உலகக் கல்லீரல் அழற்சி நாள் ஜூலை 28.
உலகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day), ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்படுத்தப்பட்டது.
உலகளவில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் கடும் கல்லீரல் அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் பேர் இந்நோயின் தாக்கத்தால் மரணமடைகின்றனர்.
உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்ட எட்டு மக்கள் நல்வாழ்வுப் பரப்புரைகளில் உலகக் கல்லீரல் அழற்சி நாளும் ஒன்று. மற்ற ஏழு நாட்கள்: உலக சுகாதார நாள், உலக குருதிக் கொடையாளர் நாள், உலக நோய் எதிர்ப்புத் திறனூட்டல் வாரம், உலக காச நோய் நாள், உலக புகையிலை எதிர்ப்பு நாள், உலக மலேரியா நாள், உலக எயிட்சு நாள்.
பின்னணி
உலகளவில் கிட்டத்தட்ட 500 மில்லியன் மக்கள் கல்லீரல் அழற்சி பி அல்லது கல்லீரல் அழற்சி சி நோயுடன் வாழ்கின்றனர்.[4] சரியான கவனமும் சிகிச்சையும் அளிக்கப்படாத கல்லீரல் அழற்சி பி மற்றும் கல்லீரல் அழற்சி சி நோய்கள் முற்றி, கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோயாகி (சிர்ரோசிஸ்), கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு போன்ற சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும்.
எயிட்சு நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்தே அனைவரும் அதிக கவனம் கொண்டுள்ள நிலையில், உண்மையில் எயிட்சின் பாதிப்பால் நேரும் மரணத்தை விட வேகமாக, ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பேர் கல்லீரல் அழற்சி பி அல்லது கல்லீரல் அழற்சி சி நோய் பாதிப்பால் மரணமடைகின்றனர்.
கல்லீரல் அழற்சி நோய் விழிப்புணர்வு குறித்த உலகளவிலான நிகழ்வுகளில் ஜூலை 28 ஆம் நாளன்று, ஹெபடைடிஸ் குழுக்கள், நோயாளிகள், குரல்கொடுப்போர் எனப் பலரும் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக 2012 இல், இந்நோய் குறித்த அறியாமையை அடையாளம் காட்டும் விதமாக ,20 நாடுகளில் இருந்து 12,588 பேர் ”மூன்று புத்திசாலி குரங்குகள்” செய்கைகளைச் செய்து, உலக கின்னஸ் சாதனை நிகழ்த்தினர்.
வரலாறு
2012, அக்டோபர் மாதம் முதல் திகதியன்று முதன்முதலில், பன்னாட்டு கல்லீரல் அழற்சி சி விழிப்புணர்வு நாள் துவக்கம் நடந்தது. ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நோயால் பாதிக்கப்பட்ட்டோர் குழுக்களின் கூட்டு முயற்சியால் இது நடத்தப்பட்டது.[4] எனினும் நோயால் பாதிக்கப்பட்டோரின் வெவ்வேறு குழுக்கள் இந்நாளை வெவ்வேறு திகதிகளில் அனுசரித்தனர். ஒருங்கிணைக்கும் முயற்சியாக, உலக ஹெபாடைடிஸ் கூட்டணி, நோய் பாதிக்கப்பட்டோர் குழுக்களுடன் இணைந்து, 2008 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியை முதல் உலகக் கல்லீரல் அழற்சி நாளாக அறிவித்தது.
2010 ஆம் ஆண்டு, மே மாதம் நடந்த 63வது உலக நல்வாழ்வு கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானத்தைத் தொடர்ந்து, உலகக் கல்லீரல் அழற்சி நாள் உலகளவில் முக்கியம் வாய்ந்ததானது. தேசிய, பன்னாட்டு அளவிலான விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதை முதன்மை நோக்காகக் கொண்டதாக இந்நாள் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஹெபடைடிஸ் பி நச்சுயிரியைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசுபெற்ற அறிவியலாளர் பாருச் சாமியெல் பிளம்பெக்கை (Baruch Samuel Blumberg ) நினைவுகூரும் விதமாக, அவர் பிறந்த நாளான ஜூலை 28 க்கு இந்நாள் அனுசரிக்கப்படும் திகதி மாற்றப்பட்டது.
தற்பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் உலகக் கல்லீரல் அழற்சி நாள் அனுசரிக்கப்படுகிறது. இலவசமாக நோய் கண்டறிதல், பதாகை பரப்புரைகள், செயற்விளக்கங்கள், சொல்லாடல் நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தடுப்பூசி முகாம்கள் போன்ற பல நிகழ்வுகள் இந்நாளில் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார அமைப்பு ஆண்டறிக்கையை வெளியிடுகிறது.
கருப்பொருட்கள்
உலகக் கல்லீரல் நாள் கீழ்வரும் செயற்பாடுகளில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்புகளைத் தருகிறது:
பல்வேறு விதமான கல்லீரல் அழற்சி நோய்கள் மற்றும் அவை பரவும் விதங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல்;
தடுப்பைப் பலப்படுத்தல், நோய் கண்டறிதல், ஹெபடைடிஸ் நச்சுயிரியையும் அது தொடர்பான நோய்களையும் கட்டுப்படுத்தல்;
ஹெபடைடிஸ் பி தடுப்பூசி போடுதல், தேசிய தடுப்பாற்றல் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஒருங்கிணைத்தல்
உலகளவில் ஹபடைடிசுக்கான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள் முன்னிறுத்தப்படுகிறது:
2016: ஹெபடைடிசை வருமுன் காக்க: அது உன்னைப் பொறுத்ததே
2015: ஹெபடைடிஸ் நச்சுயிரி தடுப்பு: இப்பொழுதே செயற்படு.
2014: ஹெபடைடிஸ்: மீண்டும் யோசி.
2013: சத்தமில்லாமல் கொல்லும் இந்நோயைத் தடுக்க மேலதிகச் செயற்பாடு தேவை.
2012: நீ நினைப்பதைவிட அது அருகிலுள்ளது.
2011: ஹெபடைடிஸ் எங்கும், எவரையும் தாக்கும். தெரிந்து கொள். அதனை எதிர்கொள்.
கல்லீரலைக் காப்போம்..
இதயம், மூளையைப் போலவே முக்கியமான இன்னொரு உடல் உள் உறுப்பு கல்லீரல். ஆனால் இதயம், மூளை ஆகிய உறுப்புகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், கல்லீரலுக்குக் கொடுக்கப்படுவதில்லை. உடலின் ரத்தம் முழுவதும் கல்லீரல் வழியே தினமும் பல முறை கடந்து செல்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட பணிகளைக் கல்லீரல் செய்கிறது. ஆனால், குடிப் பழக்கம், தவறான உணவு பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவற்றின் காரணமாகக் கல்லீரலைப் பல வகைகளில் பாதிப்புக்கு உள்ளாக்குகிறோம்.
இன்றைக்கு உலக அளவில் மனிதர்களின் இறப்புக்கு மூன்றாவது முக்கிய காரணமாக இருப்பது கல்லீரல் கோளாறுகள்தான். உலகில் ஒவ்வோர் ஆண்டும் 15 லட்சம் பேர் கல்லீரல் பாதிப்பு காரணமாக உயிரிழப்பதாக, உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. சிக்கல் என்னவென்றால் கல்லீரலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அது உடனே தெரிய வராது. பிரச்சினை தீவிரமடைந்த பிறகே அறிகுறிகள் தெரியவரும். அதனால் கல்லீரல் நோய்களை லேசாக எடுத்துக்கொண்டால், நமக்குத்தான் ஆபத்து.
ஹெப்படைட்டிஸ் என்றால்
கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகளை ஹெப்படைட்டிஸ் என அழைக்கிறார்கள். ஹெப்படைட்டிஸ் கிருமிகளில் ஏ, பி, சி, டி, இ எனப் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரச்சினையை ஏற்படுத்தினாலும், அனைத்துமே கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகளே. பொதுவாக வைரஸ் கிருமிகளால் கல்லீரல் பாதிக்கப்பட்டால், கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் உண்டாகும். கல்லீரல் செல்கள் அழற்சி அடைவதாலேயே ஹெப்படைட்டிஸ் வைரஸ் கிருமி தொற்றவும் முடிகிறது.
இன்றைக்கு உலகில் ஹெப்படைட்டிஸ் பி, ஹெப்படைட்டிஸ் சி வைரஸ் பாதிப்பால் 50 கோடிப் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஹெப்படைட்டிஸ் பி, சியை கவனிக்காமல் விட்டுவிட்டால் சிரோசிஸ் (கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோய்), கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு போன்றவை ஏற்படலாம்.
கடுமையான வகை
மருத்துவத்தில் கல்லீரல் அழற்சியைக் கடுமையான வகை, நீடித்த கடுமையான வகை என்று இரண்டு பிரிவாக அழைக்கிறார்கள். கடுமையான வகை கல்லீரல் அழற்சி என்று கண்டறியப்பட்டால் கல்லீரல் உறுப்பு மாற்றம் செய்ய வேண்டிய நிலைகூட வரலாம். மஞ்சள் காமாலை நோய்கூட கல்லீரல் கடுமையாக பாதிக்கப்படும்போதே வருகிறது. காய்ச்சல், உடல் சோர்வு, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, பசியின்மை, புகைப்பிடிக்க வெறுப்பு, அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது, கண்கள், தோல் மஞ்சள் நிறமடைதல் (மஞ்சள் காமாலை), வயிற்று வலி ஆகியவை இதற்கு அறிகுறிகள்.
நீடித்த கடுமையான வகை
நீடித்த கடுமையான வகையில் பலருக்கும் ஹெப்படைட்டிஸ் இருப்பதே தெரியாது. கல்லீரல் சேதமடைந்துள்ளதைப் பொறுத்து, இந்த வகையில் நோயின் தீவிரம் வெளியே தெரியும். மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகளுடன் வயிறு உப்பி இருப்பது, எடை குறைதல், ரத்தக் கசிவு, முகப்பரு, அளவுக்கு அதிகமாக மாதவிடாய் நீள்வது, சிறுநீரக அழற்சி, வீக்கம் ஆகியவை இந்த வகைக்கான அறிகுறிகள். பொதுவான அறிகுறியாக ஜீரணப் பிரச்சினையும் ஏற்படலாம்.
காரணம்
கல்லீரல் அழற்சி எப்படி ஏற்படுகிறது? இதற்குப் பல காரணங்கள் உள்ளன. நோய்த் தொற்றுகள், சில மருந்துகள், நச்சுப் பொருட்கள், குறிப்பாக குடிப் பழக்கம், கல்லீரல் புற்றுநோய் காரணமாகக் கல்லீரலில் ஹெப்படைட்டிஸ் வைரஸ் கிருமிகள் தொற்றிவிடுதல் போன்றவை அவற்றில் சில. இவற்றில் ‘சிரோசிஸ்’ எனும் நோய்தான் , கல்லீரல் நோய்களின் கடைசி நிலை. இதற்கு மிகவும் முக்கியக் காரணம் மது அருந்துவது.
தடுப்பு முறைகள்
சீரான உணவு முறை, உடற்பயிற்சி, உரிய ஓய்வு ஆகியவையே கல்லீரலை ஆரோக்கியமாக வைப்பதற்கு மட்டுமல்லாமல், ஆரோக்கிய வாழ்வுக்கும் அடிப்படை. ஹெப்படைட்டிஸ் ஏ, ஹெப்படைட்டிஸ் பி வராமல் தடுக்கத் தடுப்பூசிகள் போட்டுக்கொண்டால் கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகாமல் தடுக்கலாம். மது அருந்துவது கல்லீரலைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால் குடிப் பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும். கல்லீரலைப் பாதிக்காத மருந்து, மாத்திரைகளை மட்டுமே பொதுவாக எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த மருந்தையும் மருத்துவர் அறிவுரையின்றி நீண்ட நாட்களுக்குச் சாப்பிடக் கூடாது. கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் ரத்தம், உறுப்பு, திசுக்கள், விந்து ஆகிய வற்றைத் தானமாக அளிக்கக் கூடாது.
என்ன செய்யலாம்?
• கல்லீரல் அழற்சி உள்ளவர்களுக்குச் சைவ உணவே சிறந்தது.
• திராட்சை ஜூஸ், கேரட் ஜூஸ் ஆகியவற்றைத் தினசரி குடிப்பதன் மூலம் சிறுநீர் எளிதாகப் பிரியும். மலம் இளகும்.
• எலுமிச்சை சாறு சேர்த்த நீரைக் குடித்தால் கல்லீரலின் செல்கள் பலமடையும். இது மஞ்சள் காமாலைக்கும் நல்லது.
• பூண்டைத் தினசரி சமையலில் சேர்த்துக்கொள்வது நல்லது. சீரகப் பொடி கலந்த மோர் பருகினால் ஜீரணம் மேம்படும்.
• கல்லீரல் கோளாறு உள்ளவர்களும், கல்லீரல் நோய் வராமல் தடுத்துக்கொள்ள நினைப்பவர்களும் சமையல் எண்ணெயை மிகக் குறைவாகப் பயன்படுத்துவது நல்லது.
நன்றி -விக்கிபீடியா ,தி இந்து தமிழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக