செவ்வாய், 22 நவம்பர், 2016

கவிஞர சுரதா பிறந்த தினம் நவம்பர் 23 , 1921.

கவிஞர சுரதா பிறந்த தினம் நவம்பர் 23 , 1921.

சுரதா ( நவம்பர் 23 , 1921 - ஜூன் 19 ,
2006 ) தமிழகக் கவிஞரும்
எழுத்தாளரும் ஆவார். கவிஞர்
பாரதிதாசனிடம் கொண்ட
பற்றுதலால் பாரதிதாசனின்
இயற்பெயராகிய சுப்புரத்தினம்
என்பதின் அடிப்படையில் தன்
பெயரை சுப்புரத்தினதாசன்
என்று மாற்றிக்கொண்டார். தன்
மாற்றுப்பெயரின் சுருக்கமாக
சுரதா என்னும் பெயரில் பல
மரபுக்கவிதைத் தொகுப்புகள்
தந்தவர். செய்யுள் மரபு மாறாமல்
எழுதிவந்த இவர் உவமைகள்
தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர்.
இதனால் இவரை உவமைக் கவிஞர்
என்று சிறப்பித்துக் கூறுவர்.
வாழ்க்கைக்
குறிப்பு
சுரதாவின் இயற்பெயர்
இராசகோபாலன். தஞ்சை மாவட்டம்
பழையனூர் (சிக்கல்) என்னும்
ஊரில் பிறந்தவர். பெற்றோர்
திருவேங்கடம்-சண்பகம்
அம்மையார் ஆவர். பள்ளியிறுதி
வகுப்புவரை பயின்றார். சீர்காழி
அருணாசல தேசிகர் என்பவரிடம்
தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.
பாரதிதாசனுடன்
தொடர்பு
1941 சனவரி 14 இல் பாவேந்தர்
பாரதிதாசனை முதன்முதல்
கண்டு பழகிய சுரதா அவருடன்
சிலகாலம் தங்கியிருந்து அவரது
கவிதைப் பணிக்குத் துணை
நின்றுள்ளார். பாவேந்தர்
பாடல்களைப் படியெடுத்தல்,
அச்சுப் பணிகளைக் கவனித்தல்,
பாவேந்தரின் நூல்
வெளியீட்டிற்குத் துணை நிற்றல்
எனப் பல நிலைகளில்
பாவேந்தருடன் சுரதாவுக்குத்
தொடர்பு இருந்துள்ளது.
கவிதை இயற்றல்
சுரதாவின் சொல்லடா என்னும்
தலைப்பில் அமைந்த கவிதையைப்
புதுக்கோட்டையிலிருந்து
வெளிவந்த பொன்னி என்னும்
இதழ் 1947 ஏப்பிரல் திங்கள் இதழில்
வெளியிட்டு இவரைப்
பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக
அறிமுகம் செய்தது.
பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம்
தந்தை பெரியார் , கலைவாணர்
முன்னிலையில் நடைபெற்ற
பொழுது அந்த நாடகத்தில்
அமைச்சர் வேடத்தில் நடித்த
பெருமைக்கு உரியவர் சுரதா.
அரசவைக் கவிஞராக நாமக்கல்
கவிஞர் வெ. இராமலிங்கம்
பிள்ளை இருந்தபொழுது
அவரின் உதவியாளராக இருந்தார்.
நாராயணன் என்பவரை
ஆசிரியராகக் கொண்டு
புதுக்கோட்டையிலிருந்து
வெளிவந்த தலைவன் இதழின்
துணை ஆசிரியராக
பணியாற்றினார். அக்காலத்தில்
பல சிறுகதைகளை எழுதினார்.
கவிஞர் திருலோகசீதாராமின்
சிவாஜி இதழில் தொடக்கக்
காலத்தில் சுரதாவின் கவிதைகள்
வெளிவந்துள்ளன.
திருச்சிராப்பள்ளி
வானொலியில் சுரதாவின் பல
கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.
திரைப்படத்
துறையில்
சுரதாவின் கலையுணர்வினைக்
கண்ட கு.ச.கிருட்டிணமூர்த்தி
என்பவர் இவரைத்
திரையுலகத்திற்கு
அறிமுகப்படுத்தினார். 1944 ஆம்
ஆண்டு மங்கையர்க்கரசி என்னும்
திரைப்படத்திற்கு முதன்முதல்
உரையாடல் எழுதினார். மிகக்
குறைந்த அளவுக்கான
பாடல்களையே அவர்
எழுதியுள்ளார். சீர்காழி
கோவிந்தராஜனின் குரலில்
அவரது இரண்டு பாடல்கள்,
'அமுதும் தேனும் எதற்கு, நீ
அருகினில் இருக்கையிலே
எனக்கு', மற்றும் 'ஆடி அடங்கும்
வாழ்க்கையடா, ஆறடி நிலமே
சொந்தமடா' ஆகியவை. 100 இற்கும்
மேற்பட்ட திரைப்படப் பாடல்களை
எழுதியுள்ளார்.
எழுத்துப்பணி
சுரதாவின் முதல் நூல் சாவின்
முத்தம் . இதனை
வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946
மார்ச்சு மாதம் வெளியிட்டார்.
1956 இல் பட்டத்தரசி என்ற சிறு
காவிய நூலை வெளியிட்டார்.
1954 இல் கலைஞர்
கருணாநிதியின் முரசொலி
இதழில் தொடர்ந்து கவிதைகள்
எழுதி வந்தார்.
1955 இல் காவியம் என்ற வார
இதழைத் தொடங்கினார்.
இவ்விதழைத் தொடர்ந்து
இலக்கியம் (1958), ஊர்வலம் (1963),
விண்மீன் (1964), சுரதா (1988) எனக்
கவிதை வளர்ச்சிக்குப் பல
இதழ்களை வெளியிட்டார்.
1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன்
இதழில் சுரதா திரைப்பட
நடிகைகளின் அகவாழ்க்கையைப்
பற்றி எழுதிய கவிதைகள் பெரும்
வரவேற்பைப் பெற்றன.
பின்னாளில் இக்கவிதைகள்
தொகுக்கப்பட்டு சுவரும்
சுண்ணாம்பும் என்னும் பெயரில்
நூல் வடிவம் பெற்றுள்ளது (1974).
பாரதிதாசனின்
தலைமாணாக்கராகக் கருதத்தகும்
கவிஞர் சுரதா, பல நூல்களாக
இருந்த பாவேந்தர் கவிதைகளை
ஒரே தொகுப்பாக வெளியிடும்
முயற்சியில் ஈடுபட்டுத்
திருவாசகன், கல்லாடன் பெயரில்
அந்த நூல் வெளிவரக்
காரணமானார். உலகின் அரிய
செய்திகளைப் பட்டியலிட்டுக்
காட்டும் சுரதா இல்லத்தில் அரிய
நூல்கள் கொண்ட நூலகத்தை
உருவாக்கினார்.
தமிழ், கவிதை, புகழ்
ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட
புரவலர்கள், ஆர்வலர்கள்
ஆகியோரை இணைத்துச் சில
வினோதக் கவியரங்கங்களை
நடத்துபவராக இருந்தார் சுரதா.
படகுக் கவியரங்கம், கப்பல்
கவியரங்கம், விமானக் கவியரங்கம்
முதலியவை அவை.
கவியரங்குகளைக் கொண்டாட்ட
நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு
மிகுந்த பங்குண்டு.
பாவேந்தர் தலைமையில் இயங்கிய
தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு
1966 இல் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்பெற்றார்.
பெற்ற சிறப்புகள்
1969 இல் தேன்மழை என்ற
சுரதாவின் கவிதை நூலுக்குத்
தமிழக அரசின் பரிசு கிடைத்தது.
1972 இல் தமிழக அரசு
சுரதாவுக்குக் கலைமாமணி
என்னும் விருது வழங்கிச்
சிறப்பித்தது.
1978 இல் ம.கோ.இரா.
தலைமையில் அமைந்த அரசு
பாவேந்தர் பாரதிதாசன் விருது
வழங்கிச் சிறப்பித்தது.
தமிழக அரசு சுரதாவின்
நூல்களை நாட்டுடைமையாக்கி
அவர் குடும்பத்திற்குப் பத்து
இலட்சம் உரூவா பரிவுத்தொகை
வழங்கியுள்ளது(2007).
1982 இல் சுரதாவின்
மணிவிழாவையொட்டி நாவலர்
நெடுஞ்செழியன் தலைமையில்
நடந்த விழாவில் ரூபா
அறுபதாயிரம் பரிசாகத்
தரப்பெற்றது.
1982 இல் சுரதாவின் கவிதைப்
பணிகளைப் பாராட்டிக்
குன்றக்குடி அடிகளார்
தலைமையில் நடந்த விழாவில்
கவியரசர் பட்டம் வழங்கப்பட்டது.
1987 இல் மலேசியாவில் நடந்த
உலகத்தமிழ் மாநாட்டிற்குச்
சிறப்பு அழைப்பாளராக
அழைக்கப்பெற்றார்.
1990 இல் கலைஞர் அரசு
பாரதிதாசன் விருதினைச்
சுரதாவுக்கு வழங்கியது.
1990 இல் கேரளாவில் மகாகவி
குமரன் ஆசான் விருது
சுரதாவுக்குக் கிடைத்தது.
சுரதாவின் தேன்மழை
நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப்
பல்கலைக்கழகத்தின் ரூபா ஒரு
இலட்சம் இராசராசன் விருது
வழங்கப்பட்டுள்ளது.
29.09.2008 இல் சென்னையில்
சுரதாவுக்கு நினைவுச்சிலை
நிறுவப்பட்டு கலைஞர்
கருணாநிதி அவர்களால் திறந்து
வைக்கப் பெற்றுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள்
கட்சியின் சார்பில் இச்சிலை
அமைக்கப்பட்டது.
சுரதாவின் கவிதைகள் பள்ளி,
கல்லூரி, பல்கலைக்கழகங்களில்
பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.
சுரதாவின் கவிதைகள் பல
மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மறைவு
இவர் தன்னுடைய 84ம் வயதில்
20.06.2006 அன்று சென்னையில்
உடல் நலக்குறைவால்
காலமானார்.
குடும்ப
உறுப்பினர்கள்
சுரதாவுக்குச் சுலோசனா என்ற
மனைவியும், கல்லாடன் என்ற
மகனும் உள்ளனர். இவரின் மருமகள்
பெயர் இராசேசுவரி கல்லாடன்.
பெயரர்கள் இளங்கோவன்,
இளஞ்செழியன் என இருவர்.
சுரதாவின்
படைப்புகள்
தேன்மழை (கவிதைத்
தொகுப்பு, 1986)
துறைமுகம் (பாடல் தொகுப்பு,
1976)
சிரிப்பின் நிழல் (பாடல்
தொகுப்பு)
சுவரும் சுண்ணாம்பும் (பாடல்
தொகுப்பு, 1974)
அமுதும் தேனும் , 1983
பாரதிதாசன் பரம்பரை (தொ.ஆ),
1991
வினாக்களும் சுரதாவின்
விடைகளும்
உதட்டில் உதடு
எச்சில் இரவு
எப்போதும் இருப்பவர்கள்
கலைஞரைப் பற்றி உவமைக்
கவிஞர்
சாவின் முத்தம்
சிறந்த சொற்பொழிவுகள்
சுரதா கவிதைகள் (கையடக்கப்
பதிப்பு)
சுவரும் சுண்ணாம்பும்
சொன்னார்கள்
தமிழ்ச் சொல்லாக்கம்
தொடாத வாலிபம்
நெஞ்சில் நிறுத்துங்கள்
பட்டத்தரசி
பாவேந்தரின் காளமேகம்
புகழ்மாலை
மங்கையர்க்கரசி
முன்னும் பின்னும்
வார்த்தை வாசல்
வெட்ட வெளிச்சம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக