்டுகள் தில்லியில் அகதிகள் என்ற பெயரில் வசதியாகக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இன்றைய மத்திய அரசு அந்த காஷ்மீர் பண்டிட் அகதிகளை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்த ஏற்பாடு செய்கிறது. அவர்கள் விற்று வந்த வீடுகள், நிலங்களை பணம் கொடுத்து மீட்டுக் கொடுக்கவும். புனர் வாழ்வுக்கும் ரூ.48,000 கோடி மத்திய அரசு ஒதுக்குகிறது. வரவேற்கத்தக்கது. இலங்கை அகதிகளும் இந்திய அரசின் ஒப்புதலோடு பெறபட்டவர்கள் தான். ஆனால் குறைந்தபட்சம் தரமான வாழ்க்கைக்கு உதவிட தயாரில்லை என்பது பரிதாபத்திற்குரியது.தலித்துகள் மீதான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. ஆனாலும் ஆட்சியாளர்கள் அதுபற்றி கண்டு கொள்ளத் தயாரில்லை. பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் உள்ள ஆதிக்க சக்திகள் தான் தலித்துகள் மீது வன்கொடுமைகள் செய்யும் சூழல் உள்ளது. அவர்கள் சுமார் 80 விழுக்காடு உள்ளனர். அரசியல் அதிகாரத்தையும் கையில் எடுத்துள்ளனர். ஓரளவு பொருளாதாரத்திலும் முன்னேறியுள்ளனர். எனவே ஆட்சியாளர்கள் இவர்களைப் பகைக்க விரும்பவில்லை. இதனால் வன்கொடுமைகள் செய்யும் சில ஆதிக்க சக்திகளுக்கு குளிர்விட்டுவிட்டது

“வன்கொடுமைகள் நாட்டில் கிடையாது; வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தலித்துகள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்; அதனால் அச் சட்டத்தின் சரத்துகள் ரத்து செய்யப்பட வேண்டும்” என்று `சமூக நீதிக் காவலர்கள்’ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற சில அமைப்புகள் மட்டுமே எதிர்வழக் காடுகின்றன. வேறு எந்த அரசியல் கட்சியும் இதற்கு குரல் கொடுக்கத் தயாரில்லை. ஒருவரை வேறோரு நபர் கூர்மையான ஊசியால் குத்தினால் காயம் தென்படுவதில்லை. ரத்தப் பெருக்கும் வருவதில்லை. ஊசியால் குத்தப்படும் நபர் துடிக்கிறான். அலறுகிறான்.

மற்றவர்களுக்கு அவன் நடிப்பதாகத் தான் தெரிகிறது. அவனது அந்த கொடூரமான வலியை பலரும் உணரமாட்டார்கள். ஊசியால் குத்தப்படும் நிலைமைதான் வன் கொடுமையால் தாக்கப்படும் தலித் நிலைமை.  சமூகச் சூழலை மாற்றும் நோக்கத்துடன் உயிர்நீத்த தாமிரபரணித் தியாகிகளே! உங்கள் லட்சியம் ஈடேற சபத மேற்போம்! நெஞ்சார்ந்த அஞ்சலி!

நன்றி : தீக்கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக